அத்தியாயம் 1

Loading

ஃபெப்ரவரி 14 2024 (உலக காதலர் தினம்)

 

நேரம்: காலை: 10.30, சென்னை குடும்ப நீதி மன்றம்.

 

வழக்கு எண்: 23/24 சஞ்சனா vs ராகேஷ்.

 

நீதிமன்றத்தின் அந்த இறுக்கமான அறையில், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு நேர்மாறான ஒரு மௌனம் நிலவியது. சஞ்சனாவின் கண்கள் அழுது வீங்கியிருந்தன.

 

“இல்ல மேடம் தயவுசெஞ்சு எங்களுக்கு விவாகரத்து கொடுத்துருங்க. இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட இவரோட வாழ முடியாது,” சஞ்சனாவின் குரலில் உறுதியை விட ஒருவிதமான விரக்தி அதிகமிருந்தது.

 

ராகேஷ் அவளை ஒருமுறை ஏறிட்டான். அவன் பார்வையில் கோபமில்லை, சொல்ல முடியாத ஒரு விரக்தி மட்டுமே எஞ்சியிருந்தது. “இவ்வளவு எடுத்துச் சொல்லியும் புரிஞ்சுக்க நீ தயாரா இல்லைன்னா… நான் என்ன பண்ண முடியும்? கொடுத்துருங்க மேடம். பிரிஞ்சு போறதுதான் அவளுக்கு வேணும்ன்னா கொடுத்துருங்க” என்ற ராகேஷின் வார்த்தைகள் அந்த அறையின் சுவர்களில் மோதி சிதறின.

 

அதே நாள் மாலை: 6.00, மெரினா கடற்கரை:

 

“ராகவி தயவுசெஞ்சி நான் சொல்றத கேளு. ப்ளீஸ்.. நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்ல.”

 

“இல்ல சுபாஷ், இதுக்கு மேலயும் உன்னை நம்ப நான் முட்டாள் இல்ல.. இன்னையோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சது. என் மூஞ்சிலயே முழிக்காத”

 

மணலில் தன் கால்தடங்களை அழுத்தமாகப் பதித்து அவள் விலகிச் சென்றபோது, சுபாஷ் நிலைகுலைந்து அமர்ந்திருந்தான். பின்னணியில் யாரோ ஒருவனின் மர்மச் சிரிப்பு அலைகளின் ஓசையில் கரைந்தது.

 

3 மாதம் கழித்து..

 

சென்னையின் பிரம்மாண்டமான டைடல் பார்க், கல்லூரிகளுக்கு பிறகு பலப்பல பட்டாம்பூச்சிகள் கூட தேனீக்களாய் பறக்கும் அந்த மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான பிக்டெக் சொல்யூசன்ஸ் வழக்கமான காலை நேர பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

 

“என்னடி நேத்து சொன்ன அந்த ஒர்க்க முடிச்சிட்ட போல” என்று கேட்டுக்கொண்டே வந்து தன் இடத்தில் அமர்ந்தாள் கல்பனா.

 

“எங்க முடிக்கலன்னா தான் அந்த பழையமூஞ்சி காய்ச்சி எடுத்துருவானே.. முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போனேன்” என்று அவளுக்கு சலித்துக்கொண்டே பதில் கொடுத்தாள் பூர்வி.

 

”அப்பறம்.. உன் ஆளு என்ன சொல்றான்” என்று கண்ணடித்துக் கேட்டாள் அஷ்வினி.

 

ஜனனி, ”அவன் என்ன சொல்லுவான் என் அன்பே.. நீ தான் என் உயிர்.. நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை ன்னு வசனம் பேசிருப்பான்”

 

பூர்வி, “போங்கடி, உங்களுக்கு என்னை கிண்டல் பன்றதே வேலையா போச்சு” என வெட்கப்பட்டுக்கொண்டாள்.

 

கல்பனா, “அட அவள கொஞ்சம் ஃபீரீயா தான் விடுங்களேண்டி.”

 

ஜனனி, “ஆமா இந்த ஆபிஸ்ல ஒரு மர்மம் உலா வருதே அது உண்மையா?”

 

அஷ்வினி, “அது என்னடி எனக்கு தெரியாத மர்மம்..”

