Loading

ப்ரியம் 18

 

அப்படி இப்படி என திருமணத்திற்காக குறித்த நாளும் வந்தது.

அதிகாலை வெளிச்சம் இன்னும் முழுவதும் பரவாத நேரம். மலைகள் சூழ்ந்திருந்த அந்தச் சிறிய கிராமத்தின் எல்லையில் அமைந்திருந்தது அவர்களின் குலதெய்வ கோவில்.

பழமையான கல் சுவர்கள், சிவப்பு மஞ்சள் குங்குமம் பூசப்பட்ட கோபுரம், கோவிலில் மெதுவாக புகை விட்டுக் கொண்டிருந்த கற்பூர வாசனை அந்த இடமெல்லாம் ஒரு தெய்வீக அமைதியில் மூழ்கியிருந்தது.

கோவிலின் முன் பெரிய ஆலமரம். அதன் கீழ் ஏற்கனவே உறவினர்கள். அந்த ஊரின் மக்கள் கூட்டமாகக் கூடி பேசிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரத்தின் மெதுவான ராகம் மென்மையாய் ரெடியோ செட்டில் இசைந்துக் கொண்டிருந்தது.

அந்த அதிகாலை காற்றில் பரவி கொண்டிருந்தது.

“மாப்பிள்ளை காரு வந்துடுச்சு!” என்று யாரோ குரல் கொடுத்ததும் அங்கே இருந்தவர்கள் அனைவரின் பார்வையும் கோவில் வாசலை நோக்கித் திரும்பியது.

மெதுவாக வந்து நின்ற காரில் இருந்து முதலில் இறங்கியது திருநீலகண்டன்.

வெள்ளை வேஷ்டி, பட்டுப் சட்டை, நெற்றியில் சந்தனம் அவன் முகத்தில் இருந்த அமைதியான கம்பீரம் அங்கே இருந்த பெரியவர்களை மகிழ்ச்சியோடு தலையசைக்க வைத்தது. அவனுடன் பூரணியும். திருமுருகனும் கீதாவும் வந்தனர்.

திருநீலகண்டன் கோவிலுக்குள் நுழைந்ததும், பூசாரி முன்பே தயார் செய்திருந்த திருமண மேடையை நோக்கி அழைத்துச் சென்றார். அங்கே ஏற்கனவே தீபங்கள் ஏற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், மலர்கள் அனைத்தும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பூரணி அருகில் நின்றபடி, “எல்லாம் நல்லபடியாக நடக்கணும் கடவுளே” என்று மனதார வேண்டிக்கொண்டார்.

திருநீலகண்டன் மட்டும் அமைதியாக அந்த மேடையில் அமர்ந்திருந்தான். அவன் பார்வை ஒருமுறை கோவிலின் மூலவரை தொட்டு மீண்டது.

அதே கோவிலில் எதிரே அமைக்கப்பட்டிருந்த மண மேடையில் மணிகண்டன் அமர்ந்து வஞ்சிக் கொடிக்காக காத்திருந்தான்.

முத்தம்மை, கோகிலா, சந்திரன் என அனைவரும் கோவில் வந்து சேர்ந்திருக்க, வஞ்சக்கொடி, யோகா, தக்ஷா வந்துக்கொண்டிருந்த கார் மட்டும் வந்து சேரவில்லை. நாழிகை கழிய கழிய அனைவரின் முகத்திலும் மெல்ல பதற்றம் பரவ ஆரம்பித்திருக்க, “பிள்ளைகளை இன்னும் காணலையே” என பதற்றமாய் கோவில் வாசலில் நின்றபடி வெளியே தலை நீட்டிப் பார்த்தார் கோகிலா.

“வந்திட்டு இருப்பாவ கோகிலா. நீ பயராத” என்றார் முத்தம்மை.

“மாமா, போன் பண்ணிப் பார்த்தீங்களா?” என்று சந்திரனிடம் கேட்டான் திருநீலகண்டன்.

“கோவில் காட்டுக்குள்ள இருக்குல்ல.. டவர் கிடைக்க மாட்டேன்தே மாப்பிள்ளை” எனச் சொன்னவுடன், மணமேடையிலிருந்து விருட்டென எழுந்த நீலகண்டன். மணியைப் பார்த்தான்.

“திரு நீ எந்திரிக்க கூடாது உட்காருடா” என்றார் பூரணி.

