Loading

அத்தியாயம் 33

 

“நான் அஜூவைக் கூட பிரிஞ்சி இருந்துடுவேன் ஆனா சிவா குட்டிக்கு நான் இல்லாம ஒரு வேலையும் ஓடாது. அவனுக்கு எல்லாத்துக்குமே நான் வேணும்” என்று அர்ச்சனா புலம்பிக் கொண்டே போக,

 

‘என்னது நான் இல்லாம கூட இருந்துடுவாளாம், பையன் இல்லாம இருக்க மாட்டாளாமா?’ என்று எண்ணியவனாய் பொசசிவ் கோபத்துடன் அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜூன்.

 

அர்ச்சனா மற்றும் அர்ஜூனின் முக உணர்வுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்ட இளமயில், “நாம இல்லாம இந்த உலகத்துல ஒரு வேலையும் நடக்காதுனு நினைக்கிறதே பெரிய முட்டாள்தனம் அர்ச்சனா. இங்கே எல்லாத்துக்கும் ரீபிளேஸ்மெண்ட் இருக்காங்க. மனுஷங்க உலகத்தை விட்டுப் போகும் போது அவங்க நினைவு வேணும்னா மனுஷங்க மனசுல நீங்காம இருக்குமே தவிர, அவங்க செஞ்சிட்டு இருந்த வேலையைச் செய்ய இங்கே உடனே வேறொரு ஆளு கிடைச்சிடுவாங்க! அந்த வேலைகள்லாம் ஒன்னும் அப்படியே தடைப்பட்டு நின்னு போயிடாது” என்றாள்.

 

“கரெக்ட் தான். ஆனாலும் சிவா சின்ன பையன்” என்று அர்ச்சனா கலக்கமும் தயக்கமுமாய் உரைக்க,

 

“யம்மா தாயே, நீ உன் பையனை உன் கூடவே கூட்டிட்டுப் போய்டு! அவனையும் அங்கே வேறொரு ஸ்கூல்ல சேர்த்து விட்டுடுறேன். இப்ப சந்தோஷமா?” என்று கடுகடுப்புடன் கேட்டான் அர்ஜூன்.

 

‘இவரு எதுக்கு இப்ப இப்படிக் கோவப்படுறாரு’ என்று புரியாமல் அர்ச்சனா விழிக்க, வாய்க்குள் சிரித்துக் கொண்டாள் இளமயில்.

 

அந்நேரம் அந்த அறைக்குள் வந்தான் இளங்குமரன்.

 

இளங்குமரனைக் கண்டதும், “அவங்க ரெண்டு பேரும் எங்கே?” என்று கேட்டாள் இளமயில்.

 

“என் ரூம்ல தான் இருக்காங்க” என்றான் இளங்குமரன்.

 

“என் பொண்ணு என்ன சொல்றா டாக்டர்?” என்று பதைபதைப்புடன் கேட்டான் அர்ஜூன்.

 

“வருண் அவளோட டெடி பியர் மாதிரினு சொல்றா” என்று சொல்லிச் சிரித்தான் இளங்குமரன்‌.

 

“என்னது டெடி பியரா? அந்தளவுக்கு அவனைப் பிடிக்கும்னு சொல்றாளா?” என்று அர்ச்சனா சரியாகப் புரிந்து கொண்டு கேட்க,

 

“ஆமா அர்ச்சனா” என்ற இளங்குமரன் அங்கிருந்த மூவரிடமும் அந்த வாக்குறுதிக் காணொளியைக் காண்பித்தான்.

 

முழு காணொளியையும் பார்த்த இளமயிலின் முகத்தில் திருப்தியான புன்னகை இருக்க, அர்ச்சனா மற்றும் அர்ஜூனின் முகத்தில் பெரும் கலக்கம் தென்பட்டது.

 

“ஏன் ரெண்டு பேரும் கவலைப்படுறீங்க?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“அவ சின்ன பொண்ணு டாக்டர். கண்டிப்பா இந்த வயசுல வர்ற காதல் பிரேக் அப்ல தான் போயி நிக்கும். அதை கடந்து வர்றதுலாம் பெரிய கொடுமை” என்று அர்ஜூன் மிகுந்த வருத்தத்துடன் கூற,

 

“அந்த பையன் இப்ப நல்ல பையனா தெரியலாம். ஆனா பசங்க வளர்ந்து வரும் போது எப்படி மாறுவாங்கனே தெரியாதே டாக்டர். இதுல பல வருஷமா கமிட்டடா இருந்து பாண்டிங் உருவாகிட்டு பிரேக் அப் ஆகிடுச்சுனா தேவையில்லாத மன உளைச்சல் தானே! அதெல்லாம் இவ எப்படிக் கடந்து வரப் போறாளோனு நினைச்சாலே பயமும் வேதனையுமா இருக்கு டாக்டர்” என்றாள் அர்ச்சனா.

