
நேசம்-17
நிசப்தம் நிறைந்திருந்த அந்த அறையில் அலைபேசி மீண்டும் க்ளிங் சத்தத்துடன் மெதுவாக ஒளிர்ந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அழகுநிலாவின் இமைகளுக்குள் கருமணிகள் உருண்டன. தூக்கத்தைக் கலைக்கும் அலைபேசியின் சத்தம் அவளுக்கு எரிச்சாலாய் இருந்தது. மீண்டும் குறுஞ்செய்தி வரும் ஒலியைக் கேட்டு புரண்டு படுத்தாள். கண்கள் பாதித் திறந்து, பக்கத்து மேசையிலிருந்த அலைபேசியைக் கைநீட்டி எடுத்தாள்.
சன்னலின் திரைச் சீலைகள், மின்விசிறிக் காற்றில் நர்த்தனமாடிக் கொண்டிருக்க, இன்னும் இருள் விலகவில்லை என்பது ஜன்னலை அடைத்த இருளில் தெரிந்தது. கையிலிருந்த அலைபேசியைக் கைரேகை பதித்துத் திறந்தவள். அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும், அதிர்ந்து எழுந்துவிட்டாள்.
‘தூக்கக் கலக்கத்தில், தவறாகப் படித்துவிட்டோமோ?’ சநேதேகம் எழ, கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் திரையை நோக்கினாள்.
திரையில் மின்னிக் கொண்டிருந்த குறுஞ்செய்தியை இன்னொருமுறை நிதானமாய்ப் பார்த்தாள். முழுவதும் வாசித்தவுடன் அவளது புருவம் சுருங்கியது. மனம் அதிர்ந்தது.
“கதிர் மாமா!” அவளிதழ்கள் சன்னமாய் முணுமுணுத்தது.
“நான் சாகும் முன்னே வந்துரு!” என்ற வார்த்தைகள், அவளின் மனதிற்குள் சுழன்றது. அவள் அலைபேசியைப் பிடித்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
கதிரவனுடனான பழைய நினைவுகள் அவளுள் மையமிட்டது. அவன் அவளுக்காகச் சண்டையிட்ட நாட்கள், அவளைச் சிரிக்க வைக்க முயன்ற தருணங்கள்,அதற்குப் பிறகு திருமணப் பேச்சினால் ஏற்பட்ட இடைவெளி. ஆழமாக முச்சை இழுத்துவிட்டாள். பயம் மனதிற்குள் சடுகுடு விளையாடியது. ஒருவேளை கதிரவனுக்கு ஏதாவதொன்று நிகழ்ந்தால், அந்தக் குற்றவுணர்வே இவளைக் கொன்று புதைத்துவிடும்.
“இப்படி மெசேஜ் அனுப்பற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?” மெல்லக் கொல்லும் விஷயமாய் அவளின் நரம்பு மண்டலத்தைப் பயம் ஆக்கிரமிக்கத் துவங்கியிருந்து.
அடர் இருள் சூழ்ந்த இந்தக் காலைப் பொழுதில், இதை யாரிடம் சொல்வது? என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ‘தாய் தந்தையரை எழுப்பிச் சொல்லிவிடலாமா.?’ என யோசித்துக் கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். பின் ஏதோ தோன்றவும், வேண்டாமென முடிவு செய்தவளாய் பொத்தென்று கட்டிலில் அமர்ந்தாள். கண்கள் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை நோக்கியது.அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. காலை நேரத்து உறக்கத்தை அலைபேசியும் அதில் வந்த குறுஞ்செய்தியும் களவாடியிருக்க, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அழகுநிலா.
திடீரென ஏதோ யோசனை வந்தவளாய், கதிரவனின் எண்ணை அலைபேசியில் அழுத்தி, அழைப்பு விடுத்தாள். அழைப்பு சென்று கொண்டே இருந்தது. ஆனால், அழைப்பை யாரும் ஏற்காகதது வேறு திகிலைக் கிளப்பியது.
‘ஒருவேளை நிஜமாகவே கதிரவனுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்?’ மனம் அடித்துக் கொண்டது.
அழைப்பு ஏற்கப்படாமல் போகவும் அவளது விரல்கள் நடுங்கின. மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தாள். அழைப்பு ஏற்கப்படவே இல்லை.
