
அகம் 16
“ஏய் அவந்தி.!”
“எழுந்திரு அவந்தி.! என்னாச்சு உனக்கு” தன்னவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தான் அகன். எழுந்தவளின் இதயம் படபடவெனத் துடித்தது. தன்னவனின் தோள் சாய்ந்துக் கொண்டவள்.
“அகன்..! நம்ம கட்டிய கோயிலை யாரோ இடிக்காவ, யாருன்னு தெரியலை” என அவள் பதறினாள்.
“அவந்தி இது கனவு, கண்ணைத் திறந்து பாரு, இது நம்ம ரூம்”
“இல்லை அகன் இது கனவு மாதிரி தெரியலை,எதோ நடக்குது, வர்றியளா கோயில் வர போய்ப் பார்த்திட்டு வந்திடுவோம்” அவள் பதற்றத்தில் கத்திக்கொண்டிருக்க,
“அவந்தி ஃபர்ஸ்ட்டுக் கண்ணைத் தொறந்து பாரு, இது கனவுதான்” அவன் அழுத்தமாய்ச் சொன்னபின் விழி திறந்து பார்த்தாள்.
“அகன் நான் போறேன், நீங்க வர வேண்டாம்” எனச் சொன்னவள் விறுவிறுவெனக் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“உன்னைத் தனியா விட முடியாது அவந்தி” என தானும் அவளுடன் நடக்க ஆரம்பித்தான்.
வண்டுகள் ரீங்காரமிடும் சப்தமும், வினோதமான சப்தங்கள் கேட்க, ஊரின் எல்லையை நோக்கி படபடவென நடக்க ஆரம்பித்தாள். அந்தச் சமயத்தில் மழை பொழிய ஆரம்பித்தது, அதையும் பொருட்படுத்தாமால் நடக்க, அகனும் அவள் பின்னே நனைந்தபடி செல்ல ஆரம்பித்தான்.
“அவந்தி அப்படி எதுவும் நடந்திருக்காது, நான் சொல்றதை கொஞ்சம் கேளு” அவன் அவளிடம் பேசிக்கொண்டே நடந்தான்.
“காவக்காரிக்கு எதோ ஆபத்து, என் மனது அடிச்சு சொல்லுது நான் பார்த்தே தீருவேன்” எனப் பேசியபடி ஊரின் எல்லையை வந்தடைந்தனர், ஆள்நடமாட்டமில்லா நள்ளிரவு, நான்கு சாலைகள் ஒன்றாய் சந்திக்கும் இடத்தின் வலதுபுறம் இருந்த சாலையில், ரம்மியமாய் அமைந்திருந்த கோவில். உயர்ந்து நின்ற கோபுரத்தை அன்னாந்து பார்த்தாள். அங்கே எதோ பறவையின் அசைவை அவள் உணர்ந்தாள், புறவாக இருக்கும் என நினைத்துக்கொண்டவள், கோவிலை ஒரு சுற்று சுற்றி பார்த்தாள்., அப்போது ஆட்கள் வரும் சலசலப்பு கேட்டு, கோவிலின் பின்புறம் அகனும் அவந்திகையும் ஒளிந்துக்கொள்ள,
“இங்க பாருங்கடே இன்னைக்கி அம்மாவாசை,இந்த சாமிக்கு இன்னைக்கி சக்தி இருக்காதாம், கோவிலை தரமட்டமாக்கிட்டுப் போறது தான் வேலை” அந்தக் கூட்டத்தின் தலைவன் போல் இருந்தவன் சொல்ல,
“என்னனே உண்டியல்ல திருட கூட்டிட்டு வந்தன்னு பார்ததா கோயிலை இடிக்கக் கூட்டிட்டு வந்திருக்க” என மற்றொருவன் முரண்டு பிடித்தான்.
“ஏலே இரண்டு ஊர்காரணும் சேர்ந்துட்டா, இவனுவகிட்ட எப்படில அரசியல் பண்ண முடியும், நம்ம ஊர்காரனை ஒரு பயலும் மதிக்கமாட்டனுவ பார்த்துக்க” என அவன் பேசிக்கொண்டிருந்தபோதே அவந்திகைக்கு விளங்கிவிட்டது, இவன் பக்கத்து ஊரின் அரசியல் தலைவரை போல் பணியாற்றுபவன் என்று.
