Loading

அத்தியாயம் 3

கணவர் வந்ததும் இதைப் பற்றி அவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார் அனுபமா. மகன் தன்னிடம் கொடுத்திருக்கும் பெரிய பொறுப்பை நிறைவேற்றி விட வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு. ஒற்றை மகன் இதுவரை அவனின் ஆசை எதையும் மறுத்ததில்லை அவர்கள்.
தன் போல் யோசித்துக் கொண்டே சமைத்த உணவுகளை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டே இருந்தவரின் பின்னே.

“என்னம்மா.? எப்படி இருக்கு இப்போ தலைவலி.? பரவாயில்லையா.?” என, தன் பின்புறம் திடீரெனக் கேட்ட குரலில்.
“அய்யோ.! அம்மா.!” என்று பயந்துவராக நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து திரும்பியவர்.
“இப்படியா பிசாசு மாதிரி வந்து பயம் காட்டுவீங்க.?” எனக் கணவரைக் கேட்க
“என்னது பிசாசு மாதிரியா.? யூ மீன் மீ…பிசாசு.” என்றார் பாவமாக. பின், மேலும் அதிர்வு விலகாதவராக.
“உடம்பு சரியில்லையேன்னு அக்கறைல கேட்டேன் பாரு.எனக்கு இது தேவை தான்.”
“உங்க அக்கரைக்கெல்லாம் ஒன்னும் குறை இல்ல. ஏதோ யோசித்துக்கொண்டு இருந்ததுல நீங்க வரத கவனிக்கல. திடீர்னு பின்னாடி இருந்து சத்தம் கேட்கவும் ஒரு மாதிரி பயந்துட்டேன்.” என்றார் தன்னிலை விளக்கமாக.

“அப்படி என்ன நான் வர்றது கூடத் தெரியாம யோசனை உனக்கு.” என்றார் அவரும். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி.
“அது நம்ம பையன் ஒரு பெரிய பொறுப்ப என் தலையில ஏத்திட்டான். அதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்ததுனால நீங்க வரத கவனிக்கல.” என்றார் புன்னகை முகமாக.
“அப்படி என்ன பெரிய பொறுப்பு.? இப்படி உன் முகமே டாலடிக்குது அதைச் சொல்லும்போதே.”என யோசனையாகக் கேட்டவரின் அருகில் வந்தவர் குரலை மெதுவாகத் தழைத்துக் கொண்டு.
“அவர் சன் எஸ் இன் லவ்.” என்றார் ரகசிய குரலில்.
“என்னது.?” என்று அதிர்ந்தவர். பின் யோசித்தபடி,
“யாராம்.? கால் உடைந்து, ஒரு மாசமா வீட்ல தான் இருக்கான். எங்கேயும் போன மாதிரி தெரியலையே…” எனக் கேட்டவர்.
“அது சரி நீ ஏன் இதை இவ்ளோ ரகசியமா சொல்றே. நம்ம ரெண்டு பேர் மட்டும் தானே இங்க இருக்கோம்.”
“அது ஒரு சந்தோஷத்துல அப்படி ரகசியமா சொன்னது.எல்லாத்தையும் ஆராய்வீங்களா நீங்க.”என்றவர்.
கால் உடைஞ்சு வீட்ல இருந்ததுனால தான் அவனுக்கு இந்த லவ்வே வந்திருக்கு.”
“என்னம்மா சொல்ற.? எனக்கு ஒன்னும் புரியலையே .” என இவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து இறங்கி வந்தான். சஞ்சய்.

பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் தான் வந்ததும் அமைதியாகி விட்டதையும் பார்த்தபடியே இறங்கி வந்தவன், தனக்கான உணவை எடுத்து வைத்துக்கொண்டு
உண்ண ஆரம்பிக்க
“என்ன டா.? அம்மா ஏதோ சொல்றா. என்ன விஷயம்.?” என அவரும் உணவை அருந்திக் கொண்டே கேட்க.
“அம்மா கிட்ட எல்லாம் சொல்லி இருக்கேன். கேட்டுக்கோங்க.” என்றவன் வேகமாகச் சாப்பிட்டு முடித்துத் தாயைப் பார்த்துச் சொல்லுமாறு தலையசைத்தவன் மறுபடியும் வேகமாக மாடி ஏறிச் சென்று விட்டான் தன் அறையை நோக்கி.

