Loading

“ஹாய்கா!”

அகமொழியின் குரல் கேட்டதும் திரும்பிய அன்விதா முறுவலித்தாள்.

“நீ தூங்கலையா அகா?”

“ப்ச், தூக்கம் வரல… நீங்க தூங்கல?”

“இல்ல, அமையாவும் சீக்கிரம் தூங்கிட்டா…”

“ம்ம்… ப்ரோவும் இல்லைன்னு தூக்கம் வரலையா?” அகமொழி கிண்டல் செய்ய, அதற்கும் அதே முறுவல் தான்.

“அர்ஜி வந்துட்டாரே… அப்போ இங்க என்ன உலாத்திட்டு இருக்க?”

“சும்மா தான்!” என்றவளும் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து காலை ஆட்டினாள்.

மரங்களும் செடிகளும் சூழ இருந்த தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அகமொழியிடம், “உனக்கும் அர்ஜிக்கும் எல்லாம் ஓகேவா அகா?” என வினவினாள்.

“ம்ம்… ஓகே மாதிரி தான் இருக்கு.” கண்ணடித்துச் சிரித்தவளை முறைத்த அன்விதா,

“நீங்க சேர்ந்து குளிக்கும்போதே தெரிஞ்சுது…” என்றாள் நக்கலாக.

அதில் கன்னம் சிவந்து போக, “அவன் வேணும்னே என்னை மாட்டி விட்டுட்டான்கா…” எனச் சிணுங்கினாள்.

அன்விதா சிரித்தபடி, “இன்னும் நைட்டு வாந்தி எடுக்குறியா அகா?” எனக் கேட்க,

“க்கா…” இன்னுமாக சிணுங்கியவள், “அதெல்லாம் இல்ல…” என்றாள்.

“அப்போ நெக்ஸ்ட் ஸ்டெப் போயாச்சா?”

“ம்ம்… போயாச்சு போயாச்சு…” சற்றே சலிப்பாகக் கூறியதில் அன்விதா புருவம் சுருக்கினாள்.

“உனக்கு எல்லாம் ஓகே தான?”

“ப்ச், இந்தத் தமிழ் சினிமா நம்மளைக் கெடுத்து வச்சுருக்கானுங்ககா. மூவில பர்ஸ்ட் நைட்னா, பொண்ணு வெட்கத்தோட உள்ள போகும். பால் சொம்பு தரையில உருளும். காலைல பொண்ணு வெட்கத்தோட வெளில வரும். இதைக் காட்டி மோசம் பண்ணிட்டானுங்க. இதுல இப்படி எல்லாம் சட்ட சிக்கல் இருக்கிறதை எனக்கு எவனுமே சொல்லலகா…” எனக் காலைக் குறுக்கி அமர்ந்து புலம்பித் தள்ளியவளைப் பாவமாகப் பார்த்தாள் அன்விதா.

“என்னாச்சு அகா… உனக்குப் பிடிக்கலையா?” வருத்தம் நிறைந்தது அவள் குரலில்.

“பிடிக்கலைன்னுலாம் இல்ல…” நேரடியாகப் பிடித்ததைக் கூற சின்னதொரு ஈகோ.

“அர்ஜி ரொம்ப போர்ஸ் பண்றாரா?”

“ச்சே ச்சே… அப்படி எல்லாம் இல்ல.” உடனே மறுத்தாள்.

“அப்போ என்ன பிரச்சினை?” எனக் கேட்டவளைக் கண்டு திருதிருவென விழித்தாள்.

‘இதை எப்படிச் சொல்ல முடியும்’ எனச் சின்ன தயக்கம் அவளுக்கு.

அவளது விழியில் சற்றே சங்கடம் எழ, “அது… இதைப் பத்தியெல்லாம் பெரியவங்ககிட்ட பேச முடியாது. அதான்… சொல்ல வேணாம்னா வேணாம்…” என்ற அன்விதா உடனே எழுந்து கொள்ள, அகமொழி உடனே அவள் கையைப் பிடித்து அமர வைத்தாள்.

“அட உக்காருங்க. இதென்ன சிதம்பர ரகசியமா! உங்ககிட்ட சொல்ல என்ன இருக்கு…” எனச் சுற்றி முற்றிப் பார்த்தவள், அவளது பிரச்சினையைக் கூற, அன்விதா கனிந்தாள்.

