Loading

03

 

சுபிக்ஷா கண்களில் கண்ணீர் பெருகியோட, அந்த வனத்துறை பாதுகாவலர்களுடன் நடந்து கொண்டிருந்தாள்.

 

“எவ்வளவு தூரம் போனீங்க?” என்று சற்றுக் கடினமாய் அந்த இளைஞன் கேட்க,

 

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

கண்ணீர் திரை மின்னும் விழிகளும், விடைத்துச் சிவக்கும் நாசியும் என்று இருந்தவளைப் பார்த்து தன்னை நிதானித்துக் கொண்டவன், “ரொம்ப தூரம் போயிட்டீங்களா?” என்று கேட்க,

 

“இ..இல்ல சார்.. கொஞ்சம் தூரம் தான் போனோம்” என்றவள், அந்த பள்ளத்தாக்கு வரவும், “சார்.. இங்கதான் உருண்டு விழுந்தா சார்” என்று அழுதபடி கூறினாள்.

 

“விஷ்ணு” என்று அழுதபடி அவள் கத்தி அழைக்க,

 

“காம் டௌன்” என்றவன், அந்த பள்ளத்தாக்கு முடியும் இடத்திற்கு, செல்லும் வேறு ஒரு பாதையை நோக்கி, அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

 

‘ஓ காட்.. இங்க அந்த புதை குழி இல்ல இருக்கும்? அந்த பொண்ணு அதுல விழுந்துருந்தா இந்த நேரத்துக்கு உள்ள போயிருப்பாளே’ என்று மனதோடு நினைத்தபடியே, சற்று விரைந்து நடந்தான்…

 

அவர்கள் எதிர்ப்பார்த்த அந்த புதை குழி வந்திட, பரபரப்பாய் தன் பார்வையை அவ்விளைஞன் சுழல விட்டான்.

 

“விஷ்ணு…” என்று கத்தியபடி சுபி ஓட,

 

அவள் செல்லும் திசைத் திரும்பிப் பார்த்தவனும் அங்கு பதட்டமாய் சென்றான்.

 

அங்கு புதைகுழியின் இன்னொரு ஓரம், உயிரற்ற உடலைப் போல் கிடந்தாள், விஷ்ணுப்ரியா.

 

மற்ற பாதுகாவலர்களும் விரைந்து செல்ல,

 

விஷ்ணுவின் அருகே மண்டியிட்டு அமர்ந்த சுபி, அவளைக் கட்டிக் கொண்டு, ஓவென்று கதறி அழுதாள்.

 

பள்ளத்தாக்கிலிருந்து உருண்டு விழுந்தவளது மேல் சட்டை முற்றுமாய் கிழிந்து போயிருக்க, புதைகுழிக்குள் விழுந்ததன் அடையாளமாய், சேற்று மண் அவள் உடலின் ஆடையாக அப்பிக் கொண்டிருந்தது.

 

தாடைவரை சேற்று மண் அப்பிக் கிடக்க, முகத்தில் ஆங்காங்கே சேறு ஒட்டிக் கிடந்தது. அவளைக் கட்டிக் கொண்டு, “விஷ்ணு… பாருடி.. என்னைப் பாருடி” என்று சுபி கதறி அழ,

 

அந்த இளைஞன் தன் பார்வையைச் சுழற்றினான்.

 

சுற்றி முற்றி அவன் பார்க்கும் நேரம், பேய் காற்று ஒன்று வீசத் துவங்க,

 

“ஹ்ஹா..” என்று வாய் வழியாக மூச்சை நன்கு இழுத்து, இரும்பினாள், விஷ்ணு.

 

அவள் இறந்துவிட்டாளோ? என்ற பதட்டத்தில் இருந்த மற்றவர்களும் கூட, அவளது இருமல் சப்தத்தில் ஆசுவாசம் கொள்ள, அந்த இளைஞனும் தன் பார்வையை அவள் பக்கமாய் திருப்பினான்.

 

அரை மயக்க நிலையில், கண் திறந்தவள் கருவிழிகள் சொருக, அந்நிலையிலும் தன்னிலை உணர்ந்தவளாய், நடுங்கும் உடலை குறுக்கினாள். அவள் விழியோரம் கண்ணீர் கசிய, சேறு மறைக்காத நெற்றி மற்றும் முகப்பகுதியில் ஏற்பட்ட காயங்களில் இரத்தம் கசிந்தது.