“ஒரு நிமிசம் ம்மா” எனப் பூரணியை பார்த்துச் சொன்னவன், தக்ஷாவின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க யாரும் அழைப்பை ஏற்கவில்லை.

“ஏலே மணி! பொண்ணுகளை தூக்கிட்டானுவடா அந்த ரவுடி பயலுக ராஜேஷாட ஆட்கள்” என கத்தியபடி கோவிலுக்குள் நுழைந்தான் சாரதி. சாரதியின் குரல் கோவிலின் அமைதியை ஒரே நொடியில் கிழித்தது.

அவன் மூச்சு முட்டியபடி உள்ளே பாய்ந்து வந்தான். அந்த ஒரு வார்த்தை கேட்டவுடன் அங்கே இருந்த அனைவரும் சில நொடிகள் உறைந்து நின்றனர்.

“என்னலே சொல்லுத?” என்று சந்திரன் அதிர்ச்சியுடன் கேட்டார். சாரதி மூச்சை சீர்படுத்திக் கொண்டு, “கோவில் வர்ற வழியில தான் வண்டியை வழிமறிச்சு தூக்கிருக்கானுவ. தக்ஷாவையும் வஞ்சியையும் தூக்கிட்டுப் போனது பத்தாதுன்னு கூட வந்த பிள்ளையையும் தூக்கிருக்கானுவ” என்றான்.

திருநீலகண்டனின் முகம் ஒரே நொடியில் மாறியது. அவன் கண்களில் இருந்த அமைதி மறைந்து, அதற்குப் பதிலாக ஒரு கொந்தளிப்பு எழுந்தது.

“அவன் செய்யக் கூடிய ஆளு தான்.” என சொன்ன முத்தம்மை தலையில் கைவைத்து அமர, “என் கொடியை நான் பார்த்து கூப்பிட்டு வர்றேன் பாட்டி” என முத்தம்மைக்கு ஆறுதல் சொன்னான் மணி.

“நான் முன்னாடியே சொன்னேன் நம்ம பசங்களை வச்சி தட்டி வைப்போம்னு கேட்டியாடா? இப்போ என்னாச்சு பாரு. என் தக்ஷூக்கு மட்டும் எதாவது ஆச்சு, அந்த ராஜேஷ் செத்தான்” எனக் கோபமாய் சொன்ன சமயம், இவர்களின் திருமணத்திற்காக மணி, மற்றும் திருவின் நண்பர்கள் வந்திருக்க, அங்கே மூன்று பெண்களையும் மீட்க போர் படை உருவானது.

“டேய் சாரதி! நம்ம பசங்களை எல்லாரையும் சின்ன வேன்ல ஏத்துடா” என்ற திருநீலகண்டனின் கட்டளைக்கு சரியென தலையசைத்தான் சாரதி.

முத்தம்மை மணிகண்டனிடம். “என் பேத்தியை எப்படியாவது கூட்டிட்டு வந்திருயா உனக்கு புன்னியமா போகும்” என பயத்துடன் கேட்டார்.

“நீ பயராம இதில இருங்க பாட்டி. அவளை பத்திரமா கூட்டிட்டு வந்திடுதேன்” என்றவன், கோகிலாவை பார்த்து “பாட்டியை பார்த்துகிடுங்க” எனச் சென்றான்

“அப்பா! யாரையும் இங்கே இருந்து போக விடாதீய குறிச்ச நேரத்தில கல்யாணம் நடக்கும். நடத்திக் காட்டுதேன்” என மணி தந்தையிடம் சொல்லி நகர்ந்தான்.

பட்டு வேட்டிய வரித்துக் கட்டியபடி அந்த சின்ன வேனிற்குள் ஏறினான் திருநீலகண்டன்.

“மாப்பிளை வாடா!!” என அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். “மணி வாடா வாடா!!” என மீண்டும் கூச்சலிட அலப்பறையுடன் வேன் கிளம்பியது.

“என்ன மச்சான்! உங்க இரண்டு பேரோட கல்யாணத்தை ரீயூனியன் ஆக்கலாம்னு பார்த்தால், ஏதோ ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்குற மாதிரி ரன்னிங் சேஸிங்னு ஆக்கிட்டீங்க” என ஒருவன் சொல்ல,

மற்றொருவனோ, “அட ஆமாடா! ஆனால் அவிங்களை சும்மா விடக் கூடாதுடா.. நம்ம வீட்டு பிள்ளைங்க மேல கைய வச்சிருகானுக” என்றான்

அந்த வார்த்தை கேட்டதும் வேனுக்குள் இருந்த அனைவரின் முகத்திலும் கோபம் இன்னும் தீவிரமாய் மின்னியது. “இன்று அவன் கை காலெல்லாம் நசுக்காம விட மாட்டோம்” என்றான் மற்றொருவன்.

