
திருப்பம்-07
அன்று வாசலுக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து கிடையாய் கிடந்தான் திருமாவளவன். தேங்காயைத் திருவிக் கொண்டே அவன் நடைபயணத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கார்த்திகா, “என்ன கொழுந்தரே, காலைல சாப்டது செரிக்கிலியாக்கும்?” என்று கேட்க,
அவளைப் பார்த்து அசடு வழிய சிரித்தான்.
‘என்னமோ சரியில்லயே?’ என்று அவள் நினைக்க, தபால் காரர் வெளியிருந்து சப்தம் கொடுத்தார்.
வேக வேகமாய் வெளியே சென்றவன் தபால் காரரிடம் பேசி மடலை வாங்கிக் கொண்டு திரும்ப,
இருபக்கமும், இடுப்பில் கரம் ஊன்றி அவன் வழியை மறைத்துக் கொண்டு நின்றிருந்தாள், கார்த்திகா.
“ம..மைணி” என்று திருமாவளவன் தடுமாற,
“என்ன கொழுந்தரே.. என்னமோ திருட்டுகோட்டு வேலையாவுது போல?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டாள்.
திருதிருவென விழித்தவன், “அப்புடிலாம் இல்ல மைணி” என்று கூற,
குழந்தையோடு அங்கு வந்த விக்ரமன், “ஏம்லே என்ன நடக்குதிங்க?” என்று கேட்டான்.
“ஒங்க தம்பி என்னமோ மறைக்காவ” என்று வளவன் பின்னே எட்டி எட்டிப் பார்த்தபடி கார்த்திகா கூற,
“என்னதுலே?” என்று சிரிப்பாக விக்ரம் கேட்டான்.
“ச்ச.. என்னடா நீயும்? மைணிதான் புரியாம பேசுதாவனா” என்றவன், ‘அய்யோ.. நளி (கேலி) பேசியே சாவடிப்பாவலே’ என்று மனதோடு சிணுங்க,
ஒளிசுடர் வளவனைப் பார்த்து தன் தந்தையென்று நினைத்து, “ப்பா” என்று கைகளை நீட்டினாள்.
இது அங்கே வாடிக்கையாக நடப்பது தான். முடியை வைத்து வித்தியாசம் காணுமளவு பிள்ளைக்கு விவரம் இல்லாததால், விக்ரமனையும், வளவனையும் தந்தையென்றெண்ணி மாறி மாறி கரம் நீட்டி அழைப்பாள். அதை வைத்து அவளிடம் விளையாடி, குழம்பிய பிள்ளையை அழவிட்டு இவர்கள் சிரிப்பதெல்லாம் அழகிய தருணங்களாய் அவர்கள் நினைவோடு சேமிக்கப்படும்.
“கொழுந்தரே.. மவ கூப்பிடறா” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கார்த்திகா சொல்ல,
‘அண்ணே மவளே.. லந்து பண்ணுதடி இப்பவே’ என்று மனதோடு செல்லமாய் திட்டியவன் கடிதத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துவிட்டு மகளை அள்ளிக் கொண்டான்.
அவனது புதர் முடியில் கை நுழைத்திழுத்து அவள் விளையாட, “ஆ.. ராங்கி வலிக்குடி” என்றவன் ஒளியைத் தள்ளிப் பிடித்து, “மூக்க கடிக்கப்போதேம் பாரு” என்று விளையாட்டு காட்ட, குழந்தை பொக்கை வாய் திறந்து சிரித்தாள்.
அந்த இடைவேளையில் அவன் பையிலிருந்த அந்த கடிதத்தை எடுத்திருந்த கார்த்திகா, “இதுதேம் இதுதேம்.. என்னனு விசாரிங்க” என்று விக்ரமனிடம் கொடுக்க,
“மைணி..” என்று அதை வாங்க முற்பட்டவன் விக்ரமனைப் பார்த்து, “லேய்.. வேல வெசயமா வந்துருக்குது. குடும்லே” என்று கூறினான்.
கரங்களை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு இரு விரலில் அந்த கடிதத்தைப் பிடித்துக் கொண்டு பார்வையிட்டவன், அதன் பின் பக்கம் இருக்கும் சங்குப்பூ வரைபடத்தைக் கண்டதும் கண்டுகொண்டான்.
அப்படியொரு சிரிப்பு வந்தது அந்த இரட்டையனுக்கு.
