

மறுநாள் காலை ஆறு மணியளவில் அர்ஜூன் கண் விழித்த போது அர்ச்சனா அருகில் இல்லை.
வழமையாய் இந்நேரத்தில் அவள் செய்யும் வேலையை அறிந்தவன் ஆதலால் மீண்டுமாய் உறக்கத்திற்குள் சென்ற அர்ஜூன் அடுத்தச் சில நிமிடங்களில் விழித்து எழுந்தவனாய் காலை கடன்களை முடித்துக் கிளம்பியவன், அவர்களின் இல்லத்தில் பின்னாலிருந்த தோட்டத்திற்குச் சென்று நடைப் பயிற்சியும் யோகாவும் செய்யத் தொடங்கினான்.
அந்நேரத்தில் பிள்ளைகளின் அறையில் அமர்ந்து கொண்டு அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டுச் சாமியறையில் விளக்கேற்றி வழிபடுபவள் அதன் பிறகு பால் காய்த்து விட்டு மகனையும் மகளையும் எழுப்பிக் காலை கடன்களை முடிக்கச் செய்து அவர்கள் குடிக்கப் பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ் என ஏதேனும் ஒன்றைக் கலந்து கொடுப்பாள். அதன் பிறகு அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அமர்ந்திடுவாள்.
இவள் சொல்லிக் கொடுக்காவிடினும் பிள்ளைகள் அந்நேரத்திற்கு எழுந்து படிப்பதற்கு இவள் அவர்களின் அருகே இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவரும் ஏழு மணிக்கு மேல் தான் எழுந்திடுவர்.
முந்தைய நாளே வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்து விட்டாலும் காலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை இருவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென அன்றாடம் அவர்களை எழுப்பிப் படிக்க வைக்கும் வேலையைச் செய்திருந்தாள் அர்ச்சனா.
காலை ஆறிலிருந்து ஏழு மணி வரை பாடங்களைப் படித்து விட்டு மகள் குளித்து விட்டு வந்ததும் மகனைக் குளிக்க அனுப்பிடுவாள். இன்று சிவகணேசன் உள்ளங்கையில் இருந்த காயம் இன்னும் முழுதாய் ஆறாமல் இருந்ததால், தானே அவனைக் குளிக்க வைத்திருந்தாள்.
நிவேதா அவளே தயாராகிக் கிளம்பி விடுவாள். ஆனால் இந்தச் சிவகணேசனை எழுப்பிக் கிளப்புவதற்குள் இடுப்பு வலி எடுத்து விடும் அவளுக்கு.
இதற்குள் இடைப்பட்ட நேரத்தில் கீழே சமையலறையில் வேலையாள் செய்யும் சமையலை மேற்பார்வை பார்த்து விட்டு மாமியார் மாமனாருக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பாள். அவர்கள் இருவருக்கும் கஞ்சி போன்று ஏதேனும் தான் காய்த்துக் கொடுக்க வேண்டும். வேலையாள் சமைப்பது அவர்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதால் இவள் தான் செய்து கொடுப்பாள்.
அர்ஜூன் அவனாகக் கிளம்பி வரும் வரையில் அவனைப் பற்றிய எண்ணமே இருக்காது அவளுக்கு.
அவளுக்குக் காலையில் வேலை அதிகமாக இருக்கும் என்று தெரியுமென்பதால் இவனும் அவளை எதற்காகவும் கூப்பிட மாட்டான்.
அர்ஜூன் குளித்து முடித்து ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து தன்னுடைய சால்ட் அண்ட் பெப்பர் தோன்றத்தை இன்று கருப்பு வண்ணமாய் மாற்றி வந்திருந்தவனோ பத்து வயது குறைந்தவனாய் இளைஞனாய் காட்சி கொடுத்தான்.
உணவு மேஜையில் அமர்ந்து மகளுக்கும் மகனுக்கும் உணவைப் பரிமாறியவாறு தானும் உண்டு கொண்டிருந்தவளின் கண்கள் மிடுக்கான தோற்றத்தில் வந்து நின்ற கணவன் மீது ரசனையாய்த் தழுவின.
