Loading

அத்தியாயம் 10

எதிரிகளை வீழ்த்திவிட்டு, அருகிலிருந்த மருத்துவமனையில் காரை நிறுத்தினாள் மௌனி ஆதிரா.

கார் நின்றும் அவன் அவளை விடாமல் இருக்க, அதன்பிறகே அவளுக்கும் நிலை உறைத்தது.

அவன் மடியில் தான் அமர்ந்திருப்பதும், முதுகில் சரிந்தவன் அவளது இடையைக் கட்டிக் கொண்டிருப்பதும்.

ஒரு சப்போர்ட்டுக்குப் பிடித்திருப்பான் என எண்ணிக் கொண்டவள், “ஜி… ஆர் யூ ஆல்ரைட்? ஹாஸ்பிடல் வந்துடுச்சு.” என விலக முற்பட, அவன் நிதானமாகவே கையைப் பிரித்தான்.

காரை விட்டு இறங்கியவள், “உங்களுக்கு வலிக்கலையா ஜி…” எனக் கேட்கும் போதுதான் புரிந்தது அதிக இரத்தம் வீணாகி இருப்பது.
அதிக அளவு இரத்தம் இழந்ததில் அவனும் அரை மயக்க நிலையில் இருந்தான்.

உடனடியாக ஸ்ட்ரெச்சரை எடுத்து வரப் பணித்தவள், அவசர சிகிச்சையினுள் அனுப்பி வைத்தாள்.

ஆனால் சில நிமிடங்களில் வெளியில் வந்த மருத்துவர்,

“மேம்… என்ன இவரு அனஸ்தீசியா குடுக்காம ட்ரீட்மெண்ட் பண்ணச் சொல்றாரு. இட்ஸ் டேஞ்சரஸ் மேம். பிளீடிங்கும் கண்ட்ரோல் ஆகல.” என்றதும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவனது வீட்டாரிடம் விவரம் சொல்லலாம் என்றால், ருஹானா, அர்னவைத் தவிர யாரையும் தெரியாது அவளுக்கு. சந்திரசேகரின் எண்ணும் அவளிடம் இல்லை.

வேகமாக ருஹானாவிற்கு அழைத்தவள் விவரம் கூறிட, அவளோ சாவகாசமாக காபி அருந்தியபடி,

“ஓ… சாக வாய்ப்பு இருந்தா சாக விட்டுட்டு வா… உனக்கு டபிள் பேமெண்ட் தர்றேன். அவனைக் காப்பாத்தலாம் ரொம்பக் கஷ்டப்படாத…” என அழைப்பைத் துண்டித்து விட்டதில், ‘அடிப்பாதகத்தி’ என்றிருந்தது.

அவளுக்கு அருகில் இருந்த வினயன் தான், “என்னாச்சு பாஸ்? சூர்யா சாருக்கு அடிபட்டுடுச்சா? மௌனி… மௌனிக்கு எதுவும் இல்லைல?” எனப் பதறிப் போனான்.

“ஹூ நோஸ். நீ உன் வேலையை மட்டும் பாரு. யார் செத்தா உனக்கு என்ன? உன் வேலை என்னைப் பார்த்துக்குறது மட்டும் தான்…” என்றதில் அவனுக்கு மெல்லக் கோபம் எழுந்தது.

பின் வேறு வழியற்று அர்னவிற்கே அழைத்தாள் மௌனி.

அவனோ, “ஐ டோன்ட் கேர்…” என ஒற்றை வார்த்தையில் முடித்து விட, ‘என்ன ஜென்மம் இதுங்க!’ என்றே எரிச்சலடைந்தாள்.

வேறு வழியற்று, “நான் பேசிப் பார்க்குறேன் டாக்டர்!” என்று அறுவை சிகிச்சை அறையினுள் நுழைய, அங்கு ஊசியை எல்லாம் தட்டிவிட்டுத் தனது சுயநினைவுடன் சிகிச்சை எடுக்கச் சொல்லிக் கத்தியவனை யாராலும் அடக்க இயலவில்லை.

