
திமிர்-15
அன்று காலையிலேயே தன் புல்லட்டை உதைத்துக் கிளப்பி, எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான் வீரபத்ரன்.
“ஏன்டா வீரபத்ரா! காலையில் காப்பியைக் கூட குடிக்க விடாமல், என்னத்துக்கு இப்படி அவசரப் படுத்துறே? அப்படி எங்குட்டுதேன் போறோம்.?” காலையிலேயே காபி கூடக் குடிக்காமல் அவசரப்படுத்துகிறானே என்ற அங்கலாய்ப்பு தெரிந்தது காத்தவராயனின் குரலில்.
“திண்டுக்கல் வரை போகணும் காக்காவிரட்டி! வெள்ளனே கிளம்பினால்தேன் சரியா இருக்கும். அப்பறம் உச்சி வெயிலில் உருகிப் போய்த்தேன் வீட்டுக்கு வரணும்.!”
“பேசாமல் காரை புக் பண்ணி, குளு குளுன்னு ஏசியில் போயிருக்கலாமே?”
“ம்க்கும்! இந்த ஊரில் கிடைக்கிற நெட்வொர்க் சிக்னலில், காரை புக் பண்ணி போய்ட்டு வந்த மாதிரிதேன்.! பைக்கிலேயே போய்ட்டு வந்துருவோம். வெரசா ஏறு.!”
“அப்போ போற வழியில், காப்பியும் உளுந்துவடையும் வாங்கித் தர்ரியா?”
“திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்குத்தேன் போறோம்! வாங்கித் தர்ரேன் வந்து தொலை!”
“இந்தாரு! அரசி மயனே.. அம்புட்டு சலிச்சுக்கிட்டு ஒண்ணும் நீ வாங்கித் தர வேணாம். நீ ஒத்தையிலேயே போய்ட்டு வா! நான் இங்கணையே இருந்துக்கிறேன்.!” வீம்பாய் வாகனத்திலிருந்து இறங்கினான் காத்தவராயன்.
“இந்த ரோசத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. வரலைன்னா போ! எனக்கு ஒண்ணும் நட்டமில்லை. எங்க அக்கா கயலு.., திண்டுக்கல்லுக்கு வந்தாலும் வருவாங்கன்னு நினைக்கிறேன். அதுக்குத்தேன் உன்னைக் கூட்டிப் போலாம்ன்னு பார்த்தேன். சரி, விடு காக்காவிரட்டி! அக்கா கிட்டே உங்க புருஷனுக்கு உங்களைப் பார்க்க பிரியமில்லைன்னு சொல்லிடுறேன்.!”
“என்டா கிறுக்குப் பிடிச்சவிங்களா! என் குடும்பத்துக்குள்ளே குண்டு வைக்கிறதுக்குன்னே வந்து சேருவீங்களா?! முன்னமே சொல்லிருக்கக் கூடாது, அயிர மீனு, ஆட்டுக்கறின்னு என்னத்தையாவது ஆக்கிக் கொண்டு வரச் சொல்லிருப்பேனே.! என் கயலு கைப்பக்குவத்தை நினைக்கும் போதே நாக்கு ஊறுதே! இவ வேற எட்டு ஊருக்கு மணக்க மணக்க சமைப்பாளே!” புலம்பியபடியே வாகனத்தில் ஏறி அமர்ந்தான் காத்தவராயன்.
“ஏன் காக்கவிரட்டி! யாரோ ஒருத்தர் திண்டுக்கல்லுக்கு ஒத்தைக்கு போகச் சொன்னாங்களே.. அவங்களை நீ பார்த்தே?!” நக்கலாய் கேட்டான் வீரபத்ரன்.
“எப்பா ராசா! தெரியாமல் சொல்லிட்டேன்டா! திண்டுக்கல் போய்ச் சேரும் வரை வாயே திறக்க மாட்டேன். நீ வண்டியைக் கிளப்பு ராசா!” என வீரபத்ரன் சிரித்துக் கொண்டே வண்டியைக் கிளப்பிய அதே நேரம், வாகனத்தின் குறுக்கே வந்து நின்றார் நாச்சியப்பன்.
“என்ன ஆச்சு சார்?!” இங்கு வந்த நாள் முதல் தன் பக்கத்தில் கூட வராத நாச்சியப்பன் வந்து நிற்கவும், சாவியைத் திருப்பி, வாகனத்தை அணைத்துவிட்டு, கீழே இறங்கி நின்றான் வீரபத்ரன்.
“ஒண்ணுமில்லை தம்பி! என் பொண்ணு திண்டுக்கல் வரைக்கும் போகணும்ன்னு சொல்றா! அவ அண்ணேங்க யாரும் வீட்டில் இல்லை. ஒரு இடம் விஷயமா வெளியூர் போயிருக்காங்க! கொஞ்சம் கூட்டிட்டுப் போய்ட்டு வர முடியுமா.?” என நாச்சியப்பன் கேட்க, அதிர்ந்து ஸ்தம்பித்து நின்றான் வீரபத்ரன்.
