Loading

அத்தியாயம் 20

தென்றல் காற்று முகத்தில் மோத ஜன்னல் வழியே வந்த நிலவொளி முகத்தில் பட்டு பளிங்கு முகம் மேலும் மினுமினுக்க ஜன்னலோர சீட்டில் அமர்ந்து ஒருத்தி சுகமாக உறங்கிக் கொண்டு அவளைக் கட்டியவனின் கோவத்தை அதிகரித்தது தெரியாமல் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

வெகுநேரம் எதை எதையோ யோசித்துக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் தோட்டத்தில் வானத்தை வெறித்து அமர்ந்திருந்தவன் இருட்டி விட்டதை உணர்ந்து ‘அய்யோ அவளை வேற அடிச்சிட்டு வந்துட்டோமே. பத்ரகாளி மாதிரி ஆடுவாளே. என்ன செய்றானு தெரியல’ என்று வேக வேகமாக வீட்டிற்கு வந்தான் வெற்றி.

ஹாலில் இருந்தவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் அழைப்பதையும் காதில் வாங்காமல் வேக எட்டுகளில் அறையை அடைந்தான். அங்கு அவனை வரவேற்றது என்னவோ வெற்று அறை. ‘இவ எங்க போயிட்டா?’ என்று திரும்பி சோர்வாக வந்து ஹாலிற்கு வந்து “அம்மா மதி எங்கே?. எங்கேயும் கானும்” என்றான்.

“ஏன்டா நான்லாம் தாத்தனை மாதிரி பொண்டாட்டி முந்தானையைப் புடிச்சுட்டு சுத்த மாட்டேன் அப்டின. இப்போ என்னடானா இங்க இத்தனை பேரு இருக்கிறத கண்டுக்காம கூப்பிடுறது காதுலக் கூட வாங்காமல் உன் பொண்டாட்டியைத் தேடி ரூமுக்கு ஓடுற” என்று அவன் மனம் படும் பாடு புரியாமல் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் முத்தம்மாள் பாட்டி.

‘இந்த அப்பத்தா வேற நேரங்காலம் தெரியாம’ என்று விட்டு “எம்மா அவ எங்கனு கேட்டேன். நீங்க அவங்க சொல்றதுக்கு சிரிச்சுட்டு இருக்கேங்க” என்று எரிச்சலானான்.

“ஏலே அவளை ஏன் கத்திட்டு இருக்குற. அவளுக்கு அவங்க அப்பா அம்மா ஞாபகம் வந்துருச்சு போல. நீயும் வேலையா இருக்குற அங்க ரவியும் வேலையா இருக்கான் வந்து பார்க்க முடியல. அதான் போனும்னு உங்கம்மா கிட்ட கேட்டுருப்பா போல. அவங்க ஆபிஸ்லயும் முடிக்க வேண்டிய வேலை இருக்குனு வர சொல்லிருக்காக. அதான் நீ வெளில இருந்ததால குமார்ப் போய் பஸ் ஏத்தி விட்டுட்டு வரச் சொன்னேன்” என்று நீளமாக சொல்லி முடித்தார்.

“ம்ம்” என்றதோடு வேறெதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகன்றான். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு மனசு ஆறவில்லை. ‘நாம அடிச்சதுக்கு தான் கோச்சுக்கிட்டு போயிட்டா போல. என்ன இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாமே?. அப்பா என்ன சொன்னாரு?. முடிக்க வேண்டிய வேலை இருக்கா?. நிஜமாகவே திரும்ப அந்தக் கேஸ் விஷயமா பார்க்க போயிருக்காளா இல்லை கோச்சுக்கிட்டு போயிருக்காளா?. திமிரு திமிரு உடம்பு புல்லா திமிரு. இவ பண்ணதுக்கு ஏதோ கோவத்துல லைட்டா அடிச்சிட்டேன்’ என்றதற்கு ‘நீ லைட்டாவா அடிச்ச?. அவ கலருக்கு கன்னமெல்லாம் சிவந்து போச்சு’ என்றது மனசாட்சி.

‘சரி கோவத்துல அடிச்சிட்டேன். அதுக்காக சொல்லாம போவாளா?. அவளை அடிச்சு எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டேனோ?. ஆத்தா எப்போ மலை இறங்குவாளோ?’ என்று நினைத்து விட்டு மொபைலை எடுத்து ‘அவளுக்கு அழைக்கலாமா வேண்டாமா?’ என்று  பல யோசனைகளுக்குப் பின் ‘அவதானப் போனா அவளே கூப்பிடட்டும்’ என்று மொபைலை வைத்து விட்டு என்னவோ போல் அமர்ந்து விட்டான். அவளோடு இன்னும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும் எந்தக் கவலையாக இருந்தாலும் வீட்டில் நுழைந்தவுடன் அவளுடைய குறும்புப் பேச்சும் சிரிப்பும் எல்லாவற்றும் மேலாக எந்தவொருப் பிரச்சனைக்கும் அவள் கொடுக்கும் நிரந்தரத் தீர்வு எல்லாக் கவலைகளையும் போக்கி விடும்.