“சூர்யா… காம் டவுன். அனஸ்தீசியா குடுக்காம எப்படி ட்ரீட்மெண்ட் பார்க்க முடியும்? பெயின் சிவியரா இருக்கும்.”

“ஏய்! அவுட்…” எனக் கர்ஜித்தவனைக் கண்டு உள்ளம் நடுங்கியது.

ஆகினும் கண்ணை மூடித் திறந்தவள், “டாக்டர், நீங்க அனஸ்தீசியா குடுங்க.” என்று தனது கம்பீரத்தை மீட்டுத் திமிராகக் கூற,

“யூ ஜஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ லேடி!” எனப் பார்வையாலேயே எச்சரிக்கை செய்தான் சூர்ய சித்தாந்தன்.

அவன் சட்டையைப் பிடித்துத் தன்னருகே இழுத்தவள், ஒரு கையால் மருத்துவரிடம் ஊசியைக் கேட்டுக் கண்ணைக் காட்டி வாங்கிவிட்டு,

“ஒழுங்கா ட்ரீட்மெண்ட் பண்ணு மேன். நான் சைட் அடிக்க ஆள் வேணாம்?” என ஒற்றைப் புருவத்தை அலட்டலாய் உயர்த்திக் காட்டினாள்.

வில்லாய் வளைந்த புருவமதில் அவனது விழிகளும் வளைய, அந்த நேரத்தைப் பயன்படுத்தி ஊசியைக் குத்தினாள்.

அவனோ கல்போல அசையாது நின்றவன், அடிபடாத கையால் அவள் கழுத்தை இறுக்கிப் பிடிக்க அவள் அரண்டு விட்டாள்.

ஆனால் மெல்ல மெல்ல மயங்கிப் போனதில் அவன் பிடியும் தளர, ‘இது என்னடா வம்பா போச்சு…’ என்ற ரீதியில் வெளியில் ஓடி வந்தவளுக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

ஒரே நொடி தான் பிடித்தான்.

கழுத்தில் அவன் விரல்கள் பதிந்து விட்டது.

‘பெரிய ஜாம்பியாக இருப்பான் போல…’ அவனை வாய்க்குள் திட்டிக் கொண்டாள்.

************

ஜனனி மெத்தையில் காலை ஆட்டியபடி அமர்ந்திருக்க, அவளது அறைக்குள் நுழைந்தான் அர்னவ் தேவ்.

அவன் முகத்தில் எகத்தாளம் பொங்கி வழிந்தது.

“இப்ப எப்படி இருக்கு? போதை எல்லாம் தெளிஞ்சுதா?” பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்துக் கேட்க,

“நீங்க கேக்குறதைப் பார்த்தா, நான் என்னவோ தண்ணி அடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடந்த மாதிரியும், நீங்க என்னைக் காப்பாத்திக் கூட்டிட்டு வந்த மாதிரியும் இருக்கே… எனிவேஸ், உங்களைக் காப்பாத்த வந்த என்னை மறுபடியும் காப்பாத்தி விட்டதுக்கு மனமார்ந்த நன்றிகள்!” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“பட், உன் நன்றியை நீயே வச்சுக்கோ! துரதிருஷ்டவசமா உன் அப்பா உன்னைப் பார்த்துட்டாரு. வெளில உனக்காக வெயிட்டிங்!” எனக் கேலி நகை இழையோடக் கூறியதில் அவள் உறைந்தாள்.

“என்..என்ன அப்பாவா?” அவனது விளையாட்டுப் புரியாது பயந்தே போனவளிடம்,

“ம்ம்… உன் அப்பாவே தான்! கமல்ராஜ் ரைட்?” என்றதும் போர்வையை எடுத்து விட்டு எழுந்தவளுக்கு ஒரு கணம் கால் ஆட்டம் கண்டது.