“ஏன் டா.? நீ ஒரு முறை என்கிட்ட சொன்னா என்ன குறைஞ்சிடும் இப்போ.”என்று செல்லும் மகனைப் பார்த்துக் கேட்டவருக்கு எந்தப் பதிலையும் கொடுக்காமல் வேகமாகத் தன் அறையை நோக்கிச் சென்றான் சஞ்சய்.
“திமிர பாத்தியா.?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டவரிடம் “ஏங்க அதுதான் என் கிட்ட சொல்லிட்டான்ல அப்புறம் என்ன.? நான் சொல்றேன் உங்களுக்கு.எதிர் வீட்ல ஒரு ப்ளே ஸ்கூல் வச்சு நடத்துறாங்க இல்ல.”
“ஆமா.”
“அங்க வேல பாக்குற ஒரு பொண்ண பார்த்திருப்பான் போல இருக்கு. அந்தப் பொண்ண எனக்குப் பேசுங்கன்னு சொல்றான்.” “பேசுங்கன்னா.?” எனக் கேள்வியாகக் கேட்டவரை முறைத்தவர். “கல்யாணத்துக்கு பேசுங்கன்னு சொல்றான்.”
“ஓஹோ.! சரி போய்ப் பேசு.”
“என்ன.? நான் மட்டுமா.”
“ஆமா, உங்கிட்ட தான சொன்னான். உன் செல்ல மகன். அப்ப நீ மட்டும் தான் போய்ப் பேசணும்.” “விளையாடுறீங்களா? நீங்களும் வாங்க.”
“ஒரு பொண்ண பத்தி தகவல் கேட்கப் போறோம். போகும் போதே நானும் வந்தா நல்லா இருக்காது. நீ முதல்ல போய் எதார்த்தமா பேசி அந்தப் பொண்ணு யாரு என்னன்னு தெரிஞ்சுக்கோ. அப்புறம் நாம அவங்க வீட்டுக்கே போய்ப் பேசலாம்.” என்று கணவர் பொறுமையாக விளக்கியபிறகு இவருக்கும் அது சரி என்று தோன்றியது.
“ஓ.! அப்படி சொல்ல வரீங்களா.? சரி அப்ப நான் சாயந்திரமா போய்ப் பேசவா.”
“சாயந்திரமும் கிளினிக் வரலையா நீ.?”என்று கேட்ட கணவரைப் பார்த்தவர்.
“நல்ல விஷயத்தை எல்லாம் ரொம்ப நாளைக்கு தள்ளிப் போடக் கூடாது. டக்கு டக்குனு முடிச்சிரணும் அதனால நீங்க மட்டும் போங்க. நான் நாளைக்கு வரேன்.”
“சரிதான்.” என்றவர் உணவை முடித்துத் தன் அறையை நோக்கிச் சென்றார் சிறிது ஓய்வுக்காக.
அனைத்தையும் எடுத்து வைத்த அனுபமா இப்போது இருந்தே ஐந்து மணி எப்போது ஆகும் எனக் காத்திருக்க ஆரம்பித்தார்.

சரியாக மணி ஐந்தாகவுமே தன்னை லேசாகத் திருத்திக் கொண்டு எதிர் வீட்டை நோக்கிச் சென்றார் அனுபமா.
இவர் கேட்டைத் திறந்து வீட்டினில் நுழையும்போது முன் வராண்டாவில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்தார் லதா.  வீட்டினுள் நுழையும் அனுபமாவை  பார்த்து ஆச்சரியத்துடன்
“அடடே.! டாக்டர் வாங்க, வாங்க எப்படி இருக்கீங்க.?”என்று மலர்ச்சியுடன் வரவேற்றார் மிக நாள்  பழகியவர்போல். அவரின் வரவேற்பில் சற்று அதிர்ந்தாலும் சிரிப்புடனே அவர் முன் சென்றவர்
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.?” எனக் கேட்டபடி அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டவருக்கு
“என்ன சாப்பிடுறீங்க.? காபி ஆர் டீ.” எனக் கேட்க
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இப்பதான் குடிச்சிட்டு வந்தேன்.” என்றவரை பார்த்தவர்
“சொல்லுங்க என்ன விஷயம்.?” என நேரடியாக விஷயத்தைக் கேட்டிருந்தார்.

