அத்தியாயம் 17
பகலவனின் தங்கநிறக் கதிர்கள் தன் மேனியில் பட்டதால் காலையில் இருந்து தகித்துக் கொண்டிருந்த நிலமும் நிலத்தின் மேல் வளர்ந்து செழித்த பயிர்களும் நிலவுமகளின் வருகைக்காக தன் கோவத்தைக் குறைத்து கதிர்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து தென்றல் காற்றால் பயிர்களை வருடிக் கொண்டிருக்கும் அந்தி மஞ்சள் மாலைப் பொழுது..
நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் சுண்டி விட்டு லுங்கியை மடித்துக் கட்டிவிட்டு தன் காட்டில் வேலை செய்து கொண்டிருந்த தமிழ் தன்னைத் தாண்டிச் சென்ற கொலுசொலி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவன் ‘இவ என்ன வாயடிக்காம அமைதியாப் போறா?. அவ்வளவு அமைதிலாம் இல்லயே இவ!. ஒருவேளை நாம அன்னைக்குப் பண்ணதுக்குக் கோவப்பட்டாளோ?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலே பூங்குழலியின் கொலுசொலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அவன் காட்டைக் கடந்து அவள் காட்டை அடைந்திருந்தாள். அவனும் ‘வாயாடித் தொல்லை இல்லை இனிமே’ என்று நினைத்துக் கொண்டு விட்ட வேலையைத் தொடர்ந்தான்.
ஊரில் சில பேர் அவனிடம் பேசுவதில்லை, அவனும் சிலரிடம் பேசுவதில்லை. பூங்குழலியின் வீட்டில் தமிழிடம் பேசாவிட்டாலும் அவள் பார்க்கும் நேரமெல்லாம் அவனை ஏதாவது சொல்லி வம்பிழுக்காமல் போக மாட்டாள். அதுவும் வெற்றியிடம் ஏதாவது வாலாட்டியது தெரிந்தால் போதும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவாள் சண்டைக்கு. அதையெல்லாம் போடிக் குள்ளக் கத்திரிக்கா வாயாடி என்று கடந்து விடுவான். இப்போது தொல்லை என்று கடப்பவன் பின்னாளில் நீ தானடி என் செல்லத் தொல்லை என்று அலையும் காலம் வரப்போகிறதை அறியவில்லை அவன்.
திருவிழா ஆரம்பித்து விட்டது. தெருவில் வேப்பிலைத் தோரனங்களும் பந்தல்களும் என்று ஊரேத் திருவிழா கலைக்கட்டியது. அம்மன் கோவிலில் சீரியல் லைட்டுகளின் அலங்காரமும், அம்மன் படம் போட்ட சீரியல் லைட் ப்ளெக்ஸ் மற்றும் இளைஞர் பட்டாளங்கள் அவரவர் குழுவின் ஃப்ளெக்ஸ் அடித்து அங்கங்கே வைத்து இளைஞர்களும் குமரிகளும் குதூகலமாக அலைந்தனர். வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைந்திருந்தனர். வெற்றி மற்றும் தமிழ் அவரவர் நண்பர்களோடு சில கோவில் வேலைகள் தோரணம் கட்டுதல் போன்ற வேலைகளை செய்தனர். தமிழுக்கு எல்லோர் வீட்டிலும் சொந்த பந்தங்கள் நிறைந்திருப்பதைப் பார்த்து தன் தாய் தந்தை ஞாபகம் வந்தாலும் அவர்கள் இருந்தாலும் கலப்புத் திருமணத்தைக் காரணம் காட்டி யாரும் வீட்டிற்கு வரப் போவதில்லை என்று நினைத்து விட்டு இவ்வாறு நண்பர்களோடு இணைந்து அந்தக் கவலைகளை ஓரங்கட்டி விடுவான்.
செவ்வாய் இரவு மஞ்சளில் அம்மன் முகம் செய்து கரகம் எடுத்து ஊர் சுற்றி வந்து கோவிலில் அம்மனை வைத்து விட்டனர். புது விடியல் தரும் கதிரவனின் உதயத்தில் பொங்கல் வைத்து முடித்தாயிற்று.