“சார்.. அது வந்து.. நான் யாருன்னு தெரியாமல், உங்கப் பொண்ணை என்னை நம்பி அனுப்புறேன்னு சொல்றீங்களே? எதாவது ஏடாகூடமா ஆகிடுச்சுன்னா?!” இழுத்து நிறுத்தினான் வீரபத்ரன்.
“அடேய்! அரசி மயனே.. அவரே அனுப்பி வைக்கிறேன்னு சொல்றாரு! நீ குறுக்கே புகுந்து கெடுத்து விட்டுரு! உங்க காதல் சேர்ந்து, நான் ஊரு போய் சேரும் முன்னே விடிஞ்சு வெள்ளைக் கோழி கூவிரும்.!”
“அதுக்குன்னு படக்குன்னு பின்னால் உட்கார வச்சு கூட்டிட்டுப் போகச் சொல்லுறியா? பதற்றமா இருக்கு காக்காவிரட்டி!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மஞ்சள் நிற சுடிதாருக்கு தோதாய், இளஞ்சிவப்பு நிற துப்பட்டா அணிந்தபடி வந்து நின்றாள் மேகவர்ணா.
“அம்மாடி மயிலு! தம்பி கூடவே திண்டுக்கல் வரை போய்ட்டு வந்துரு! என்னால் அலைய முடியாது ராசாத்தி!” என மகளிடம் நாச்சியப்பன் சொல்ல,
“ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு சொன்னால் வராதீக! பொழுதுக்கும் மாத்திரையே வாங்கி முழுங்கிட்டு கிடந்தால், உடம்புக்குள்ளே என்ன ஏதுன்னு எப்படி கண்டு பிடிக்க? டெஸ்ட் பண்ணினால் தானே தெரியும்!” என சட்டென்று பெரிய மனுஷியின் தோரணையில், தகப்பனையே மிரட்டினாள் மகள்.
“ஏன் காக்காவிரட்டி! உன் தங்கச்சி, எப்படி எந்த ட்ரெஸ் போட்டாலும் இம்புட்டு அழகா இருக்கா?”
“கேட்டுட்டு வந்து சொல்லட்டுமா? நீ இப்படி வாயைத் திறந்து வேடிக்கைப் பார்த்துட்டே நில்லு உருப்பட்டுரும்.! போகிற போக்கைப் பார்த்தால், அந்தப் புள்ளை உன்னைக் கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணப் போகுது பாரு!” நக்கலாய் காத்தவராயன் சொல்ல,
“ம்க்கும்! சும்மா பேசினாலே.. ஒரண்டை இழுக்கிறியான்னு கேட்கிறா! ரெண்டு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசினாலே முறைக்கிறா! நீதேன் உன் தங்கச்சிக்கிட்டே சொல்லேன் காக்காவிரட்டி!”
“ம்க்கும்! எங்களுக்கு அது மட்டுந்தேன் வேலை! உங்க அண்ணனையும், அந்த அரைக் கிறுக்கியும், ஒருவழியாய் சேர்த்து வச்சாச்சு. அடுத்து நீயா? ஆனால் ஒண்ணுடா, ஊருக்குள்ளே இருக்கிற அம்புட்டு பிள்ளைகளும், எனக்கு தங்கச்சியாதேன் இருக்கு. எந்த ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணினேனோ?”
“உனக்கு ஒண்ணு விட்ட அக்கா பொண்ணுன்னு யாரையோ சொன்னியே! போன வாரம் கூட பர்த் டே ஸ்டேடஸ் வச்சிருந்தே?” எல்லாம் தெரிந்தவன் போல் கேட்டான் வீரபத்ரன்.
“அடேய்! அந்தப் புள்ளைக்கு நாலு வயசோ என்னமோ தான்டா! எல்.கே.ஜி படிக்குது போதுமா? எனக்கு ஒரு முறைப் பொண்ணு இருக்குதுன்னா உங்க ஒருத்தனுக்கும் பொறுக்க மாட்டேங்குதே?”
“சும்மா ஒரு சந்தேகம் தான் காக்காவிரட்டி! நாலும் தெரிஞ்சு வச்சுக்கிட்டா, கயலுகிட்டே சொல்லலாம் பாரு! அதுக்குத்தேன்.!” வீரபத்ரன் சின்ன சிரிப்புடன் சொல்ல,
“அதானே பார்த்தேன்! என் குடும்பத்தில் கும்மி அடிக்கத்தானே அலைவீங்க? நல்லா வருவீங்கடா நீங்க!” எனக் காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஹலோ! எங்களை இங்கண நிறுத்தி வச்சிட்டு, நீங்கபாட்டுக்கு உங்களுக்குள்ளே பேசிட்டு இருந்தால் என்ன அர்த்தம்?”