“ஆரம்பத்துல அப்படி இருக்கும். சரியாகிடும் அகா.”

“ப்ச்… ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன். ஏதாச்சு டிப்ஸ் குடுப்பீங்கன்னு பார்த்தா நீங்களும் அகன் மாதிரியே சொல்றீங்க…” என்றதில் அன்விதா நெளிந்தாள்.

“நான் என்ன டிப்ஸ் கொடுக்குறது?”

“சரியா போச்சு. நீங்க தான் லவ் மேரேஜ் ஆச்சே! நீங்க இது மாதிரி ஏதாச்சு ஃபேஸ் பண்ணிருக்கீங்களா? ஒருவேளை லவ் மேரேஜ்னா, இது இன்னும் கம்ஃபர்ட்டபிளா இருந்திருக்குமோ? அரேஞ்ச் மேரேஜ்னா இவ்ளோ பிரச்சினையா?” எனத் தேவையின்றி எதை எதையோ இணைத்துப் புலம்பியவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“அப்படி எல்லாம் இல்ல அகா. அர்ஜி உன்னைப் புரிஞ்சு டைம் தர்றாரு தான… அப்பறம் என்ன?”

“அது தான் பிரச்சினையே. அவன் ஃபோர்ஸ் பண்ணிருந்தா கூட போடா பட்டர்னு போயிருப்பேன். இப்போ அவன் எனக்காக யோசிச்சு பண்றது எனக்கு ஒரு மாதிரி… ம்ம்… சம்திங்… லைக்…” எனச் சொல்ல இயலாமல் தவித்தவள், “அவனை மொத்தமா பிடிச்சுருமோன்னு பயமா இருக்குகா…” என்றாள் முழு சரக்குப் பாட்டிலை முழுதாய்க் காலி செய்தது போன்று.

“பிடிச்சா நல்லது தான?”

“தெரியலை எனக்கு…” என்றவளுக்கு எதையும் யோசிக்கவே பிடிக்கவில்லை.

“நீ தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்காத அகா… அப்படி ஃபோர்ஸ் பண்ணுனா உன்னால ஹேண்டில் பண்ண முடியாது. பெயின் ஆல்ரெடி அதிகம் இருக்குன்னு சொல்றீல.”

“ம்ம்… புரியுது. கண்டினியூ பண்ணுனா நான் போய் சேர்ந்துடுவேன் போல. எல்லாருக்கும் அப்படி தான் இருக்குமா?” அன்விதாவிடம் பதில் தெரியக் கேட்டவளிடம்,

“சிலருக்கு ரொம்ப சென்சிட்டிவா இருக்கலாம்டா. நானும் இதை ஃபேஸ் பண்ணிருக்கேன்…” என்றாள்.

“அப்போ எப்போ சரியாச்சு உங்களுக்கு?” அகமொழியின் கேள்வியில்,

“இப்ப வரை சரி ஆகலை…” என்றவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.

“புரியல!”

அன்விதா பெருமூச்சுடன் மீண்டும் நிலவின் மீது பார்வையைப் பதித்தாள்.

“நானும் விஷ்ணுவும் லவ் மேரேஜ் தான். என் காலேஜ் சீனியர் அவரு. என்மேல ரொம்ப இஷ்டம் அவருக்கு. எனக்கும்தான். என் அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க. அப்பா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. சித்தி கொடுமை இருந்துச்சுன்னு சொல்ல மாட்டேன். இருந்தா பார்த்துப்பாங்க. மத்தபடி ரொம்ப என் விஷயத்துல தலையிட மாட்டாங்க. நானும் அவங்க கூட பெர்சனலா அட்டாச் ஆக முடியாது. மத்தபடி அவங்களால எனக்கு மனக்கஷ்டம்லாம் வந்தது இல்லை தான்.

விஷ்ணுவை விரும்புனது தெரிஞ்சதும் அப்பா சித்தி எல்லாம் ஒன்னும் சொல்லல. இங்கயும் ஒத்துக்கிட்டாங்க. சோ, காலேஜ் முடிச்சதும் எனக்குக் கல்யாணம் முடிஞ்சுடுச்சு.

காதலிச்சப்ப ரொம்ப கேரிங்கா தான் இருந்தாரு.

