Loading

அத்தியாயம் 31

 

பள்ளிக்கூடத்தில் உணவு இடைவேளையில் மரத்தின் நிழலில் அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தனர் நிவேதாவும் வருணும்.

 

வருண் ஏதோ தீவிர யோசனையில் உண்டு கொண்டிருக்க, “என்னடா யோசிக்கிற?” எனக் கேட்டாள் நிவேதா.

 

“நேத்து தான் டிவில காதல் படம் பார்த்தேன் நிவி. அதுல ஹீரோவை ஹீரோயின் வீட்டுக்காரங்க அடிப் பின்னிடுற மாதிரி உங்க வீட்டாளுங்க‌ என்னை அடிச்சிக் கொன்னுடலாம் மாட்டங்கல” எனப் பயத்துடன் கேட்டான் வருண்.

 

“அடேய் என்னைப் பார்த்தா ரௌடி வீட்டுப் பொண்ணு மாதிரியாடா தெரியுது உனக்கு?” என்று கோபமாய் கேட்ட நிவேதா,

 

“எங்க அப்பா அம்மாவே லவ் மேரேஜ் தான்டா. அவங்க எப்பவுமே லவ் மேரேஜூக்கு சப்போர்ட் தான் பண்ணுவாங்க” திடமாய் உரைத்தாள்.

 

“அப்புறம் எதுக்கு மயிலு மேடம் பேசனும்னு வரச் சொல்லிருக்காங்க” எனக் கேட்டான் வருண்.

 

“எனக்கும் இந்த மயிலு ஆன்டி தான் அப்பா அம்மாகிட்ட ஏதாவது சொல்லி நம்ம காதலைப் பிரிச்சி விட்டிருவாங்களோனு பயமா இருக்குடா.

 

நேத்தே அவங்க வீட்டுக்கு நாங்க போனப்ப இதெல்லாம் காதலிக்கிற வயசு இல்லனு எனக்கு மறைமுகமா அட்வைஸ் செஞ்சாங்க. எனக்கு அப்பவே செம்ம கோவம். டீனேஜ்ல லவ் பண்ணாம வேற எப்ப பண்ணுவாங்களாம்னு நினைச்சிக்கிட்டேன்.

 

அந்த மயிலு ஆன்டிக்கும் லவ் மேரேஜ் தான்டா வருண். அதுவும் ஸ்கூல் லவ் தான். ஆனா நம்ம லவ்வைப் பார்த்து மட்டும் ஏன் காண்டாகுறாங்கனு தான் எனக்குப் புரியலை. அவங்க அட்வைஸ் கேட்டுத் தான் அம்மா ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்று பொரிந்து தள்ளினாள் நிவேதா.

 

“மயிலு ஆன்டி என்ன சொன்னாலும் நம்ம காதல்ல ஸ்ட்ராங்கா இருடா வருண்” என்றாள் நிவேதா.

 

“யாரு என்ன சொன்னாலும் நான் உன்னை விட்டுட மாட்டேன் நிவி. உங்க வீட்டாளுங்க என்னை அடிச்சிடுவாங்களோனு பயம் மட்டும் தான் எனக்கு” என்றான் வருண்.

 

“ஏன் நம்ம காதலுக்காக அடி வாங்க மாட்டியாடா? காலைல அம்மா அடிச்சாலும் பரவாயில்லனு நினைச்சு தான் நம்ம காதலைப் பத்தி அவங்ககிட்ட சொன்னேன். அடி வாங்குறதைப் பத்தி நானே கவலைப்படாத போது நீ ஏன்டா கவலைப்படுற” எனக் கேட்டாள் நிவேதா.

 

“நாலு அடிதடி சண்டை நடந்தா தான் காதல் கதையே கிக்கா இருக்கும் நிவி. அதனால எவ்ளோனாலும் அடி வாங்கிப்பேன் நிவி” என்று வாய் கூறினாலும் உள்ளுக்குள் உதறியது வருணுக்கு.

 

வருண் கூறியதில் பூரித்துப் போனவளாய், “லவ் யூ டா வருண்” என்றாள் நிவேதா.

 

“மீ டூ நிவி” என்றான் அவன்.

 

மேலும் சில நிமிடங்கள் பேசியவர்களாய் இருவரும் உணவை உண்டு விட்டு வகுப்பறைக்குச் சென்றனர்.

 

மாலை நான்கு மணியளவில் நிவேதாவைப் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வந்தான் அர்ஜூன்.