இன்று மிகப்பெரிய மனப்பிரச்சனையில் உலன்றுக் கொண்டிருக்கிறான். அவளில்லை அவள் சிரிப்பில்லை அவள் திமிராய் பேசும் குரலில்லை. அவள் வாசம் அறையெங்கும் நிறைந்திருப்பதாக நினைத்து அவள் வாசத்தை சுவாசமாக்கி மெதுவாக கண் மூடி தூக்கத்தைத் தழுவினான்.

அவன் நினைவுகளில் நிறைந்தவளோ அதிகாலையில் திருமணத்திற்குப் பின் முதன்முதலாக சென்னையில் காலடியெடுத்து வைக்கிறாள் கட்டியவன் உடனில்லாமல். அதனால் என்னென்ன பிரச்சனைகளுக்கு ஆளாகப் போகிறாளோ?. விதி யாரை விட்டது.

வைஷாலி அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். தன் வீட்டிற்குச் செல்லாமல் வைஷாலியின் அறைக்குச் சென்றாள்.

வைஷாலி, “ஏன்டி உங்கப்பா கிட்ட கூட சொல்லாமல் என்கூட வந்துட்டா அவரு திட்ட மாட்டாரா?. அப்புறம் என்ன தான் பார்க்கும் போதெல்லாம் பார்வையிலே எரிப்பாரு”  என்றாள்.

“இப்போ அவருகிட்ட சொன்னா நம்ம போட்ட பிளானே சொதப்பிடும்டி. அப்பா எப்பவுமே ரூல்ஸ் படி போறவரு. அதெல்லாம் இந்தக் கேஸ்க்கு சரிப்பட்டு வராது. நம்ம வழி தான் சரி” என்று இருவரும் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டே வைஷாலியின் பிஜிக்கு வந்து விட்டனர்.

சில நிமிடங்கள் கூட வீணாக்காமல் உடனே கிளம்பி சேனலுக்குச் சென்றனர். அந்தக் கேஸ்க்கான ஆதாரங்களை எல்லாம் சரி பார்த்து விட்டு எடிட்டிங் வேலைகளை முடித்து விட்டு தங்கள் சேனலில் ஒளிபரப்பினர். அதற்கு முன்பாக அந்த ஆதாரங்களை அவள் அப்பா ரவிக்கு அனுப்பி வைத்து விட்டு அவருக்கு அழைத்தாள்.

‘இவ என்ன திடீர்னு கால் பண்றா?’ என்று நினைத்து விட்டு அழைப்பை ஏற்று “சொல்லுடா மதி. நல்லா இருக்கியா?. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று பொது நல விசாரிப்புகளை ஆரம்பித்து விட்டார்.

“அப்பா ஒரு நிமிஷம் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. உங்க மெயிலுக்கு நீங்க கலெக்ட் பண்ண ஆதாரத்தை எல்லாம் அனுப்பி வச்சுருக்கேன். நீங்க உடனே போய் செக் பண்ணுங்க” என்றாள்.

‘இவ என்ன பேசுறா?’ என்று நினைத்து விட்டு “மதி எந்த ஆதாரம்?. அது தான் காணாம போயிடுச்சே. அப்புறம் நீ இப்போ எங்க இருக்க?” என்றார் சந்தேகமாக.

“அப்பா அதைப் பத்திலாம் இப்போ பேச டைம் இல்லை. நீங்க உடனே செக் பண்ணிட்டு நியூஸ்
பாருங்க” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.

அவர் மெயிலுக்கு வந்த ஆதாரங்களைப் பார்த்து அதிர்ந்தவர் நியூஸ் சேனலைப் பார்த்து இன்னும் அதிர்ந்தார். அதில் கூடுதல் தகவலாக அவரின் உயர் அதிகாரியும் குற்றவாளியிடமிருந்து லஞ்சம் வாங்கிய ஆதாரங்களும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அதனைப் பார்த்து அதிர்ந்து உடனே மறுபடியும் மதிக்கு அழைத்தார்.