கல்யாணத்துக்கு அப்பறம்… அவரோட எக்ஸ்பெக்டேஷன்குள்ள என்னால வர முடியல…” என நிறுத்தியவளை இன்னுமே புரியாத பாவனையுடனே பார்த்தாள் அகமொழி.

அன்விதா சுற்றி முற்றி ஒரு முறை பார்த்து விட்டு, “விஷ்ணுக்கு ரொம்ப ஹார்ஷ் ரிலேஷன்ஷிப் தான் இஷ்டம் போலருக்கு. எனக்குப் புரியல முதல்ல. ஃபர்ஸ்ட் நைட் அப்போ, எனக்கும் உன்னை மாதிரி தான் ரொம்ப பெயின் தாங்க முடியல. ப்ளீடிங் ஆக ஆரம்பிச்சுடுச்சு. என்னால முடியலனு சொல்லியும் அவர் ஸ்டாப் பண்ணவே இல்ல.

அதுவும் ஃபர்ஸ்ட் டைமே ரொம்ப முரட்டுத்தனமான ரிலேஷன்ஷிப்பை நான் சுத்தமா எதிர்பார்க்கல. எனக்கு இப்படி செ***க்ஸ் வச்சுக்க தான் பிடிக்கும்னு சொல்றவருக்கு என் வலிய நான் எப்படி புரிய வைக்கறதுன்னு நிஜமாவே எனக்குப் புரியல.

சரி ஃபர்ஸ்ட் டைம் அப்படி இருக்கும்னு வலியைப் பொறுத்துட்டேன். ஆனா, முடியல. ஃபர்ஸ்ட் நைட்லயே ஆறு தடவை…” பேச முடியாமல் நிறுத்தியவளுக்கு கண்ணீரேதும் வரவே இல்லை.

கேட்பவளுக்குத் தான் அடிவயிறு கலங்கியது.

“விடிஞ்சதும் உயிரோட இருக்கேனான்னு தான் முதல்ல செக் பண்ணேன். ‘உன் மேல ரொம்ப ஆசை, என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை’ன்னு சொல்றவர்கிட்ட எப்படி பேசுறதுன்னு கூட தெரியல. அடுத்த மூணு நாளும் இதே கதை தான். அவருக்கு வகை வகையா வேணும் எல்லாமே!” அதற்கு மேலும் ஆழமாக எப்படி அவளுக்குப் புரிய வைப்பது என அவளுக்கும் தெரியவில்லை.

“அவர் அப்போ வேலை விஷயமா வெளியூர் போயே ஆக வேண்டிய கட்டாயம். என்னை விட்டுப் பிரிஞ்சு போக மனசே இல்லாம கிளம்புனாரு. எனக்கும் அதே மாதிரி தோணனும்ல… கல்யாணம் ஆகி மூணு நாள்ல காதலிச்சு கல்யாணம் பண்ணுன புருஷன் வெளியூர் போனா கவலை வரணுமே! ஆனா எனக்கு நிம்மதி தான் வந்துச்சு. நான் பெருசா கவலைப்படலைன்னு அவருக்குக் கோபம். இதே பிரணீ பிஜி படிக்க அப்ராட் போறப்ப மட்டும் நீ கண்ணீர் விட்டல்லன்னு சம்பந்தமே இல்லாம கம்பேர் பண்ண ஸ்டார்ட் பண்ணாரு.

ஒரு வாரம்னு போனவருக்கு வேலை பதினஞ்சு நாளாகி இழுத்துருச்சு. எனக்கு பொதுவாவே பீரியட்ஸ் 28-ஆவது நாள் வந்துடும். அப்போ எனக்கு முப்பது நாள் ஆனதுல, எனக்கு கொஞ்சம் டவுட் இருந்துச்சு. அதே மாசமே எனக்கு நாள் தள்ளிப் போயிருந்துச்சு. அவர் ஊர்ல இருந்து வந்ததும், முதல்ல என்னை முரட்டுத்தனமா தான் கட்டிப்பிடிச்சாரு. அப்பறம் அவரை நிதானப்படுத்தி நாள் தள்ளிருக்கோன்னு டவுட்டா இருக்குன்னு சொன்னேன்.

கல்யாணம் ஆகி 18 நாள் தான் ஆகுது. ரெண்டு பேரும் மூணு நாள் தான் ஒண்ணா இருந்தோம், அப்பறம் எப்படி நீ கன்சீவ் ஆனன்னு கேட்டாரு.