 

அர்ச்சனாவின் மகிழுந்தைப் பார்த்து விட்டு, “வா வருண். அம்மா வந்துட்டாங்க” என்று வருணை நிவேதா அழைக்க,

 

“நீ முன்னாடி காருல போ நிவி. நான் பின்னாடி சைக்கிள்ல வரேன்” என்றான் வருண்.

 

மகிழுந்து அவளின் அருகில் வந்து நிற்கவும், மகிழுந்து கதவைத் திறந்த நிவேதா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

 

தாயை எதிர்பார்த்துக் காத்திருந்த நிவேதாவுக்கு தந்தையைக் கண்டதும் உள்ளுக்குள் உதறியது.

 

“அப்பா” என்றவாறு மகிழுந்தில் ஏறாது தயங்கி நின்றவளைப் பார்த்து ஏறு என்பது போல் கோபத்துடன் கண்களை அசைத்தான் அர்ஜூன்.

 

எள்ளைப் போட்டாலும் வெடித்து விடுமளவு கடுகடுவென்ற அர்ஜூனின் முகத்தைப் பார்த்ததுமே தனது காதல் விடயம் தந்தைக்குத் தெரிந்து விட்டது என்று புரிந்தது நிவேதாவுக்கு.

 

ஏதும் கூறாது அமைதியாக மகிழுந்தினுள் ஏறி அமர்ந்தாள் நிவேதா.

 

வருண் பள்ளி வாசலிலேயே நின்று மகிழுந்தைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் பதட்டமான பார்வையிலேயே அவன் தான் மகளின் காதலன் எனக் கண்டு கொண்ட அர்ஜூன், மகிழுந்தின் கதவைத் திறந்து இறங்கி நின்றவனாய் வருணைப் பார்த்து கை அசைத்து அவனைத் தன்னருகே அழைத்தான்.

 

படபடப்பும் நடுக்கமுமாய் அர்ஜூன் அருகே வந்த வருணை நோக்கி அர்ஜூன் கையைத் தூக்கவும் சட்டென விலகியவனாய், “என்ன அடிக்கப் போறீங்களா அங்கிள்?” வார்த்தைகள் தந்தியடிக்கக் கேட்டான்.

 

வருணின் தோளில் கைப் போட வந்த அர்ஜூனுக்கு அவனின் இந்தக் கேள்வியில் இதழ்கள் சிரிப்பில் துடித்தன.

 

“யூ ப்ளடி! என் பொண்ணு கேட்குதா உனக்கு?” என்று போலியாய் வேண்டுமென்றே கண்களில் ஜூவாலையுடன் கோபமாய் கூறியவனாய் அர்ஜூன் வருண் அருகே செல்ல, விருட்டென அங்கிருந்து ஓடியே விட்டிருந்தான் வருண்.

 

இக்காட்சியை மகிழுந்தினுள் அமர்ந்தவாறு பார்த்திருந்த நிவேதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

 

வருணின் செயலில் வாய்விட்டுச் சிரித்தவனாய் மகிழுந்தின் ஓட்டுனர் இருக்கையில் அர்ஜூன் அமரவும், “ஐ ஹேட் யூப்பா” கண்களில் துளிர்த்த நீருடன் கோபமாய் உரைத்தாள் நிவேதா.

 

அவன் கோபத்துடன் கூர்மையாய் அவளைப் பார்க்க, “அவனை அடிக்கிற மாதிரி பயமுறுத்தித் துரத்திட்டீங்கல” என்று மேலும் கோபமாய் அவள் வினவ,

 

அவளை வெறுப்பேற்றவெனவே விசில் அடித்தவாறு மகிழுந்தை ஓட்டிய அர்ஜூன், “நான் ஒன்னும் அவனைத் துரத்தலை நிவிமா. அவன் உன் மேல வச்சிருக்க லவ்வு அவ்ளோ தான்” என்று உரைத்தான்.

 

இளமயில் எதை செய்யக் கூடாது என்று சொன்னாளோ அதை தான் செய்து கொண்டிருந்தான் அர்ஜூன்.

 

அவனின் சொல் அவளைத் தூண்டிவிட, ரோஷத்துடன் கண்களைத் துடைத்தவளாய், “எங்க லவ்வு நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் கிடையாதுப்பா! எனக்காக அவன் வருவான். உங்க முன்னாடி வந்து நிப்பான்” வீராவேசத்துடன் உரைத்தாள்.

 

அர்ஜூனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

 

இவள் வயதில் தான் காதல் என்ற வார்த்தையை நினைத்துக் கூட பாராது படிப்பில் கவனமாய் இருந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவனாய், ‘இந்தக் காலத்து பிள்ளைங்க எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க’ என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான்.