“எடுத்து தொலையேன் மாமா! தயவு செய்து எடு!”அவளது உதடுகள் அவசரமாய் முணுமுணுத்தன.
அலைபேசி மீண்டும் “க்ளிங்” என்ற சத்தத்துடன் ஒளிர்ந்தது.அதிர்ச்சியில் அவள் திரையை நோக்கினாள்.மீண்டும் கதிரவன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி. பயம் அவளின் ஒட்டு மொத்த தைரியத்தையும் மென்று தின்று கொண்டிருந்தது.
“அழகி! வெளியே வா! பேசணும்.!”
அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அவளது மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. ஆனால் சில நொடிகளிலே அது பயமாய் உருமாறி அவளைப் பயமுறுத்தியது.
“எதுவா இருந்தாலும் உள்ளே வந்து பேசு மாமா! இல்லைன்னா மெஸேஜ் கூடப் பண்ணு! உனக்கு என்னதேன் பிரச்சனை? சாகும் முன்னே வரச் சொன்ன? என்ன ஆச்சுன்னு சொல்லு?” எனக் கேள்விகளை அனுப்பி வைத்தாள். அந்தப் பக்கம் அவன் பார்த்துவிட்டதற்கான நீலநிறக் குறியீடு ஒளிர்ந்தது. ஆனால் அதற்கான பதில் வரவில்லை.
நொடிகள் நிமிடங்களாய் மாறும் வரை அவள் காத்திருந்தாள். அவன் பதில் தரவே இல்லை.
அவள் மெதுவாக எழுந்து சன்னலருகே சென்றாள். திரைச்சீலைகளை நிதானமாய் ஒதுக்கி வெளியே பார்த்தாள். வீட்டின் முன்புறம் இன்னும் அடர்ந்த இருள். தெரு விளக்கின் மங்கலான ஒளியில் சாலையின் ஓரம் மட்டும் தெரிந்தது.அந்த
மங்கலான வெளிச்சத்தில், நிழலாய்த் தெரிந்தது கருப்பு நிற மகிழுந்து. அதன் பக்கத்தில் சாய்ந்து நின்றிருந்த உயரமான உருவத்தைப் பார்த்து அவளது கண்கள் அதிர்வில் விரிந்தன.
“கதிர் மாமா?” அவள் தனக்குள் முணுமுணுக்க, அந்த உருவம் தன் அலைபேசியைக் காதருகே வைப்பது அவளுக்குத் தெரிந்தது. தனக்குத் தான் அழைக்கிறான் என்பதை ஊகித்தவள், தன் கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தாள். அந்த விநாடியில் அழகுநிலாவின் அலைபேசி ஒலித்தது.
அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ! ஏன் மாமா இப்படிச் செய்ற? உனக்கு என்னதான் வேணும்.?”கோபமாய்க் கேட்டாள் அவள். மறுபுறம் அமைதி மட்டுமே! அவன் பதில் சொல்லவில்லை.
சில நொடிகளின் பின், கதிரவனின் குரல் மிக மெலிதாகக் கேட்டது.
“உன் கேள்விக்கெல்லாம் பதில் நீ வெளியே வந்தால் மட்டுந்தேன் கிடைக்கும்.!”
“மாமா! ,நீ வீம்புக்கு தானே செய்ற?” அவள் கேள்வி அவன் செவியைச் சென்றடையும் முன்னே இணைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது. அவள் வெளியே வந்தாக வேண்டுமென அவன் கட்டாயப்படுத்துவது அவளுக்குப் புரிந்தது.
“ஏன்?” காரணம் மட்டும் அவளுக்குப் பிடிபடவில்லை. அச்சமும், தயக்கமும் அவளை ஒருசேர ஆட்டுவித்தது. வெளியே செல்லலாமா? வேண்டாமா? அவளுக்குள்ளேயே பட்டிமன்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
‘வேறு வழியில்லை! சென்று தான் தீர வேண்டும்! என்னவெனக் கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம்!’ எனத் தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள். அவளின் மலர் பாதங்கள் நோகாமல், மெதுவாய் அடியெடுத்து வந்து தன் அறைக் கதவைத் திறந்தாள். மெதுவாகக் கூடத்தைத் தாண்டி வந்து முன் கதவைத் திறந்தாள்.