இப்ப நினைச்சா அந்தக் கேள்விக்குக் கோபம் வருது. ஆனா அப்போ எந்த அர்த்தத்துல கேட்டாருன்னு கூட புரியல. என் பீரியட்ஸ், ஓவுலேசன்னு எல்லாத்தையும் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுத்தேன். அவர் சிம்பிளா, அபார்ட் பண்ண சொல்லிட்டாரு.

‘இப்ப தான் கல்யாணமே பண்ணிருக்கோம், மேரேஜ் லைஃபை என்ஜாய் கூட பண்ணல’ன்னு சொன்னதும் எனக்கு பக்குன்னு இருந்துச்சு. அபார்ட் பண்ணுனா மறுபடியும் அந்த ஹெவி ரிலேஷன்ஷிப்க்கு போகணும்னு பயந்து அம்மைகிட்ட நாள் தள்ளிருக்குன்னு சொல்லிட்டேன். அவங்க உடனே விஷ்ணுக்கு அட்வைஸ் பண்ணி, கேர்ஃபுல்லா இருக்கணும்னு சொன்னதும், விஷ்ணு என்மேல கோபப்பட்டாரு.

‘யாருக்கும் தெரியாம அபார்ட் பண்ணிருக்கலாம், நீ ஏன் சொன்ன’ன்னு சண்டை…

‘லவ் பண்றப்ப நீங்க இப்படி இல்லை’ன்னு அழுதேன். அவரும், ‘லவ் பண்றப்ப நீ இப்படி புருஷன் கூட படுக்குறதுக்கு கூட அசமந்தமா இருப்பன்னு நானும் தான் நினைக்கல’ன்னு சொன்னதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

அப்பறம், இதைப் பத்திக் கவலைப்பட அமையா விடல. பிரெக்னன்சி ஆரம்பிச்சதுல இருந்து அரை மயக்கத்துலயே தான் இருந்தேன். அம்மை தான் வந்து வந்து சாப்பாடு குடுத்துட்டு போவாங்க. அதையும் வாந்தி எடுத்துடுவேன். அந்த நேரத்துல அம்மையும் முத்தச்சியும் இல்லைன்னா கேட்க நாதி கூட இருந்துருக்காது. விஷ்ணு என்னை சுத்தமா பார்க்கல. அவர் முன்னாடி மயங்கி விழுந்தா கூட என்னன்னு கேட்க மாட்டாரு.

‘உன் இஷ்டத்துக்குக் குழந்தை பெத்துக்க போனல்ல, உன்னை நான் ஏன் கேர் பண்ணிக்கணும்’னு அவருக்கு எண்ணம்.

ஏழு மாசத்துல அப்பா வீட்டுக்குப் போய்ட்டேன். சித்தியும் நல்லா தான் பார்த்தாங்க. ஆனா அமையா பிறந்து மூணு மாசம் ஆகியும் விஷ்ணு வந்து பார்க்க கூட இல்ல…” அன்விதா தன்போக்கில் மனதில் புதைத்து வைத்திருந்த அழுக்கை எல்லாம் அவள் தலையில் கொட்டிக்கொண்டிருக்க, அகமொழிக்கு நெஞ்சே அடைத்தது.

கண்ணில் நீர் திரள, முயன்று அடக்கிக் கொண்டவளுக்கு விஷ்ணு மீது அத்தனை கோபம்.

“ஏன், அகன் தப்பு பண்ணான்னு அத்தைக்குப் பேசாம இருக்க தெரியுதுல… விஷ்ணு உங்களைப் பார்க்க வரலைன்னா திட்ட மாட்டாங்களா…” சற்றே சத்தமாகப் பேச, “உஷ் உஷ்! கத்தாத அகா…” என்றாள் வாயைப் பொத்தி.

“அம்மைகிட்ட என்னைப் பார்க்க போறதா விஷ்ணு சொல்லுவாரு. ஆனா என்னைப் பார்க்க வரமாட்டாரு. அம்மையும் விஷ்ணு வந்தாரான்னு கேட்பாங்க. அவங்களை கஷ்டப்படுத்த வேணாம்னு நானும் வந்தாருன்னு சொல்லிடுவேன்.”

