
நேசம்-16
அடர்த்தியான அந்தகாரமான இரவு நேரம்.
நகரத்தின் புறநகர் பகுதியில் இருந்த சொகுசு பங்களா ஒன்றில், அந்தப் பிரம்மாண்டமான அறையின் நடுவே போடப்பட்டிருந்த பெரிய மேசையின் முன் அமர்ந்திருந்தார் அமைச்சர் சுந்தரமூர்த்தி. ஏசியின் காற்று அந்த அறை முழுதும் குளிரை நிரப்பியிருந்தது. அவரின் எதிரே அமைதியாக அமர்ந்திருந்தார் இராஜேந்திரன்.
இருவரின் முகமும் தீவிரமான யோசனையிலிருந்தது.
“ஒரு சாதாரணப் போலீஸ் ஆபீஸர், நமக்கு இவ்வளவு தலைவலி தருவான்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை!” எனச் சலிப்புடன் சொன்னார் சுந்தரமூர்த்தி.
சுந்தரமூர்த்தியின் கூற்றில் இராஜேந்திரன் சத்தமில்லாமல் சிரித்தார்.
“அவன் சாதாரண ஆபீசர் மட்டும் இல்லை. அவன் நேர்மையானவன்.இப்போவும் என் மவளையும், அந்தப் பிரதீப்பையும் அவன்தேன் எங்கிட்டோ பதுக்கி வச்சிருக்கான். அது தெரிஞ்சும் ஒண்ணும் செய்ய முடியாமதேன் நிற்கிறேன். ஊரு உலகமே அலசிட்டேன். எங்கே வச்சிருக்கான்னு எனக்கே தெரியலை!” என எரிச்சலுடன் பேசினார் இராஜேந்திரன்.
“அதுதான் பிரச்சனை! அந்த நேர்மை தான் பிரச்சனை!” எனச் சுந்தரமூர்த்தி மேசையை மெதுவாகத் தட்டினார்.
“நம்ம விஷயம் எல்லாம் அவன் கைக்குப் போயிட்டா, நம்ம அரசியல் வாழ்க்கையே மொத்தமா முடிஞ்சுரும்.” என்ற இராஜேந்திரன் சற்றே முன் நழுவி அமர்ந்து இரகசியம் பேசினார்.
“ஒரு மனிதனை வீழ்த்தணும்னா அவன் பலத்தைக் குறிவைக்கக் கூடாது. சுளுவா ஜெய்ச்சுப்புட்டு போயிருவான்!”
“நீ என்ன சொல்ல வர்ர ராஜேந்திரா?”அமைச்சரின் பார்வை கூர்மையானது. இராஜேந்திரன் அர்த்தமாய்ச் சிரித்தார்.
“அவனோட பலவீனத்தை மட்டுந்தேன் குறி வைக்கணும். அப்போதேன் படக்குன்னு கீழே விழுவான். அவன் கீழே விழுந்து சுதாரிக்கும் முன்னே அவனை அடிச்சு படுக்க வச்சுட்டோம்ன்னா வெற்றி நம்ம பக்கந்தேன்.!”
“அவனோட பலவீனம் எதுன்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது? ஒவ்வொருத்தனுக்கும் அவனோட குடும்பம் தான் பலவீனமா இருக்கும். என்னையே எடுத்துக்கோ, எனக்கும் அதிவீரனுக்கும் என்ன ஜென்ம பகையா என்ன? என் மகனை சுட்டுத்தள்ளும் வரை அவன் யாருன்னு கூட எனக்குத் தெரியாதே! அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டான் என் மகன்?”
“உங்க மயனா இருந்தாலும், உங்க பொண்டாட்டிக்கு பொறந்தவன் இல்லையே?ஹா! ஹா! அவன் எந்தத் தப்பும் பண்ணலைன்னு நீங்க மட்டுந்தேன் சொல்றீங்க! கூடப் படிக்கிற பொண்ணையே போதை மருந்தைக் கொடுத்து ஒண்ணுமில்லாம பண்ணிருக்கான். கடைசியில் அந்தப்புள்ள செத்தே போச்சு.!” மேடை இரகசியம் போல் சொல்லி சிரித்தார் இராஜேந்திரன்.