திருநீலகண்டன் மட்டும் அமைதியாக இருந்தான். அவன் கண்கள் நேராக முன்னே இருந்தாலும், மனதில் தக்ஷாவின் முகம் மின்னல் கீற்றாய் வெட்டிச் சென்றது. சிரித்த முகம் அவன் நினைவில் மின்னியது.

திருமணப் புடவையை தன் மீது போட்டு காட்டியவள், “உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே திரு” என சிரித்தவளின் முகம் அவன் மனதில் அழுந்த பதிந்திருந்தது. எல்லாம் கைகூடி வரும் நேரம் இப்படி ஆகிவிட்டதே என நினைக்கும் போது அவன் மனம் வலித்தது. காத்திருப்பின் வலியை விட, இந்த வலி அவனுக்கு கொடுமையாக இருந்தது.

அதே நிலையில் தான் மணிகண்டனும் இருந்தான். இந்த உலகிலே அவனுக்கு பிடித்த பெண் என்றால் அது வஞ்சி தான். அவள் சிரித்த முகம், பேசும் விதம், கோபப்படும்போது உதட்டை கடிக்கும் அந்த சின்ன பழக்கம் எல்லாம் அவன் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றி மறைந்தது.

“இந்த புடவை வேண்டாம் மணி விலைக் கூட இருந்த மாதிரில இருக்கு குறைஞ்ச விலை இருக்கான்னு கேட்டு பாக்குறீயளா?” என வெள்ளந்தியாய் பேசிய குரல் அவனருகில் கேட்டது போல் உணர்ந்தான் மணி.

“என் கொடிக்கு ஒன்றும் ஆகக்கூடாது. ஆகவும் விடமாட்டேன்” என்று உள்ளுக்குள் முணுமுணுத்தான்.

அந்த நேரத்தில் வேன் திடீரென ஒரு குறுக்குச் சாலையை நோக்கி திரும்பியது.

“சாரதி! இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?” என்று திருநீலகண்டன் கேட்டான்.

“இதோ வந்தாச்சு திரு! அந்த பழைய அரிசி மில் கிட்ட தான் வச்சிருக்கதா பயலுவ சொன்னானுவ” என்றான் சாரதி.

வேன் வேகமாக அந்த இடத்தை நோக்கி சென்றது. ஒரு பழைய கட்டிடம் தூரத்தில் தெரிந்தது. சுவர்கள் பாதியாக உடைந்திருந்தது. அந்த இடம் முழுக்க வெறிச்சோடியிருந்தது. ஆனால் காவலுக்கு அடியாட்கள் நின்றிருந்தனர்.

சாரதி வேனை மெதுவாக நிறுத்தினான். அங்கே வந்து சேர்ந்தவுடன், திருநீலகண்டன் ராபின் என சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணுக்கு லொகேசனை அனுப்பி வைத்தான்.

மணியோ யாருக்கோ அழைப்பு விடுத்து வந்து சேர்ந்திருக்கும் இடத்தை பற்றியும். பத்திரமாக அழைத்து வரும்படி கட்டளையாய் சொல்லி அழைப்பை துண்டித்தான்.

“திரு! உள்ளே குறைந்தது பத்து பேராவது இருக்கானுங்க போல” என்று மெதுவாக சொன்னான் அவன் நண்பன் ஒருவன். திருநீலகண்டன் எதுவும் பேசவில்லை.

அவன் அந்த கட்டிடத்தை முழுவதுமாக கண்களால் அளந்தான். வாசலில் நின்றிருந்த ஆட்கள். பக்கத்து சுவரை ஒட்டி இருந்த பழைய ஜீப் மில்லின் உள்ளே இருந்து வந்த குரல் சத்தங்கள் அனைத்தையும் ஒரு நொடி அமைதியாக கவனித்தான்.