 

“ஏன் அவங்க பிரிஞ்சிடுவாங்கனே நினைக்கிறீங்க ரெண்டு பேரும்? அவங்க சேர்ந்து வாழக் கூட வாய்ப்பிருக்கு தானே” என்று கேட்டான் இளங்குமரன்.

 

“எனக்கு அந்தப் பையனைப்‌ பார்த்தாலே பிடிக்கலை டாக்டர்! அவங்க சேராம இருந்தா தான் நான் சந்தோஷப்படுவேன். என்ன சொல்லி என் பொண்ணை மயக்கினானோ?” என்று பொங்கினான் அர்ஜூன்.

 

“பிரபோஸ் செஞ்சதே உங்கப் பொண்ணு தான் அர்ஜூன். வருண் இல்லை” என்று சிரித்தான் இளங்குமரன்.

 

என்ன என்பது போல் அதிர்வுடன் இளங்குமரனைப் பார்த்தனர் இருவரும்.

 

“ம்ப்ச் நான் தான் அவளைக் கண்டுக்காம விட்டு இவ்ளோ தூரத்துக்குக் கொண்டு வந்துட்டேன்” என்று புலம்பிய அர்ஜூன்,

 

“இனி அவளை அவன்கிட்ட பேசவே விடாம செய்றேன் பாருங்க” என்று கடுங்கோபத்துடன் உரைத்தான்.

 

“அர்ஜூன் ரிலாக்ஸ்! ஏன் இவ்ளோ குரோதமா யோசிக்கிறீங்க. அவனும் உங்கப் பொண்ணு மாதிரி சின்ன பையன் தான். வளர்ந்ததும் அவங்க மனநிலை எப்படி இருக்குனு பார்த்துட்டு டிசைட் பண்ணலாம். இப்ப அவங்களைப் பத்தின எந்த முன்முடிவும் எடுக்காதீங்க. அவங்ககிட்ட இருக்க நல்லதும் அப்புறம் உங்க கண்ணுக்கு கெட்டதாவே தெரியும்” என்று அறிவுறுத்தினான் இளங்குமரன்.

 

“இளா மச்சான், அர்ச்சனா ஹெல்த் கண்டிஷன் நார்மல் ஆகுற வரைக்கும் அவங்களை பெங்களூர்ல அவங்க அப்பா அம்மா வீட்டுல இருக்கச் சொல்லிருக்கேன். கூடவே நிவியையும் கூட்டிட்டு போய்ட்டு அவளோட ஸ்கூலிங் முழுக்க அங்கே கன்டினியூ செய்ய சொல்லிருக்கேன். வருணும் நிவேதாவும் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ல இருந்தாங்கனா சரியா இருக்கும்னு தோணுச்சு” என்று விளக்கினாள் இளமயில்.

 

“சரி தான் மயிலம்மா! அப்ப மூனு மாசம் தான் அவங்க பார்த்துக்க முடியும். அடுத்து அவங்களோட இருபத்தஞ்சு வயசு வரைக்கும் ரெண்டு பேரும் எங்கேயும் பார்த்துப் பேச முடியாது! எனக்கு செஞ்ச பிராமிஸ்ஸை எந்தளவுக்குக் காப்பாத்துறாங்கனு பார்ப்போம்” என்று பெருமூச்சு விட்டான் இளங்குமரன்.

 

அர்ச்சனாவின் உடல்நிலைக் குறித்து பேசிவிட்டு தனது அறைக்குச் சென்றவன், வருணும் நிவேதாவும் தீவிரமாய் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “பலத்த டிஸ்கஷன் போய்ட்டு இருக்குப் போல” எனக் கேட்டான்.