 

ஜனனி, “அதாண்டி.. நம்ம ஆபிஸ்ல வேலை செய்ற பொண்ணுங்களுக்கு எல்லாம் ப்ரேக் அப் ஆகிடுதாம்.. கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு எல்லாம் டைவர்ஸ் ஆகிடுதாம்.. என்னனென்னமோ சொல்றாங்களே. அதான்”

 

பூர்வி, “அது எல்லாம் சும்மாடி.. இதோ நானும் ஆரவ்வும் தான் 4 வருஷமா காதலிச்சிட்டு இருக்கோம். எங்களுக்குள்ள சண்டையே வந்தது இல்ல. இன்ஃபேக்ட் நான் சண்டை போட்டா கூட அவன் சாரி கேப்பான். ஹீ இஸ் சச் அ கீரீன் ஃபாரஸ்ட் டி (he is such a green forest)”

 

அஷ்வினி, “எதோ நல்லா இருந்தா சரிதான். சரி வேலைய ஸ்டார்ட் பண்ணலாமா.. அந்த பழைய மூஞ்சி வர்ர நேரம் ஆகிருச்சு. வந்தா பழைய மோட்டர் மாதிரி கத்துவான்”

 

கல்பனா, பூர்வி, அஷ்வினி, ஜனனி நான்கு பேரும் 25 முதல் 30 வயதிற்குள் இருக்கும் தேவதைகள். நால்வரும் ஒவ்வொரு விதமான அழகு கொண்டவர்கள். நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாலே பலவித பூக்கள் ஒரே இடத்தில் இருக்கும் அழகான பொக்கே போன்று இருக்கும். இப்பொழுது இவர்கள் பழைய மூஞ்சி என கிண்டல் செய்யப்படும் தாரகேஷ் கீழ் பணிபுரிகின்றனர்.

 

இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களால் பழைய மூஞ்சி என்று கிண்டல் செய்யப்பட்ட அவர்களது டீம் லீடர் தாரகேஷ் தன் மாருதி ஸ்விஃப்ட் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.

 

தமிழக நிறமாம் திராவிட நிறத்தில் 5 அடி 8 அங்குளம் என சராசரி உயரத்தில் பார்ப்பவர்களை ஈர்க்கும் காந்தக் கண்களும், கூர்மையான நாசியும், எனக்கு எந்த கெட்டப்பழக்கங்களும் இல்லை என சொல்லும் சிவந்த உதடுகளும் கொண்டவன்.

 

கொஞ்சம் கூட சதை போடாத உடம்பு, லகரங்களில் சம்பளம் என பெண்களை கவரும் அனைத்தும் அவனிடம் இருந்தும் இறைவன் குரலில் மட்டும் குறை வைத்தானோ, அவனது குரல் சற்று கட்டை குரல் எனப்படும் கடினமாக இருக்கும். 32 வயது ஆகியும் இன்னும் இவன் பக்கம் பெண் வாடையே அடிக்கவில்லை.

 

இத்தனைக்கும் இவன் வேலை செய்யும் டீம்களில் குறைந்தது 2 பெண்களாவது இருந்துவிடுவர். அதில் திருமண வயதில் இருப்பவர்களும் உண்டு. ஆனால், அவனோ ஒரு பாறையைப் போல அசைக்க முடியாமல் இருந்தான்.

 

 

பல வருடம் பார்த்து பழகிய முகம் போர் அடித்துவிட்டதால் பழைய மூஞ்சி என்று பட்டப்பெயரும் பெற்றான். அதற்காக அவன் பெண்களிடம் வழிபவன் எல்லாம் இல்லை. ஆனால்…

 

தாரகேஷ் தனது இடத்திற்கு வந்ததும் அவனது குழுவில் இருக்கும் நால்வரையும் அழைத்து டீம் மீட்டிங் போட்டான். அன்றைக்கான அவர்களது வேலை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்தான். அவன் பார்வை பூர்வியின் மீது ஒரு நொடி அழுத்தமாக பதிந்தது.

 

சில நாட்கள் கழித்து..

 

அஷ்வினி, “என்ன ஆச்சு பூர்வி, ஏன் இப்படி அழுதுட்டு இருக்க..”

 

பூர்வி, “அந்த ஆரவ் என்னை ஏமாத்திட்டாண்டி. என் கண்ணு முன்னாடியே வேற பொண்ணுக்கூட அவன் சினிமாக்கு..” என்று பேச முடியாமல் தேம்பினாள்.

 

ஜனனி, “ஏய் அது ஜஸ்ட் ஃபிரண்ட் இல்ல கசின்ஸ் இப்படி யாராவது இருக்கும்டி..”