எப்படி எப்படியோ பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து வந்தவர் அவரின் நேரடியான கேள்வியில் இவரும் வந்த விஷயத்தைக் கூறி விட முடிவெடுத்தவராக.
“சொல்றேன்னு வித்தியாசமா எடுத்துக்காதீங்க. என் பையன தெரியும் இல்லையா உங்களுக்கு. பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.” எனக் கேட்டதற்கு யோசனை உடன் ஆம் என்பதாகத் தலையாட்டியவரிடம்.
“அவனுக்கு ரொம்ப நாளா பொண்ணு பாத்துட்டு இருக்கேன். எதுக்குமே பிடி கொடுக்காமல் இருந்தவன் இன்னைக்கு தான் ஒரு பெண்ணைப் பிடிச்சிருக்கு எனக்குத் திருமணம் செஞ்சு வைங்கன்னு சொன்னான். அதான் அது விஷயமா உங்க கிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.” “என்கிட்டயா.?” என ஆச்சரியமாகக் கேட்டவரை பார்த்தவர்.
“ஆமா அந்தப் பொண்ணு இங்க தான் வேலை பாக்குது. தினமும் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுவதை. எங்க வீட்டு மாடியிலிருந்து பார்த்திருக்கான். பாத்த உடனே அந்தப் பொண்ண அவனுக்குப் பிடிச்சிருக்கு போல. என்கிட்ட சொன்னான். அதுதான் யார்…? என்னனு.? உங்ககிட்ட விசாரிக்கலாம்னு வந்தேன்.” என முழுவதுமாகச் சொல்லி முடிக்க

அவர் சொல்லியதிலிருந்தே
“வசுந்தராவையா  சொல்றீங்க நீங்க…?” என அவர் கேட்க
“பெயர் எல்லாம் எனக்குத் தெரியாது. இன்னைக்கு தான் என் மகன் என்கிட்டயே காட்டினான் அந்தப் பெண்ணை. மதியானம் ஒரு குழந்தையைக் கையில் வைத்துச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள்.”
“நீங்கச் சொல்றத வச்சு பார்த்தா வசுந்தராவை தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.” என்றவர் வீட்டினுள் சென்று போன மாதம் குழந்தைகள் சேர்ப்பின்போது எடுத்த புகைப்படத்தைக் காட்டிக் கேட்க அவரும் அவள்தான் என்று உறுதியளித்தார்.

“ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா கொஞ்சம் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான்.” என்று கூறியவரிடம் “அதனாலெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. எங்க பையனுக்குப் பிடிச்சிருக்கு மேற்கொண்டு பேசலாம்னு இருக்கோம். அவங்க வீட்டு விலாசம் தர முடியுமா.?”எனக் கேட்டவருக்கு,
“கட்டாயமாகத் தரேன். அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்லது நடந்தா சந்தோஷம் தான்…”என்றவரும்  அவளின் விலாசத்தை எழுதிக் கொடுக்க. மகிழ்வுடன் நன்றி கூறி வாங்கிக்கொண்டு விடை பெற்றார் அனுப்பமா.

வேகமாக வீட்டிற்குள் நுழைந்த மனைவியைப் பார்த்த பிரபு
“என்ன மா.? பேசியாச்சா.?”
“ம்ம் பேசி அட்ரஸும் வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று புன்னகையுடன் கூடியவர்

“இதுல, அவங்க அப்பா நம்பர் கூட இருக்கு. போன் பண்ணி பேசுவோமா.?” என ஆர்வத்துடன் கேட்க. இவர்களின் சத்தத்தில் கீழே இறங்கி வந்த சஞ்சய்.
“இப்ப வேண்டாம் மா நாளைக் காலைப் பத்து மணிக்கு மேல பேசுங்க.” எனக் கூறினான்.
“அது என்னடா பத்து மணி கணக்கு.” எனக் கேட்ட அன்னையை பார்த்தவன்,
“அது அப்படித்தான்.” என்றபடி தந்தையின் அருகில் அமர
“சரி அவன் சொன்ன மாதிரியே நாளைக்கு பேசுவோம்.” எனக் கூறியவர் தன் கிளினிக்கிக்கு எழுந்து சென்றார் மனைவி கொடுத்த காபியை அருந்தி முடித்து.

தான் இப்படியொரு மாதமாக அவளைப் பார்ப்பதை அவளுக்குத் தெரியப்படுத்தாமலேயே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல விருப்பப்படாத சஞ்சய், நாளை அவளைத் தன்னை பார்க்க வைத்திட வேண்டும்  என்று முடிவெடுத்து  யோசனையுடன் அமர்ந்திருந்தவன் அன்னை  கொடுத்த காபியை குடித்து முடித்து மேலே நேராகச் சென்றது அவளைத் தினமும் பார்க்கும் பால்கனிக்கு தான்.