“வாயை மூடுய்யா! என் பொண்டாட்டிக்கு பொறக்கலைன்னா என்ன? அவன் எனக்குப் பொறந்தவன் தானே? அவனை வச்சு தான் அரசியலில் பெரிய திட்டமே போட்டுருந்தேன். எனக்குப் பிறந்தவன்னு சொல்லாமலே, அவனைக் கட்சிக்குள்ளே கொண்டு வந்துரணும்ன்னு நெனைச்சேன். என்னோட திட்டத்தையெல்லாம் மண்ணோட மண்ணா ஆக்கிப்புட்டான் அந்த அதிவீரன்.!”
“என் புள்ளைக்குக் கொள்ளி வைக்கக் கூட, இரகசியமாகப் போக வச்சிட்டான். தேர்தல் நேரம் மட்டும் இல்லைன்னு வையி, இந்நேரம் அவனைப் புதைச்ச இடத்தில் புல்லு மொளைச்சிருக்கும்! என் மகனுக்குத் தான் ஆயுள் தண்டனை கிடைச்சுச்சே, அப்பறமும் தண்டனை கொடுக்க இவன் என்ன கடவுளா.? ,தப்பிச்சு ஓட முயற்சி செஞ்சதால் சுட்டோம்ன்னு மொத்தமா முடிச்சு விட்டானுங்க! வாழ வேண்டிய என் மகனை உசுரோட துக்கி கொடுத்துருக்கேன்! இந்த அதிவீரனை நான் சும்மாவே விட மாட்டேன்.”
எனச் சொல்லி முடித்த அமைச்சர் சுந்தரமூர்த்தி, மேசையின் மேல் இருந்த கண்ணாடிக் குவளையை இறுக்கமாகப் பிடித்தார். அவரின் கண்களில் எரிந்த கோபம் அந்தக் குளிர்ந்த அறையையே அனலாக மாற்றியது. உள்ளே கொதித்துக் கொண்டிருந்த கோபத்தைத் தணிக்கும் வழி தெரியாது, தண்ணீரை வாய்க்குள் சரித்துக் கொண்டார்.
இராஜேந்திரன் சற்றும் பதற்றமில்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அதிவீரன் ஒரு போலீஸ் ஆபீசர் மட்டும் இல்ல சுந்தரமூர்த்தி! அவன் ஒரு பைத்தியக்காரன். எப்போ என்ன செய்வான்னு கணிக்கவே முடியாது. அவன்கிட்டே நாம கொஞ்சம் கவனமாகத்தேன் இருக்கணும்!” என மெதுவாக ஆரம்பித்தார்.
“ஏன் அப்படிச் சொல்ற?”
“நீ சொன்னேன்னுதேன் நான் பவித்ராவையும், பிரதீப்பையும் கண்டுபிடிக்கணும்ன்னு அவனைக் கூப்பிட்டேன். என் கடையில் நகையைக் காணோம்ன்னு சொல்லி, சரியா கண்டுபிடிக்கிறானா இல்லையான்னு சோதனை எல்லாம் பண்ணிட்டு, அதுக்குப் பிறகுதேன் பவி விஷயத்தை அவன்கிட்டே சொன்னேன். கட்டக் கடைசியில் என்ன நடந்துச்சுன்னு உனக்குதேன் தெரியுமே! அப்படியே கண்டுக்காமல் இருந்திருந்தால் கூட, என் பொண்டாட்டி வழியா என் பொண்ணைப் பிடிச்சுருப்பேன். இப்போ எங்கே இருக்காய்ங்கன்னு எனக்கே தெரியலை ச்சை!” எரிச்சலுடன் சொன்னார் இராஜேந்திரன்.
“யோவ்! நீ என்னத்திலாவது அவனைச் சிக்க வைப்பேன்னுதான் உன்கிட்டே அவனை அனுப்புனேன். நீ என்னடான்னா அவனை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?”அமைச்சர் பற்களை நறநறத்தார்.
