Loading

 

அன்றாடம் காலை அர்ச்சனா தான் பிள்ளைகளின் அறைக்குச் சென்று அவர்களை எழுப்பிப் படிக்க வைத்திடுவாள்.

 

அன்று அர்ச்சனாவின் உறக்கத்தை கலைக்க விரும்பாமலும், பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவிடும் எண்ணத்துடனும் தான் அவர்களின் அறைக்குச் சென்றான் அர்ஜூன்.

 

ஒருவகையில் இது முந்தைய நாள் இளமயிலிடம் பேசியதனால் வந்த ஞானோதயம் எனலாம். பிள்ளைகள் விழிப்புடன் இருக்கும் போது சிறிது நேரமாவது அவர்களுடன் செலவிட வேண்டும் என்று முந்தைய நாள் இரவு தான் தீர்மானித்திருந்தான் அர்ஜூன்.

 

அதனை செயல்படுத்தும் பொருட்டு தான் காலை பிள்ளைகளின் அறையை நோக்கிச் சென்றான்.

 

அர்ஜூன் அறைக்கதவை மெல்ல திறந்த போது, “யாரோ வர்றாங்க! வைக்கிறேன்! வைக்கிறேன்” நிவேதாவின் மெல்லிய பதட்டமான குரல் அர்ஜூனின் செவியைத் தீண்டியது.

 

‘இந்த நேரத்துல நிவி யாருக்கிட்ட பேசிட்டு இருக்கா?’ ஒரு நொடி அதிர்ந்து நின்ற அர்ஜூன் பட்டென உள்ளே நுழைந்தான்.

 

அங்கு அவன் கண்டது கட்டிலில் உறங்கியவளாய் படுத்திருந்த நிவேதாவையும் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சிவகணேசனையும் தான்.

 

யோசனையில் சுருங்கிய நெற்றியுடன் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தவன், ‘ஏதோ பிரமை போல’ எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டவனாய் அதனை ஒதுக்கியவன் கட்டிலின் அருகில் சென்றான்.

 

“நிவிமா டைம் ஆகிடுச்சு எழுந்திரிமா” என்று அவளை எழுப்பவும், கண்களைக் கசக்கியவாறு சோம்பல் முறித்தவளாய் கண் விழித்தவள், “குட் மார்னிங்ப்பா” உறக்கம் கலையாத குரலில் உரைத்தாள்.

 

“குட் மார்னிங்டா! போ பிரஷ் பண்ணிட்டு வா! டைம் ஆகிடுச்சுல! படிச்சிட்டு ஸ்கூலுக்குக் கிளம்ப சரியா இருக்கும்” அவளின் கையைப் பற்றி எழுப்பியவனாய் உரைத்தான்.

 

அவன் பேச்சைத் தட்ட முடியாது எழுந்தவள் போர்வையை அப்படியே தான் படுத்திருந்த தலையணையின் மேல் போட்டு விட்டு கழிவறை நோக்கிச் சென்றாள்.

 

“என்ன பழக்கம் இது நிவிமா? எழுந்ததும் கையோட போர்வையை மடிச்சி வைக்க மாட்டியா?” என்று கடிந்தவனாய் அதை மடிக்கப் போக,

 

பதறியவளாய் அவனருகே சென்றவள், “அய்யோ இருங்கப்பா! நானே மடிக்கிறேன்” என்றவாறு போர்வையை எடுத்து மடித்து தலையணையின் மீது வைத்தாள்.

 

அவளின் பதட்டத்தை நெறித்த புருவத்துடன் பார்த்தவன் அவள் கழிவறைக்குள் செல்லும் வரை அப்படியே நின்றிருந்தான்.

 

அவள் அங்கிருந்து சென்றதும் பெருமூச்சு விட்டவனாய் சிவகணேசனை எழுப்புவதற்காக கட்டிலில் அமர்ந்தான்.

 

கட்டிலில் அமர்ந்து சிவகணேசனின் முகத்தை நோக்கிச் சாய்ந்தவாறு அவனின் கன்னத்தை தடவி தலைமுடியைச் சீர் செய்தவனாய், “சிவா குட்டி எழுந்திரிடா! நேரமாகிடுச்சு” என்றவாறு சிவகணேசனை எழுப்பினான்.