 

பூர்வி, “இல்லடி.. எனக்கு அவன் வீட்டுல எல்லாரையும் தெரியும். எப்படியும் ஆரவ்வ தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு எல்லாரிடமும் நல்லா பழகி வச்சிருந்தேன். அடமெண்ட்டா பேசுன அவங்க அம்மாவ கூட சமாளிச்சு என்னை பிடிக்க வச்சிருந்தேன்.. இப்போ அவன்…”

 

கல்பனா, “சும்மா நீயா எதாவது கற்பனை பண்ணாத. முதல்ல அவன் கிட்ட கேட்டியா?”

 

பூர்வி, “இல்லைடி… அவன் வீட்ல எல்லாத்தையும் எனக்குத் தெரியும். ஆரவ்வைத்தான் கல்யாணம் பண்ணப்போறோம்னு அவன் அம்மாவைக் கூட எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சம்மதிக்க வெச்சிருந்தேன். ஆனா இப்போ அவன்… அடிக்கடி கோபப்படுறான், எரிஞ்சு விழுறான். இன்னைக்குக்கூட ‘அது நான் இல்லை’ ன்னு சாதிக்கிறான். ஒரு கட்டத்துல கை நீட்டி அடிக்கவே வந்துட்டான்டி… இதுக்கு மேல இவனோட என்னால வாழ முடியாது. எல்லா ஆம்பளைங்களும் ஒண்ணுதான். கல்பனா… நீயும் உன் வீட்டு மாப்பிள்ளைக்கிட்ட ஜாக்கிரதையா இருடி,” என போகிற போக்கில் அவள் நெஞ்சிலும் பீதியை கிளப்பிவிட்டாள்.

 

பூர்வி இப்படி ஏமாற்றத்தின் விரக்தியில் இருக்கும் நேரத்தில் மர்ம சிரிப்புடன் அங்கு வந்த தாரகேஷ், “உங்க வெட்டிப்பேச்சு எல்லாம் முடிஞ்சதுன்னா கொஞ்சம் வேலைய பாக்குறீங்களா?”

 

”எங்க வேதனை உங்களுக்கு வெட்டிப்பேச்சா தெரியுதா? நீங்களும் ஒரு ஆம்பள தான” என அவனிடமும் காய்ந்துவிட்டு தன் இடத்திற்கு சென்றாள் பூர்வி.. ஆனால் தாரகேஷின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

 

மேலும் சில நாட்கள் கழித்து..

 

கல்பனா, “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல..”

 

திருமண மேடையில் கல்பனா சொன்ன இந்த வார்த்தையில் மண்டபத்தில் இருந்த 200 முகங்களும் அதிர்ந்தன..

 

“ஏய்.. எங்க வந்து என்னடி பேசுற.. புரிஞ்சி தான் பேசுறியா?” என்று கண்களில் கண்ணீருடன் கேட்டார் கல்பனாவின் தாய்.

 

“வேண்டாம்மா இப்படி ஒரு மனநிலைல நான் கல்யாணம் பண்ணிக்கிறத விட கடைசி வரை நான் உன் பெண்ணாவே இருந்துறேன்மா” என்று தன் தாயைக் கட்டிக்கொண்டு கதறினாள் கல்பனா..

 

பெங்களூரில் உள்ள பிரபலமான ராஜ்கோ டிஜிட்டல் மென்பொருள் நிறுவன வாசலில்.

 

“உனக்கு எத்தனை தடவை சொல்றது ஹர்ஷித். தயவு செய்து என்னை பாக்க வராத.”

 

“ஏன் கிருத்தி.. நான் தான் உனக்கு எல்லாம் எக்ஸ்பிளைன் பன்றேன்னு சொல்றேன்ல.. ப்ளீஸ் கிவ் மீ ய சான்ஸ்..”

 

“இதுக்கு மேல எக்ஸ்பிளைன் என்ன இருக்கு. ஜஸ்ட் அவுட் ஆஃப் மை வே..”

 

“கிருத்தி ப்ளீஸ்..” என ஹர்ஷித் கெஞ்சியதை காதில் வாங்காமல் தன் அலுவலகத்திற்குள் சென்றாள் கிருத்திகா..

 

இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே இவர்களை கடந்து சென்றது கிருத்திகா வேலை செய்யும் டீமின் பிராஜெக்ட் மேனேஜர் தாரகேஷின் கார்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0