
அத்தியாயம் 28
“உன்னோட அப்பா அம்மா உன்னை பாதுகாப்பா பார்த்துக்கிட்ட மாதிரியே உன்னை பார்த்துக்கிற பையன்கிட்ட கல்யாணம்ங்கிற பிராமிஸ் வாங்கிட்டு அந்த உரிமையை நீ கொடுக்கும் போது உன் உடம்பு உனக்கு நன்றி சொல்லும்” என்றாள் இளமயில்.
“ஆனா கடைசி வரைக்கும் ஒன்னா சேர்ந்து வாழ்வோம்ன்ற நம்பிக்கைல தானே லவ் பண்றோம்” என்று கேட்டாள் நிவேதா.
அவளின் இந்தக் கேள்வியிலேயே அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று புரிந்து கொண்ட இளமயில் அவள் கேள்விக்கான பதிலை உரைத்தாள்.
“அஞ்சு வயசா இருக்கும் போது இருந்த உன்னுடைய திங்கிங்க்கும், பத்து வயசானதும் இருந்த உன்னுடைய திங்கிங்க்கும் வித்தியாசம் இருந்துச்சு தானே நிவேதா” எனக் கேட்டாள் இளமயில்.
“ஆமா” என்றாள் நிவேதா.
“இன்னும் நீ காலேஜ் படிச்சி முடிச்சி வேலைக்குப் போய் உனக்கான முடிவை நீயே எடுக்கும் போது உன்னுடைய திங்கிங் இன்னும் மேம்பட்டு இருக்கும். பணத்துக்காக அப்பா அம்மா யாரையும் சார்ந்து இல்லாம தனி மனுஷியா நீ உன் வேலையை செய்யும் போது இன்னும் உன்னுடைய அனுபவ அறிவு மேம்படும்.
அதே மாதிரி தான் நீ லவ் செய்ற பையனுக்கும் அறிவு வளர்ச்சி இருக்கும்.
இந்த இடைப்பட்ட காலத்துல ரெண்டு பேரோட மன உடல் வளர்ச்சிக்கேற்ப எண்ணங்கள் சிந்தனைகள் பிடித்தங்கள் மாறுபடும். அந்த நேரம் உங்களுக்குள்ள நிறைய சண்டை வரும். புரிதலோட அதை அணுகுற முதிர்ச்சி இல்லாம அந்தச் சண்டைப் பிரிவா மாற நிறைய வாய்ப்பிருக்கு.
ஏன் இப்ப நீ காதலிக்கிற பையனே, நாளைக்கு வேற ஒரு பொண்ணை காதலிக்கிற வாய்ப்பு கூட இருக்கு.
இப்ப லவ்வர்ஸ்ஸா இருக்கிற நீங்க பின்னாடி ஏதோ ஒரு சூழ்நிலைல பிரிஞ்சிட்டீங்கனா இல்ல கல்யாணம் செய்யாம போய்ட்டீங்கனா, ஆனா செக்ஸ் மட்டும் வச்சிருந்தீங்கனா அவன் கூட ரொம்பவுமே எமோஷனலா கனெக்ட் ஆகியிருந்த உன் மனசு ரொம்ப நொந்து போகும். காதல் மட்டும் வச்சிட்டு பிரிஞ்சாலே அவ்ளோ வலி இதுல கணவன் மனைவி மாதிரி செக்ஸ் வச்சிக்கிட்டு உடலாலும் மனசாலும் எமோஷனல் பாண்டிங்லாம் டெவலப் பண்ணிட்டு பிரிஞ்சா அது எவ்ளோ கஷ்டமா இருக்கும்.
மேரேஜ் ஆகி டிவோர்ஸ் செய்றவங்களுக்கும் இந்த மனக்கஷ்டங்கள் உடல் வேதனைகள் எல்லாம் இருக்கும். உன் கூட வாழுறது இதை விட கஷ்டமா இருக்கு, அதுக்கு பிரியுறனால வர்ற கஷ்டத்தைக் கூட நான் அனுபவிச்சிக்கிறேன்னு நினைச்சு தான் நிறைய பேர் டிவோர்ஸ் வாங்குறாங்க.
அதனால நான் எப்பவுமே மேரேஜ் கவுன்சிலிங்க்ல சொல்வேன்.
அப்பா சொன்னாங்க, அம்மா சொன்னாங்கனு இல்லாம உங்க மனசுக்கு இந்த சம்பந்தம் சரியா வரும், இந்த பையனோ இல்ல பொண்ணோ ஒத்து வரும்னு தோணுச்சுனா அதுக்குப் பிறகு நல்லா விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டு மேரேஜ் செய்யுங்கனு சொல்லுவேன்.
