
‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என்ற நிலையில் அலைபேசியைப் பார்த்தபடி இருந்தான் இளா! சற்று முன் தான் ஜனனியிடம் பேசியிருந்தான்.
இளாவின் டைரி என்றால் அது ஜனனி தான். நாளுக்கு நாள் நடக்கும் நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்து கொள்வதோடு… மனம் விட்டுப் பேச, சிரிக்க, அழ, கெஞ்ச, கொஞ்ச என அத்தனை உணர்வுகளையும் கொட்டும் இடமாக ஜனனி இருக்கிறாள்.
தாய், தந்தை இருந்தவரை ஒற்றை மகனாய் அன்பிற்கும் பாசத்திற்கும் பஞ்சமில்லாமல் ராஜாவாக வளர்ந்தவன், அவர்கள் விட்டுச் சென்ற நொடியில் எல்லாம் இழந்து ‘அனாதை’ என்ற பெயருக்குச் சொந்தக்காரனானான்.
ஏற்றுமதி செய்யப்பட்டது போல இவனை துபாய்க்கு அனுப்பி வைத்துவிட்டார் இவனது தாய் மாமன். அவனால் வீட்டில் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காகவும், அவனே அவனைப் பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணத்திலும், தன் நண்பர்கள் மூலம் துபாயில் சமைக்க ஆள் தேவை என்ற செய்தி வர… அவனது சொத்துக்களை விற்றே அவனை அனுப்பி வைத்துவிட்டார். அவ்வளவு தான் ‘தாய் மாமன்’ என்ற உறவும் முடிந்தது.
மூன்று வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தவன், வேலையில் காட்டிய ஈடுபாட்டால் ஒப்பந்தத்தை நீட்டிக்கச் சொன்னான். ஐந்து வருடங்கள் கடந்த நிலையில், மீண்டும் மூன்று வருடங்கள் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கே இருந்தவனுக்குத்தான் ஜனனியின் நட்பு கிடைத்தது.
அவள் மீது காதல் மலர, இந்தியா செல்லும் ஆவலில் ஒப்பந்தத்தை முடிக்கச் சொல்லி வெங்கட்ராமனிடம் கேட்டுக் கொண்டான். யாருமற்ற நிலையில் அவன் நாடு திரும்ப நினைக்கவே இல்லை. அங்கே காலத்தைக் கழிக்க முடிவு செய்திருந்தவனின் முடிவை ரத்து செய்த கடவுள், தன் திட்டங்களை அங்கே அரங்கேற்றினார்.
முதல் முறையாக ‘டி’ என்ற விளிப்போடு உரிமையாக அவளிடம், “நீ எனக்கு என்ன உறவுடி அன்னம்மா?” எனக் கேட்டு அவளைத் தடுமாற வைத்திருந்தான். பதில் சொல்லாமல் முதலில் திணறியவள், கண்களை மூடித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பதில் சொன்னாள்.
“ஏன்? சாருக்கு ஒவ்வொரு முறையும் போன் பேசும்போது ஞாபகப்படுத்தணுமா? நான் யாருன்னு? உங்களுக்கு என்ன உறவுன்னு? ம்…” என அவளது கோபமும் உரிமையான பேச்சும் மனதிற்குப் பூஞ்சாரலாக இருந்தது.
ஜனனி, உரிமையாகக் கோபித்துக் கொள்ளும் மனைவியாகத் தெரிந்தாள் அவனுக்கு! ஆனால் ஜனனியோ அவனை இன்று வரை ஒரு நல்ல நண்பனாகத் தான் பார்க்கிறாள். மனைவியிடம் சண்டை பிடித்து, பின் கெஞ்சல் கொஞ்சல் என அவன் கற்பனையை நீட்டிக்கொண்டு பறக்க, அவனைப் பொத்தென விழ வைத்தன அவளது பதில்கள்.
