

அர்ஜூன் பணிபுரியும் ஐந்து நட்சத்திர விடுதியில் அன்று ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பிராஜக்ட்டுக்கான வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடாகியிருந்தது.
அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளைத் தான் முந்தைய நாள் பார்த்து விட்டுச் சென்றிருந்தான் அர்ஜூன்.
அந்தப் பிராஜக்ட்டில் பணிபுரிந்தவர்களெல்லாம் காலை ஒன்பது மணியளவில் அங்கு வந்தவுடன் அவர்களின் கையில் பூங்கொத்தை கொடுத்து வரவேற்றப் பிறகு அனைவருக்கும் குடிக்க எலுமிச்சை பானத்தைக் கொடுத்தனர் விடுதி ஊழியர்கள்.
அச்சமயம் அங்கு வந்து சேர்ந்தனர் ராகமாலிகா இசைக் குழுவினர்.
அக்குழுவின் பாடகர், பாடகி, இசைக்குருவியை வாசிப்பவர்கள் என ஆறு நபர்கள் வந்திருந்தனர்.
அனைவரையும் அர்ஜூன் வரவேற்க, அக்குழுவின் தலைவரான சுபாஷ் அனைவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆறு நபர்களில் அக்குழுவின் பெண் பாடகியான அர்ச்சனா மட்டுமே தமிழ் பெண்ணாய் இருக்க மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு மொழி பேசுபவர்களாய் இருந்ததினால் அர்ஜூன் பொதுவாய் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான்.
‘அர்ஜூன்னு பேரு கேட்டதும் நேத்து வடநாட்டுக்காரரா இருப்பாருனு நினைச்சேனே! ஆளு பார்க்க நம்மூரு களையோட இருக்காரே. வசீகரமான சிரிப்பு வேற ஆனா இந்தக் கண்ணு..’ என்று மனத்திற்குள் நினைத்தவளாய் கருப்பு வண்ணத்தில் சூட் அணிந்து இதழில் தவழ்ந்த புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த அர்ஜூனையே அவளின் கண்கள் பார்த்திருக்க, அர்ஜூனின் பார்வை ஒரு நொடி இவளைத் தொட்டு செல்லவும் தனது பார்வையைத் திருப்பினாள் அர்ச்சனா. ஆனாலும் அவளையும் மீறி அவளின் பார்வை அவனிடமே சென்று நின்றது.
இவர்களை அமரப் பணித்து விட்டு அங்கிருந்து சென்றவன், மற்றைய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து தனது குழுவினருடன் பேசிக் கொண்டிருந்தவளின் பார்வை அவனையே தொடர்ந்திருந்தது.
“ஜீவா எல்லாரும் ஜூஸ் குடிச்சி முடிச்சிட்டாங்கனா கேம் ஆரம்பிக்கலாமே! லன்ச் டைம்குள்ள கேம் கண்டெக்ட் செஞ்சி முடிச்சா தான் சரியா இருக்கும். ஏன் இன்னும் ஸ்டார்ட் செய்யாம இருக்கீங்க?” எனக் கேட்டான் அர்ஜூன்.
“சார்.. அது வந்து.. பிரியா தான் இன்னிக்கு கேம் கண்டெக்ட் செய்றதா இருந்துச்சு. ஆனா அவங்க திடீர்னு எமெர்ஜென்சி லீவ் சொல்லிட்டாங்க. அதான் இப்ப நானே அதைச் செய்யலாம்னு விசாரிச்சிட்டு இருக்கேன்” என்றவன் சொன்னதும் இறுகிய குரலில்,
“எப்ப அவங்க இந்த லீவ்வை பத்தி உங்ககிட்ட சொன்னாங்க? நீங்க ஏன் காலைலயே இதைப் பத்தி என்கிட்ட சொல்லலை?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டான்.