மேரேஜ் செய்றவங்களுக்கே பிரியுறது கொடுமைனா அதே அளவு பாண்டிங்கோட இருக்க லவ்வரை பிரியுறதும் கஷ்டம் தானே.
அதனால ஸ்கூல் காலேஜ்லாம் முடிச்சிட்டு அதுக்குப் பிறகு உங்க பார்ட்னரைத் தேடிப் பிடிச்சி கல்யாணம் செய்ங்கனு தான் நான் சொல்வேன். எந்த அனுபவமும் இல்லாத இந்த வயசுல காதலும் கல்யாணமும் வேண்டாம்னு தான் நான் சொல்வேன். இப்ப நீ காதலிக்கிற பையன் காலேஜ் படிச்சு முடிக்கும் போதும் இப்படியே இருப்பான்னு சொல்ல முடியாது. மனுஷங்க மாறிக்கிட்டே இருப்பாங்க நிவேதா. சூழ்நிலைகள் அவங்களை மாத்த நிறைய வாய்ப்பு இருக்கு. எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க். கல்யாணம் ஆகுற வரைக்கும் யாரையும் காதலிக்காம இருக்கிறது தான் நம்ம மனசுக்கு நாம செய்ற நல்லதுனு நான் சொல்வேன்” என்று முடித்தாள் இளமயில்.
“நீங்க சொல்றதெல்லாம் சரி தான்.
ஆனா நாங்க ஒன்னும் பிரிய மாட்டோம். எங்க லவ் செம்ம ஸ்ட்ராங்” என்ற நிவேதா,
‘நாங்க பிரிஞ்சிடுவோம்னு எப்படி இவங்க சொல்லலாம்’ என்று இளமயிலை மனத்திற்குள் திட்டியவளாய் உர்ரென்ற முகத்துடன் இளமயிலுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றிருந்தாள்.
புன்சிரிப்புடன் செல்லும் அவளைப் பார்த்திருந்தாள் இளமயில்.
பள்ளிப் பருவ வயதில் இளங்குமரன் மீது காதல் கொண்டு தான் பேசியது போலவே பேசுகிறாளே இவள் என்று எண்ணி சிரித்துக் கொண்டாள் இளமயில்.
அந்த வயதில் ஏற்பட்ட காதலினால் அவள் பெற்ற மனவலிகளை மனத்தில் கொண்டே இன்று இவ்வாறு அனைவருக்கும் அறிவுரை வழங்குகிறாள் இளமயில்.
‘இந்தப் பொண்ணு நம்புற மாதிரியே இவங்க காதல் பிரியாம இருக்கட்டும் இறைவா’ என்று மனத்தோடு வேண்டிக் கொண்ட இளமயிலுக்கு, அடுத்த சில நாட்களில் தானே இவர்களைப் பிரிந்து வாழச் சொல்லப் போறகிறோமெனத் தெரிந்திருக்கவில்லை.
நிவேதா கூறியதைக் கேட்டவாறு மகிழுந்தை ஓட்டிக் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு இளமயில் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது.
“அவங்க சொன்ன இவ்ளோ விஷயங்களும் உனக்கு புரிஞ்சிதா நிவிமா?” என்று ஆச்சரியத்துடன் நிவேதாவைக் கேட்டாள் அர்ச்சனா.
“Simple ma. Don’t misuse your rights which you have on your body. Use it responsiblyனு சொல்றாங்க. அதுக்காக தான் கல்யாணம்னு ஒன்னை வச்சிருக்காங்கனு சொல்றாங்க” என்றாள் நிவேதா.
“உனக்கு புரிஞ்சா சரி தான்” என்று கூறிய அர்ச்சனா, மகிழுந்தை நிவேதா பள்ளியின் தரிப்பிடத்தில் நிறுத்தினாள்.
“இருமா நான் வருணை கூட்டிட்டு வரேன்” என்றவளாய் மகிழுந்தில் இருந்து இறங்கி பள்ளி வாயிலை நோக்கிச் சென்றாள் நிவேதா.
இவர்களை பின்தொடர்ந்து வந்த இளமயில் தன்னுடைய மகிழுந்தை அர்ச்சனாவின் மகிழுந்தின் அருகிலேயே தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, தரிப்பிடத்திற்கு வெளியே பள்ளி வாசலைப் பார்த்தவாறு நின்றிருந்த அர்ச்சனாவின் அருகே வந்து நின்றாள்.