 

“பாருங்க டாக்டர், இவ என்னையும் லா படிக்க சொல்றா! அப்ப தான் ஸ்கூல் முடிச்ச பிறகு காலேஜ்லயும் நாங்க ஒன்னா இருக்க முடியும்னு சொல்றா!” என்று வருண் சொல்லவும்,

 

‘ஏன்டா சொன்ன’ என்று வருணை முறைத்தவள் அவனின் காலை மிதித்தாள்.

 

“ஆஆஆ ஏன்டி மிதிக்கிற?” என்று அதற்கும் அவன் அவளைப் போட்டுக் கொடுக்க, இவர்களின் இந்த விளையாட்டுதனத்தைப் பார்த்துச் சிரித்த இளங்குமரன்,

 

‘ரெண்டு வருஷம் கழிச்சு தான் காலேஜூக்குப் போகப் போறாங்க. அப்ப பிரியாம இருக்கிறதுக்கு இப்பவே இப்படி யோசிக்கிறவ, இவளோட அப்பா அம்மா மூனு மாசம் கழிச்சி இவங்களை பிரிச்சி ஸ்கூல் மாத்தப் போறது தெரிஞ்சா என்ன செய்வாளோ’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“ஏன்மா அப்படியே காலேஜ் முடிஞ்சதும் இவனை உனக்கு ஜூனியரா வச்சிக்கிட்டு இருபத்தஞ்சு வயசுக்குப் பிறகு கல்யாணம் செஞ்சிக்கலாம்னு பிளானா?” எனச் சிரிப்புடன் கேட்டான்.

 

“ஆமா அங்கிள்! காலேஜூம் ஒன்னா படிச்சி முடிச்சிட்டு, ரெண்டு பேரும் ஒரே வக்கீல்கிட்ட ஜூனியரா சேர்ந்துட்டா, நாங்க பிரிய வேண்டியது இருக்காதுல” என்றாள் நிவேதா.

 

“ஜட்ஜம்மா செம்ம பிளானிங் தான் போங்க” என்று கேலிச் செய்த இளங்குமரன் இரண்டு பேரிடமும் தன்னுடைய முகவரி அட்டையைக் கொடுத்து, “இது என்னுடைய விசிட்டிங் கார்ட்! இதுல என்னோட போன் நம்பர் இருக்கு. உங்களுக்கு எப்ப எது என்கிட்ட பேசனும்னாலும் பேசலாம். உங்களுக்குனு போன் எதுவும் உங்ககிட்ட இருக்கா?” எனக் கேட்டான்.

 

“ஆமா” என்று வருணும், “இல்லை” என்று நிவேதாவும் கூற,

 

“காதலிச்சா பொய் சொல்லியே ஆகனும்னு எந்த ரூல்ஸ்சும் இல்ல நிவேதா! உண்மை என்னிக்குனாலும் ஜெயிக்கும். பொய் அழிக்கத் தான் செய்யும்” என்று கண்டிப்புடன் உரைத்தான்.

 

“சாரி அங்கிள்” என்று தலையைத் தாழ்த்திய நிவேதா, தனது பையிலிருந்த கைப்பேசியை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

 

“எனக்கு உங்க ரெண்டு பேரோட போன் நம்பரும் வேணும்” என்று அவர்களின் அழைப்பு எண்ணைக் கேட்டு வாங்கி தனது கைப்பேசியில் சேமித்துக் கொண்டான் இளங்குமரன்.

 

“ஓகே நீங்க கிளம்பலாம். எனக்குக் கொடுத்த பிராமிஸ் ஞாபகம் இருக்கட்டும்” என்றவனாய் அவர்களை அனுப்பி வைத்தான்.

 

இளங்குமரனிடம் விடைப்பெற்றவர்களாய் அர்ச்சனாவின் அறைக்குள் நுழைந்தனர் வருணும் நிவேதாவும்.

 

அப்பொழுது அர்ச்சனா கிளம்புவதற்காக எழுந்து அமர்ந்திருந்தாள். அர்ஜூன் பணம் கட்டுவதற்காகச் சென்றிருந்தான்.

 

“ஆன்டி இப்ப உடம்பு எப்படி இருக்கு?” எனக் கேட்டான் வருண்.

 

அர்ச்சனாவின் கையில் ஊசி குத்திய இடத்தில் போட்டிருந்த பிளாஸ்திரியைத் தடவினாள் நிவேதா.

 

“லேசான மயக்கம் தான் வருண். இப்ப பரவாயில்ல” என்று அர்ச்சனா உரைத்திருந்த நேரம் உள்ளே வந்தான் அர்ஜூன்.