“காலைல பர்மிஷன் தான் சார் கேட்டாங்க. கேம் கண்டெக்ட் செய்ற டைம்ல வந்திடுறதா தான் சொன்னாங்க. இப்ப திடீர்னு தான் வரலைனு சொல்றாங்க” அர்ஜூனின் கோபத்தைப் பற்றித் தெரியுமாதலால் சற்றுத் தணிந்த குரலிலேயே உரைத்தான் ஜீவா.
“இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட் (irresponsible idiot)” பல்லைக் கடித்தவனாய் அத்தனை கோபத்துடன் கூறியிருந்தான் அர்ஜூன்.
“சாரி சார்” என்று ஜீவா தலைக் குனிய, “நான் உங்களைச் சொல்லலை ஜீவா. பிரியாவைச் சொல்றேன். நாளைக்குப் பிரியா வந்ததும் என்னை மீட் பண்ணச் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி எந்த வேலையும் அவங்களுக்கு அசைன் பண்ணாதீங்க. நான் கேம் கண்டெக்ட் செய்றேன். நீங்க மதிய லன்ச்கான ஃபுட் அரேஞ்ச்மெண்ட்ஸ்லாம் பாருங்க” என்று மாற்று வழியைத் திட்டமிட்டவனாய் அந்தப் பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டான்.
அவனை இங்கிருந்து பார்த்திருந்த அர்ச்சனாவின் மனமோ, ‘அட கோபப்பட்டாலும் அழகா தான் இருக்காரு’ என்று நினைக்கவும், தனது மனம் போகும் போக்கை எண்ணி தனது தலையிலேயே அடித்துக் கொண்டாள் அர்ச்சனா.
அவளின் நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்நாள் வரை அவளது தந்தையைத் தவிர எவரையும் இப்படி ரசித்துப் பார்த்ததில்லை. இப்படி யாரும் அவளை இத்தனையாய் கவர்ந்ததில்லை.
அர்ச்சனாவுக்கு எவரின் முகமும் மனத்தில் பதிந்திடவே செய்யாது. எவரையேனும் பார்த்ததும் அழகாக இருப்பதாகத் தோன்றினால், அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடனே அவர்களிடமே வெளிப்படையாகப் பாராட்டி விடுவாள். பாராட்டிய மறுநொடி அதனை மறந்தும் விடுவாள். மீண்டும் அந்நபரை சந்திக்க நேரும் போது புதிதாய்ப் பார்ப்பது போலவே பார்ப்பாள்.
ஆனால் இன்றோ அதற்கு நேரெதிராய் அர்ஜூனின் ஒவ்வொரு அசைவையும் முக உணர்வையும் ரசித்துக் கொண்டிருக்கிறது அவளின் மனம். வேறெங்கு கவனம் செலுத்த முயன்றாலும் அவனின் முகம் அவளின் மனக்கண்ணில் வந்து நின்று இம்சை செய்தது. அதனாலேயே அவளின் பார்வை அவனையன்றி வேறெங்கும் செல்லாது சுற்றி வந்தது.
கையில் ஒலிபெருக்கியுடன் நின்ற அர்ஜூன், “ஹாய் ஹலோ எவ்ரிவன்! லெட்ஸ் ஸ்டார்ட் த கேம்” என்றவனாய் விருந்தினர் அனைவரையும் ஒன்றாய் நிற்க வைத்து மூன்று குழுக்களாகப் பிரித்து விளையாட்டைத் தொடங்கினான்.
இசைக்குழுவினர் இதனை வேடிக்கைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.
முதலில் தம்ஷராஸ் விளையாட்டைத் தொடங்கினர். ஒருவர் நடித்துக் காண்பிக்க, அது என்ன வார்த்தை என்று மற்றவர் கண்டுபிடிக்க வேண்டும். எந்தக் குழு அதிகமாகக் கண்டுபிடிக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என்று விதிமுறைகளைக் கூறி விளையாட்டைத் தொடங்கினான்.
