
அது ஒரு பெரிய வீடு.
ஒரே குடும்பம்.
ஆனா மூன்று கதவுகள்.
மூன்று வீட்டு எண்கள்.
அந்த வீட்டின் மூத்த குடிமகன், விஸ்வநாதன்.
68 வயது.
வாழ்நாள் முழுவதும் நேர்மையை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிக்கையாளர்.
இப்போது அவருக்கு வரும் வருமானம் —
மாதம் ரூ.12000 பத்திரிக்கையாளர் பென்ஷன்.
அவரின் மனைவி லட்சுமி.
இட்லி மாவு அரைத்து விற்று கொஞ்சம் வருமானம்.
இரண்டு மகன்கள் ஆதித்யா, சந்திரன்.
இருவருக்கும் குடும்பம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்.
வீடு ஒன்று தான்.
ஆனா வாழ்க்கை மூன்று பிரிவாகி விட்டது.
ஒருநாள் அரசாங்கம்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவித்தது.
அதே நாள் மாலை
விஸ்வநாதன் லட்சுமியை பார்த்து கறாராகச் சொன்னார்:
“நான் பென்ஷன் வாங்குறேன்.
நீயும் ஏதோ சம்பாதிக்கற.
அதனால்… நீ இந்தத் தொகைக்கு அப்ளை பண்ணக்கூடாது.”
லட்சுமி எதுவும் பேசவில்லை.
ஆனா உள்ளுக்குள் ஒரு எரிச்சல்.
ஓரிரு மாதங்கள் கழித்து
“பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாம் வாங்குறாங்க…
நான் வாங்கக்கூடாதா?”
அந்த கேள்வி அவளுக்குள் இருந்தது.
ஆனா வாயில வரவில்லை.
மகன்களிடம் அவர் பேசிப் பார்த்தார்:
“நீங்க இதுவரைக்கும் அரசாங்கத்துகிட்ட பணம் வாங்கித்தான் வாழ்ந்தீங்களா? உங்க குடும்பத்தை நீங்களே பார்த்துக்கோங்க.”
ஆனா
மருமகள்கள் செல்வி, கோகிலா இருவரும்
ஏற்கனவே விண்ணப்பித்து,
மாதம் அந்த ஆயிரம் ரூபாயை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
லட்சுமி மனசில் ஒரு சின்ன நிம்மதி:
“சரி… அவங்களாவது வாங்கறாங்க…”
ஆனா…
இந்த வீட்டில் யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருந்தது.
ஒவ்வொரு மாதமும்
விஸ்வநாதன்,
தனக்கு வரும் பென்ஷனில் இருந்து
ரூ.2000-ஐ அமைதியாகப் பிரித்து வைத்துக்கொள்வார்.
அந்த பணம் எங்கே போகிறது?
யாருக்கும் தெரியாது.
ஒருநாள் லட்சுமி கேட்டாள்.
“எப்பவும் பென்ஷன் பணத்துல ரூ.2000 மாயமாயிருது…
எதுக்குன்னு சொல்லவே மாட்டேங்கிறீங்க…
அது எங்க போகுது?”
விஸ்வநாதன் சிரித்துவிட்டார்.
“சில செலவுகள் இருக்கும்…”
அதற்கப்புறம் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் அந்த ரூ2000 ஒவ்வொரு மாதமும்
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு
அமைதியாக அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
அவர் மனதில் ஒரு கணக்கு:
“என் வீட்டில இருந்து இரண்டு பேரு
அரசாங்கத்திலிருந்து ரூ.1000 வாங்குறாங்க…
அது நமக்கு தேவையில்லாத பணம்.
அதையே நாம திருப்பி அனுப்புறோம்.”
அவருக்கு அது “தானம்” இல்லை.
அது
“கடன் திருப்பிச் செலுத்துதல்.”
“நான் எழுதுற நேர்மை
என் வாழ்க்கையிலயும் இருக்கணும்…”
“இதை சொல்லிட்டு திரியணுமா?
வீட்டுலே ஏற்றுக்கொள்வாங்களா?”
அவருக்கு எல்லாம் தெரியும்.
ஆனா
ஒரு விஷயம் மட்டும் முக்கியம்:
“என் மனசாட்சிக்குத்தான் நான் பதில் சொல்லணும்.”
அந்த இரவு
விஸ்வநாதன் வழக்கம்போல் படுத்தார்.
ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.
அவர் தூங்கிவிட்டார்.
அவருக்கு எந்தக் கவலையும் இல்லை.
எந்தக் குற்ற உணர்வும் இல்லை.
ஏன்னா
அவருடைய வாழ்க்கை கணக்கில்
எதுவும் பாக்கி இல்லை.
சிலர் அரசாங்கத்திடம்
உரிமைத் தொகை கேட்டு பெறுவார்கள்.
சிலர்
அதை அரசாங்கத்துக்கே
அமைதியாகத் திருப்பிக் கொடுப்பார்கள்.
அந்த மாதிரி மனிதர்கள்
அமைதியாக வாழ்ந்து,
அமைதியாகத் தூங்குவார்கள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமை 👍