அழைப்பை ஏற்றவள் “அப்பா இது தான் சரியான டைம் நீங்க அவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு. இதுக்கு மேல அவங்களால தப்பிக்க முடியாது” என்று பேசிக்கொண்டே போனவளை “மதி கொஞ்சம் நிறுத்து. அந்த ஆதாரத்தை நீ தான் எடுத்தியா?” என்று ரவியின் கேள்வி தடுத்தது.

“ஆமாப்பா எங்க சேனலுக்கு முன்னாடியே ஐஜியும் உடந்தைங்குற இன்பர்மேஷன் வந்துருச்சு. அதுனால தான் மீடியாவுல வந்துருச்சுனா யாராலயும் இந்த ஆதாரத்தை அழிக்க முடியாதுனு அப்படி பண்ணேன். ஆனால்…” என்று என்ன நடந்தது அது எப்படிக் காணாமல் போனது என்று தன் தந்தையிடம் ஒப்புவித்தாள்.

“ஆழம் தெரியாம காலை விட்டுட்ட மதி. நீ உடனே வீட்டுக்கு வா. ரெண்டு நாள் எங்கயும் வெளில போக வேண்டாம். வெற்றியை வரச்சொல்லி அவன் கூட ஊருக்குக் கிளம்பு” என்றார் பதட்டமாக அவள் செய்த காரியங்களை நினைத்து.

“அப்பா இதுக்கெல்லாம் பயந்தா ஒன்னும் பண்ண முடியாது. ப்ச் சரி நான் வீட்டுக்கு வர்றேன்” என்று சேனலில் அவள் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டுக் கிளம்பினாள்.

இவள் கிளம்பிய அதே நேரம் ரவியின் மொபைலுக்கு வந்த அழைப்பில் “என்ன கமிஷ்னர் சார்… ஆதாரம் காணாமப் போச்சுன்னு சொல்லிட்டு கேஸை ஆறப்போட்டு உங்க பொண்ணுக்கிட்ட ஆதாரத்தைக் குடுத்து எல்லாரையும் இப்படி மாட்டி விட்டேங்களே” என்று குரலில் நக்கல் இருந்தாலும் அதை விட அதில் பழிவெறி அதிகமாக இருந்தது.

“கடத்துன குழந்தைங்களை இன்னைக்கு தான் எக்ஸ்போர்ட் பண்ண போறோம். அதுல உங்கப் பொண்ணும் இருப்பா. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்கோங்க” என்று அழைப்பைத் துண்டித்து விட்டார் மறுமுனையில் இருந்தவர்.

இவருக்கு அதுவரை இருந்த பதட்டம் மேலும் அதிகமாகி உடனே வெற்றிக்கும் அழைத்து சொல்லி விட்டார். அவனும் உடனே வீட்டில் சாக்கு போக்கு சொல்லி வந்தவனுக்கு அவள் கடத்தப்பட்ட விஷயம் மட்டுமே காதில் வந்தடைந்தது. அவள் சேனலிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் கடத்தப்பட்டு விட்டாள்.

ரவிக்கு இது மாதிரி கடத்தல் விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கோ ‘எங்கேத் தேடுவது எப்படித் தேடுவது?. இது என்ன நம் ஊரா எளிதில் கண்டுபிடித்து விட.‌ தானும் உடன் வந்திருக்க வேண்டுமோ?. எங்கடி இருக்க’ என்று மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுயமாய் யோசிக்கக்கூட முடியாமல் அமர்ந்து விட்டான். ரவி சிசிடிவி புட்டேஜ் மூலம் கிடைத்த தகவலின்படி அவள் காணாமல் போன இடத்தின் அட்ரஸைக் குடுக்கவும் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் ரவியின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான். ரவியும் பல வழிகளில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தன் போலிஸ் படையினருக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டுருந்தார்.

கதிரவன் காலையில் தொடங்கிய தன் பயணத்தை முடித்துக் கொண்டு சந்திரன் தன் பயணத்தைத் தொடங்க வழி விட்டுக் கிளம்பி விட்டது. சந்திரனோ மேகங்களுக்கிடையே எங்கோ மறைந்து கொண்டு  நட்சத்திரங்கள் புடை சூழ வானமெனும் சிம்மாசம் ஆட்சி செய்ய ஆளில்லாமல் விறுச்சென்று வெறுமையாய் இருந்தது. நடு இரவுக்கும் மேல் அலைந்து அலைந்து ஓய்ந்து போன வெற்றி ஆளில்லாத நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு தலையைப் பிடித்துக் கொண்டு “ஆஆஆஆ எங்கடி இருக்க” என்று கத்தி தரையில் அமர்ந்து விட்டான். அதுவரைக் கண்களில் தேக்கி வைத்தக் கண்ணீர் கண்களை விட்டு வெளியேறியது.

