Loading

இதயம்-12

அன்றைய நாளின் சூர்யோதயத்தை ஆதனின் மனம் துளியும் ரசிக்கவில்லை. சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனை நொடிப்பொழுதில் மறைக்கும் மேகம் போலத்தான், நிஷாவும் அவளுடனான திருமணமும்.

மேகம் விலகியதுமே ஆதவன் பிரகாசிப்பது போல், நிஷா எனும் கார்மேகம் விலகி ஆதன் பிரகாசிப்பானா தெரியவில்லை. மேகமாக இருந்தால் விலகிவிடும், ஒருவேளை சூரியனையே மறைத்துவிடும் மாமலையாய் இருந்தால்..?

ஆதனின் கண்கள் கதிரவனின் மீதிருந்தாலும், மனதிற்குள் என்னென்னவோ எண்ணங்கள்.

‘இதெல்லாம் சரிவருமா? சம்யூவிற்காக என்றாலும் நிஷாவுடன் வாழ்நாள் முழுதுமே வாழப்போவது நான் தானே? இப்படியொரு திருமாணத்தினால் வாழ்நாள் முழுதும் சூழ்நிலைக் கைதியாகி நிற்க வேண்டி வந்தால்..? வாழ்வே நரகமாகி விடுமே..!’ சிந்தனைகள் சிறகை விரித்து எங்கெங்கோ பறந்தது. உள்ளுக்குள் ஏதோ எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டே இருந்தது.

வாழ்க்கை முழுதும் தனிமையிலேயே கழித்தவனுக்கு, நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூடக் கொடுப்பினை இல்லை.

என்னதான் வசதி இருந்து பணம் இருந்து என்ன செய்ய? ஆம்! எல்லாவற்றிற்கும் ஓர் கொடுப்பினை வேண்டுமே! தாய் அன்பை விவரம் தெரியும் முன்னே இழந்தவனுக்கு, தாரமாய் வருபவளும் தாயாய் மாற கொடுப்பினை இல்லையே? எல்லாம் விதியோ இல்லை காலம் செய்த சதியோ தெரியவில்லை.

ஆனால் நிஷாவுடனான திருமண வாழ்க்கை அவனுக்கு விஷப்பரிட்சை தான்.
தலையெழுத்தை மாற்றும் திறமை யாருக்கும் இல்லையே! எது நடக்குமோ அது நடந்தே தீரும். ஆதனின் திருமணமும் நடந்தே தீரும். அவன் ஒன்றும் பிரம்மன் இல்லையே தன் தலையெழுத்தை தானே மாற்றி எழுதிக் கொள்ள..

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், ஆனால் அவன் வாழ்விலோ அரை நிமிட நிகழ்வாகச் சுருங்கிவிடப் போகிறது என்பது தான் நிஜம். அந்த அரை நிமிடமும் கூட, முள்மேல் கண்மூடிப் படுத்திருப்பது போலத்தான்.

முள்படுக்கையை மலர் படுக்கையாய் கற்பனை பண்ணிக் கொண்டாலும் கூட, அது ஏற்படுத்தும் காயங்கள், அது முள்படுக்கை தான் என்பதை நினைவு படுத்திவிடும்.. ஆதனின் வாழ்விலும் அது தான் நிகழப் போகிறது. விரும்பியே வலிகளை ஏற்றுக் கொள்ளப் போகிறான்.

ஏமாற்றம் அவனுக்கொன்றும் புதிதில்லையே..! தாய்க்கு பின் தாயின் இடத்திற்கு வந்த காயத்ரியிடம் அன்பை எதிர்பார்த்து ஏமாந்து தானே போனான். அந்தச் சிறு பிராயத்திலே வலிக்க வலிக்க தன்னை வலிமையாக்கிக் கொண்டவன் ஆதன். இனி வரும் வலிகளும் காயங்களும், அவனை இன்னும் இன்னும் வலிமையாக்குமே ஒழிய துளியும் அவனை மாற்றாது. மாற்ற விடவும் மாட்டான் ஆதன் ரித்விக்.