 

அவன் கண் விழிக்காமல் புரண்டு படுக்கவும் மேலும் கட்டிலில் நிவேதா படுத்திருந்த தலையணைக்கு அருகே சாய்ந்த அர்ஜூன், “டேய் சிவா குட்டி எழுந்திரிடா” என்ற போது நிவேதாவின் தலையணை மீதிருந்த அவனின் முழுங்கையை ஏதோ பொருள் அழுத்தியது.

 

‘தலகாணி தானே இருக்கு. என்னது இங்கே அழுத்துது’ என்று நினைத்தவாறு கை அழுத்தி இருந்த நிவேதாவின் தலையணையைப் பார்த்தான் அர்ஜூன்.

 

அங்குத் தலையணைக்கு அடியில் இருந்தது அந்தப் பொருள்.

 

அதை பார்த்தவனின் கண்கள் அதிர்ந்து விழித்தன.

 

சரியாய் அந்நேரம் கழிவறையில் இருந்து வெளியே வந்த நிவேதா, அவன் கையில் அகப்பட்டிருந்த அந்தப் பொருளைப் பார்த்துத்‌ திடுக்கிட்டு நின்றாள்.

 

அவளின் இதயம் தாளம் தப்பித் துடித்தது. உடல் நடுங்கவாரம்பித்தது.

 

நிவேதா வெளியே வந்து நிற்பதைப் பார்த்தவன், “இந்த பட்டன் போன் இங்கே எப்டி வந்துச்சு நிவிமா?

யாரு உனக்கு வாங்கிக் கொடுத்தா?” வெகு இயல்பான குரலில் அவளிடம் கேட்டவாறே அதனை அன்லாக் செய்ய முற்பட்டான்.

 

ஆனால் ஏதோ எண்களால் லாக் செய்யப்பட்டிருந்த அந்த பட்டன் கைப்பேசி அவன் அளித்த எண்கள் எதையும் எடுத்துக் கொள்ளாது அன்லாக் ஆக மறுத்தது.

 

மனத்தின் நடுக்கத்தை வெளியே காட்டாது திடமான குரலில், “இது தாத்தாவோட போன்ப்பா. எங்க ஸ்கூல்ல ஒரு சைன்ஸ் எக்ஸ்பரிமெண்ட் செய்றோம்ப்பா. அதுக்கு பழைய காலத்து பட்டன் போன் வேணும்னு சொன்னாங்க. தாத்தாக்கிட்ட கேட்டேன். அவங்ககிட்ட இருக்கிறதை கொடுத்தாங்கப்பா” என்றாள் நிவேதா.

 

“ஓ இது உங்க அம்மாக்குத் தெரியுமா?” என்றவன் கேட்க,

 

“ஹான் தெரியும்ப்பா” என்றவள் அவன் கையில் இருந்த கைப்பேசியை லாவகமாய் பிடுங்கி புத்தகப்பைக்குள் வைத்தாள்.

 

‘அப்ப நான் ரூமுக்குள்ள வரும் போது கேட்ட பேச்சு சத்தம் பிரமை இல்லை’ என்று நினைத்துக் கொண்டவன்

நிவேதாவைப் பார்த்து மென்மையாய் சிரித்தவனாய், “சரிடா நீ படி” என்றான்.

 

மகளை இக்கட்டான தர்மசங்கடமான நிலையில் பிடிப்பட்ட குற்றவாளியாக நிறுத்தி வைத்து கேள்வி கேட்க விரும்பாத தந்தையாக அவளை இயல்பாக்க முனைந்தான் அர்ஜூன்.

 

அவனின் அந்தச் சிரிப்பிலும் மென்மையான பேச்சிலும் ஹப்பாடா என்ற ஆசுவாசத்துடன் அவளின் நடுக்கம் குறைய, புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவளது படிக்கும் மேஜை நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் நிவேதா.

