
“மனசு முழுக்க அப்படியொரு வலி! நான் ஏமாந்து போய்ட்ட வலி. என் காதல் தோத்துப் போய்ட்ட வலி. இதை ஏன் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லலைனு கேட்டதுக்கு, அது படிக்கும் போது வந்த காதல். அதுக்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. அவன் இப்ப எங்கே இருக்கான்னு கூடத் தெரியாதுனு சொன்னா. அதனால அந்தக் காதலை முழுசா மறந்துட்டு புது வாழ்க்கை வாழ நினைச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதா சொன்னா. ஆனா என்னோட தொடுகையை அவ மனசு ஏத்துக்க முடியாம தவிச்சனால எல்லாத்தையும் சொல்லிட்டதா சொன்னா. அவ மேல கோவம் கோவமா வந்தப்பவும் அவ பொய்யா என்னோட இணங்காம உண்மையைச் சொன்னது மனசுக்கு அவ்ளோ ஆறுதலா இருந்துச்சு.
மனசைத் தீண்டாத தாம்பத்தியத்துல என்ன இருக்கு? அது வெறும் உடலின் உராய்வு தானே! நான் அவ மனசைத் தொடலை அதனால அவளைத் தொட வேண்டாம்னு சொன்னா பாரு. அந்த நிலைலயும் இந்தப் பாழும் மனசு அவளை ரசிச்சிது. அப்படி அவ சொன்னதுக்காகவே அவளை நேசிச்சிது.
என்னிக்காவது அவ மனசுல எனக்கான இடம் கிடைக்காமலா போய்டும். அவ மனசு மாறுற வரைக்கும் காத்திருக்கலாம்னு முடிவு செஞ்சேன். அதை அவகிட்டயும் சொன்னேன். ஆனா அவளுக்கு அவளோட இளா மச்சானை மறக்க முடியும்ங்கிற நம்பிக்கையே இல்லை.
தினமும் அவளுக்கு எப்படி அவளோட இளா மச்சான் மேல காதல் வந்துச்சுனுலாம் கதை கதையா சொன்னா. அவளோட இளா மச்சான் மேல அவ வச்சிருக்கக் காதலைப் பார்த்து பொறாமையா இருந்துச்சு எனக்கு. இந்த மாதிரியான ஒரு காதல் எனக்குக் கிடைக்காம போய்டுச்சேனு ஏக்கமா இருந்துச்சு.
நாம நேசிக்கிறவங்க நம்மளை நேசிக்காம போறது நரக வலி. எதுக்காக என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டனு நிறைய நேரம் அவளைத் திட்டியிருக்கேன். அப்பலாம் தன் மேல தான் தப்புனு சொல்லி நான் திட்டுறதை எல்லாம் வாங்கிப்பா! திருப்பிக் கூடப் பேச மாட்டா!
எனக்கு அவளைத் திட்டின பிறகு கூடுதலா மனசு வலிக்கும். கிட்ட வச்சிக்கிட்டே அவளை நெருங்கவும் முடியாம வெறுக்கவும் முடியாம நான் பட்ட பாடு இருக்கே. நரகமான வாழ்க்கைனா என்னனு வாழ்ந்துட்டு இருந்த நாட்கள் அது.
என்னுடைய முதல் காதல் அவ! எப்படி அவளை என்னால வெறுக்க முடியும். அதனால அவ எனக்குக் கொடுத்த இந்த வலியை எல்லாம் கூட மன்னிச்சு அவளை ஏத்துக்க நான் தயாரா இருந்தேன்.
நாட்கள் போகப் போக அவளால என் கூட ஒரே ரூம்ல கூட இருக்க முடியலைனு சொன்னா! என்னமோ அவளோட இளா மச்சானுக்குத் தான் செய்ற துரோகமா தெரியுதுனு சொல்லி அழுதா!
வேறொருத்தனை கல்யாணம் செஞ்சது துரோகமா தெரியலை, ஒரே ரூம்ல இருக்கிறது துரோகமா தெரியுதா உனக்குனு அதுக்கும் திட்டினேன்.
