Loading

“ஆர் யூ ஓகே அஜூ” என்று அர்ச்சனா கேட்கவும், உள்ளுக்குள் இதமாய் உணர்ந்தான் அர்ஜூன்.

 

“ஹ்ம்ம்” என்று மட்டும் உரைத்து அமைதியாக இருந்தான்‌.

 

“நான் ஒன்னு கேட்டா சொல்லுவீங்களா?” என்று அர்ச்சனா கேட்கவும்,

 

“அது நீங்க கேட்குற விஷயத்தைப் பொறுத்து இருக்கு அச்சுமா மேடம்” என்று சிரித்தான் அர்ஜூன்.

 

அவனின் சிரிப்பொலியைச் சிலிர்ப்புடன் கேட்டவளாய், “ஏன் நான் அன்னிக்கு மயில் போல பொண்ணு ஒன்னு பாடும் போது உங்க முகம் சோகமா ஆச்சு. ஆக்சுவலி அன்னிக்கு நான் உங்களை இம்ப்ரஸ் செய்யத் தான் அந்தப் பாட்டு பாடினேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது. முழு பாட்டையும் என் குரல்ல கேட்டா நீங்க எப்படி ரியாக்ட் செய்வீங்கனு பார்க்கனும்னு ஆசை ஆசையா அந்தப் பாட்டைப் பாடினேன். ஆனா நீங்க..” என்று நிறுத்தியவள்,

 

“இந்தப் பாட்டு உங்களோட பாஸ்ட் எதையும் நினைவுப்படுத்திருச்சா?” இத்தனை நாள்களாக மனத்தை குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டிருந்தாள் அர்ச்சனா.

 

பெருமூச்செறிந்தவனாய் தொண்டையைச் செருமியவன், “நான் டிவோர்ஸ் செஞ்ச என் மனைவியோட பேரு இளமயில்” இறுகிப் போன குரலில் கூறினான்.

 

“ஓ சாரி” ஸ்ருதி இறங்கிய குரலில் கூறியவள்,

 

“ஆனா இன்னிக்கு அந்தப் பாட்டை நான் பாடும் போது உங்க முகத்துல எந்தச் சோகமோ கவலையோ தெரியலையே. உங்க கண்ணு கூட இன்னிக்கு மின்னுச்சு தெரியுமா! ஐ வாஸ் சோ ஹேப்பி” என்றாள்.

 

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது யோசித்தவன், “இன்னிக்கு உங்கக் குரலைக் கேட்டதும் மயிலு ஞாபகம்லாம் வரலைங்க” என்று உண்மையை உரைத்திருந்தான்.

 

அவனின் பதிலில் அர்ச்சனாவின் உள்ளம் துள்ளிக் குதிக்க, ‘அவரோட முன்னாள் மனைவியையே மறக்க வைக்கிற அளவுக்கு நீ அவர் மனசுல இருக்க அச்சு! அப்படியே மனுஷனை பேசி தாஜா பண்ணி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிடு’ என்று எடுத்துக் கொடுத்தது அவளின் மூளை.

 

“கேட்கவே சந்தோஷமா இருக்கு அஜூ” என்று சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,

 

“நாம ஃப்ரண்ட்ஸ்ஸா பழகலாமா?” எனக் கேட்டாள்.

 

“என்ன?” திகைத்தவனாய் அவன் கேட்க,

 

“நான் பிரபோஸ் செஞ்சதெல்லாம் மறந்துடுங்க அஜூ. அன்னிக்கு நான் சொன்னதை தான் இன்னிக்கும் சொல்றேன். உங்க கண்ணுல எப்பவும் நான் வலியையோ வெறுமையையோ பார்க்கக் கூடாதுனு நினைக்கிறேன். அதுக்கு நான் உங்க மனைவியா தான் இருக்கனும்னு இல்லயே. ஃப்ரண்ட்டா கூட இருக்கலாம் தானே” என்று கேட்டாள்.

 

இங்கே இவனின் இதழ்கள் பெரியதாய் முறுவலித்திருந்தன.

 

அவன் அமைதியாகவே இருக்க, “யெஸ் ஆர் நோ! ஏதாவது ஒன்னு சொல்லுங்க. இந்த அமைதிலாம் எனக்கு செட்டே ஆகாது அஜூ” என்றாள்.

 

“ஹ்ம்ம் யெஸ். பேசலாம் பழகலாம் நண்பர்களாய்” என்றான்.