“என்னனென்னே சொல்லுதிய, கோவிலை இடிச்சா எப்புடின்னே சண்டை வரும்” இன்னொருவன் கேட்க,
“ஏலே இவன் இடிச்சான்னு அவனும், அவன் இடிச்சான்னு இவனும் நினைச்சுப்பான்டே, இந்த மழையில சந்தேகம்ல உமக்குத் தேவையாலே, இவனுவகிட்ட வேலைய வாங்கியதுக்குள்ள விடிஞ்சிடும்”என வந்திருந்த ஐவரும் கோவிலை நெருங்க, கலகலவெனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. சிரித்துக்கொண்டிருந்த அவந்திகையைப் பார்த்து புரியாது விழித்துக்கொண்டிருந்தான் அகன். ஒற்றை விரலை உதட்டில் வைத்து அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தாள் அவந்திகை.
“தலைவரே சிரிப்புச் சத்தம் கேட்டியளா.?” வந்திருந்த அடியாளில் ஒருவன் கேட்க.,மீண்டும் கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தாள் அவந்திகை. அவர்கள் கோவிலின் முன் வாசலில் நின்றிருப்பதால், பின்னால் ஒளிந்துக்கொண்டிருந்த அகனும் அவந்திகையும் அவர்களுக்குத் தெரியவில்லை.
சிரிப்புச் சத்தம் கேட்டு கோவிலை இடிக்க வந்தவர்கள் திடுக்கிட்டு நின்றனர், ஆனால் சிரிப்புச் சத்தம் நின்றபாடில்லை, சிரிப்பு சத்துடன் தன் கொலுசை ஆட்டி கொலுசு சப்தத்தையும் ஏற்படுத்தினாள் அவந்திகை.
“அய்யோ கொலுசு சத்தம் கேக்குது வாங்க ஓடிதுவோம்” என ஒருவன் எச்சரிக்கை விடுத்தான்.
“எவாம்லே அது என் கோயிலை இடிக்க வந்தது” என்ற அவந்திகையின் குரல் கேட்டு சாமி பேசுகிறது என்றெண்ணி தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர் அனைவரும். அவர்கள் ஓடிச் சென்ற பிறகு, அகனும் அவந்திகையும் பேசிய படி வீடு திரும்ப ஆரம்பித்தனர்.
“இருந்தாலும் உனக்குத் தைரியம் தான் அவந்தி, நைட்டுன்னு பாரக்காம கிளம்பிட்டியே”
“பிறவு கனவுல வந்து காவக்காரி காட்டிட்ட பாருங்க, நம்ம ஆசையைக் கட்டுத கோயிலுக்கு ஆபத்துனா பாரத்திட்டு இருப்பேன்னு நினைச்சியளோ” அவள் சிரித்தபடி கேட்டாள்.
“என் அருமை பட்டிகாடுனா.? பட்டிகாடுதான்”
“அகன்.! ஓ பட்டிகாடுனா எளக்காரமோ.?” பொய் கோபம் காட்டினாள் அவள்.
“அடியே உன்னைக் கொஞ்சினேன்டி” என அகன் விவரிக்க,
“என்னது டியா.? பிறவு நானும் வாடே, போடேன்னு சொல்லுவேன், மன்னராசாவ கூப்பிடுத மாதிரி கூப்பிடுவேன் சரிதானா.?” அவள் கண்சிமிட்டிக் கேட்டாள்.
“ஏன் இதுக்கு முன்னாடி பர்மிசன் வாங்கிதான் கூப்பிட்டயா அவந்தி.? நீ கல்யாணத்துக்குச் சம்மதிக்குற வரைக்கும் அப்படித் தானா கூப்பிட்டுட்டு இருந்த” அவன் அவந்திகையை மடக்கி கேள்வி கேட்க,
“சரி சரி அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு” என அவள் பேச்சை மாற்ற முயல.
“ஏன் அழகு அவந்தி.!” இருளிலும் நிலவின் ஒளி பட்டு மிளிர்ந்தளை பார்த்து அவன் சொல்ல, வெட்கத்தில் முகம் சிவந்து போனவளின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் அகன்.