 

அவளால் முழுதாய் சுயம் பெறவும் முடியாத நிலை…

 

“ஸ்..சுபி..” என்று அவள் திணற,

 

அவள் உடல் நடுக்கம் கண்டது.

 

சுபிக்ஷா, “விஷ்ணு உனக்கு ஒன்னுமில்லைடாமா.. நாங்க இருக்கோம்..” என்க,

 

அவள் விழியிலிருந்து மடமடவென்று நீர் கொட்டியது.

 

சடுதியில் தனது சட்டையைக் கழற்றிய அவ்விளைஞன், அதனை விஷ்ணுவுக்குப் போட முற்பட, சுபியும் அவனுக்கு உதவி, விஷ்ணுவை போடச் செய்தாள்.

 

அவளைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டவன், “சீக்கிரம் போலாம்..” எனக் கூறி, முன்னேறினான்.

 

என்ன தோன்றியதோ? மீண்டும் அவன் திரும்ப, மரக்கிளை ஒன்று அசைந்து கொடுத்தது, அமானுஷ்ய அசைவாய்…

 

அதனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன், விறுவிறுவென்று நடக்க, காட்டைத் தாண்டி, தங்கள் ஜீப்பை அடைந்தனர். விரைந்து அவர்கள் மருத்துவமனை ஒன்றை அடைய,

 

விஷ்ணு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள்.

 

வெளியே அழுதுகொண்டிருந்த சுபியின் முன் அவ்விளைஞன் வர,

 

கண்ணீரோடு நிமிர்ந்தவள், “என் ஃபிரண்ட்ஸ் உங்க ஸ்டேஷன்லதான் இருக்காங்க சார்.. ப்ளீஸ் அவங்களை இதுல இன்வால்வ் பண்ணாதீங்க” என்றாள்.

 

அவன் அமைதியாய் அவளை நோக்க,

 

“நாங்க நாலு பேரும் சைல்டுவுட் ஃபிரெண்ட்ஸ். ட்ரிப்காகத்தான் வந்தோம். அந்தக் காட்டைப் பற்றித் தெரிஞ்சுக்கும் ஆர்வத்தோடுதான் வந்தோம். திரும்பும் நேரம் யானை ஒன்னு வரவும், அதுகிட்டருந்து தப்பிக்கும்போது விஷ்ணு மட்டும் பள்ளத்தாக்குல விழுந்துட்டா. அ..அந்த நேரம்.. என்னால மத்தவங்களை அம்போனு விட முடியலை. அதான் எல்லாரையும் கூட்டிக்கிட்டு காருக்கு வந்து சேஃபானதும் உங்ககிட்ட வந்தோம். வேற எந்த நோக்கத்தோடவும் நாங்க வரலை” என்று அந்த சூழலிலும் உண்மையையும், தன் மீதானத் தவறையும் தைரியமாக ஒப்புக்கொண்டாள்.

 

ஒரு முழு நிமிடம் அமைதி காத்தவன், “உங்க பெயர் என்ன?” என்று கேட்க,

 

“சுபிக்ஷா” என்று கூறினாள்.

 

“நான் கருப்பசாமி. வனத்துறை பாதுகாவலர். நீங்க சொல்றதுக்காக என்னால அப்படியே விட முடியாது. எனக்கு ப்ராப்பர் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இருக்கு. உங்க நான்கு பேரோட பெயர், மற்றும் பெற்றோர் பற்றிய தகவல் வேணும்” என்று கருப்பசாமி கூற,

 

“சார்.. ப்ளீஸ் சார்.. விஷ்ணுக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். அவரும் ரொம்ப சாது.. விஷயம் தெரிஞ்சா ரொம்ப பயந்து போயிடுவாங்க. அவங்க ரெண்டு பேரு வீட்லயும் இதெல்லாம் தெரிஞ்சா மேல படிக்கவே விடமாட்டாங்க.. கெஞ்சி கேட்குறேன் சார்.. இந்த உதவியை மட்டும் பண்ணுங்க” என்றாள்.