“வெற்றி முளைப்பாரி எடுக்க லேட்டாச்சு. நாலு மணிக்கே மத்த வேண்டுதல் ஆரம்பிச்சு ஊர் சுத்தி வர ஆரம்பிச்சுருவாங்க. மதியை சீக்கிரம் கிளம்பி வர சொல்லு. கோவிலுக்குப் போனும்” என்றார் கனிமொழி.
“சரிம்மா” என்று வேக எட்டுகளில் அவன் அறையை அடைந்தான். கதவை உட்புறமாக அடைத்திருந்தது. “மதி என்ன பண்ற. கிளம்பியாச்சா?. டைம் ஆகுதுடி முளைப்பாரி எடுக்க கிளம்பனும்” என்றான் கதவைத் தட்டிக் கொண்டே.
“வெயிட் டா காட்டான். கதவைத் தட்டியே உடைச்சுடாத. ஒரு வாரமா காலைல அஞ்சு மணிக்கு கிளம்பி கோவில்ல கும்பி அடிக்க வச்சுட்டு இன்னைக்கு காலையில் இருந்து சாப்பாடு கூட குடுக்காம விரதம் இருக்க வச்சு உயிரை வாங்குறேங்கடா. இதுல சீக்கிரம் கிளம்பனுமா?” என்று அவனைத் திட்டிக் கொண்டே கிளம்பிக் கதவைத் திறந்தாள்.
“எதுக்குடா உன் முரட்டுக் கையை வச்சு கதவை அந்தத் தட்டுத் தட்டுற?. கிளம்பி வர மாட்டேனா?” என்று கீழேக் குனிந்து மடிப்பை எடுத்து விட்டுக் கொண்டே வினவினாள். அவன் எங்கே இந்த உலகத்தில் இருக்கிறான். அவள் வெளியே வந்து நின்றதுமே பீரீஸ் ஆகி விட்டான். என்ன தான் கையில் மஞ்சள் காப்புக் கட்டி சேலை அணிந்திருந்தாலும் அவள் அணிந்திருந்த புடவையும் புடவை கட்டிய விதமும் அதற்கேற்ற அணிகலன்களும் அலங்காரமுமே அவளின் பட்டணத்து சாயலைத் தெளிவாகக் காட்டியது. கண்ணில் வைத்த மையும் கண்ணில் தெரிந்த திமிரும் மெல்லிய உதட்டுச்சாயமும் நிமிர்ந்த நடையுமென இருந்தவளின் அழகில் காளையவனும் மயங்கித்தான் போனான். ‘அலட்டிக் கொள்ளாத பேரழகிடி’ என்று நினைத்தும் கொண்டான் .
‘என்னடா சத்தத்தைக் கானும்’ என்று நிமிர்ந்தவள் அவன் ‘ஆ’வென நிற்பதைக் கண்டு “வெற்றி நான் பேசுறது கேட்குதா இல்லையா?” என்று கத்திய பிறகே நினைவுக்கு வந்து ‘பாதகத்தி இப்படி வந்து நின்னா மனுஷனுக்கு என்ன தோனும்?’ என்று நினைத்து விட்டு “என்னடி கிளம்ப இவ்வளவு நேரமா?. கீழே அம்மா வெயிட் பண்றாங்க போ” என்றான்.
“வெற்றி வெற்றி… நீயும் கூட வர்றியா?. அத்தை அவங்க சொந்தக்காரங்க யாராவதுப் பார்த்தா அப்படியே போயிடுவாங்க. குழலி சொல்லவே வேணாம் அவ பிரண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டு வருவா”.
“நானும் பின்னாடி பசங்க கூட தான் வருவேன்”.
“இல்லை கூடவே வாயேன் ப்ளீஸ். கூட்டத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு”.
“அடேங்கப்பா நீ கூட்டத்தை பார்த்துலாம் பயந்தவ பாரு”.