வானமெனும் சிம்மாசனம்
வெண்ணிலவுக்காக
நட்சத்திரங்கள் தூவ
காத்துக் கொண்டிருக்க
அதுவோ மேகங்களுக்கிடையில்
மறைந்து போக்குக்காட்டுவது போல்
என் மனமெனும் சிம்மாசனம்
நீ ஆட்சி செய்யக் காத்திருக்க
எங்கே சென்று மறைந்து
விட்டாய் என் முழுமதியே
ஒருமுறை என் கண்ணில்
பட்டுவிடு தொலைத்து விடாமல்
மனதில் பூட்டி வைத்துக்
கொள்கிறேனடி..!

இவன் நடுரோட்டில் அமர்ந்திருக்க அவனவளோ ரவுடிக் கும்பலுக்கே போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுடன் ஐந்து பெண் குழந்தைகளும் கட்டி வைக்கப் பட்டிருந்தனர். அடி வாங்கியதில் கன்னம் ரெண்டும் வீங்கியிருந்தது. 

ரவுடிகள் குடித்து விட்டு நல்ல உறக்கத்தில் இருக்கவும் மதியும் குழந்தைகளும் அங்கிருந்து எப்படியோ தப்பித்து விட்டனர். அந்த அர்த்த ராத்திரியில் என்ன செய்வதென்று தெரியாமல் வேகவேகமாக ஓடி வந்தவர்கள் ரோட்டில் ஏதாவது வண்டி வருகிறதா உதவி கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தூரத்தில் வண்டி தெரியவும் வேகமாக ஓடி வந்தாள் மதி. அருகில் நெருங்குவதற்கு முன் பின்னால் ரவுகளின் சத்தம் அருகில் கேட்கவும் தூரத்தில் இருந்தே “சார்” என்று கத்தினாள்.

அங்கிருந்தது வேறு யாரும் இல்லை வெற்றி தான் தலையைப் பிடித்து கொண்டு குனிந்து அமர்ந்திருந்தான். அவள் குரலில் திடுக்கிட்டு திரும்பியவன் கண்களில் மதியும் அவள் கழுத்தில் கத்தியை வைத்திருந்த ரவுடியும் கண்டவனுக்கு எங்கிருந்து தான் அத்தனைக் கோவம் வந்ததோ வேகமாக அவளிடம் ஓடினான்.

ரவுகளில் ஒருவன் அவள் தலைமுடியைக் கொத்தாகப் பற்றியிருக்க ஒரு கைக் கழுத்தில் கத்தியை வைத்திருந்தது.

“டேய் கையை எடுடா அவ மேல இருந்து” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினான்.

” யாருடா நீ?. எங்க கிட்ட அடிவாங்கி சாகாம ஒழுங்கா ஓடிப் போயிடு. இல்லை இவக் கழுத்தை அறுத்துருவேன்” என்று கத்தியை அழுத்தினான்.

“அவ மேல சின்னக் கீறல் விழுந்தாலும் மவனே உன்னை ரவை ரவையாப் பிச்சுருவேன்டா” என்று கையை முறுக்கிக் கொண்டு அவள் கழுத்தில் கத்தியைப் பார்த்தவனுக்குக் கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது.

அவன் அசந்த நேரத்தில் வெற்றி கண் காமிக்கவும் மதி அவன் கையைத் தட்டி விட்டு வெற்றியின் பக்கம் வந்து விட்டாள்.

அதன் பிறகு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எல்லாரையும் வெளுத்து எடுத்து விட்டான். மண்வெட்டி பிடித்துக் காட்டு வேலை செய்த அவன் உரமேறிய கைகளின் ஒரு அடியே அவர்களை நிலைகுலையச் செய்தது. இதற்கிடையில் மதி அவள் தந்தைக்கு அழைத்து விவரத்தைச் சொல்லவும் அவரும் தன் போலீஸ் படைகளுடன் வந்து எல்லாரையும் அரெஸ்ட் செய்து விட்டார். வெற்றியையும் மதியையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு “நான்  ஃபார்மாலிட்டீஸ் முடித்து விட்டு வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார்.

இருவரும் வண்டியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மதியே “வெற்றி சாரி” என்று பின்னிலிருந்து அவன் முதுகில் சாயவும் அவன் எதுவும் சொல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு வண்டியை இன்னும் வேகமாக முறுக்கினான். வண்டியின் வேகத்திலே அவன் கோவத்தை அறிந்தவள் ‘போச்சு இன்னைக்கு கன்னம் பழுக்கப் போறது கன்ஃபார்ம்’ என்று மனதிற்குள் அவளுக்குக் கிலி பறந்தது. ‘சும்மாவே இரும்பு மாதிரி இருக்கும் உடம்பு. இதுல முறுக்கிக்கிட்டு வேற இருக்கான் காட்டான் ‘ என்று அடி வாங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று முகத்தில் அடிவாங்கிய வலியில் அவன் முதுகில் சாய்ந்து அம்மணி சொகுசாக தூங்க ஆரம்பித்து விட்டாள்.