இவனுக்கு நன்றாக அவனைப் பார்க்க முடிந்தது ஆனால் அங்கிருந்து இவனைப் பார்ப்பது சற்று சிரமம் தான் இருவருக்கும் இடையில் இருந்த மரக்கிளைகளை அகற்றி விட முடிவெடுத்தவன் அதற்காக இருந்த உபகரங்களை எடுத்துச் சிறிதாக இருந்த கிளைகளை வெட்டி அகற்ற ஆரம்பித்தான்.
இலைகளையும் சிறு கிளைகளையும் அகற்றிய பிறகு நன்றாகவே இவனுக்கு எதிர் வீடு காட்சியளித்தது. அங்கிருந்து பார்த்தால் இவன் நிற்பதை துல்லியமாகப் பார்க்க முடியும். திருப்தியுடன் முகம் புன்னகையில் விரிய இப்போது இருந்தே காத்திருக்க ஆரம்பித்தான் நாளைய விடியலுக்காக.

காலையில் எழும்போதே மிகவும் புத்துணர்வாக உணர்ந்தாள் சஞ்சய். ஏனோ ஒருவித சிலிர்ப்பு ஓடி மறைந்தது உடலில். ஒருமுறை பால்கனிக்கு சென்று பார்த்தவனுக்கு அனைத்தும் திருப்தியாக இருந்தது. பின் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றவனுக்கு அவ்வப்போது விழிகள் நேரத்தை நோக்கிச் செல்வதை தவிர்க்க முடியவில்லை. தன்னை நினைத்து லேசாகச் சிரிப்பு வர, தலையை ஆட்டிச் சிரித்தவன். தன் வேளையில் கவனமானான்.
சரியாக ஒன்றரை மணிக்கு எழுந்து வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது யாரும் இல்லாத எதிர் வீட்டின் பால்கனியை பார்த்து.
பெருமூச்சுடன் நின்றிருந்தவனுக்கு சில நிமிட காத்திருப்புக்கு பின்னே அவளின் தரிசனம் கிடைத்தது தெளிவாக.
முதல்முறையாக அவளைப் பார்த்தபோது அவள் கையில் இருந்த ஆண் குழந்தையுடன் இன்றும் காட்சி கொடுத்தாள். அவளையே அவன் பார்த்திருக்க ஏதோ உந்து சக்தியில் நிமிர்ந்து அவன் நிற்கும் திசையைப் பார்த்தாள் பெண் அவளும். அதற்காகவே காத்திருந்தவன் போலக் கையை அசைத்து
“ஹாய்..” என வாயசைக்க. பார்த்திருந்தவளுக்குத்தான் நெஞ்சம் அதிர்ந்தது அதிர்ச்சியில். டக்கென்று  பார்வையை தழைத்தவள் குழந்தையிடம் கவனமாக. இவனும் புன்னகையுடன் அவளைத்தான் பார்த்திருந்தான்…

சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு மெதுவாக விழி உயர்த்தி அவனைப் பார்க்க. இப்போது நன்றாகப் பால்கனியின் இறுதிக்கு வந்திருந்தான் அவர்கள் இருவருக்கும் இருக்கும் தூரத்தைக் குறைக்கும் விதமாக, அவளின் விழிப் பார்வை இவனை நோக்கி உயர்ந்ததும் மறுபடியும் கையை அசைத்து”ஹாய்.” என்று வாயசைத்துச் சொன்னவன். உன்னைத்தான் என்றும் செய்கையில் காட்ட தயக்கமாக உயர்ந்த அவளின் விழிகள் அதிர்விலும் பயத்திலும் விரிந்து அவனைச் சில கணங்கள் மிரட்சியுடன் பார்த்தவள், பின் வேகமாகத் திரும்பி ஒரே ஓட்டமாக வீட்டிற்குள் ஓடியே விட்டாள் குழந்தையுடன்.

அவளின் செயலில் சற்று சத்தமாகச் சிரித்தவனுக்கு தான் தானா இது என்று சந்தேகமே வந்துவிட்டது. இனி அன்னை, தந்தை அவர்கள் வீட்டில் பேசும்போது கட்டாயமாக அவளுக்குத் தன்னை நினைவிருக்கும் என்ற நினைப்புடன்  புன்னகையில் முகம் விகாசிக்க, சந்தோஷ நிம்மதியுடன்  தன் வேலையைத் தொடர்ந்தான் அவன்.