 

“எல்லாத்துக்கும் தைரியமா உங்க ஐடென்டிடியை முன் நிறுத்துறீங்க. உங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” என்று அவன் கேட்க,

 

“எங்க அம்மா அப்பா டிவோர்ஸ்ட் கப்பில். வேற வேற திருமணத்தைப் பார்த்துப் போயிட்டாங்க. நானும் என் அண்ணாவும் மட்டும்தான் எங்களுக்குத் துணையா இருக்கோம்” என்று கூறினாள்.

 

யோசனையோடு அவளைப் பார்த்தவன், எதிர் இருக்கையில் சென்று அமர,

 

வனத்துறை பாதுகாவலர்கள் மூலம் தகவல் பெற்றுக்கொண்டு, பிரம்மா மற்றும் ப்ரீத்தி அவ்விடம் வந்தனர்.

 

அத்தனை நேரம் அழுது கொண்டிருந்த சுபி, தோழிகள் வரவும், தன் திடத்தைக் கடினப்பட்டு மீட்டவளாய், எழுந்து நின்றாள்.

 

“சு.. சுபி.. விஷ்ணு..விஷ்ணுக்கு எப்படி இருக்கு இப்ப?” என்று ப்ரீத்தி திணறலாய் கேட்கவும்,

 

“ஷ்ஷ் ஷ்ஷ் ப்ரீத்தி.. காம் டௌன்..” என்று சுபி கூற,

 

“சுபி.. விஷ்ணுக்கு ஒன்னுமில்ல தானே?” என்று பிரம்மா கேட்டாள்.

 

‘அங்கருந்து உருண்டு விழுந்தா ஒன்னுமாகாம இருக்குமா?’ என்று கத்தத்தான் தோன்றியது கருப்பசாமிக்கு.

 

ஆனால் சுபி அத்தனை நிதானமாய், “விஷ்ணு உயிருக்கு ஒன்னுமில்ல. உருண்டு விழுந்ததில் நிறைய அடிபட்டிருக்கு. டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்காங்க. நம்ம நம்பிக்கையா இருந்தாதான் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும்” என்று கூற,

 

ப்ரீத்தி இன்னும் தான் அழுதாள்.

 

கிட்டத்தட்ட தாய், மகவுகளை சமாதானம் செய்வதைப் போல் இருவரையும் சமாதானம் செய்தவள், மருத்துவர் வெளியே வரவும், “பிரம்மா நீ ப்ரீத்தி கூட இரு. நான் போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்” என்றாள்.

 

“சுபி‌‌.. வீட்டுக்கு எதுமே சொல்லலையே.. அப்பாக்கு தெரிஞ்சா?” என்று பிரம்மா கேட்க,

 

தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள், “அண்ணாவை முதல்ல வர சொல்றேன்” என்றுவிட்டு மருத்துவர் அறை நோக்கிச் செல்ல, கருப்பசாமியும் அவளைத் தொடர்ந்து சென்றான்.

 

மருத்துவரிடம் அனுமதி கோரி அவள் நுழையும் நேரம், தானும் அனுமதியோடு நுழைந்தான்.

 

இருவரையும் அமரும்படி கூறிய மருத்துவர், முதலில் சற்றுக் காட்டமாய், “படிக்குற பிள்ளைகள் தானம்மா நீங்க? பகுத்தறிவோடு நடக்க வேண்டாமா? இப்படித்தான் நடந்துப்பீங்களா? அந்தப் பொண்ணு புதைகுழியில மாட்டியிருந்தா எலும்பு இல்ல, நெகம் கூட மிஞ்சிருக்காது” என்று கூற,

 

‘தங்கள்மீதுதான் தவறு உள்ளது’ என்று புரிந்துகொண்டதால் மௌனமாய் ஏற்றுக் கொண்டு, அமைதி காத்தாள்.

 

அவரும் மூச்சுபிடிக்க ஐந்து நிமிடம் திட்ட, அமைதியாய் தலை கவிழ்ந்து அதைக் கேட்டுக்கொண்ட சுபியை ஒரு பார்வை பார்த்தவன், மருத்துவரிடம், “டாக்டர்.. அவங்க உயிருக்கு ஏதும்??” என்று கேட்டான்.