“வேலையாக்கும்? என்ன வேலைலே?” என்று கேட்டவன், “பூந்தோட்டத்துல இந்தமொற சங்குப்பூதேம் மணக்கும் போல?” என்று கேலியில் இறங்க,
வளவனுக்கு வெட்கம் வந்துவிட்டது.
யார் கூறியது வெட்கம் பெண்களுக்கு உரித்தானதென்று? காதலியைக் கொண்டு நடத்தும் கேலிகளில் நாணம் கொண்டு, சிரம் தாழ்த்தி, பிடறியைக் கோதும் ஆண்களின் முகத்தில் மின்னும் வெட்கத்திற்குத்தான் எத்தனை மதிப்பு?
தம்பியின் வெட்கம் கண்டு அட்டகாசமாய் சிரித்த விக்ரமன், அவனை சீண்டிப்பார்க்கும் பொருட்டு, “இந்தா கார்த்தி.. இத என்னனு பாரு” என்று நீட்டினான்.
“ஏம்லே?” என்றவன் குழத்தையை அவன் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்க்க, கார்த்தி அங்கில்லையே.
“மைணி” என்று கத்தியபடி அவன் உள்ளே வர, நீள்விருக்கைக்கு பின்னே நின்றுகொண்டு, “என்ன கொழுந்தரே, வேணுமா?” என்று மடலை ஆட்டியபடி கேட்டாள்.
“மைணி கொடுத்துபுடுங்க. யாரும் வந்துடப்போறாவ” என்று கூறியவன் சுற்றி முற்றி பார்க்க,
“தனம் காலேஜு போயிட்டா. அத்த மாமா கோவிலுக்கு போயிருக்காவ. நாம நாலு பேருதேன் இருக்கம். யாரும் வாரததுதேன் பிரச்சினைனா வெசனப்படாதீய” என்று கூறி அவள் கிளுக்கிச் சிரித்தாள்.
“மைணி” என்று அவன் அவளைத் துறத்த, அவள் நீள்விருக்கையைச் சுற்றிச் சுற்றி ஓடி போக்குக் காட்டினான்.
ஒருவழியாக, அவளைப் பிடித்துவிட்டவன், “மைணி குடுங்க” என்க, தனக்கு பின்னே மறைத்துக் கொண்டு, “முடியாது முடியாது” என்று சிரித்தாள்.
எப்படியோ அவளிடமிருந்து அவன் அதை பிடுங்கிவிட, எட்டி பறிக்கும் முயற்சியில் விழப் பார்த்தவளை, “அய்யோ மைணி பாத்து” என பிடித்து நிறுத்தினான்.
அவர்கள் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்த விக்ரமனும், “இந்தா பாத்துடி” என்று பதறிக் கொண்டுவர,
திரிபுரா உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழையும்போது வளவன் கார்த்திகாவைப் பிடித்திருப்பதைக் கண்டு முகத்தை அஷ்டகோணக்தில் சுருக்கியபடி அவள் வர,
“எனக்கொன்னுமில்ல” என்று சிரித்தபடி நகர்ந்தவள், “பொழச்சு போங்க” என்று கூறினாள்.
அதில் பக்கென்று சிரித்த விக்ரம் திரும்ப, முகம் சுருக்கியபடி உள்ளே வந்தாள் திரிபுரா.
“வா க்கா” என்று அவன் கூற,
“வரம்லே” என்றபடி வந்து அமர்ந்தாள்.
“மைணி வாங்க” என்று கார்த்திகாவும் இன்முகமாய் வரவேற்க,
“காலங்காலையில என்னதிது கொழுந்தரோட வெளாட்டு? அறியாதவ யாரும் வந்தாவனா என்ன நெணப்பாவ?” என்று கேட்டாள். தவறாக நினைத்து அவள் கேட்கவில்லை. அப்படியெல்லாம் தன் சொந்தங்களின் நடத்தையை தவறாகக் கூறுமளவு அவள் மோசமும் இல்லை. ஆனால் வேறு யாரும் பார்த்தால் தவறாக நினைப்பர் என்று உறுதியான நம்பிக்கை இருந்ததால் அவ்வாறு கேட்டுவிட்டாள்.
கார்த்திகா முகம் சட்டென வாடிவிட, “எம்பொண்டாட்டியும் தம்பியும் எப்புடினு எனக்கு தெரிஞ்சாமட்டும் போதும் க்கா. போறவோ வரவோளுக்குலாம் என்னத்துக்கு தெரியனும்?” என்று சிரித்தபடியே நறுக்கென்று விக்ரமன் கூறினான்.
