2-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 2

ஒரு மினி பங்களாவைப் போல இருந்தது அந்த வீடு. இரண்டு கார் நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது போர்டிக்கோவில். அதைத் தாண்டி வீட்டினுள் வந்தால், நல்ல விசாலமான பெரிய வரவேற்பறை. இடது பக்கம், மாடுலர் கிச்சன் என்று சொல்லும் வகையில் பெரிய சமையலறை ஓபன் கிச்சனாக இருந்தது. அதனை ஒட்டி நான்கு பேர் அமர்ந்து உண்ணும் வகையில் உணவு மேசை நாற்காலிகளுடன். வலது புறம் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பெரிய அறை. பின் முதல் மாடியில் எதிரெதிராக இரண்டு அறைகள். இரண்டுமே சற்று பெரிய அறைகள் தான்.
ஒரு அறையில், விருந்தினர்கள் அறைபோல ஒரு கட்டில், மெத்தை, ஒரு கப்போர்ட் உடன் இருந்தது. மற்ற அறை நன்கு விசாலமாக மூன்று பேர் படுக்கும் அளவிற்கான கட்டில், உட்கார்ந்ததும் அமுக்கும் அளவில் ஒரு மெத்தை. மூன்று கதவுகள் கொண்ட ஒரு பெரிய கப்போர்ட், பெரிய கண்ணாடி கொண்ட டிரெஸ்ஸிங் டேபிள், அருகில் உள்ள மூலையில் இரண்டு பேர் அமரும் அளவிற்கு ஒரு சோபா, அதற்குரியதாக ஒரு டீபாய், நல்ல விசாலமான குளியலறை. பக்கவாட்டில் பிரெஞ்ச் விண்டோ என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான கதவு. அதைத் திறந்து சென்றால் நல்ல விசாலமான பால்கனி.

அங்குதான் கைகளைக் கட்டிக்கொண்டு. ஆறடி உயரத்தில் எதிரில் இருக்கும் மழலையர் பள்ளியைப் பார்த்துக்கொண்டிருந்தான் சஞ்சய் குமார். அந்த வீட்டின் ஒற்றை வாரிசு. முப்பது வயது, பேச்சில்லர். ஐடி கம்பெனி ஒன்றில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான். ஆறு இலக்கத்தில் சம்பளம். புத்திசாலி, அவ்வப்போது சிடுசிடுக்கும் கோபக்காரன். வரும் கோபமும் சற்றென்று மறைந்துவிடும்.
இவனின் தந்தை பிரபு, தாய் அனுபமா இருவருமே மருத்துவர்கள். ஒரு சிறு கிளினிக்கில் பொது மருத்துவம் பார்த்து வருகிறார்கள் இருவரும். தங்களைப் போன்று மகனும் மருத்துவத்துறையை தேர்ந்தெடுப்பானென நினைத்திருந்தனர். அவனோ கம்ப்யூட்டரின் மேல் உள்ள காதலால் அதைச் சார்ந்த படிப்பைப் படித்து, அது தொடர்பான வேலையில் சேர்ந்து அதில் சிறந்தும் விளங்கினான்.

திருமணத்தைப் பற்றி இதுவரை யோசித்ததில்லை அவன். ஆனால் கடந்த ஒரு மாதமாகத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான். ஒருத்தியை பார்த்ததிலிருந்து.
போன மாதம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசலில் இவன் நீந்தி வரும் வேளையில் அருகில் வந்த ஆட்டோ இவனின் கனமான பல்சரை லேசாக உரசி செல்ல அதில் பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழுந்தவனுக்கு காலில் லிங்கமண்ட் டேர் ஆகியிருந்தது. அதனால் அலுவலகத்தில் கேட்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருக்கிறான் கடந்த ஒரு மாதமாக. அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொள்ள இங்கும் அங்கும் நடப்பவன் பால்கனியில் சில நேரம் நிற்க. அப்பொழுதுதான் முதல் முறையாகப் பார்த்தான் அவளை.

அவன் வீட்டிலிருந்து பார்க்கும்போது சற்று தூரமாகவே இருந்தது எதிரில் இருந்த மழலையர் பள்ளி. ஆனாலும் இவன் அறை பக்கவாட்டில் இருக்கும் மற்றொரு பால்கனியிலிருந்து  நன்றாகவே பார்க்க முடியும். ஆனால் இவன் இருப்பதைத்தான் அங்குள்ளவர்களால் பார்க்க முடியாது. இருவருக்கும் இடையில் ஒரு பெரிய மரம் இருந்து, மறைத்துக் கொண்டிருந்தது அவனை மட்டும்.