“அதைத்தான் நானும் சொல்றேன். அவனை முதலில் நிறுத்தணும். இங்கே உட்கார்ந்து இப்படிப் பேசிட்டு இருக்கிறதுக்குப் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளிடலாம். பணம் மட்டும் கொடுத்தால் போதும். தடயமே இல்லாமல் செஞ்சு முடிச்சுருவானுங்க!” என இராஜேந்திரன் சொல்ல அமைச்சர் மறுப்பாய் தலையசைத்தார்.
“இந்த விளக்கெண்ணை எல்லாம் எனக்கும் தெரியும்! எதுக்கு அமைதியா இருக்கேன்.? இப்போ தேர்தல் நேரம். அவன் செத்து தொலைச்சால், விசாரணை வரும். எதாவதொரு சின்ன விஷயத்தில் மாட்டினாலும் போதும்! ஏற்கனவே எதிர்கட்சிகாரன் எப்போ சிக்குவோம்ன்னு காத்துக்கிட்டு இருக்கான். நம்ம பேரு மட்டும் வெளியில் வந்துச்சுன்னா அவ்வளவுதான். நாம எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவனுகளே முடிச்சு விட்ருவானுங்க!” எனச் சுந்தரமூர்த்திச் சொல்ல,
“ஒரு மனுஷனை அழிக்கணும்னா, அவனோட உடம்பைத் தாக்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் மனசை உடைச்சுட்டா போதும். அவனை மனசால் பலவீனப் படுத்தணும்.!” எனப் பதில் சொன்னார் இராஜேந்திரன்.
“அவன் மனசை உடைக்கணும்ன்னா அதுக்கான துருப்புச்சீட்டு நமக்கு வேணும். அவனைப் பார்த்தால் ஃபேமிலி செண்டிமெண்ட் இருக்கிற மாதிரி தெரியலை. நாம நிறுத்தி வச்சிருக்கிற அவனோட ப்ரமோஷனை உன் மூலமா நிறைவேத்த ட்ரை பண்ணிருக்கான். நீ மட்டும் சொன்னபடி அவனுக்கான ப்ரோமோஷனை வாங்கிக் கொடுக்கலை, உன் பொண்ணையும் அந்தப் பிரதீப்பையும் மீடியா முன்னாடி நிறுத்த கூட அவன் தயங்க மாட்டான்.!” எனச் சொன்னார் சுந்தரமூர்த்தி.
“நம்மக்கிட்டே ஒரு துருப்புச் சீட்டு இருக்கு!” எனக் கண்சிமிட்டினார் இராஜேந்திரன்.
“அது யாருடா எனக்குத் தெரியாமல்?”
“கதிரவன்!”
“அந்தக் குடிகாரப் பயலை வச்சு நீ என்ன சாதிக்கப் போற? அதுவும் அவனைக் கெஸ்ட் ஹவுஸ் வரை கூட்டிட்டு வந்திருக்க! இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோ!” எச்சரித்தார் அமைச்சர்.
“நான் விளக்கமா சொன்னால்தேன் உங்களுக்குப் புரியும். இந்தக் கதிரு பய இருக்கான்ல்ல, இவனுக்கு ஒரு அக்கா பொண்ணு இருக்கா. அவளைத்தான் கட்டணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தான். அவிங்களுக்குள்ளே என்ன பஞ்சாயத்தோ தெரியலை, அந்தப் பொண்ணை அதிவீரனுக்குப் பேசி முடிச்சுப்புட்டாக!” என இராஜேந்திரன் சொல்லிக் கொண்டிருக்க,
“இரு! இரு! நீ என்ன சொல்ல வர்ரன்னு புரியுது. இந்தக் கதிருக்கு அந்தப் பொண்ணு வேணும்.! இந்த அதிவீரனோட பலவீனமும் அந்தப் பொண்ணு தானே?!” எனச் சரியாய் கணித்துக் கேட்டார் சுந்தரமூர்த்தி.