“எம்மா தங்கச்சி! கொஞ்சம் இரும்மா! இந்த ஒத்தை வண்டியில் மூணுபேரும் எப்படி போறதுன்னு முடிவு பண்ண வேணாமா?”
“என்னது இந்த வண்டியில் மூணு பேரு போகணுமா? நான் என்ன அயன் பட தமன்னாவா? கட்டிப் பிடிச்சு உட்கார்ந்துட்டு வர்ரதுக்கு? நானெல்லாம் இந்த ஓட்டை வண்டியில் வர மாட்டேன். இதில் ஒருத்தர் உட்கார்ந்து வர்ரதே பெருசு. இதில் மூணு பேராம்!” எனச் சலித்துக் கொண்டவள்,
“எல்லாம் உங்களால் தான் ப்பா! கடைசி மாத்திரையை முழுங்கற வரை, மாத்திரை தீர்ந்துடுச்சுன்னு சொல்லக் கூடாது அப்படித்தானே? இவிங்கக் கூடவெல்லாம் நான் போகலை. அண்ணேங்க வரட்டும் அவிங்கக் கூட நான் போய்க்கிறேன்.!” என தன் தந்தையிடம் முடித்தாள்.
“இதைத்தேன் நானும் அப்போவே சொன்னேன் மயிலு. உங்கண்ணே இரவைக்கு வீட்டுக்கு வரும் போது, சொல்லிவிட்டு வாங்கிக்குவோம்!” என்ற நாச்சியப்பனின் பதிலில்..
“என்னது இரைவைக்குதேன் வருமா? இன்னைக்கு காலையில் போட வேண்டிய மாத்திரையே போடலை! இதில் ராத்திரி வரைக்கும், இப்படியே அலையப் போறீகளாக்கும்?” என்றவள் யோசனையோடே வீரபத்ரனைப் பார்த்தாள்.
“எம்மா எஜமானி! நீ எங்களோட வர வேணாம்மா! இந்த ஓட்டை வண்டியெல்லாம் உங்களுக்கு செட் ஆகுமா? எல்லாத்துக்கும் மேலே முன் பின் தெரியாத என்னோடெல்லாம் நீங்க வரணும்ன்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை!” கோபம் தொனித்த குரலிலேயே பேசினான் வீரபத்ரன்.
“தம்பி! தம்பி! கோபப் படாதீக! மயிலு ஏதோ துடுக்குத்தனமா பேசிப்புடுச்சு. யாருன்னு தெரியாமல் எம் மவளை உங்க பின்னால் அனுப்பலை தம்பி. அரசி பெத்த மயன்னு அச்சடிச்ச மாதிரி மூஞ்சியில் எழுதி ஒட்டியிருக்கே? நீங்க வந்த அன்றைக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. உன்னைப் பெத்தவக வரவும், தெளிவா தெரிஞ்சு போச்சு.!”
“ஆத்தி! தெரிஞ்சுக்கிட்டேவா சிரிச்சுக்கிட்டே அலைஞ்சாரு! அடேய் அரசி மயனே..! இந்த வெள்ளாவி மண்டைக்கு நீ யாருன்னு தெரிஞ்சுருக்கு டா! எல்லாம் தெரிஞ்சும், கமுக்கமா அலைஞ்சிருக்காரு பாருடா மனுஷன்.!”
“ஏன் காக்காவிரட்டி! நான்தேன் அரசி மயன்னு அம்புட்டு தெளிவா தெரியுதா? அப்பறம் ஏன் என் மச்சானுங்களுக்குத் தெரியலை!”
“அந்தக் கரடிக்குட்டிங்களுக்கு மூளை இருந்தால் தானே? எக்ட்ரா லார்ஜ் எலிஃபெண்ட் பொம்மை மாதிரி, அணிவகுத்துட்டு வாரானுங்க! அதே அணிவகுப்போட வெளியேறிடுறானுங்க! அதிலேயும் கடைசி ரெண்டு பேரும், தலையாட்டி சாமிகள். அந்த போஸ் என்ன சொன்னாலும், ஆமாஞ்சாமின்னு மண்டையை ஆட்டிக்கிட்டேதேன் திரியுறானுங்க!”
“அவர் காதில் கேட்டுடப் போவுது காக்காவிரட்டி!” காத்தவராயன் சொன்னதற்கு கண்ணைக் காட்டி எச்சரித்தான் வீரபத்ரன்.