‘ஏமாற்றம் எனக்கொன்றும் புதிதல்ல..
ஏமாறும் விதம் தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது..
சிலநேரம் அன்பால்..
சிலநேரம் நம்பிக்கையால்..!’ என ஆதனின் மனம் தன்னால் யோசித்தது.

தந்தை மீதிருந்த நம்பிக்கையால் ஏமாந்து போனான். இப்போதோ தங்கை மீதான பாசத்தால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

சூரியனின் சுடர்விடும் ஒளி அவன் கருமணியில் பிரதிபலித்து, கண்களே நெருப்பைப் போல் தகித்துக் கொண்டிருந்த நேரம், எதிரே கையைப் பிசைந்தபடி நின்றிருந்த பிரபுவிடம் பார்வையைத் திருப்பினான் ஆதன்.

“என்ன பிரபு, மினிஸ்டர் பத்து முறைக்கும் மேல் கால் பண்ணிட்டாரா?” இன்ஸ்டன்ட் புன்னகை இதழ்களில் மலர்ந்தது.

“சார்! எல்லாரும் உங்களுக்காக ரெஜிஸ்டர் ஆஃபிஸில் காத்துட்டு இருக்காங்க.. நீங்க..!” தயக்கமாய் இடைநிறுத்தி கேள்வி தாங்கிய விழிகளோடு ஏறிட்டான் பிரபு.

“காரியம் ஆகணும்னா காலமெல்லாம் கூட காத்திருப்பார் சதாசிவம். கொஞ்ச நேரம் காத்திருந்தால் தப்பில்லை.!” அதே இன்ஸ்டன்ட் புன்னகை மீண்டும்.

“பத்து நிமிஷத்தில் வந்துடுவோம்ன்னு தகவல் சொல்லிடு!”

சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டான். முடிவெடுப்பதற்கு யோசிக்கலாம். முடிவெடுத்த பின் யோசிப்பது நேர விரயம். எனவே எடுத்த முடிவை செயலாற்றத் துணிந்து இதழில் உதித்த புன்னகையுடனே கிளம்பத் துவங்கினான் ஆதன் ரித்விக்.

மிகப் பொறுமையாய் வெகு நிதானமாய் கிளம்பி, அடுத்த அரைமணி நேரத்தில் கீழே இறங்கி வந்தான். சன்னக் கரையிட்ட சந்தண நிற பட்டு வேட்டி, அவன் திண்ணிய உடலை இறுக்கிப் பிடித்தாற் போல் அரைக்கை சட்டை, நெற்றியில் துலங்கிய சந்தணம், முன்நெற்றி உரசி மோட்சம் பெறத் துடிக்கும் சிகை என கொள்ளை அழகாய் இருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாய் அவன் முகத்திலிருந்த புன்னகையும் அவனின் இயல்பான கம்பீரமும் இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது.

இந்த நிலையிலும், தனக்கு துளியும் பிடிக்காத, விருப்பமில்லாத திருமணத்திலும் கூட, அவன் முகத்தில் சற்றும் குறையாத தீட்சண்யமும் தீர்க்கமும் எதிரில் நின்றிருந்த பிரபுவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஆனாலும் தனக்குப் பிடிக்காததைக் கூட, பிடித்தபடி மாற்றிக் கொள்ளும் வல்லமை ஆதனிடம் இருக்கிறதென்பது பிரபுவிற்கு நன்றாகவே தெரியும்.

தனக்கு துளியும் பிடிக்காத தனிமையை, முதலீடு செய்து தொழிலில் உச்சத்தை எட்டியிருப்பவனுக்கு, நிஷாவை எப்படி சமாளிப்பதென்று தெரியாதா என்ன?
இப்போது, ஆதனின் புன்னகை பிரபுவிடமும் ஒட்டிக் கொண்டது.

