
இதயம்-13
கையெழுத்துப் போட்டு நிமிர்ந்து விட்டு, “வாழ்த்துகள் ஆதன்!”
பூரித்த புன்னகையுடன் கரம் குலுக்கினாள் வாஹினி.
ஆனால் அவன் முகத்தில் புன்னகையில்லை. முகத்தில் தீவிர யோசனையிலிருப்பதற்கான பாவனை தெரிந்தது.
“ஹேப்பி மேரிட் லைஃப் நிஷா!” என நிஷாவையும் வாழ்த்த, நிஷாவின் இதழ்களில் அலட்சிய புன்னகை தோன்றி மறைந்தது.
சதாசிவத்திற்கோ உள்ளம் கொள்ளா சந்தோஷம். தன் விருப்பப்படி இரண்டு பெரிய சாம்ராஜ்யங்களை இணைக்கும் திருமணம் நிகழ்ந்துவிட்டதே..! இனி தன் மகன் தன் பிடிக்குள். உள்ளம் கெக்கலிக் கொட்டிச் சிரித்தது. கண்களில் ஆணவம் குடியேறியிருந்தது.
‘நான் சாணக்கியன்! அரசியல் சாணக்கியன்! என்னை வெல்ல எவனாலும் முடியாது.’ அகம்பாவம் உள்ளுக்குள் நிரம்பியது. எல்லாம் நினைத்ததைச் சாதித்து விட்டோமென்கிற திமிர்.
அதே திமிருடன், மாங்கல்யம் கோர்க்கப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை, தன் மகன் கரத்தினில் கொடுத்தார் சதாசிவம்.
“நிஷா கழுத்தில் இதைக் கட்டு.!”
கட்டளையாய் வந்த அவரது குரல் கோபத்தைக் கிளறினாலும், உதட்டோரத்தில் கசிந்த புன்னகையோடே திருமாங்கல்யத்தை தன் கரத்தினில் வாங்கினான் ஆதன். புது மஞ்சள் கயிற்றில், தங்க மணிகளுக்கிடையே கோர்க்கப் பட்டிருந்த, அந்த மாங்கல்யம் தன் தாயுடையது என்பது அவனுக்கு யாரும் சொல்லாமலே தெரிந்தது.
ஏனோ தன் தாயே உடனிருந்து அவனை வாழ்த்துவதைப் போன்ற பிரம்மை எழுந்தது.
தாயை நினைத்ததும் முகத்தில் மலர்ச்சி நிறைய, நிதானமாய், தன் கரத்தினில் மாங்கல்யத்தை வாங்கியவன், நிஷாவின் கழுத்தருகினில் கொண்டு செல்ல, அனைவரும் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க, நொடிப் பொழுது கரத்தினை பின்னுக்கு இழுத்தவன், தன் தந்தையை நோக்கிப் பார்வையை வீசினான்.
“ஆது! தாலியைக் கட்டுப்பா! எவ்வளவு நேரம் நிஷா வெய்ட் செய்யறா பாரு!” எனச் சொன்ன சதாசிவத்தை அவன் பார்த்த அந்தப் பார்வையில் ஏதோ ஒன்று இருந்தது.
அந்தப் பார்வையின் அர்த்தம் விளங்காது, யோசனையோடு அவர் ஆதனைப் பார்த்திருக்க, யாரும் எதிர்பாரா வண்ணம், நிஷாவைத் தாண்டிச் சென்று நிஷாவின் அருகில் நின்றிருந்த வாஹினியின் கழுத்தில் பொன் தாலியைப் பூட்டியிருந்தான் ஆதன் ரித்விக்.
“ஆதன் என்ன பண்ணுறே.? கையை எடு ஆதன்!”
“ஆது என்ன பண்ணுறே? நீ தாலி கட்ட வேண்டியது நிஷாவோட கழுத்தில்..!”
“உங்கப் பையன் பண்ணுறது சட்டப்படி குற்றம். பதிவுத் திருமணம் பண்ணினது என் பொண்ணு கூட, ஆனால் தாலி கட்டினது யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு கழுத்தில். இப்படியெல்லாம் எங்களை அவமானப் படுத்தணும்ன்னு தான் ரிஜிஸ்டர் ஆஃபிஸில் தான் கல்யாணம் பண்ணணும்ன்னு கட்டாயப் படுத்தினீங்களா?”