“டேய் காட்டான் வருவியா மாட்டியா?. ஓவரா பண்ணாதடா”.
‘என்னாது டாவா!!. இதுக்கு மேல பிகு பண்ணா இருக்குற மரியாதையும் போயிரும். லட்டு திங்க கசக்குதா என்ன?’ என்று நினைத்து விட்டு “ம் சரி சரி வர்றேன். நீ சீக்கிரம் கிளம்பு போ” என்று அவளை அனுப்பி விட்டு இவனும் கிளம்பிக் கோவிலுக்குச் சென்றான்.
அம்மன் கோவில் அம்மன் முன்னால் பால்குடம் எடுப்பவர்கள், கயிறு குத்துபவர்கள், முளைப்பாரி எடுப்பவர்கள் மற்றும் இன்னும் பிற நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் நின்றனர். பூசாரி அம்மனுக்கு பூஜை செய்து உத்தரவு கொடுக்கவும் ஒவ்வொரு நேர்த்திக்கடனாக ஆரம்பித்து மேள தாளங்களுடன் ஊர் சுற்றி வரக் கிளம்பினர். மேள தாளங்கள் முன்னால் நிற்க அங்கங்கே தெரு முச்சந்திகளில் பந்தல் போட்ட இடங்களில் முளைப்பாரி வைத்துக் கும்மி அடிக்க வேண்டும் என்பதற்காக முளைப்பாரி முதலிலும் அதன் பின் கயிறு குத்தியர்கள் அதன் பின் பால்குடம் எடுத்தவர்ககள் என்று வரிசையாக கிளம்பத் தயாராகினர்.
மதி அத்தனைக் கூட்டத்தின் மத்தியில் நடக்கும் அத்தனையும் கண்களில் ஆச்சர்யத்தோடும் சற்று மிரட்சியோடும் பார்த்துக் கொண்டும் நின்றிருந்தாள். அவள் அருகே கனிமொழியும் பூங்குழலியும் முளைப்பாரி எடுப்பதால் அவளும் தோழிகளுடன் இருந்தாள். அவள் தாய் பால்குடம் எடுப்பதால் சற்று தள்ளி நின்றிருந்தார். அவரவர்க்கு பக்கத்தில் உள்ள பெண்களே முளைப்பாரியைத் தூக்கி வைத்தனர்.
“வெற்றி வாயா மதிக்கு நீ தூக்கி வை” என்றார் கனிமொழி.
வெற்றி தூக்கி தலையில் வைக்கவும் இரு கை கொண்டு இறுகப் பற்றிக் கொண்டாள் அவனைப் பார்த்துக் கொண்டே. குழந்தைகள் எடுக்கும் சின்ன முளைப்பாரி தான் அதற்கே அவள் ஏதோ பல கிலோ மூட்டையைத் தலையில் வைத்திருப்பது போல் முக பாவனையை வைத்திருந்தாள். அவள் முகபாவனையை பார்த்து “சீக்கிரம் சுத்தி வந்துடலாம் மதி. நானும் அம்மாவும் கூட தான் இருப்போம்” என்றான் வெற்றி. கண்களில் கொஞ்சம் பயத்தோடும் நடக்கும் சடங்குகளை ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
தீயில் எரியும் மூங்கில் காட்டில்
திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்
பரபரப்பான போக்குவரத்தில்
பலூனைத் தொலைத்த
பச்சைப் பிள்ளையாய்
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி..🎶
அழகை நீட்டி ஆளை இழுத்தாய்
அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்
பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்
பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்
உந்தன் பின்னால் நான் வருவேனோ
எந்தன் பின்னால் நீ வருவாயோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்…🎶
இவர்கள் இவ்வாறு இருக்க அருகில் இருந்த குழலியோ தோழிகள் அனைவருக்கும் மாற்றி மாற்றி தூக்கி வைத்து விட்டு கடைசியில் அவளுக்குத் தூக்கி விட ஆளில்லாமல் நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த அவள் தோழி “எண்ணே இந்த முளைப்பாரியைத் தூக்கி இவத் தலைல வைங்கணே” என்றாள் பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து.