அதே சமயம், திருமண கோலத்தில் இருந்த தக்ஷாவையும் வஞ்சியின் கரங்களையும் கட்டி வைத்திருக்க, நடுவில் யோகாவையும் கட்டி வைத்திருந்தனர். அவர்கள் முன் ராஜேஷ் கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

“இவிங்க தான் கல்யாண பொண்ணுங்க கடத்திட்டு வந்தீங்க.. என்னைய என்னத்துக்குடா இலவச இணைப்பா தூக்கிட்டு வந்திருக்கீங்க? எங்க அப்பன் ஆத்தாளுக்கு மட்டும் தெரிஞ்சது கொன்னே புடுவாய்ங்கடி” என கத்திக் கொண்டிருந்தாள் யோகா.

“ஏய் யாருலே இந்த பிள்ளைய தூக்கிட்டு வந்தது. கரைஞ்சிட்டே கிடக்கு” என்றான் ராஜேஷ்.

“தக்ஷா உன் கூட்டுக்கார பிள்ளைய சத்தம் காட்டாம இருக்கச் சொல்லு. இந்த ராஜேஷ் குடும்பமே பொல்லாத குடும்பம். கையில கத்திய வேற வச்சிருக்கான். சொல்லு தக்ஷா” என வஞ்சி எச்சரிக்கையாக சொன்னாள்.

“என்னது கூட்டு வைக்க வந்திருக்கேனா? இதோ பாருடி தக்ஷா எல்லாம் உன்னால தான். ஏற்கனவே அந்த ஹிட்லர்கிட்ட கோர்த்துவிட்ட. இப்போ பாரு இந்த சோ கால்ட் வில்லன்கிட்ட மாட்டிவிட்டிருக்க” என புலம்பிய யோகாவை முதுகோடு இடித்த தக்ஷாவோ,

“அவரை ஹிட்லர்ன்னு சொல்லதேன்னு சொல்லி இருக்கேன்ல யோகா” என கோபம் கொண்டாள்.

“ஏன்டி தக்ஷா இம்புட்டு பிரச்சனையில உன் ஆளை நான் ஹிட்லர்ன்னு சொன்னது தான் உனக்கு பெரிய பிரச்சனையா போச்சு”

“ஆமா” என ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள் தக்ஷா.

“ஆள் வந்துட்டா ஆள் ஆளுக்கு மாறிடுறாங்க நம்ம தான் பார்த்து சூதானமா இருந்திருக்கனும்” என வாய்விட்டு புலம்பியவளை நோக்கி கீழே குனிய முடியாமல் குனிந்து யோகாவை முறைத்தான் ராஜேஷ்.

“அதான் குனிய முடியலைல மிஸ்டர் வில்லன். அந்த சேரை இழுத்து போட்டு முதலில் உட்காருங்க அப்பறம் முறைக்கலாம்” என நக்கல் தொனிக்க யோகா சொல்ல, தக்ஷா பட்டென சிரித்துவிட்டாள். அவனோ யோகாவை பார்த்தது பற்களை நறநறவென கடித்தான்.

“நான் சிரித்தகாமல் தானேடி பேசிகிட்டு இருக்கேன். சிரிச்சு கோர்த்து விடுறீயேடி பரட்டை” என புலம்பினாள் யோகா.

“மிஸ்டர் வில்லன். நான் ஒன்னும் பல் டாக்டர் இல்லை என் முன்னாடி வந்து பல்லை கடிச்சு காட்டுறீங்க” என்ற யோகாவை கத்தியை காட்டி மிரட்டினான்.

“கொஞ்ச நேரம் சும்மா தான் இரேன்டி” என தக்ஷா எச்சரிக்க,

“இது என்ன வியாதியோ பயத்தில பஞ்ச் டயலாக் வருதுடி” என்றாள் யோகா.

“ஏய், ரொம்ப பேசாதே!” என்று கத்தினான். அவன் கையில் இருந்த கத்தியை உயர்த்தி காட்டினான். யோகா உடனே சற்றே அமைதியாகி தக்ஷாவை நோக்கி மெதுவாக கிசுகிசுத்தாள்.

“நான் பயந்து தான் பேசுறேன்டி, இல்லன்னா இப்போவே மயங்கி விழுந்திருப்பேன்.”

அதை கேட்ட தக்ஷா சிரிப்பை அடக்கிக்கொண்டாள். வஞ்சியும் மெதுவாகச் சிரித்தாள். அவர்களை பார்த்த ராஜேஷ் இன்னும் கோபமடைந்தான்.

