389 views

அத்தியாயம் 3

 

‘நியூ இன்டியா நியூஸ்(என்ஐஎன் சுருக்கமாக நின்), சென்னை’ என்று பொரிக்கப்பட்ட அந்த அலுவலகம் பல தளங்களுடன் கம்பீரமாக உயர்ந்து நின்றது. உள்ளே எடிட்டிங் டிபார்ட்மென்ட், நியூஸ் கலெக்ட் பண்ற டிபார்ட்மெண்ட், லைவ் டெலிகாஸ்ட் என்று ஒவ்வொரு பக்கமும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“டேய் அருண் இந்த மொக்கை நியூஸ்லாம் நீ எடிட் பண்ணக் கூடாதாடா. சே ஏதாவது சுவாரஸ்யமான நியூஸ் குடுப்பாங்கனு பார்த்தா இந்த மொக்கை நியூஸ எடிட் பண்ண சொல்றாங்க” என்று தன்னுடன் வேலைப் பார்ப்பவனும் நண்பனுமான அருணிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் மதிவதனி.

 

“சுவாரஸ்யமான செய்தி வேனும்னா நாமளே யாரையாவது மர்டர் பண்ணிட்டு நாமளேக் கண்டுபிடிச்சா தான் உண்டு. மர்டர் பண்ணலாமா?” என்று நக்கலாக கேட்டான் அருண்.

“இது நல்ல ஐடியாவா இருக்கே!” என்று அவள் தாடையில் கைவைத்து யோசித்தாள்.

 

“இவகிட்ட நீ இந்த மாதிரி சொன்னா நம்மள கொலைகாரங்களா ஆக்குனாலும் ஆக்கி விட்டுருவாடா அருண்” என்று மதியின் தலையில் தட்டிச் சொன்னாள் வைஷ்ணவி.

 

“அடியே ஏன்டி இப்படி தலைல அடிக்குற?” என்றாள் தலையைத் தடவிக்கொண்டே.

“பின்ன என்னடி. நீ செய்ய சொன்னாலும் சொல்லுவ. உங்க அப்பா போலீஸ்னால நீ ஈசியா வெளில வந்துருவ. அப்புறம் நாங்க தான் ஜெயில்ல கம்பி எண்ணனும்”.

 

“அப்டிலாம் உங்களை விட்ருவேனாடி வைஷீ. நீ என் உயிர் நண்பி” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

 

“தயவு செஞ்சு முகத்துல ரியாக்சனை மாத்து சகிக்கல” என்றாள் வைஷூ.

 

“வாடி வேற நீயூஸ் சேனலில் ஏதாவது இன்ட்ரெஸ்டிங்கான நீயூஸ் போட்டு இருக்காங்களானு பார்ப்போம்”.

 

“இது மட்டும் அந்த சீஃப் எடிட்டர் குரங்கு மூஞ்சி ரஞ்சித்க்கு தெரிஞ்சது அவ்வளவு தான். நீங்களே நம்ம நியூஸ் படிக்கலனா எப்படினு பெரிய லெக்சரே எடுப்பான் அந்த ஆளு” என்றான் அருண்.

 

“அவங்க சேனல்ல எப்படி நியூஸ்லாம் கவர் பண்ணிருக்காங்கனு பார்த்து நம்ம சேனல் தரத்தை உயர்த்துறதுக்கு தான்னு சொல்லி ஒரு பிட்டை போட்டா பயபுள்ளை நம்பிருவான்டி. விளங்காதவன் மொக்கை நியூஸா எடிட் பண்ண தர்றான்டி. அவன்லாம் ஒரு ஆளுனு அவனுக்கு பயந்துகிட்டு” என்று அவள் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்க அருணும் வைஷூவும் ஈஈ என்று சிரித்து விட்டு அவரவர் சீட்டில் போய் அமர்ந்தனர்.

 

“ஏய் நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் எங்கடி போறேங்க?” என்று மதி திரும்பவும் அவள் பின்னால் இவ்வளவு நேரம் அவள் புகழ்ந்துக் கொண்டிருந்த ரஞ்சித் கைகட்டி அவளை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

 

அவனைப் பார்த்து ஈஈஈ என்று சிரித்து விட்டு “சார்…” என்று எழுந்து நின்றாள்.

 

அவளை ஒரு நிமிடம் நின்று முறைத்து விட்டு “கம் டு மை கேபின்” என்று சென்று விட்டான்.

 

அதைப் பார்த்து வைஷூவும் அருணும் வாயை மூடிக் கொண்டு சிரிக்கவும் “என்னடா சிரிப்பு.. உங்களை வந்து கவனிச்சுக்கிறேன்” என்று அருண் தலையில் நங்கென்று கொட்டி விட்டு ரஞ்சித் அறைக்குச் சென்றாள்.