“சரிதேம்ல” என்ற திரிபுராவும் அத்தோடு அந்த பேச்சை விட்டுவிட்டாள்.
அவள் பேசியது சுருக்கென்று இருந்தாலும் கூட, ‘மைணிக்கு இப்படி பேசுறதென்ன புதுசாக்கும்?’ என்று எப்போதும் போல் அவள் பேச்சை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் கார்த்திகா சென்றுவிட்டாள்.
வளவன் கையிலிருக்கும் கடிதத்தைப் பார்த்த திரிபுரா, “என்னம்லே கடிதாசி?” என்று கேட்க,
“அவேன் வேலை வெசயமா ஏதோவாம். நீ போய் ரெடியாவுலே. இன்னிக்கு அரிசி மூட்ட அனுப்பனும்ல? வடிவேலுவயும் வரச்சொலிட்ட தான? போ” என்று விக்ரமே தம்பியைக் காத்து அனுப்பிவைத்தான்.
திரிபுராவிற்கு கார்த்திகா அசலூர் என்பதாலேயே ஒரு ஒதுக்கம் எப்போதும் உண்டு. நாத்தனார் கொடுமையெல்லாம் செய்ததில்லை என்றாலும், சுறுக்கென்று பேசிவிடுவது, ஒட்டுதலற்று நடந்துகொள்வதெல்லாம் சிறப்பாக நடைபெறும். ஆனால் ஒளிசுடர் மீது கொள்ளை பிரியம் அவளுக்கு.
தப்பித்தோம் பிழைத்தோமென்று மேலே தனதறைக்கு வந்தவன் வேகமாக, கடிதத்தைப் பிரித்தான்.
கடிதத்தின் உறையை பிரிக்க, அதில், ‘கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன் பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ?’ என்று எழுதியிருந்தது.
அதை கண்டு மிக அழகாய் புன்னகைத்தவன் மனம், ‘பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன், விரல் பாட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ?’ என்று பாடிக்கொண்டது.
தன் பச்சரிப்பற்கள் பளபளக்க புன்னகைத்தவன், தன் சுருள் கேசத்தைக் கோதிக் கொண்டு அதனுள் இருந்த சங்குப்பூவை எடுத்தான்.
அதற்கென்றே அவன் வாங்கி வைத்திருக்கும் கண்ணாடி குடுவையைத் திறந்தவன், அதனுள் பூவை பத்திரப்படுத்திவிட்டுக் காகிதத்தைப் பிரித்தான்.
‘அன்புள்ள திருமாலுக்கு,
எப்படி இருக்கீங்க? இந்த லெட்டர் காதல் ரொம்ப அழகாருக்கு. எனக்கு நிஜமாவே ஏதோ வீட்டுக்குத் தெரியாம லவ் பண்ற ஃபீலா இருக்குது தெரியுமா? லெட்டர் வந்தா வீட்ல சமாளிச்சு அதை பத்திரப்படுத்தி வந்து படிக்குறதுக்குள்ள.. ஹப்பா. பெரிய வேலைதான். அப்போலாம் ஃபோன் இல்லாம லெட்டர்ல காதல வளத்தவங்கலாம் இப்படித்தான ஃபீல் பண்ணிருப்பாங்க’ என்று அவள் எழுதியதைப் படித்தவனுக்கு அழகாய் புன்னகை மலர்ந்தது.
‘அடித்தல் திருத்தல் இல்லாம எழுதனுமா? சொல்லத் தயக்கமானு தெரியலை. ஆனா நான் சொன்னதை நீங்க செய்ய முன்வந்துடுவீங்க. அதை ஏற்க என்னால முடியுமானு தெரியலையே? நைட்டு திருட்டுத்தனமா பைக் ரைட் போகனும்னு ஆசை. ஆனா நீங்க கூப்பிட்டா வர்றதுக்கு எனக்கு தைரியம் இல்லயே?’ என்று அவள் எழுதியிருப்பதை வாசித்தவன் வாய்விட்டு சிரித்துவிட்டான். ‘சரியான பயந்தாரிடி நீ’ என்று நினைத்துக் கொண்டவன் வாசிப்பைத் தொடர,
‘எப்போவாது கோவில்ல மீட் பண்ணிக்கனும். தனித்தனியாதான் வரனும். தனித்தனியாதான் போகனும். ஆனா நாம ரெண்டுபேரும் ஒன்னா வந்துருக்கோம்னு நமக்கு மட்டுந்தான் தெரியனும். பிராகரத்தை சுத்தி வரும்போது யாருக்குமே தெரியாம உங்களுக்கு விபூதி வச்சுவிட்டுட்டு ஓடிடுவேன். துறத்திட்டுலாம் வந்துடாதீங்க. அப்றம் பயத்துல கோவில விட்டே ஓடிடுவேன்’ என்று அவள் எழுதியதை வாசித்தவன் கண்களில் நீர் வர சிரித்தான்.