“ஏன் உங்க வீட்டுல கேட்க மாட்டாங்களா?”

“அதான் சொன்னேனே… என் வீட்டுல நான் இருக்கலாம். ஆனா என் விஷயத்துல அவங்க தலையிட மாட்டாங்க. அவங்க விஷயத்துல நான் தலையிடக் கூடாது…” என்றாள் கசந்த முறுவலுடன்.

அவளை ஆதங்கத்துடன் பார்த்தவள், “சரி, அந்த மகாராஜா எப்ப வந்தாரு பார்க்க…” எனக் கோபத்தை அடக்கிக் கேட்க, அன்விதா பெருமூச்சு விட்டாள்.

“மூணு மாசம் முடியும் போது வந்தாரு… அப்பவும், நான் தான் அவர்கிட்ட சாரி கேட்டு சமாதானம் பண்ணுனேன். லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணியாச்சு, அதை நல்ல படியா கொண்டு போகணும்னு முடிஞ்ச அளவு முயற்சி பண்ணுனேன். அப்பவும், அவர் என்னை ரொம்ப மிஸ் பண்றேன்னு சொன்னதும் மனசு உருக தான் செஞ்சுச்சு.

அவர் என்கூட ரிலேஷன்ஷிப் வச்சுக்க ட்ரை பண்ணப்ப, ‘சிசேரியன் ஆகி மூணு மாசம் தான் ஆகுது, பார்த்து விஷ்ணு’ன்னு சொல்லி தான் சம்மதிச்சேன்.

ஆனா அப்பவும் அவர் அந்த முரட்டுத்தனத்தை விடல. என்னால சுத்தமா முடியல. ரொம்ப வலி தாங்க முடியாம கத்திட்டேன். அதுல அமையா அழுக ஆரம்பிச்சுட்டா. அவருக்கு மூட் அப்செட் ஆனதுல அந்தக் கோபத்தையும் என்கிட்ட காட்டிட்டு தான் போனாரு.

இந்த ஆறு வருஷமும் என் லைஃப் இப்படி தான் போயிட்டு இருக்கு. எனக்கும் அவருக்கும் நடந்த ரிலேஷன்ஷிப்பை விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா, அது சந்தோஷத்தை விட வலியை மட்டும் தான் தந்துருக்கு. அமையா பிறந்தப்பறமும் என்னால அவரை ஹேண்டில் பண்ண முடியல. வேற வழி இல்லாம, அமையாவை நைட்டு லேட்டா தூங்க வைக்க பழக்குனேன். எப்பவும் இந்த பயத்துல இருக்குறதுனாலயோ என்னவோ என்னால அமையாட்ட அதிகமா பேச கூட முடியல. அதுனாலயே அவளுக்குப் பேச்சு சரியா வரலையோன்னு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும்.

விஷ்ணு இந்த ஒரு காரணத்தை வச்சே தினமும் குத்திக் காட்டிட்டு இருப்பாரு. அன்னைக்கு உங்க முன்னாடி பேசுனதுக்கு கூட இதான் காரணம்…” எனப் பேசி முடித்தாள்.

அகமொழிக்கு இப்படி ஒரு வாழ்க்கையை எண்ணவே அச்சம் ஊறியது.

“இல்ல புரியல… இந்த வாழ்க்கையை ஏன் நீங்க அக்செப்ட் பண்ணிக்கிறீங்க? இப்படி ஒரு டாக்சிக் மேரேஜ் உங்களுக்கு வேணுமா?” என நேரடியாகக் கேட்டு விட்டாள்.

“ப்ச், வேற என்ன பண்ண சொல்ற… நானா எடுத்த முடிவு, அது தப்பாகும்போது அதுக்கான தண்டனையையும் நான் தான அனுபவிக்கணும்.”

“ம***யிறு முடிவு…” பொசுக்கென கெட்ட வார்த்தையில் அவளைத் திட்டியவளை பே’ வென பார்த்தாள் அன்விதா.

“நல்லா அசிங்கமா சொல்லிடுவேன் ஏதாச்சு… வாழ்க்கை முழுக்க அப்படியே நல்ல முடிவா எடுத்து தள்ளிடுவோமாக்கும்! இங்க பாரு அன்வி, ‘வாழ்க்கை ஒரு தடவை தான். அதுல சரியான முடிவு எடுக்கலைன்னா அப்பறம் முடிவே எடுக்க முடியாது’ன்னு உருட்டுறதை எல்லாம் என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது.