“நீ சிரி வஞ்சி! நீ சிரிச்சா அழகா இருக்க. அம்மையும் அப்பாவும் வந்ததும் உன் கழுத்தில தாலியை கட்டிட்டு இவிய இரண்டு பேரையும் விட்டுறேன்” என வஞ்சியை நெருங்கி வர,

“வில்லன் சார்.. உங்களுக்கு வஞ்சி தானே வேணும். எங்க கட்டை கழட்டி விட்டீங்கன்னா கொஞ்சம் மூக்கை சொறிஞ்சுக்குவேன். ரொம்ப நேரமா அரிக்குது” எனப் பேசி அவன் வஞ்சியின் அருகே செல்வதை சாமர்த்தியமாக சில நொடிகள் தள்ளிப் போட்டாள் யோகா.

கதவு படாரென்று உடைந்து திறந்த சத்தம் அந்த பழைய மில்லின் அமைதியை ஒரே நொடியில் சிதறடித்தது. அந்த சத்தத்தைக் கேட்டவுடன் ராஜேஷ் திரும்பிப் பார்த்தான்.

வாசல் வழியாக தூசு எழுந்தபடி உள்ளே நுழைந்தார்கள் திருநீலகண்டனும் மணிகண்டனும் அவர்களின் நண்பர்களும்.

ஒரு நொடிக்கு எல்லோரும் உறைந்து நின்றார்கள். முன்னால் நின்றிருந்தவன் திருநீலகண்டன். பட்டு வேட்டியையும் சட்டையையும் அணிந்திருந்தாலும், அந்த நேரத்தில் அவன் முகத்தில் இருந்தது மாப்பிள்ளையின் ரௌத்திரம்.

அவன் பார்வை நேராக தக்ஷாவைத் தேடிச் சென்றது. கயிற்றால் கட்டப்பட்டபடி அமர்ந்திருந்த தக்ஷாவை பார்த்த அந்த நொடியிலேயே அவன் கண்கள் தீப்பொறியாக மின்னின.

“திரு” என்று மெதுவாக அழைத்தாள் தக்ஷா.

அவளின் குரல் அவன் காதில் விழுந்த நொடியில், அவன் கால் இன்னொரு அடியை முன்னே வைத்தது.

மணிகண்டனின் பார்வை வஞ்சியைத் தேடியது. கயிற்றால் கட்டப்பட்டபடி இருந்த வஞ்சியை பார்த்ததும் அவன் பற்களை கடித்தான். வஞ்சியை பார்த்து “நான் இருக்கேன்” என்பது போல் இமையசைத்தான்.

“டேய் எல்லாரும் எங்கேடா போனீய? விளங்காத விளக்கமாருகளா” என ராஜேஷ் கத்த, வெளியில் காவலுக்கு நின்றிருந்த அடியாட்களை பொட்டலம் போல் ஒருவரை ஒருவர் இணைத்து கயிற்றால் கட்டி சம்பவம் செய்திருந்தனர் திருநீலகண்டனின் நண்பர்கள்.

“உன்னோட விளங்காத விளக்கமாருகளை சிண்டு முடிஞ்சு வச்சிருக்கோம் போய் பொறுக்கிக்கோ” என்றான் மணி.

“மரியாதையா அவங்களை விட்டுரு. இல்லைனா கம்பி எண்ண வேண்டியது இருக்கும்” என எச்சரிக்கையாய் திருநீலகண்டன் சொல்ல,

“பிரச்சனை எனக்கும் மணிக்கும் நீ யாருடா நடுவுல”

“அவர் தான் ஹீரோ!” என பின்னால் இருந்தபடி குரல் கொடுத்தாள் யோகா.

“ஏலே இந்தக் கொசுவை நசுக்குங்கடா” அவனின் அடியாளிடம் கட்டளையாய் சொன்னான் ராஜேஷ்.

“இப்போ உன்னைய நசுக்க போறாய்ங்கடி” என மீண்டும் யோகா கிண்டலடித்தாள்.

“யோகா! அமைதியா இருடி” என தக்ஷா சொல்ல, “எனக்கு ஜாலியா இருக்குடி தக்ஷா. இதுவரைக்கும் ஃபைட்லாம் படத்துல தான் பார்த்திருக்கேன். இப்போ நேர்ல பார்க்க போறேன். உன் ஆளு அந்த வில்லன் சாரை அடிக்கிற அடியில பொறி கிளம்ப போது பூமி அதிர..” என அவள் சொல்லிக் கொண்டிருந்த போது, சிந்தாமணியும் சின்னராசும் மில்லிற்குள் நுழைந்தனர்.