 

மகிழுந்தை அவன் அம்பிகா மருத்துவமனையின் தரிப்பிடத்தில் நிறுத்தவும், இங்கே எதுக்கு வந்திருக்கிறோம் என்கின்ற கேள்வியுடன் அர்ஜூனைப் பார்த்தாள் நிவேதா.

 

“அவனைத் துரத்திட்டு எதுக்கு இப்ப இங்கே என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” எனக் கோபமாய் கேட்டாள் நிவேதா.

 

அவளிடம் ஏதும் கூறாது அவன் முன்னே செல்ல, அவனைப் பின்தொடர்ந்து சென்றவள், ஓரறையில் கையினில் மருந்து ஏற கண் மூடி படுத்திருந்த தாயைக் கண்டு பதறி ஓடியவளாய், “அம்மா.. அம்மாவுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்‌.

 

மகளின் குரலில் கண் விழித்த அர்ச்சனா, “நிவி மா! வந்துட்டியா! அம்மாக்கு ஒன்னுமில்லடா! லேசான மயக்கம் தான்” என்றவள்,

 

“அஜூப்பா சிவா எங்கே?” எனக் கேட்டாள்.

 

“அவனை வீட்டுல டிராப் செஞ்சிட்டேன் அச்சு மா” என்றான் அர்ஜூன்.

 

“வருண் எங்கே? வருண் வரலையா?” என்று அர்ச்சனா கேட்கவும்,

 

‘நிவியே மறந்தாலும் இவ ஞாபகப்படுத்திடுவா போலயே’ என்று பற்களைக் கடித்தவனாய் அர்ச்சனாவை முறைத்தான் அர்ஜூன்.

 

“அப்பா தான் வருணைத் துரத்திட்டாங்கமா” அழுகைக் குரலில் நிவேதா புகார் கூறியிருந்த நேரம், வாசலில் நின்றிருந்தான் வருண்.

 

“என்ன சொல்ற நிவிமா! வருண் தான் வாசல்ல நிக்கிறானே” என்றாள் அர்ச்சனா.

 

சட்டென அர்ஜூனும் நிவேதாவும் வாசலைப் பார்த்தனர்.

 

பதட்டத்துடன் வாசலில் நின்றிருந்தான் வருண்.

 

வருணை நோக்கி ஓடிய நிவேதா அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தவளாய், “பார்த்தீங்களாப்பா! நான் சொன்ன மாதிரியே வருண் வந்துட்டான். எங்க லவ் ஸ்ட்ராங்ப்பா! நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது” என்று ரோஷமாய் உரைத்தாள்.

 

அர்ச்சனாவுக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போல் இருந்தது.

 

அதிர்வும் குழப்பமுமாய் அர்ச்சனா அவர்களைப் பார்த்திருக்க,

 

இருவரையும் அடித்து நொறுக்கி விடும் கோபத்துடன் பார்த்தான் அர்ஜூன்.

 

அச்சமயம் அந்த அறையின் உள்ளே வந்த இளங்குமரன், “ஹாய் யங் மேன். நீங்க தான் அந்த யங் லவ்வரா. நைஸ் டூ மீட் யூ மேன்” என்றவாறு வருணின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

 

மருண்ட விழிப் பார்வையுடன் சங்கோஜத்துடன் கையைக் குலுக்கிய வருணின் உடல்மொழியிலும் பார்வையிலும் அவன் வெகுவாய் பயந்திருப்பது புரிய, அவனின் தோளில் கைப்போட்டு தோழமையுடன், “நீங்க ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடன்ட்னு கேள்விப்பட்டேன்! வெரி குட் வருண்” எனப் பேசியவனாய் அவனை தனது அறைக்கு அழைத்துச் சென்றான் இளங்குமரன்.

 

“அங்கிள் அவனை எங்கே கூட்டிட்டு போறீங்க?” எனக் கேட்டவளாய் இளங்குமரனின் பின்னேயே சென்றவாறு அவனது அறைக்குள் சென்று நின்றாள் நிவேதா.

 

அர்ச்சனாவின் அறைக்கு வெளியே இளங்குமரன் சென்ற திசையைப் பார்த்தவாறு அர்ஜூன் நிற்க, அங்கே வந்த இளமயில், “என்ன அர்ஜூன் வெளியே நிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.