“செல்லாதே!” என்பதைப் போல், அவள் கால்கொலுசுகள் மென்மையாய் சப்தமிட்டது. முன் கதவைத் திறந்து வெளி வாசலுக்கு வந்திருந்தாள். அவள் நடந்து வருவது, தெருவிளக்கின் மெல்லிய ஒளியில், நிழலுருவமாய்த் தெரிய, தனக்குள் சிரித்துக் கொண்டான் கதிரவன். இரும்பு கேட்டைத் திறந்து கொண்டு, வெளியே வந்திருந்தாள்.
“வர மாட்டேன்னு நினைச்சேன் அழகி! மாமன்காரன் மேலே கொஞ்சம் பாசம் இருக்கத்தேன் செய்யுது?” என அவன் சாதாரணமாய்க் கேட்க,
“இப்போ உனக்கு என்ன பிரச்சனை மாமா.? எதுக்கு இப்படியெல்லாம் செய்ற? செத்துருவேன்.. அது இதுன்னு பயமுறுத்துற?” அவனைப் பார்வையால் பஸ்பமாக்கியபடியே கேட்டாள் அழகுநிலா.
“நீ என்னைக்கு என்னை வேணாம்ன்னு சொன்னியோ, அன்னைக்கே நான் செத்துட்டேன் அழகி! இனிமேட்டு நான் உசுரோட இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?” என உருகும் குரலில் பேசியவன், அழகுநிலாவை நெருங்கி வந்திருந்தான். அவளோ, அவன் மீதான கோபத்தில், அவனைக் கவனிக்காமல் நின்றாள்.
“இப்படி விடிஞ்சும், விடியாமலும், என்னை என்னத்துக்கு வரச் சொன்ன.? அப்படி ஊன்ன சொல்லப் போற? சொல்லித் தொலை!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் எதிர்பாரா நேரத்தில், கையிலிருந்த மயக்க மருந்து ஸ்பேரேயை அவள் முகத்தில் தெளித்திருந்தான். அவனின் திடீர் தாக்குதலில், அவளௌ தள்ளாடி விழப் போக, அந்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்தி, அவளை மகிழுந்தின் பின்னிருக்கையில் தள்ளியிருந்தான்.
தான் சிக்கியிருக்கும் சூழலின் விபரீதம் அழகுநிலாவிற்குத் தாமாதமாகத் தான் உறைத்தது. அதற்குள் அவளின் கண்கள் சொருகத் துவங்கியிருந்தது. முழுதாய் மயக்கம் அவளைத் தழுவக் காத்திருந்த அந்தச் சில விநாடிகளில், தன் கையிலிருந்த அலைபேசியின் வழியே நேரலை இருப்பிடத்தை
(live location) அதிவீரனுக்கு அனுப்பிய அந்த நொடியில் மொத்தமாய் மயக்கத்திற்குள் சென்றிருந்தாள்.
அவள் கரத்திலிருந்த அலைபேசி, நழுவி, மகிழுந்தின் இருக்கைக்கு இடையில் விழுந்தது.
*******
அந்தச் சொகுசு பங்களாவில் இருள் மெதுவாக விலகத் துவங்கியது. கீழ்வானில் ஆரஞ்சும் மஞ்சளுமாய்ச் சூரியனின் கதிரொளி மெல்ல மெல்லமாய் ஊடுருவத் துவங்கியிருந்தது.
இனிப்பில்லாத காலைத் தேநீரோடு அமர்ந்திருந்தார் அமைச்சர் சுந்தரமூர்த்தி. குளித்து முடித்து, பளிச்சென்ற வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். நெற்றியில் வீபூதித் தீற்றல். பார்க்க அக்மார்க் நல்லவனாய் காட்சி தந்தார். அவருக்கு எதிரே தேநீரில் சீனியைக் கலக்கியபடி அமர்ந்திருந்தார் இராஜேந்திரன்.
“என்ன இராஜேந்திரா! இன்னும் அந்தப் பயலைக் காணோம்! உன்னை நம்பித்தான் நான் இதெல்லாம் செய்றேன். எதாவது சொதப்பிச்சு?”