அன்று அனுப்புமாவிற்கு  உடல்நிலை  சற்று நன்றாக இருக்க, அவரும் கணவருடன் அவர்களின் கிளினிக்கிற்கு சென்றிருந்தார்.
சரியாக ஒரு மணி ஆகும்போது இவர் கிளம்பி வந்து விடுவார் வீட்டிற்கு. வீடு வருபவருக்கு வேலைகள் சரியாக இருக்கும் மேல் வேலை செய்வதற்கு மட்டுமே வீட்டில் ஆள் சேர்த்திருந்தார். சமையல் எப்போதும் இவரின் கட்டுப்பாட்டில் தான் என்னதான் படித்த மருத்துவராக இருந்தாலும் சமையல் கலையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

கணவனுக்கும் மகனுக்கும் தன் கையாலே சமைத்து பரிமாறவே விரும்புவார். காலை மணி பத்து. கிளினிக்கிருக்கு கிளம்பி செல்வதற்கு முன்பே காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து சமையல் செய்து வைத்துவிடுவார். இவருக்கு முன்பாகப் பிரபு காலை உணவை முடித்துக் கொண்டு கிளினிக் சென்று அமர்ந்து விடுவார்.

அதேபோல் மதியமும் விரைவிலேயே வீடு வந்து விடும் அனுபமா, மதியத்துக்கு சமைத்தவைகளை சூடு பண்ணவும் எடுத்து வைக்கவும் போன்ற வேலைகளில் இவருக்கு நேரம் சரியாக இருக்கும். இவர் வீடு வந்த அரை மணி நேரத்திற்கு பின்பே பிரபு வருவார் வீட்டிற்கு. அதற்குப் பின்பு இருவரும் ஏதேனும் பேசிக் கொண்டே தங்கள் உணவு நேரத்தை முடிப்பார்கள். பின் சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு மாலை இருவருமே ஒன்றாகக் கிளம்பி சென்று விடுவார்கள்.

அதே போல் இரவும் சற்று நேரமாகவே வீட்டிற்கு வந்து விடும் அனுபமா இரவு சமையலையும் முடித்திருப்பார் கணவர் வருவதற்குள்.சஞ்சய் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால் அவனும் பெற்றோர்களுடன் அமர்ந்து மதிய உணவை உண்டு விடுவான். அலுவலகம் போகும் காலங்களிலும் அம்மா கட்டிக் கொடுக்கும் உணவைச் சமத்தாக எடுத்துக் கொண்டு சென்று விடுவான்.

அன்றும் ஒரு மணிபோல் வீட்டிற்கு வந்த அனுபமா அன்று சமைத்த சேப்பங்கிழங்கு குழம்பையும், இறால் வருவலையும், முட்டைகோஸ் பொரியலையும் சூடு செய்து டைனிங் டேபிளில் அடுக்கி வைக்கவும் கணவர் வரவும் சரியாக இருந்தது.
கணவரைப் பார்த்ததும்
“முகம், கை, கால் கழுவிட்டு சீக்கிரம் வாங்க. எல்லாம் சூடு பண்ணிட்டேன் அப்புறம் சூடு ஆறிடுச்சுன்னு சொல்லாதீங்க.” என்ற படியே மகனுக்கும் சத்தம் கொடுக்க அவனும் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினான்.

பிரபு டைனிங் டேபிளுக்கு வரும்போது சஞ்சய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காலையிலேயே பெண் வீட்டாரிடம் பேசி விடலாமென இவர் சொல்லி இருக்க மகன் தற்போது வேண்டாம் மதியத்திற்கு மேல் பேசுங்கள் எனக் கூறி இருந்ததை நினைவு கூர்ந்தவராக.

“என்னப்பா இப்பமாவது போன் பண்ணி பேசலாமா அந்தப் பொண்ணு வீட்ல.?” எனக் கேட்க.
“இன்னுமா பேசாம இருக்கீங்க.?” என்ற படியே பொன்னிறமாக வறுத்து வைத்திருந்த இறாலை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டே தந்தையை பார்க்காமல் தன் உணவில் கவனம் செலுத்தினான்.
அவனின் பதிலில் கோபம் வர மனைவியை முறைத்து பார்த்தவரிடம்.
“சரி மத்தியானத்துக்கு மேல தானே பேசச் சொன்னான். இப்பதானே மதியானத்துக்கு மேல ஆகுது சாப்பிட்டு ஒரு அஞ்சு மணிபோலப் போன் பண்ணி பேசுங்க.” எனச் சூழ்நிலையைச் சகஜம் ஆக்கினார் அனுபமா.