தன்னருகில் வந்து அமர்ந்த கணவனிடம் மெல்லமாய், “அழகா இருக்கீங்க அஜூ” என்றாள்.
புன்சிரிப்புடன் அவளின் கன்னத்தைக் கிள்ளியவனாய், “தேங்க்ஸ் அச்சுமா” என்றவனுக்குச் சிரித்த முகத்துடன் அவள் பரிமாற, “அம்மா அப்பா சாப்பிட்டாங்களா?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம் எல்லாரும் சாப்பிட்டாச்சு. மாமாவும் அத்தையும் வழக்கம் போலக் காலைல கோயிலுக்குப் போறதா சொல்லிட்டுப் போய்ட்டாங்க” என்றவளை நோக்கி, “சரி நான் சாப்பிட்டுக்கிறேன். நீ போய்க் கிளம்பு. சிவாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபிஸ்க்குப் போக சரியா இருக்கும்” என்றவன் சொன்னதும்,
உண்டு முடித்து எழுந்தவளாய் படுக்கையறைக்குச் சென்றவள் அப்படியே ஆசுவாசமாக அமர்ந்து விட்டாள்.
அவள் உடலின் அளவுக்கு மீறிய எடையினால் இடுப்பும் பாதமும் வலியெடுத்தன. ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுத்தவளாய் கைப்பேசியைப் பார்த்தவாறு அமர்ந்து விட்டாள் அர்ச்சனா.
கீழிருந்து அர்ஜூன், “அச்சுமா டைம் ஆகுது! சீக்கிரம் கிளம்பி வா” என்று அழைக்கவும் கடுப்பாகிப் போனது இவளுக்கு.
‘ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் எடுக்க விடுறாரா?’ என்று புலம்பியவளாய் கிளம்பத் தொடங்கினாள்.
உடுப்பை மாற்றி விட்டு தலையை வாரியவளாய் முகத்திற்கு அலங்காரம் செய்யும் போது அறைக்குள் வந்த அர்ஜூன், “டைம் ஆகுது அச்சுமா” என்றவனைத் தீப்பார்வைப் பார்த்தவள்,
“உங்களுக்கு என்ன? ஹாயா சொகுசா கிளம்பிடுறீங்க. உங்களுக்கு உங்களைக் கவனிச்சிக்கிட்டா போதும். ஆனா எனக்கு அப்படியா? எல்லா வேலையும் பார்த்துட்டு என்னை நானே கவனிச்சிக்கிட்டு கிளம்பனும். ஒரு அஞ்சு நிமிஷம் ரிலாக்ஸ்ஸா உட்கார முடியுதா?” எனக் கடுப்புடன் உரைத்தாள்.
“கார்ல ஏறினதும் ரிலாக்ஸ்ஸா உட்கார்ந்துட்டு தானே வரப் போற அச்சுமா? சீக்கிரம் கிளம்புமா. சிவாக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுதுல” என்று கண்ணாடியில் பார்த்தவாறு கண்ணுக்கு மைத் தீட்டிக் கொண்டிருந்தவளின் அருகில் நின்று கூறினான் அர்ஜூன்.
தன்னருகே நின்றிருந்த கணவனை அந்த ஆளுயரக் கண்ணாடியில் பார்த்தவளின் மனமோ தன்னையும் அவனையும் ஒப்பிட்டுப் பார்த்தது.
திருமணமான புதியதில் இருவரும் ஜோடியாய் தங்களைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுதெல்லாம், “நாம பெர்ஃபெக்ட் ஜோடில அஜூ” என்று அவள் கூறியது இப்பொழுது நினைவில் வந்து போனது அவளுக்கு.
இன்று முழுதாய் கருப்பு வண்ணத்தில் மாறியிருந்த அவனது சிகையும் மீசை தாடியும் அவனை முப்பது வயது இளைஞனாகத் தோற்றமளிக்கச் செய்ய, இவளும் தலைமுடியைக் கருப்பு வண்ணமாக்கி வைத்திருந்த போது உடல் எடையின் காரணமாகப் பார்க்க நாற்பது வயதினளாகத் தோற்றமளித்தாள்.