 

அவளுடனான இந்தப் பேச்சு நீளாதா என்று ஏக்கம் கொண்ட மனத்தின் உந்துதலில் இவ்வாறு கூறியிருந்தான் அர்ஜூன்.

 

‘யாஹூ’ வாய்க்குள் சத்தமின்றிக் கத்தியவளாய் கையை மடக்கி வெற்றிக் குறியைச் செய்தவள், “தேங்க்ஸ் ஃபார் அக்சப்டிங் மை ரெக்வஸ்ட்” என்றாள்.

 

“சரி அஜூ. தூங்குங்க. மீதியை நாளைக்குப் பேசிக்கலாம். தினமும் இரவு ஒன்பதரை மணிக்கு உங்க அச்சுமாக்கிட்ட இருந்து கால் வரும். ரெடியா இருந்துக்கோங்க! குட் நைட்” என்றவளாய் இணைப்பைத் துண்டித்தாள் அர்ச்சனா.

 

முகம் விகசிக்க கைப்பேசியைப் பார்த்தவனாய், “கிரேசி கேர்ள்” என்றவாறு இதழ்விரியச் சிரித்திருந்தான் அர்ஜூன்.

 

இறகில்லாது பறந்து கொண்டிருந்தன இருவரின் மனங்களும்.

 

இன்று இரவு அந்நினைவுகளுடன் படுத்திருந்த அர்ஜூன், ‘அன்னிக்கு எல்லாத்தையும் எவ்ளோ ஈசியா எடுத்துக்கிட்டா இவ! இன்னிக்கு என்னாச்சு? ஏன் இப்பலாம் இப்படிச் சண்டைப் போடுறா?’ என்று மனத்திற்குள் புலம்பியவனாய் உறங்கிப் போனான் அர்ஜூன்.

 

மறுநாள் காலை அர்ஜூன் அவனது கேளிக்கை விடுதியின் அறையில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது அவனது கைப்பேசி அலறியது.

 

கைப்பேசித் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்த அர்ஜூன், அதே அறையில் தனது இருக்கையில் அமர்ந்து அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவை  நிமிர்ந்து பார்த்தான்.

 

இன்னும் அவள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. கேட்பதற்கு மட்டுமே பதலளித்து ஒதுக்கத்துடனே இருக்கிறாள்.

 

மீண்டுமாய் அவனது கைப்பேசி அலறவும், ‘ஏற்கனவே என் மேல கோபத்துல இருக்கா. இப்ப டாக்டர்கிட்ட பேசினா என்ன நினைப்பாளோ’ என்று சிந்தித்தவாறு இளங்குமரனிடம் இருந்து வந்திருந்த அந்த அழைப்பை இம்முறையும் ஏற்காது விட்டான்.

 

மூன்றாம் முறையாக அலைபேசி இசைக்கவும், இதற்கு மேல் தவிர்ப்பது முறையாகாது என்று எண்ணியவனாய் கைப்பேசியை இயக்கிக் காதில் வைத்தான்.

 

“ஹாய் அர்ஜூன். சாரி உங்க பிசி டைம்ல உங்களை டிஸ்டர்ப் செஞ்சிட்டேனா?” என்று மன்னிப்புடன் ஆரம்பித்தான் இளங்குமரன்.

 

“ஹாய் டாக்டர்! இல்ல பரவாயில்ல. கொஞ்சம் வேலையா இருந்தேன்” என்று இவன் பேசும் போதே,

 

டாக்டர் என்ற அவனது விளிப்பில் புருவம் நெரித்தவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா.

 

“உங்க பையனுக்கு இப்ப கைக்காயம் எப்படி இருக்கு? சரியாகிடுச்சா?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“ஹான் சரியாகிடுச்சு டாக்டர்” என்றான் அர்ஜூன்.

 

இருவரும் பரஸ்பரம் அவரவர் தொழிலைப் பற்றி சிறிது நேரம் பேசிய பிறகு,

 

“இந்த வார சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா அர்ஜூன். உங்க ஃபேமிலியை டின்னருக்கு இன்வைட் செய்யலாம்னு தான் கேட்குறேன்” என்றான் இளங்குமரன்.

 

“இல்ல டாக்டர். எதுக்கு ஃபார்மாலிட்டிலாம்? உங்க வீட்டுல ஃபங்ஷன் ஏதாவது நடக்கும் போது நாங்க வர்றோம். எங்களுக்குனு தனியா எதுவும் வேண்டாமே” என்றான் அர்ஜூன்.