“ஏன் அப்பதான் நல்ல நேரமாமா உன் மகனுக்கு.?” என மனைவியிடம் நக்கலாகக் கேட்க.
“ஆமா.” என்ற பதில் வந்தது மகனிடமிருந்து.
அதில் மேலும் அவர் கோபமாக மனைவியைப் பார்க்க.
“என்னைப் பாசமா அப்புறம் பார்க்கலாம். இப்ப சாப்பிடுங்க சூடு ஆறிட போகுது.”என்று சாப்பாடு தட்டைக் காட்டியப்படியே கூறியவர் “ஏன் தான் எப்ப பாரு எடக்கு மடக்காவே பேசிட்டு இருக்கீங்களோ ரெண்டு பேரும் எனக்குத் தெரியல.” என்று தனக்குள்ளாகவே புலம்பியவாறு உணவை அள்ளி வாயில் அடைத்தார் அவர்.

அன்னையின் புலம்பலைக் கேட்டவன் நிமிர்ந்து தந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அவரோடு எப்போது தனக்கு இவ்வாறு முரண்பாடு ஏற்பட்டது எனச் சிந்தித்தவனுக்கு அவர், தங்களைப் போல மருத்துவம் எடுத்துப் படிக்கச் சொல்ல இவனோ கணினியின் மேல் இருந்த ஆர்வத்தில் பொறியியல் படிப்பைத் தான் படிப்பேன் என்று பிடிவாதத்துடன் உறுதியாக நிற்க. அன்றிலிருந்து ஆரம்பித்தது இருவருக்குமான பணி போர்.

ஆனாலும் அது அதிகமாகாமல் பார்த்துக் கொண்டார் அனுபமா. இப்படி இடையில் புகுந்து இருவரையும் சமாதானம் செய்தபடி சில நேரம் அதட்டலாகவும் சில நேரம் கெஞ்சியும் அதிக நேரம் புலம்பியும். அன்னையை நினைத்து லேசாகச் சிரிப்பு வர வேகமாக உண்டு விட்டு மாடியை நோக்கிச் சென்றான் தன் விட்ட வேலைகளைத் தொடர்வதற்கு.

“ஏன் எப்ப பாரு ஏதாவது அவன சொல்லிக்கிட்டே இருக்கீங்க.?” எனக் கேட்டார் அனுபமா மகன் தன் அறைக்கச் சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு.
“நான் என்னடி கேட்டேன்.? சாதாரணமா ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு எப்படி நக்கலா பதில் சொன்னான் உன் மகன். அதெல்லாம் உனக்குத் தப்பா தெரியாது. நான் ஒரு வார்த்தை சொல்றது மட்டும் தான் உனக்குத் தப்பா தெரியும். என்றவரும் வேகமாக உண்டு விட்டு எழுந்திருக்க.

“நீங்களும் நக்கலா கேள்வி கேட்டீங்க அவனும் நக்கலா பதில் சொன்னான் அவ்வளவுதான்.” என்று பதில் அளித்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தார். சலிப்பான ஒரு பார்வையை அவர்மீது செலுத்திவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றார் பிரபு. தன் மதிய நேர உறக்கத்திற்கு.

எப்பொழுதும் கணவனோடு சிறிது நேரம் உறங்கி எழுபவர் அன்று ஏனோ உறக்கம் இல்லாமல் வீட்டிலிருந்து சிறு சிறு வேலைகளைச் செய்தபடி தன் யோசனையில் ஆழ்ந்திருக்க. நாலரை மணிபோல எழுந்து வந்த பிரபு அமைதியாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மனைவியின் எதிரில் போய் அமர்ந்தார்.

“என்ன அப்படியொரு பலமான யோசனை.? நான் வந்தது கூடத் தெரியாம.” என்றவரின் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்தவர்
“தூங்கி எழுந்துட்டீங்களா.? இருங்க நான் உங்களுக்கு டீக்கொண்டு வரேன்.” என்று வேகமாக எழுந்தவர் “அப்புறம் அந்தப் பொண்ணு வீட்டுக்குக் கால் பண்ணிட்டீங்களா.? பண்ணிடாதீங்க. இன்னும் நல்ல நேரம் வரல? ஐந்தே காலுக்குத் தான் நல்ல நேரம். அப்போ பேசுங்க.” என்றவாறு சமையலறை  நோக்கிச் செல்ல.