“அதெல்லாம் பெரிய மனுஷன் அப்படி ஒண்ணும் சொல்ல மாட்டாரு.!” ஈயெனப் பல்லைக் காட்டியபடியே காத்தவராயன் பேச,
“தம்பி! எம் மயனுங்க முழுசா மூணு நிமிசம் உங்களை உத்துப் பார்த்தால் கண்டு பிடிச்சுருப்பானுங்க! அவிங்களுக்கு, நீங்க யாருன்னு தெரியாத வரைக்கும் சந்தோஷம்ன்னு நினைச்சுக்கிடுங்க! அறிவு கெட்டப் பசங்க, என்ன ஏதுன்னு ரோசனையே இல்லாமல் குதிப்பானுங்க!”
“பார்த்தியா, உன் மாமனே நான் சொன்னதைத்தேன் சொல்றார். உன் மச்சானுங்களுக்கு அறிவே இல்லை வீரா!” இடையிட்டு வீரபத்ரனின் செவிக்குள் முணுமுணுத்தான் காத்தவராயன்.
“அடேய்! நீ வேற ஏன்? இப்போ என்னை சிக்கலில் மாட்டிவிடனும் அதானே உனக்கு?!” என வாய்க்குள் முனகியவன்,
“அதுக்கு இல்லை சார், இந்த வண்டியில் மூணு பேரு போக முடியாதே.. அதுக்குதேன் யோசிக்கிறேன்!” என வீரபத்ரன் இடை நிறுத்த,
“இன்னும் என்னய்யா சார், மோருன்னு சொல்லிக்கிட்டு, மாமான்னு கூப்பிடுங்க! உங்களை ஒட்டிக்கிட்டே திரியறானே? இவனை இங்கண விட்டுட்டு நீங்களும் மயிலும் போய்ட்டு வாங்க!” என நாச்சியப்பன் சொல்ல,
“அடேய்! அரசி மயனே..! நான் என் பொண்டாட்டியை பார்க்கணும்டா! என்னையும் கூட்டிட்டு போடா, உன் குடும்பம் மட்டுமில்லை. உன் மாமனாரும் எனக்குதேன் ஆப்பு வைக்கிறார். வெர்ரிகுட் ஃபேமிலி டா! எந்த விவிஷயத்தில் ஒத்துப் போறீங்களோ இல்லையோ? இதில் மட்டும் அச்சடிச்ச மாதிரி ஒத்துப் போறீங்கடா! என்னையும் கூட்டிட்டுப் போடா வீரா” ப்ளீச்! ப்ளீச்! என்னைப் பார்த்தால் உனக்குப் பாவமா தெரியலையா? திண்டுக்கல் பஸ் ஸாடாண்டில் இறக்கி விட்டுப்புட்டு, கிளம்பும் போது என்னைக் கூப்பிட்டுக்கிட்டா போதும் டா. நான் என் பொண்டாட்டியோட கொஞ்ச நேரம் ஜாலியா சுத்திக்கிறேனே?” எனக் காத்தவராயன் கேட்க, செய்வதறியாது, திருதிருத்தபடியே விழித்துக் கொண்டு நின்றான் காத்தவராயன்.
“என்னத்துக்கு தம்பி இப்படி முழிக்கிறீக?! என்ன ஏதுன்னு சொன்னால் தானே தெரியும். இப்படி முழிச்சுக்கிட்டு நின்னால், நான் உங்க மனசுக்குள்ளே புகுந்தா பார்க்க முடியும்?” என நாச்சியப்பன் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரம்,
“யோவ்! வண்டி ஓட்டத் தெரியுமா?” எனக் கேட்டாள் மேகவர்ணா.
“எம்மா தங்கச்சி! வண்டி ஓட்டத் தெரியாமல்தேன் புல்லட்டு ஓட்டுறானாக்கும்? பொசுக்குன்னு என்னம்மா இப்படி கேட்கிற? எல்லாரும் ஒத்தை வீலைத் தூக்கித்தேன் வீலிங் பண்ணுவாங்க. ஆனால் நம்ம வீரா ரெண்டு வீலையும் தூக்கி வீலிங் பண்ணுவான் தெரியுமா?” எனப் புரியாமல் வினவினான் காத்தவராயன்.
“அட லூசு காக்கா விரட்டி! ரெண்டு வீலையும் தூக்கிட்டு வண்டி ஓட்டினால், ஒரேடியாய் கைலாசம் போக வேண்டியதுதேன். உன் வாய்! உன் உருட்டுன்னு இஷ்டத்திற்கு உருட்ட வேண்டியதுதேன்.!” என வீரபத்ரன் முனக,
“இந்தாருண்ணே! கூமுட்டைத்தனமா பேசாதே! நான் கேட்டது, கார் ஓட்டத் தெரியுமான்னு?” என பதில் காத்தவராயனிடம் சொன்னாலும் மேகவர்ணாவின் பார்வை வீரபத்ரனிடம் இருந்தது.