“அதே தான்! அவளைக் கடத்தி வச்சு, அதிவீரனை லாக் பண்ணிடனும்! அந்தப் பொண்ணைக் கடத்தினதா கதிரவனை மாட்டி விட்டுட்டு நாம எஸ்கேப் ஆகிடலாம். அந்தப் பொண்ணை வச்சு மட்டுந்தான் நாம நினைக்கிறதை சாதிக்க முடியும்!” எனை உறுதியாய் சொன்னார் இராஜேந்திரன்.
“நல்ல ப்ளான் மாதிரி தோணுது!”அமைச்சர் சுந்தரமூர்த்தி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். கண்கள் சுருங்கின.
அந்தப் பொண்ணைக் கடத்துறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை! ஆனா அதிவீரன் லேசுபட்டவன் இல்லை! நாய் மோப்பம் பிடிச்சா மாதிரி தேடிப் பிடிச்சுடுவான். அப்படியொரு சூழ்நிலை வந்தால், என்ன பண்ணப் போற?” எனச் சின்னக் குரலில் கேட்டார்.
இராஜேந்திரன் சற்றே முன் குனிந்து அமர்ந்தார்.அவரின் உதடுகள் தந்திரமான சிரிப்பில் விரிந்தது.
“அதுதேன் இந்தக் கதிரவன் இருக்கானே? நமக்கு வேலையும் செஞ்சுட்டு பழியையும் வாங்கிக் கட்டிக்கப் போறான்!” எனச் சொன்னார்.
“அவனே குடிச்சுப்புட்டு நிதானமில்லாமல் கிடக்குறான். சரியா பண்ணிருவானாய்யா?” என அலட்சியமாகக் கேட்டார் அமைச்சர்.
“அதுதேன் நமக்கு வேணும்! அவன் மட்டும் தெளிஞ்சான், பாசம் பஞ்சாமிர்தம்ன்னு ஓடிருவான். அந்தப் பொண்ணுக்கும் அதிவீரனுக்கும் கல்யாணம் ஆகப்போறது தெரிஞ்சதிலிருந்தே அவன் கிறுக்குப் புடிச்சுதேன் திரியறான்.! அந்தக் கோபத்தைத் தான் நாம பயன்படுத்திக்கணும்!”அமைச்சர் சுந்தரமூர்த்தியின் கண்கள் மெதுவாக ஒளிர்ந்தது.
“அவனைத் தூண்டி அந்தப் பொண்ணைக் கடத்த வைக்கணும்ன்னு சொல்லுற அப்படித்தானே?”
“அதே தான்!”
“கதிர் கடத்துவான், அவனே மாட்டுவான் ஆனால் அந்த அதிவீரன் உடைஞ்சு போவான். எனக்கு அதுதேன் வேணும்!” என இராஜேந்திரன் சொல்ல, சுந்தரமூர்த்தியின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
“அந்தப் பொண்ணு யாரு என்னன்னு தெரியும்ல்ல? ஏடாகூடமா எதையாவது செஞ்சு என் பேரை இழுத்து விட்றாதீங்க”‘என மெதுவாகக் கேட்டார் அமைச்சர்.
இராஜேந்திரன் தனது அலைபேசியை எடுத்தார். திரையில் புகைப்படம் விரிந்தது. அதை அமைச்சர் முன் வைத்தார். அதில் அழகுநிலா அழகாய் சிரித்துக்கொண்டிருந்தாள்..
“இந்தப் பொண்ணு தான்!”என்றார்.
“பொண்ணு அழகாகத்தான் இருக்கு! இவனுங்க அடிச்சுக்கிறதில் தப்பே இல்லை!” எனப் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தபடி சொன்னார்.
“அந்தக் கதிரவன் கீழதேன் இருக்கான் வரச் சொல்லட்டுமா?!” அனுமதி வேண்டினார் இராஜேந்திரன்.
“ம்ம்! வரச் சொல்லு!”
“வா கதிரு! உள்ளே வா!” என்ற அழைப்பின் பின் தள்ளாட்டாமும் தடுமாற்றமுமாய் உள்ளே வந்தான் கதிரவன். அதீத போதையில் பாதிக் கண்கள் மூடியிருந்தது.