 

அர்ஜூனைக் கண்டதும் வருணுக்கு உள்ளுக்குள் பயம் ஊற்றெடுக்க, “சரி ஆன்டி உடம்பைப் பார்த்துக்கோங்க. பை ஆன்டி! பை நிவி” என்றவனாய் அர்ஜூனை ஏறெடுத்தும் பாராது விறுவிறுவெனச் சென்றிருந்தான் வருண்.

 

‘அந்தப் பயம் இருக்கட்டும்’ என்று மனத்தினுள் நினைத்தவனாய் சிரித்துக் கொண்டான் அர்ஜூன்.

 

அதன் பிறகு வீட்டை நோக்கி அமைதியாகவே மகிழுந்தில் பயணித்தனர் மூவரும்.

 

பெண்கள் இருவரையும் வீட்டினில் இறக்கி விட்டவனாய் தனது அலுவலை கவனிக்க கேளிக்கை விடுதியை நோக்கிச் சென்றான் அர்ஜூன்.

 

அர்ஜூனின் தாயும் தந்தையும் அர்ச்சனாவை எந்த வேலையும் செய்ய விடாது ஓய்வெடுக்க வைத்தனர்.

 

அர்ஜூனின் தாயே வேலையாட்களை வைத்துக் கொண்டு அன்றைய நாளின் உணவு வேலைகள் முழுவதையும் கவனித்துக் கொண்டார்.

 

இரவு தாமதமாகத் தான் வந்தான் அர்ஜூன்.

 

விரைவாக வர வேண்டும் என்று திட்டமிட்டு வேலைச் செய்த போதும் அவனால் வர முடியவில்லை.

 

அர்ஜூன் இரவு வீட்டிற்கு வந்த போது அனைவரும் உறங்கியிருந்தனர்.

 

பிள்ளைகளின் அறைக்குச் சென்று அவர்கள் உறங்குவதைப் பார்த்தவன் நிவேதாவையே கண் இமைக்காமல் பார்த்திருந்தான்‌.

 

பிறக்கும் போது தனது உள்ளங்கை அளவிற்கு கூட இல்லாத இந்தக் குட்டிப் பெண் ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வந்து நிற்கிறாள், காலம் எத்தனை வேகமாய் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டவன்,

 

‘இந்தக் காதலைத் தொடர விடக் கூடாது’ என்று உறுதி பூண்டவனாய் நிவேதாவின் புத்தகப்பையைத் தேடினான்‌.

 

அவளின் புத்தகப்பையினுள் ஆராய்ந்தவனாய் அந்த பட்டன் கைப்பேசியைத் தேடி எடுத்தவன் கையோடு எடுத்துச் சென்றான்.

 

அறைக்குள் நுழைந்தவன் அர்ச்சனா உறங்காது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “இன்னும் தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க அச்சுமா?” எனக் கேட்டான்.

 

“ஹாஸ்பிட்டல்ல நிறைய தூங்கிட்டேனா அதான் இப்ப தூக்கம் வரலைப்பா” என்றாள் அர்ச்சனா.

 

குளியலறைச் சென்று குளித்து விட்டு உடை மாற்றியவனாய் அர்ச்சனாவின் அருகில் அமர்ந்தவன், “பெங்களூர்ல நீ முன்னாடி பாடின ஆர்க்கெஸ்ட்ராக்கிட்ட பேசு அச்சுமா. மூனு மாசம் கழிச்சி அங்கே வந்து ஜாயின் செஞ்சிக்கிறதா சொல்லு” என்றான்.

 

சோகத்துடன் சரி என்றவள், “நாங்க எல்லாரும் இல்லாம நீங்க மட்டும் தனியா இருந்திடுவீங்களாப்பா?” எனக் கேட்டாள்.

 

“நான் இல்லாம நீயே இருந்திடுவனும் போது என்னாலயும் இருக்க முடியும்” கோபத்துடன் வெடுக்கென உரைத்தவனாய் அவளுக்கு முதுகைக் காண்பித்தவாறு படுத்துக் கொண்டான் அர்ஜூன்.

 

“என்னது?” என்று அதிர்ந்த அர்ச்சனா,

 

படுத்திருந்தவனின் புஜத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவளாய்,

 

“நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுனு தானே நான் சொன்னேன்” என்றாள்.