அன்றும் இன்றுமாய்த் தங்களை ஒப்பிட்டுப் பார்த்தவளின் மனமும் முகமும் சுணங்கிச் சோர்ந்து போக,
“உங்கக்கூடச் சேர்ந்து நிக்கும் போது உங்களுக்கு நான் அக்கா மாதிரி தெரியுறேன் தானே அஜூ” சுருங்கிப் போன முகத்துடன் வலி நிறைந்த குரலில் கேட்டாள் அர்ச்சனா.
“ம்ப்ச் இந்த ஆராய்ச்சி இப்ப தேவையா? டைம் ஆகிட்டு இருக்கு அச்சுமா. சீக்கிரம் கிளம்பி வா” என்றவனாய் கீழே சென்றிருந்தான் அர்ஜூன்.
அவனிடம் ஆறுதலாய் அன்பான வார்த்தைகள் எதிர்பார்த்திருந்தவளின் மனம் அடிபட்டுப் போக, பெருமூச்சுடன் தனது கவனத்தைக் கிளம்புவதில் திருப்பினாள் அர்ச்சனா.
அர்ச்சனா கிளம்பி கீழே வந்த சமயம் அர்ஜூனின் தாயும் தந்தையும் கோவிலில் இருந்து வந்திருந்தனர்.
நிவேதா தனது பள்ளிப்பையுடன் வந்தவளாய், “அம்மா நான் கிளம்புறேன். தாத்தா பாட்டி போய்ட்டு வரேன். பைப்பா (Bye pa)” என்று கூறி விட்டு தனது மிதிவண்டியை நோக்கிச் சென்றாள்.
நிவேதா வேறு பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். தினமும் பள்ளிக்குத் தனது மிதிவண்டியிலேயே சென்று விட்டு வருவாள்.
நிவேதா கிளம்பியதும் அர்ஜூன், அர்ச்சனா மற்றும் சிவகணேசன், வீட்டுப் பெரியவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு மகிழுந்தில் ஏறினர்.
காலை நேரப் போக்குவரத்து நெரிசலில் அரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய பள்ளிக்கு ஒரு மணி நேரமாய் அவர்களின் வண்டி தவழ்ந்து கொண்டு சென்றிருக்க, “இதுக்குத் தான் சீக்கிரம் கிளம்புனு சொல்றது அச்சுமா. ஒரு நாளாவது இந்த டிராபிக்ல சிக்காம போய்டுலாம்னு பார்த்தா, கேட்குறியா நீ?” போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய எரிச்சலில் உரைத்திருந்தான் அர்ஜூன்.
சட்டென இவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள, “ஆமா எல்லாத்துக்கும் என்னையே குத்தம் சொல்லுங்க. என்னமோ நான் வேணும்னே லேட் பண்ற மாதிரி” கோபமாய் உரைத்து விட்டு வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சிவகணேசனின் பள்ளியின் வாயிலில் ஓரமாய் மகிழுந்தை நிறுத்திய அர்ஜூன் இறங்கி, மகன் அமர்ந்திருந்த புறமாகக் கதவைத் திறந்து விட்டு அவனை இறங்கச் செய்து கொண்டிருந்த நேரம்,
“ஹாய் அர்ஜூன்” என்று கேட்ட குரலில் திரும்பிப் பார்த்த அர்ஜூனின் விழிகள் திடுக்கிட்டு பின்பு பரவசத்தில் மின்னின.
“ஹாய் மயிலு! நீ எங்கே இங்கே?” என்றவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவளின் புடவையைப் பிடித்தவாறு அருகில் நின்றிருந்த அவளின் மகனைக் கனிவாய் நோக்கின அவனின் கண்கள்.
மகிழுந்தின் முன்பக்கக் கண்ணாடியில் இதனைப் பார்த்த அர்ச்சனாவோ, யாரிந்த பெண் என்று எண்ணியவளாய்ப் பார்த்திருந்த நேரம் அவனின் மயிலு என்ற அழைப்பில் கனலாய் மாறியிருந்தது அவளின் முகம்.