“நீ இந்தியா வந்ததும் உன்னை ஆரத்தி எடுத்து வரவேற்க உறவும் சொந்தமுமா இருக்கணும்னு அவசியம் இல்லை. தோழியா உன்னை நான் வரவேற்பேன். நான் என்ன உறவுன்னு கேட்டேல்ல? அந்த மர மண்டையில நல்லா ஏத்திக்கோ… உறவுகள் சொந்த பந்தங்களை விட கடைசி வரைக்கும் கூட வர்றது நட்பு தான். உன் தோழியா, உன் பொண்ணுக்கு அத்தை முறையா நான் உனக்கு எல்லாம் செய்வேன்!” என்க, அவன் முகம் போன போக்கைப் பார்க்கணுமே!
‘போதும்டி போதும்! என் பொண்ணுக்கு அம்மாவா இருந்து எல்லாம் செய்வேன் என்று சொல்வாளா பார்த்தால், அத்தையாம் அத்தை! முதல்ல உறவு முறையை இவளுக்குச் சொல்லிக் கொடுக்கணும் போல’ என உள்ளுக்குள் கடிந்து கொண்டாலும் வெளியே சிரித்தபடி பேசினான்.
“நீயும் விபுவும் வேற வேற இல்ல… ரெண்டு பேரும் எனக்கு ஒண்ணுதான்” என அவள் சொல்ல, இவனுக்குள் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ‘போடி இவளே! அவன் பிரண்டு, நான் புருஷன்டி… ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?’ எனத் தலையில் அடித்துக் கொண்டவனுக்கு, தன் மேல் படிந்த பார்வையை மாற்ற இன்னும் பயிற்சி வேண்டியதாகத் தான் இருந்தது.
“அண்ணே சிக்ஸ் பேஷு! ரசத்துல ஏன் முருங்கைக்காயைப் போட்டு விட்டிருக்க? டிஃபரெண்ட்டா சமைக்கச் சொன்னேன் தான், அதுக்காக ரசத்துல முருங்கைக்காயைப் போடுவியா நீ? இதுல மிளகாய்த்தூள் வேற… யோவ் என்ன எழவுயா இது?” என ருசித்துப் பார்த்து முகத்தைச் சுளித்தபடி கேட்டான் கந்தன்.
“யோவ் கந்தா! அது சாம்பார்யா! வர வர உன் கேலிக்கு அளவே இல்லாம போச்சு போ!” எனச் சிரித்தபடி மோரைக் கலக்கிக் கொண்டிருந்தார் ஆறுமுகம்.
“ஏதே… சாம்பாரா! யோவ்! சாம்பாரா ரசமானு தெரியல, என்னத்தையா பண்ணி வச்சிருக்க? மஞ்சத் தண்ணி கூட நல்லா இருக்கும் போல! இதுல நான் கேலி பண்றேனா? இப்படிச் சமைச்சு என் கெரியரே காலி பண்ணிடுவண்ணே நீ! உன் சமையலைச் சாப்பிட்டு கல்யாணத்துக்கு வந்தவனுங்க எல்லாரும் கக்கூஸ்ல தான் குடியிருப்பானுங்க. வேற கைக்குப் போக இருந்த வரதராஜர் மாமா பேத்தியோட கல்யாண ஆர்டரைப் பறிச்சு வாங்கிட்டு வந்திருக்கேன். இப்படி வித்தியாசமே தெரியாமச் சமைச்சு வச்சா, மொத்தமா என் கேட்டரிங்கிற்கு முழுக்குப் போட வேண்டியது தான்! உன் கையில தான் இருக்கு அடுத்த வர ஆர்டரும் என் வாழ்க்கையும்… சொதப்பிடாதே சிக்ஸ் பேஷு!”
“என்னை நம்பு கந்தா! நான் பார்த்துக்கிறேன்” என்றார் ஆறுமுகம், அல்வாவைக் கிண்டியபடி. இவர்கள் சமைத்துக் கொண்டிருப்பது நகரத்தின் வளர்ந்து வரும் தொழிலதிபர் மகளின் காதணி விழாவுக்கு!
வரதராஜரிடம் பேசி வாங்கியது போலத் தான் இந்த ஆர்டரையும் பேசிப் பேசியே வாங்கிவிட்டான் கந்தரூபன். ‘கந்தன் கேட்டரிங் சர்வீஸின்’ சொந்தக்காரன்.