அருகிலிருந்தவன் யாரு எவரென்று பாராமல் முளைப்பாரித் தூக்கி அவள் தலையில் வைத்து விட்டு யாரென்று பார்க்கும் போது இருவருக்கும் அதிர்ச்சி. ‘சே போயும் போயும் இந்த சிடுமூஞ்சிட்டயா கேட்கனும்?’ என்று மனதுக்குள் நினைத்து விட்டு “தேங்க்ஸ்” என்று விட்டு முளைப்பாரி கூட்டம் நகரவும் அவளும் நகர்ந்து விட்டாள்.
தமிழ் தான் அவள் தலையில் முளைப்பாரியைத் தூக்கி வைத்து விட்டு சிலையென நின்றிருந்தான். ‘வாயாடியா இது?!. இவ்வளவு நாளாக சுடிதார் தாவணினு கத்தரிக்கா மாதிரி இருந்தா. இப்போ சேலைல செமயா இருக்கா’ என்று அவள் போகும் திசையில் கண்களை அலைய விட்டு அவள் அருகிலே சற்று தள்ளி நடந்தான். கண்கள் மட்டும் அவள் புறமிருந்து நகரவேயில்லை.
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்
இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்
பெண்ணே நீயும் சாலை கடந்தால்
பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்
சாலை கடந்தால் மறப்பாயோ
சாகும் வரையில் மறப்பேனோ
சாலை கடக்க முடியும் உன்னால்
உன்னை கடக்க முடியாது என்னால்
முடியாது என்னால்…🎶
ஒரு பக்கம் ஜல்லிக்காட்டுக் காளையான அண்ணன்காரன் தன் இல்லாளின் திமிரழகில் வீழ்ந்து அவளை சைட் அடித்துக் கொண்டு வந்தானென்றால் மறுபக்கம் வீம்பு பிடிக்கும் தம்பிக்காரன் பூ விழிகளின் சதிரழகில் வீழ்ந்து அவளைத் தவிர எதுவும் இல்லாதது போல் பார்த்துக் கொண்டு வந்தான்.
‘இந்தக் காட்டானுக்கு என்னாச்சு?. பாடிகார்டு மாதிரி நம்மளை விட்டு கண்ணெடுக்காம வர்றான். இவன் பார்வையே சரியில்லையே’ என்று நினைத்தாலும் கன்னங்கள் தன்னால் செம்மை பூசிக் கொண்டது அவன் பார்வையில்.
பூங்குழலியோ ‘ஒருத்தன் விட்டால் அவளைத் தூக்கிக் கொண்டே சென்று விடுவான்’ என்பது தெரியாமல் அவள் தோழிகளோடு வளவளத்துக் கொண்டு வந்தாள். தெரு முக்குகளில் நின்று கும்மி அடிக்கும் நேரமெல்லாம் தமிழ் தன் மனக்கண்ணில் அவளை படம்பிடித்து மனதில் ஒரு ஆல்பமே போட்டுக் கொண்டிருந்தான்.
முளைப்பாரி எடுத்து ஊர் சுற்றி வந்து நேர்த்திக்கடன் எல்லாம் முடிந்து மறுநாள் அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரியை கன்மாயில் கரைத்து விட்டு கையில் உள்ள காப்பைக் கழட்டி விட்டு மஞ்சள் தண்ணித் திருவிழா ஆரம்பமானது.
மாமன் மகள்கள் மாமன்களைத் தேடித்தேடி மஞ்சள் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தனர். ஊரில் உள்ள முக்கால் வாசி ஆண்கள் பெண்கள் என அனைவரும் மஞ்சளாக சிலர் கலர் பொடியை உபயோகித்ததில் சிவப்பு நிறமாகவும் இருந்தனர். தெருக்கள் கூட கலர் கலராக இருந்தது.
