Loading

அத்தியாயம் -2

எல்லாவற்றையும் கேட்டு ஆதிரையால் நம்ப முடியவில்லை.இன்றைக்கான நாளே என்னவோ அவளுக்கானதாக  போல் இருந்தது.சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கான நாட்களை கழித்துக் கொள்ள கிடைத்திருக்கிறது.இன்னும் கொஞ்சம் மனதில் ஆர்வமும் ஆனந்தமும் தொற்றிக் கொண்டது.

வேலையை முடித்து கட்டிலில் வந்து சரிந்தவளுக்கு அன்றைய இரவுக்கான வானொலியில் நேரலை நிகழ்ச்சியில்  எப்பவும் கேட்கும் குரலின் இனிமையை கேட்பதற்காக  ஆவலோடு படுத்திருந்தாள்.வாரத்தின் ஐந்து நாட்கள் சில நேரங்களில் இரண்டு நாட்கள் மட்டும் இருக்கும்.அவள் கேட்கும் அந்தக் கணீர் குரலின் சொந்தக்காரனை இதுவரை அவள் பார்த்தது இல்லை.ஆனால் அவனின் குரலை கேட்கப் பிடிக்கும்.

அவன் சென்று வந்த இடங்களைப் பற்றிச் சொல்லி அதோடு ஒரு நிகழ்வையும் பேசும் ஏதோ நேரில் போய் பார்த்த உணர்வு.இடையினில் அந்தக்  காலம் முதல் இப்போதைய பாடலும் என்று எல்லாம் கலந்தே இருக்கும்.முடிக்கும் போது உங்களின் ருத்ரா என்பதோடு நிகழ்ச்சி நிறைவு பெறும்.என்னத் தான் ஆயிரம் நிகழ்ச்சிகள் இன்றைய  இணையங்களில் சுற்றித் திரிந்தாலும் வேலைகள் ஒருபுறம் செய்துக் கொண்டே இந்த வானொலியில் கேட்பது ஆதிரைக்கு பிடித்த ஒன்று.

விடுமுறைக்கு சொல்லி விட்டதால் அவளுக்கு உடையும் சிந்தியாவிற்கு பரிசுப் பொருளும் வாங்க வேண்டும் என்று கடைத் தெருவிற்குச் சென்றாள்.எப்பவும் எடுக்கும் புடவையை எடுக்காமல் இம்முறை கொஞ்சம் மாற்றமாக அழகான நீண்ட மேக்ஸி உடையை நாலைந்து எடுத்துக் கொண்டாள்.வியன்கா அடிக்கடி இந்த உடையை எடுக்குமாறு சொல்லுவாள்.ஆனால் இவளுக்குத் தான் வேண்டாம் என்று விட்டு விடுவாள்.இம்முறை நினைவாக எடுத்து உடுத்தி வியன்காவிடம் காட்ட வேண்டும் என்ற நினைவோடு எடுத்தாள்.

எப்போதும் உடுத்தும் புடவைகளுக்கு சிலநாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாலும் திருமணத்திற்கு அன்று அழகான பட்டுப்புடவையும் இருந்ததை வைத்துக் கொண்டாள்.

சிந்தியாவிற்கு அழகான கம்மல் ஒன்று தங்கத்தில் எடுத்துக் கொண்டாள்.சிந்தியாவிற்கு காதில் தோடு அணிவது என்றால் அவ்வளவு விருப்பம் அதனால் நினைவாக எடுத்துக் கொண்டாள்.

சிந்தியாவிடம் மறுநாள் கைப்பேசியில் பேசினாள் ஆதிரை.

“ஹலோ ஆதி”

“ம்ம்… சொல்லு”

“லீவு கேட்டாச்சா?”

“ம்ம்… ஓகே சொல்லிட்டாங்க”

சிரித்துக் கொண்டே “பரவாயில்லை பதில் ஒழுங்கா சொல்லலையே என்னக் கோபம்?”

“என்னப் பத்தி மட்டும் எல்லாம் கேட்கிறே? உன்னவரை பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேங்கிறே?” சிறுகோபமாகக் கேட்டாள் ஆதிரை.