 

‘கண்டிப்பா அப்பாக்குச் சந்தேகம் வந்திருக்கும். மயிலு ஆன்ட்டி வேற என்னலாம் சொல்லி வச்சிருக்காங்களோ தெரியலை! இப்ப என்ன செய்றது? நாமளே உண்மையைச் சொல்லிடலாமா?’ என்று யோசித்தவாறே புத்தகத்தைப் பார்த்திருந்தாள் நிவேதா.

 

அர்ஜூனின் மனத்திற்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பிய போதும் அதனை ஓரம் கட்டியவனாய், “டேய் சிவா குட்டி எந்திரிடா” என்றவாறு படுக்கையில் இருந்த மகனைக் கைகளில் தூக்கி தரையில் நிறுத்தினான் அர்ஜூன்.

 

“அப்பா நான் குட்டி இல்ல பிக் பாய்” என்றவனாய் அர்ஜூனின் இடையைக் கட்டிக் கொண்டு அவனது வயிற்றில் முகம் புதைத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தான் சிவகணேசன்.

 

மகனின் பேச்சிலும் செயலிலும் வாய்விட்டுச் சிரித்த அர்ஜூன் அவனின் தலைமுடியைக் கோதியவனாய், “பிக் பாய் இப்படி மத்தவங்க எழுப்புற வரைக்கும் தூங்க மாட்டாங்க தெரியுமா சிவா குட்டி” வேண்டுமென்றே குட்டி என்பதில் அழுத்தம் கொடுத்து கூறவும்,

 

தலையைச் சிலுப்பியவனாய் அர்ஜூனை விட்டு தள்ளி நின்ற சிவ கணேசன், “அப்பா டோன்ட் கால் மீ குட்டி! ஐ டோண்ட் லைக் இட்! நான் பிக் பாய் ஆகிட்டேன்” என்றான்.

 

மகனின் பேச்சில் மேலும் சிரித்தவனாய், “சரிங்க பிக் பாய் சார்! போய் பிரஷ் பண்ணிட்டு வந்து படிங்க பிக் பாய் சார்” என்று அவனை கழிவறைக்குள் அனுப்பி வைத்தான் அர்ஜூன்.

 

மகனும் தந்தையும் பேசிக் கொண்டிருக்கும் போதே அறைக்குள் வந்திருந்த அர்ச்சனா, அவர்களின் பேச்சைச் சிரிப்புடன் கேட்டிருந்தாள்.

 

சிவகணேசன் கழிவறைக்குள் சென்றதும் அர்ஜூனிடம் வந்த அர்ச்சனா, “என்னப்பா சீக்கிரமா எழுந்திரிச்சிட்டீங்களா? இன்னிக்கு நீங்க உங்க மார்னிங் ரொட்டீன் யோகா எக்சர்சைஸ் எதுவும் செய்யலையா?” மென்னகையுடன் கேட்டாள்.

 

அவளைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்த அர்ஜூன் ஏதும் பதிலிறுக்காது அங்கிருந்து அகன்றிருந்தான்.

 

திடீரென்ற அவனது கோப முகத்தில் குழப்பம் அடைந்தவளாய், ‘என்னாச்சு இவருக்கு? எதுக்கு இப்படி முறைச்சிட்டு போறாரு?’ மனத்திற்குள் நினைத்தவாறு நின்றிருந்தவள்,

 

“நிவிமா தம்பி வெளியே வந்ததும் அவனைப் படிக்கச் சொல்லு. நான் இதோ வந்துடுறேன்” என்றவாறு அர்ஜூனின் பின்னேயே சென்றாள்.

 

அறைக்குள் சென்ற அர்ஜூன் கடுமையான முகத்துடன் குட்டிப் போட்ட பூனை போன்று நடப்பதைப் பார்த்த அர்ச்சனா,

 

“என்னாச்சு அஜூப்பா?” எனக் கேட்டாள்.

 

“இன்னும் என்னாகனும்? இது தான் நீ பிள்ளைய வளர்க்கிற லட்சணமா? எல்லாரையும் நீ பொறுப்பா பார்த்துப்பன்ற நம்பிக்கைல தானேடி நான் ரிசார்ட் வேலைல மூழ்கிப் போனேன். ஆனா இப்ப..” கோபத்தைக் கட்டுப்படுத்த பல்லைக் கடித்தவனாய் அர்ச்சனாவைப் பார்த்தவன்,

 

“என் கண்ணு முன்னாடி நிக்காத. இங்கிருந்து போய்டு! கோபத்துல ஏதாவது திட்டிடப் போறேன்” என்றான்.