 

“இல்ல உன் பையன் இல்லாம தான் உன்னால இருக்க முடியாதுனு சொன்ன” குற்றம் சாட்டும் தொனியில் உரைத்தான்.

 

அவனின் முகப் பாவனையிலும் குரலிலும் தெரிந்த பொசசிவ் கோபத்தில் மென்மையாய் சிரித்த அர்ச்சனா, “லவ் யூ அஜூப்பா” என்றவளாய் குனிந்து அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

 

அவளை இழுத்து அருகே படுக்க வைத்தவனாய் இறுக்கமாய் அணைத்தவன் கழுத்தில் முகம் புதைத்தான்.

 

“ஐம் கோயிங் டூ மிஸ் யூ பேட்லி அச்சுமா” என்றான்.

 

தனது கழுத்தில் முகத்தைப் புதைத்திருந்தவனின் தலைமுடியைக் கோதியவளாய், “இன்னும் மூனு மாசம் இருக்குப்பா” என்றாள்.

 

ஊசிக் குத்தப்பட்டிருந்த அவளின் கையை எடுத்து முத்தமிட்டவனாய், “சாரிடா அச்சுமா” என்றான் அர்ஜூன்.

 

அத்தியாயம் 34

 

அவனுக்கு அவள் தான் இளைப்பாறல்!

 

நாள் முழுவதும் பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடி ஓடி உழைத்து சோர்வுடன் வருபவனுக்கு இரவில் அவளுடனான இந்த இணக்கம் மனத்திற்கு இதமளித்து ஆசுவாசமளிக்கும்.

 

அவளில்லாமல் தான் எவ்வாறு வரும் நாட்களை கடத்தப் போகிறோமோ என்று கவலைக் கொண்டான் அவன்.

 

ஆனாலும் பிள்ளைகளுக்காகவும் அவளின் உடல்நிலைக்காகவும் கடந்து தான் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவனாய் பெருமூச்சுடன் அவளின் கழுத்தில் புதைத்திருந்த முகத்தை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தான்.

 

என்ன என்பது போல் அவள் அவனைப் பார்க்க, இத்தனை நேரமாகத் தன்னை வருடிக் கொண்டிருந்த அவளின் ஊசிக் குத்தப்பட்ட கையைப் பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டவனாய், “சாரிடா அச்சு மா” என்றான்‌.

 

எதுக்கு என்பது போல் அவள் அவனைப் பார்க்க, “காலைல கோவத்துல ரொம்ப பேசிட்டேன். உன்னைக் கவனிக்காம விட்டுட்டேன் தானே. இல்லனா உன் உடம்பு இவ்ளோ மோசமா ஆகியிருக்காதுல” என்றான் அர்ஜூன்.

 

“எல்லா பழியையும் உங்க மேல போட்டுக்கிறதை நிறுத்துங்க அஜூப்பா. எனக்கு உடம்பு சரியில்லனாலும் நீங்க தான் காரணம், நிவி யாரையாவது காதலிச்சாலும் நீங்க தான் காரணம்னு எல்லாத்துக்கும் உங்க மேலேயே பழியைப் போட்டுக்கிறீங்க. இல்லனா என் மேல பழியைப் போட்டு திட்டுறீங்க”

 

“நாம என்ன தான் பிளான் செஞ்சி வாழ்க்கையை நகர்த்தினாலும் விதி அதோட வேலையைச் செய்யத் தான் செய்யும்ப்பா. எது வந்தாலும் மேனேஜ் செய்றதுக்கு நாம தயாரா இருக்கனும்” என்றாள் அர்ச்சனா.

 

“ஒரு நாள் தானேடி மயிலுக்கிட்ட உன்னை விட்டுட்டு வந்தேன். அவளை மாதிரியே பேசுறியேடி” என்று சிரித்தான் அர்ஜூன்.