வீட்டிற்கு மூத்தவன். தாய் மஞ்சுளா, தந்தை வீரமணி, தங்கை கயல். நால்வர் நிறைந்த அவர்களது குடும்பம் இப்போது இருவராகக் குறைந்து போயிருந்தது. கந்தனின் தந்தை வீரமணி ஆரம்பித்த கேட்டரிங் சர்வீஸைத் தான் இப்போது கந்தரூபன் நடத்திக் கொண்டிருக்கிறான். கேட்டரிங் கோர்ஸ் முடித்தவன், தந்தையின் தொழிலைத் தைரியமாக எடுத்து நடத்துகிறான். மேற்கொண்டு கந்து வட்டித் தொழிலையும் பார்க்கிறான்.
பெயர் பெற்ற கேட்டரிங் சர்வீஸ் வீரமணி இறந்த பின், அதன் பொறுப்பைக் கந்தன் எடுத்த நாளிலிருந்து தன் புகழை இழந்து கொண்டிருக்கிறது. தந்தைக்காகத் தொழிலைப் பார்த்துக் கொண்டாலும் அதிலும் அவனுக்குச் சலிப்பு தான். கந்து வட்டித் தொழிலே லாபம் தருவதால், இந்தக் கேட்டரிங்கை யாருக்காவது குத்தகைக்கு (Lease) விட்டு வாடகை வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் தான் இருந்தான்.
ஆனால் மஞ்சுளாவோ, கணவனின் உயிராக இருக்கும் கேட்டரிங்கை யாருக்கும் தரக்கூடாது என்றும், அவன்தான் பார்க்க வேண்டும் என்றும் அன்புக்கட்டளை போட… வேறு வழியின்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறான் கந்தரூபன். பாசம், அன்பு நிறைந்தவன் தான் என்றாலும், சில வில்லத்தனங்களும் அவனிடம் உண்டு! அவன் முழு நல்லவனும் இல்லை, முழு கெட்டவனும் இல்லை; ஒரு கலவை. மனம் என்ன சொல்கிறதோ அதைத் தான் செய்வான். மனம் இளகி நிற்கும்போது உதவி செய்வான், முரண்டு பிடிக்கும்போது பறித்துக் கொள்வான். நிமிடத்திற்கு மாறும் மனது அவனுக்கு.
தந்தை இறப்பிற்குப் பின் பொறுப்பானவனாக மாறியவன், தந்தைக்கு நிகராக நின்று தங்கை கயலைத் தன் தாய் மாமன் மகனுக்கே கல்யாணம் முடித்து வைத்தான். அவனும் இன்று தாய் மாமனாகிவிட்டான். அவனது அன்னை மஞ்சுளா இவனது திருமணத்தை எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வரன்கள் அமையாமல் தட்டிக்கொண்டே போகிறது.
காதணி விழாவில் ஒரு பக்கம் சைவமும் இன்னொரு பக்கம் அசைவமும் பரிமாறப்பட்டது.
விழாவிற்கு வந்த மக்கள் அதிகம் சென்றது அசைவ உணவை நோக்கித்தான். அசைவ உணவு நன்றாக இருந்தது. ஆனால் சைவத்தில் சொதப்பி வைத்திருந்தார்கள். சாதம் மட்டும்தான் சரியாக இருந்தது. அப்பளம் கூடச் சரியாகப் பொரியவில்லை. உப்பு கூடுதலான கூட்டு, வேகாத காய்கறிகள் எனப் படு சொதப்பல்.
கந்தரூபனின் போதாத காலம், அங்கே வரதராஜரும் அவரது வருங்காலச் சம்பந்தியும் வந்திருந்தனர். அசைவத்தில் அமர விருப்பம் இல்லாதவர்கள் சைவத்தில் அமர்ந்து பெரும் தவறு செய்துவிட்டனர். வாயில் வைத்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அசைவ சாப்பாடு கூட நல்லா இருக்கு, ஆனா இந்தச் சைவ சாப்பாடு நல்லாவே இல்லப்பா” எனப் பக்கத்தில் கைகழுவச் சென்ற நபர் பேசிச் செல்ல, வரதராஜர் தன் வருங்காலச் சம்பந்தியைப் பார்த்தார். அவரோ வாயிலிருந்த உணவை விழுங்க முடியாமல் திணறினார்.