அப்போதும் சிந்தியாவிடம் இருந்து சிரிப்புத் தான் பதிலாக வந்தது.அந்த பதிலைக் கேட்டவளோ “உன்னோட சிரிப்பே எனக்கு நிறைவான பதிலைத் தருது சிந்தியா உன்னை இப்படி பார்க்கனும் தான் நான் ரொம்ப ஆசைப்பட்டேன் நேரில் வந்து உன்னோட அவரைப் பார்த்துக்கிறேன் அதுக்கு முன்னாடி எங்கே சந்திச்சேனாவது சொல்லு”

“ம்ம்… கண்டிப்பா சொல்றேன்”

“குடும்பத்தோட சுற்றிப் பார்க்க போகலாம்னு கேரளாவில் மூணாறு போய் இருந்தோம் அங்கேத் தான் முதல்ல சந்தித்தோம்” என்றதும்

உடனே ஆதிரை “ஊர் சுற்றிப் பார்க்க போகச் சொன்னா ஆளைப் பிடிச்சு இருக்கே இது சரியில்லை” என்றாள் சிரித்துக் கொண்டே…

“ப்ச் அப்போ ஒரு நார்மலான சந்திப்பு தான் மதன்  தன்னோட தம்பியை தமிழ்நாட்டில் உள்ள காலேஜ்ல சேர்க்கனும்னு சொன்னாங்க அப்போத் தான் அப்பா காலேஜ்ல ப்ரோபோசரா இருக்கிறதுனால நிறைய ஐடியா கொடுக்கவும் அப்பாகிட்ட போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்சு அப்புறம் அப்பா வேலை செய்ற காலேஜ்ல சேர்த்து அப்படியே பழகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து முடிஞ்சிடுச்சு” என்றாள் சிரித்துக் கொண்டே…

ஆதிரை “அண்ணனுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சு ஆனால் தம்பியோட படிப்பு என்னாச்சு?”

சிந்தியா புன்னகையோடு “தம்பி படிப்பு முடிஞ்சு இப்போ மேற்படிப்புக்காக பெங்களூர்ல இருக்காங்க” என்றாள்.

“அப்போச் சரிதான்” என்ற போது சிந்தியா “ஆதிரை ஏற்கனவே நடந்த தப்பு இன்னொரு முறை நடக்கக் கூடாதுன்னு அப்பா ரொம்ப கவனமாகத் தான் இம்முறை யோசிச்சுத் தான் இந்தக் கல்யாணமே நடக்குது ஆதிரை அம்மா முகத்துல இப்போத் தான் சிரிப்பே வருது.என்னோட முதல் வாழ்க்கை நரகமா போனதுனால அப்பாவும் அம்மாவும் ரொம்பவே உடைஞ்சுட்டாங்க உனக்குத் தெரியாதது இல்லை  மதனுக்கும் என்னுடைய முன்னாள் வாழ்க்கையைப் பற்றி தெரியும் அதை முழுக்கத் தெரிந்த பிறகு தான் இந்தக் கல்யாணமே நடக்குது”

ஆதிரை “நான் இந்தக் கேள்வி கேட்கிறேன்னு என்னை எதுவும் நினைக்க மாட்டேல்ல”

“ம்ம்… தெரியும் அவருக்கு இது முதல் திருமணம் தானேன்னு இல்லை அவருக்கும் இது ரெண்டாவது திருமணம் தான்” என்றாள்.

ஆதிரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.சிந்தியா “ஏன் அமைதியாகிட்டே?”

“என்னச் சொல்றதுன்னு தெரியலை சிந்தியா எனக்கு கவலையா இருக்கு” என்றாள் ஆதிரை.

சிந்தியா சிரித்துக் கொண்டே “அவரோட முதல் வாழ்க்கை நல்லா இல்லைன்னு தானே அதை முடிச்சிட்டாங்க திரும்பவும் அதே போல இன்னொரு வாழ்க்கையில் எப்படி நம்ப முடியும்னு? நீ நினைக்காதே ஆதிரை ரெண்டுபக்கமும் ரெண்டு விதமான மனிதர்கள் இருக்கிறாங்க அதனால நமக்கானவங்க யாருன்னு உணர முடியும்” என்றாள்.

ஆதிரையிடம் பதிலில்லை.அவளிடம் நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நம்ப வைப்பது அத்தனை எளிதான விஷயமாக இருக்காது.

சிந்தியா “இந்த காரணங்களுக்காக கல்யாணத்துக்கு வராமல் இருப்பியா?” யோசனையாகக் கேட்டாள்.

“இல்லை இல்லை உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம் சிந்தியா திருமணமே வேண்டாம்னு இருந்த உனக்கு ஒரு நம்பிக்கையோடு சந்தோஷமா கல்யாணம் பண்ணப் போற அதுவே பெரிய விஷயம் அதனால நான் கண்டிப்பா வரேன் எது எப்படியோ நான் நேர்ல வந்து உன்னோடவங்க எப்படின்னு பார்க்கிறேன்” என்றாள்.அதைக் கேட்ட சிந்தியா “சரி பாரு” என்று சொல்லி சிரித்தாள்.