கொரோனாவைப் போல புன்னகையும் தொற்று வியாதிதான் இல்லையா? ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இயல்பாகத் தொற்றிக் கொள்கிறதே? ஆனால் வைரஸால் கேடு விளைவது போல், புன்னகையால் கேடு விளைவதில்லை. புன்னகை மனதிற்கு புத்துணர்வையும் நேர்மறை எண்ணங்களையும் தருகிறதே..! அதே புன்னகை எனும் ஆயுதத்தால் போர்க்களைத்தையும் வென்றுவிடும் வல்லமை ஆதனுக்கு உண்டு.

“நான் அழகா இருக்கேனா பிரபு?” ஒற்றைப் புருவம் உயர்த்தி ஆதன் வினவிய அழகில், பிரபுவின் தலை தன்னால் ஆடியது.

மென் புன்னகை ஒன்றை இதழ்களில் தவழவிட்டபடியே, தன் தாயின் நிழற்படத்தின் முன்னால் நின்றான்.

இன்னுமும் இளமையாய் இருக்கும் தாயின் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டான். எப்படி மனதில் தேங்கியிருக்கும் நினைவுகளுக்கு வயதாவதில்லையோ அதே போல் நிழற்படங்களில் இருக்கும் உருவங்களுக்கும் வயதாவதில்லை. சிறுவயதில் பார்த்த தாயின் முகத்தை மட்டுமே மனதில் பதிய வைத்து, நிழற்படமாய் பார்த்து வளர்ந்தவனுக்கு, தன் தாய் தற்போது உயிரோடு இருந்தால், எப்படி இருக்கும் என்ற கற்பனை கண்களுக்குள் ஓடியது.

‘முன்நெற்றி கேசம் நரைத்திருக்குமா? முகத்தில் சுருக்கங்கள் இருக்குமா? சிறு வயதைப் போலவே, இப்போதும் தாயின் மீது மஞ்சள் வாசம் வீசுமா? என் தாயின் குரல் எப்படியிருக்கும்? மாற்றம் கண்டிருக்குமா? இல்லை அவர் தன்னைத் தூங்க வைக்க பாடிய தாலாட்டுப் பாடல் போல் இப்போதும் இளமையாய் இருந்திருக்குமா?’ ஏகப்பட்டக் கேள்விகள் அவன் ஆழ்மனதிற்குள்.

ஆகாயம் தொடுமளவிற்கு வளர்ந்த ஆண் பிள்ளையாய் இருந்தாலும் கூட, இன்றும் தாய் மடி தேடும் சின்னஞ்சிறு பாலகனாய் அவன் மனம் தாயன்பிற்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், தன் ஆள்மன எண்ணங்ளை ஒட்டுமொத்தமாய் உள்ளுக்குள் பதுக்கிவிட்டு, புன்னைகையோடு தன் தாயிடம் மனதிற்குள் பேசியவன், அதே புன்னகையுடனே வீட்டிலிருந்துக் கிளாம்பியிருந்தான், அனைத்தையும் சமாளிக்கத் துணிந்தவனாய்..!

*******

“ஏன் ஷியாம், நிஜமாவே அந்த ஆதனுக்கு கல்யாணம் தானே?” அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள் வாஹினி.

“ரொம்ப முக்கியம்! இந்தக் கேள்வியை வித விதமாய் மாற்றி மாற்றி நூறு தடவை கேட்டுட்டே, ஆதனுக்குத் தான் கல்யாணம். பேசாமல் நெத்தியில் போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கவா?”

“ஹி.! ஹி..! வேணாம்டா, பார்க்க கண்ணராவியா இருப்பே!”

“இப்போ நீ வாயை மூடிட்டு கிளம்பறியா இல்லையா?”

“இல்லைடா! இவ்வளவு பெரிய ஆளு, தமிழ்நாட்டோட யங் ஆன்டர்பர்னர் (Entrepreneur) அவரோட கல்யாணம் ரிஜிஸ்டர் ஆஃபிஸிலா? நம்பவே முடியலையே?பேசாமல் நீ மட்டும் போய்ட்டு வர்ரியா? என்னை எதுக்கு இன்வைட் பண்ணினான்னு எனக்கு இன்னுமும் புரியலை டா!”