“அய்யய்யோ! போச்சு போச்சு… செத்தேன்.” எனக் கையைக் காலை உதறித் தவித்துப் போனவளை ஆசை தீரத் தவிக்கவிட்டு ஹாயாக நின்றான் அர்னவ்.

“இந்த ஹாஸ்பிடல்ல பேக் கேட் இருக்கா?”

“இருக்கு. ஆனா அங்கேயும் உன் அப்பா ஆளுங்க ரவுண்டு கட்டிட்டாங்களே?” அவன் உதட்டைப் பிதுக்க,

“ஹய்யோஓஓஓஓ…” என ஓலமிட்டவள்,

“சரி சரி, என்கூட உங்களைப் பார்த்தா முதல்ல போட்டுத் தள்ளுறது உங்களைத் தான். நீங்க போய் மறைஞ்சுக்கோங்க. நான்… என் குழியை நானே தோண்டிக்கிறேன்…” என நொந்து தலையைத் தொங்கப் போட்டு மெல்ல வாசலை எட்டிப் பார்த்தாள்.

இந்த நிலையிலும், தன்னைக் காப்பாற்ற எண்ணியவளைக் கண்டு லேசாய் திடுக்கிட்டான்.

ஜனனியோ எட்டிப் பார்த்து வெளியில் யாரும் இல்லாததைக் கண்டு, “எங்க யாரையும் காணோம். ஸ்நாக்ஸ் சாப்பிடப் போயிட்டாங்களா என்ன?” என ஹஸ்கி குரலில் அர்னவிடம் கேட்க, அவள் கையைப் பிடித்து உள்ளே இழுத்தவன் கதவை அறைந்து அடைத்து விட்டு, கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

“எங்க, அப்பாவைக் காணோம்?” அவள் இன்னும் புரியாது வினவ,

“இப்ப ஒரு போன் செஞ்சு நீ இங்கதான் இருக்கன்னு சொன்னா, உடனே வந்துடுவாருல்ல உன் அப்பா!” என்றான் அழுத்தமாக.
அதில்தான் அவளுக்கு நிலையே உறைத்தது. பேந்தப் பேந்த விழித்தாள்.

அர்னவ் தேவின் கழுத்து நரம்புகள் முறுக்கேற, அவளருகில் கோபத்துடன் நெருங்கியவன், “எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வந்து என்னையவே ஏமாத்தி இருப்ப?” என்றவனின் வெப்ப மூச்சு அவள் கன்னத்தைச் சுட்டது.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” வாய்க்குள் முணுமுணுத்த ஜனனிக்கு திக்திக்கென இருந்தது.

“போதையில எல்லாத்தையும் உளறிட்ட.”

“சுத்தம்! என்ன உளறுனேன்?”

“ஏன்? அது தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி பொய் சொல்லி ஏமாத்தவா? என்னடி பிளான்ல வந்துருக்க? ம்ம்…” என்றவனின் கடுங்கோபத்தில் அழுத்தம் இல்லை.

அவள் பயத்தில் வீட்டை விட்டு வந்திருப்பதைத் தான் உளறி விட்டாளே. ஆகினும், கோபம் தான் தீரவில்லை அவனுக்கு. அவள் எந்தத் திட்டத்தோடும் வரவில்லை எனப் புரிந்தாலும், அவளது வாயால் உண்மையை வரவழைக்கக் கேட்டான்.

“முதல்ல நான் என்ன உளறுனேன்னு சொல்லுங்க. வெளிநாட்டுக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு, இங்க வந்ததா தான சொல்லிருப்பேன். என் அப்பாவுக்குப் பயந்து, எதிரிகளுக்குப் பயந்து இங்க தலைமறைவா இருக்கேன், அதான?” எனக் கேட்க,

“ம்ம்… அதேதான்… பட் அப்பவும் நீ கொஞ்சம் தெளிவுதான். மௌனி உன் அக்கான்னும், வினயன் உன் அண்ணன்னும் சொல்லவே இல்ல… சி.ஈ.ஓ ஆஃப் மோனா இண்டஸ்ட்ரீஸ், ஜனனி கமல்ராஜ்!” அவன் குரலில் கிண்டல் வழிந்தது.