அவனின் இதழ் விரிந்த சிரிப்பு, பேச்சு, ஒவ்வொரு முறையும் அவனது கண்கள் விரிந்து சுருங்கிக் காட்டும் பாவனை என அவனையே பார்த்திருந்தவளோ, ‘எவ்ளோ வாய்விட்டுச் சிரிச்சாலும்.. அந்தக் கண்ணு’ என்று யோசித்தவளாய் புருவம் சுருங்க அவனையே பார்த்தாள் அர்ச்சனா.
எத்தனை தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் அழகான பெரிய கண்கள் அவனுக்கு.
ஒரு மணி நேரமாக நடந்த விளையாட்டில் கூட்டம் ஆரவாரமாகி கைத்தட்டலும் சிரிப்புமாய் அமர்க்களப்பட்டது அந்த இடம்.
“தேங்க் யூ ஃபார் யுவர் பார்ட்டிசிபேஷன். எல்லாரும் விளையாடி களைச்சிருப்பீங்க. அதனால உங்களை ரிலாக்ஸ் ஆக்குற மாதிரி இசை நிகழ்ச்சி வரப் போகுது. ஸ்டே டியூன்டு” என்றவனாய் விளையாட்டை நிறைவுச் செய்தான் அர்ஜூன்.
இசைக்குழுவினர் தங்களது இசைக்கருவிகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்த மேடைக்குச் சென்றவன், ஒலிபெருக்கியெல்லாம் ஒழுங்காக வேலைச் செய்கிறதா என்று பார்த்து விட்டு, அவர்களுக்கு வேறேதேனும் வேண்டுமா என்று கவனித்துச் செய்து கொடுத்து விட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தான்.
ஜீவாவிற்கு அழைத்து உணவுகள் தயாராகி விட்டனவா என்றும் கேட்டுக் கொண்டான்.
அனைத்து மொழியினரும் அங்கு இருந்ததால் கலவையான மொழிகளில் தான் பாடல்களைத் தேர்வுச் செய்திருந்தனர் அக்குழுவினர்.
முதலில் அவ்வூர் மொழியான கன்னடத்தில் பிரபலமான பாடலான ஜொதயலி பாடலைப் பாடத் தொடங்கினர்.
அர்ச்சனா ஒரு வரி பாடியதும், “சூப்பர் வாய்ஸ்” என்று கையால் சைகை செய்து பாராட்டினான் அர்ஜூன்.
உள்ளம் பூரித்துப் போனது அர்ச்சனாவுக்கு.
இந்தக் குழுவினருடன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் இருந்து பாடிக் கொண்டிருக்கிறாள் அர்ச்சனா. இக்குழுவில் சேர்ந்தப்பின் பல்வேறு மொழிகளில் அமைந்த பாடல்களைப் பயின்று பாடத் தொடங்கினாள். மொழிகளைப் பேசத் தெரியாது அவளுக்கு ஆனால் ஓரளவிற்கு புரிந்து கொண்டு பாடத் தெரியும். இந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அவர்களின் குழுவினர் பாடுவது இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாய்க் கொண்டவர்கள் அர்ச்சனாவின் தாயும் தந்தையும். தாய் இல்லத்தரசியாக இருக்க, மத்திய அரசு ஊழியரான தந்தையின் பணி நிமித்தமாக அர்ச்சனா பத்தாவது படிக்கும் போது இங்கு இடம் மாறி வந்தனர். அதன் பிறகு அர்ச்சனா இங்கேயே பொறியியல் கல்லூரியில் படித்து முடித்ததும் அத்துறையில் தனக்கு பணிச் செய்ய விருப்பமில்லை எனவும் பாட்டுத் துறையில் தான் விருப்பமுள்ளதாகவும் கூறி அதையே தனது பணியாகயேற்று தொடர்ந்து வந்தாள்.