“ஒரு விசயத்துல உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு அவந்தி” அவன் எதோ சொல்ல வர,
“என்ன அது” தன் முட்டை கண்களை உருட்டி கேட்டாள் அவந்திகை.
“இல்லை அவந்தி எனக்கு ஒரு எண்ணம் இருந்திச்சு அதுக்கு நேரெதிரா நீ இருக்குறது தான் வியப்பா இருக்கு”
“அப்படி என்ன என்னைப் பத்தி நினைச்சிங்க.?”
“கிராமத்து பொண்ண கட்டிக்கணும்னு சொன்னப்ப, உலகம் தெரியாம அடுப்படியிலையே அடைஞ்சு கிடைக்குற பொண்ண இருக்கும்னு நினைச்சேன், என் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கிட்ட அவந்தி, அன்னைக்கி நீ உன்னோட குட்டி தொழிற்கூடத்தைக் காமிச்சியே, ப்பா இந்தப் பொண்ணுக்குள்ள இவ்வளவு திறமையான்னு யோசிக்க வச்சிட்ட அவந்தி” என அவன் சொல்ல, அவள் புன்னகைத்தாள்.
“எனக்குப் படிப்பு மேல நாட்டமில்லை பார்த்துகிடுக, அதான் எதாவது சுயமா செய்யணும்னு ஆசைப்பட்டு, சிறுதொழில்க்குன்னு உள்ள படிப்புகளைத் தேடி தேடி படிச்சேன், என்ன பத்தி தெரிஞ்சிகிட்டதெல்லாம் போதும், நீங்க என்ன வேலை பாக்குறீங்க.?” அவனைப் பார்த்தபடி அவள் கேட்க.,
“நானா.?” அவளைப் பார்த்துச் சிரித்தான்
“சொல்லுங்க” சிணுங்கினாள் அவள்.
“சொன்ன உனக்குப் புரியுமா அவந்தி.?”
“புரியலைனா விளக்குங்க” அவள் திமிராய் பதில் சொன்னாள்.
“பொருள்களை ஆன்லைன்ல விற்பனை செய்யுற கம்பெனி வச்சிருக்கேன்”
“அப்படினா.?”
“இப்போ அவந்தி சோப் திருநெல்வேலில இருக்கு, இது டெல்லில இருக்குற வாடிக்கையாளருக்கு சேர்க்குற வேலை” அவன் எளிதாய் அவளுக்குப் புரியவைத்தான்.
“ஓ பார்சல், கொரியர் வேலையா” அவள் நக்கலாய் கேட்க,
“அவந்தி நீ சரியான வாலு” எனப் பேச்சும் சிரிப்புமாய் வீடு வந்து சேர்ந்து உறங்கி போயினர் இருவரும்.
******************
அன்று அகன் கட்டிய அவந்திகை மாளிகைக்குப் புதுமணை புகுவிழா. பெரிய அரண்மனை போன்ற வீடு, வீட்டின் முன் பக்கம் பூத்து குலுங்கும் பூக்களிடன் கூடிய செடி, கொடிகள், வீட்டின் பின்னே மரக்கன்றுகளாய் நின்றுக்கொண்டிருந்தது. பெரிய வரவேற்பரை அதைத் தொடர்ந்து பிரம்மாண்டமான சமையல் அறை, மாடியில் பெட்ரூம்கள், அதற்கு மேல் மொட்டை மாடி, ஒவ்வொரு அறைக்கும் பலகனிகள், எனப் பிரம்மாண்டமாய் இருந்த வீட்டின் நடுவில் யாகம் வளர்க்கபட்டு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார் புரோகிதர், பிங்க் நிற புடவையில் கழுத்தில் மாலையுடன், அகனும் அமர்ந்திருந்தான், அவளருகே பட்டு வேட்டி சகிதமாய் அகனும் அமர்ந்திருந்தான்.