உதட்டைக் குவித்து அவனை முறைத்தவள், “ம்ம்க்கும்… முக்கியமான விஷயத்தை எல்லாம் தான் உளறி இருக்கேனே. அப்படி உங்களை ரிவெஞ்ச் எடுத்து, உங்க பிசினஸ் சீக்ரெட்ஸை சீக்ரட்டா ஆட்டயப் போட்டு, உங்களை எதிரி கையால துவம்சம் பண்ண வைக்கணும்னா, அதையும் தான உளறி இருப்பேன்…” எனச் சரியாகப் பாயிண்ட்டைப் பிடித்ததும், இறுகிய மார்பைச் சற்றே தளர்த்தினான்.

“கொஞ்சம் மூச்சை கூலா விடுங்க மிஸ்டர் அர்னவ்… உங்க சூட்டுல என் கன்னம் உருகிடப் போகுது…” என உதட்டைச் சுளிக்க, அவன் விழிகள் தானாய் பளிங்குக் கன்னங்களை ஆராய்ந்தது.

உண்மையில் அவனது நெருக்கத்தில் சிவந்து தான் போயிருந்தது.
அவளை முதன்முறை இத்தனை நெருக்கத்தில் பார்ப்பதாலோ என்னவோ, அல்லது வேலைக்காக மட்டுமே தன்னைக் காப்பாற்ற எண்ணாது அவளது உயர்ந்த பதவியைப் பற்றியும் சிந்திக்காது, பத்திரிகை விஷயத்திலும் அதன் பின்னேயும் அவனைக் காக்க முயன்றவளின் செயல் அவனைக் கவர்ந்திழுத்தது.

நேர்காணலிலேயே ஒரு முறைக்குப் பத்து முறை பார்க்க வைத்தவள் தானே!

அவளது சுருட்டை முடி வேறு அவளது காதைத் தீண்டி மொத்தமாக மறைத்திருந்தது. அதனை எடுத்துக் காதின் பின் சொருக வேண்டுமெனக் கரங்கள் துடிக்க, ‘இதென்ன புது அவஸ்தை’ என மெல்ல விலகித் தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.

“நீ எதுக்கு இங்க வந்துருக்கன்னு எனக்கு க்ளியர் காரணம் தெரிஞ்சாகணும்.” தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கேட்டான்.

அவளோ அமைதியாக இருக்க, “சரி உன் அப்பாகிட்டயே கேட்டுக்குறேன்…” என அலைபேசியை எடுக்க வேகமாக அவன் கையைப் பிடித்தவள்,

“அர்னவ், அர்னவ் ப்ளீஸ்… அந்த ஆளு என்னை என்ன செஞ்சாலும் பரவாயில்ல. மௌனியை ஏதாச்சும் செஞ்சுடுவான். ப்ளீஸ் அர்னவ்…” எனக் கண்ணாலேயே கெஞ்ச, தனது நிலை புரியாது அவள் வேறு தொட்டுத் தொட்டுப் பேசியதில் கடுப்பே எழுந்தது அவனுக்கு.

“முதல்ல தள்ளி நில்லு!” அவன் பல்லைக் கடித்ததில் முறைத்தவள்,

“நான் தொட்டா நீங்க ஒன்னும் கரைஞ்சுட மாட்டீங்க.” எனச் சிலுப்பிக் கொண்டவளுக்கு, தனது மேனி சபலம் கொள்கிறது எனப் புரிய வைக்க இயலவில்லை.