வாழ்க்கைன்றதே, கல்யாணம் ஆகிடுச்சு இனி அவ்ளோ தான், குழந்தை பிறந்துருச்சு இனி அவ்ளோ தான் அப்டினு நிக்காது. நம்ம லாஸ்ட் மூச்சு வரை இந்த வாழ்க்கை நமக்கு தான். நம்ம அனுபவிச்சு வாழ தான். அதுல தப்பான முடிவை எடுத்தா, ‘ஆமா தப்பாகிடுச்சு, இனி சரியான முடிவை எடுக்குறேன்’னு மூவ் ஆன் ஆகிடணும்.

வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு செகண்ட் சான்ஸ் தரும் அன்வி. தரலைன்னாலும் நாம உருவாக்கணும்.

யூ டிசர்வ் பெட்டர் லைஃப்! உனக்கும் எனக்கும் இருக்குற உறவுக்காக தான் மரியாதை குடுத்தேன், ஆனா அந்த உறவு எனக்குப் பிடிக்கல. நீ எனக்கு அன்வியாவே இரு…” என்றவளை ஆதூரமாகப் பார்த்தாள்.

“நீ எமோஷனலா பேசுற அகா. பிராக்டிகலா எப்படி செட் ஆகும்னு நினைக்கிற? நினைச்சதும் எல்லாம் தூக்கிப் போட்டு போக முடியாதுடா. மூவ் ஆன் ஆகுறது கஷ்டம். அமையா இருக்கா… அவளுக்குன்னு ஒரு குடும்பம் வேணும். முதல்ல என்ன காரணம் சொல்லுவ? இதைக் காரணமா சொன்னா, அதுவும் ஆறு வருஷம் கழிச்சு சொன்னா அசிங்கம் எனக்கு தான்…” என்றாள் நிதானமாக.

“இங்க பாருடா… நான் ஒன்னும் புரட்சிப் பெண்மணி எல்லாம் கிடையாது. ஆனா அதுக்காக இந்த அளவு பொறுமையா போகணும்னு அவசியமும் கிடையாது. என்மேல கொலை வெறியில தான் கல்யாணம் பண்ணுனான் அகன். அவன் நினைச்சா என்னைக் கஷ்டப்படுத்த முடியும். அவனால என்னைக் கஷ்டப்படுத்த முடியும்னு கூட எனக்கு இப்ப தான் தெரியுது. ஆனா இதுனால என்னை ஹர்ட் ஆக்க முடியும்னு அவனுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும். அப்படியும் அவன் டீசண்டா விலகுறான்னா, அவனுக்கு மட்டும் ஃபீலிங்ஸ் இல்லையா? அவன் என்ன முற்றும் துறந்த முனிவரா?

அவன் எனக்குக் குடுக்குற செல்ஃப் ரெஸ்பெக்ட்! இதுனால அவன் மட்டுமே சந்தோஷத்தை அனுபவிக்கக் கூடாது, நானும் அதே ஹாப்பினஸை ஃபீல் பண்ணணும்னு அவன் நினைக்கிறதுனால தான், இந்த டிஸ்கம்ஃபர்ட்டை அவன் ஏத்துக்குறான்.

அப்போ விஷ்ணுவும் அதே தான் பண்ணணும்னு நான் சொல்ல மாட்டேன். பட், உன்னை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணவன், உன்னைப் புரிஞ்சு, உன்னை ஃபிஸிக்கலா கரெக்ட்டா ஹேண்டில் பண்ணிருக்கணும். அது பண்ணலைன்னா அங்க செல்ஃப் ரெஸ்பெக்ட் இல்லைன்னு அர்த்தம். கடைஞ்செடுத்த சுயநலவாதம் மட்டும் தான் அங்க இருக்கு.”

பின் லேசாய் இதழ் வளைத்தவள், “நினைச்சதும் மூவ் ஆன் ஆக முடியாதா? ஹ்ஹம்! நீ ஆல்ரெடி மூவ் ஆன் ஆகிட்ட அன்வி. ஏன்னா நீ விஷ்ணு மேல இருந்த காதலைப் பத்தி யோசிக்கல. அமையா பத்தியும் அவனைப் பிரிய சரியான காரணத்தை மட்டும் தான் யோசிக்கிற…” என்றாள் அழுத்தமாக.