 

“எக்ஸ்கியூஸ் மி சார்” என்று அனுமதி கேட்டு உள்ளே சென்றாள்.

 

“உட்காருங்க மிஸ் மதிவதனி” என்றான் ரஞ்சித்.

 

‘இவன் என்னடா நம்ம பேர இப்படி நீட்டி முழங்குறான்’ என்று அவள் யேசனையில் ஆழ்ந்தாள்.

 

“என்ன மதி மேடம் யோசனை?. இவன் எதுக்கு நம்மளைக் கூப்டுருக்குறானு யோசிக்குறேங்களா?” என்று நக்கலாகக் கேட்டு விட்டு “சுவாரஷ்யமான நியூஸ் வேனும்னு கேட்டேங்களே. அதுக்கு தான் வர சொன்னேன்”.

 

“சென்னைல ரீசன்டா நடந்த குழந்தை கடத்தல் கேஸ் பற்றி ஒரு ஆபிஸர் கிட்ட நீங்க இன்டர்வியூவ் பண்ணனும்”.

 

அவளும் பெரிய நியூஸ் பத்தி இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண போகிறோம் என்ற சந்தோஷத்தில் “ம் ஓகே சார்” என்றாள்.

 

“அந்த ஆபிஸர் யாருனு கேட்க மாட்டிங்களா மதி?” என்று புருவம் உயர்த்தினான். அவள் ‘யார் அது?’ என்று யோசனையில் அமைதியாக இருக்கவும் “சென்னை கமிஷ்னர் மிஸ்டர். ரவிச்சந்திரன்” என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு.

 

‘என்னாது அவர் கிட்டயா!’ என்று அதிர்ச்சியில் எழுந்தே நின்று விட்டாள். “சார் அவரைத் தவிர யார் கிட்டயாவது இன்டர்வியூவ் பண்றேன் சார். இது வேண்டாம்” என்றாள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.

 

“நீங்க தான பெரிய நியூஸா கேட்டேங்க மேடம்”

 

“அய்யோ அண்ணா என்னை விட்டுருங்க. அது சும்மா” என்று சிரித்தாள்.

 

அவன் அவள் காதைத் திருகி “என்னைப் பார்த்தா குரங்கு மூஞ்சி மாதிரி இருக்கா ம்?. நீ தான இந்த ஆளு மொக்க நியூஸா எடிட் பண்ணக் குடுக்குறாருனு சொல்லி மெயில் பண்ண. நீயே இந்த இன்டர்வியூவ் எடுக்கப் போ” என்றான்.

 

“அண்ணா அது சும்மா. அதுக்காக அப்பாக் கிட்டயே என்னை மாட்டி விடுவேங்களா. அப்புறம் லதாம்மா வீட்ல சாமி ஆடிடும்”.

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ போற. உன் கூட சுத்துமே ரெண்டு வானரம் அதுங்களையும் கூப்டு போயிட்டு வா. சேனல்ல இருந்து அதுக்காக டேட் அன்ட் டைம் அவங்ககிட்ட கேட்டு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியாச்சு”.

 

“அண்ணா அண்ணா ப்ளீஸ்ணா” என்று எவ்வளவு கெஞ்சியும் அவன் மசிவதாக இல்லை‌. அவளும் வேறு வழியில்லாமல் “சரி” என்று ஒப்புக் கொண்டாள்.

 

மதியின் தாயுடன் பிறந்த அக்கா ரேகாவின் மகன் அகிலன். அகிலன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அகிலனின் பள்ளி நண்பன் இந்த ரஞ்சித். மதி படித்து முடித்து பத்திரிக்கையில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அகிலனின் உதவியுடன் இங்கு நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தப் பத்திரிக்கையில் சேர்ந்து விட்டாள். அகிலனின் நிபந்தனையால் அவளை எந்த வில்லங்கமான செய்தியையும் சேகரிக்க அனுப்புவதில்லை. ஆனால் இவளோ மேலிடத்திற்கு பெரிய நியூஸ் சேகரிப்பதில் இவள் ஆர்வத்தைக் கூறி மெயில் அனுப்பி விட்டாள். அதன் விளைவு தான் இப்போது தன் தந்தையிடமே இன்டர்வியூவ் எடுக்கச் செல்லப் போகிறாள்.

 

கமிஷ்னர் அலுவலகம் முன்பு மதியும் அவளுடன் வைஷ்ணவியும் அமர்ந்திருந்தாள்.

 

“ஏன்டி கிணத்துல விழனும்னா நீ மட்டும் போயி விழுடி. என்னையும் ஏன்டி இழுத்துட்டு வர்ற. உங்கப்பாவ பாத்தாலேக் கொஞ்சம் பயம்டி. இதுல இன்டர்வியூவ் வேற. வெளங்கிடும் இன்னைக்கு” என்றாள் வைஷீ.