‘சின்னப்புள்ளத்தனமா இருக்குனு நினைக்காதீங்க. இதுலாம் நான் லவ் பண்றவங்க கிட்ட நோட்டிஸ் பண்ண சின்னச் சின்ன கியூட்டான விஷயம். எனக்கு இதெல்லாம் பாக்கும்போது லைட்டா ஆசையாருக்கும். லவ் பண்ற அளவு நமக்கெங்க தைரியம் இருக்கு? ஆனா இப்ப நம்ம லவ் பண்ணும்போது நல்லாருக்குங்க’ என்று வாசிக்கும்போதே அவள் எத்தனை உற்சாகமாய் இதனை கூறுகின்றாள் என்று அவனால் உணர முடிந்தது.
‘நிஜமா இப்படிலாம் நடக்கும்னு ஒரு பத்து நாள் முன்ன என்கிட்ட யாராது சொல்லிருந்தா நம்பிருக்கவே மாட்டேன். இன்னும் சொல்லப்போனா பொண்ணு பாக்க வந்தப்ப உங்ககிட்ட இந்த ஆசையை சொல்லனும்னு கூட நான் நினைக்கலை. ரொம்ப படபடப்பா இருந்தப்ப எங்க அவி அத்தான் தான் வந்து உன்னோட நிஜத்தை வெளிப்படுத்தும்போது எதிரிருப்பவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்க என்பதில் உன்னோட பதில் இருக்குனு சொன்னாங்க. சின்னப்பிள்ளத்தனமான விஷயம் தான். அதை நாம எல்லார்கிட்டயும் காட்டி, இன்னஸன்னு பெயர் வாங்க ஆசைப்பட மாட்டோம்ல? ஆனா நமக்கே நம்காகனவங்க கிட்ட, நம்ம தனிமைல வெளிப்படுத்தும்போது அதை உதாசீனப்படுத்தாம அவங்க நம்ம மனம் போல ஏத்துக்கும்போது.. அது ஒருமாதிரி நல்லாருக்குங்க’ என்று அவள் எழுதியதை வாசித்தவனுக்கு, அவளது மனத்திருப்தியை உணர முடிந்தது.
‘சரிசரி.. இன்னிக்கு இதுபோது. அப்றம் ஒரு முக்கியமான விஷயம். வர்ற சண்டே நம்ம நிச்சயத்துக்கு கல்யாணத்துக்குலாம் துணி எடுக்கப்போறோம்’ என்று அவள் எழுதியிருக்க, ‘அட ஆமால்ல?’ என்று நினைத்துக்கொண்டான்.
‘அம்மா என்னை புடவைதான் கட்டனும் சொல்லிட்டாங்க. நான் அனார்கலி தான் போடலாம்னு இருந்தேன். ஆனா ராஜமாதா ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டாச்சு. சரினு நானும் ஒரு ப்ளூ கலர் புடவை தான் எடுத்து வச்சுருக்கேன். நீங்களும் முடிஞ்சா நீலகலர் சட்டைப் போட்டுட்டு வாங்க. உங்க பதில் கடிதத்தை அங்க வாங்கிக்குறேன். அப்றம் இன்னொன்னு.. இன்னிக்கு மதியம் உங்களுக்கு நான் சாப்பாடு தருவேன். எப்ப எப்படி யார் மூலமா வரும் என்பது சர்பியைஸ். உங்க ரப்பர் தோட்டத்துக்கு சாப்பாடு வரும். இங்கயும் எல்லாரும் நலம். அங்க எல்லாரையும் விசாரிச்சேன்னு சொல்ல வேணாம். ஆனா விசாரிச்சுக்குறேன்’ என்பதோடு அவள் கடிதம் முடிவடைய,
நெஞ்சை நீவிக் கொண்டவன் முகம் பூரித்து புன்னகைத்திருந்தது.
தற்செயலாய் நிமிர்ந்தவன், தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகம் காண, அவன் உள்ளத்து உவகை முகத்தில் அத்தனை அழகாய் மின்னியது.