“இங்கே பாரு வாஹினி! நம்மை மதிச்சு இன்வைட் பண்ணியிருக்கிறார். அதனால் நாம போய்த்தான் ஆகணும். தேவையில்லாமல் எதையும் யோசிக்காதே! எனக்குத் தெரிஞ்சு, அந்தப் பட்டிக்காட்டான் இந்த மிட்டாய் கடையை, கடைசியா ஒருமுறை சைட் அடிச்சுக்கலாம்ன்னு இன்வைட் பண்ணியிருக்கலாம்.!”

“அப்படிங்கிறே? அதுக்குத்தான் இன்வைட் பண்ணியிருப்பானோ? இருந்தாலும் இருக்கும். சரி, நீ வெய்ட் பண்ணு ஷியாம், நான் கிளம்பி வர்ரேன்.” அறைக்குள் நுழைந்துக் கொண்டவளின் மனதிற்குள் ஆதனுக்கும், நிஷாவிற்கும் நடக்கப் போகும் திருமணத்தை குறித்த மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

மெஹந்தி பச்சை வண்ணத்தில் சன்னக் கரையிட்ட, காதி லினன் புடவைக்கு தோதாய், கையில்லாத பிளௌஸ் அணிந்து தயாராகி கீழே இறங்கி வந்தாள் வாஹினி.

நீண்ட கூந்தல் பூரான் சடையில் அடங்கியிருக்க, இடப்புற தோளில் வழிந்த கூந்தலுக்கு மல்லிகை மலர் சரம் இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது. காதுகளில் ஒற்றைக் கல் தோடு, வலது மணிக்கட்டில் கைக்கடிகாரம் அவ்வளவு தான். பெரிதாய் சிரத்தை எடுத்து அலங்காரம் செய்யாவிட்டாலும் கூட, ரொம்பவே அழகாய் இருந்தாள் வாஹினி. சிம்ப்பிள் அன் எலிகன்ட் எனச் சொல்வார்களே அப்படிப்பட்ட அழகுடன் ஜொலித்தாள்.

“கிளம்பலாமா வாஹினி?”

“கிளம்பலாம்! கிளம்பலாம்! நான் அழகா இருக்கேனா ஷியாம்?”

“நாம கல்யாணத்தை வேடிக்கை தானே பார்க்கப் போறோம்! அழகா இருந்தாலும், இல்லைன்னாலும் ஒண்ணு தான்.!”

“நீதானே சொன்னே, அவன் என்னை சைட் அடிக்கத்தான் கூப்பிடறான்னு.. கடைசியா சைட் அடிச்சுட்டுப் போகட்டும். அதுக்குத்தான் கேட்கிறேன் நான் அழகா இருக்கேனா? இல்லையா?”

“அழகா தான் இருக்கே!”

“நான் அழகா இருக்கேன்னு உனக்கு பொறாமை டா! வா, கிளம்புவோம். ஆமா, கல்யாண சாப்பாடு உண்டா ஷியாம்? ஆதன் என்ன சொன்னான்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ முதலில் அமைதியாய் வா! அங்கே வந்து அவரை, அவன் இவன்னு சொல்லாதே! கொஞ்சம் மரியாதையா பேசு. புரிஞ்சதா?”

“புரியுது! ஆனால், அவன் ப்ரெண்ட்லியா தானே நம்மைக் கூப்பிட்டுருக்கான். ஃப்ரெண்ட்டை அவன் இவன்னு கூப்பிடுறது ஒண்ணும் தப்பில்லை. அவன் எதுவும் நினைக்க மாட்டான். நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே!”

“இங்கே பாரு வாஹினி! அவர் ரொம்ப பெரிய ஆள், கூடவே ரெண்டு சைட் ஃபேமிலியும் இருப்பாங்க! நீ அங்கே வந்து எதையும் பேசி வைக்காதே! நீ அவருக்கு கல்யாணம் ஆகப் போறதில் ஓவர் எக்ஸைட்மெண்டா இருக்கே! ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாய் இரு.!”