 

“டாக்டர் வருணை அவர் ரூமுக்கு கூட்டிட்டுப் போய்ட்டாரு. கூடவே நிவேதாவும் போய்ட்டா! டாக்டருக்கு நாம பிளான் செஞ்சதுலாம் தெரியுமா? அவர் என்ன பேசப் போறாரு அவன்கிட்ட?” எனக் கேட்டான்.

 

“இளா மச்சான் இப்ப தான் கான்ஃபெரன்ஸ் முடிஞ்சி வந்தாங்க. அவங்களுக்கு நாம பிளான் செஞ்சது எதுவும் தெரியாது. ஆனாலும் ஹீ வில் ஹேண்டில் இட். நீங்க அதைப் பத்தி கவலைப்படாதீங்க அர்ஜூன். வாங்க நாம அர்ச்சனாகிட்ட பேசலாம்” என்றவளாய் அர்ச்சனாவின் அறைக்குள் நுழைந்தாள் இளமயில்.

 

இளங்குமரன் அறையில் தன்னுடைய மருத்துவர் இருக்கையில் அமர்ந்தவனாய், தனக்கு எதிரே இருந்த இரு இருக்கையிலும் அவ்விருவரையும் அமரப் பணித்தான்.

 

வருண் யாரிவன் என்பது போன்று குழப்பத்துடன் பார்க்க, “நான் யாருனு யோசிக்கிறீங்களா வருண்? நான் இளமயிலோட ஹஸ்பெண்ட், டாக்டர் இளங்குமரன்” என்று தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டான் இளங்குமரன்.

 

‘அய்யோ இந்த டாக்டரும் இளமயில் மேடம் மாதிரி மனசுல நினைக்கிறதெல்லாம் கண்டுபிடிச்சிடுறாரே’ என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான் வருண்.

 

“வருணோட சொந்த ஊர் எது? அப்பா அம்மாலாம் என்ன செய்றாங்க?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“சென்னை தான் டாக்டர். அப்பா இல்லை. அம்மா ஐடில வேலை செய்றாங்க” என்றான் வருண்.

 

“ஓ சாரி அப்பா தவறிட்டாங்களா?” என்று இளங்குமரன் கேட்க,

 

“இல்ல டிவோர்ஸ் ஆகிடுச்சு! அப்பா வேற கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அம்மாவும் நானும் மட்டும் தான். கூட அம்மாவோட அம்மா இருக்காங்க” என்றான் வருண்.

 

“ஓ அப்ப வீட்டைக் கட்டிக் காக்குற ஆண்மகன் நீங்க தானா! பொறுப்பான பையன் தான்” என்றான் இளங்குமரன்.

 

“ஆமா டாக்டர்! நல்லா படிச்சி சம்பாதிச்சு அம்மாவை நல்லா வச்சி காப்பாத்தனுங்கிறது தான் லட்சியம் டாக்டர்” என்றான் வருண்.

 

“அப்படி லட்சியம் உள்ளவங்க யாரும் காதலிக்க மாட்டாங்க வருண். காதல் அவங்க லட்சியத்துக்குத் தடையாக இருந்துடும்னு பயப்படுவாங்க” சற்றுக் கண்டிப்பான குரலிலேயே உரைத்தான் இளங்குமரன்.

 

“இல்ல டாக்டர்! எங்க காதல் அப்படிக் கிடையாது. நாங்க ரெண்டு பேரும் எங்க காதலோட சேர்த்து எங்க லட்சியத்தையும் அடைவோம்” உடனே சிலிர்த்துக் கொண்டு பதில் உரைத்திருந்தாள் நிவேதா.

 

“நைஸ் டூ ஹியர் நிவேதா! சரி உன்னோட லட்சியம் என்ன? பெரியாளாகி என்ன ஆகனும்னு உனக்கு ஆசை?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

அத்தியாயம் 32

 

இளங்குமரன் நிவேதாவைப் பார்த்து, “உன்னோட லட்சியம் என்ன நிவேதா?” என்று கேட்டதும்,

 

“எனக்கு லா படிச்சிட்டு ஜட்ஜ் ஆகனும்னு தான் எய்ம் அங்கிள்” திடமான குரலில் உரைத்தாள் நிவேதா.

 

அவளின் பதிலில் வியப்புடன் புருவத்தை உயர்த்திய இளங்குமரன், “ஓ நைஸ்” என்றவனாய்,

 

“ஆமா உங்கள்ல யாரு மொதல்ல பிரபோஸ் செஞ்சது?” எனக் கேட்டான்.

 

“நான் தான் அங்கிள்” என்றாள் நிவேதா.