 

“எங்கப்பா சோ ஸ்வீட் டி. அவரப் பார்த்தா பயமாவா இருக்கு?”.

 

“அது உனக்கு ஸ்வீட் டி. மத்தவங்களுக்கு?. என் பயம் எனக்கு”.

 

“நாம இப்போ வேலையைப் பார்க்க வந்துருக்கோம். அதுனால இந்த உறவுக்குலாம் இங்க வேலை இல்லை. நம்ம என்ன கேள்வி கேட்கனுமோ அது எல்லாத்தையும் கேட்கனும். ஓகே. அப்பா மகள் உறவுலாம் வீட்ல தான்”.

 

“வீட்ல கூட எனக்கு கமிஷ்னர் தான்டி. உனக்கு தான் அப்பா” என்றாள் வைஷூ. விட்டால் அழுதுவிடுவது போல் இருந்தாள்.

 

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தவுடன் அவர்களை உள்ளே அழைக்கவும் உள்ளே சென்று “குட்மார்னிங் சார்” என்று அமர்ந்தனர் இருவரும்‌.

 

தன் மகளின் கடமை உணர்ச்சியை நினைத்து ரவிச்சந்திரனுக்கு சிரிப்பாக வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு “குட்மார்னிங் என்று நீங்க என்ன கேட்கனுமோ கேட்கலாம். அரை மணி நேரம் தான் டைம்” என்றார்.

 

“சார் சென்னையில் ரீசன்டா நடந்த குழந்தைக் கடத்தல் எந்த அளவுல இருக்கு. அதுவும் கடத்தப்பட்டது எல்லாமே பொண்ணுங்க. கடத்தப்பட்ட பொண்ணுங்கள்ல நான்கு பேரை மட்டும் கண்டுபிடிச்சுருக்கேங்க. எப்படி?. அப்போ மத்த குழந்தைங்க?. இதுக்கு காரணம் யார் என்ன?. அதுக்கான ஆதாரம் கிடைச்சதா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.

 

தன் மகளின் புத்திக் கூர்மையை மனதில் மெச்சிக் கொண்டு அவள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

 

பிறகு அனைத்துக் கேள்விகள் கேட்டு முடிக்கவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடியவும் அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.

 

அன்று இரவு அவர் ஆபீஸில் வைத்து கேட்க முடியாத சில கேள்விகளை வீட்டில் வந்து கேட்க அவரும் ஏதோ ஆர்வத்தில் கேட்கிறாள் என்று  நினைத்து மகளிடம் சில ரகசியங்களையும் சேர்த்து சொல்லிவிட்டார் வெளியே சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன். ஆனால் அவர் மகளோ அவர் நிபந்தனையெல்லாம் கேட்பவளா?.. அதுவே தன் மகளுக்கு மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டு வரும் என்று அவர் அப்போது நினைக்கவில்லை.

 

மறுநாள் எல்லா சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் ‘நியூ இன்டியா நியூஸ்’ செய்திகளை தான் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. குழந்தை கடத்தல் கேஸைப் பற்றி தன் தந்தையிடம் இன்டர்வியூவ் எடுத்த மதி அதனுடன் தன் தந்தையிடம் ரகசியமாகக் கேட்ட அதற்குக் காரணமானவர்களின் பெயர்களையும் இலைமறைக் காயாக பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டாள். அதுவும் விரைவில் ஆதாரத்துடன் கமிஷ்னர் ரவிச்சந்திரனால் பிடிபடுவார்கள் என்று.

 

அவள் பத்திரிக்கை எம்டியிடம் இருந்தும் அவளுடன் வேலை பார்ப்பவர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது அவளுக்கு. பின்ன எந்த சேனலும் சேகரிக்காத புது செய்தியை அவர்கள் பத்திரிக்கை வெளியிட்டு டிஆர்பி ரேட்டில் முதலிடம் என்றால் சும்மாவா. ஆனால் வீட்டில் வேறு விதமான பாராட்டு கிடைக்கப்போவதும் இதனால் அவள் வாழ்க்கையே மாறப்போவதையும் முன்னாலே அறிந்திருந்தால்  இவ்வாறு செய்திருக்க மாட்டாளோ என்னவோ. விதி யாரை விட்டது.

 

“அம்மா நான் செம ஹேப்பி இன்னைக்கு” என்று மிகவும் சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைந்தவளை வரவேற்றது தன் தந்தையின் வலிமை மிகுந்த கையில் இருந்து கன்னத்தில் கிடைத்த அடி தான்.

 

இதுவரை கோபமாகத் திட்டக்கூட செய்யாதவர் இன்று அடித்த அதிர்ச்சியில் “அப்பா..!” என்று கண்களில் கண்ணீர் வடிய நின்றிருந்தால் கையை அடி வாங்கிய கன்னத்தில் தாங்கி.