“பார்த்தீங்களா! சம்யூ மேலே, உங்கப் பையனுக்கு துளி பாசமில்லை! பாசமிருந்தால் இப்படியெல்லாம் பண்ணியிருப்பானா?”
“நீ என்ன பண்ணி வச்சிருக்கே ரித்வி? இப்போ உன் வைஃப் நானா? இல்லை அவளா?” தன்னைச் சூழ்ந்திருந்த எந்தக் கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை. யாருடைய கேள்வியும் அவனைப் பாதிக்கவும் இல்லை.
யாரையும் கண்டுக் கொள்ளாமல், அதிர்வுடன் நின்றிருந்த வாஹினியின் கரத்தைப் பற்றிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான் ஆதன். தனக்கு நொடி நேரத்தில் நடந்த நிகழ்வின் அதிர்விலிருந்து வெளி வராது, உணர்வே இல்லாமல் அவனுடன் நடந்தாள் சிம்மவாஹினி.
“இப்போ மட்டும் அண்ணன் இந்த வாசலைத் தாண்டினான்னு வையி, ஒரேயொரு க்ளிக் தான். உன் வீடியோ உலகம் முழுசும் பரவிடும்.!” சம்யூவின் செவிக்குள் பேசினான் ஆகாஷ்.
“க்ளிக் பண்ணு ஆகாஷ்! க்ளிக் பண்ணு! உலகம் முழுக்க பரவட்டும்! உன்னை நம்பி வந்தப் பொண்ணோட அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுறதில் உனக்கு எவ்வளவு ஆர்வம்? நான் என்ன முன்ன மாதிரி கெஞ்சிட்டு இருப்பேன்னு நினைக்கிறியா? உன்னைப் போய் காதலிச்சு, உன்னை நம்பி எல்லாத்தையும் இழந்து, ச்சே! என்னை நினைச்சே எனக்கு அசிங்கமா இருக்கு. நீ தாராளமா எல்லா வீடியோஸ் பிக்ஸ் எல்லாத்தையும் ஃபார்வேர்ட் பண்ணிக்கோ, ஆனால் ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ, உன்னைப் பெத்தவ கிட்டே என்ன இருக்கோ, அது தான் என் கிட்டேயும் இருக்கு.!” அழுத்தமாய் அவள் சொன்னதில் விக்கித்துப் போய் நின்றான் ஆகாஷ்.
ஒரு பெண், பயப்படும் வரை தான் ஆணின் பிரம்ம பிராயத்தனங்கள் அனைத்தும் வேலை செய்யும். அதுவே அவள் எதிர்த்து துணிந்து நின்றுவிட்டாளென்றால், அந்த ஆணால் எதுவுமே செய்ய முடியாது.
அவன் அவள் அந்தரங்கங்களைப் பொது வெளியில் பகிர்வதால், அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனும் போது, அதைப் பகிர்வதால் அவனுக்கு லாபம் இல்லையே. அவள் பயப்படும் வரை, அவளை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்ள நினைத்தவன், இப்போது பேச வார்த்தைகளற்று அமைதியாய் நின்றான்.
அதிலும் அவள் சொன்ன அந்த வார்த்தை ‘உன்னைப் பெத்தவ கிட்டே என்ன இருக்கோ, அது தான் என் கிட்டேயும் இருக்கு’ என்ற வார்த்தைகள், சில நொடி செயலிழக்க வைத்திருந்தது.
“என்னடி! புள்ளப் பூச்சிக்கு கொடுக்கு முளைச்சிருச்சா? நீ என்னதான் தைரியமாய் காட்டிக்கிட்டாலும், நான் அதை ஷேர் பண்ணத்தான் செய்வேன். தைரியமா பேசற மாதிரி நடிச்சால் நான் உன்னை விட்டுடுவேனா?”
“நான் நடிக்கிறேனா? இந்த தைரியம் என் அண்ணன் கொடுத்தது. முதலில் உன் கிட்டே அந்த வீடியோ இருக்கான்னு பாரு. மத்ததெல்லாம் அப்பறம் பேசுவோம்!” என சாதாரணமாய் சொல்லிவிட்டு நகர முற்பட,
“சம்யூ! என்ன செய்யறே? அவன் பேச்சைக் கேட்டுத்தான் நீ இதெல்லாம் செய்யறியா? அவன் உன்னைப் படுகுழியில் தள்ளப் போறான். ரெண்டு பேரும் சேர்ந்து, என் கனவை மண்ணோட மண்ணாக்கிட்டீங்க! என்ன இருந்தாலும் உன் அண்ணன் பண்ணினது தப்புத்தான். நிஷாவோடு தான் அவனுக்கு பதிவுத் திருமணம் நடந்திருக்கு. நானே அவனைப் போலீஸீல் பிடிச்சுக் கொடுக்கிறேன் பாரு!”
