Loading

மலை முகடுகளுக்கிடையே மனம் மயக்கிடும் ஓவியம் தீட்டிட ஒளித் தூரிகையோடு மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தான் ஒளியோன்.

ஒளித் தூரிகையின் மாய வித்தையை காண வீட்டிற்குச் சென்று விட வேண்டுமென்று அகவழகி துரிதமாய் உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முன் போடப்பட்டிருந்த உடைகளை புரட்டுகையில் அடியில் இருந்த அடர் சிவப்பு நிற சட்டையை கண்டதும் அவள் விழிகளில் திருப்தியோடு மகிழ்ச்சியும் இழையோடியது. அச்சட்டையை கையிலெடுத்து ஆசையாய் வருடுகையில் “அழகி” என்ற அழைப்பைக் கேட்டு முகமும் அகமும் மலர திரும்பிப் பார்த்தாள்.

நீல ஜீன்ஸும் வெள்ளை டீ ஷர்ட்டும் கையில் தூக்கிப் பிடித்தபடி,

“அழகி இது எனக்கு புடிச்சுருக்கு. இத எடுத்துக்கட்டுமா?” என்று விழிகள் மின்ன வினவியவனின் அருகில் புன்னகை மாறாமல் சென்றாள்.

அவனது கன்னம் வருடி, “சூப்பரா இருக்கு டா. இத போட்டா நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருப்ப. எடுத்துக்கோ. பரவால்ல வர வர என் செல்லம் நல்லா செலக்ட் பண்ணுதே.”, என்று சிரித்தாள்.

அவன் புன்னகைத்து விட்டு, “டார்லிங் அழகிக்கு உன் செலக்ஷன் ரொம்ப புடிச்சுருக்காம்.” என்று கத்திக் கொண்டே சற்று தள்ளி உடை தேடுவது போல் திரும்பி நின்று இவர்களின் உரையாடலை கேட்டு மென்னகைத்து மகிழ்ந்துக் கொண்டிருந்த அவன் டார்லிங்கிடம் ஓடிப் போய் நின்றான்.

அவனின் டார்லிங்கும் மென்னகை மாறாமல் திரும்பி முறைத்துக் கொண்டு நிற்கும் அழகியை கண்டு திருதிருவென்று விழித்து ஈஈஈ என்று சிரித்து வைக்க, அவள் மீண்டும் அவனை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சிவப்புச் சட்டையை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றாள்.

அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு,
“உங்க அம்மா கோவத்தை குறைக்க எதாவது வழி சொல்லேன்டா‌.” என்று கேட்டவனை பார்த்து சட்டைக் காலரை தூக்கிவிட்டு,

“அது ரொம்ப ஈஸி டார்லிங். நீ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்தா சொல்லுவேன்.” என்றான் ப.

“ஐஸ்கிரீமா?!! உங்க அம்மா கோவத்தை குறைக்க வழி சொல்றானா கூட்ட வழி சொல்ற.”

“அப்ப நீயே வழி கண்டுபுடிச்சுக்கோ.” என்று விட்டு பதிலுக்கு காத்திருக்காமல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்த சாம்பல் நிற கோட் சூட்டை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்திற்குச் சென்றான்.

“அடேய் என்னடா நீ பாட்டுக்கு போற. வழி சொல்லிட்டு போ டார்லிங். உன் டார்லிங் பாவம்ல.” என்றபடி அவன் பின்னே இவனும் ஓடினான்.

“அழகி இதுவும் எனக்கு புடிச்சுருக்கு. இதுக்கும் சேர்த்து பில் போட்ரு.” என்று அவன் தன் கையில் வைத்திருந்த கோட் சூட்டை அழகியிடம் கொடுத்தான். அவளும் குனிந்து அதை வாங்கிக் கொண்டே,

“உனக்கு புடிச்சத வாங்கிக்கோன்னு சொன்னதுக்காக ஓவரா போறடா செல்லம். என் பட்ஜட்ல துண்டு விழுந்தா உன் சேவிங்க்ஸ தான் நீ தரணும் பாத்துக்கோ.” என்றாள்.

“அதெல்லாம் துண்டு விழாது அழகி. எப்பவும் போல உனக்கு புடிச்ச மாறி ஒன்னு எனக்கு புடிச்ச மாறி ஒன்னு தானே எடுத்துருக்கோம். விழுந்தாலும் என் சேவிங்ஸ்லேர்ந்து எடுத்துக்கோ.” என்றவனை வாஞ்சையாய்ப் பார்த்தவள்,

“சரி டா செல்லம். நா பில் போட்டு வாங்கிட்டு வரேன். அதுவரை அதி குட்டி எதாவது இன்னும் வேணுமான்னு பாருங்க” என்றாள்.

“இல்ல அழகி எனக்கு வேற எதுவும் வேணாம். நீ பில் போட்டு வா. நானும் டார்லிங்கும் வெளில நிக்கிறோம்.”

“சரி செல்லம். நீ வெயிட் பண்ணு நா அஞ்சு நிமிஷத்துல வந்துட்றேன்.” என்கவும் அதி குட்டி சரியென்று தலையாட்டி முன்னே ஓட,

அதி குட்டியை பிடிக்க வந்து தேங்கி நின்றிருந்தவனை திரும்பி பார்த்து முறைத்து,

“அவன் ஐஸ்கிரீம் கேட்டா வாங்கி தராதீங்க நிரஞ்சன்.” என்றவளுக்கு வேகமாக தலையாட்டி ஈஈஈ என்று சிரித்தவனை மேலும் முறைத்து விட்டு அவள் திரும்பிக் கொள்ள, நிரஞ்சன் பெருமூச்சுவிட்டு,

“எப்பிடி சமாதானப்படுத்த போறேனோ?! இவன் வேற வழி கேட்டா ஐஸ்கிரீம் கேட்டு நம்மள இன்னும் கோர்த்து ஊட்றதுலயே இருக்கான்.” என்று முணுமுணுத்து,

“அதி குட்டி ஓடாம மெதுவா போ.” என்று அவன் பின்னே வேகமாகச் சென்றான்.

