Loading

அத்தியாயம் 18

 

அன்றைய நாள் முழுவதும் அர்ச்சனாவை மனத்திற்குள் திட்டியவாறு தான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

 

‘வாய் திறந்தாலே பொய் தான் பேசுது இந்த அச்சுமா. எல்லாம் நான் கொடுக்கிற இடம் தான். இனி அவகிட்ட பேசவே கூடாது’ என்று புலம்பியவனாய் இருந்தான்.

 

அன்று இரவு அலுவல்களை முடித்து விட்டு தனது வீட்டிற்குச் சென்ற அர்ஜூன், பூட்டிய வீட்டின் வாசலில் நின்றிருந்த அர்ச்சனாவைப் பார்த்து அதிர்ந்து நின்றான்.

 

முதல் நொடி அதிர்ந்தவன் பின்பு அலட்சியத்துடன் முகத்தைத் திருப்பியவனாய் அவளைக் கண்டு கொள்ளாது வீட்டின் கதவைத் திறந்தான்.

 

அவனின் முகப் பாவனையில், ‘அய்யோ இன்னும் கோபமா தான் இருக்காரா! இவரை எப்படி சமாதானம் செய்றது?’ என்று சிந்தித்தவாறு நின்றிருந்தாள் அர்ச்சனா.

 

அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் அவனின் பின்னேயே இவளும் நுழைய, “உன்னை நான் ஒன்னும் உள்ளே கூப்பிடலை! இப்ப என்ன பொய் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு வந்து நிக்கிற” காட்டமாய் வந்தன அவனின் வார்த்தைகள்.

 

“அஜூப்பா ப்ளீஸ்! உங்க மனசை உங்களுக்குப் புரிய வைக்க தான் அப்படிச் சொன்னேனே தவிர உங்களை ஏமாத்துறதுக்கு இல்ல” என்னைப் புரிந்து கொள்ளேன் என்னும் பாவனையில் அவள் கூற,

 

“சரி புரிஞ்சிக்கிட்டேன். இது வரைக்கும் நீ எனக்குச் செஞ்சதுக்குலாம் நன்றி. கிளம்பு” என்றான்.

 

“என்ன நீங்க? மொத தடவையா வீட்டுக்கு வந்தவளை வா-னு கூப்பிடாம போ-னு துரத்தி விடுறீங்க. இது தான் தமிழர் மரபா?” என்று கேட்டாள்‌.

 

“கிளம்பு அர்ச்சனா. என் கோவத்தைக் கிளறாத” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூறவும்,

 

அவனின் கோப முகம் கண்டு லேசாய் உள்ளுக்குள் உதற, “சரி இப்ப போறேன். ஆனா திரும்ப வருவேன்” என்றவளாய் வெளியே சென்றாள்.

 

அவள் வெளியே சென்ற மறுநொடி கதவைச் சாற்றியவன், “ஊஃப்” என்றவனாய் பெருமூச்சு விட்டான்.

 

அடுத்து அவன் குளித்து முடித்து துணிகளைத் துவைப்பானில் போட்டு விட்டு அமர்ந்திருக்க, அவன் அறையின் அழைப்பொலி ஒலித்தது.

 

நேரம் இரவு ஒன்பதை நெருங்கியிருக்க, “இந்த நேரத்துல யாரு?” என்று யோசித்தவாறே கதவைத் திறந்தான்.

 

“நீ இன்னும் போகலையா?” வாசலில் நின்றிருந்த அர்ச்சனாவைப் பார்த்துத் திகைத்துப்போய் கேட்டான் அர்ஜூன்.

 

“இல்ல அஜூப்பா! ப்ளீஸ் என்கிட்ட கோவிச்சிக்காதீங்களேன். எனக்கு மனசு கஷ்டமா இருக்கு. நீங்க என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லி கொஞ்சம் நார்மலா பேசிட்டீங்கனா நிம்மதி ஆகிடும்” கண்களைச் சுருக்கிக் கெஞ்சியவளாய் கொஞ்சல் குரலில் கூறினாள் அர்ச்சனா.

 

அவளின் கெஞ்சலில் அவன் மனம் இளக, “சரி மன்னிச்சிட்டேன். கிளம்பு” என்று கதவை அடைக்கச் சென்றான்.