 

ஒரு பெருமூச்சு விட்டவர், “காட்ஸ் கிரேஸ்தான் கருப்பு.. இதுவரை அந்த காட்டிலிருந்து யாரும் தப்பிச்சதா நாம கேள்விப்பட்டதே இல்லை.. பட் ஷீ பிரேக்ஸ் தட் ரெக்கார்ட்” என்று கூற,

 

சுபி, “இப்ப எப்படி இருக்கா டாக்டர்?” என்று கேட்டாள்.

 

“ரொம்ப உயரமான இடமா இல்லாததால அவங்க எலும்புகள் தப்பிச்சுடுச்சு. ஆனா ரத்தக்கட்டும், நர்வ் ட்விஸ்டும் நிறைய இடத்தில் ஏற்பட்டிருக்கு. காயங்களுக்கு மருந்து போட்டு, அதுக்கான மருத்துவமும் பார்த்திருக்கோம். ஒருநாள் முழுக்க அப்சர்வேஷன்ல வச்சுட்டுத்தான் அடுத்தது அவங்க கண்டிஷன்ஸ பொறுத்து மெடிகேஷன்ஸ் முடிவு செய்து அனுப்ப முடியும்” என்று மருத்துவர் கூற,

 

கண்ணில் பொத்தென்று நீர் குதித்து ஓட, “தேங்க்யூ டாக்டர்” என்றாள்.

 

“இனியாவது படிக்குற பிள்ளைகள் போல பிஹேவ் பண்ணுங்க” என்று உஷ்ணமாய் சப்தம் போட்டவர், “கருப்பு.. நீ இரு” என்று கூற,

 

சுபி மட்டும் எழுந்து சென்றாள்.

 

“அந்த காட்டுல என்னதான் நடக்குதோ தெரியல.. ஆனா இந்த பொண்ணு அங்கருந்து உயிர் தப்பிருக்காங்குறதே பெரிய விஷயம் தான்..” என்றவர், “எந்த கேஸும் ஃபைல் பண்ணாத. நாலுபேருமே சின்ன பொண்ணுங்க. படிக்குற பொண்ணுங்க வேற.. கேஸ் நியூஸ்னு போனா ரொம்ப கஷ்டமா போகும்” என்று கூற,

 

“ம்ம்.. யோசிச்சேன் டாக்டர். நான் பார்க்குறேன்” என்று கூறினான்.

 

“ஓகே மேன்.. டேக் கேர்” என்று அவர் கூற,

 

நன்றி கூறி வெளியே வந்தான்.

 

தன் தோழிகளிடம் நடந்ததை எடுத்துக் கூறியவள், சற்று ஒதுங்கிச் சென்று, தனது அண்ணனுக்கு அழைத்தாள்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், “என்ன கேர்ள்.. நல்லா என்ஜாய் பண்ணியா?” என்று சுபியின் அண்ணன், சுடரொளிவானன் கேட்க,

 

“சுடர்.. கொஞ்சம் பிரச்சினையாயிடுச்சு.. ப்ளீஸ் எடுத்ததும் திட்டாத. தப்பு எங்கமேலதான்” என்றவள், சுருக்கமாய் நடந்தவற்றைக் கூறினாள்.

 

கட்டுக்கடங்காமல் கோபம் கண்ணை முட்ட, “அறிவிருக்கா சுபி உனக்கு? பைத்தியம்.. அப்பாக்குத் தெரிஞ்சா மனுஷன் உடைஞ்சே போயிடுவாரு.. அவசரப்பட்டு எதையும் சொல்லித் தொலைக்காதீங்க யாருக்கும். நான் வரேன்” என்று கூறியபடியே புறப்பட்டிருந்தான், சுடர்.

 

கண்ணை முட்டிக் கொண்டு கண்ணீர் கொப்பளிக்க, அதை அழுத்தமாய் துடைத்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் திரும்பியவள் முன், கரங்களைக் கட்டிக் கொண்டு, அழுத்தமான பார்வையோடு நின்றிருந்தான் கருப்பு.

 

“சார்..” என்று அவள் பேசவரும் முன்,

 

“பெரியவங்க யாரும் வரும்வரை நான் இருக்கேன். வேற எதும் ஃபைல் பண்ணலை. எதுவும் பயப்படாதீங்க” என்று அவன் கூற,

 

நிம்மதி பெருமூச்சோடு கண்ணீர் கொப்பளிக்க,

 

“தேங்க்ஸ் சார்” என்று ஓய்ந்த குரலில் கூறினாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்