‘இதுதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்றதோ?’ என்று நினைத்தவன் இதழ்கள் இன்னும் விரிய,
அலமாரிக்கு சென்று கடிதத்தைப் பத்திரப்படுத்திவிட்டு, தன்னிடமுள்ள ஒரு நீலநிற சட்டையை எடுத்தான்.
அந்த சட்டையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் அவளுக்கு புலனத்தில் அனுப்பி வைக்க,
அதைப் பார்த்த அடுத்த பத்தாம் நிமிடம் தனது புடவையின் புகைப்படத்தை அனுப்பினாள்.
“அழகாருக்குமா” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப,
புன்னகைக்கும் பொம்மைகளை அனுப்பி வைத்தாள்.
‘யார்கிட்ட குடுத்துவிடப்போறா சாப்பாட்ட? அய்யோ விக்ரம் வேற வயலுக்கு கூப்டானே? யாரு மூலமா குடுக்கப்போறாளோ எப்படித்தரப்போறாளோ?’ என்று உள்ளுக்குள் சிணுங்கலாய் பதட்டம் கொண்டு தயாராகிச் சென்றான் திருமாவளவன்.
கீழே வந்தவனைப் பார்த்து முறைத்த வடிவேல், “ஏம்லே.. விக்ரம் வயலுக்கு போவம் வானு என்னைய கூப்டுட்டு, நீ உள்ளார என்ன குத்துபோணி வெளக்கிட்டிருந்தியாக்கும்?” என்று கத்த,
அவனுக்கு தேநீருடன் வந்த கார்த்திகா, “இல்லண்ணே கொழுந்தரு உள்ளக்க சங்குப்பூ பறிச்சுட்டு இருந்தாவ” என்று கேலி செய்தாள்.
“சங்குப்பூவா?” என்று புரியாதபடி மகளுக்கான கருப்பட்டிக் காப்பியுடன் தெய்வா வர,
கார்த்திகாவிற்கு பக்கென்று ஆனது.
‘ஆத்தீ.. எல்லாம் வந்துட்டாவனு நெனவில்லாம பேசிட்டோமே’ என்று அவள் வளவனை நோக்க,
“ஆமா.. உள்ளார பூ பறிச்சுகிட்டு இருந்தேம்” என்று சமாளித்தவன், “விக்ரம் கிளம்பிட்டானா மைணி?” என்று கேட்டான்.
“இப்பத்தேம் போனாவ” என்று அவள் கூற,
“நீங்க எப்போ வாரிய தங்கபுள்ள? கணக்கு பாக்கணுமில்ல?” என்று வடிவேல் கேட்டான்.
“இந்தா அண்டைல ஒள வச்சுட்டேம். மரக்கறிய வெட்டிகுடுத்துப்போட்டு வரேம். நீங்க போவ” என்று கார்த்திகா கூற,
“நான் சோலிய பாத்துகிடுதேம். நீ போய்வா” என்று தெய்வா கூறினார்.
“இருக்கட்டுந்த்த. இத மட்டும் முடிச்சுட்டு போறேம்” என்று அவள் கூற, சரியென்று விட்டுவிட்டார்.
வளவனும் வடிவேலும் புறப்பட்டுச் செல்ல, வயலை அடைந்தவர்கள் நாசியெங்கும் மண் வாசம் நிறைந்தது.
அங்கே வந்த விக்ரம், “ஏம்லே.. அரிசியும் உமியும் பிரிச்சு வச்சுட்டாவ. எப்போம் கொடுப்போமே, அவியலுக்கும், பெரியத்தான் சூப்பர் மார்கெட்டுக்கும் அனுப்புறது போவ, மீதி மூட்டைய வச்சுருக்கேம். எத்தனையுனு எண்ணிப்பாத்துகிட்டு சொல்லு. ஏத்தத்துக்கு அனுப்பிடுவோம்” என்று கூற,
“சரிடா” என்று கூறினான்.
வடிவேலுவைப் பார்த்து, “என்னம்லே அணக்கத்தக் காணும்?” என்று விக்ரம் கேட்க,
“அப்படிலாம் இல்லயே” என்றான்.
“ம்ம்..” என்று அவனை ஏற இறங்கப் பார்த்த விக்ரம், “மில்லுக்கு வாங்க” என்று கூறிவிட்டுச் சென்றான்.
“என்னம்லே? நானும் பாக்கேன் விக்ரம பாத்தாளே பம்புத?” என்று வளவன் கேட்க,
“எல்லாம் காரணமாத்தான். பொறவு சொல்லுவேம். வா” என்று வடிவேலு கூறினான்.