“தெரியலை டா! எனக்கு என்னவோ ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவனுக்கு கல்யாணம் ஆகிறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!” இனம்புரியா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது அவள் மனது.

“சரி, வா கிளம்பலாம்..!” என அழைத்துப் போனான் ஷியாம்.

*****

“ஏன்டா, நிஜமாவே ரெஜிஸ்டர் ஆஃபீஸில் தான் கல்யாணமா?” மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் வாஹினி.

“ஆமா! பேசாமல் ஆதன் கிட்டேயே நேராய் போய் கேட்டுடுவோம்! ஏன் ரிஜிஸ்டர் ஆஃபீஸில் வைக்கிறீங்கன்னு.. எங்கே கல்யாணம் வச்சால் உனக்கென்ன? போறோம் அட்டண் பண்ணுறோம் வரப் போறோம், அவ்வளவு தானே?!” எரிச்சல் மேலிட்டது ஷியாமின் குரலில்.

“இல்லை ஷியாம், பெரிய பிஸ்னஸ் மேனோட கல்யாணம், எப்படி நடக்குது? எவ்வளவு செலவு பண்ணுறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமே.!”

“இப்போதைக்கு உன் ஆர்வத்தையெல்லாம் உள்ளுக்குள்ளே பூட்டி வை. கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்.!” எனச் சொன்னவன், அந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் முன் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாயிலை நோக்கிப் போனான்.

“மேடம்! இன்விடேஷன் இருந்தால் மட்டும் தான் உள்ளே விடச் சொல்லியிருக்காங்க! இன்விடேஷன் காட்டிட்டு உள்ளே போங்க!” காக்கி உடையில் நின்றிருந்த அந்தக் காவலர் சொல்ல, தன் கைப்பையிலிருந்து அழைப்பிதழை எடுத்து அவரிடம் காட்டிவிட்டு ஷியாமுடன் உள்ளே சென்றாள் வாஹினி.

வழக்கம் போன்ற பரபரப்பு ஏதும் இல்லாமல், அந்த சார் பதிவாளர் அலுவலகம் முழுதுமே அசாத்தியமான நிசப்தத்தைச் சுமந்து நின்றது.

“ஏய்! என்னடா ஒருத்தரையும் காணோம்! நாம மட்டும் தான் வந்திருக்கோமா? என்னடா நடக்குது இங்கே?”

“இனிமே தான் ஒவ்வொருத்தரா வருவாங்க வாஹினி. நாம சீக்கிரம் வந்துட்டோம்ன்னு நினைக்கிறேன். மினிஸ்டர் பையன் கல்யாணம்ங்கிறதால், எவ்வளவு டைட் செக்யூரிட்டி பார்த்தியா?”

“ஏன் ஷியாம், ஒருவேளை இது ரகசிய கல்யாணமா இருக்குமோ? அதனால் தான் யாரையும் இன்வைட் பண்ணலையா?”

“எனக்கென்ன தெரியும் வாஹினி, நான் ஒண்ணும் ஆதனோட அஸிஸ்டண்ட் இல்லை!”

“ம்ப்ச்! உன்னைப் போய் கேட்டேன் பாரு! உள்ளே வா, ஆதன் கிட்டேயே கேட்டுக்கலாம்!” வேக நடையுடன் உள்ளே நுழைந்தாள் வாஹினி.

அந்த அலுவலக அறையின் உள்ளே நுழைந்த வாஹினியைப் பார்த்த மாத்திரத்தில் ஆதனின் முகத்தில் பளிச் புன்னகை.
மனதிற்குள் மயிலிறகின் வருடல், கண்களில் மின்னல் எல்லாம் நொடிக்கும் குறைவான நேரத்தில் வந்து போனது.