டிவோர்ஸ் கேட்டாள். கொடுக்க முடியாதுனு தான் சொன்னேன். எங்கே இருக்கான்னு தெரியாத இளா மச்சானை நினைச்சிக்கிட்டு தனியா வாழுறதுக்கு என் கூட இப்படியே இருந்திடுனு சொன்னேன். அவ என்னோட சேர்ந்து வாழலைனாலும் என் கூடவே இருந்தா கூடப் போதும்னு தான் என் காதல் மனசு ஆசைப்பட்டுச்சு அதனால அவ மனசு மாறுற வரைக்கும் காத்திருக்கிறதா சொன்னேன்.
ஆனா அவளோ இளா மச்சானை தேடிக் கண்டுபிடிச்சி ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கிறதா சொல்லி டிவோர்ஸ் கேட்டா! நான் ஆசைப்பட்ட வாழ்க்கை தான் கிடைக்கலை அவ ஆசைப்பட்ட வாழ்க்கையாவது அவ வாழட்டும்னு அவளோட நல்வாழ்வுக்காக மனசு முழுக்க வலியோட எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லி டிவோர்ஸ் கொடுத்துட்டேன்”
விரக்தியான புன்னகையுடன் கூறி முடித்தவன் அர்ச்சனாவைப் பார்த்தான்.
தன்னுடைய முதல் காதல் மீது அவன் வைத்திருந்த மதிப்பு, மரியாதை, அதற்காக அவன் செய்த தியாகம், அவனது எண்ணம், அந்தப் பெண்ணின் மீது குறை சொல்லாது அவன் அதைப் பகிர்ந்த கொண்ட விதமென அவன் கூறியதைக் கேட்ட அர்ச்சனாவுக்கு அவனின் மீது மதிப்பும் காதலும் பெருகியது.
அதே நேரம் ஏமாற்றம், வலி, வேதனை, வெறுமை, விரக்தி என அவன் கடந்து வந்த வாழ்வை எண்ணிக் கலங்கியது அவளுள்ளம்.
முதன் முதலாக அவனைப் பார்த்த போது அவன் கண்களில் தெரிந்த வெறுமைக்கும் வலிக்குமான காரணம் இப்போது தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தது அவளுக்கு.
இனி வாழ்வில் மகிழ்வை மட்டுமே அவன் அனுபவிக்க வேண்டுமென அவனுக்காகப் பிரார்த்தித்தது அவளுள்ளம்.
பேரமைதி அந்த அறையில்.
‘ஒரு செடில ஒரு முறை தான் பூ பூக்கும்னு பூவே உனக்காக விஜய் மாதிரி எதுவும் சொல்லப் போறாரா?’ என்று பயந்தவளாய் சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தவள்,
“இப்ப ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க?” எனப் படபடத்த மனத்துடன் கேட்டாள்.
“என்னைக் கட்டிக்கப் போறவளுக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்க வேண்டாமா?” கண்ணில் சிரிப்புடன் கேட்டிருந்தான் அர்ஜூன்.
படபடத்த அவளின் இதயம் இன்ப அதிர்ச்சியில் ஒரு நொடி நின்று துடிக்க, அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
சட்டென அவளின் முகம் பூவாய் மலர,
“அஜூப்பா!” என்றவளாய் கண்ணீர் பொங்கத் தாவி அவனை இறுக்கமாய் அணைத்தவள் குலுங்கி அழுதிருந்தாள்.
அவளை மென்மையாய் அணைத்து முதுகை வருடியவனாய், “என்னடா?” என்றான்.
“கொஞ்ச நேரத்துல என் உசுரே என்கிட்ட இல்லை. என்னை எப்படிக் கலங்க வச்சிட்டீங்க தெரியுமா? இன்னும் நீங்க உங்க முன்னாள் மனைவியை மறக்க முடியாம இருக்கிறதா சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்த சொல்லப் போறீங்களோனு நினைச்சு பயந்தே போய்ட்டேன்” அவன் மார்பில் சாய்ந்தவளாய் கலங்கிய குரலில் உரைத்தாள்.