“ம்ம்” என்று கூறிய வளவனும் சுற்றி சுற்றிப் பார்த்தபடியே நடக்க,
“யாரையோ தேடுதாப்ல இருக்கு?” என்று வேலு கேட்டான்.
“நான் யாரலே தேடப்போறேம்?” என்று கேட்டபோதும் அவன் மனம், ‘யாரை அனுப்பி வைக்கப்போறா?’ என்றே எண்ணியது.
சில நிமிடங்களில் கார்த்திகாவும் வந்துவிட, அனைவருமாக அமர்ந்து எத்தனை மூட்டை எங்கெங்கு அனுப்ப வேண்டும், ஏற்றுமதிக்கு எத்தனை, எவ்வளவு செலவு என்பதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டனர்.
“தங்கபுள்ள.. ஏத்தத்துக்கு இந்தமொற காசு ஏறுது. கப்பலுல செலவு கூடுது” என்று வடிவேலு விவரத்தைக் கூற,
“சரக்கு ஏத்ததுக்கு பேப்பரெல்லாம் காட்டுங்க பொறவு பேசுதேன் அதப்பத்தி” என்றாள்.
“நீ கேப்பனு தெரியும்லே. அதேம் கையோடு எடுத்தாந்தேன்” என்று வடிவேலு ஆவணங்களை சமர்ப்பிக்க, அனைத்தையும் பார்வையிட்டு ஒப்புக் கொண்டாள்.
குடும்பம் வேறு, தொழில் வேறு என்பதில் அனைவருமே உறுதியாக இருப்பதாலேயே இப்படியான பேச்சுக்களும் தயக்கமின்றி வெளிவரும்.
அனைவரும் பேசிமுடிக்க, “ஆ.. வவுறு கூவுது. ஏ மக்கா சாப்பிடப் போவமா?” என்று வேலு கேட்க,
“வீட்டுக்கு வாங்கண்ணே. சாப்பிட்டுப்போங்க” என்று கார்த்திகா அழைத்தாள்.
மணியைப் பார்த்தவன், “சரிமா வரேம்” என்று கூறி, “போவமாலே?” என்று வளவனைப் பார்க்க,
“நீங்க போங்க. நான் ஓரெட்டு மகா அத்தான்னைப் பாத்துட்டு வரேம்” என்றான்.
“என்னத்துக்குலே? அவுக சாப்பிடப்போயிருப்பாவ. நீயும் வா. சாப்டு போய் பாப்பம்” என்று வேலு அழைக்க,
‘இவன் வேற வெவரம் புரியாம’ என்று நினைத்துக் கொண்டு, “நீ போலே. நான் பொறவு வாரேம்” என்று கண்களை உருட்டிக் கூறினான்.
‘ரைட்டு. மாப்ள ஏதோ காரணமாத்தேன் சொல்லுது’ என்று நினைத்தவன், “சரி வா தங்கபுள்ள” என்று எழுந்து விக்ரமனைப் பார்க்க,
அவனும் எழுந்துகொண்டான்.
மூவருமாக புறப்பட, இவனும் வெளியே வந்து ரப்பர் தோட்டத்திற்குச் சென்றான்.
‘ஏட்டி.. பசிக்கு. எங்க இருக்க?’ என்று எண்ணியபடி அலைபேசியை நோண்டிக்கொண்டு வந்தவனை நோக்கி, தோட்டத்து வாசலிலேயே, ‘ஸ்விக்கி’ என்ற உணவு வினியோகத்தாரின் உடையில் நின்றிருந்த பெண் வந்தாள்.
“சார் உங்களுக்கு ஃபுட் வந்துருக்கு” என்று கூற,
“நான் ஏதும் ஆர்டர் பண்ணிலேயே” என்று அசட்டையாய் கூறினான்.
“நீங்க தானே திருமால்?” என்று அந்த பெண் கூற,
அந்தப் பெயரும் குரலும் அவன் மூளைக்குள் மணியடித்தது.
சட்டென நிமிர்ந்து பார்க்க, தலைகவசம் மறைக்காத மாண் விழிகள் தலைவன் மனக்கவசம் உடைத்து ஊடுருவியது.
சுற்றி முற்றிப் பார்த்தவன் அவள் கரம் பற்றி தோட்டத்திற்குள் மறைவாய் அழைத்துவர,
பதறிப்போனவள், “ஏங்க.. சாப்பாட பிடிங்க. பிரேக் முடியுமுன்ன நான் ஆபிஸ்கு போகனும்” என்றாள்.