 

மென்மையாய் சிரித்த அர்ச்சனா, “மயிலுகிட்ட கத்துக்க நிறையவே இருக்குப்பா. அவங்க தான், ‘இது வந்துடுமோ அது வந்துடுமோ இப்படி ஆகிடுமோ அப்படி ஆகிடுமோனுலாம் நினைக்காம, எது வந்தாலும் மேனேஜ் செய்யனும்னு மனசைத் திடப்படுத்தி வைக்கனும்னு சொன்னாங்க. மனசை அதுக்கேத்த மாதிரி பழக்கி வைக்கனும்னு சொன்னாங்க’

 

அவங்க சொல்றது உண்மை தானே. நாம கவலைப்படுறனால மட்டும் என்னவாகிடப் போகுது, நடக்குறது தானே நடக்கும். அதை எப்படி கையாள்றதுனு யோசிப்போம்னு நினைச்சிக்கிட்டேன்” என்றாள் அர்ச்சனா.

 

“சரி தான். ஆனாலும் பிள்ளைகளோட வாழ்க்கை நம்ம கையில தானே இருக்கு அச்சுமா. முடிஞ்ச வரைக்கும் அவங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை அமைச்சி கொடுத்துட்டா போதும் எனக்கு” என்றவனாய் பெருமூச்சு விட்டான் அர்ஜூன்.

 

அதே நேரம் இங்கே இளங்குமரனின் இல்லத்தில் படுக்கையறையில் அவன் மேலே மார்பில் தலையை வைத்து இடுப்பில் இரு புறமும் கால்களை நுழைத்து அவனை அணைத்தவளாய் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள் அவர்களின் மகள் வள்ளிமயில்.

 

இளங்குமரனின் அருகில் இளமயில் படுத்திருக்க, தாயின் மேல் ஒரு காலைப் போட்டவனாய் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் அவர்களின் மகன் முத்தமிழ்க் குமரன்.

 

வள்ளிமயிலும் முத்தமிழ்க் குமரனும் இரட்டையர்கள். அர்ஜூனின் பத்து வயது மகன் சிவகணேசனுடன் ஒரே வகுப்பில் பயில்பவர்கள்.

 

உறங்கிக் கொண்டிருந்த மகளின் தலையைக் கோதியவனாய் பெருத்த சிந்தனையில் இருந்த இளங்குமரனை நோக்கிப் படுத்திருந்த இளமயில், “என்ன இளா மச்சான் யோசிச்சிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள்.

 

“நிவேதாவைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் மயிலம்மா” என்றவன்,

 

“ரெண்டு பேருமே இன்டலிஜன்ட் பிள்ளைங்க! அவங்களை சரியா வழிநடத்தினா பெரிய லெவல்ல வருவாங்கடா. எப்படி இதை செய்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான்.

 

“நம்மகிட்ட வந்தாங்க ஹெல்ப் செஞ்சோம். திரும்ப வந்தா பார்த்துக்கலாம். ஏன் இவ்வளோ மெனக்கெடுறீங்க?” எனக் கேட்டாள் இளமயில்.

 

“இல்ல மயிலம்மா! என்னை நம்பி பிராமிஸ் செஞ்சி கொடுத்த பிள்ளைங்களுக்கு நான் ஏதாவது நல்லது செய்யனும்ல. நாளைக்கு அவங்க கெட்டுப் போய் நின்னாங்கனா எனக்கு கில்டியாகிடும் மயிலம்மா” என்றான்.

 

மெல்ல எம்பி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவளாய், “இதுக்காக தான், இப்படி நீங்க யோசிக்கிறனால தான் சின்னதுல இருந்து உங்க மேல பைத்தியமா சுத்துறேன் இளா மச்சான்” என்று காதலோடு கூறியவளாய் அவனோடு ஒன்றினாள் இளமயில்.

 

அவளின கூற்றில் மெல்லச் சிரித்தவாறு ஒரு கரத்தால் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டவன் அமைதியாக இருக்க,

 

“நம்ம பொண்ணுக்கு நிவேதா வயசு வரும் போது இது மாதிரி ஏதாவது பையனை லவ் பண்றேன்னு வந்து நின்னா என்ன பண்ணுவீங்கப்பா” எனக் கேட்டாள் இளமயில்.

 

மகளின் முதுகை வருடிக் கொண்டிருந்த அவனின் மறுகரம் ஒரு நொடி நின்று பின்பு நகர,

 

“அவ காதலிக்கிறதைத் தப்புனு சொல்ல மாட்டேன் மயிலம்மா. காதலிக்கிற அந்த வயசு தான் தப்புனு எடுத்துச் சொல்லுவேன். நிவேதா அளவுக்கு இல்ல நம்ம பொண்ணு. உன் பேச்சை தான் கேட்க மாட்டாளே தவிர நான் சொன்னா கேட்டுக்குவா” என்று சிரித்தான் இளங்குமரன்.