“நீ மட்டும் நேத்து முழுக்க என்னைக் கலங்க விட்டல” என்று சிரித்தவனின் புஜத்தில் விளையாட்டாய் குத்தியவள், “பரவாயில்ல இந்தக் கல்லையும் கரைய வச்சிட்டேனே” என்று சிரித்தவாறு அவன் கைவளைக்குள்ளேயே நின்றவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஒரு பொண்ணால இந்தளவுக்கு ஒரு பையனை காதலிக்க முடியுமானு மயிலைப் பார்க்கும் போதெல்லாம் தோணும். யாருனே தெரியாத அந்த இளாவை நினைச்சு பொறாமையா இருக்கும். அப்படியொரு காதல் எனக்குக் கிடைக்கலையேனு ஏக்கமா இருக்கும்.
ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து வச்சி உன் காதலால என்னைத் திக்குமுக்காட வச்சிட்ட அச்சுமா! நீ என் மேல வச்சிருக்கக் காதலை நினைச்சு நினைச்சு எத்தனை நாள் பூரிச்சுப் போய்ருக்கேன் தெரியுமா? ஆனா அதுக்காக உன் வாழ்க்கையை நானே கெடுத்துடக் கூடாதேனு தான் ஒதுங்கி இருந்தேன்” என்றான் அர்ஜூன்.
அவன் முகத்தையே காதல் பொங்கப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.
முதன் முதலாய் அவனைப் பார்த்த போது அவன் கண்களில் தெரிந்த வலி முற்றிலுமாய் நீங்கி இருக்க, இப்போது அக்கண்களில் தனக்காக ஒளிர்ந்த காதலைக் கண்டவளின் உள்ளம் பரவசத்தில் துள்ளிக் குதிக்க,
‘யூ மேட் இட் அச்சு’ தன்னைத் தானே பாராட்டிக் கொண்டவளாய் லேசாய் எம்பியவள் அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து, “லவ் யூ அஜூப்பா” என்றாள்.
அவளைத் தன்னோடு இறுக்கமாய் அணைத்தவனாய் நெற்றியில் முத்தமிட்டவன், “லவ் யூ டா கண்ணம்மா” என்றான்.
“கண்ணம்மா?” நானா?” பூரிப்புடன் கேட்டவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “ஆமா உனக்காக நான் வச்சிருக்க ஸ்பெஷல் செல்லப் பேரு” என்றவாறு அவளின் நெற்றியில் முட்டினான்.
அந்நொடியில் இருந்து அவன் வாயிலிருந்து வரும் கண்ணம்மா என்கின்ற அழைப்புப் பொக்கிஷம் அவளுக்கு.
அவளவனாய் அவன் மாறிய பிறகு அவளுக்காக அவன் வைத்த சிறப்புப் பெயர் என்பதாலேயே கண்ணம்மா என்றாலே உருகிவிடுவாள் அர்ச்சனா.
“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா”
மெல்லிய குரலில் அவன் பாட வேறு செய்யவும் அவளின் உள்ளம் நெகிழ்ந்து போக, ஆனந்த கண்ணீருடன் அவன் இதழில் தன்னிதழைப் பதித்தாள்.
அவளின் அழுத்தமான இதழொற்றலில் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று கலக்க, தன்னோடு அவளை மேலும் இறுக்கியவனின் கரங்கள் அவளுடலை வருட, இருவரும் தன்னிலை மறக்க முனைந்த நேரம் சட்டென அவளை விட்டு அகன்றிருந்தான் அர்ஜூன்.
இருவரின் உணர்வுகளும் ஆர்ப்பரித்திருந்த அந்நிலையிலும் தன்னை நிலைப்படுத்தியவனாய் அவளைப் பார்த்தவன்,
“இனி நம்ம கல்யாணம் நடக்குற வரைக்கும் நாம மீட் பண்ண வேண்டாம் அச்சுமா” என்று உரைத்தான். அதனைத் திருமணம் வரை கடைப்பிடிக்கவும் செய்தான்.
பெற்றோர்கள் குறித்திருந்த முகூர்த்தத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் மனம் நிறைந்த காதலோடு இருவரும் இன்பமாய் மணம் புரிந்து கொண்டனர்.
****
காதல் கணவா உந்தன் கரம் விடமாட்டேன்
சத்தியம், சத்தியம் இது சத்தியமே
தாய்வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம், சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
பாடல் நிறைவுறவும், அன்றைய நாளின் நினைவிலிருந்து விடுபட்டவனாய் அர்ச்சனாவைக் காதலுடன் பார்த்தான் அர்ஜூன்.