அவளைத் தலைமுதல் கால் வரைத் தன் பார்வையால் அலசியவன், “இதான் அந்த சர்பிரைஸா?” என்று கேட்க,
“ஏன் சர்பிரைஸா இல்லையா?” என்று கேட்டாள்.
இதழ் மடித்த சிரிப்போடு அவளைப் பார்த்து, “இல்லாமப் போவுமா?” என்றவன், “இவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு?” என்று கேட்டான்.
“ம்க்கும். இப்ப நீங்க வாங்கிக்கலைனா வச்சுட்டு ஓட்டமா ஓடிடுவேன்” என்று மெல்லிய குரலில் அவள் முனகலாய் கூற,
அவள் கண்களில் அப்பட்டமான அச்சம் தெரிவதைக் கண்டான்.
அதில் சிரித்துக் கொண்டவன் கை நீட்ட, தான் கைமணக்க தயாரித்த மட்டன் பிரியாணியை அவனிடம் சேர்ப்பித்தாள்.
“தேங்ஸ்” என்று அவன் கூற,
புன்னகைத்துக் கொண்டாள்.
“சாப்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என்று ஆசையாய் அவள் கேட்க,
“சொல்லிடுவம்” என்றான்.
அதற்குமேல் இருப்பாளா அவள்? ஓடாத குறையாய் அங்கிருந்து சென்றவள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு புறப்பட்டிருந்தாள்.
செல்பவளை சிறு புன்னகையோடு பார்த்தவன், தோட்டத்தில் இருக்கும் சின்ன ஓட்டு வீட்டிற்குச் சென்றான்.
அங்கே உள்ள கிணற்றில் தண்ணீர் மொண்டு முகம், கை, கால் எல்லாம் கழுவிக் கொண்டு, நீர் பருகியவன் சென்று அவள் கொடுத்த உணவைப் பிரிக்க, சின்னக் காகித அட்டை ஒன்று அதில் இருந்தது.
அதை எடுத்துப் பார்க்க, ‘எனக்குக் காரம் சமைச்சும் பழக்கமில்ல சாப்பிட்டும் பழக்கமில்லை. நீங்க காட்டமா கேட்டதால கூடத்தான் மிளகா வச்சு அறைச்சேன். காரம் கொறச்சோ கூடயோ இருந்தா மன்னிச்சுகிடுங்க’ என்று எழுதியிருந்தது.
புன்னகையுடன் அந்த அட்டைக்கு ஒரு முத்தம் வைத்தவன் உணவைத் திறக்க, பிரியாணி வாசம் அவன் நுரையீரலைக் காதலோடு முத்தமிட்டுத் தழுவியது.
உணவை அள்ளி முதல் வாய் அவன் வாயில் வைக்க, அவன் வீட்டில் சமைப்பதைப் போல் காரமில்லை என்றாலும், காரம் இருக்கத்தான் இருந்தது.
‘இதுவே காட்டமா? எப்பிடிடி நம்ம வீட்ல சாப்பிடப்போற?’ என்று உண்மையில் அவளுக்காக மனம் பதைபதைத்தாளும், அவள் குடுத்த உணவை ருசித்து ரசித்து, அதன் காதலை ஆழ்ந்து அனுபவித்தவனுக்கு மற்ற சிந்தனைகள் எல்லாம் பின்னுக்குச் சென்றுவிட்டன.
ஒவ்வொரு வாயையையும் ரசித்து உண்டவன், உணவை முடித்து பாத்திரத்தைக் கழுவியதும், அவளுக்கு, ‘அற்புதமா இருந்துச்சு மித்து’ என்று மனமார செய்தி அனுப்பினான்.
அதைப் பார்த்து மனமார புன்னகைத்தவளும் நன்றி அனுப்புவிட்டுக் குதூகலத்துடன் பணியைத் தொடர்ந்தாள்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த வளவனைப் பார்த்த வடிவேலு, “என்னம்லே அத்தானப் பாத்தாச்சா?” என்று கேட்க,
“ம்ம்.. பாத்தேம்லே” என்று அவன் அருகே அமர்ந்து தோளில் கரம் போட்டான்.
அவன் கரத்திலிருந்து பிரியாணியை வாசம் பிடித்தவன், “அத்தான் பிரியாணி போட்டாவ போல?” என்று நக்கலாய் கேட்க,
“ஆமாலே அங்கனயே சாப்பிட்டுப்போவ சொன்னாவ” என்று கூறினான்.