‘என்ன அமைதியா இருக்குறா’ என்று கண்ணாடி வழியே பார்த்தவன் ‘ சதிகாரி ஒருத்தன் இம்புட்டு கோவத்துல இருக்கேன். அதைப்பத்திக் கவலையில்லாம சொகுசா தூங்குறதப் பாரு’ என்று நினைத்தாலும் அவள் கன்னமிரண்டில் உள்ள காயத்தைக் கண்டவனுக்கு மனமெல்லாம் வலித்தது. இதில் அவன் அடித்தது வேற ஞாபகம் வந்து இன்னும் மனதின் ரணத்தைக் கூட்டியது.

வீட்டிற்குள் நுழைந்தவர்களை லதாக் கண்ணீரோடு வரவேற்றார். மருமகன் இருப்பதால் அமைதியாக இருந்தார். இல்லை என்றால் அவளைத் திட்டித் தீர்த்திருப்பார். ‘நல்லவேளை வெற்றி இருக்கிறதால அம்மாவோட சுப்ரபாதத்திலிருந்து தப்பிச்சோம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் போல் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். வெற்றி லதாவிடம் காயத்திற்கு மருந்து வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

மெதுவாக மருந்தை எடுத்து கன்றிப்போய் இருந்த கன்னங்களில் மருந்தைத் தடவினான். அவளுக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. ‘ஏதாவது பேச மாட்டானா?. திட்டவாவது செய்டா’ என்று ஏக்கமாக அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் அவன் கண்டு கொள்வதாக இல்லை. “சாரி வெற்றி. காணாமப் போன பென்டிரைவ் நம்ம வீட்ல தான் இருந்துச்சு. நீ போன பிறகு வைஷீ கால் பண்ணி சொன்னதால உடனே கிளம்ப வேண்டியதாப் போச்சு” என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

அவள் காயத்தைக் கண்டு சிறிது மறைந்திருந்த கோவம் மீண்டும் தலைதூக்க மருந்திட்டு விட்டு வெளியே சென்று விட்டான். ‘சே நாம பேசியே அவனுக்கு ஞாபகப்படுத்தி விட்டோம் போலயே’ என்று அவன் பின்னாலே சென்றாள்.

வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவனை “வெற்றி” என்றழைத்தாள். அவன் திரும்புவதாக இல்லை என்கவும் “என்ன எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட?. இதுக்காகவா?” என்று மொபைலில் அன்று அவள் கடத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இருந்ததைக் காண்பித்தாள்.

அவள் கேள்வியில் ‘இது எப்படி இவள் கைக்கு?’ என்று அதிர்ந்தவன் “ஏற்கனவே அடி பட்டுருக்குனு கூட பார்க்க மாட்டேன். அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன். என்னடி பேச்சு இது?” என்று எப்படி இவ்வளவு நாள் உடனிருந்தும் இவ்வாறு தன்னை நினைக்கலாம் என்றக் கோவத்தில் கை ஓங்கி விட்டான்.

அவள் அசராமல் கண்ணில் நீர் வடிய நின்றவள் “இதை வச்சு தான் எனக்கு வாழ்க்கை குடுத்துயா?. இல்லை எங்கப்பா சொன்னதுக்காகவா?” என்று திரும்ப திரும்ப அதிலே வந்து நின்றவளுக்கு எப்படி புரியவைக்க என்று புரியாமல் நின்றவன் அவளை இழுத்து அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு “இங்க பாரு மதி இதெல்லாம் நினைச்சோ இல்லை உங்கப்பா கேட்டாருனோ உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கல. உன்னை காலேஜ் பார்த்த அன்னைக்கே புடிக்கும். பிடித்தம் இப்போ காதலாயிடுச்சு அவ்வளவு தான். இதான் உண்மை. நீ தேவையில்லாம எதையும் யோசிக்காத” என்று அவள் மொபைலில் இருந்ததை அழித்து விட்டு அவளை அழைத்துச் சென்று வலிக்கு மாத்திரைக் கொடுத்து தூங்க வைத்தான்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Interesting ud sis nice semmmma epdiyo vetri kannula sikkuna super ud sis

    2. தொடர்ந்து வாசித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.