குழலியும் மதியும் மஞ்சள் தண்ணியைக் கரைத்து வைத்துக் கொண்டு வெற்றியைத் துரத்திக் கொண்டிருந்தனர். “ஏய் குழலி இந்த தடவை உன் கூட துணைக்கு ஆள் சேர்த்துட்டியா?. உங்ககிட்ட சிக்குனா தான. போங்கடி” என்று அவர்களுக்கு போக்கு காட்டி ஒழிந்து கொண்டிருந்தான்.
“அக்கா வருஷ வருஷம் மாமா எப்படியாவது தப்பிச்சிரும். இந்த தடவை விடவேக் கூடாது. நீங்க அந்தபக்கம் போங்க நான் இந்தப் பக்கம் வாரேன் ” இருவரும் எதிர் எதிர் திசையில் சென்றனர். மதிக்கு இதுயெல்லாம் புதிதாக குஷியாக இருந்தது.
“அடியே… ஒன்னுக்கு ரெண்டு பேரு இருந்தும் என் ராசாவ புடிக்க முடியலயா. என் ராசா ஜல்லிக்கட்டு காளைடி. உங்களுக்குலாம் அடங்க மாட்டான்” என்று அப்பத்தா திண்ணையில் அமர்ந்து கொண்டு பெருமை பேசியது.
‘ஆமா இவன் ஜல்லிக்கட்டு காளை. இருடா இன்னைக்கு உன் மேல மஞ்சத்தண்ணி ஊத்தல. நான் மதி இல்லை. இந்த மதிக்கே சவாலா?” என்று வீறு கொண்டு பெண் சிங்கம் போல் கிளம்பி விட்டாள்.
இவன் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி ஒரு சந்தில் ‘ஷப்பா என்ன விரட்டு விரட்டுறாலுக’ என்று மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தான் வெற்றி. ‘போயிட்டாளுக போல’ என்று சந்திலிருந்து வெளியே வரவும் “மாமா மாட்டிகிட்ட” என்று குழலி மஞ்சத்தண்ணியை செம்போடு அவன் மேல் ஊற்றி விட்டு ஷாக்காகி நின்றாள். எதிரில் இருந்தவன் மஞ்சள் தண்ணீரைத் தன் முகத்தில் இருந்து துடைத்துக் கொண்டே அவளைப் பார்த்து சிரித்தான்.
ஆனால் அவள் ஊத்துவதற்குள் வெற்றி ஓடி விட்டான் அவன் வீட்டருகில். உள்ளே நுழைவதற்கு முன்னே மதி அவள் கையில் இருந்த மொத்த செம்பையும் அவன் தலையில் கவுத்தினாள். ‘இவ எங்கருந்து வந்தா’ என்று தண்ணீரை வழித்துக் கொண்டே அவளைத்தான் பார்த்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகில் இருந்த அண்டாவில் இருந்து மஞ்சத்தண்ணியை செம்பில் எடுத்துக் கொண்டு “இருடி வர்றேன்” என்று அவளை நெருங்கவும் “அய்யோ வேண்டாம் வெற்றி” என்று ஓடி குளியலறைக்குள் ஒழிந்து கொண்டாள். “அடியே ஒழுங்கா வந்துரு வெளில. நான் உள்ளே வந்தா சேதாரம் அதிகமாயிடும்”.
“முடியாது நான் வெளில வந்தா ஊத்தக் கூடாது. நான் புது ட்ரெஸ் போட்டுருக்கேன். ஊத்த மாட்டேன்னு சொல்லு”.
“சரி வா புது ட்ரெஸ்ல ஊத்த மாட்டேன்” என்கவும் அவள் வெளியே எட்டிப் பார்த்தவள் போயிட்டான் என்று நினைத்தவள் அவன் கையில் செம்போடு இருப்பதைப் பார்த்து கதவை அடைப்பதற்குள் அவளைத் தள்ளிக் கொண்டு இவன் உள்ளே நுழைந்து விட்டான்.