“வந்துருவான்! வந்துருவான். அந்தப் புள்ளையை நேக்கா பேசி கூட்டியார வேணாமா? அந்தப் பிள்ளை மேலே அவனுக்குக் கொள்ளை பிரியம். கண்டிப்பா தூக்கிட்டு வந்துருவான். நீங்க டீயைக் குடிங்க! எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என உறுதியாய் சொன்னார் இராஜேந்திரன்.
“யோவ்! மணி அஞ்சரை ஆகிப் போச்சுது! அவன் நாலு மணிக்கே போய்த் தொலைஞ்சுட்டான்.. என்னன்னு ஃபோன் போட்டு கேளு!” எனச் சொல்லவும், இராஜேந்திரன் கதிரவனுக்கு அழைப்பெடுத்தார். ஆழைப்பு சென்று கொண்டே இருந்ததே ஒழிய, அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. இப்போது இராஜேந்திரனைப் பயம் பிடித்துக் கொண்டது. ஒருமுறை.. இருமுறை.. முன்றாம் முறை எனக் கடைசியாய் பதினோராவது முறையாய் அழைத்தும் கூட அவன் அழைப்பை ஏற்கவில்லை.
“என்னய்யா! எடுக்க மாட்டேங்குறானா? குடிகாரப் பய! குடிச்சுட்டு எங்கேயாவது விழுந்து கிடக்கப் போறான் பாரு! நான் உன்னைய நம்பியிருக்கக் கூடாதுய்யா!”
“அட! இருங்க, என்னத்துக்குப் பதறுறீக?!” என்ற இராஜேந்திரன், அழகுநிலாவைக் கண்காணிக்க, தான் ஏற்பாடு செய்திருந்த நபருக்கு அழைத்தார்.
“சொல்லுங்க சார்!”
“அங்கண என்ன நிலவரம்?” அவசரமாகக் கேட்டார் இராஜேந்திரன்.
“எல்லாமே அமைதியா தான் இருக்கு சார். அந்த வீட்டுலிருந்து யாரும் இன்னும் வெளியே வரலை!”அந்த பதிலை கேட்டதும் இராஜேந்திரனின் புருவம் சுருங்கியது.
“நீ சரியா பார்த்தியா? கதிரவன் அங்கிருந்து அந்தப் புள்ளையைக் கூட்டிட்டு வந்திருக்கணும். ஒரு கருப்புக் காரில் வந்தானே? என்னத்தைப் பார்க்குறீங்களோ? அம்புட்டு பேரும் தின்னுப்புட்டு தூங்கிட்டீகளா?”
“இல்ல சார்.! இங்கே பதற்றமா இருக்கிற மாதிரி எதுவுமே தெரியல. கதவு கூட இன்னும் திறக்கலை. நீங்க சொன்ன மாதிரி, கறுப்பு காரு விடியும் முன்னே வந்து நின்னுச்சு. அதில் அந்தப் பொண்ணு போச்சா இல்லையான்னு எனக்குத் தெரியலை!”
அவன் சொன்ன வார்த்தைகள் இராஜேந்திரனிடம் குழப்பத்தைத் தோற்றுவித்தது.
இராஜேந்திரனின் முகத்தில் தெரிந்தக் குழப்பத்தைக் கவனித்த அமைச்சர் சுந்தரமூர்த்தித் தேநீரைக் கோப்பையோடு மேசையில் சற்றே பலமாக வைத்தார்.
“என்ன சொல்றான் உன் ஆளு?” எனக் கேட்ட சுந்தரமூர்த்தியின் முகத்தில் அப்பட்டமாய் எரிச்சல் வழிந்தது.
“அங்கே அமைதியாய் இருக்குன்னு சொல்றான். கார் வந்து நின்னதைப் பார்த்தேன்னு சொல்றான்! ஆனால் அந்தப் பிள்ளையைப் பார்க்கலைன்னு சொல்றான். எனக்கு ஒண்ணும் விளங்கலை!” எனச் சொன்ன இராஜேந்திரனுக்கு அமைச்சரின் துளைக்கும் பார்வையில் உயர் இரத்த அழுத்தம் உச்சந்தலைக்கு ஏறியது.