அந்நேரம் பார்த்து “சாப்பாடு சூப்பருத்தா” என்று கூறியபடி சமையலறையிலிருந்து கரத்தைத் துண்டில் துடைத்துக்கொண்டு மகாதேவன் வெளியே வர, வளவன் அவரைக் கண்டு பேய் விழி விழித்தான்.
அங்கு வந்த கார்த்திகா, “என்ன கொழுந்தரே.. அண்ணாவ பாத்தாச்சா?” என்று கேட்க,
அவன் கட்டிவிட்டக் கதையைக் கார்த்திகா வழி கேட்டிருந்த மகாதேவனும் நமட்டு சிரிப்போடு அவனைப் பார்த்து நின்றார்.
“அட தங்கபுள்ள நீ என்ன? அவன் அத்தானுக்கு நீயு சுண்டவத்தக் கொழம்புதேம் ஊத்திருக்க. அவேம் அத்தான் மச்சானுக்கு பிரியாணி போட்டிருக்காவ” என்று நண்பனின் கையைப் பிடித்து ஆட்டியபடி வடிவேலு கேலி செய்ய,
மகாதேவன் வாய்விட்டு சிரித்தான்.
“ஆனாலும் ஒரு கூரோட நீயு ப்ளான் போட்டிருக்க வேணாமாலே? ஒரு வார்த்த இந்த அத்தாங்கிட்ட சொல்லிருந்தா நானும் இங்கன வராம வேற எங்குட்டாது போயிருப்பேம்” என்று மகாதேவன் சிரித்தபடி கூற,
“அய்யோ அத்தான்.. நீங்களுமா?” என்று அவர் கேலியில் மனதோடு சிணுங்கினான்.
“அட என்ன அண்ணே நீங்க? பொறவு மட்டன் பிரியாணிக்கு நீங்க பங்குக்கு வந்துட்டீயனா என்ன செய்ய?” என்று வடிவேல் சிரிக்க,
“அப்புடி நெனச்சிருப்பியானோ?” என்று கேட்டவர், “லேய்.. அம்புட்டுக்கு வெவஸ்தகெட்டவேம் இல்லலே. அதுலாம் ஓம் அவிய ஒனக்காவ குடுத்தது. அதுலலேம் பங்கு கேட்டு வரமாட்டியேம் ஆமா” என்று சிரித்தான்.
அதில் முகம் சிவக்கப்பெற்ற வளவன், “போங்கய்யா எனக்கு வேல கெடக்கு” என்று மேலே சென்றுவிட,
“பய காதல் மோடுக்கு வந்துபுட்டான்” என்று கூறி வடிவேலு சிரித்தான்.
அறைக்குத் திரும்பிய வளவன் முகம் அத்தனை பூரித்து இருந்தது.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவன், ‘காதல் ரொம்ப அழகானதுடி மித்ரா… அதுபத்தித் தெரியாமயே அத எனக்கு உணரவச்சுட்டு இருக்க’ என்று எண்ணிக் கொள்ள, அவன் உள்ளம் உவகையில் பூத்திருந்தது.
சரியாய் அந்நேரம் பார்த்து அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததாய் ஓசையெழ, அதையெடுத்துப் பார்த்தான்.
அவளிடமிருந்து ஒரு சிரிக்கும் பொம்மை செய்தியில் வந்திருந்தது. அவள் சுயவிவரப்படத்தைச் சுற்றி பச்சை நிற வளையம் சுற்ற, அவள் நிலைபாடு வைத்திருப்பதைத் தனக்குத் தெரியப்படுத்தத்தான் இந்த குறுஞ்செய்தி என்று புரிந்தது அவனுக்கு.
சிறு புன்னகையுடன் அவன் அதைத் திறக்க,
‘கனவு கண்டு எந்தன்
கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள்
மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவே உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே‘ என்ற பாடல் ஒலித்தது.
அதைக் கண்டவன் இதழ்கள் பூவாய் மலர்ந்து, தன்னைப் போல் பாடலை முனுமுனுக்க,
இதய வடிவங்களை அதற்கு பதிலாய் அனுப்பினான்.
அதைக் கண்டு முகம் சிவந்தவளும், ‘இதுவும் நல்லாதான் இருக்கு’ என்று நினைத்துக் கொள்ள,
இவர்களை வைத்து விதி ஆடப்போகும் ஆட்டம் சற்றுத் தொலைவில் நின்று கேலியாய் சிரித்துக் கொண்டது.