அதற்கு முயற்சியும் எடுக்காமல், “இப்ப சொல்லப் போறியா இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்டதில், “சரி சொல்றேன்” என்று ஆரம்பித்தாள்.

முதலில் ஒரு பொசிஷனில் நிற்பது போல, இரு விரல்களால் கண்ணில் கை வைத்துக் கொண்டவள், உருகிய குரலில் ஆரம்பித்தாள்.

“அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், அக்கான்னு ஒரு கூட்டுக் குடும்பம் நாங்க அர்னவ். பாசம்னா என்ன, அன்புன்னா என்னன்னு எங்களைப் பார்த்துத்தான் எல்லாரும் கத்துக்குவாங்க. சொந்தமுள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கும் மேலன்னு பாட்டு மட்டும் தான் பாட மாட்டோம். என் வீட்டுப் பெரியவங்க எல்லாம் தெய்வங்க…” என்று ஆழ்ந்த வருத்தத்தில் பேசிக்கொண்டே வந்தவளை அர்னவும் புருவம் சுருக்கிச் சற்றே தளர்ந்து பார்க்க, அவளோ சட்டென முக பாவத்தை மாற்றி,

“அப்படி எல்லாம் ஒரு கருமமும் இல்ல. என் அப்பா ஒரு முட்டாப்பீசு. என் பெரியப்பனுங்க ரெண்டும் முரட்டுப் பீசு. என் அம்மா, பெரியம்மா எல்லாம் ராணி மங்கம்மா… மௌனி அம்மா மட்டும் தான் நல்லவங்க. ஆனா அவங்க இப்ப உயிரோட இல்ல. ‘குடும்பமா இது’ அப்படின்னு கேக்குற அளவு ஒரு மானங்கெட்ட ஈத்தரக் குடும்பம் தான் என்னோடது…” எனச் சரமாரியாகப் பேசியவளைக் கண்டு தானாய் சிரிப்பு எழுந்தது அவனுக்கு.

“அடிப்பாவி… உன் குடும்பத்தை நீயே இப்படிப் பேசுற.”

“பெத்த பொண்ணையே கொலை பண்ணப் பார்க்குற அப்பா இருக்குற வீட்டை வேற எப்படிச் சொல்லச் சொல்றீங்க அர்னவ்…” இப்போது தான் உண்மையாகவே அவள் முகம் வருத்தத்தில் ஆழ்ந்தது.

“அவங்க எப்படியோ, நான், மௌனி, வினய் மூணு பேரும் சின்ன வயசுல இருந்தே படீஸ்(buddies) தான். மோனா இண்டஸ்ட்ரீஸோட நிஜ ஃபவுண்டர் மௌனியோட அம்மா மோகனகுமாரி தான். அண்ணன் தம்பிங்க எல்லாம் அதைப் பெருசாக்கி ஆளுக்கொரு சாம்ராஜ்யத்தைக் கையில எடுத்துக்கிட்டாங்க.

ஆனா அதுல பெரும்பான்மையான பங்கு மௌனிக்குத் தான் சேரணும். எங்க அவள் பங்கு கேட்டுடுவாளோன்னு நினைச்சு, என் பெரியப்பா மண்டையைக் கழுவி மௌனியை அங்க சி.ஈ.ஓ வா போட்டாங்க. அப்புறம் என்னையும், வினயையும் சி.ஈ.ஓ ஆக்குனாங்க. பேருக்குத் தான் சி.ஈ.ஓ. எங்க டேடிஸ் இல்லாம விரலைக் கூட அசைக்க முடியல எங்களால.

ஒரு கட்டத்துக்கு மேல எங்களால முடியல. அப்ப தான் மௌனி தனியா பிசினஸ் ஸ்டார்ட் பண்றதைப் பத்தி யோசிச்சா, ஃபுட் அண்ட் பிவரேஜ். ஏதோ ஒரு பிசினஸ் ஆச்சும் நம்ம தனியா செஞ்சோம்னு இருக்கணும்னு தான் நாங்க அதுல இறங்குனோம். எங்க டேட்ஸுக்கு அதுல விருப்பமே இல்ல. அவங்களைச் சரி பண்ற தைரியம் எனக்கும் வினய்க்கும் சுத்தமா இருந்தது இல்ல.