“நீங்க நிஜமாவே என் அப்பாவா? உங்களோட அரசியல் லாபத்திற்காக எங்க வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்குறீங்க? உங்களுக்குப் பிள்ளைகளை விடப் பணம் தானே பெருசு. நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஆதுவுக்கும் நிஷாவுக்கும் கல்யாணம் நடந்ததுன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? நிஜமாவே கல்யாணம் ஆதுவுக்கும் வாஹினிக்கும் தான் நடந்தது. சாட்சி கையெழுத்துப் போட்டது தான் நிஷா.!” இம்மி பிசகாமல், சாதாசிவத்தின் உச்சந்தலையில் இடியை இறக்கினாள் சம்யுக்தா.
அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி பசை போட்டதைப் போல் ஒட்டிக் கொண்டது.
இத்தனையும் வாசலில் நின்று கைக்கட்டி பார்த்துக் கொண்டிருந்த ஆதன், மனைவியை அங்கேயே நிறுத்திவிட்டு தன் தந்தையை நோக்கி வந்தான்.
“நீங்க எத்தனை சாணக்கியத்தனம் வேணும்னாலும் பண்ணலாம். ஆனால், என்னை உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது. என்ன நினைச்சீங்க, நீங்க சம்யூவை ஆயுதமாய் வச்சு மிரட்டினதும், நான் இவளைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சீங்களா? என் வாழ்க்கைக்குள்ளே யார் வரணும், யார் வரவே கூடாதுன்னூ தீர்மானிக்கிறது நானா மட்டும் தான் இருப்பேன்.”
“ஆது! நீ பண்ணினது பெரிய தப்பு! பெத்த அப்பனுக்காக இதைக் கூடச் செய்யலைன்னா நீயெல்லாம் என்ன மகன்.?” மீண்டும் அவனைக் குத்துவதற்காகவே பேசினார் சதாசிவம்.
காயத்ரியோ, நடப்பவை எதுவுமே புரியாது, விழித்துக் கொண்டு நின்றிருந்தார்.
“அப்படியா மினிஸ்டர் சார், நான் மகனா உங்களுக்கு எதுவுமே செய்யலை! நீங்க அப்பனா எனக்கு என்ன செஞ்சு கிழிச்சுருக்கீங்க? என் நிறுவன டெலிவரி ஆளோட பையில் போதை மருந்துகளை வச்சதைத் தவிர..!” ஒற்றைப் புருவம் தூக்கி நக்கலாய் அவன் வினவிய தோரணையில் வாயடைத்துப் போனார் சதாசிவம்.
“நான் நினைச்சிருந்தால், உங்க முகத்திரையைக் கிழிச்சு நீங்க இப்படித்தான்னு அன்னைக்கே காட்டியிருக்க முடியும். கூடவே இந்த ஆகாஷையும் வச்சுக்கிட்டு நீங்க செய்யற வேலையெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கறீங்களா? எல்லா விவரமும் தெரிஞ்சுகிட்டுத்தான் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன். பதிவுத் திருமணம் தான் பண்ணுவேன்னு நான் உறுதியாய் சொன்னப்போவே நீங்க கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும் மிஸ்டர். சதாசிவம்!” சொன்னவனிடம் ராஜ தோரணை.
என்னை என்ன செய்துவிட முடியுமென்ற திமிர். நிமிர்வு. ஆதனிடமிருந்த நிமிர்வில் சதாசிவத்தின் அடிமனம் ஓர் நொடி ஆட்டம் கண்டுதான் போனது.
“ஆது! நீ செய்யறது எதுவுமே சரியில்லை. தெருவில் திரியற இவளை மாதிரி ஆளுக்கெல்லாம் நம்ம குடும்பத்தோட மருமகளாகிற தகுதி இருக்குன்னு நீ நினைக்கிறியா? ஊர் பேர் தெரியாத எவ கழுத்திலேயோ தாலி கட்டியிருக்கிறே? சட்ட அமைச்சர் சதாசிவத்தின் மருமகள் இவளா?” மகனின் மனம் கலைக்க முயற்சி செய்தார் சதாசிவம்.