உறவுகள் அனைத்தும் ஒன்றுக்கூடி இருந்தது. அந்த வீட்டில் அனைவரின் முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது, சந்தியாவும் சக்தியும் பட்டு தாவணி உடுத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்,
முத்துவேலும்,ஜெயக்கொடியும், மகனையும் மருமகளையும் பெருமையாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார், காயத்ரிக்கு கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்றியதோடு, அது சரியாக அமைந்ததிலும் மகழ்ச்சி தாண்டவமாடியது. பார்வதியும்,ராஜபூபதியும் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய திருப்பதியுடன் கூடிய மனநிறைவுடன் தன்னவள் பக்கதில் அமர்ந்திருந்த அகன்.,
“என்ன அவந்தி மறுபடியும் ஒரு தடவை தாலி கட்டிரவா?” வசீகரமாய்க் கேட்டான் அகன். அவளின் மஞ்சள் பூசிய முகமும் செவ்வரளியாய் சிவக்க,
“பதில் சொல்லு அவந்தி”
“சும்மா இருங்க” எனச் சொன்னவள் தன் முத்துமுரல் காட்டி சிரிக்க,
“இப்படியே வெட்கபட்டுட்டு இருந்தா.?” மீண்டும் அவளை வார்த்தையால் சீண்டினான்.
“அகன் எல்லாரும் நம்மளை தான் பார்க்காவ, அமைதியா இருங்க அகன்” எனச் சொல்லி அவள் தன் வெட்கத்தைக் கட்டுபடுத்தினாள்.
“சரி சரி ஐ லவ் யூ சொல்லு, நான் அமைதியா இருந்திக்குறேன்” அவளைச் செல்லமாய்ச் சீண்டினான்.
“அதெல்லாம் கெட்ட வார்த்தை, சொல்ல மாட்டேன்” அவள் முரண்டு பிடித்தாள்.
“அப்போ சரி தாலி கட்டிர வேண்டியது தான்”
“அய்யோ அகன், அப்படி எதுவும் பண்ணிராதிய, பிறவு எல்லாரும் நம்மளை பார்த்துதான் சிரிப்பாவ” அவள் மொழிய,
“அப்போ லவ் யூ சொல்லு”
“ம்ம் சொல்லுமா,லவ்யூ வாயா நமஹ.!” எனப் பிரோகிதர் சொல்ல, திடுக்கிட்டு திரும்பினாள் அவந்திகை.
“மந்திரத்தை சொல்லுமா” எனப் பிரோகிதர் பல்வரிசையைக் காட்ட, அகனும் அவருடன் சேர்ந்து சிரித்தான்.
“சொல்லுமா லவ்யூவாயா நமஹ” என மீண்டும் அவர் சொல்ல, அவந்திகையும் சிரித்துவிட்டாள்.
யாகம் முடிந்த பிறகு பந்தி வைத்து உணவு பரிமாறபட்டது, அனைத்து சைவ உணவுகளும் பரிமாறப் பட, ஊர்மக்கள் அனைவரும் வந்து சாப்பிட்டு சென்றனர். அனைத்தும் இனிதாய் நிறைவேறி முடிய,
“இனியன் தம்பி.!” என அழைத்த முத்துவேலின் அருகில் ஜெயக்கொடியும் நின்றிருந்தார்.
“சொல்லுங்க மாமா.! சாப்பிட்டிங்களா.? அக்கறையுடன் கேட்டான் அகன்.
“அதெல்லாம் ஆச்சுய்யா” என முத்துவேல் சொன்னார்.
“அத்தை நீங்க.?” அவன் கேள்வியாய் தொடங்கும் முன்னே ஜெயக்கொடி விழிகளில் கண்ணீர் பெருக்கெடுக்க, கட்டுபடுத்த முடியாமல் அழுதுவிட்டார்.
“அத்தை ஏன் அத்தை அழறீங்க” அவன் கேட்க.,
“அவ கிடைக்கய்யா விடு, இந்தாய்யா” என மஞ்சள் பையை அவன் கைகளில் கொடுத்தார், அதைத் திறந்து பார்த்த அகன் அதிர்ச்சியில் உறைந்தான்.
“எதுக்கு மாமா இதெல்லாம்” அதிர்வுடனே கேட்டான்.