“தெரியும்!” அவளைப் பார்த்துக் கொண்டே அவன் பதில் சொல்ல, கால் கொலுசு சிணுங்க, கடகடவென உள்ளே ஓடியவள், மகிழுந்தின் சாவியை எடுத்து வந்து வீரபத்ரனின் முன் நீட்டினாள். ஆனால் அவனோ தயக்கமாய், நாச்சியப்பனைப் பார்
“வாங்கிக்கங்க தம்பி! வெரசா போய்ட்டு எம் மயனுங்க வரும் முன்னே வந்துருங்க!” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் நாச்சியப்பன்.
மேகவர்ணாவின் கரத்தில் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல் சன்னமாய் சிணுங்க, அவன் கரத்தில் சாவியைப் பட்டும் படாமலும் வைத்தாள் அவள். வாகனத்தின் சாவியைக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, கதவை அறைந்து சாற்றினான் வீரபத்ரன்.
“ஹலோ! இது எங்க போஸ் அண்ணே கார்! பார்த்து சூதானம்!” அதட்டலாய் சொன்னவள், முன்னிருக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
“திண்டுக்கல் போய்ச் சேரும் வரை, இவிங்க காதல் காட்சியெல்லாம் பார்க்கணுமா?” எனச் சலித்தபடியே பின்னால் ஏறி அமர்ந்தான் காத்தவராயன்.
***
தன் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் வீரபத்ரன். கண்கள் அவன் அனுமதியில்லாமலே.. அவளை மட்டுமே வட்டமிட, செய்வதறியாது தவித்துப் போனான் வீரபத்ரன். நல்ல மினுமினுப்பான மாந்தளிர் நிறத்தில், இதழ்களில் மெல்லிய புன்னகை இழைந்தோட, அமர்ந்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தான் வீரபத்ரன். அவள் வலப்புற மூக்கில் அணிந்திருந்த ஒற்றைக்கல் மூக்குத்தியும், காதில் அசைந்தாடிய குட்டி ஜிமிக்கிக்கு மேல், காது மடலில் அவள் அணிந்திருந்த குட்டி கல் வைத்த காதணியும் அவள் அழகுக்கு அழகு சேர்த்திருக்க, வீரபத்ரனின் கண்களில் அவள் மீதான இரசனையும் மயக்கமும் இன்னும் கொஞ்சம் கூடத்தான் செய்தது.
‘என்ன இவ இம்புட்டு அழகா இருக்கா? மனுஷன் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாளே..!’ மனதிற்குள் நினைத்தவனிடமிருந்து நீண்ட பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
“ஏம்மா தங்கச்சி! உங்க அப்பாருக்கு என்ன மேலுக்கு முடியலையா? என்ன மாத்திரை வாங்கணும்? நெய்க்காரப்பட்டியில் மாத்திரை எதுவுமே கிடைக்காதா?”
“அதுவாண்ணே? ப்ரஷரையும் சுகரையும், வம்புக்குன்னு இழுத்து வச்சிருக்காரு! சொல் பேச்சுக் கேட்டால் தானே? மாத்திரையும் ஒழுங்கா போடுறதே இல்லை. மாத்திரை தீர்ந்துப் போனதைக் கூடச் சொல்லாமல், வயசுப் போகப் போக சின்னப் புள்ளையாய் இருக்காருண்ணே! நெய்க்காரப்பட்டியில் கிடைக்கும்ண்ணே! சிலது இங்கணையே வாங்கிக்கலாம். சிலது திண்டுக்கல்லில்தேன் வாங்கணும். என்னத்துக்கு பிச்சு பிச்சு வாங்கிக்கிட்டு, ஒட்டுக்கா திண்டுக்கல்லிலேயே வாங்கிடுவோம்ன்னுதேன்.!” என அவள் பதில் சொல்ல,
“நீ இருக்கப் போய் உன்னைப் பெத்தவரைப் பார்த்துக்கிற! நீ கல்யாணம் கட்டிப் போய்ட்டா, உங்கப்பாரை யாரு பார்த்துக்குவா?” எனக் கேட்டான் காத்தவராயன்.
“ம்க்கும்! நினைப்புதேன் பொழப்பைக் கெடுத்துச்சாம்! நானெல்லாம் எங்கப்பனையும், என் அண்ணேங்களையும், ஒத்தையில் விட்டுட்டு எங்கனையும் போக மாட்டேன்ஞ்சாமி. நான் வேணும்ன்னு நினைக்கிறவன், என்னோட என் வீட்டில் வந்து இருக்கட்டும்.!” என அவள் சொல்ல, அதிர்வுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் வீரபத்ரன்.