அவளிடம் அதிர்வெல்லாம் இல்லை.

“நான் மனசளவுல மூவ் ஆன் ஆகிட்டேன் தான்… இல்லைனு சொல்லல அகா. இந்த வாழ்க்கை எப்பவோ வெறுத்துடுச்சு. காதல் எல்லாம் சத்தியமா இல்லை. இப்ப விஷ்ணுவைக் காதலிச்சேனான்னே எனக்கு டவுட்டா தான் இருக்கு. பட் பிராக்டிகலா, என்னால என் வீட்டுக்குப் போக முடியாது. இங்கேயும் இருக்க முடியாது. எங்க போறது அகா? கேரியர் கேப் ஆகிடுச்சு. அமையா அப்பாவைக் கேட்பா… என்ன சொல்றது? இந்தக் குடும்பத்துல அவள் செட் ஆகிட்டா. இங்க இருக்குறவங்க என்மேல ரொம்ப அன்பா இருக்காங்க. எல்லாரையும் ஹர்ட் பண்ணணும்…”

“இதோ பாரு… அமையா ஒன்னும் காலம் முழுக்க உன் கையைப் பிடிச்சுட்டு வரப் போறது இல்லை. அவளுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அது கிடைச்சதும் தாயாவது பேயாவதுனு போயிடுவா! இங்க தனி மனுஷ வாழ்க்கை ரொம்ப முக்கியம் அன்வி. இந்த விஷ்ணு முன்னாடி, அவனை டைவர்ஸ் பண்ணிட்டு, வேற கல்யாணம் பண்ணிட்டு ரொமான்டிக்கா போட்டோ அனுப்பி வெறுப்பேத்து. அப்போ தான் அந்த சைக்கோக்கு உறைக்கும்…” என்றவளைத் திகைத்துப் பார்த்தாள்.

“நீ ஷாக் ஆகுறதைப் பார்த்தா கடைசி வரை இந்தக் கல்யாணத்தை நினைச்சுட்டே காலம் தள்ளப் போறியா?”

“அகா…” அன்விதா வேதனையாகப் பார்க்க,

“செருப்பு பிஞ்சுரும்! நீ வாழ்ந்தது ஒரு வாழ்க்கை… இந்தக் கருமத்துக்கு ஒரு கவலை வேற! தூக்கிப் போடுறதுன்னா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடணும் அன்வி. மிச்சம் மீதியைச் சுமந்துட்டு காலம் முழுக்க உன்னால வாழ முடியாது. இந்தப் பரந்த உலகத்துல உன்னைப் புரிஞ்சுக்குற ஒருத்தன் கண்டிப்பா கிடைப்பான். நீ உனக்காக வாழணும் அன்வி. அமையால இருந்து இந்தக் குடும்பம் வரை எல்லாரும் கஷ்டப்படுவாங்க… படட்டும்! பட்டு தெளியட்டும். அமையாக்கு புரியிற வயசு வர்றப்ப தெரிஞ்சுக்கட்டும். அவள் அஞ்சு வயசுக் குழந்தையாவே இருக்கப் போறது இல்லைல.

தூக்கிப் போடு அன்வி அந்த விஷ்ணுவை! எந்தப் பிரச்சினை வந்தாலும், பிரச்சினையா அகனே வந்தாலும் நான் பார்த்துக்கறேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அன்விதாவின் விழிகள் இப்போது தான் லேசாய் நனைந்தது. அகமொழி தன்மீது கொண்ட அன்பை எண்ணிக் கலங்கியவள், “ரொம்ப பிரச்சினை வரும் அகா…” என்றாள்.

“வரட்டும்! கலகம் வந்தா தான் வழி பிறக்கும்னு சொல்லுவாங்களே… பிரச்சினை பண்ணு. அந்த விஷ்ணு வீட்டுக்கு வந்து நிம்மதியாவே இருக்கக் கூடாது. சண்டை போடு. ‘எனக்கு ஏத்த புருஷனா நீ இல்லை’ன்னு சண்டை போடு.