இசைக் குழுவினரின் பாடகர் பாடகி ஜொதயலி பாடும் போதே அப்பாடலைத் தெரிந்த சிலர் கூடவே பாடவும், அவ்வாறு பாடியவர்களிடத்தில் ஒலிபெருக்கியைக் கொடுத்தான் அர்ஜூன்.
ஒரு கட்டத்தில் பலரும் இணைந்து பாடவும் அந்த இடத்தையே நிரப்பின எண்ணற்ற குரல்களின் ஒலிகள்.
ஹிந்தி, தெலுங்கு என்று தொடர்ந்த பாடல்களின் வரிசையில்,
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு என்று பாடகர் தொடங்கவும் அர்ஜூன் முகத்தில் வந்து போன உற்சாகப் பாவத்தில் தன்னைத் தொலைத்தவளாய்,
உள்ளத்தை உன் கையில் அள்ளித் தந்தேனே
என்று பாடகர் பாடி முடிக்கவும்
நான் வாங்கும் மூச்செல்லாம் அன்பே நீ தானே
என்று உள்ளம் உருகப் பாடியிருந்தாள்.
அர்ஜூனும் இப்பாடலை முணுமுணுத்தவனாய் ரசித்துக் கேட்டிருந்தான்.
இப்பாடலையும் பெரும்பாலோர் இணைந்து பாடியிருந்தனர்.
இப்பாடல் முடியவும் அனைவரும் அரங்கம் அதிரக் கரவொலி எழுப்பினர்.
அங்கிருந்த குழுவினரிடம் அடுத்தப் பாடல் குறித்துப் பேசியவளாய் அவர்களின் ஒப்புதல் வாங்கியவள் பாடத் தொடங்கினாள்.
“மயில் போலப் பொண்ணு ஒன்னு”
என்று அர்ச்சனா அடுத்தப் பாடலை பாடத் தொடங்கவும் இவனின் முகத்தில் இருந்த உற்சாகம் முழுவதும் வடிய கண்களில் வலித் தெரிய இறுகிப் போனது முகம்.
முழுப் பாடலும் தன் குரலில் அவன் கேட்க வேண்டும் என்பதற்காகவே தனக்கு மிகவும் பிடித்த இப்பாடலை அவள் குழுவினரிடம் அனுமதி வாங்கி ஆசையுடன் பாடியிருக்க, ஆனால் அவனோ அதற்கு நேரெதிராக முகம் கசங்க அமர்ந்திருப்பதைப் பார்த்துக் குழப்பமடைந்தவளாய் பாடி முடித்தாள் அர்ச்சனா.
அப்பாடல் முடியவும் உணவு நேரம் நெருங்கியதால் அவர்களின் இசைக்கச்சேரியை நிறைவு செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டான் அர்ஜூன்.
அதன் பிறகு தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் அமைக்கப்பட்ட அந்த விருந்தில் அனைவரும் கையில் தட்டுடன் ஆங்காங்கே நகர்ந்தவர்களாய் தங்களுக்குப் பிடித்தமானதை எடுத்து உண்ணத் தொடங்கினர்.
இவர்களை எல்லாம் மேற்பார்வை பார்த்தவாறே ஓரமாய் நின்றவாறு வேலையில் கவனமாக இருந்த அர்ஜூனின் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.
“யெஸ் மேம். எனி பிராப்ளம்?” தன்னிடம் வந்து நின்றவளிடம் கேட்டான் அர்ஜூன்.
இல்லை எனத் தலையசைத்தவளாய், “நீங்க என்னை அர்ச்சனானே கூப்பிடலாம்” என்றாள்.
உயரத்திற்கேற்ற உடல்வாகுடன் பால் வண்ண நிறத்தில் தோள் வரை இருந்த சுருள் முடியுடன் பேண்ட் குர்தி அணிந்தவளாய் அழகியாய் நின்றிருந்தவளை கடமை உணர்வுடன் பார்த்தவனாய் பேசியவனை ரசிப்புடன் பார்த்திருந்தன அவளின் கண்கள்.