ஆனா மௌனி சமாளிச்சா… லாஸ் ஆனா மொத்தப் பொறுப்பையும் நான் ஏத்துக்குறேன்னு சொல்லிக் கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்குனா.
நாலு வருஷமா அந்த பிசினஸைப் பெருக்கி இப்ப இன்டர்நேஷனல் லெவல்ல இம்போர்ட், எக்ஸ்போர்ட் பண்றோம். இதுக்கு இடையில ஏகப்பட்ட பிசினஸ் எனிமீஸ். இது போதாதுன்னு மதன் பெரியப்பா, அதான் மௌனியோட அப்பாவும், எந்த ஒரு பிரச்சினைக்கும் வெட்டுவேன், குத்துவேன்னு தான் இறங்குவாரு.

ஒரு கட்டத்துல மௌனி தான் எல்லாரையுமே சமாளிக்க வேண்டியதா போச்சு. எங்க டேட்ஸ்க்கு ஒரு பிரச்சினைன்னாலும் அவள் தான் இறங்குவா. பேசுற விதத்துல பேசி எனிமீஸை சரி பண்ணுவா. அப்படியும் யாராவது குடைச்சல் குடுத்தா, பிசினஸே இல்லாம ஆக்கிடுவா… எல்லாம் நல்லா நடந்துட்டு இருக்குற டைம்ல, என் டேட்ஸுக்கு ஒரு கேவலமான ஆசை வந்துச்சு. எங்களுக்குக் கல்யாணம் பண்ணுனா அரசியல்வாதிங்க கூட தான் சம்பந்தம் வச்சுக்கணும்னு.
அப்படித் தான் சென்ட்ரல் மினிஸ்டர் சௌரபோட பையன், ஆரோனோட சம்பந்தம் வந்துச்சு…” என்றதும் அவன் கூர்மையானான்.

“சென்ட்ரல் மினிஸ்டரா?”

“ம்ம்… ஆரோனுக்கும் மௌனிக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு…”

“ம்ம்… சோ மேரேஜ் வேணாம்னு ஓடி வந்துட்டா?”

“சே சே… அவள் புருஷன் வேணாம்னு ஓடி வந்துட்டா!” அவளது கூற்றில் திகைத்தவன், “வாட்?” எனக் குழம்ப,

“புரியல. அவளுக்கும் ஆரோனுக்கும் மேரேஜ் ஆகிடுச்சு. ஆனா தாலி கட்டிக் கொஞ்ச நேரத்துல தாலியைக் கழற்றி எறிஞ்சுட்டா. என்ன பிரச்சினைன்னு எங்களுக்கும் முழுசா தெரியல. அவள் அப்படிப் பண்ணதுல கோபமான என் பெரியப்பா, அவளை சி.ஈ.ஓ பதவில இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாரு.

அவளுக்குப் பதவி போனது தெரிஞ்ச எனிமீஸ், எந்தப் புத்துல இருந்து முளைக்கிறாங்கன்னே தெரியல. அவளுக்குப் பதவி போனதுல இருந்து அவளை அட்டாக் பண்றாங்க. ஸ்னைப்பர் வேற வச்சுருக்கானுங்க. ஆல்ரெடி மூணு பெரிய ஷூட்ல இருந்து தப்பிச்சா… அதுவும் ஒரே நாள்ல.

ஒரு பக்கம் என் டேட்ஸ் அவளை மெண்டல் டார்ச்சர் பண்ண, ஒரு பக்கம் ஆரோன் அவளை பிஸிக்கல் டார்ச்சர் பண்ண ட்ரை பண்ண, ஒரு பக்கம் ஸ்னைப்பர்ஸ்… அவளுக்கு யோசிக்கக்கூட டைம் இல்ல.