சொந்தம் என்று வாய்ப்புக் கொடுத்தவரை வாயடைக்க வைத்துவிட்டான் கந்தன்.
கந்தன் அங்கே இல்லாததுதான் இந்தச் சொதப்பலுக்குக் காரணம். மூத்தவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கந்து வட்டி விஷயமாக வெளியே சென்றுவிட்டான். இல்லையென்றால் அவனது கைமணம் சாப்பாட்டை ருசிக்க வைக்கும்.
வரதராஜர், சுப்ரமணியைப் பார்க்க, அவரும் தலையை அசைத்துவிட்டு இலையை மூடி எழுந்துவிட்டார். வரதராஜர் அரமனதுடன் தான் கந்தரூபனிடம் பேத்தியின் திருமண ஆர்டரைத் தந்திருந்தார். இப்போது அந்த அரமனதும் மாயமாகிப் போனது. அந்தச் சமையலை ருசித்த பின், ஜென்மத்திற்கும் அவனிடம் ஆர்டர் தரக்கூடாது என்று முடிவு செய்தனர்.
ஆர்டர் மீண்டும் கை மாறியது. வரதராஜர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆர்டரை ஜனனிக்கே கொடுக்க முடிவு செய்து சுப்ரமணியிடம் பகிர, அவர் மகிழ்ந்தார்.
அதே நேரம் சாப்பாடு சொதப்பியதால் அந்தத் தொழிலதிபர் கந்தரூபனைத் திட்டித் தீர்த்தான். “யோவ்! ஆர்டர் உனக்குத் தானேயா கொடுத்தேன்? நீ இங்க இல்லாம வேற எந்த வேலையைப் பார்க்கப் போன? என் மானமே போச்சுயா உன் சாப்பாட்டுல! பெரிய பெரிய விஐபி-க்களை வரவச்சு விருந்து கொடுத்து, எனக்கும் ஆள்பலம் இருக்குன்னு காட்டத்தான் இந்த விழாவை நடத்தினேன். நீ நல்லா செய்வேன்னு வாய் கிழியப் பேசினியே… இவ்வளவு செலவு பண்ணினதை விட, நீ சொதப்பி வச்ச சாப்பாட்டைப் பத்திதான் எல்லாரும் பேசிட்டுப் போறானுங்க!”
அவன் திட்டியதில் ரோஷம் வந்த கந்தன், “யோவ்! சைவம் தான்யா சொதப்புச்சு, வந்தவன் அசைவத்தை நல்லாத்தான் சாப்பிட்டுப் போனான். உன் மேல என்ன வன்மமோ… நல்லதைச் சொல்லாம குறையைச் சொல்லிட்டுப் போயிருக்கானுங்க. நீ அழுது அழுது மொத்தப் பணத்தையும் கொடுக்க வேணாம். அசைவத்துக்கு மட்டும் பணத்தைக் கொடு” என முக்கால்வாசிப் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
கோபத்துடன் அலுவலகம் வந்தவன், அங்கே நின்ற ஆறுமுகத்தை முறைத்தான். அப்போது வந்த அலைபேசி அழைப்பு அவனை மேலும் ஆத்திரப்படுத்தியது. “கந்தா! என்னயா சமையலைச் சொதப்பிட்ட? உன்னால அந்த வரதர் என்னை முறைக்கிறார். இப்போ ஆர்டர் கை மாறிப் போச்சு! வரதர் அந்த ஆர்டரை அந்தப் பொண்ணுக்கே கொடுத்துட்டார்” என வருத்தப்பட, அமைதியாகப் போனை வைத்தவன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
ஜனனிக்கு வந்த நல்ல செய்தியை அவள் இளாவிடம் பகிர, அவனுக்கோ அவளை விட அதீத மகிழ்ச்சி. இருவரது உரையாடலும் மகிழ்ச்சியில் நிறைய… அதைப் பார்த்த மித்ராவின் கண்கள் யோசனையில் ஆழ்ந்தன.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
+1
+1