 

சிரிப்புடன் நிவேதாவைப் பார்த்த இளங்குமரன்,

 

“உனக்கு வருணை ஏன் பிடிச்சிது நிவேதா? எதுக்குப் பிடிச்சிது? ஏன் காதலிக்கத் தோணுச்சு?” எனக் கேட்டான்.

 

“அவன் நல்லா படிப்பான் அங்கிள். எனக்கு நல்லா சொல்லிக் கொடுப்பான். அவனுக்கும் எனக்கும் தான் யாரு ஃபர்ஸ்ட் வருவாங்கன்ற போட்டியே இருக்கும். ஆனாலும் எனக்குச் சொல்லிக் கொடுப்பான். அவன் சொல்லிக் கொடுத்து நான் ஃபர்ஸ்ட் வந்தாலும் பொறாமையோ கோவமோ பட்டதே இல்லை.

 

ஒரு தடவை நாங்க மூனு நாள் டிரிப்பா கேரளாக்குப் போனோம். என்னை கேரிங்கா பார்த்துக்கிட்டான். அவன் இதுவரைக்கும் என்கிட்ட சண்டைப் போட்டதே இல்ல தெரியுமா! நான் தான் அவன்கிட்ட நிறைய சண்டைப் போட்டிருக்கேன். நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பான். மொத்தத்துல என்னோட டெட்டி பியர் மாதிரி அவன்” என்று அவள் முடிக்கும் போது,

 

இதழ் துடிக்க அடக்கமாட்டாமல் சத்தமாய் சிரித்திருந்தான் இளங்குமரன்.

 

‘அவனோட அன்பையும் அரவணைப்பையும் இவளோட பருவ வயசு காதல்னு சொல்லி அவனை ஏத்துக்கவும் வச்சி காதலிக்கவும் வச்சிருக்கு’ என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான் இளங்குமரன்.

 

“ஏன் அங்கிள் சிரிக்கிறீங்க?” என்று சிணுங்கலாய் இவள் கேட்க,

 

“இல்ல டெடி பியர்னு சொன்னியா? அதான் சிரிப்பு வந்துடுச்சு! இவன் என்ன டெடி பியர் மாதிரி புசு புசுனா இருக்கான்” என்று கேலிச் செய்தான் இளங்குமரன்.

 

“ஆனாலும் எனக்கு இவன் டெடி பியர் தான்” நாணத்துடன் உரைத்தாள்.

 

வருண் இவர்களின் பேச்சில் நாணத்துடன் நெளிந்தான். சங்கோஜமாய் புன்னகைத்தான்.

 

இருவருமே இளங்குமரனிடம் இலகுவாய் பேசும் மனநிலைக்கு வந்திருந்தனர். அவனிடம் தங்களின் மன உணர்வுகளைப் பகிர்வதற்கு எந்தவிதமான தயக்கமோ பயமோ இல்லை இருவருக்கும்.

 

“நீங்க சொல்லுங்க யங் மேன்! நீங்க ஏன் நிவேதா பிரபோசலை அக்சப்ட் செஞ்சீங்க?” எனக் கேட்டான்.

 

“என் மூஞ்சை பாருங்க டாக்டர். என்னைலாம் எந்தப் பொண்ணாவது லவ் பண்ணுமா? நிவேதா மாதிரி அழகான பொண்ணு பிரபோஸ் செய்யும் போது வேண்டாம்னு எப்டி நான் சொல்லுவேன்” என்றான் வருண்.

 

படிய வாரிய தலைமுடியும், கண்களை விட பெரிய கண்ணாடியும், பருக்கள் நிறைத்த ஒட்டிய கன்னமும், வளரத்தியான தேகமுமாய் வளரிளம் பருவத்துக்குரிய தோற்றத்துடன் இருந்தான் வருண்.

 

இளங்குமரனின் தோழமையான பேச்சில் வருணுக்குச் சற்று தைரியம் வந்திருந்தது.

 

மெல்லப் புன்னகைத்தான் இளங்குமரன்.

 

இதுவும் பருவ வயதுக்குரிய உணர்வுகள் தான் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்.

 

பெருமூச்சு விட்டவனாய், “ஆல்ரைட்” என்றவன்,

 

“இப்ப நான் சொல்றதை கேட்டீங்கனா, உங்க அப்பா அம்மா உங்க லவ்வை பிரிக்காம உங்களுக்கு மேரேஜ் செஞ்சி வைப்பாங்க” என்று இளங்குமரன் தொடங்கவும்,

 

“என்னது கல்யாணமா?” என்று அதிர்ந்த வருண்,

 

“டாக்டர் நாங்க காலேஜ்லாம் முடிச்சி வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு தான் மேரேஜ் பத்தியே யோசிக்கனும்னு டிசைட் செஞ்சி வச்சிருக்கோம். அது வரைக்கும் நாங்க லவ்வர்ஸ்ஸா தான் இருப்போம்” என்றான்.