“வார்த்தைகளைப் பார்த்துப் பேசுங்க அமைச்சரே..! அவள் என் மனைவி. என் மனைவியைக் குறை சொல்ற தகுதி கட்டின மனைவிக்கு துரோகம் பண்ணின உங்களுக்கு இல்லை. இன்னொரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்கோங்க, நீங்க நினைக்கற மாதிரி பணம் மட்டுமே தகுதி இல்லை. இந்த ஆகாஷை வச்சு சம்யூவை மிரட்டினால் நான் பயந்துடுவேன்னு நீங்க தப்பு கணக்குப் போட்டுட்டீங்க! நான் உங்களுக்குப் பிறந்தவன் தானே, நீங்க எதை எதற்காக, எப்படி செய்வீங்கன்னு எனக்குத் தெரியாது.?”
“ஆது..!”
“சும்மா கத்தாதீங்க! அவமானமா இருக்கா? தி க்ரேட் பிஸ்னஸ் மேன் பரமேஷ்வர் முன்னால் அசிங்கமாயிடுச்சுல்ல அமைச்சரே! இது சும்மா சின்ன ட்ரெய்லர் மட்டும் தான். இன்னும் நீங்க பார்க்க வேண்டியது நிறைய இருக்கே! எனக்கு வலிக்க வலிக்க செஞ்சதையெல்லாம் நான் திருப்பி கொடுக்க வேணாம்.? கொடுப்பேன், நான் பட்ட அவமானத்தையெல்லாம் வலிக்க வலிக்க உங்களுக்கு திருப்பிக் கொடுப்பேன். எல்லாத்துக்கும் இப்போவே தயாராகிக்கோங்க!”
“ஆது! நான் உன் அப்பா டா! எதுக்கு இதையெல்லாம் செய்யறே? உனக்கு என்னதான் வேணும்?” எரிச்சலும் கோபமும் போட்டிபோட அறை அதிரக் கத்தினார் சதாசிவம்.
“நான் என்ன கேட்டாலும் தந்துடுவீங்களா? என் அம்மா வேணும்? உயிர் வலிக்க வலிக்க என் கிட்டே இருந்து நீங்க பறிச்ச தாய்ப்பாசம் வேணும். என் அம்மா மடி வேணும்! உங்களால் தர முடியுமா? முடியும்ன்னா சொல்லுங்க இப்போவே எல்லாத்தையும் விட்டுடுறேன். கொடுக்க முடியுமா உங்களால்.?” தாயின் நினைவில் குரல் தடுமாறி உடைந்தாலும் கூட, சதாசிவத்தின் மீதான கோபம் கொஞ்சமும் குறைவதாய் இல்லை.
இந்தக் கலியுகத்தில் பாவங்களும் துரோகங்களும் எப்படி மலையளவையும் தாண்டி, வானை நோக்கி வளர்ந்துக் கொண்டே செல்கிறதோ, அதே போல் தந்தையின் மீதான கோபம் அவன் மனதில் வளர்ந்துக் கொண்டே இருந்தது.
“உங்களை நம்பி, இனி நான் சம்யூவை விடப் போறது இல்லை. சம்யூ இனி எங்கக் கூடத்தான் இருக்கப் போகிறாள்.” எனத் தந்தையிடம் சொல்லிவிட்டு சம்யூவையும், வாஹினியையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான் ஆதன் ரித்விக்.
இத்தனை நேரமாய் நடப்பதையெல்லாம் கண்களில் பிரம்மிப்போடு பார்த்துக் கொண்டிருந்த ஷியாமிற்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான்..
‘இவன் பிரம்மன்! தன் தலையெழுத்தை தானே மாற்றியெழுதும் வல்லமை படைத்த பிரம்மன். நொடிப்பொழுதில் சூழ்நிலையைத் தலைகீழாய் மாற்றிக் கொண்டானே! இவன் சாமான்யன் இல்லை. தனக்கு எதிரான சூழலையும் தனக்கு ஆதரவாய் மாற்றி சாதிக்கத் தெரிந்த அசகாய சூரன்!’ என்பது தான் ஷியாமின் மனதில் தோன்றியது.