 

சரசரவென்று கண்களில் இருந்து வழிந்தது கண்ணீர் அவளுக்கு.

 

‘என் உடம்பையும் கெடுத்துக்கிட்டு இவருக்காக எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு குடும்பத்தையும் பார்த்துக்கிட்ட என்னைப் பார்த்து என்ன கேட்டுட்டாரு’ நெஞ்சில் சுருக்கென்று வலித்தது அவளுக்கு.

 

‘அப்படி என்ன நான் பிள்ளைகளை வளர்க்கிறதுல குறை வச்சிட்டேன்னு இப்ப இப்படிப் பேசிட்டு இருக்காரு’ மனத்திற்குள் பொருமியவளாய்

அப்படியே கண்ணீருடன் நின்றிருந்தவள் அவன் தன்னை ஏறிட்டும் பார்க்காது நடந்த வண்ணமே இருப்பதைப் பார்த்து

தன்னை நிலைப்படுத்தியவளாய், “என்னாச்சுனு சொல்லுங்க அஜூ?” எனக் கோபக் குரலில் கேட்டாள்.

 

“நிவிக்கிட்ட போன் இருக்குனு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.

 

“ஃபோனா?” அர்ச்சனாவுக்கு போன் என்றதும் பெரிய தொடு திரைக் கொண்ட கைப்பேசியே கண் முன்னே வர யோசனையுடன், “இல்லயே. அப்படி எதுவும் அவக்கிட்ட இல்லயே. படிக்க எதுக்காவது வேணும்னாலும் என் போனைத் தானே அவக்கிட்ட நான் கொடுப்பேன். அவளுக்குனு தனியா போன் கொடுத்தா கெட்டுப் போய்டுவானு நாம தான் வாங்கிக் கொடுக்கலையேங்க” என்றாள்.

 

“அவக்கிட்ட ஒரு பழைய மாடல் பட்டன் ஃபோன் இருக்கு. அது கூட தெரியாம என்ன நீ அவளைக் கவனிச்சிக்கிற?” காட்டமாய் கேட்டவன்,

 

“இதுல உனக்குக் தெரியும்னு வேற பொய் சொல்றா நிவி” என்று கர்ஜித்தான்.

 

சட்டென நினைவு வந்தவளாய், “ஆமா ஆமா பட்டன் போன் அவக்கிட்ட இருக்குங்க. மாமா தான் அவளுக்குக் கொடுத்தாங்க. கொடுத்து ஒரு மாசம் தான் இருக்கும். ஏதோ சைன்ஸ் பிராஜக்ட்காக வேணும்னு கேட்டு வாங்கினா” என்றாள்.

 

“மண்ணாங்கட்டி” என்று கத்தியவன்,

 

“காலைல அந்த போன்ல யாருக்கிட்டயோ பேசிட்டு இருந்தா! அதுவும் அவ பேசினது எனக்குத் தெரியக் கூடாதுனு மறைச்சு வச்சி பொய் வேற சொல்றா! எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா?” என்று அவளை அத்தனை கோபத்துடன் பார்த்தான்.

 

அவன் கூறியதைக் கேட்டவளுக்குத் திக்கென்று இருந்தது. ஆனாலும் மகளைத் தவறாகவும் எண்ண முடியவில்லை.

 

“சரி அவ ஃப்ரண்ட்ஸ் யார்க்கிட்டயாவது பேசியிருப்பாளா இருக்கும். நமக்குத் தெரியக் கூடாதுனு மறைக்கிறாளா இருக்கும்” என்ற அர்ச்சனா,

 

“அது எதுவா இருந்தாலும் என்னனு விசாரிச்சு சரி செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு. ஏன்னா நான் தான் உங்க குடும்பத்தைப் பொறுப்பா கவனிச்சிக்கிறதுக்குனே பிறப்பெடுத்தவளாச்சே! உங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க தப்பு செஞ்சா அதுக்கு நான் மட்டும் தானே காரணமா இருக்க முடியும். அதனால என் பொறுப்பைச் சரியா செய்யாம என் உசுரு போகாதுங்க” என்று கடுங்கோபத்துடன் குத்தலாய் உரைத்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.