 

“என்ன அர்ஜூன் இப்படிச் சொல்றீங்க. அப்ப எங்களை உங்க ஃபேமிலி ஃப்ரண்ட்டா நினைக்கலையா நீங்க?” வருத்தக் குரலில் இளங்குமரன் கேட்கவும்,

 

“அய்யோ அப்படி இல்லை டாக்டர்” என்றான்.

 

“நீங்க கண்டிப்பா வர்றீங்க. உங்க மனைவி உங்க இரண்டு பிள்ளைங்க எல்லாரையும் கூட்டிட்டு வாங்க. உங்களுக்காக நாங்க காத்துக்கிட்டு இருப்போம்” என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான் இளங்குமரன்.

 

பெருமூச்சுடன் கைப்பேசியை வைத்த அர்ஜூன், அர்ச்சனாவைப் பார்த்தான். அவளின் பார்வை அவனிடம் தான் இருந்தது.

 

அவளது பார்வையின் பொருளை உணர்ந்தவனாய், “டாக்டர் இளங்குமரன் தான் போன் செஞ்சிருந்தாரு. வர்ற சனிக்கிழமை நம்ம ஃபேமிலியை அவரோட வீட்டுல நடக்குற டின்னர் பார்ட்டிக்கு இன்வைட் செஞ்சிருக்காரு” என்றான்.

 

“பரவாயில்ல என் பார்வையோட அர்த்தம்லாம் உங்களுக்குப்‌ புரியுதா?” நக்கலாய் உரைத்தவளாய் குனிந்து தனது வேலையை அவள் கவனிக்க,

 

அவளின் நக்கலில் கோபத்துடன் விருட்டென தனது இருக்கையை விட்டு எழுந்த அர்ஜூன், அவளருகே சென்று அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் இருபுறமும் தனது கையை வைத்து நாற்காலியைப் பிடித்தவனாய் அவளின் கண்களை உற்று நோக்கியவன்,

 

“உனக்குத் தான்டி என் பார்வையோட அர்த்தம்லாம் மறந்து போச்சு. நான் உன்னை விரும்புற அதே அர்ஜூனா தான் இருக்கேன். ஆனா நீ தான் மாறிட்ட, நீ ரசிச்சு ரசிச்சு பார்த்த என் பார்வைல தெரியுற வலியையும் வேதனையையும் கூட புரிய முடியாத அளவுக்கு நீ தான்டி மாறிட்ட” என்று கத்தியவனாய் அங்கிருந்து சென்றிருந்தான் அர்ஜூன்.

 

கண்களில் துளிர்த்த நீருடன் கோபத்துடன் செல்லும் அவன் முதுகைப் பார்த்திருந்தவளோ, ‘எனக்கா உங்கப் பார்வையோட அர்த்தம் புரியாது அஜூ? என்னோட வலியையும் வேதனையையும் புரிஞ்சிக்காத உங்க வேதனையை மட்டும் நான் ஏன் புரிஞ்சி நடந்துக்கனும்னு தான் அமைதியா இருக்கேன்’ என்று மனத்தோடு நினைத்தவளாய் கண்ணீர் சிந்தினாள்.

 

****

 

சனிக்கிழமை மாலை வேளையில் குடும்பச் சகிதமாய் இளங்குமரன் வீட்டை நோக்கிப் பயணித்திருந்தனர் அர்ஜூன் குடும்பத்தினர்.

 

முன்னிருக்கையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு இன்னும் அவனுடன் ஊடல் கொண்டவளாய் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

 

பின்னிருக்கையில் பிள்ளைகள் இருவரும் ஆரவாரமாய் பேசியவர்களாய் அமர்ந்திருந்தனர்.

 

அன்று அர்ஜூன் அவளுக்குத் தான் தனது பார்வையின் பொருள் புரியவில்லை என்று கோபத்துடன் உரைத்துச் சென்றது பெருத்த மன வேதனையை அளித்திருந்தது அவளுக்கு.

 

எந்தக் கண்களைப் பார்த்து ரசித்து காதலித்து மணந்தாளோ அந்தக் கண்களின் உணர்வுகளை எப்படி அவளால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்.

 

பொருள் புரிந்தும், ‘ஏன் எப்பவுமே நான் தான் அவரைப் புரிஞ்சிக்கனுமா? அவர் என்னைப் புரிஞ்சிக்க முயற்சி செய்ய மாட்டாரா?’ என்ற கோபத்தில் அவனைக் கண்டு கொள்ளாது விட்டிருந்தாள் அர்ச்சனா.