“இங்கே ஏன் நிக்கிறீங்க?” என்று இளமயில் கேட்க,
“நிவி வருணைக் கூட்டிட்டு வரேன்னு உள்ளே போய்ருக்கா மயிலு” என்ற அர்ச்சனா,
“இப்ப என்ன செய்றது?” எனக் கேட்டாள்.
“அந்தப் பையனை முதல்ல பார்த்துப் பேசுவோம். அவனோட மனநிலையைப் புரிஞ்சிக்கனும். அவனோட பேக்ரவுண்ட் என்ன? எப்படிப்பட்ட பையன்? நாம சொன்னா கேட்பானானு பார்க்கனும்.
இப்ப அவகிட்ட போய் அவனை பார்க்கக்கூடாது, பேசக் கூடாதுனு சொன்னா அவளை நாமளே டிரிக்கர் செய்ற மாதிரி ஆகிடும் அர்ச்சனா. எங்க காதல் ஸ்ட்ராங்க்னு என்கிட்டயே நிவேதா சொல்லிருக்கா. காதலுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவேன்னு நினைக்குற வயசு. அதனால இதமா பதமா தான் ஹேண்டில் பண்ணனும்.
கண்டிப்பா வேற ஸ்கூல் மாத்தனும். ஆனா அவங்க எப்படிச் சொன்னா கேட்பாங்களோ அப்படி எடுத்துச் சொல்லி தான் மாத்தனும்” என்று இளமயில் பேசிக் கொண்டே போக, வருணுடன் இவர்களின் முன் வந்து நின்றாள் நிவேதா.
‘இந்த மயிலு ஆன்ட்டி இங்கே ஏன் வந்தாங்க? எங்களைப் பிரிக்க வந்திருக்காங்களா?’ என்று கடுகடுப்புடன் அவளைப் பார்த்தாள் நிவேதா.
இளமயில் மென்னகை புரியவும் லேசாய் சிரித்த நிவேதா எவ்வித பயமும் பதட்டமும் இல்லாமல், “அம்மா மீட் வருண்” மகிழ்வுடன் வருணை அர்ச்சனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
‘கொஞ்சமாச்சும் பயம் இருக்கா இவளுக்கு?’ என்று மனத்திற்குள் மகளைக் கடிந்து கொண்டவராய், வருணை அளவிட்டார் அர்ச்சனா.
ஒல்லியான தேகம், மீசை அரும்பும் பருவம், நிவேதாவிடம் இல்லாத பயமும் பதட்டமும் அவனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
“ஹாய் ஆன்ட்டி” என்றவனின் குரலிலேயே நடுக்கம் தெரிந்தது.
“ஹாய் வருண்” என்று இளமயில் கூறவும்,
“ஹாய் மேம்” என்றான் வருண்.
இளமயில் இங்கே என்ன செய்றாங்க என்கின்ற கேள்வி அவனது முகப்பாவத்தில் தென்பட்டது.
அதற்கு பதிலிறுக்கும் விதமாய், “நான் இவங்க ஃபேமிலி ஃப்ரண்ட் வருண்” என்றாள் இளமயில்.
‘அய்யோ மனசுல நினைக்கிறதை கண்டுபிடிச்சிடுறாங்களே!” என்று நினைத்துக் கொண்டான் வருண்.
பள்ளியில் காலை பிரேயர் துவங்கப்படப் போவதற்கான மணி அடிக்கவும்,
“அம்மா பிரயேர் ஸ்டார்ட் செய்ய போறாங்க. நாங்க போறோம்” என்றாள் நிவேதா.
“வருண் இன்னிக்கு ஈவ்னிங் நாம மீட் பண்ணலாமா?” என்று இளமயில் கேட்கவும்,
“ஓகே மேம்” என்றான்.
“அர்ச்சனா ஈவ்னிங் நிவேதாவை பிக் அப் செய்ய வரும் போது வருணையும் கூட கூட்டிட்டு வாங்க. உங்க வீட்டுல வச்சே பேசலாம்” என்று இளமயில் கூறவும்,
‘அய்யய்யோ நம்மளை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் அடி வெளுக்கப் போறாங்களோ’ என்று பயந்தே போனான் வருண்.
“இல்ல இல்ல மேம். நான் எங்கேயும் வர மாட்டேன். எது பேசுறதா இருந்தாலும் இங்க வச்சே பேசலாம்” என்றான்.