“ஏன் டி அஞ்சே காலுக்குப் பேசச் சொல்ற.? நான் அஞ்சு மணிக்குக் கிளம்பணுமே. அங்க நோயாளிகள் காத்துட்டு இருப்பாங்க.”
“பரவால்ல இன்னைக்கு ஒரு நாள் கொஞ்சம் தாமதமா போனா ஒன்னும் ஆகாது.”
“நம்மளுடைய வேலைக்காக அவங்கள காத்திருக்க வைக்கணுமா.?” என்று கோபமாகக் கேட்டவரிடம்
“ஏங்க என்னைக்குமா இந்த மாதிரி செய்றோம்.? நம்மளும் மனுஷங்க தான்? நமக்கும் தனிப்பட்ட வேலைகள் எல்லாம் இருக்கும். அதனால ஒரு அரை மணி நேரம் தாமதமா போறதுனால ஒன்னும் ஆகிடாது.அதுக்கு பதில் இன்னும் ஒரு அரை மணி நேரம் கூடுதலா இன்னைக்கு வேலை பாருங்கள்.” என்றவர் பேசியவாறு டீயை கொண்டு வந்து அவர் முன்வைக்க.

“எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சிரு.” என்று சலிப்பாகக் கூறியபடி டீயை எடுத்து அருந்தினார் அவரும்.
“எல்லாத்துக்கும் பதில் வச்சிருந்தாலும் சரியான பதில் தான் வச்சிருக்கேன் நானும்.” என்றார் அவரும்.
அதற்கு மேல் மனைவியிடம் எந்த வாக்குவாதம் செய்யாமல், அமைதியாக டீயை அருந்தி முடித்தவர். கிளினிக்கில் வேலை செய்யும் பணியாளருக்கு அழைத்துத் தான் அரை மணி நேரம் தாமதமாக வருவதாகக் கூறியவர் வரும் நோயாளிகளிடமும் இந்தத் தகவலைக் கூறி விடுமாறு கூறி, பின் தன் அலைபேசியில் ஆழ்ந்து விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு மனைவியை நிமிர்ந்து பார்க்க நாடியில் கையைக் குற்றியபடி கணவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அவரும். ஆனால் அவரின் சிந்தனை வேற எங்கோ இருந்தது.
“என்னம்மா இப்ப டைம் ஆயிடுச்சா.? போன் பண்ணவா.?” என அவர் கேட்ட பிறகே நேரத்தைப் பார்த்தவர். “ஆயிடுச்சு, ஆயிடுச்சு பண்ணுங்க.”
என்றார் வேக வேகமாக.

மனைவி எழுதிக் கொடுத்த தொலைபேசி எண்களைத் தன் அலைபேசியில் அழுத்தியவர் மறுபக்கம் எடுப்பதற்காகக் காத்திருந்தார்… முழுவதுமாக அடித்தோய்ந்தும் பதில் கிடைக்காததால் சில வினாடிகள் கழித்து மறுபடியும் தொடர்பு கொண்டார். அப்போதும் முழுவதுமாக அடித்த ஓய்ந்திருந்தது அலைபேசி. அவரையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம்.

“அவங்க எடுக்கல.”
“ஐயோ.! ஏன்.?”
“ஏன்னா…? எனக்கு மட்டும் எப்படி தெரியும். ஏதாவது வேலையா இருப்பாங்க. அவங்களே பார்த்துக் கூப்பிடட்டும். இதுக்கு தான் என் வேலையும் கெடுத்து என்னை இங்க பிடிச்சு வச்சிருக்கே.” என்று மனைவியைப் பார்த்துக் கூறியவர் வேகமாக எழுந்து சென்றார் தன் அலுவலை நோக்கி.
“எனக்கு மட்டும் தெரியுமா.? எடுக்கமாட்டாங்கன்னு.” என்று புலம்பிய படியே அனுப்பமாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இவர்கள் இருவரும்  நல்ல நேரம் வரும் வரை காத்திருக்கும் போதே கீழே இறங்கி வந்த சஞ்சய் தனக்கான டீயை எடுத்துக் கொண்டு மேலே சென்றிருந்தான்.