“அப்படின்னா அந்தப் பய எங்கே போய்த் தொலைஞ்சான்? நான் அப்போவே உன்கிட்டே சொன்னேன்ல்ல? இந்தக் குடிகாரப்பயலை நம்பாதேன்னு.. இப்போ என்ன நடந்துருக்குன்னு பாரு? எங்கே போய்த் தொலைஞ்சான்னு தெரியலை!” தன் தகரக் குரலால் அறையதிரக் கத்தினார் சுந்தரமூர்த்தி.அவர் குரலில் இப்போது பதட்டம் வெளிப்பட ஆரம்பித்திருந்தது.
இராஜேந்திரன் உடனே சமாளிக்க முயன்றார். தன் திட்டம் தோற்றுவிட்டதென்பதை அவரால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தத் திட்டத்தின் மூலமாக அமைச்சருக்கு நெருக்காமாகி, நான் நினைத்ததைச் சாதித்துக்கொள்ளலாம் என அவர் தனக்குள் தீட்டியிருந்த திட்டங்கள் கதிரவனால் தவிடுபொடி ஆகிவிடுமோ? என அவருக்குப் பயமாக இருந்தது.
“அப்படியெல்லாம் இருக்காது சார். ஒருவேளை வேற வழியா கூட்டிட்டு வந்துட்டு இருப்பான்.இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.”என அவர் சொன்ன வார்த்தைகளில் அவருக்கே நம்பிக்கை இல்லை.
அதே நேரம்,
அந்தச் சொகுசு பங்களாவின் வெளியே நின்றிருந்த காவலாளிகளில் ஒருவன் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்தான்.
“சார்!”அவன் பெரிய பெரிய மூச்சுகளாக விட்டபடி நின்றான்.
“என்னடா?” என இராஜேந்திரன் சீறினார்.
“வெளியே கார்… அது வந்து..!” என அவன் சொல்ல முடியாமல் தடுமாற, அமைச்சரும் இராஜேந்திரனும் ஒரே நேரத்தில் எழுந்து நின்றிருந்தனர்.
என்னடா கார்? கதிர் வந்திருக்கானா?” எனச் சீறினார் சுந்தரமூர்த்தி.
“போலீஸ் கார் சார்! இரண்டு மூணு கார் வந்துருக்கு! சார்” என அவன் பயத்தோடு சொன்னதும், அந்தச் சூழலை சட்டென நிசப்தம் ஆக்கிரமித்தது.
“என்ன?” என அதிர்ச்சியாய் திரும்பிப் பார்த்தார் அமைச்சர்.
அந்தக் கணமே வெளியில் வாகனங்களின் கதவுகள் பலமாக அடைக்கப்படும் சத்தம் கேட்டது.”தடக்… தடக்…” பங்களாவின் முன்பக்க கேட்டை பலமாகத் தட்டும் சத்தமும் இருவரின் செவிகளில் விழுந்தது.
“ஓபன் தி கேட்!” என்ற அழுத்தாமான குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டதும், இராஜேந்திரனின் முகம் இரத்தப்பசையின்றி வெளுத்தது.
“போலீஸ் எதுக்கு இங்கே?” எனப் பதட்டத்துடன் முணுமுணுத்த இராஜேந்திரனின் வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன.
அதே நேரம் கதவு “படார்” என்ற சத்ததுடன் திறந்ததுது.உள்ளே நுழைந்தது போலீஸ் அதிகாரிகள் குழு.
அவர்களின் பின்னால் நிதானமாக நடந்துவந்தான் அதிவீரன். கண்களில் திமிரும் கம்பீரமும் தெறித்தது. அவன் இதழ்களில் உறைந்திருந்த புன்னகை, இராஜேந்திரனிடமும், சுந்தரமூர்த்தியிடமும் பயத்தை விதைத்தது.காவலருக்கான சீருடையில், அழுத்தமான எட்டுக்கள் வைத்து அவன் நடந்துவர, அவன் முகத்தில் ஒரு அமைதியான புன்னகை மட்டுமே நிறைந்திருந்தது. அந்தப் புன்னகையின் பின்னால் என்ன பூகம்பம் இருப்பதாகத்தான் எதிரே நின்றிருந்த இருவருக்கும் தோன்றியது.