“அவந்திகைக்குச் செய்ய வேண்டியது தான், எங்களால முடிஞ்சது” என அவர் சொல்லிக்கொண்டிருந்த போதே காயத்ரி வந்து இடையிட்டார்.
“அண்ணேன் இதெல்லாம் நான் கேட்டேனா.?” கோபமாய்ப் பார்த்தார் காயத்ரி.
“அது வந்து” என அவர் வார்த்தைகளை உள் இழுக்க,
“இனியன் அதை மாமாகிட்ட கொடு” என அதட்ட, பச்சை குழந்தை போல் புரியாது விழித்துக்கொண்டிருந்தவன் மஞ்சள் பையைத் தூக்கி முத்துவேலிடம் கொடுத்தான்.
“இதெல்லாம் கொடுத்தாதான் அவந்தியை நல்லா பார்த்துக்குவோம்னு நினைச்சியா அண்ணேன், அவ நம்ம குலத்தைக் காக்க வந்த குல தெய்வம், என் கண்ணு மாதிரி பார்த்துப்பேன் அண்ணேன், நீ சீர் சனத்தி செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை” எனப் பாசத்துடன் காயத்ரி பேச நெகிழ்ந்து போனார் முத்துவேல்.
“அத்தை நீங்க ஏன் அழுகுறிங்க.?” அகன் கேட்க,
“வீட்டுகுள்ளையே சுத்திட்டு திரிஞ்சவ இனி வீட்டுல இருக்க மாட்டா, அதான் மனசு தாங்கலைய்யா” என ஜெயக்கொடி விவரிக்க.
“ஏய் ஜெயா, தடுக்கி விழுந்தா நம்ம வீடு வந்திரும் இதை நினைச்ச வருத்தபடுற, அவந்திக்காகத் தான், சென்னையை விட்டுட்டு சொந்த ஊர்லையே வீட்ட கட்டிருக்கு ஜெயா” எனக் காயத்ரி ஆறுதலாய் நின்றார்.
“நீங்க சொன்னா சரிதான் மைனி” எனப் புன்னகைத்தார் ஜெயக்கொடி. இரு குடும்பமும் ஒன்றாய் கூடி சந்தோசத்தைப் பரிமாறிய தருணம் அளவில்லா மகிழ்ச்சியுடன் அந்த நாள் இனிதாய் நிறைவேறியது.
***************
இரண்டு தினங்களில் கோவில் திருவிழா, இன்னும் காவல்காரியின் பெயரை கண்டறியவில்லை,அனைவரும் தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தனர். அகனின் வீட்டின் வரவேற்பரையில் குடும்பமே கூடியிருந்தது.
“எப்பா நம்ம தாத்தா பாட்டி பேரேல்லாம் வரிசையா சொல்லுங்க பார்ப்போம்” கேட்டாள் அவந்திகை.
“எங்க அப்பா பேரு வீராவு, அம்மை பேரு சித்திரைக்கனி”
“அய்யோ அதான் தெரியுமே.? அவிய கூடப் பிறந்தவிய பேரு, அதுக்கு முன்னாடி உள்ளவியளோட தாத்தா பாட்டி பேரு தெரியுமா.?” அவள் கேள்வியை முன் வைத்தாள்.
“வேலு அண்ணேன் நம்ம அப்பாக்கு ஒரு தங்கச்சி உண்டுல்ல” பார்வதி சொன்னார்.
“ஆமா பார்வதி, அவியள கூடங்குளத்துல கெட்டி கொடுத்தாத அப்பா சொல்லுவாவ.? ஏன் கேக்குத.?”
“அண்ணேன் அவங்க பேரு என்னன்னு உனக்குத் தெரியுமா.?” காயத்ரி கேட்டார்.
“தெரியலையேம்மா, கூடங்குளத்து அத்தைனு தான் சொல்லுவோம் பேரு நினைவுல கூட இல்லையே” என வருந்தினர்.