அன்றும் தன்னை சற்று தளர்த்திக் கொள்வதற்காக ஒரு மணிபோல் பால்கனியின் பக்கம் நின்றிருந்தவனின் செவிகளில் செல்லக் குட்டி புஜ்ஜி குட்டியெனக் கொஞ்சம் குரல். போக்குவரத்து குறைந்து வாகனங்கள் எதுவும் போகாமல் இருந்ததால் அவளின் குரல் நன்றாகவே இவனை எட்டியது. ‘யாருடா அது.?’ என நினைத்தபடி இவன் பார்க்க. கையில் ஒன்றரை வயது குழந்தையை வைத்துக்கொண்டு இன்னும் அங்கும் ஆட்டியபடியே அதனைக் கொஞ்சிக் கொண்டு இருந்தாள் அவள். பக்கத்திலேயே ஒரு சிறு கிண்ணத்தில் உணவு இருக்க அதையும் வேடிக்கை காட்டியப்படியே ஊட்டிக்கொண்டிருந்தாள் அந்தக் குழந்தைக்கு. அவ்வப்போது முரண்டு பிடித்தாலும் இவளின் கொஞ்சல்களில் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டது அந்தக் குட்டி வாண்டும்.பார்க்கவே அழகாக இருந்த அந்தக் காட்சி, அவனின் மனதில் பசை போல் ஒட்டிக்கொண்டது. காட்சி மட்டுமல்ல அந்தக் காட்சிக்குச் சொந்தக்காரியான அவளும் தான். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக இதுவே அவனுக்கு வாடிக்கையாகி விட்டது, ஒவ்வொரு நாளும் இப்படி அவர்களுக்கே தெரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். .சில நேரங்களில் வேறு வேறு குழந்தைகளும் அவள் கையில் இடம் பெற்றிருக்கும்.

இவன் கருத்தை முதலில் கவர்ந்தது அவளின் நீளமான முடி தான்.
‘இவ, பெண்ணா.? மோகினியா.?’ என்றுதான் முதலில் நினைத்தான்.
அது, சுவாரசியத்தோடு அவளின் மீது விருப்பத்தையும் மெல்ல, மெல்ல ஏற்படுத்தி இருந்தது அவனுக்கு. அவள் நம் கதையின் நாயகி வசுந்தரா.
தொடர்ந்து ஒரு மாதமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஏனோ அன்னை சமீபமாகக் கூறிக் கொண்டிருக்கும் திருமணத்தைப் பற்றிய எண்ணம் தோன்றியது அவனுக்கு. இதுவரை பெரிதாக எந்தப் பெண்ணின் மீதும் ஆசை கொள்ளாதவனுக்கு ஏனோ இவள் மனைவியானாள் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தான்.

இதற்கு மேல் காலதாமதப்படுத்த விரும்பாமல் மனதில் இருப்பதை அன்னையிடம் கூறி விட வேண்டும் என முடிவுக்கு வந்திருந்தான் அவன். எப்பொழுதும் காலை ஒன்பது மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் தங்களின் கிளினிக்கிற்கு ஒன்றாகவே சென்று விடும் அன்னை தந்தை இருவரில் அன்று அன்னை மட்டும் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டவன்
“என்னம்மா.? அதிசயமா இருக்கு. கிளினிக் போலயா நீங்க.? எனக் கேட்டபடி அவரின் அருகில் வந்து அமர.
“இல்லப்பா.கொஞ்சம் தலைவலியா இருக்கு. அதான் போகல.”
டாக்டருக்கே தலைவலியா.?” என்று சிரித்தபடி கேட்டவனை பார்த்தவர்
“ஏன்டா.? டாக்டரும் மனுஷங்க தானே. எங்களுக்கெல்லாம் தலைவலி வராதா என்ன.?” என்றார் அவரும் புன்னகை மாறாமல்.

“வரலாம், வரலாம் தப்பில்லை.” என்றான் அவனும் சிரித்தபடி.
“சரிம்மா ஒரு ஒன்றரை மணிபோல ரெடியா இருங்க.”
“ஏன்டா எங்கேயாவது வெளியில போறோமா.?”
“ஆமா, ஆமா உங்களுக்கு ஒன்னு காட்டணும்.”
“எனக்கு மட்டுமா.? அப்போ அப்பா.?
“முதல்ல உங்களுக்குக் காட்டுறேன் அப்புறம் அப்பாக்கு.”
“ஓஹ். சரி, அப்ப நான் ஒரு, ஒரு மணிபோல ரெடி ஆகிடுறேன்.”
“ஹ்ம்ம்.” என்றவனும் புன்னகைத்தபடியே தன் வேலைகளைப் பார்க்கச் சென்றான்.