“ஏம்மா! பொண்ணு கல்யாணம் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்குப் போறது தானே வழக்கம்.? இப்படி மாப்பிள்ளை பொண்ணு வீட்டில் வந்து இருக்கணும்ன்னு சொன்னால், எவன் வந்து உன்னைக் கட்டிப்பான்? அது மட்டுமில்லாமல், அது நல்லாவா இருக்கும்? நாலு பேரு நாலு விதமா பேச மாட்டாகளா?”
“நாலு பேரு, நாலு விதமா இல்லை, நாற்பது விதமா பேசத்தேன் செய்வாக! ஆனால் அந்த நாலு பேரும் வந்து, எங்க வாழ்க்கையை வாழப் போறதில்லை. எங்க வாழ்க்கையை வாழப் போறது நானும் என் புருஷனுந்தேன். இந்த வழி வழியாய் வந்த வழக்கமெல்லாம் நம்ம வசதிக்குத்தேன். இன்னுமும் பணத்தையும், நகையையும் மட்டும் வச்சு, அவங்க காலம் முழுசும் வாழப் போற வாழ்க்கையை காசை மையமா வச்சு நிர்ணயிக்கிறது எல்லாம் எனக்குப் பிடிக்கலைண்ணே!” பொட்டில் அடித்தாற் போல் அவள் பேசிய பேச்சும், அந்தப் பேச்சில் இருந்தத் தெளிவும், வீரபத்ரனின் புருவத்தை உச்சி மேட்டுக்கு உயர்த்தியது.
“ஒருவேளை அப்படியொரு மாப்பிள்ளை கிடைக்கவே இல்லைன்னா?” ஓரக்கண்ணால் பார்த்தபடி நிறுத்தினான் வீரபத்ரன்.
“ஏன், ஒரு பொண்ணோட வாழ்க்கையில் கல்யாணத்தைத் தவிர வேற எதுவுமே இல்லையா என்ன? இன்னும் எத்தனை நாளைக்கு பொண்ணுன்னா கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தைப் பெத்துக்கணும். தாய்மையில் தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள்ன்னு உருட்டிக்கிட்டே அலைவீங்க? ஏன் ஆணுக்கு தாய்மை இல்லையா? ஒரு ஆண் தன் முதல் மகவைக் கையில் ஏந்தியதும், முழுமை அடைவது இல்லையா? கல்யாணத்தைத் தவிர வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு. ஆண்கள் மட்டுந்தேன் சிங்கிளா இருக்க முடியுமா என்ன? நாங்களும் சிங்கிளா சிறப்பா வாழ்ந்துட்டு போறோம்!” என அவள் சொன்ன பதிலில் வீரபத்ரனின் புன்னகை இன்னும் கொஞ்சம் அதிகமாய் விரிந்தது.
“ஏன் மயிலம்மா! என்னை உனக்குப் பிடிக்குமா?” என அதிரடியாய் அவன் கேட்ட அடுத்தக் கேள்வியில், அவளிடம் அசாத்திய மௌனம். பிடிவாதமாய் இதழ்களை இறுக மூடி, பார்வையை வேறு பக்கம் திருப்பியபடி அமர்ந்திருந்தாள் மேகவர்ணா.
“மேகா..!”
மீண்டும் வீரபத்ரன் அழைக்க, விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஏற்கனவே பிரத்யோகமாய் மேகா என முன்னொருமுறை அவன் அழைத்திருந்தாலும், முதன்முறையாய் அவனின் வித்தியாசமான அழைப்பை உணர்ந்தாள் மேகவர்ணா. நிமிர்ந்து அவனை நோக்கிய விழிகள் அவனிலேயே அசையாமல் மையம் கொள்ள,
“பிடிக்கலைன்னு சொன்னால் என்ன செய்வீங்களாம்?” இதற்கடையில் சிரிப்பை மறைத்துவிட்டு, எதிர் கேள்வி கேட்டாள் மேகவர்ணா.
“நிஜமாவே பிடிக்கலைன்னா ஒண்ணும் பண்ண முடியாது. ஒருவேளை மனசை மறைச்சு பொய் சொன்னால், என்ன பண்ணுறது மயிலம்மா?” என அவன் அவள் மனமறிந்து கேள்வி கேட்க,
“ஆமா! நீ பெரிய மன்மதன்! உன்னைய பிடிக்கலைன்னு நாங்க பொய் சொல்லுவோமாக்கும்? வேற சோலி இல்லையா உனக்கு? ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு!” எனச் சொன்னாள் மேகவர்ணா.
“நல்லா சமாளிக்கிற மயிலம்மா!” முத்துப்பற்கள் தெரிய சிரித்தவனை கடைக்கண்ணால் கள்ளத்தனமாய்ப் பார்த்து வைத்தாள் மேகவர்ணா.