 

“இந்த டைம்ல ஒரு பொண்ணு எப்படி தனியா போவானு அக்கறையே இல்லையா உங்களுக்கு” என்று அவள் கேட்கவும் அடைக்கப் போன கதவைத் திறந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “எப்படி வந்தியோ அப்படியே போய்டு” என்று கதவை அடைத்தான்.

 

சட்டென கண்களில் கண்ணீர் பெருகி விட்டது அவளுக்கு.

 

நெஞ்சம் வலிக்க விசும்பியவளாய் அப்படியே நின்றாள்.

 

கதவைச் சாற்றி விட்டானே தவிர அவளை வருத்தும்படி பேசியதால் அவனின் மனமும் நிலைக் கொள்ளாமல் தவிக்க மீண்டுமாய் கதவைத் திறந்தான்.

 

அழுகையின் விசும்பலுடன் கண்களைத் துடைத்தவாறு நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவனின் நெஞ்சம் உருகிப் போக, அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று யோசித்தவன், “சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

 

இல்லை என அவள் தலை அசைக்கவும், “இரு வரேன்” என்றவனாய் உள்ளே சென்றவன் உடை மாற்றி விட்டு கையில் அவனது வண்டிச் சாவியையும் கதவைப் பூட்டுவதற்கான பூட்டுச் சாவியையும் எடுத்து வந்தான்.

 

வீட்டைப் பூட்டி விட்டு அவள் புறமாகத் திரும்பியவன், வா என்றவனாய் முன்னே சென்றான்.

 

அவன் தெருவில் இறங்கி சாலையில் நடக்கவும், ஏன் எதற்கென்று கேளாமல் அவனுடனே நடந்தாள்.

 

எதுவும் பேசாமல் அமைதியாகத் தன்னுடன் அழுதுக் கொண்டே நடந்து வந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் பாரமாகிப் போக, “ஏன் இவ்ளோ பிடிவாதம் அச்சுமா?” வேதனையுடன் கேட்டான்.

 

அவள் அதற்கும் பதிலிறுக்காது அமைதியாகவே நடந்தாள்.

 

சில நொடி நடைக்குப் பிறகு அருகிலிருந்த சிறிய உணவகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.

 

அங்கு ஓரமாய் இருந்த இருக்கையில் அவன் அமரவும், எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.

 

“இங்கே பொடி இட்லி நல்லா இருக்கும். ஆனா உனக்கு இட்லி பிடிக்காதுல” என்று கூறியவன்,

 

“இங்கே பன்னீர் மசாலா தோசை நல்லாயிருக்கும். அதை ஆர்டர் செய்யவா?” என்று கேட்டான்.

 

அழுகை முற்றாய் நின்றிருக்க மூக்கை உறிஞ்சியவளாய் ம்ம் என்று தலை அசைத்தாள்.

 

பணியாளை அழைத்து ஆர்டர் கொடுத்தவன் எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான்.

 

இருக்கையின் அருகிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இன்னும் ஈரம் மிச்சமிருந்தது. தன் மீது அவள் வருத்தமாகவும் கோபமாகவும் இருப்பது புரிந்தது அவனுக்கு.

 

அவளையே விழியகலாது பார்த்திருந்தான் அர்ஜூன்.

 

அன்று அவளது வீட்டிற்குச் சென்றவனுக்கு அவளின் வீடே அவளது வாழ்வுநிலையை உணர்த்தியிருந்தது.

 

அவனது வாழ்வுநிலை நடுத்தரமானது. அவளுடையதோ உயர்த்தரமானது.

 

இப்பொழுது தான் உயர்த்தர வர்க்கத்தினர் அளவுக்கு தன்னுடைய வாழ்வுநிலையை உயர்த்த உழைத்துக் கொண்டிருக்கிறான் அர்ஜூன்.

 

இந்நிலையில் எப்படி அவளுக்கு தன் மீது இப்படி பித்து உண்டானது என்று புரியவில்லை அவனுக்கு.

 

‘அவளோட ஸ்டேடஸ் என்ன? இப்படி வந்து என்கிட்ட ஏச்சு பேச்சு வாங்கனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா?’ என்று நினைத்தவனாய் அவளைப் பார்த்திருந்தவன் பெருமூச்சுடன்,

 

“அச்சுமா” என்று அழைத்தான்.