“நீ…?” கண்கள் அதிர்வில் பெரிதாய் விரிய, தடுமாற்றத்துடன் கேட்டார் அமைச்சர்.
அதிவீரன் மெதுவாக நாற்காலியை இழுத்து அவர் முன் கால்மேல் கால்போட்டு அமர்ந்தான்.
“காலை வணக்கம் அமைச்சர் சார்!” நக்கலாய் அவன் சொல்ல, அவனை விழியுயர்த்திக் கோபமாய்ப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.
“ஏய்! நீ என்னத்துக்கு இங்கே வந்திருக்க? உன்னை நாங்க கூப்பிடவே இல்லையே? அமைச்சர் முக்கியாமான மீட்டிங் கிளம்பிட்டு இருக்காரு! உன் கூட்டத்தை இங்கிருந்து கூட்டிட்டு கிளம்பு.!” என அதிகாரமாய் விரட்ட முயன்றார்.
“நீங்க கூப்பிட்டு நாங்க வரலை! ஸோ, நீங்க சொன்னதும் போக முடியாது இராஜேந்திரன்!”
“யோவ்! என்ன வெளாண்டுகிட்டு திரியிறியா?”
“கொஞ்சம் மரியாதையா பேசுங்க இராஜேந்திரன்!” வார்த்தைகளில் அழுத்தம் தந்து எச்சரித்தான் அதிவீரன்.
“இல்லேன்னா என்ன பண்ணுவே?” எனப் பற்களைக் கடித்தபடி கேட்டார் இராஜேந்திரன். அதிவீரன் சற்றே புருவம் உயர்த்தினான். அவனிடம் வேறு எந்த எதிர்வினையும் இல்லை. அவன் முகத்தில் அமர்த்தலான அமைதி மட்டுமே.
“நாங்க என்ன பண்ணப்போறோம் எதுக்காக வந்துருக்கோம்ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே தெளிவா புரியும்.”
அவன் தனக்குப் பின்னால் நின்றிருந்த காவலர்களைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்து, தலையசைத்து வெளியேறிய கடைநிலைக் காவலர் ஒருவர், அந்தப் பங்களாவின் இரும்பு கேட்டை அகலத் திறந்து வைத்தார்.
அதே நேரம் வெளியில் இருந்து இன்னும் சில வாகனங்கள் பங்களாவின் உள்ளே நுழைந்தன. கருப்பு நிற எஸ்.யூ வி-க்கள் இரண்டு, வெள்ளை நிற ஜீப் ஒன்றும் புழுதியைக் கிளப்பியடி உறுமலுடன் நின்றன.
அந்த நவீன ரக வாகனங்களிலிருந்து இறங்கியவர்களின் கையில் கோப்புகளும் சீல் வைக்கப்பட்ட ஃபைல்களும் இருந்தன. அதைப் பார்த்ததும் இராஜேந்திரனின் புருவம் யோசனையாய்ச் சுருங்கியது.
“இவங்க யாரு?” என வேகமாகக் கேட்டார்.
அதிவீரன் மெதுவாக எழுந்தான். அடர் மீசையின் மறைவிலிருந்த அதரங்கள் புன்னகையில் விரிய, எதிரில் நின்ற இருவரின் பாவனைகளைக் கவனமாக உள்வாங்கியபடியே மெதுவாகச் சொன்னான்.
“இன்கம் டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட்.”அவன் உச்சரித்த ஒற்றை வார்த்தை அவர்களின் தலையில் பேரிடியாய் விழுந்தது.
“என்ன?” எனத் திடுக்கிட்டு அதிர்ந்தார் சுந்தரமூர்த்தி.
“வாரண்ட் இருக்கா?” அதிகாரமாய் அமைச்சரின் குரல்.
அந்த நேரம் உள்ளே வந்த அதிகாரிகளில் ஒருவர் முன் வந்து கோப்பொன்றைத் திறந்தார்.
“அமைச்சர் சுந்தரமூர்த்தி! இந்தப் பங்களா மற்றும் உங்களோடு தொடர்புடைய எல்லாச் சொத்துகள் மீதும் வருமானவரி துறையின் சோதனை நடைபெறுகிறது. அதற்கானை வாரண்ட் இதோ!”அவர் வாரண்டை முன் நீட்டினார்.