 

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் அர்ஜூன்.

 

முந்தைய நாள் இரவு அர்ச்சனாவிடம் பேசியது அனைத்தும் மறந்து போக, அவளின் நலனைக் குறித்த எண்ணங்கள் கூட பின்னே சென்றிருக்க, மகள் கூறிய பொய் மட்டுமே அவன் நெஞ்சில் நெருஞ்சிலாய் குத்திக் கொண்டிருந்தது.

 

‘என்னவோ சரியில்ல! மயிலுக்கிட்ட மொதல்ல இதைப் பத்திப் பேசனும்’ என்ற எண்ணம் தோன்றவும் நேரம் காலம் பாராது உடனே இளங்குமரனுக்கு அழைப்பு விடுத்தான் அர்ஜூன்.

 

ஆனால் அழைப்பை ஏற்கவில்லை இளங்குமரன்.

 

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவன், காலையில் முக்கிய ரெசார்ட் வேலை வேறு இருக்க, அதனை முடித்து விட்டு அதன் பிறகு இளமயிலை நேரில் சென்று பார்த்துப் பேசலாம் என்று திட்டமிட்டவனாய் குளிக்கச் சென்றான்.

 

பிள்ளைகளின் அறைக்குள் சென்ற அர்ச்சனா, நிவேதாவும் சிவகணேசனும் புத்தகத்துடன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அமைதியாக கட்டிலில் சென்று அமர்ந்தாள். அவளது கண்களில் இருந்து நில்லாது வழிந்தது கண்ணீர்.

 

அங்கே அர்ஜூன் அர்ச்சனாவைத் திட்டியது இங்கே இந்த அறையில் நிவேதாவுக்கு நன்றாகவே கேட்டிருந்தது.

 

அதனால் கண்ணீரைத் துடைத்தவளாய் மூக்கை உறிஞ்சியவாறு அமர்ந்திருந்த அர்ச்சனாவைப் பார்த்த நிவேதாவுக்கு குற்றயுணர்வு ஆட்கொண்டது.

 

இவை எதையும் கவனியாது சிவகணேசன் தீவிரமாய் வீட்டுப் பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான்.

 

தன்னால் தனது தாய் தந்தையிடம் திட்டு வாங்கியதை எண்ணிக் கலங்கியது நிவேதாவின் உள்ளம்.

 

‘அம்மாகிட்ட உண்மையைச் சொல்லிடலாமா? இதுக்கு மேல மறைச்சா அம்மா தான் அப்பாகிட்ட திட்டு வாங்குவாங்க’ என்று நினைத்த நிவேதா தயக்கத்துடன் எழுந்தவளாய் அர்ச்சனாவின் முன் சென்று நின்று, “சாரி மா!” என்றாள்.

 

“இப்ப நீ எதுக்கு சாரி சொல்ற?” நீர் துளிர்த்திருந்த கண்களில் கோபத்தைக் காட்டிக் கேட்டாள் அர்ச்சனா.

 

அவள் அமைதியாக நிற்கவும், “சொல்லுடி எதுக்கு இப்ப சாரி சொல்ற? அப்படி என்ன தப்பு செஞ்ச?” எனக் காட்டமான குரலில் கேட்டாள்.

 

படபடத்த நெஞ்சத்துடன் நடுங்கிய குரலில், “அம்மா நான் காலைல வருண்கிட்ட போன்ல பேசினதை அப்பா கேட்டுட்டாங்கமா” என்றாள்.

 

“யாரது வருண்? அவன்கிட்ட அப்படி என்ன காலைலயே பேச்சு உனக்கு?” எனக் கடுங்கோபத்துடன் கேட்டாள்.

 

உள்ளங்கை வியர்வையில் குளிக்க நடுங்கியவளாய், “அம்மா வருணை நான் லவ் பண்றேன்மா” என்று அர்ச்சனாவின் தலையில இடியை இறக்கினாள் நிவேதா.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்