 

“நீங்க வேற, உங்க அளவுக்கு அவளை அன்பா பாசமா மரியாதையோட நடத்துற பையனைத் தான் அவ கட்டிக்கனும்னு சொல்லிச் சொல்லி வளர்க்கிறீங்க.

அதனாலேயே எவனாவது அவளை லவ் பண்றேனு சொல்லிட்டு வந்து நின்னா இவளே அவனை அடிச்சி விரட்டிருவா” என்று கூறிச் சிரித்தாள் இளமயில்.

 

“அது என்னமோ சரி தான்” என்று சிரித்த இளங்குமரன்,

 

“ஒரு வேளை என் அளவுக்கு அவளை நல்லா பார்த்துக்கிற மரியாதையா நடத்துற பையனை அவ லவ் பண்ணா நானே கட்டி வச்சிடுவேன் மயிலம்மா” என்றான்.

 

“பருவ வயசுல காதலிக்கிறது தப்பில்லை. ஆனா அவங்க தேர்ந்தெடுக்கிறவங்க நல்லவங்களா இருக்கனும். வாழ்நாள் முழுசுக்கும் அவங்க இப்படி நல்லவங்களாவே இருப்பாங்கன்ற நம்பிக்கை நமக்கு வரனும். அப்படி இல்லனா, அவங்களை விட்டு விலகி வர பிள்ளைங்க தயங்கக் கூடாது! காதலிக்கவே கூடாதுனு சொல்லாம இப்ப இருக்க பசங்கக்கிட்ட இப்படித் தான் சொல்லி வளர்க்கனும் மயிலம்மா” என்றான்.

 

“பிள்ளைங்களை கல்யாணம் செஞ்சி கொடுக்கிற வரைக்கும் அப்பா அம்மா ஏன் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கோம்னு சொல்றாங்கனு இப்ப புரியுது எனக்கு” என்று கூறிச் சிரித்தாள் இளமயில்.

 

“ஆமா அவங்களுக்கு கல்யாண வயசு வந்ததும் நிம்மதியான வாழ்க்கையை அவங்களுக்கு அமைச்சி தர்றதை விட பெரிய சந்தோஷம் நமக்கு என்ன இருந்துடப் போகுது. அப்படி அமையுற வரைக்கும் வயித்துல பயபந்து உருண்டுட்டு தான் இருக்கும்” என்று வழிமொழிந்தான் இளங்குமரன்.

 

மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர் இருவரும்.

 

மறுநாள் காலை முதலில் எழுந்த அர்ஜூன், நேராக மகளின் அறைக்குச் சென்று நின்றான்.

 

அங்கு நிவேதா அறை முழுவதையும் புரட்டிப் போட்டவளாய் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்த அர்ஜூன், “என்ன தேடுற நிவி?” எனக் கேட்டான்.

 

அப்போது தான் அவன் அங்கு நிற்பதையே கவனித்த நிவேதா, “ஒன்னுமில்லப்பா” என்றவளாய் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

 

“இதையா தேடிட்டு இருந்த நிவி” என்றவனாய் தனது கையிலிருந்த பட்டன் கைப்பேசியைக் காண்பிக்க,

 

அதிர்ச்சியானவளாய் சட்டென எழுந்து அமர்ந்தவள், “எங்கேப்பா இருந்துச்சு? நேத்து ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு வந்துட்டேனா?” எனக் கேட்டவாறு அவனின் கையிலிருந்து வாங்க முற்பட்டாள்.

 

கைப்பேசியை அவளிடம் கொடுக்காமல் தனது கையை பின்னே இழுத்தவனாய், “உனக்கு எதுக்கு தனி ஃபோன் நிவேதா. உன்னோட ஸ்கூல் படிப்பு சம்பந்தமா ஏதாவது பேசனும்னா அம்மாவோட ஃபோன்ல பேசிக்கோ” என்றான்.

 

“அப்பா எனக்கு வருண்கிட்ட பேச போன் வேணும்” என்றாள் நிவேதா.

 

“அவன்கிட்ட நீ எதுக்குப் பேசனும். ஸ்கூல்ல தான் அவனை தினமும் பார்க்கிறியே! அப்புறம் என்ன?” என்று கடுமையான குரலில் உரைத்தவன் அங்கிருந்து நகர முற்பட,

 

“எனக்கு என் போன் வேணும். கொடுங்கப்பா” என்று அடமாய் கேட்டாள் நிவேதா.