 

“ஆமா, படிக்கிற வயசுல கல்யாணம் செய்ய கூடாது அங்கிள்” என்றாள் நிவேதா.

 

“ஓஹோ அப்ப லவ் மட்டும் பண்ணலாமா?” என்று இளங்குமரன் கேட்க,

 

“நல்லவனை லவ் பண்றதுல தப்பில்லையே அங்கிள். பேட் ஹேபிட் இருக்க பையனைத் தானே லவ் பண்ணக் கூடாது” என்றாள் நிவேதா.

 

‘தெளிவு தான்’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்ட இளங்குமரன்,

 

“லவ் பண்றதுலாம் பேட் ஹேபிட்ல வராதா நிவேதா?” எனக் கேட்டான்.

 

“லவ் பண்றது பேட் ஹேபிட் இல்லை அங்கிள். எத்தனை லவ் மூவிஸ் பார்க்கிறோம். எங்க அப்பா அம்மாவே லவ் மேரேஜ் தான் செஞ்சிக்கிட்டாங்க அங்கிள்” என்றாள் நிவேதா.

 

“என்னை மாதிரி நைன்ட்டீஸ் கிட்ஸ்ஸோட அப்பா அம்மாலாம் லவ் பண்றதே பேட் ஹேபிட்டுனு சொல்லி எங்களை ஏமாத்திட்டாங்க நிவேதா. இந்த ஜென் சி அப்பா அம்மாலாம் தான் இதை சப்போர்ட் செய்றாங்க” என்று போலியாய் கவலைப்பட்டான் இளங்குமரன்.

 

அவளுக்கு ஏதுவாகப் பேசுவது போல் பேசினான்.

 

“எங்கே சப்போர்ட் பண்றாங்க அங்கிள். எங்கப்பா முறைச்சிட்டு இருக்காரு. எங்கம்மா இதை பெரிசா எடுத்துக்க மாட்டாங்கனு நினைச்சேன் ஆனா இந்த மயிலு ஆன்டி ஏதோ சொல்லிக் கொடுத்து எங்கம்மாவை ஏத்தி விட்டிருக்காங்க. எல்லாரும் சேர்ந்து எங்களைப் பிரிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு அங்கிள்” என்று கவலையுடன் உரைத்தாள் நிவேதா.

 

“நான் சொல்றா மாதிரி நீங்க ரெண்டு பேரும் எனக்குப் பிராமிஸ் செஞ்சி கொடுத்தீங்கனா, உங்களை யாரும் பிரிக்க விடாம நான் பார்த்துக்குவேன்.

நீங்க படிச்சி முடிச்சி வேலைக்குலாம் போன பிறகு உங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைப்பேன். அப்ப யாரு வந்து உங்க கல்யாணத்தைத் தடுத்தாலும் நான் முன்னாடி நின்னு நடத்தி வைப்பேன். நானே உங்க பேரன்ட்ஸ்கிட்ட உங்களோட காதலை ஏத்துக்கச் சொல்லிப் பேசுவேன். ஆனா அதுக்கு நீங்க எனக்கு பிராமிஸ் செஞ்சி தரனும்” என்றான் இளங்குமரன்.

 

“என்ன பிராமிஸ் அங்கிள்?” ஆர்வத்துடன் கேட்டாள் நிவேதா.

 

“நாங்க ரெண்டு பேரும் இருபத்தஞ்சு வயசுக்குப் பிறகு தான் கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம். அதுக்கு முன்னாடி எங்க காதலைப் பத்தி வெளில யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டோம். எங்க ஸ்கூலைத் தவிர வெளில எங்கேயும் மீட் பண்ண மாட்டோம்.

 

சப்போஸ் இருபத்தஞ்சு வயசுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேருக்கும் இடைல ஏதாவது மனஸ்தாபம் வந்து பிரேக் அப் ஆகிடுச்சுனா, அடுத்து எங்கப்பா அம்மா யாரைப் பார்த்து கட்டிக்கச் சொன்னாலும் கல்யாணம் செஞ்சிப்போம்னு சொல்லி எனக்கு நீங்க பிராமிஸ் பண்ணனும்” என்றான் இளங்குமரன்.