தனியா வந்தப்பறம் எங்க போறதுன்னு எதுக்குக் கவலை உனக்கு? இதோ பாரு, அகனுக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும். விஷ்ணு உன்னை அன்னைக்கு பேசுனது பிடிக்காம எவ்ளோ கோபப்பட்டான் தெரியுமா? அவன் கண்டிப்பா உன்னை விடமாட்டான். அதை விட ப்ரோ… உன்னோட பெஸ்ட் பிரெண்ட்! அவர் உன்னை அம்போன்னு விட்டுடுவாரா?

வேலை இல்லைன்னா என்ன, என் கிளாம்பிங் பிசினஸ்ல நீ வந்து குதி. நம்ம சேர்ந்து பண்ணலாம். ஆப்ஷன் எல்லாம் நிறைய இருக்கு. யாருமே இல்லைன்னாலும் உனக்காக நான் இருப்பேன். அதுக்கான ஸ்டெப் நீ தான் எடுக்கணும்…” என்றாள் உறுதியாக.

“அகா… பிரணீக்கு இதெல்லாம் தெரிய வேணாம், ரொம்ப வருத்தப்படுவான். அவனுக்கு எனக்கு ஒரு கஷ்டம்னா தாங்கவே முடியாது…” என்றவளை அமைதியாகப் பார்த்தவள், “நானா சொல்ல மாட்டேன்…” என்றிட, நிம்மதி மூச்சு எழுந்தது.

“சரி நிம்மதியா தூங்கு. பட், நல்ல முடிவா எடு!” அகமொழி கூறியதில்,

அவள் கையைப் பிடித்துக்கொண்டவள், “தேங்க்ஸ் அகா… உனக்காக நான் இருப்பேன்னு விஷ்ணு கூட சொன்னது இல்லை…” என்றவளுக்குக் கண் கலங்கி நிற்க, வேதனையுடன் அவளை அணைத்துக்கொண்ட அகமொழிக்கும் கண் கலங்கியது.

“என்னவோ, ஆரம்பத்துல இருந்தே உங்கிட்ட ரொம்ப அட்டாச் ஆன ஃபீல். இனி நானும் உனக்கு பெஸ்ட் பிரெண்ட் தான், ஓகேவா? உக்காந்து ஒப்பாரி வச்சு டைம் வேஸ்ட் பண்ணாத. அதுக்கெல்லாம் ஒர்த் இல்லை…” என்று பேசி விட்டு அறைக்குச் சென்ற அகமொழிக்கு மூச்சு வாங்கியது.

அவளிடம் பயத்தை மறைத்துக் கொண்டாள். ஆனால், இப்போது நினைக்கவே நடுங்கியது. பாவம் எப்படி தான் சமாளித்தாளோ… மெல்ல மெல்ல உடல் நடுங்கிட, பயத்தில் அர்ஜித் அகனின் போர்வைக்குள் சுருண்டு அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அவள் அசைவினை உணர்ந்து அரை உறக்கத்தில் கண் விழித்தான்.

“எந்தாடி…?” எனக் கேட்க, “ம்ம்ஹும்…” எனும்போதே உடல் நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன், “எத்தினு ஷிவர் ஆகுன்னு? ஸ்வப்னம் ஏதேனும் கண்டுயோ? (ஏன் ஷிவர் ஆகுற? கனவு எதுவும் கண்டியா?)” எனக் கேட்டான்.

அப்போது கொடுக்க எண்ணிய முத்தத்தைத் தவிப்புடன் இப்போது கொடுத்தவள், “ம்ம்ம்…” பதில் பேச இயலாமல் ஆமோதிப்பாகத் தலையாட்டினாள்.

திடீரென நெற்றியில் முத்தமிட்டதில் அவனுக்கு உறக்கம் நன்றாகவே களைய, “செரி… ஒந்துமில்ல. உறங்கு!” என்று அவளது கூந்தலைத் தடவிக் கொடுத்தவன், தன்னிச்சையாக நெற்றி முத்தத்தையும் கொடுத்து ஆறுதல்படுத்த, அவனுடன் ஒன்றி விட்ட பிறகே, பயமும் நடுக்கமும் குறைந்தது அகமொழிக்கு.

அகன் வசமாவாள்(வான்)
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 90

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
83
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. So, அகன் playboy இல்ல.. அன்வி தைரியமாக முடிவெடுப்பாளா?

    இந்த lovebirds cho chweet💞💕💛💜💖