அழகி பணம் செலுத்தி முடித்து உடைகள் அடங்கிய பையோடு கடை விட்டு வெளி வருகையில் “அழகி” என்று கத்தியபடி தன்னை நோக்கி ஓடி வந்த அதி குட்டியை பார்த்து பதற்றமாகி வேகமாக அவனிடம் சென்றாள்.

“அழகி போலாம் போலாம்.” என்று அவள் கைப்பற்றி விழிகள் கலங்க அழைத்தவனை பார்த்து மேலும் பதற்றமாகிய அழகி,

அவனுயரத்திற்கு கீழே அமர்ந்து கைகளால் அவன் முகம் தாங்கி,

“என்னாச்சு செல்லம்? ஏன் கண்ணெல்லாம் கலங்குது? என்ன தங்கம்? ஒன்னுல்ல நா இருக்கேன்ல.” என்கவும்,

“அம்மா” என்று அவளை கட்டி கொண்டு, “போலாம் போலாம் வீட்டுக்கு” என்று அழுகையோடு திக்கி திணறி கூறியவனை அணைத்து,

“ஒன்னுல்ல தங்கம். ஒன்னுல்ல நாம போலாம் போலாம்.” என்று பயத்தில் உடல் நடுங்கியவனை முதுகை வருடி ஆறுதல் படுத்திக் கொண்டே அவனை தூக்க முற்பட்டாள்.

ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று அதி குட்டி ஓடி வரவும் ஏன் எதற்கென்று புரியாமல் குழம்பிய நிரஞ்சன்,

“டார்லிங் ஐஸ்கிரீம் கேட்டுட்டு ஏன் டா ஓட்ற. என்னாச்சு டா.” என்று ஐஸ்கிரீமும் கையுமாக அவன் பின்னே ஓடி வந்த நிரஞ்சன் அழகியிடம் அவன் வீட்டிற்கு போகலாம் என்று கூறிக் கொண்டே அழுகவும் அப்படியே நின்று விட்டான்.

கையில் பையை வைத்துக் கொண்டு பிள்ளையை தூக்க அழகி தடுமாறவும் பையை நிரஞ்சன் வாங்கிக் கொள்ள, அவன் கையிலிருந்த ஐஸ்கிரீமை பார்த்து அவள் மேலும் அவனை முறைக்க,

“சாரி அதி கேட்டான் அதான்.” என்று தயங்கிய நிரஞ்சனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அழகி வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்குச் செல்ல,

“சொதப்புறியேடா நிரஞ்சா.” என்று தலையில் அடித்துக் கொண்டு கையிலிருந்த ஐஸ்கிரீமையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த குழந்தையை அழைத்து ஐஸ்கிரீமை கொடுத்து விட்டு வேகமாக அழகி பின் ஓடினான்.

அவள் தன் ஸ்கூட்டியின் அருகேச் சென்றபோது,

“அம்மா” என்று தோளில் சாய்ந்திருந்த அதி குட்டி நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, ஐஸ்கிரீம் கடையின் முன்னேயிருந்து கருப்பு நிற மகிழுந்து ஒன்று கிளம்பி சாலையில் இறங்கவும்,

“அம்மா போலாம் போலாம் போலாம்.” என்று அதி கண்களை மூடிக் அவளதுக் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு தோளில் படுத்துக் கொள்ள, அவன் உடலில் நடுக்கம் கூடியது. அழகி தங்களைக் கடந்துப் போகும் மகிழுந்து பார்த்தவாறே,

“ஒன்னுல்ல ஒன்னுல்ல தங்கம். நாம போய்டலாம்.” என்று அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்த, அழகியின் பின்னே ஓடி வந்த நிரஞ்சன், அதி இன்னும் அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுவதை நிறுத்தாமல் இருப்பதைப் பார்த்து,

“இப்ப அதி குட்டிய டூவீலர்ல கூட்டிட்டு போறது நல்லதில்ல ரொம்ப பயந்துருக்கான். என் கூட வா அழகி.” என்றான்.

அழகி அவனைப் பார்க்க, அவன் கண்களால் கெஞ்சி அதியை சுட்டிக் காட்டவும் அவளும் சம்மதமாய்த் தலையசைக்கவும்,

“வா அழகி. அங்க தான் கார் நிக்குது.” என்று அவளை கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றான். அழகியும் கலக்கமாய் நடுங்கிய அதியின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே அவனைத் தொடர்ந்தாள்.

கணத்த மெளனம் அம்மகிழுந்தினுள் நிறைந்திருக்க, சாலையில் ஒரு பார்வையும் கலங்கித் ததும்பும் விழிகளோடு கவலையாய் அதியை பார்த்து அவனை அணைத்துக் கொள்ளும் அழகியையும் அழுதழுது உறங்கிப் போயிருந்த அதியையும் ஒரு பார்வையும் பார்த்தபடி மனம் கணத்து மகிழுந்தை மலைப் பாதையில் செலுத்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

யார் அழகி? யார் அதி குட்டி? யார் நிரஞ்சன்? அதி குட்டி எதற்கு பயந்தான்? அறிந்துக் கொள்ள அகவழகியோடு பயணிப்போம் வாருங்கள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்