 

“என்ன அங்கிள் இப்படிச் சொல்றீங்க?” என்றாள் நிவேதா.

 

“நான் உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன்” என்றான் இளங்குமரன்.

 

இருவருமே பலத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தனர்.

 

சில நிமிடங்கள் அவர்களைச் சிந்திக்க விட்டவன், “சொல்லுங்க பிராமிஸ் செஞ்சி தர்றீங்களா?” எனக் கேட்டான்.

 

“என்னோட அம்மாக்கு எங்க லவ் பத்திலாம் தெரியாது. வேலைக்குலாம் போன பிறகுத் தான் சொல்லனும்னு நினைச்சிருக்கேன். அந்த நேரத்துல அம்மாவை ஒத்துக்க வைக்க உங்களோட ஹெல்ப் எனக்குத் தேவைப்படும் அங்கிள். அதனால நான் பிராமிஸ் பண்றேன் அங்கிள்” என்றான் வருண்.

 

“குட்” என்ற இளங்குமரன், “நீ என்னமா சொல்ற?” என நிவேதாவைக் கேட்டான்.

 

“ஸ்கூல் முடிச்சி காலேஜ் வேற வேற இடத்துக்குப் போய்ட்டா நாங்க வெளில மீட் செஞ்சி தானே ஆகனும் அங்கிள். நாங்க வெளில மீட் பண்ணவே கூடாதுனு சொல்றீங்களே” என்று தயக்கத்துடன் அவள் கேட்கவும்,

 

“ஆஹா ஜட்ஜம்மா பாயிண்ட் பிடிச்சி கேட்குறீங்களே” என்று சிரித்தான் இளங்குமரன்.

 

நிவேதாவும் புன்னகைத்தாள்.

 

“அதுக்கப்புறம் போன்ல பேசிக்கோங்க. ஒரே ஸ்கூல்ல இருக்கிற வரைக்கும் தான் நீங்க பார்த்துக்க முடியும். அதுக்குப் பிறகு போட்டோஸ் அனுப்பிக்கோங்க. இப்ப தான் நிறைய டெக்னாலஜி டெவலப்மென்ட் வந்துடுச்சே, வீடியோ கால்ல கூட பேசிக்கலாமே! நேர்ல பார்த்து தான் பேசிக்கனும்னு இல்லயே” என்றான் இளங்குமரன்.

 

ஒருவாறு சமாதானமானவளாய், “சரி அங்கிள்! பிராமிஸ் செய்றேன்” என்றாள்.

 

“என் கை மேல உங்க கைகளை வச்சி நான் சொல்றதை அப்படியே சொல்லுங்க” என்றவனாய் கைப்பேசியில் காணொளியை இயக்கியவன் கையை நீட்டினான்.

 

“என்ன அங்கிள் ரெக்கார்ட் பண்ண போறீங்களா?” நிவேதா கேட்க,

 

“ஆமா ஜட்ஜம்மா! எவிடன்ஸ் ரொம்ப முக்கியம். கோர்ட்ல எவிடன்ஸ் தான் பேசும்” சிரிப்புடன் உரைத்தான்.

 

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்களாய் தயங்க, “என் பேச்சை கேட்டீங்கனா நீங்க கண்டிப்பா உங்க காதல்லயும் ஜெயிச்சி வாழ்க்கைலயும் ஜெயிக்க முடியும். சோ கமான் பிராமிஸ் பண்ணுங்க” என்று ஊக்கினான்.

 

இளங்குமரனின் தோழமையான பேச்சு இருவருக்கும் அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க,

 

தயக்கத்துடன் வருணும் நிவேதாவும் இளங்குமரனின் உள்ளங்கையின் மீது தங்களின் கைகளை வைத்து அவன் கூறியனவற்றைக் கூறி வாக்குறுதி அளித்தனர்.

 

அவர்களின் வாக்குறுதி வாக்குமூலக் காணொளியை கைப்பேசியில் சேமித்தவனாய் அவர்களின் படிப்பைப் பற்றிப் பேசினான்.

 

அவன் அங்கே அவர்களுடன் பேசியிருந்த அதே நேரம், இங்கே இளமயில் அர்ச்சனாவிடம் அவளின் உடல்நிலைக் குறித்துப் பேசினாள்.

 

“உங்களுக்கு மெனோபாஸ் பத்தி தெரியுமா அர்ச்சனா? கேள்விப்பட்டிருக்கீங்களா?” இளமயில் கேட்கவும்,

 

“தெரியும் மயிலு! எனக்கு அதனால தான் இப்படி மயக்கம் வருதா?” எனக் கேட்டாள் அர்ச்சனா.