“இது அதிகாரப்பூர்வ அனுமதி.” இன்னொரு அதிகாரி சொல்லவும்,
“நான் என் லாயர் கிட்டே பேசணும்!” எனத் தன் அலைபேசியைக் கையிலெடுத்தவரின், அலைபேசி பறிக்கப்பட்டது.
“மிஸ்டர். இராஜேந்திரன், உங்களுடைய வீடு, நகைக்கடைன்னு எல்லா இடத்திலேயும் தான் ரெய்ட் நடக்குது. ஸோ, நீங்களும் எங்கேயும் போக முடியாது! உங்க ஃபோனையும் குடுங்க!” என இராஜேந்திரனுடையதும் பறிக்கப்பட்டது.இராஜேந்திரன் பதற்றத்துடன் அமைச்சரைப் பார்த்தார்.
“சார்… இது எப்படி? என்ன சார் நடக்குது?”
அதிவீரன் அவர்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டே நின்றான்.அவன் முகத்தில் இன்னும் அந்த மர்மமான புன்னகை.
“நாங்க இங்கே வந்தது உங்களைத் தொந்தரவு பண்ணுறதுக்காகவோ, கைது பண்ணவோ இல்லை!.”சிறிது இடைவெளி விட்டவன்,
“லோக்கல் போலீஸ் ப்ரொடக்ஷன் கேட்டுருந்தாங்க அமைச்சர் சார். அதுக்காகத் தான் நான் வர வேண்டியதாகப் போச்சு.! மத்தபடி, எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை. எனக்குக் கொடுக்கிற ஆர்டருக்கு நான் கட்டுப்பட்டுத் தானே ஆகணும்?” அவன் சொன்ன தொனியிலேயே அவன் வீம்புக்கென்று சொல்கிறான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
அவன் மீதானக் கோபத்தை வெளிப்படையாய் காட்ட முடியாது, பற்களை நறநறத்தனர் இருவரும்.
அதே நேரம், அங்கே நின்றிருந்த உயர் அதிகாரியொருவர், கையைச் சற்று உயர்த்திக் காட்ட, வருமான வரித்துறை அதிகாரிகள் பங்களாவின் உள்ளே வேகமாகப் பரவினர்.
கப்போர்டுகள் திறக்கப்படும் சத்தம், காகிதங்கள் பரபரவெனப் புரட்டப்படும் சத்தம், வாக்கி-டாக்கியில் வரும் கட்டளைகள் என, அந்தச் சொகுசு பங்களாவை நொடிப்பொழுதில், நிமிடங்களில் பரபரப்பு தொற்றி பரவியது.
அதிவீரன் மீண்டும் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். அவனுடன் வந்திருந்த காவலர்கள் ஆங்காங்கே பரவி பாதுகாப்பிற்காக நின்றனர்.
“காலை டீ நல்லா இருந்துச்சா அமைச்சர் சார்? ஏன்னா இனிமே உங்களுக்குச் சாப்பிட கூட நேரமிருக்காதே?” உதட்டில் சின்னச் சிரிப்புடன் கேட்டான்.
“இன்னைக்கு உங்க ராசிக்கு ரொம்ப நல்ல நாள் போல?”
அந்த வார்த்தைகளில் இருந்த பரிகாசத்தில் சுந்தரமூர்த்தியின் கை முஷ்டி அழுத்தமாய் இறுகியது.
இத்தனை நாட்களாய் அமைதியும், அழகையும் சுமந்து கம்பீரமாய் நின்றிருந்த அந்தச் சொகுசு பங்களா, கலைந்த தேன்கூட்டைப் போல, இரைச்சலை சுமந்து நின்றது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சுந்தரமூர்த்திக்கும் ராஜேந்திரனுக்கும் சூப்பரா செக் வச்சான் அதிவீரன் 🤩🤩🤩😎😎😎
கதிர் என்ன ஆனான் 🤔🤔 நிலா எப்படி இருக்கா… 😧
மிக்க நன்றி டா 💙
நிலா செம. அதி வாவ்
மிக்க நன்றி கலை மா 💙