 

“நான் சொன்னது.. சொன்னது தான். இனி உனக்கு போன் கிடையாது” அழுத்தம் திருத்தமாக உரைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜூன்.

 

அர்ஜூன் தனது அறைக்குள் நுழைந்த போது தான் கண் விழித்தாள் அர்ச்சனா.

 

அர்ஜூனின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்து விட்டு அவள் விசாரிக்கவும், நிவேதா கைப்பேசியை தான் எடுத்து வைத்திருப்பதை உரைத்தான்.

 

“நீங்க ஏன் அவளை டென்ஷன் படுத்துறீங்க? கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். ரொம்ப ரெஸ்ட்ரிக் (restrict) செய்யாதீங்கப்பா” என்றாள்.

 

உடனே அர்ஜூனுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வர, “நீ சும்மா இரு! அவளை இப்படி விட்டு விட்டுத் தான் இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கோம்.

அவளைக் கொஞ்சம் விட்டாலும் நம்ம தலை மேல ஏறி உட்கார்ந்துட்டு ஆடுவா” என்றவனாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

 

‘இதுங்க ரெண்டுத்துக்கும் இடையில கிடந்து நான் படுற பாடு இருக்கே’ என்று மனத்திற்குள் புலம்பியவளாய் எழுந்த அர்ச்சனா மகளின் அறைக்குச் சென்றாள்.

 

தன்னுடைய அறையில் அழுகையுடன் அமர்ந்திருந்த மகளின் அருகே சென்ற அர்ச்சனா, “எதுக்கு இந்த அழுகை? நீ எங்களுக்கு தெரியாம போன் வச்சிக்கிட்டு இருந்ததே தப்பு! அதுக்காக எங்க யாருக்கிட்டயாவது சாரி கேட்டியா?” என்று குற்றம் சுமத்தும் பார்வையுடன் கேட்டாள்.

 

“என் கூட படிக்கிற எல்லாரும் போன் வச்சிருக்காங்க. நான் மட்டும் வச்சிருக்கிறது எப்படித் தப்பாகும். எனக்கு என் போன் வேணும். இல்லனா நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன்” என்று அழுகையின் விம்மலுடன் கோபமாய் கத்தினாள் நிவேதா.

 

“நிவிமா அடம்பிடிச்சீனா அம்மா அடிச்சிருவேன் சொல்லிட்டேன்” என்று அர்ச்சனா கோபமாகச் சொல்லவும்,

 

அம்மா அடித்து விடுவாளோ என்று பயந்து சற்று இறங்கிய நிவேதா, “சரி உங்க ஃபோன் தாங்க! நான் வருணுக்கு குட் மார்னிங் அனுப்பிட்டு தரேன்” என்று கேட்டாள்.

 

“காலேஜ் படிச்சி முடிச்சி நீ வேலைக்குப் போகுற வரைக்கும் உனக்கு போன் கிடையாது நிவேதா. இப்ப மட்டும் அவனுக்கு மெசேஜ் அனுப்பிக்கோ! ஆனா இனி நான் தர மாட்டேன். அவனைத் தான் தினமும் ஸ்கூல்ல பார்க்கிறியே” என்றவளாய் தனது கைப்பேசியை அறையிலிருந்து எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள் அர்ச்சனா.

 

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவளாய் பெருமூச்சுடன் நிவேதா கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.

 

‘இதுக்கே இவ்ளோ அடம் பிடிக்கிறாளே! இவளை எப்படி ஸ்கூல் மாத்துறதுக்கு ஒத்துக்க வைக்கப் போறேனோ தெரியலையே ஆண்டவா‌’ என்று ஆயாசத்துடன் நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.

 

‘மயிலுக்கிட்ட இதைப் பத்திப் பேசனும். எப்டி இவளைச் சம்மதிக்க வைக்கிறதுனு பார்க்கனும்’ என்று நினைத்துக் கொண்ட அர்ச்சனா,

 

அன்று மாலை இளமயிலை அவளின் இல்லத்திற்கே சென்று சந்தித்த அதே நேரம் அர்ஜூன் வருணின் தாயை அவர் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்திற்கே சென்று சந்தித்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்