ஏனோ வெகுநாட்களுக்குப் பிறகு மகனின் முகம் ஜொலிப்பதாகத் தோன்றியது அந்தத் தாய்க்கு. ஒற்றை மகனாக வளர்ந்ததாலோ என்னவோ அதிக கலகலப்புடன் பேசி விடமாட்டான் அவன். இதுவரை எதுவும் வேண்டும் என்று கேட்டதில்லை. கேட்பதற்கு முன்பே கொடுத்து விடுவார்கள் அன்னையும் தந்தையும். அவனும் படிப்பில் சுட்டியாக இருந்து வேறு எந்த வம்பு தும்பும் செய்யாமல் அமைதியான நல்ல பிள்ளை கேட்டகிரியிலேயே வளர்ந்து விட்டான்.

‘மகன் என்ன காட்டப் போகிறான்.?’ என்ற சிந்தனையில் அமர்ந்திருந்தவர்
‘ஒருவேளை புதுவகை கார் இல்லனா பைக் பற்றிச் சொல்லி அதைக் காட்டப் போகிறானோ.?’ என்று தனக்குள்ளாகவே யோசித்தபடி அமர்ந்திருந்தவர்க்கு வந்திருந்த தலைவலி எங்குச் சென்றது என்று தான் தெரியவில்லை.
சரியாக ஒரு மணிக்கு அழகான எலுமிச்சை நிற காட்டன் புடவையை மடிப்பு கலையாமல் அணிந்தவர் வரவேற்பரைக்கு வந்து, மகன் வருகிறானா என மாடியை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார். வீட்டில் இருந்தாலும் நேர்த்தியாக உடை உடுத்தக்கூடியவர் தான் அவர். மருத்துவராக இருப்பதால் அவர் ரத்தத்தில் ஊறி இருந்தது நேர்த்தியை கடைபிடிப்பது.

சரியாக ஒன்றரை மணிக்குக் கீழே இறங்கி வந்தவன் அன்னையைப் பார்த்துவிட்டு,
“என்னம்மா எங்க போக இப்படி கிளம்பி இருக்கீங்க.?”எனக் கேட்க அதிர்ந்தவராக அவனைப் பார்த்தவர் “நீ தானடா ஏதோ காட்ட போறதா சொல்லி ஒரு மணிக்கு ரெடியா இருங்கன்னு சொன்ன.” என்று கேட்டார். ஒருவேளை மகன் மறந்துவிட்டானோ என்று அவனுக்கு ஞாபக படுத்தும் பொருட்டு.

“காற்றேன்னு தான் சொன்னேன். வெளியில போறோம்னு சொன்னேனா.?”
“ஓஹ்.! அப்ப வெளியில எங்கேயும் போகலையா.? ஒரு மணிக்கு ரெடியா இருக்கேன்னு நான் சொல்லும்போதே நீ சொல்லி இருக்கலாம்ல.?”
“ரெடியா இருக்கேன்னு நீங்கச் சொன்னது வேலையெல்லாம் முடிச்சிட்டு ரெடியா இருப்பீங்க போலன்னு நினைச்சேன். நீங்க இப்படி அழகா கிளம்பி ரெடியா இருப்பிங்கன்னு எனக்குத் தெரியாதே.” என்றான் புன்னகையை இதழில் அடக்கிக் கொண்டே.