“அவிய உயிரோட தான இருக்காவ ஒரு எட்டுப் போய்ப் பார்த்திட்டு வந்தா தான் என்ன.?” எனப் பார்வதி கேட்க,
“சரியாதான் சொன்ன பார்வதி, ஆனா எல்லாரும் போக வேண்டாம், அவியையும், இனியனையும் அனுப்பி வைப்போம்” என முத்துவேல் சொல்ல,
“ஆமான்னே நானும் இரண்டு பேரையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போகச் சொல்லணும் நினைச்சேன் போயிட்டு வர வழியில கோவிலுக்குப் போயிட்டு வரட்டும், புதுசா கல்யாணம் ஆனவஙக் நாலு இடத்தைச் சுத்தி பார்க்கட்டும்” எனக் காயத்ரியும் சொன்னார்.
“என்ன அவந்தி சரியா போயிட்டு எடுத்து வந்திருவியளா.?” முத்துவேல் கேட்டார்.
“சரிப்பா போயி பார்த்திட்டு, அந்தக் காவக்காரி பேரை கண்டுபிடிச்சிட்டு வந்தர்றேன்” எனச் சொல்ல, அன்றே உடனே இருவரும் கிளம்பினர்.
நீண்ட நெடிய பயணம் அவனுடன், நினைக்கும் போதே அவள் மனம் தித்தித்தது., பயணத்தின் முடிவில் அவர்களுக்குத் தேவையான தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருவரும் இனிதாய் பயணத்தைத் துவங்கியிருந்தனர். அப்படி என்ன தான் காவல்காரியின் பெயரில் இத்தனை மர்மம், அவள் எதை நோக்கி தான் செல்ல சொல்கிறாள், என யோசித்தபடி அகனுடன் பயணித்துக்கொண்டிருந்தாள் அவந்திகை
“அகன்.! எதுக்காகக் காவல்காரி நம்மளை இப்படி அலைய விடுதா.? அப்படி அவ அப்படி என்ன தான் தெரியபடுத்த நினைக்குதா.?”
“அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியலை அவந்தி, எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிட்டு போக வேண்டியது தான், ஆமா அந்தப் பாட்டி வீட்டுக்கு இதுக்கு முன்ன போயிருக்கியா அவந்தி”
“ஊருக்குள்ள போனா வீடு நினைவு வரும் அகன்” என அவள் சொல்ல, சில மணி நேர பயணத்தில் கூடங்குளம் வந்தடைந்தனர் இருவரும், ஊரை பார்த்தவுடன் வீடு செல்லும் வழி சரியாக நினைவு வர, வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு வீட்டுனுள் சென்றனர்.
வீட்டின் வாயிலிலே மாட்டுத் தொழுவம் இருந்தது, அதைத் தாண்டி சென்ற போது அந்தப் பாட்டியின் மகன் இசக்கி நின்றிருந்தார்.
“நான் விக்கிரமசிங்கபுரம் முத்துவேல் மவ, பாட்டியை பார்த்திட்டு பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன் மாமா, இவிய என்னோட வீட்டுகாரவிய” என அகனையும் அறிமுகம் செய்து வைத்தாள் அவந்திகை.
“வா தாயி நல்ல நேரத்துல தான் வந்திருக்கிய, உள்ள போங்க” சொல்லி வெளியே சென்றார்.
“அகன் ரொம்பப் பதட்டமா இருக்கு”
“ஏன் அவந்தி.!”
“இல்லை பாட்டியே வயசான பாட்டி, நம்ம கேட்க வந்தது புரியுதோ என்னவோ” எனப் புலம்பியவளின் கரம் பிடித்தவன்.
“நல்லதோ, கெட்டதோ, சேர்ந்து சமாளிப்போம் அவந்தி, என்ன நீ சொன்னதை நான் சொல்லுறேன்னு பாக்குறியா, யுவர் மை பாஸிட்டிவ் எனர்ஜி” என அவன் சொல்ல, மனதில் ஒரு நம்பிக்கையுடன் வீட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்.
“பாட்டி இருக்கியளா..?”
“பாட்டி.!” என மீண்டும் அழைத்தாள் அவந்திகை.
“ஹாண் .!” என்ற முனகலுடன் குரல் வந்த திசை பார்த்து அதிர்ந்து போய் நின்றனர் அகனும், அவர்கள் எதிர்பாராத காட்சியை அங்குப் பார்த்தனர்., அவர்களின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்த் தெரிந்தது.