“இது யாருடி தக்ஷா இரண்டு புது முகங்கள் வருது” என யோகா கேட்க,

“தெரியலைடி யோகா” என்றாள் தக்ஷா.

“உனக்கு என்ன தான் தெரியுமோ பேருக்கு தான் ஹீரோயின்” என சலித்துக் கொண்டாள்.

“அவிய தான் ராஜேஷோட அப்பா அம்மா” என்றாள் வஞ்சி.

“ஓ வில்லன் சார் ஃபேமிலியா?”

“ஆமா ஃபைட் எப்போ ஸ்டார்ட் ஆகும் வளவளன்னு பேசிகிட்டே இருக்காங்களே” என மீண்டும் தக்ஷாவை நோக்கி கேட்க,

“எனக்கு என்னடி தெரியும் நானே புடவை கசகசன்னு இருக்குதுன்னு இருக்கேன்.”

“நீயும் உன் ஆளும் தானே ஒரு மணி நேரமா புடவையை வச்சி பார்த்து எடுத்தீங்க.. இப்போ வந்து குறை சொல்லிட்டு இருக்க?” எனக் கிண்டலாய் கேட்டாள்.

“சும்மா இருந்துக்கடி யோகா.. எதாவது பேசிட போறேன்” எனக் கோபம் கொண்டாள் தக்ஷா.

“என்ன வேலைடா பண்ணி வச்சிருக்க.. அந்த பிள்ளைகளை விடுடா” எனச் சொல்ல, “மத்தவியளை விட்டிருதேன் வஞ்சியை விட முடியாது” என உறுதியாய் சொன்ன ராஜேஷை பளாரென அறைந்திருந்தான் நீலகண்டன்.

அவன் கத்தியை பிடிங்கி அவன் கழுத்தில் வைத்த சமயம், “என் பையனை விட்டுருங்க. அவனை கூட்டிட்டு கிளம்பிடுதோம்” என சின்னராசு கெஞ்சிய போது, போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் ஒலித்தது.

அந்த சத்தம் கேட்ட நொடியில் ராஜேஷின் முகம் சற்று கலங்கியது. திருநீலகண்டன் இன்னும் அவன் கழுத்தில் கத்தியை வைத்தபடி நின்றிருந்தான். அவன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

“என் தக்ஷாவை, என் குடும்ப பொண்ணுங்களைக் கட்டி வைச்சு விளையாடுற தைரியம் எங்கிருந்து வந்தது?” என்று அவன் பற்கள் கடித்தபடி கேட்டான்.

“என்ன தக்ஷா உன் ஆளு மாஸ் காட்டுறாரா” என தோழியை வம்பிழுக்க, தக்ஷா தன்னவனை பார்த்து புன்னகைத்தாள்.

அதே சமயம் மில்லின் அமைதியை கிழித்துக் கொண்டு கேட்டது பூட்ஸ் காலடி சத்தங்கள். சில நொடிகளில் கதவின் அருகே போலீஸ் அதிகாரியும் இரண்டு போலீஸ்காரர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களின் பார்வை நேராக ராஜேஷ் மீது விழுந்தது.

“யாருடா போலீஸ்க்கு சொல்லியிருப்பா?” என அதிர்வுடன் கேட்டான் மணி.

“நான் தான்” என திருநீலகண்டன் சொன்ன நொடியில், அங்கே காவல் அதிகாரியாய் வந்து நின்ற ராபினை பார்த்து நண்பர்கள் கூட்டம் குதுகலித்தது.

“டேய் வர்றது நம்ம ராபின் டா ” என ஒருவன் சொல்ல, “கல்யாணம் ரீயூனின்னு கூப்பிட்டா வர மாட்டேன்னு பிரச்சனையோட போன் பண்ணிருகீங்க? உங்களை என்னத்த சொல்ல” என்றான் ராபின்.

“யோவ் டு நாட் டூ பிடிச்சிட்டு போயா அந்த மூணு பேரையும்” என வேலையை சொல்ல, அவனுடன் வந்த காவலர்கள் அவன் சொன்ன வேலையை செவ்வண்ணே செய்ய, ராஜேஷையும் அவன் குடும்பத்தினரையும் இழுத்துச் சென்றார்கள் காவல்துறை அதிகாரிகள்.