வேற வழி இல்லாம, இதை சார்ட் அவுட் பண்ண டைம் வேணும்னு தான் அவள் இங்க வந்தா…
என் அப்பாவும் வினய் அப்பாவும் நாங்க சென்னைல இருந்தா, மௌனிக்கு சப்போர்ட் பண்ணுவோம்னு எங்களை பாரின் அனுப்ப ட்ரை பண்ணாங்க. நாங்களும் பாரின் போற மாதிரி தாஜா காட்டிட்டு, பெங்களூரு ஹைவேஸ்ல தீ வேகத்துல போயிட்டு இருந்த மௌனி காரைப் புடிச்சு நாங்க ஏறிட்டோம்.

இங்க வர்ற வரைக்கும் சத்தியமா இந்த வேலையைப் பத்தியோ, இன்டர்வியூ பத்தியோ எனக்குத் தெரியாது. வினய்க்கும் தான்.

மௌனி தான், இப்போதைக்கு யோசிக்க டைம் வேணும், பாதுகாப்பும் வேணும்னா சூர்யா சார்கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்துடலாம்னு சொன்னா… எங்களையும் சேர்த்துக் கோர்த்து விட்டுட்டா. அவளைத் தனியா விட்டுப் போகவும் எங்களால முடியாது. அதான் அப்படியே எங்க கேரக்டரை மெயின்டெயின் பண்ணிட்டோம்.” எனச் சொல்லி முடிக்க, அர்னவ் தலையில் அடித்தான்.

“பாதுகாப்புக்கு உங்களுக்கு இந்த இடம் தான் தெரிஞ்சுதா? லூசா நீங்க? இங்கயே ஆபத்து இருக்குன்னு தான் நாங்க பாடிகார்டே எடுத்தோம்…” அர்னவ் சலிப்பாய் கண்டித்தான்.

“தெரியும் அர்னவ். ஆனா மௌனி தான் சொன்னா, உங்க எதிரியாச்சும் கத்தியால தான் சண்டை போடுவாங்க, சமாளிச்சுக்கலாம்னு…” என உதட்டைப் பிதுக்கியதில்,

“முட்டாளுங்க. வடிகட்டுன முட்டாளுங்க…” அவன் பல்லைக் கடித்துச் சீற,

“ரொம்பப் பண்ணாதீங்க அர்னவ். எப்படியும் மௌனி செகண்ட் பிளான் பண்ணிருப்பா… கொஞ்ச நாள்ல இந்த டிராமாவ முடிச்சுட்டு எங்க வழியில போயிடுவோம். எங்களால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது…” எனச் சிலிர்த்துக் கொண்டதில்,

“ஏய் இடியட்… எங்களால உங்களுக்குப் பிரச்சினை ஆனா என்ன பண்ணுவீங்க? உனக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல…” எனத் தலையைப் பிடித்தான்.

அதனை அப்போதைக்கு ஆராயத் தவறியவள், “ப்ளீஸ் அர்னவ், இதை மட்டும் மௌனிகிட்ட சொல்லிடாதீங்க. என்னைக் கொன்னுடுவா… கொஞ்ச நாள் தான். அப்புறம் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ப்ளீஸ் ப்ளீஸ்…” எனக் கெஞ்சிட,
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்,

“ஆக, இப்ப நான் உனக்கு பாடிகார்ட் வேலை பார்க்கணும், அப்படித் தான?” என்றான் இடுப்பில் கையூன்றி.