 

“ஏதோ ஆர்வத்துல கேட்குறனு உன்கிட்ட சில விஷயங்களை அன்னைக்கு சொன்னா. அது இப்டி தான் பத்திரிக்கைல போட்டு பப்ளிக் ஆக்குவியா. இந்த விஷயம் இன்னும் எங்க மேலிடத்துக்குக் கூட தெரியாது. ஆதாரத்தை ஸ்ட்ராங் ஆக்கிட்டு அரஸ்ட் வாரண்ட் வாங்கனும்னு நினைச்சுட்டு இருந்தோம். இல்லைனா கிடைச்ச ஆதாரம் கூட குற்றவாளிகள் கையில் சிக்கிரும்னு. ஆனா நீ அசால்டா பத்திரிகை வரைக்கும் போட்டுருக்க. அதுவும் இல்லாம நான் அரஸ்ட் பண்ணுவேன்னு. உன்கிட்ட அன்னைக்கே இந்த விஷயம் வெளிய போகக் கூடாதுனு சொன்னேனா இல்லையா?” என்று கர்ஜித்தார்.

 

“இல்லைப்பா பெயரை முழுசா பத்திரிக்கைல போடல. மேலோட்டமா தான்…” என்று இழுத்தாள்.

 

“நிறுத்துடி. அதென்ன மேலோட்டமா கீழோட்டமா. இதுனால அவருக்கு மட்டுமில்லை உனக்கும் தான் ஆபத்து. இதுக்கு தான் முதல்ல இருந்தே இவளை கண்டிச்சு வைங்கனு சொன்னது” என்று லதாவும் திட்டினார்.

 

“நீ நாளைல இருந்து வேலைக்குப் போக வேண்டாம். இந்த கேஸ் முடிஞ்சு குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணதுக்கப்புறம் பாக்கலாம்” என்றார் ரவி திட்டவட்டமாக.

 

“அப்பா ஒரு தப்பு செஞ்சவனுக்கு பயந்துக்கிட்டு நான் என் வேலையை விடனுமா?”

 

“இங்க பாரு மதி தைரியமாக இருக்கலாம். ஆனா சில விஷயங்களுக்கு பயந்து தான் ஆகனும். குற்றவாளிகள் பெரிய இடம். அதுனால தான் என்கொயரி கூட பண்ணாம ஆதாரத்தோட நிரூபிக்கனும்னு இருக்குறோம். உனக்கு நான் தனியா பாதுகாப்பு குடுத்துட்டு இருக்க முடியாது” என்றார் ரவிச்சந்திரன்.

 

“லதா இவ வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது” என்று அவர் மனைவியிடம் உத்தரவிட்டு தன் காக்கி உடையில் விரைப்பாக வெளியான ‘இந்த செய்தியால் மேலிடத்தில் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?. அதைவிட இந்த ஆதாரத்தைப் பற்றி என்ன சொல்லி சமாளிப்பது?’  என்று யோசித்துக் கொண்டே கமிஷ்னர் அலுவலகம் சென்றார்.

 

கதிரவனைத் துரத்தி விட்டு நட்சத்திரங்கள் புடை சூழ நிலவு மகள் ஊர்வலம் செல்லும் இரவு நேரம். வெற்றி, அவன் தந்தை சிவகுரு மற்றும் அவன் உறவுக்கார சித்தப்பா மகனும் நண்பனுமான குமாரையும் உடன் அழைத்துக் கொண்டு மக்காச்சோளம் அரைக்கும் மெஷின் வாங்குவதற்காக சென்னைப் புறப்பட்டனர். விதி பல சுவாரஷ்யங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் வெற்றியின் வாழ்வில் நிகழ்த்த பேருந்து வெற்றிலையூரணி என்ற அந்தக் கிராமத்தில் இருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  7 Comments

   1. Super👍👍👍very interesting episode👌👌👌

  1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

  2. சென்னைக்கு ஹீரோ கிளம்பியாச்சு..சுவாரஸ்யமா இருக்கப்போகுது கதைக்களம்..அப்பாகிட்டவே இண்டர்வியூ வைச்ச இப்படித்தான் நடக்கும்போல…மதி இப்படியா ரகசியத்தை உடைச்சிட்டியேமா🤣🤣..அருண்,வைஷூ, ரஞ்சித்,மதி காம்போ 👌👌👌….‌.interesting move

  3. Sangusakkara vedi

   Apo meeting village la ilaya chennai ya… Kk. .. intha loosu ku yen intha velai … Avalala antha kutravali thandainala irunthu thappikka poran….. Pavam avar appa ponnenu secret sonnaru avaluke evlo periya aapu vachutta… Ivala avlo periya manushan mathavanga munnadi thala kuniyanun…. Epi super sis…

  4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  5. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.