திருநீலகண்டன் ஓடிச்சென்று தக்ஷாவின் கட்டை அவிழ்க்க, மணியோ வஞ்சியின் கைகளில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டான்.

கட்டை அவிழ்த்த நொடி தக்ஷா பாய்ந்துக் கொண்டு திருவை அணைத்திருந்தாள்.

“ரொம்ப பயந்துட்டேன் திரு. லவ் யூ” என அவன் செவிகளில் கிசுகிசுக்க, அவளை மேலும் தனக்குள் புதைத்துக் கொண்டான் திருநீலகண்டன்.

அவள் பாதுகாப்பாக அவன் கரங்களில் இருப்பதை உணர்ந்த அந்த நொடியில் தான் அவன் மனதில் இருந்த பதற்றம் மெதுவாக குறைய ஆரம்பித்தது.

“நான் இருக்கேன் தக்ஷூ.. உனக்கு எதுவும் ஆக விடுவேனா?” என்று மெதுவாக அவள் காதருகில் சொன்னான். தக்ஷா அவன் மார்பில் முகத்தை புதைத்தபடி சற்றே சிரித்தாள். அதே நிலையில் தான் வஞ்சியும் மணியும் நின்றிருந்தனர்.

“நேரங்காலம் தெரியாமல் லவ் பண்ணிகிட்டு இருக்குதுங்க பக்கிக. நம்மளை நாமே தான் காப்பாத்திக்கணும் போல” என கயிற்றை பற்களால் கடிக்க போனவளை தடுத்தது அந்த வலிய கரம். காவல் சீருடையில் யோகாவின் விழி பார்த்து அவளின் கரங்கள் நோகாமல் விடுவித்தான் ராபின்.

“என்னைய பொறுத்த வரைக்கும் நீங்க தான் ஹீரோ” என்றாள் யோகா.

“ஏன்” என்றான் அவள் விழிகளை பார்த்து.

“நீங்க தானே என்னைய காப்பாத்துனீங்க” என இதழ் விரித்து சிரித்தாள்.

அதை கேட்டதும் அருகில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

“சீக்கிரமா கிளம்புங்க கோயில் எல்லாரும் காத்துக் கிடப்பாவ” என மணிச் சொல்ல, சில நிமிடங்களில் வேனில் ஏறி அனைவரும் புறப்பட்டிருந்தனர். வேன் குலதெய்வ கோவிலின் வாசலுக்கு வந்து நின்றது.

அந்த நேரத்தில் கோவிலின் முன் காத்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள். கோவிலின் மணி ஒலி அதிகாலை காற்றில் தெளிவாக ஒலித்தது. நாதஸ்வரமும் தவில் சத்தமும் மீண்டும் உயர்ந்தது.

“வந்துட்டாங்க! வந்துட்டாங்க!” என்று யாரோ குரல் கொடுத்தார்.

வேனிலிருந்து முதலில் இறங்கியது திருநீலகண்டன்.

அவன் பின்னால் தக்ஷா இறங்கினாள். திருமண புடவையில் சற்றே கசங்கியிருந்தாலும் அவள் முகத்தில் இருந்த ஒளி குறையவில்லை. அவர்களை பார்த்தவுடன் பூரணி கண்களில் நீர் நிரம்பியது. “கடவுளே., நல்லபடியாக கூட்டிட்டு வந்துட்டாங்க” என்று கைகளை கூப்பி நின்றார்.

முத்தம்மை வஞ்சியை பார்த்தவுடன் அவளை அணைத்து கொண்டார். “என் பேத்தி” என்று அவள் தலைமுடியை வருடினார். வஞ்சி சிரித்தபடி,

“நான் நல்லாத்தான் இருக்கேன் பாட்டி” என்றாள்.

சில நிமிடங்களில் கோவிலின் உள்ளே திருமண மேடை மீண்டும் கலகலப்பாக மாறியது.

மஞ்சள் குங்கும வாசனை, மலர் மணம், நாதஸ்வர ராகம் எல்லாம் ஒன்றாக கலந்து அந்த இடத்தை முழுவதும் ஆனந்தமாக மாற்றியது.

திருநீலகண்டன் மணமேடையில் அமர்ந்தான். அவன் அருகே தக்ஷாவை அமர வைத்தார்கள். அவள் கண்கள் மெதுவாக அவனை நோக்கி உயர்ந்தது. இப்போது அவள் விழிகளில் பயம் இல்லை. அவன் மீதான காதல் கசிந்தது. திரு மெதுவாக சிரித்தான்.