 

கலங்கிய கண்களுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“சாரிடா அச்சுமா” என்றான்.

 

அவனின் கண்களில் வழிந்த யாசிப்பைப் பார்த்தவள், “பரவாயில்ல விடுங்க அஜூப்பா” என்றவளாய் மீண்டுமாய் தலையை ஜன்னலை நோக்கித் திருப்பிக் கொண்டாள்.

 

எப்பொழுதுமே கலகலவெனத் தன்னிடம் பேசிக் கொண்டே இருப்பவளின் இந்த அமைதி அவனை வருந்தச் செய்ய, “அச்சுமா” என்று மீண்டுமாய் அழைத்தான்.

 

என்ன என்பது போல் அவனைத் திரும்பி அவள் பார்த்த நேரம் மேஜையில் தோசையை வைத்து விட்டுச் சென்றார் பணியாளர்.

 

தோசையைப் பார்த்த அர்ஜூன், “உனக்கு தேங்காய் சட்னி பிடிக்காதுல! அதை நான் சாப்பிடுறேன்” என்றான்.

 

அவளைத் தன்னுடன் இயல்பாய் பேச வைக்க இவ்வாறு கூறியவனாய் தோசையைப் பிட்டு தேங்காய் சட்னியுடன் தோய்த்து கையில் எடுத்த நொடி, ஆஆஆ என வாயைத் திறந்தாள் அர்ச்சனா.

 

என்ன என்பது போல் அவளை அவன் பார்க்க, “எனக்கு ஊட்டுங்க” என்றவளாய் மீண்டுமாய் வாயைத் திறந்தாள்.

 

“உனக்குத் தான் தேங்காய் சட்னி பிடிக்காதே” குழப்பத்துடன் அவன் கேட்க,

 

“ம்ப்ச் பரவாயில்ல ஊட்டுங்க அஜூப்பா” என்று அவள் ஆசையுடன் வாயைத் திறக்கவும், அந்தத் தோசையை தனது வாய்க்குள் போட்டவன் அடுத்து தோசையைப் பிட்டு காரச் சட்னியில் தோய்த்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

அவனின் செயலில் அவள் மனத்தில் இருந்த கலக்கம், கோபம், வருத்தமெல்லாம் தூரமாய் தொலைந்து போக,

 

“மை ஸ்வீட் அஜூப்பா! பாருங்க எனக்குப் பிடிக்காததை நானே கேட்டாலும் கொடுக்காம எனக்குப் பிடிச்சதை எடுத்துக் கொடுக்கிறீங்க பாருங்க. அதான் உங்ககிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது அஜூப்பா” என்று நெகிழ்ந்த குரலில் உரைத்தாள்.

 

இப்பொழுது அவள் முகம் பிரகாசமாகி இருக்க, “ஹப்பாடா இப்ப தான் மூஞ்சுல பல்ப் எரியுது! நீ சைலண்ட்டா இருந்தா என்னமோ என் மனசே வெறுமையாகிடுது அச்சுமா” என்றவனாய் அவன் தொடர்ந்து ஊட்ட,

 

சாப்பிட்டவாறே, “எனக்கும் தான். மூனு மாசம் உங்ககிட்ட பேசாம எவ்ளோ கஷ்டமாயிருந்துச்சு தெரியுமா” என்றாள்.

 

“நீ தானே என்னை பிளாக் செஞ்சிட்ட” என்று அவன் புகார் வாசிக்க, “ஆமா நான் பிளாக் செஞ்சதும் என்னைக் கட்டிக்கிறேன்னு ஓடோடி வந்துட்டீங்க பாருங்க” என்று உதட்டைச் சுழித்தாள்.

 

“இன்னிக்கு நாள் எப்படிப் போச்சு அச்சுமா” பேச்சை மாற்றினான் அர்ஜூன்.

 

‘கல்யாணத்தைப் பத்தி பேசினாலே பதில் வராதே’ என்று மனத்திற்குள் நொடித்துக் கொண்டவள் அவன் ஊட்டுவதை உண்டவாறே, “இன்னிக்கு காலைலயே கச்சேரிக்குக் கிளம்பிட்டேன் அஜூப்பா. ஈவ்னிங் கச்சேரி முடிஞ்சதும் சாப்பிடாம உங்களைப் பார்க்க வந்துட்டேன். செம்ம பசில தான் இருந்தேன்” என்றாள்.