“மொத்த செம்பையும் அவள் மேல் கவிழ்த்து விட்டு அங்கிருந்த மஞ்சளை இரு கையிலும் எடுத்து அவள் ஆப்பிள் கன்னங்களிரண்டில் மெதுவாக அப்பினான். இத்தனை நாள் தொட்டு பார்க்கும் எண்ணமதை இன்று நிறைவேற்றிக் கொண்டான். அவன் மண்வெட்டிப் பிடித்த சொரசொரப்பான கைகள் தந்த கதகதப்பு உயிர் வரை சென்று சிலிர்த்தது. அதுவும் கைகள் இரண்டையும் கன்னங்களை விட்டு எடுக்காமல் இருந்ததில் அவளுக்கு வெட்கம் வந்து அவனைப் பார்க்க முடியாமல் தடுக்க “வெற்றி” என்றழைத்தாள் மெதுவாக கண்களை மூடிக் கொண்டு.
“மதி உன் மனசுல என்ன இருக்குனு எனக்குத் தெரியும். என் மனசுல என்ன இருக்குனு உனக்கும் தெரியும். இந்த பந்தத்திலிருந்து நாம விலகப் போறதுமில்லை பிரியப் போறதுமில்லை. உன் மேல காதல் எப்போ எப்படி வந்துச்சுனுலாம் தெரியல. ஆனா கடைசி வரை சந்தோஷமா வச்சுப்பேன்” என்று அவளை இழுத்தணைத்துக் கொண்டான்.
அவ்வளவு தான் இத்தனை நேரம் கட்டுக்குள் இருந்த உணர்வுகள் பெண்ணவளுக்கு தலை தூக்க மொத்தமாய் அவள் மனம் அவனிடம் சாய்ந்தது. மேனி எங்கும் தென்றல் காற்று பரவ காதல் வெள்ளம் மனதெங்கும் பாய்ந்தது. அவனணைப்பில் இருந்தவளை விலக்கி இரு கன்னங்கள் தாங்கி அவள் இதழ் வழியே தன் மனதை அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான். இதழ் வழியே அவன் மனதை படித்து இதயத்தில் அழியா ஓவியமாய் எழுதிக் கொண்டிருந்தாளவள். இருவரின் உணர்வுகளும் எல்லை மீறும் வேலையில் வெளியே கேட்ட வெற்றியின் தாய் கனிமொழியின் குரலில் சுய நினைவு வந்து விலகினர் இருவரும். அவன் தலையை அழுந்தக் கோதி சிரித்துக் கொண்டே வெளியே சென்று விட்டான். அவள் வெகுநேரம் கண்ணாடியில் தன் முகத்தில் தெரிந்த வெட்கத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கே புதிதாய் தெரிவது போல் இருந்தது.
இங்கே இப்படி இருக்க பூங்குழலி ஊற்றிய மஞ்சத்தண்ணி வெற்றி விலகவும் எதிரே வந்த தமிழ் மேல் விழுந்தது. ‘அய்யய்யோ இந்த சிடுமூஞ்சி மேல ஊத்திட்டோமே கத்துவானே’ என்று அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க, அவனோ அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். ‘இவன் என்ன லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்கான். இவன் காண்டாகுறதுக்குள்ள ஓடிறலாம்’ என்று “சாரிங்க” என்று ஓடியே விட்டாள். ஓடும் போது திரும்பி திரும்பி அவனைப் பார்த்து கொண்டே சென்றவளை அவள் அபிஷேகம் செய்த தண்ணீரின் குளுமை உடலை நனைக்க அவன் சட்டையில் உள்ள மஞ்சள் வண்ணத்தைப் போல அவன் மனதும் பல வண்ணங்களால் நிறைந்தது.
தொடரும்..
Interesting ud sis nice tamizhu una alaiya vaikkavum aalu iruku sandithanama seira kuzhali unna vachi seiya pora ne avala lov panranu sonna wow vetri semmma proposal po semmma super ah sollita
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.