“என் பொண்ணு செஞ்ச வேலை மறந்து போச்சா உங்களுக்கு?” எனச் சிரிப்புடன் கேட்ட இளமயில்,
“என் பசங்க உங்க பையன் கிளாஸ்ல தான் படிக்கிறாங்க” என்றாள்.
அவனருகில் நின்றிருந்த சிவகணேசனைப் பார்த்து அவன் உயரத்திற்குக் குனிந்தவளாய், “ஹாய் சிவா! உங்க கை இப்ப எப்படி இருக்கு?” எனக் கேட்டவாறு அவனின் கைப்பற்றி உள்ளங்கையைப் பார்த்தாள்.
‘அந்த டாக்டருக்கும் இவளுக்கும் வயசே ஆகாதா? எப்படி இவ்வளோ இளமையா இருக்காங்க’ என்று மனத்தோடு நினைத்தவாறு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அச்சமயம் அங்கே தோளில் பள்ளிப்பையை மாட்டிக் கொண்டு மகளைக் கையில் ஏந்தியவனாய் வந்து நின்றான் இளங்குமரன்.
“ஹாய் அர்ஜூன்” என்று குமரன் கூறவும்
“ஹாய் டாக்டர்” என்ற அர்ஜூன்,
“இவங்க தான் என் பையனைத் தள்ளி விட்ட வள்ளிமயிலா?” எனச் சிரிப்புடன் கேட்டவாறு தந்தையின் கையில் இருந்த வள்ளிமயிலின் கன்னத்தை மென்மையாய் வருடினான் அர்ஜூன்.
அவள் உடனே முகத்தைச் சுருக்கியவளாய் தந்தையின் கழுத்தோடு முகத்தை ஒட்டிக் கொள்ள, “என் பொண்ணு சின்னவளா இருக்கும் போது இப்படித் தான் செய்வா” என்று சிரித்தான் அர்ஜூன்.
சிவகணேசனின் கையைப் பார்த்த இளமயில், “இன்னுமே காயம் முழுசா ஆறாம இருக்கே” என்று கவலையுடன் கேட்டாள்.
“நான் டேப்லெட்ஸ் குடுத்திருக்கேன் மயிலு! சரியாகிடும்” என்று இளங்குமரன் கூற,
“நேத்திக்கு விட இன்னிக்கு எவ்வளவோ பரவாயில்ல மயிலு” என்றான் அர்ஜூன்.
‘பையன் வலியை விட மயிலு கவலைப்பட்டுடக் கூடாதுனு ஆறுதலாப் பேசுறதைப் பாரு’ என்று மனத்திற்குள்ளேயே புகைந்தவளாய் பேசிக் கொண்டாள் அர்ச்சனா.
அச்சமயம் நினைவு வந்தவனாய் மகிழுந்தின் முன்னே சென்று முன் பக்கக் கதவைத் திறந்த அர்ஜூன், “அர்ச்சனா இறங்கி வா” என்று அழைத்தான்.
அவளுக்கு ஏனோ அவர்களின் முன்பு அர்ஜூனுடன் இணைந்து ஜோடியாய் நிற்க அத்தனை தயக்கமாக இருந்தது.
அவர்கள் இருவரும் நாற்பது நெருங்கிய வயதிலும் எத்தனை அழகாய் ஜோடிப் பொருத்தத்துடன் இருக்கின்றனர். இவர்களின் முன்பு தாங்கள் ஜோடியாய் போய் நிற்க வேண்டுமா என்று தான் தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் அழைத்த பிறகு செல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணியவளாய் மகிழுந்தை விட்டு இறங்கி அவர்களின் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.
சிரித்த முகமாய் இவளைப் பார்த்திருந்த இளமயிலின் பார்வை கண் சிமிட்டும் நொடியில் சுருங்கி விரிந்ததைக் கவனித்த அர்ச்சனாவுக்குச் சங்கடமாகிப் போனது.