“ஹி ஹி… நம்ம வேணும்னா வேலையைப் பிரிச்சுக்கலாம் அர்னவ். உங்க எதிரியை நான் பார்த்துக்கறேன். என் எதிரியை நீங்க பார்த்துக்கோங்க. ஒரு உதவிக்கு உதவி தான?” என இளித்து வைக்க,
“
இதோ பாரு, ஒரு வாரம் டைம் உனக்கு. அதுக்குள்ள இங்க இருந்து கிளம்பப் பாரு, இல்ல…” என எச்சரிக்கை விடுத்தவன், எரிச்சல் மிகவே அங்கிருந்து சென்றான்.

**********

வினயன், மௌனிக்கு குறுஞ்செய்தி அனுப்பியபடியே இருந்தான்.

அவள் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என நிலையைத் தெரிவித்ததும் தான் நிம்மதி எழுந்தது.

அந்நேரம் ருஹானா ஜியாவிற்கு அழைப்பு வரவும், எதிர்முனையில் வந்த தகவலைக் கேட்டு அதிர்ந்தாள்.

“வாட்? எந்த ஹாஸ்பிடல்?” எனப் படபடத்து விட்டு, சிசிடிவியைப் பார்க்க அதில் சிறிது நேரம் முன்பு ஜனனியை அர்னவ் தூக்கிச் செல்வது தெரிய, “ஓ ஷிட்…” எனத் தலையில் கை வைத்தாள்.

வினயனும் குழப்பமாக சிசிடிவியைப் பார்த்து அதிர்ந்து, “ஜனனிக்கு என்ன ஆச்சு?” எனத் தடுமாறினான்.

அவள் அதனைக் கவனியாமல், “அர்னவ்க்கு டேஞ்சர். சீக்கிரம் வா…” என்று வேகமாக காரில் ஏற,

அவளுக்கு முன் சென்றவன் புயல் வேகத்தில் காரை ஓட்டினான்.
ருஹானா, அர்னவின் எண்ணிற்கு அழைத்துக் கொண்டே இருக்க, அவனோ அழைப்பை ஏற்கவே இல்லை.

வினயன் உடனடியாக ஜனனிக்கே அழைத்து, “ஜன்னி என்னடி ஆச்சு?” எனக் கேட்டதில் அவள் விவரம் கூறியதும்,

“உனக்கும் அர்னவுக்கும் ஏதோ பிரச்சினைன்னு நாங்க வந்துட்டு இருக்கோம். நீங்க சேப் தான?” என்றதில்,

“நான் இங்க தான் இருக்கேன். அர்னவ்?” எனக் கேட்ட பிறகே, ஜனனிக்கு அருகில் அர்னவ் இல்லையென்றதே உறைத்ததில் உறைந்தாள்.

இங்கோ அனஸ்தீசியா முழுதாய் முடியும் முன்னே மயக்கத்தில் இருந்து எழுந்த சூர்ய சித்தாந்தன், கையில் இருந்த க்ளூகோஸ், பிளாஸ்டரை எல்லாம் பிய்த்து எறிய முயல,

“சார் சார்…” எனத் தாதியர் கத்தினர்.
உள்ளே கூக்குரல் கேட்டதும், ‘இந்த ஜாம்பி அடுத்து என்ன பண்ணுனானோ…’ எனப் பதறி உள்ளே சென்ற மௌனி ஆதிரா, அவன் எந்தவொரு கட்டுப்பாட்டுக்கும் அடங்காது கர்ஜனையில் அறையை நிரப்ப,

“ஐயோ…” எனக் காதை மூடியவள், “சூர்யா சூர்யா, காம் டவுன்…” என அவனை அடக்க முயல, அவளை ஒரு கையால் தள்ளி விட்டான்.

அவள் தடுமாறி கீழே விழுந்ததில், கட்டில் நுனி அவள் நெற்றியைப் பதம் பார்த்தது.

“ஆஆ…” எனத் தலையில் கை வைத்தவளின் மெல்லிய அலறல் சத்தம் கேட்ட பிறகே சூர்யா எனும் ஜாம்பிக்கு நிதானம் பிறந்தது.

ரசித்திட வருவான் (ள்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
35
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்