‘பக்கத்தில் கட்டிக்கப் போற பொண்ணு இருக்கா, அவளை விட்டுட்டு என்னை ஏன் இவன் இப்படி பார்க்கிறான். பட்டிக்காட்டான்!’ மனதிற்குள் அவனை வசைபாடியபடியே நின்றவளை, சம்யுக்தா சிறு சிநேகப் புன்னகையுடன் அழைத்துப் போனாள்.

இருவரின் குடும்பத்தினரைத் தவிர, அங்கு அந்நிய நபர்கள் யாருமே கண்களுக்குப் புலப்படவே இல்லை, வாஹினியையும் ஷியாமையும் தவிர..
“ஏன் யாரையுமே காணோம்? நிஜமாவே கல்யாணம் தானா?” வாஹினி சம்யூவிடம் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரம்,

நிஷாவின் சகோதரன் ஆகாஷின் பார்வை வாஹினியின் மீது விழுந்தது. வாஹினிக்கும் கூட, அவன் யாரென்று அடையாளம் தெரிந்தது. அன்று வாஹினியைத் துரத்தியவர்களில் இவனும் ஒருவன்தான் என்பது அவளுக்குப் புரியவும், அலட்சியப் பார்வையை அவனை நோக்கி வீசிவிட்டு, சம்யூவிடம் திரும்பினாள்.

“ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் வந்துட்டே இருக்காங்க!” சிரிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்துக் கொண்டாள்.

“உங்க அண்ணணுக்கு கொஞ்சமும் தராதரம் தெரியாது, நாம என்ன நிலமையில் இருக்கோம், யாரை இன்வைட் பண்ணணும், யாரை பண்ணக் கூடாதுங்கிற அடிப்படைக் கூட அவனுக்குத் தெரியலை. இந்தக் கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு அமைதியாய் இருக்கேன்.” சம்யூவின் காதுக்குள் எரிச்சலுடன் புலம்பினார் சதாசிவம்.

அதே நேரம், தங்க நிற புடவையில் தகதகத்துக் கொண்டிருந்த நிஷாவை விட்டுவிட்டு, வாஹினியிடமே ஆதனின் பார்வை நிலைக் கொண்டிருப்பது, நிஷாவின் பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

“என்ன உங்கப் பையன் என் பொண்ணை விட்டுட்டு எவளையோ பார்த்துட்டு நிக்கிறான்.? வசதியான பையன் அப்படி இப்படி இருக்கிறது சகஜம் தான். அதுக்காக கல்யாணம் பண்ணிக்கப் போற இந்த நேரத்திலேயுமா? இது கொஞ்சமும் சரியில்லை சதாசிவம்.”

நிஷாவின் தந்தை பரமேஷ்வரின் குரல் வாஹினியின் செவிகளுக்குள் அட்சரம் பிசகாமல் விழுந்தது.

‘தான் இங்கே நிற்பதால் தான் இத்தனையும் நிகழ்கிறது. இங்கே வந்திருக்கவே கூடாதோ? என்னால் ஆதனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடக் கூடாது.’ என தனக்குள் யோசித்தவள்,

“ஷியாம்! நாம கிளம்பலாம்! இங்கே சூழ்நிலை சரியில்லைன்னு தோணுது!” என ஷியாமையும் அழைத்துக் கொண்டு கிளம்ப முயன்றவளை, ஆதனின் குரல் தடுத்து நிறுத்தியது.

“கேண்டி!”

“கல்யாணம் நல்லபடியா முடியட்டும் ஆதன். நான் இன்னொரு நாள் வர்ரேன். ஹேப்பி மேரீட் லைஃப்!” எனச் சொல்லிவிட்டு அவள் நகர, நிஷா அருகிலிருப்பதையும் பொருட்படுத்தாது, வாஹினியின் கரம் பற்றியிருந்தான் ஆதன்.

“நான் உன்னையும் ஷியாமையும் வரச் சொன்னது எனக்காக சாட்சிக் கையெழுத்துப் போடத்தான். எனக்காக இதைக் கூட செய்ய மாட்டியா?” என அவன் கேட்டதும், அவன் குரலிலிருந்த ஏதோ ஒன்று, இவளைச் சம்மதமாய் தலையாட்ட வைத்தது. அவள் சம்மதம் சொன்னதும், உணர்வில்லா புன்னகையுடன் நிஷாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டான் ஆதன். இதழில் எப்போதும் போல் புன்னகை. ஆனால் புன்னகையில் துளி ஜீவனில்லை.