 

ஆனால் அதையும் கூட அவன் உணர்ந்து கொள்ளாது அவள் மீதே அந்தப் பழியையும் சுமத்திக் கோபம் கொண்டதால் மேலும் அதிகமாக அவன் மீது கோபம் உண்டானது அவளுக்கு.

 

ஆயினும் பார்வையில் கெஞ்சலுடன், “டாக்டர் கூப்பிட்டு போகாம விட்டா நல்லா இருக்காதுடா கண்ணம்மா”

என்று அவன் கேட்கவும் மறுக்க முடியாது ஒத்துக் கொண்டாள் அர்ச்சனா.

 

கண்ணம்மா என்ற காதலான அழைப்புடன் அவன் ஏது கேட்டாலும் மறுக்க முடியாது அவளுக்கு.

 

அர்ஜூன் தாய் சித்ராவுக்கு அவர்கள் இளமயில் வீட்டிற்குச் செல்வதில் உடன்பாடு இல்லை என்பதால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் வழியனுப்பினார். அவனின் தந்தை செந்தமிழன் சித்ரா போல் அல்லாது இளமயிலின் தற்போதைய குடும்பத்தினரைப் பற்றியும் அவளின் நல்வாழ்வுப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொண்டு மகிழ்வுடனேயே இவர்களை வழியனுப்பி வைத்தார்.

 

மயில் குமரன் இல்லம் என்ற பெயருடன் இல்லத்தின் முன்பக்கச் சுவற்றில் பெரியதாக வேலுடனும் மயிலுடனும் அழகன் முருகனின் படம் பொறிக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் வாயிலைக் கடந்து தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்தினான் அர்ஜூன்.

 

மகிழுந்தின் சத்தத்தில் இவர்கள் வந்ததை அறிந்து தரிப்பிடம் சென்று அனைவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் இளங்குமரன்.

 

சிவகணேசனைக் கையில் தூக்கிய இளங்குமரன் அவனது கையை ஆராய்ந்தவாறு அவனிடம் பேசியவனாய் உள்ளே நுழைந்தான்.

 

முகப்பறையில் அமர்ந்திருந்த வள்ளிமயிலும் முத்தமிழ்க்குமரனும் தங்களது பள்ளி வகுப்புத் தோழன் தங்களது வீட்டிற்கு வந்திருப்பதைப் பார்த்து மகிழ்வுடன் ஆர்ப்பரித்தனர்.

 

இளங்குமரன் சிவகணேசனை இறக்கி விட்டதும் அவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றனர் இருவரும்.

 

நிவேதா தாய் தந்தையருடன் அங்கே சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

இளங்குமரனின் தாய் அம்பிகா தந்தை தியாகராஜன் ஆகிய இருவரும் அர்ஜூன் குடும்பத்தினரை வரவேற்று நலம் விசாரித்து விட்டு முகப்பறை சோஃபாவில் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

கையில் பழச்சாறு கோப்பைகள் நிறைந்த தட்டுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்த இளமயில் அனைவரையும் பார்த்து இன்முகத்துடன் புன்னகைத்து வரவேற்றாள்.

 

அக்கணம் இளமயிலைப் பார்த்த நிவேதாவின் முகம் வெளிறிப் போனது.

 

நிவேதாவைப் பார்த்ததும் திகைத்து விழித்த இளமயிலின் புருவங்கள் இடுங்க, ‘இவ அர்ஜூனோட பொண்ணா?’ மனத்தோடு நினைத்தவளாய் அவர்களினருகே சென்று பழச்சாற்றைப் பரிமாறினாள் இளமயில்.

 

அர்ஜூன் மகிழ்வுடன் பழச்சாற்றை எடுத்துக் கொள்ள, அர்ச்சனா ஒட்ட வைத்த புன்னகையுடன் இளமயிலைப் பார்த்தவளாய் பழச்சாற்றை எடுத்துக் கொண்டாள்.

 

நிவேதாவைப் பார்த்துப் புன்னகைத்தவளாய் இளமயில் அவளிடம் பழச்சாற்றைக் கொடுக்க, அவளின் முகத்தை ஏறிட்டும் பார்க்காது படபடவெனத் துடித்த இதயத்துடன் பழச்சாற்றை எடுத்துக் கொண்டாள் நிவேதா.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்