“அடேய்! அரசி மயனே..! கார் ஓட்டுறியா? இல்லை கட்டை வண்டி ஓட்டறியா? கொஞ்சம் வெரசாத்தேன் போயேன்டா!” பின்னாலிருந்து முணுமுணுத்தான் காத்தவராயன்.
“அதிக வேகம் ஆபத்து காக்காவிரட்டி! அதுக்குத்தேன் பொறுமையாய் போறேன்.!”
“ஆமா டா! இந்த ஆளில்லாத ரோட்டில் அதி வேகம் ஆபத்துதேன். உங்க இம்சை தாங்க முடியலை டா! இம்புட்டு மெதுவா போறதுக்கு நடந்து போயிரலாம் டா!” என காத்தவராயன் சொல்லிக் கொண்டிருக்க, சிரித்தபடியே வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கியிருந்தாள் மேகவர்ணா.
மென் தூறலாய் மழை துறத் துவங்கியிருந்தது.
பனித் துளியைப் போல் பொடிப் பொடியாய் மழைச் சாரல் மண் நனைக்கத் துவங்க, மண் வாசம், காற்றில் கலந்து நாசியைத் தழுவி நழுவியது. மகிழுந்தின் கண்ணாடியைக் கீழிறக்கி, ஜன்னல் வழியே கரத்தை வெளியே விட்டு விளையாடத் துவங்கியிருந்தாள் மேகவர்ணா.
இதமான மழை, அழகான மகிழுந்துப் பயணம், பக்கத்திலேயே மனதிற்கினிய, அவன் மனதை மயக்கிய பெண் என், தன் வாழ்வின் மறக்கவே முடியாத பயணத்தின் இதத்தில் லயித்தபடி, வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் வீரபத்ரன். இருவருமே ஒருவரையொருவர் கள்ளத்தனமாய்ப் பார்த்துக் கொண்டாலும் கூட, வெளிப்படையாய் எதுவுமே காட்டிக்கொள்ளவில்லை.
அதே நேரம், இத்தனை நேரம் இருந்த இதத்தினை மாற்றும் விதமாய், சடசடவென பெரும் தூறலுடன் மழை வலுக்கத் துவங்கியது. பெரிய பெரிய துளிகள் சடசடவென விழ ஆரம்பித்தன. கண்மூடித் திறக்கும், சிறு நொடிப் பொழுதுக்குள், முன்னால் வரும் வாகனம் தெரியாத அளவிற்கு மழைப் பெரிதாகப் பெய்யத் துவங்கியிருந்தது.
வேகமாக காற்றும் வீசத் துவங்கியிருந்தது. தென்னை மரங்ளோடு பிற மரங்களும் பேயாட்டுவது போல் ஆடத் துவங்க, அதி வேகமாய் காற்று வீசும் சத்தமே பயங்கரமாய் செவிகளில் எதிரொலித்தது. அதி வேகமாய் மகிழுந்தின் கண்ணாடியை ஏற்றி விட்டு, எச்சில் கூட்டி விழுங்கியபடியே வீரபத்ரனைப் பார்த்தாள் மேகவர்ணா.
“என்னடா! முன்னாடி வர்ர வண்டி தெரியாத அளவிற்கு மழை பெய்யுது? பார்த்து சூதானமாய் ஓட்டுடா!”
என காத்தவராயன் எச்சரித்த அதே நேரம், அவர்கள் சென்றுக் கொண்டிருந்த பாதையின் குறுக்கே, சட சடவென்ற சத்தத்துடன் மரம் ஒன்று முறிந்து விழ, விழுந்த மரத்தின் முன்னால் க்ரீச்சிட்டு தடுமாறி நின்றது மகிழுந்து. ஒரு அடி முன்னால் சென்றிருந்தால் கூட, சரியாய் வாகனத்தின் மீதே, மரம் விழுந்திருக்கும். மரம் அதீத சத்தத்துடன் முறிந்து விழுந்த அதே நேரம், பயத்தில் சத்தமாய் ‘வீல்’ என அலறியிருந்தாள் மேகவர்ணா.
“வீரா வண்டியை எடு! வீரா பயமா இருக்கு! வீட்டுக்குப் போயிருவோம் வீரா!” எங்கோ வெறித்தபடி வீரபத்ரனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் மேகவர்ணா.
“மேகா! இங்கே பாருடி! என்னைப் பாருன்னு சொல்றேன்ல்ல? ஒண்ணும் இல்லை! நாம வீட்டுக்கே போயிருவோம்! நீ எம்புட்டு தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன். இதுக்குப் போய் இப்படி பயப்படுற?” என வீரபத்ரன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், வானத்தை ரெண்டாய் பிளப்பது போல் மின்னல் வெட்ட, அதி பயங்கரமான சத்தத்துடன் இடி முழக்கம் கேட்ட அந்த நொடி,
“வீரா!” என்ற அலறலுடன் தன்னை மறந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள் பெண். அவள் உடல் வெளிப்படையாய் வெடவெடவென நடுங்கத் துவங்கியிருந்தது.