சற்று முன் அவன் அவள் கரத்தை தீண்டிய நொடி, அவளோடு ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழத்தான் செய்தது. ஆனால், அது நடக்கப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியுமே..!

இத்தனையும் இந்த நொடியே உதறிவிட்டு, அவள் கரம் கோர்த்து சென்றுவிடலாம் தான். ஆனால், சம்யூவையும் அவன் பார்க்க வேண்டுமே..! தன் தங்கையின் வாழ்க்கை தன் வாழ்க்கையை விட அதி முக்கியமல்லவா?

ஒருதலையாய் விரும்பினாலும் கூட, காதலியின் சாட்சிக் கையெழுத்துடன், கல்யாணம் பண்ணிக் கொள்ளும் நிலை எந்தக் காதலனுக்கும் வந்துவிடக் கூடாது. ஆனால், அந்த சூழ்நிலையை விரும்பியே உருவாக்கிக் கொண்டான் ஆதன் ரித்விக்.

அவன் இன்னொருத்திக்குச் சொந்தமாகப் போகும் கடைசி நொடி வரையிலும் கூட, அவளின் ஞாபகங்கள் அவனுக்கு வேண்டும். பின்னொரு நாளில் அவன் திருமணத்தை நினைத்தாலே வாஹினியும் நினைவிற்கு வருவாள் தானே? ஆயுள் முழுமைக்கும் அவளின் ஞாபகங்கள் அவனுக்குத் துணையாக வேண்டும்.

என்னதான் உயிருக்குள் ஊசியால் குத்துவதைப் போல் வலித்தாலும் கூட, வலியை அனுபவிக்க அவன் தயாராகவே இருந்தான். காதலில் வலிகளும் சுகமானது தானே?

“நிலா இல்லாத வானத்தை நட்சத்திரங்கள் அழகாக்குவது போல..
அவளில்லா வாழ்க்கையை அழகாக்கப் போவது.
அவளின் ஞாபகங்கள் மட்டுமே..!”

அடுத்த சில நிமிடங்களில், எல்லாம் தயாராகிவிட,

“சார் இங்கே கையெழுத்துப் போடுங்க!” என்றக் குரல் கேட்டதும், தன் மனதில் மௌன ராகமாய் இத்தனை நாட்களும் இசைத்துக் கொண்டிருந்தக் காதலை ஒட்டுமொத்தமாய் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, தன் கையெழுத்தை அந்த பதிவேட்டில் பதித்தான் ஆதன் ரித்விக்.

அடுத்த சில நிமிடங்களில், நிஷாவும் கையொப்பமிட, விரல் நுனியளவிற்குக் கூட, விருப்பமில்லாமல் நடந்து முடிந்திருந்தது ஆதனின் திருமணம். திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப் படுகிறதென்று யார் சொன்னது? இங்கே பல திருமணங்கள் சூழ்நிலையால் மட்டுமே நிச்சயிக்கப் படுகின்றன..

“சூழ்நிலை மாறும் போது..
காட்சிகள் மட்டுமல்ல..
வாழ்க்கையும் கூட..
மாறித்தான் போகிறது..”

இசைக்கும்…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ஆதன் தேவையா உனக்கு.

    1. Author

      கலை மா Wait for the twist. இன்னைக்கு எபியில் புரியும். நன்றி! நன்றி கலை மா ❤

  2. Kadaisi varai marriage nadakkadhu, ninnudumnnu ninaichen..nijamavey marriage mudinjuduchu.. heartbreaking moment.😔

    1. Author

      முழு காட்சியும் இன்னும் முடியலை டியர். என்னை நம்பி படிங்க. ஆதனும் சிமியும் தான் Pair. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