 

அவள் அவ்வாறு உரைத்ததும் பணியாளை அழைத்தவன் இன்னொரு தோசை ஆர்டர் கொடுத்தான்.

 

“இன்னொன்னு எதுக்கு? இதுவே எனக்குப் போதும்ப்பா” வயிற்றில் கை வைத்தவாறு அவள் கூற,

 

“அதெல்லாம் உனக்கிருக்க பசில நீ சாப்பிட்டிருவ” என்றவனாய் அவளுக்கு ஊட்டி விட்டான்.

 

இரண்டாம் தோசையை கால் வாசி சாப்பிட்டவள் போதும் என்று விட, மீதியை அவனே உண்டான்.

 

சாப்பிட்டு விட்டு கிளம்பி வெளியே வந்தவர்களின் வயிறும் மனமும் நிறைந்திருந்தது.

 

“சரி வா நான் உன்னை வீட்டுல விட்டுட்டு வந்துடுறேன்” என்று அவனது வீட்டருகே நிறுத்தியிருந்த வண்டியை நோக்கிச் சென்றான்.

 

“வாவ் உங்க வண்டில கூட்டிட்டுப் போகப் போறீங்களா?” மகிழ்ச்சியுடன் கண்கள் மின்னக் கேட்டாள்.

 

“ஆமா அப்புறம் இப்படித் தான் நடுராத்திரி பொண்ணைத் தனியா அனுப்புவாங்களா? இது தான் தமிழர் மரபானு அதுக்கும் சண்டைப் போட மாட்ட நீ?” என்று சிரிப்புடன் அவன் கேட்க, அவளும் சிரித்தாள்.

 

அவனின் தோளைப் பற்றியவளாய் பின்னே அமர்ந்தவள் பேசிக் கொண்டே இருக்க, வண்டியை இயக்கினான் அவன்.

 

இருவரின் மனங்களும் மற்றவரின் அண்மையில் பூரித்து மகிழ்ந்திருக்க, இப்பயணத்தை வெகுவாய் ரசித்தனர் இருவரும்.

 

வண்டி சாலையில் செல்லவும், “இன்னிக்கு உங்களுக்கு டே எப்படிப் போச்சுப்பா” எனக் கேட்டாள்.

 

அன்றாடம் அவளிடம் பேசுவது போல் அன்றைய நாளைக் குறித்துப் பேசிக் கொண்டே வந்தவன் அவளின் இல்லத்தில் இறக்கி விட்டான்.

 

“இப்படியே இன்னும் கொஞ்சம் நேரம் உங்கக் கூட போய்ட்டே இருக்கனும்னு ஆசையா தான் இருக்கு” என்றவளாய் வண்டியிலிருந்து இறங்கியவள் அவன் கண்களில் தெரிந்த மகிழ்வைக் கண்டு,

 

“என் கூட இருக்கும் போதெல்லாம் உங்க கண்ணு ஜொலிக்குது அஜூப்பா. நீங்க எப்பவுமே இப்படி ஹேப்பியா இருக்கனும் அஜூப்பா” நெகிழ்ச்சியுடன் உரைத்தாள்.

 

“நீயும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அச்சுமா” என்றவன் சொன்னதும்,

 

“அதுக்கு நீங்க எப்பவும் என்கூட இருக்கனும் அஜூப்பா” என்று கண் சிமிட்டிக் கூறியவள்,

 

“ஓகே சீ யூ டுமாரு! பை! குட் நைட்” என்றவாறு கையைக் காட்டி விட்டு வீட்டின் வாயிலுக்குள் சென்றாள்.

 

அன்றிரவு நெஞ்சங்களின் நிறைவில் இருவரும் நிம்மதியான உறக்கத்தைத் தழுவியிருந்தனர்.

 

அடுத்து வந்த நாள்களில் அன்றாடம் ஒரு முறையேனும் அவனை நேரில் சந்தித்து அவனுடன் உண்பதை வழக்கமாக்கிக் கொண்டவள் அவள் மீது அவனுக்கு இருக்கும் காதலை அவனுக்கே உணர்த்தியிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 2 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்