‘சாதாரண இடி மழைக்கா இவ்வளவு அச்சப்படுகிறாள்?’ அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் மழையைப் பார்த்து அச்சப்படவில்லை. வேறு ஏதோ இருக்கிறது. என அவன் அடி மனதில் தோன்றத்தான் செய்தது. ஆனாலும், இதையெல்லாம் ஆராயும் நேரம் இதுவல்ல, என உணர்ந்தவன்,
“ஏய்! ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல்ல மேகா! இதோ இப்போ வீட்டுக்குப் போயிருவோம்!” என அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனான் வீரபத்ரன். மார்புக் கூட்டிற்குள் புதைந்துக் கொண்டு, முகம் பார்க்க மறுப்பவளிடம், எப்படித்தான் சமாதானம் சொல்ல? எனப் புரியாமல், அவளை மார்பில் தாங்கியபடியே வாகனத்தை பின்னால் எடுத்து, வட்டமடித்துத் திருப்பினான் வீரபத்ரன்.
“என் பொண்டாட்டியைப் பார்க்கணும்ன்னு ஆசையாய் இருந்தேன். கடைசியில் ஆப்பு வச்சிட்டீங்களா டா?” என்ற காத்தவராயனின் முனகல், சற்று வீரபத்ரனை இயல்பிற்குக் கொண்டு வந்தது. சிறிது தூரம் வாகனத்தைச் செலுத்தியப் பின்னே, தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு வீரபத்ரனை விட்டு விலகி அமர்ந்தாள் மேகவர்ணா. ஆனாலும் அவள் முகத்திலிருந்த பயம் முழுதாய் விலகவில்லை. யாரோ, எதுவோ துரத்துவது போல், பக்கவாட்டுக் கண்ணாடி வழியாய் பின்னால் பார்த்துக் கொண்டே இருந்தாள் மேகவர்ணா.
“ஏன் மயிலம்மா! மழையைப் பார்த்தால், மயில் டான்ஸ் ஆடும்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். நீ என்ன இந்தப் பயம் பயப்படுறே?” அவளை இயல்பாக்குவதற்காய் கேட்டான் வீரபத்ரன்.
“நானெல்லாம் பயப்படலையே! பயப்பட்டது உங்க ஃப்ரெண்ட்டு காத்தவராயன்தேன்.!” என வீரபத்ரனிடம் பேசிக் கொண்டிருந்தவளின் பார்வை, பக்கவாட்டுக் கண்ணாடியின் மீதே இருந்தது. வார்த்தைகள் தடுமாற, தெளிவில்லாத அவள் முகத்தில், அந்த மழை நேரத்திலும் கூட, வியர்வைப் பூக்கள் அரும்பியிருந்தன.
எதையோ உன்னிப்பாய் கவனித்து பின் நீண்ட பெருமூச்சோடு, மகிழுந்தின் முன் பக்கக் கண்ணாடி வழியாய் சாலையை நோக்கித் திரும்பியவளின் கண்கள், அதிர்ந்து அசையாமல் நிலைக்குத்தி நின்றது.
கண்களை இரண்டு மூன்று முறைகள் கசக்கி, இமை சிமிட்டி பார்த்தவளின் விழிகளுக்குள், கோடாரியைக் கரத்தில் வைத்துக் கொண்டு அசுரப் புன்னகையுடன், தன் மொட்டைத் தலையைத் தடவியபடி, பசுபதி சாலையின் நடுவே நிற்பது போன்ற காட்சி தோன்ற, இது கற்பனையா? நிஜமா? எனப் புரியாமல், மீண்டும், பயத்தில் அவள் ‘வீல்’ என சத்தமாய் அலறிய அலறலில், வீரபத்ரனின் கரங்களில் வாகனம் தடுமாற,
“அடேய்! அரசி மயனே..! பார்த்து டா! என்னைப் பரலோகத்துக்கு அனுப்பிடாதீங்க டா! அடேய், மரம்! மரம்! மரம்!”
என்ற காத்தவராயனின் அலறல் காற்றில் கலக்க, அதீத தடுமாற்றத்தோடு சாலையோர மரத்தில் வேகமாய் மோதி நின்றது அந்த மகிழுந்து. மரத்தில் வாகனம் வேகமாய் மோதியபோது கேட்ட பயங்கரமான சத்தத்துடன், அந்தச் சுழல் அமைதியாகியிருக்க, பேரிரைச்சலோடு பெய்துக் கொண்டிருந்த மழையின் சத்தம் மட்டுமே, மீண்டும், மீண்டும், ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
தித்திக்கும் 🔥