வருணைக் கூர்ந்து பார்த்த இளமயில், “சரி எங்க ஹாஸ்பிட்டலுக்கு வா வருண்” என்று கூறியவளாய்,
“நீங்க போங்க. பிரேயர் ஸ்டார்ட் செய்ய போறாங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
‘வருண்கிட்ட மயிலு ஆன்ட்டி என்ன பேசப் போறாங்க?’ என்று யோசித்தவாறே நடந்திருந்த நிவேதா, அருகில் நடந்து கொண்டிருந்த வருணிடம், “ஈவ்னிங் மயிலு ஆன்ட்டி உன்கிட்ட என்ன சொன்னாலும் நீ நம்ம காதல்ல ஸ்ட்ராங்கா இருக்கனும் வருண்” என்று உரைத்தாள்.
சரியெனத் தலையசைத்துக் கொண்டான் வருண்.
நிவேதாவும் வருணும் சென்றதும் அர்ச்சனா இளமயிலைக் கலக்கத்துடன் பார்க்க,
“நல்லவேளை பையன் பார்க்க ஒன்னும் ரவுடி பொறுக்கி மாதிரிலாம் தெரியலை. நல்ல பையனா தான் தெரியுறான்” என்றாள் இளமயில்.
“நல்லா படிக்கிற பையனாம் மயிலு. அர்ச்சனாவும் அவனும் தான் மாறி மாறி ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பாங்களாம். கார்ல வரும் போது அவனைப் பத்தி தான் பேசிட்டு வந்தா நிவி” என்ற அர்ச்சனா,
“இதை எப்படி அர்ஜூன்கிட்ட சொல்லப் போறேன்னே தெரியலை மயிலு. பக்கு பக்குனு இருக்கு. என்னோட மாமனார் மாமியாருக்குலாம் இதெல்லாம் தெரியவே வேண்டாம்” என்று பதைபதைப்புடன் உரைத்தாள்.
“அர்ஜூன்கிட்ட நான் பேசுறேன் அர்ச்சனா. இன்னிக்கு ஈவ்னிங் இவங்க ரெண்டு பேரையும் எங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வாங்க. அர்ஜூனையும் நான் வரச் சொல்றேன். எல்லாரும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்ற இளமயில்,
“ஆமா இன்னிக்கு உங்களுக்கு ஹெல்த் செக் அப் அண்ட் டெஸ்ட்லாம் எடுக்கனும்னு சொல்லிருந்தேனே! எடுத்தீங்களா அர்ச்சனா?” எனக் கேட்டாள்.
“இந்தப் பிரச்சனைல நான் எங்கே என்னைப் பத்தி யோசிக்க” என்று அலுத்துக் கொண்டாள் அர்ச்சனா.
“எவ்ளோ பிரச்சனை வந்தாலும் ஹேண்டில் செய்றதுக்கு மொதல்ல நாம தெம்பா ஹெல்தியா இருக்கனும் அர்ச்சனா” என்று இளமயில் கூறவும்,
“யாருக்காக இருக்கனும்? அவருக்கே என் மேல அக்கறை இல்லை” அழுகையின் விம்மலுடன் கூறினாள் அர்ச்சனா.
அர்ச்சனாவின் மனநிலை புரிந்தது இளமயிலுக்கு.
“மத்தவங்களுக்காக இல்லை உங்களுக்காக உங்க உடம்பை நீங்க கவனிச்சே ஆகனும் அர்ச்சனா. நீங்க படுத்துக்கிட்டா மொதல்ல வதைப்படப் போறது உங்க உடம்பு தான். மனவலியும் உடம்பு வேதனையும் உங்களுக்கு தான்.
நான் நிவேதாவுக்கு சொன்ன அட்வைஸ் செக்ஸூக்கு மட்டும் இல்ல எல்லாத்துக்கும் பொருந்தும் அர்ச்சனா. நம்ம அம்மா உடம்புலருந்து வந்த நம்ம உடம்பு நம்ம பொறுப்பு இல்லையா. அதை நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா பாதுகாக்க வேண்டியது நம்மளோட கடமை.
இத்தனை நாளாய் அந்த கடமைல தவறிப் போய் கவனிக்காம விட்டுத் தான் உங்க உடம்பைக் கெடுத்து வச்சிருக்கீங்க அர்ச்சனா. இப்பவே என் கூட வாங்க. எங்க ஹாஸ்பிட்டலயே உங்களுக்கு டெஸ்ட் எடுத்துடலாம். நான் காலேஜூக்கு லீவ் சொல்லிடுறேன்” என்றவளாய் அர்ச்சனாவை தங்களது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் இளமயில்.
இருவரும் தத்தமது மகிழுந்தில் பயணித்தவர்களாய் மருத்துவமனையை அடைந்து இளமயிலின் அறைக்குச் சென்ற போது அங்கே இளங்குமரனுடன் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