“ஹ்ம்ம்.”என்று முறைத்தவரின் அருகில் வந்தவன், அவர் தோள்களில் கைப்போட்டு லேசாக அனைத்த படி
“சரி, பரவால்ல உங்களுக்குக் காட்டுறத காட்டிட்டு நாம ரெண்டு பேரும் லஞ்ச் சாப்பிட வெளியில் போகலாம்.”
“அப்பச் சமைச்சதெல்லாம் என்ன செய்யறது.?”
“அத நைட்டு சாப்பிட்டுக்கலாம். சரி, இப்ப வாங்க என் கூட உங்களுக்குப் பாக்கணுமா.? வேண்டாமா?” என்று கேள்வியாகக் கேட்டவனிடம்,
“ஆமா, ஆமா பாக்கணும்.”என்றார் வேகமாக.
“அப்ப வாங்க.” என்று கூறியபடி அவரை அழைத்துக்கொண்டு மாடி ஏறி நேராகப் பால்கனியில் சென்று நிற்க. இவர்கள் சென்று நின்ற சில நொடிகளில் கைகளில் ஒரு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டே பால்கனிக்கு வந்த வசுந்தரா
“பட்டுக் குட்டி, செல்லக் குட்டி.” எனக் கொஞ்சி கொண்டே அந்தக் குழந்தைக்குக் கிண்ணத்தில் இருந்த சாதத்தை ஊட்ட ஆரம்பித்தாள். புன்னகையில் முகம் விகாசிக்க அன்னையை தோளோடு அனைத்தவன் கைநீட்டி அவளைக் காட்டினான். மகன் முகத்தில் இருந்த பூரிப்பை பார்த்தவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவன் காட்டிய திசையில் பார்த்தவர். மகன் தன்னை சிறிது நேரம் அலைக்கழித்ததில் அவனைக் கலாய்க்கும பொருட்டு.

“அந்தக் குழந்தையைக் காட்டுறியா.? ஆமா செம்ம அழகா இருக்கு.” என்று கூறியவரை முறைத்து பார்த்தவன். “குழந்தையைக் காட்டல குழந்தையைக் கையில் வைத்திருக்கிறவளை காட்டுறேன்.”
“ஓஹ்.! உனக்குத் தெரிஞ்ச பொண்ணா.? என்னை இன்டர்டியூஸ் பண்ணி வைக்கிறதுக்காகக் கூட்டிட்டு வந்தியா.?” என்று படு சீரியஸாக அவன் முகம் பார்த்துக் கேட்க. “அம்மாஆஆ.” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
அதில் சத்தமிட்டு சிரித்தவர்
“என்ன லவ்வா.?” என்றார் அவனைத் தலை சரித்து பார்த்துக் கொண்டு. அதில் லேசாகச் சிரித்தவன்.

“அப்படின்னு சொல்லிட முடியாது. ஆனா இவளைக் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது. அதான், தோனினத எனக்குள்ளேயே வச்சுக்காம உங்க கிட்ட இறக்கி வச்சுட்டேன்.”
“என்கிட்ட ஏன்டா இறக்கி வச்ச.? அந்தப் பொண்ணு கிட்டயே நேரா போய்ச் சொல்ல வேண்டியது தானே.” “அய்யய்ய.! அம்மா அதெல்லாம் எனக்குச் சரி வராது. உங்ககிட்ட சொல்லிட்டேன் நீங்க என்ன செய்யனுமோ செய்து அவளை என் பக்கத்துல இப்படி நிக்க வைங்க.” என்றவன். அவனின பக்கத்தில் யாரோ நிற்பது போல இடது கையை அணைவாக போட்டு காட்டிவிட்டு,எதிரில் நின்றிருந்தவளையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் அறையை நோக்கிச் சென்றான்.

‘அடப் பக்கி. லவ் பண்ணி என்ஜாய் பண்ணாம இப்படி என்னைக் கோர்த்து விட்டுட்டு போறானே. இப்ப இந்தப் பொண்ணு யாரு என்னனு விசாரிக்கணுமே. இந்த ஸ்கூல நடத்துறவங்க லதா மேடம் தானே. நமக்கு இருக்கிற பரபரப்பான வேலையில ஒரு நாலஞ்சு முறை அவங்கள பாத்து சிரிச்சு இருக்கேன். அவங்களும் என்னைப் பார்த்துச் சிரிச்சிருக்காங்க. சரி அவங்க கிட்ட போய்ப் பேசி இந்தப் பொண்ணு யார் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.’ என்று தனக்குள்ளாகவே பேசித் திட்டமிட்டவர் நிமிர்ந்து பார்க்க அதற்குள்ளாக அந்தக் குழந்தைக்கு ஊட்டி முடித்து, உள்ளே சென்று இருந்தாள் அவள்.

‘ஐயோ சரியா கூடப் பார்க்கலையே அவளை.’ என்று கையை உதறியவாறு வருந்தியவர். பின், கணவன் வந்ததும் இதைப் பற்றிப் பேச வேண்டும். அவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். என நினைத்தவராக மதிய உணவை மகனுக்குக் கொடுத்துத் தானும் உண்ண கீழே இறங்கி சென்றார்.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நல்ல பையன். நல்ல அம்மா.