ஆனால், இப்போது, தோழியின் திருமணத்திற்காக மகிழ்வதா? அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள்? அவளின் எதிர்வினை என்னவாவாக இருக்கப் போகிறது? எனப் பயப்படுவதா? என்பது தான் அவனுக்குப் புரியவில்லை.
வாஹினியின் மனம் அவனுக்குத் தெரியும், அவளை அறிந்தது முதல், அவள் தனிமையைத் தவிர வேறெதையும் விரும்பியதில்லை. அப்படி தனிமையைத் தவம் போல் பாவித்து வந்தவள், இந்தத் திடீர் திருமணத்தை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள்? என்பதை நினைத்து அவன் மனம் கவலையைப் பூசியது.
*****
சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து, வெளியே வந்ததும், தான் வாகனத்தை நோக்கி நடந்த ஆதனை தேக்கி நிறுத்தியது வாஹினியின் குரல்.
“நீ என்ன பண்ணி வச்சிருக்கே ஆதன்?” அவளின் வெறுமையான கழுத்தை மங்கல நாண் அலங்கரித்திருக்க, கண்களில் அனல் தெறித்தது அவளுக்கு.
“வாஹினி! வீட்டுக்குப் போய் எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்.! அமைதியாய் இரு.!”
தோழியைக் கட்டுப்படுத்த முயன்றான் ஷியாம்.
அவனுக்குத்தான் அவளைப் பற்றி தெளிவாய் தெரியுமே, என்னதான் அவள் இத்தனை நேரம் அமைதியாய் நின்றாலும், இங்கு நடந்தவை அனைத்தையும் அவள் செவிகள் தெளிவாய் உள் வாங்கியிருக்கும் என்பது ஷியாமிற்கு தெரியும்.
அவளின் அமைதின் புயல் வீசப் போவதின் அறிகுறி என்பதைத் தெரிந்ததாலேயே அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
“நீ, அமைதியாய் இருடா! இத்தனை நேரமும் அமைதியாய் தானே இருந்தே! இப்போவும் அதே போல் இரு!” கோபம் பொங்கச் சொன்னவள் ஆதனை நோக்கித் திரும்பினாள்.
“நீ என்ன பண்ணி வச்சிருக்கே? உன் சொந்தப் பிரச்சனையில் நான் எங்கே நடுவில் வந்தேன்.? என் கழுத்தில் தாலி கட்டறதுக்குத்தான் என்னை மட்டும் இன்வைட் செஞ்சியா?” அடக்கப்பட்டக் கோபத்தில் அவள் நுனி நாசி சிவந்தது.
அவளின் கோபச் சிவப்பைக் கண்களில் ரசனையுடன் பார்த்தவன்,
“சிமி! எதுவா இருந்தாலும் பொறுமையாய் பேசிக்கலாம். கொஞ்ச நேரம் அமைதியாய் இரு! வா, முதலில் நம்ம வீட்டுக்குப் போகலாம்..!” பொறுமையாய் நிதானமாய் அவன் சொல்ல இவளுக்குள் எரிச்சல் கொளுந்துவிட்டெரிந்தது.
“இங்கே பாரு ஆதன்! நீயும் எனக்கு வேணாம், உன்னுடனான வாழ்க்கையும் எனக்கு வேணாம். எனக்கு இப்போ தெரிய வேண்டியதெல்லாம் எதுக்காக நீ இப்படி பண்ணினே?” நேராய் அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள் வாஹினி. அவளின் விழிகளில் துளி தடுமாற்றமோ, பயமோ இல்லை. அவளிடம் கோபம் மட்டுமே இருந்தது.
“எதுக்காக இப்படி பண்ணினேன்னா நமக்காகத்தான்.! இதற்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது.!”
“நமக்காகவா? நான் உன் கிட்டே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டேனா? உன் சுயநலத்திற்காக, நீ ஜெய்க்கணும்ங்கிறதுக்காக, என் விருப்பமில்லாமல், என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணியிருக்கிறே? இது சட்டப்படி குற்றம். நீ இப்படி பண்ணினதுக்கான காரணம் எனக்குத் தெரிஞ்சாகணும் ஆதன்!” அவள் குரலில் உறுதி தெரிந்தது.
“காரணம் காரணம்ன்னு கேட்டால் என்ன சொல்ல, ஐ ஜஸ்ட் நீட் யூ! அவ்வளவு தான் சிமி!” குரலுயத்திக் கொஞ்சம் கோபம் தெறிக்கச் சொல்லிவிட்டான்.