 

“அதனால இல்ல ஆனா அதுவும் ஒரு காரணம். உங்களுக்கு எடுத்த டெஸ்ட் எல்லாமே நார்மலா தான் இருக்கு. உங்க ஹார்மோன்ஸ்ல எந்தப் பிரச்சனையும் இல்ல. உங்களுக்கு பிபி சுகர்னு எதுவுமே இல்லை. உங்களுக்கு பீரியட்ஸ்ஸூம் ரெகுலரா தான் இருக்குனு அர்ஜூன் சொன்னாரு! பீரியட்ஸ் பிராப்ளம் எதுவும் உங்களுக்கு இருக்கா அர்ச்சனா?” என இளமயில் கேட்கவும்,

 

இல்லை என்றாள் அர்ச்சனா.

 

“நீங்க பெரிமெனோபாஸ் பேஸ்ல இருக்கீங்க அர்ச்சனா” என்ற இளமயில்

அர்ஜூனிடம் விளக்கியவற்றை அர்ச்சனாவிடம் விளக்கினாள்.

 

“அதனால தான் நீங்க சட்டு சட்டுனு எமோஷனல் ஆகிடுறீங்க. பயமும் பதட்டமும் அதனால தான் வருது.

உங்களோட இமோஷனல் சேஞ்சஸ்ஸை நீங்க தான் ஹேண்டில் பண்ணனும் அர்ச்சனா. ஏன் இந்த நேரத்துல நமக்கு இப்படி ஃபீல் ஆகுதுனு யோசிச்சு உங்க மைண்ட்டை வேற விஷயத்துல டைவர்ட் செஞ்சி கொஞ்சம் கொஞ்சமாக உங்க கன்ட்ரோலுக்கு கொண்டு வரனும்.

 

நான் சொல்ற டயட்டீஷியனை கன்சல்ட் பண்ணுங்க. அவங்க சொல்ற மாதிரி ஃபுட் எடுத்துக்கிட்டாலே உங்க மனநிலை உடல்நிலை எல்லாம் சீராகிடும்” என்றாள் இளமயில்

 

“எனக்கு வெயிட் ஏறினதுக்கும் இது தான் காரணமா?” எனக் கேட்டாள் அர்ச்சனா.

 

“ஆமா அர்ச்சனா. டயட்டீஷியன் சொல்ற மாதிரி நீங்க சாப்பாடு எடுத்துக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா நார்மல் வெயிட்டுக்கு வந்துடுவீங்க. டேக் பிரேக் ஃப்ரம் யுவர் ரொட்டீன் ஃலைப். உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துற விஷயங்களை கொஞ்ச நாள் செய்யாம இருங்க. அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்காவது செய்யாம இருங்க. வெளியூருக்கு எங்கேயாவது டிரிப் போய்ட்டு வாங்க. புதுசு புதுசா ஏதாவது கத்துக்கோங்க. பெங்களூருக்குப் போய் உங்க அப்பா அம்மா கூட இருந்துட்டு வாங்க”

 

“நிவேதாவையும் பெங்களூருக்குக் கூட்டிட்டு போய்டுங்க அர்ச்சனா. அவளோட ஸ்கூலிங் அங்கேயே கன்டினியூ ஆகட்டும். காலேஜ் வரைக்கும் அவளோட லவ்வை லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பா மாத்துங்க” என்று இளமயில் கூறியதைக் கேட்டு,

 

“என்னது நானும் நிவியும் மட்டுமா? அஜூவையும் சிவாவையும் விட்டுட்டு நான் மட்டும் எப்படி அவ்ளோ வருஷம் தனியா இருப்பேன்? என்னாலலாம் இவங்களைப் பிரிஞ்சி இருக்க முடியாது” எனப் பதட்டமும் கவலையுமாய் உரைத்தாள் அர்ச்சனா.

 

“நான் அஜூவைக் கூட பிரிஞ்சி இருந்துடுவேன் ஆனா சிவா குட்டிக்கு நான் இல்லாம ஒரு வேலையும் ஓடாது. அவனுக்கு எல்லாத்துக்குமே நான் வேணும்” என்று அர்ச்சனா புலம்பிக் கொண்டே போக,

 

‘என்னது நான் இல்லாம கூட இருந்துடுவாளாம், பையன் இல்லாம இருக்க மாட்டாளாமா?’ என்று எண்ணியவனாய் பொசசிவ் கோபத்துடன் அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜூன்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்