அதே நேரத்தில் இன்னொரு மணமேடையில் மணிகண்டன் அருகே வஞ்சியும் அமர்ந்தாள்.

பூசாரி மந்திரம் ஓத ஆரம்பித்தார்.

“மாப்பிள்ளை… தாலியை எடுத்துக்கோங்க.”

பூசாரி கையில் இருந்த மஞ்சள் தாலியை திருநீலகண்டனிடம் கொடுத்தார்.

அந்த நொடி தக்ஷாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. திரு தாலியை கையில் பிடித்தபடி அவளை பார்த்தான். அவள் சம்மதமாய் தலையசைக்க, பூரணி கண்களில் கண்ணீர் வழிந்தது.

“கெட்டிமேளம்!” என்று பூசாரி குரல் கொடுத்தார். அந்த நொடியில், நாதஸ்வரம் முழங்கியது. தவில் சத்தம் கோவிலை முழுவதும் அதிர வைத்தது.

திருநீலகண்டன் தக்ஷாவின் கழுத்தில் தாலியை கட்டிய நொடியில் பூக்களால் தங்களின் ஆசிர்வாதத்தை அனைவரும் வழங்க, கோகிலாவின் விழிகள் நீரால் நிரம்பியது. நண்பர்கள் உற்சாகமாய் கத்த, அந்த மூன்று முடிச்சுகளுடன் இரண்டு இதயங்கள் ஒன்றானது.

மற்ற மணமேடையில் மணிகண்டன் வஞ்சியின் கழுத்தில் தாலியை கட்டினான். “லவ் யூ டி தங்க மயிலு” என்றான் மணி. நாணத்தில் சிவந்து போனாள் வஞ்சிக் கொடி.

முத்தம்மை கைகளை கூப்பி கண்களை மூடினார். “குலதெய்வம் காப்பாத்திட்டுச்சு..” என்று மெதுவாக சொன்னார். மீண்டும் நாதஸ்வர முழக்கம். நண்பர்களின் கூச்சல் என அந்த இடமே அதிர்ந்தது.

“நம்ம கல்யாணத்தை சிம்பிளா ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வச்சுகலமா?” என யோகாவின் தோள் இடித்துச் சொன்னான் ராபின். அவன் சொன்னதைக் கேட்டவுடன் யோகா முதலில் சில நொடிகள் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

பிறகு புருவத்தை உயர்த்தி, “ஹலோ ஆபீசர்! முதல்ல லவ் பண்ணுறதுக்கு அப்ளிகேஷன் போடுங்க.. அப்புறம் ரெஜிஸ்டர் ஆபீஸ் பற்றி பேசலாம்.” என்று கண் சிமிட்டினாள்.

அதை கேட்டவுடன் அருகில் நின்றிருந்த நண்பர்கள் எல்லோரும் சிரித்தார்கள். ராபின் சிரித்தபடி தலையை ஆட்டினான்.

உற்றார் உறவினர் பெற்றோர் பெரியோர் என அனைவரின் ஆசிர்வாதமும் பெற்று, இல்லறத்தில் முதல் அடியை எடுத்து வைத்திருந்தனர் இரு ஜோடிகளும்.

அந்த நேரத்தில் காலை சூரியன் மலைக்குப் பின்னால் இருந்து மெதுவாக மேலெழுந்தான்.

அவன் பொன்னொளி கோவிலின் கோபுரத்தைத் தொட்டு, அங்கிருந்து மணமேடையில் அமர்ந்திருந்த அந்த நான்கு முகங்களிலும் பரவியது.

காதல் பல சோதனைகளை கடந்து வந்திருந்தது. பயம், பிரிவு, பதற்றம் எல்லாம் ஒரு கணத்தில் மறைந்தது.

திருநீலகண்டன் தக்ஷாவை பார்த்தான்.அவள் மெதுவாக சிரித்தாள்.

மணி வஞ்சியை பார்த்தான்.அவள் நாணத்தில் தலை குனிந்தாள்.

அந்த குலதெய்வ கோவில் அந்த ஆலமரம் அந்த மலைகள் எல்லாம் அமைதியான சாட்சியாக நின்றது. காத்திருந்த இரண்டு காதல்கள் இன்று ஒரே செடியில் மலர்களாக மலர்ந்தது.

நிறைந்தது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்