அர்ச்சனாவுமே அன்றைய நாட்களுக்குள்ளேயே பயணித்தவளாய் பாடி முடித்தவள் புன்னகையுடன் அவனருகில் வந்து அமர்ந்தாள்.
அதன் பிறகு இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவேயில்லை ஆனால் இருவரின் மனங்களும் பேசிக் கொண்டன.
அர்ஜூன் மற்றும் அர்ச்சனாவின் முகங்களில் தெரிந்த மகிழ்வில், இளமயிலும் இளங்குமரனும் பார்வையைப் பரிமாறிக் கொண்டவர்களாய், ‘சக்சஸ்’ என்று கூறிக் கொண்டனர்.
அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சிரித்துப் பேசி உணவினை உண்டு மகிழ்ந்தனர்.
இரவுணவை உண்டு முடித்ததும், பிள்ளைகள் கீழே தோட்டத்தில் விளையாடச் சென்று விட, இளங்குமரனின் தாய் தந்தையரும் பிள்ளைகளைக் கவனிக்க அவர்களுடன் கீழே சென்று விட்டனர்.
இப்போது நால்வர் மட்டுமே மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்.
அர்ஜூனின் கைப்பேசிக்கு அவனது கேளிக்கை விடுதி மேலாளரிடம் இருந்து அழைப்பு வரவும், அங்கிருந்து எழுந்து எதிர் திசைக்குச் சென்றவனாய் சுவரோரம் நின்று அழைப்பையேற்றுப் பேசினான் அர்ஜூன்.
“நீங்க பேசிட்டு இருங்க. இதோ வந்திடுறேன்” என்றவனாய் இளமயிலைப் பார்த்து தலையசைத்து விட்டு அர்ஜூன் நிற்கும் இடம் நோக்கிச் சென்றான் இளங்குமரன்.
அர்ச்சனாவும் இளமயிலும் மட்டுமே இப்போது அமர்ந்திருக்க, “என் மேல இருந்த கோபமெல்லாம் போய்டுச்சா அர்ச்சனா?” புன்னகையுடன் கேட்டாள் இளமயில்.
“உங்க மேல எனக்கு என்னங்க கோபம்? அதெல்லாம் எதுவுமில்லை” என்றாள் அர்ச்சனா.
“அர்ஜூனுக்கு டிவோர்ஸ் கொடுத்த பிறகும் நான் இளா மச்சானைத் தேடிக் கண்டுபிடிக்காம கல்யாணம் செஞ்சிக்காம தான் இருந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா அர்ச்சனா” என்று கேட்டாள் இளமயில்.
ஆமெனத் தலையசைத்த அர்ச்சனா, “ஆமா எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சி அஞ்சு வருஷம் கழிச்சு ஒரு நாள் அர்ஜூன் ஹோட்டல்ல நடந்த மெடிக்கல் கான்பெரன்ஸ்ல இளா டாக்டரை பார்த்ததையும் அவர்கிட்ட உங்களைப் பத்தி விசாரிச்சதையும் அர்ஜூன் சொன்னாரு. அப்ப தான் டிவோர்ஸ் கொடுத்து அஞ்சு வருஷம் ஆகியும் நீங்க டாக்டரைக் கல்யாணம் செஞ்சிக்காம தனியா இருக்கிறது அர்ஜூனுக்குத் தெரிஞ்சிது. என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு. உங்களைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி டாக்டர்கிட்ட சொன்னதா சொன்னாரு” என்ற அர்ச்சனா,
“ஏன் நீங்க டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சி கல்யாணம் செஞ்சிக்காம இருந்தீங்க மயிலு? ரெண்டாவது கல்யாணம் செஞ்சிக்கிறதா சொல்லி தானே டிவோர்ஸ் வாங்குனீங்க” எனக் கேட்டாள் அர்ச்சனா.
“இளா மச்சானுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுனு தவறா நினைச்சிட்டு தனியா இருந்தேன் அர்ச்சனா. அதுவுமில்லாம அர்ஜூன் என்னால அனுபவிச்ச மனவலிக்குத் தண்டனையா தான் தனியா வாழ்ந்தேன்” என்றாள் இளமயில்.
“தண்டனையா?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் அர்ச்சனா.