“பட், ஐ டோன்ட் நீட் யூ ஆதன். நீ எனக்குத் தேவையில்லை. நீ என்ன நினைச்சே, இவள் கழுத்தில் தாலியைக் கட்டிட்டா இவளால் எதுவுமே பண்ண முடியாதுன்னு நினைச்சியா? என்னை எதுவும் கட்டுப்படுத்தாது ஆதன். இந்த பத்துப் பைசா மஞ்சள் கயிறு கட்டுப் படுத்திடுமா?” எனச் சொன்னவள் யாரும் எதிர்பாரா வண்ணம், கழுத்திலிருந்த தாலியைக் கழற்றியவள், அவன் கரத்தினில் வைத்திருந்தாள்.
தன்னோடு அவளை இணைத்துக்கொள்ள, உயிரோடு உயிராகப் பிணைத்துக்கொள்ள, தனக்கானவள் என முடிவு செய்து தன்னருகிலேயே வைத்துக்கொள்ள எண்ணி, அவன் கட்டிய தாலி, மீண்டும் அவன் கரத்தினில். அவன் காதலாய் கட்டியதை அவள் விலங்கு பூட்டியதாய் அர்த்தம் பண்ணிக் கொண்டாள்.
தனக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவள் கழுத்தில் தாலி கட்டியவன், அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறதா? எனக் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
அவன் மனம் அறியாது தன் மன எண்ணங்களை மட்டுமே முன் நிறுத்தி, அவன் கட்டிய தாலி அவளைப் பொருத்தவரையில் பொன் விலங்காகத்தானே தெரியும். என்ன செய்ய இந்தச் சமூகம் ஆணை அப்படித்தானே வளர்த்து விட்டிருக்கிறது.
தனக்குப் பிடித்தவளை அவள் விருப்பமில்லாமல் அடைவதைத் தானே ஹீரோயிஸமாக காலம் காலமாகக் காட்டப்படுகிறது.
சரியான வழிகாட்டல் இல்லாது தாயன்பு இல்லாது வளர்ந்தவனுக்கு பெண்ணின் நுண்ணுணர்வுகள் புரிவது சாத்தியம் இல்லை தானே?
“வாஹினி! தெரிஞ்சு தான் பண்ணுறியா? கடவுள் அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை, வேணாம்ன்னு உதறிடாதே ப்ளீஸ்..!” ஷியாமின் கெஞ்சல் கூட, அவளிடம் எடுபடவே இல்லை.
“அவன் பேசினதைப் பார்த்துட்டு தானே இருந்தே ஷியாம். ஜஸ்ட் நீட் யூ சொல்றான். நான் என்ன உயிரில்லாத பொம்மையா? அவன் தாலி கட்டினதும் அவன் கூடப் போய்டணுமா? மாட்டேன்! நான் அவனோட போக மாட்டேன்.” எனச் சொல்லிவிட்டு, அவள் முன்னால் நடக்க, கைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் ஆதன்.
“அவ்வளவு ஈஸியாய் என்னை விட்டுப் போக விடமாட்டேன் கேண்டி! சட்டப்படி நீயும் நானும் தான் கணவன் மனைவி. இதை யாராலும் மாற்ற முடியது. மாற்றவும் விட மாட்டேன். தாலியைக் கழற்றி கையில் கொடுத்துட்டால் மட்டும் நீ என் மனைவி இல்லைன்னு ஆகிடாது. தாலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த சிம்மவாஹினி ஆதனின் மனைவி. முடிஞ்சால் அதை மாற்ற முயற்சி பண்ணு!” என்றவன் பொது இடமென்றும் பாராது அவள் கன்னத்தில் இதழொற்றியவன், இத்தனை நேரமாய் பிடித்திருந்த அவள் கரத்தினை விடுவித்தான்.
மீசை அழுந்தப் பதிய அவனிட்ட முத்தம் அவளுக்குள் என்னென்னவோ செய்தது. அதை அலட்சியம் செய்துவிட்டு, அவனை எரிச்சலோடு பார்த்தவள்,
“பொது இடத்தில் எப்படி நடந்துக்கணும்ன்னு கூடத் தெரியலை. நீயெல்லாம் பெரிய பிஸ்னஸ் மேனாய் இருந்து எதுக்கு.? இன்னொரு முறை என் அனுமதி இல்லாமல் உன் சுண்டு விரல் என் மேலே பட்டுச்சு.. உன்னைக் கொன்னுடுவேன்.!”