அன்று சற்று தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்தார் ரகுபதி. அவர் வரும்போது நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் உள்ளே நுழையும்போது கோகிலாவும் அவரின் செல்ல மகள் வசந்தியும் சோபாவில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எப்பொழுதும் போல வசுந்தரா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். தந்தை வீட்டிற்குள் வந்த அரவம் கேட்டவள் தன் கை வேலையை விட்டுவிட்டு வேகமாக வெளியில் வந்து.

“அப்பா முகம் கழுவிட்டு வரீங்களா.? சூடா காஃபி தரவா.! இல்ல நேரா சாப்பிடுறீங்களா.?” எனக் கேட்க
“ஏய் அவரு இப்பதான வந்திருக்காரு. முதல்ல சூடா காப்பிய கொடு. அப்புறமா சாப்பிடுவாரு. உனக்கு இப்பவே எல்லாரும் சாப்பிட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு நீ போய்ப் படுத்திரனும்… அதானே.” என்று சம்பந்தமே இல்லாமல் கோபப்பட்ட கோகிலாவிடம் எதுவும் பேசாமல் தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் சமையல் கட்டுக்குள் செல்ல.

“ஏன்.? அவ போய்ப் படுத்தா என்ன.? நீ இருக்கயில்ல. நீ எடுத்து வை. இல்லன்னா உன் சின்ன மகள் இருக்கா இல்ல. அவளைச் செய்யச் சொல்லு.” என்றபடி இருவரையும் முறைத்து நிற்க.
“என்னது நானா.? நானே எழுந்தால் உட்கார முடியல. உக்காந்தா எழ முடிலன்னு இருக்கேன். என்ன போய் வேலை வாங்குறீங்க.”
“சரி, அப்போ உன் சின்ன மக கிட்ட சொல்லு.”
“அவளே இப்பதான் காலேஜ்ல இருந்து வந்தா.”
“இப்போவா வந்தா.? மணி ஒன்பதாகப் போகுதே. .” என்று நக்கலாகக் கேட்டவரிடம்.
“அம்மா இந்த அப்பாக்கு என் மேல பாசமே இல்லை. எப்பவுமே  அவதான் அவருக்கு முக்கியம்.” என்றவள் கோபத்துடன் தனக்கும் வசுந்தராவுக்கும் பொதுவான அறைக்குள் சென்று மறைய.

“இப்ப சந்தோஷமா உங்களுக்கு. நிம்மதியா ஒரு நாடகம் பார்க்க முடியுதா.? இந்த வீட்ல. .” என்று கேட்டவாறு அவரும் மகளைப் பின்பற்றிச் செல்ல முயல.
“ஏன்டி இப்படி இருக்க.? காலைல இருந்து மாடு மாதிரி எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கு அந்தப் பொண்ணு. வேல விட்டு வந்தும் கொஞ்சமாவது ரெஸ்ட் இருக்கா.? அதுக்கு, வந்ததும் மறுபடியும் எல்லா வேலையையும் அது தலையில கட்டுற. நீ எல்லாம் தாயா இல்ல பேயா.?” என்றவருக்கு எந்தப் பதிலும் கூறாமல் முகவாயை தோளில் இடித்து
“ம்ம்க்கும்.” என்று விட்டுத் தன் சின்ன மகளைச் சமாதானம் செய்யச் சென்றார்.
‘ திருந்தாத ஜென்மம். இதுக்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் அனுபவிப்ப நீ.’ என இவர் நினைக்கும் போதே கையில் காபியுடன் அவர் முன் வந்தாள் வசந்தரா.

“எதுக்கு மா இப்ப காபி. நான் நேரடியா சாப்பிட்டு இருப்பேனே.” “பரவாயில்லைப்பா, பேசிப் பேசி உங்களுக்குத் தலைவலி வந்திருக்கும்.” என்றவளை பார்த்தவர். அவள் கையில் இருந்த காபியை ஒரு  கையில் வாங்கிக்கொண்டு மற்ற கையால் அவள் தலையைத் தடவியவர் எதுவும் கூறாமல் பெருமூச்சுடன் தங்கள் அறை நோக்கிச் சென்றார்.

‘இந்தப் பொண்ணுக்கு எப்ப தான் விடிவு காலம்  வருமோ.’ என்று நினைத்தவாறு.

விடிவு காலம் வருமா விரைவில் காத்திருப்போம் நாமும்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. போன் ஏன் எடுக்கவில்லை.?.

    1. Author

      நாளைக்கு தெரிஞ்சிடும் sis