நாட்கள் அழகாய் நகர ஆரம்பித்தது.தினமும் சிந்தியா கைப்பேசியில் அழைத்து நிறைய பேசினாள்.சரியாக அவள் தன் வாழ்க்கையை தொலைத்ததில் இருந்து ஆதிரையிடம் சரியாக பேசாமல் இருந்தவள் இப்போது தான்  எப்போதும் போல் நன்றாக பேசினாள்.

ஆதிரைக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது.கேரளாவிற்கு இப்பொழுது தான் முதன்முதலாக அதுவும் தனியாக செல்வது ஒருவிதமான பதற்றத்தையும் சேர்த்துக் கொடுத்தது.

தன் அம்மாவின் நிறைய ஆலோசனைகளோடு தன் பயணத்தை தொடர்ந்தாள் ஆதிரை.இரயில் பயணமும் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு என்றானது.உடன் பயணித்தவர்கள் வெளியே வேடிக்கை இதற்கிடையில் அலுவலகத்தில் இருந்து வந்த சில கைப்பேசி அழைப்புகளுக்கான பதில்கள் என பயணம் நன்றாகவே சென்றது.

இரயில் பயணத்தில் தனது கடைசி நிறுத்தமான எர்ணாகுளத்தில் வந்து நின்றது.ஆனந்தமும் ஆர்வமுமாய் படியின் வாசலில் வந்து நிற்கவும் அங்கே புன்னகை முகமாக நின்ற முதியவர் ஒருவர் “நீங்க தானே ஆதிரை” என்று தமிழும் மலையாளமும் கலந்துக் கேட்கவும் ஓரளவு புரிந்துக் கொண்டவளாக ஆமாம் என்று தலையசைத்தாள்.

அவரும் அவளை அழைத்துக் கொண்டவர் கையில் இருந்த பெட்டியை வாங்குவதற்கு முற்பட ஆதிரை “வேண்டாம் நானே தூக்கிட்டு வரேன்” என்று மறுத்து விட்டு அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அவரிடம்  “நீங்க சிந்தியாவிற்கு என்ன முறை வேணும்?” என்று கேட்க அவரோ புரியாமல் விழித்தார்.

உடனே ஆதிரை கையில் வைத்திருந்த கூகுளின் உதவியால் அவள் தமிழ் பேசி அதை மலையாளத்தில் மொழி பெயர்ப்பை வைத்து அவரிடம் கேட்கவும் அவரும் சிரித்துக் கொண்டே அதே போல் அவளிடம் திரும்ப “நான் மதனோட மாமா” என்றார்.

இப்படியாக இருவரும் இரயில் நிலையத்தின் வாயிலுக்கு வரவும் அங்கே முன்னால் ஓட்டுநர் புறம்  காரில் அமர்ந்தபடி ஒருவன் அமர்ந்திருக்க அவனுக்கு அருகில் செல்லவும் இவர் பின் பக்கக் கதவை திறக்கவும் அதில் அவரே ஆதிரையின் பெட்டியை தூக்கி வைத்து விட்டு அவர் முன்னால் அமர்ந்திருக்க பின்னால் ஆதிரை அமரச் சொன்னவர் “இங்கிருந்து ஒரு இருபது  நிமிசம் தான் நாம வீட்டுக்கு போகலாம்” என்பதை மலையாளத்தில் சொல்ல அவளோ அதை இணையத்தின் உதவியால் மொழிப் பெயர்த்துக் கொண்டாள்.

இதை எல்லாம் முன்னால் சிரித்தப்படி அமர்ந்தவன் பார்த்துக் கொண்டிருந்தான்.இவளோ அவனைப் பார்த்து மெதுவாக “இப்போ எதுக்கு இந்த இளிப்பு?” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் அப்படிச் சொன்னதும் திரும்பி பார்த்தவன் அந்தப் பெரியவரிடம் மலையாளத்தில் பேச ஆரம்பித்தான்.

 

ஆதிரையின் நிலைமை தான் மோசமாக இருந்தது.எதிரில் இருப்பவர்களின் பேச்சை புரிந்துக் கொள்ள முடியாததால் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு தனக்குப் பிடித்த பாடலை கைப்பேசியில் ஒலிக்க விட்டப்படி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்