இருவரையும் ஜோடியாய் அவர்களின் திருமணத்திற்குப் பிறகு இன்று தான் பார்க்கிறாள் இளமயில். அதனால் சட்டென வந்து போனது அந்தப் பார்வை மாற்றம்.
இளங்குமரன் இவளைப் பார்த்ததும், “ஓ நீங்களும் வந்திருக்கீங்களா?” என்றான்.
“ஹாய் அர்ச்சனா” என்று சிரித்த முகத்துடன் உரைத்தாள் இளமயில்.
“ஹாய்” என்று மட்டும் கூறினாள் அவள்.
அர்ச்சனா முகத்தில் இருந்த ஒருவித சங்கோஜ உணர்வை அவதானித்தவர்களாய் இளங்குமரனும் இளமயிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பிள்ளைகள் பள்ளிக்குள் செல்ல வேண்டிய நேரம் ஆகவும், “டைம் ஆகிடுச்சு மயிலு. நீ மேடம்கிட்ட பேசிட்டு இரு. நாங்க பசங்களை விட்டுட்டு வரோம்” என்ற இளங்குமரன் அர்ஜூனைப் பார்த்தவனாய் மகன் மற்றும் மகளுடன் முன்னே செல்ல, பின்னே மகனுடன் சென்றான் அர்ஜூன்.
இளமயிலும் அர்ச்சனாவும் தனித்து விடப் பட்டனர்.
தங்களது பிள்ளைகளுக்குக் கைக் காட்டி வழியனுப்பி விட்டு இருவரும் மற்றவரைப் பார்த்தனர்.
“அர்ச்சனா நீங்களும் அர்ஜூனும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு ஒரு நாள் டின்னருக்கு வரனும்” என்று அழைப்பு விடுத்தாள் இளமயில்.
உணர்வற்ற முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன் சரியென அர்ச்சனா தலையசைக்கவும், அவளின் முகத்தைப் படித்தவளாய் நின்றிருந்த இளமயில், “நான் உங்களுக்கு லைஃப் லாங் கடமைப்பட்டிருக்கேன் அர்ச்சனா. நீங்களும் அர்ஜூனும் பிள்ளை குட்டியோட சந்தோஷமா வாழுறதைப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு” மனதார உரைத்திருந்தாள்.
‘கடமைப்பட்டிருக்கேன்னா என்ன அர்த்தம்? என்னமோ இவங்களுக்காக நான் அர்ஜூனை கல்யாணம் செஞ்ச மாதிரி சொல்றாங்களே?’
இளமயிலின் இந்தப் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்ட அர்ச்சனா,
“நான் அஜூவோட வாழ்க்கைல உங்களோட ஆல்டர்நேட்டிவ்வா வரலை மயிலு. நீங்க அஜூவோட வாழ்க்கைல வராமலே போயிருந்தாலும் நான் வந்திருப்பேன். ஏன்னா அஜூ எனக்காகப் பொறந்தவரு” கூர்மையான பார்வையுடன் சீறும் குரலில் உரைத்தவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள் இளமயில்.
இருவரின் கணவன்மார்களும் அவர்களின் அருகே வரவும் இருவரும் அமைதியாகிப் போயினர்.
கணவன்மார்கள் இருவரும் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

இளங்குமரன் அர்ஜூனையும் அர்ச்சனாவையும் இரவு விருந்துக்கு ஒரு நாள் குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்தான்.
அங்கிருந்து கிளம்பி அலுவலகத்தை நோக்கி மகிழுந்தை ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜூனின் பார்வை முன்னிருக்கையில் தன்னருகே அமர்ந்திருந்த அர்ச்சனாவின் முகத்தை ஆராய்ந்தது.
அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றவும், அவளைத் திசைத் திருப்பும் பொருட்டு வானொலியை இயக்கினான்.
மயில் போலப் பொண்ணு ஒன்னு
கிளி போலப் பேச்சு ஒன்னு
என்று பாடல் ஒலிக்கவும் சட்டென அவனை நோக்கித் திரும்பியவளாய் எரிக்கும் பார்வைப் பார்த்தாள் அர்ச்சனா.