விரல் நீட்டி மிரட்டியவள் கன்னத்தை கரத்தினால் அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
“இந்த இடம் வேணும்ன்னா பொது இடமாய் இருக்கலாம்! ஆனால், நான் முத்தம் கொடுத்த இடம் எனக்கு மட்டுமே சொந்தமானது..!”
குழைந்திருந்த அவன் குரலில் அவன் மீதான உரிமை உணர்வு அப்பட்டமாய் தெரிந்தது. அவன் சொன்ன தோரணையிலும், அவன் பார்த்த பார்வையிலும், நொடி நேரம் அவள் பேச்சு தடைப்பட்டு நின்றது. அவளின் திணறலை ரசித்தவன்,
“நீ என் மனைவிங்கிற நிம்மதியே எனக்கு போதும் சிமி! சொர்க்கமே என் கைக்குள் வந்த மாதிரி இருக்கு.!” அவன் ஏதோ சொல்ல வர, கை நீட்டி அவனைத் தடுத்தவள்,
“சும்மா, இந்த சினிமா டைலாக் பேசறே வேலையெல்லாம் என்கிட்டே வேணாம்! எனக்கு இந்தக் கல்யாணமும் வேணாம்.! நீயும் வேணாம்.! நான் நானாக இருக்கிறது மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்கு. முதலில் என் வாழ்க்கையிலிருந்து உன்னைத் தூக்கிப் போடறதுக்கான வேலையைத் தான் பார்க்கப் போறேன்.” எனச் சொன்னவள் கோபத்தோடே ஷியாமையும் இழுத்துக் கொண்டே நகர,
“ஆல் தி பெஸ்ட் சிமி!” எனப் புன்னகையோடு சொன்னவனின் பார்வை அவள் முதுகை ஊடுவி இதயத்தைத் துளைக்க முயன்றது.
‘ஐ நீட் யூ பேட்லி சிமி! நீ எனக்கு வேணும்!’ அவன் மனம் மௌனமாக அரற்றியது.
ஆம்! அவள் அவனுக்குத் தேவை தான், உணவு, உடை உறைவிடமாக அல்ல..! அவள் அவனுக்குத் தேவைப்படுவது மூச்சுக்காற்றாய், சுவாசமாய்..! உணவே, நீரோ, உடையோ இல்லாமல் உயிர் வாழ முடியுமே, நொடிப் பொழுது கூட, சுவாசம் இல்லாமல் உயிர் வாழ முடியாது அல்லவா? அவள் அவனுக்கு உயிர்மூச்சாய் தேவைப்படுகிறாள்.
அவளைத் தவிர, இன்னொருவரை அவனால் இந்த உறவுக்குள் மனைவியாய் பிணைத்திருந்தால், நிச்சயம் உயிரற்ற உடலாகத்தான் கிடந்திருப்பான். ஆனால், இத்தனை ஆழமான அவன் காதலை அவள் புரிந்துக் கொள்ளாதது தான் விதியின் சதியோ..?
கையில் அவள் கழற்றித் தந்துவிட்டுப் போன ஈரம் காயாத மஞ்சள் கயிறு அவனைப் பார்த்துச் சிரித்தது. தன் உள்ளங்கைக்குள் பத்திரமாய் பொதிந்துக் கொண்டவனின் மனம் மனையாளின் நினைவில் மதி மயங்கித்தான் போனது.
“என்னை விட்டுத் தள்ளி உன்னால் போக முடியாது சிமி! போகவும் விட மாட்டேன்.! நீ வருவே சிமி! வர வைக்கிறேன்..!” வழக்கம் போலவே அவன் இதழ்களில் புன்னகை.. அந்தப் புன்னகையின் அர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது.
“இதயத் துடிப்பு நின்ற பின்னும்..
சில நொடிகள் உயிர் இருக்குமாம்..!
அந்த சில நொடிகளும் கூட..
என் மனம் உன்னைத் தானடி நினைத்திருக்கும்..!
உள்ளம் கொள்ளா காதலுடன்..!”
இசைக்கும்..✨
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வாவ் ஆதன்
அவன் நினைச்சதை முடிச்சுக்கிட்டான். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