மெல்ல சிரித்தவனாய், “சொல்லுங்க அர்ச்சனா? என்ன வேணும்?” தமிழில் கேட்டான்.
“ஆர் யூ ஓகே?” எனக் கேட்டாள் அவள்.
அவளின் கேள்விப் புரியாது புருவத்தை நெறித்தவனாய், “என்ன? எனக்குப் புரியலை?” என்றான்.
“இல்ல உதட்டுல இருக்க உங்க சிரிப்பு உங்க கண்ணை எட்டலை. ஏதோ வெறுமையும் வலியும் உங்க கண்ணுல அப்பட்டமா தெரியுது. அதான் நீங்க ஓகேவானு கேட்டேன்” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இவளின் குழுவினரில் ஒருவன் இவளைத் தூரத்தில் இருந்து கொண்டு சத்தமாய் அழைத்தான்.
அவளின் கூற்றில் ஆச்சரியத்தில் விரிந்தன அர்ஜூனின் விழிகள்.
‘இந்தளவுக்கா என்னை கவனிச்சிருக்கு இந்தப் பொண்ணு’ என்று தான் தோன்றியது அர்ஜூனுக்கு.
திரும்பிப் பார்த்துத் தன்னை அழைத்தவனை நோக்கி, “இதோ வரேன்” என்று சைகைச் செய்தவள், இவன் புறமாய்த் திரும்பியவளாய், “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?” எனக் கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல், ‘இவங்க மயிலோட ஃப்ரண்ட்டா இருக்குமோ?’ புருவம் இடுங்க அவளைப் பார்த்தான்.
“இல்ல நீங்க அனுப்பின இந்த ஃபங்ஷன் இன்விடேஷன் பார்த்தேன். இந்தப் பொண்ணுங்களுக்குலாம் மிஸஸ் அண்ட் மிஸ் போட்டுருக்கிறதை வச்சி கல்யாணம் ஆகிடுச்சா இல்லையானு கண்டுபிடிக்க முடியுற மாதிரி ஆண்களுக்கும் ஏதாவது இருந்தா நல்லாயிருக்கும்ல. உங்க பேரு மிஸ்டர் அர்ஜூன்னு இருக்கு. அதான் கேட்டேன்” என்றாள்.
அவளின் விளக்கத்தில் இத்தனை நேரமாய் வெறுமை குடிக் கொண்டிருந்த கண்களில் சுவாரஸ்ய பாவனை வந்திருந்தது. இதழ் விரிய சிரித்திருந்தான் அர்ஜூன். இந்தச் சிரிப்பு நிச்சயமாய் அவன் கண்களை எட்டியிருந்தது.
‘எப்படி நேரடியா வந்து கடலைப் போடுது பாரேன் இந்தப் பொண்ணு’ என்று தான் தோன்றியது அர்ஜூனுக்கு.
அவன் கண்களில் ஒளிர்ந்த பொலிவை தனது கண்கள் மின்னப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.
“சொல்லுங்க உங்களை நான் கல்யாணம் செய்ய கன்சிடர் பண்ணலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். அதுக்கு உங்களுக்குக் கல்யாணம் ஆச்சா இல்லையானு எனக்குத் தெரியனும் தானே” எவ்வித தயக்கமுமின்றித் தனது முகத்தை ரசித்துப் பார்த்தவாறு பேசும் இந்தப் பெண்ணை நினைத்து அவனுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்தது.
தன்னை ஒரு பெண் ரசிக்கிறாள் என்பதில் ஒருவிதமாய் சிலிரித்தது அவன் நெஞ்சம்.
அன்றிலிருந்து அவனது இரவின் நினைவுகளை மயிலிடமிருந்து தன்னை நோக்கித் திருப்பியிருந்தாள் அர்ச்சனா.