“சார் கிட்டே உன்னைப் பத்தி சொல்லியிருக்கேன். நமக்கு உதவி செய்றேன்னு சொல்லிருக்காரு!”
“என்னைக் கூப்பிட்டு வச்சு இம்புட்டும் செய்றீகளே, உங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்ற கதிரவனின் கேள்வியில் அதிர்ந்துவிட்டனர். இவன் நிஜமாகவே போதையில் இருக்கிறானா? என்கிற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது.
“நாம எப்படிப் பழகியிருக்கோம் கதிரு? உன்கிட்டே என்னத்தையாவது எதிர் பார்த்தா நாங்க செய்யப் போறோம்?” சமாளித்தார் இராஜேந்திரன்.
“நான் என்ன செய்யணும்?”
“நீ ஒண்ணும் செய்ய வேணாம்! உன் அக்கா மகளை என்னமாவது சொல்லி இங்கணக் கூட்டியாந்துரு! ரெண்டு நாள் நம்ம பாதுகாப்பில் இருக்கட்டும். பொண்ணு ஓடிப் போயிருச்சுன்னு நிச்சயதார்த்தம் நின்னு போயிரும். அப்பறம் பொறுமையாய் உங்க கல்யாணத்தை நடத்திப்புட்டா, அந்த அதிவீரனால் என்ன செய்ய முடியும்?” எனை இராஜேந்திரன் சொல்ல,
“நெசமாவே எனக்கும் அழகிக்கும் கல்யாணம் நடக்குமா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தவன், அதீத மதுவின் உபயத்தால், அந்த அறையிலேயே வாந்தி எடுத்திருந்தான். அமைச்சர் அவனைப் பார்த்து அருவருப்பாய் முகத்தைச் சுளித்தார்.
“இந்தப் பரதேசி, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வருவான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை! நீயும் உன் திட்டமும்! முதல் அடியே சறுக்குது. முதலில் இவனை வெளியே தூக்கி போட்டுட்டு இந்த இடத்தை க்ளீன் பண்ணச் சொல்லு!” எனச் சொல்லிவிட்டு கோபமாய் வெளியேறியிருந்தார் சுந்தரமூர்த்தி.
****
அமைச்சர் வெளியேறியதும் அந்த அறையில் சில நொடிகள் அமைதி நிலவியது. அமைச்சரின் கோபம், இராஜேந்திரனைக் கொஞ்சம் தடுமாற வைத்தது. ஆனாலும் திட்டத்திலிருந்து பின்வாங்க அவர் விரும்பவில்லை.
கதிரவன் இன்னும் தடுமாறியபடி நாற்காலியில் சாய்ந்து கிடந்தான். கண்கள் பாதி மூடியிருந்தாலும், உதடுகள் மட்டும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
“அழகி! அழகி!”அதை கேட்ட இராஜேந்திரன் சத்தமாய்ச் சிரித்தார்.
“இவன் அந்தப் பொண்ணை நினைச்சுட்டு இருக்கிறவரை, நாம சொல்றதைக் கேட்பான். இவனை வச்சு தான் பெரிய திட்டமே இருக்கு! எல்லாம் சரியா நடக்கணும்!” எனத் தன்னிடமே மெதுவாகச் சொன்னவர், வெளியே நின்றிருந்த ஆள்களை அழைத்தார்.
“ஏய்! இவனை வெளியே தூக்கிட்டு போங்க. கீழே இருக்கும் ரூம்ல போட்டுட்டு பூட்டி வைங்க! கவனம்!” என்றார்.
பணியாட்கள் கதிரவனை இழுத்துக் கொண்டு வெளியேறினர்.அறை சுத்தம் செய்யப்பட்ட பிறகு, இராஜேந்திரன் மெதுவாக ஜன்னலருகே சென்று நின்றார். வெளியில் அடர்த்தியான இருள் விரவி கிடந்தது.
அவர் கையில் இருந்த அலைபேசியை எடுத்தார். அந்த எண்ணுக்கு அழைத்தார்.
“ஹலோ!” அவரின் குரல் கேட்டதும், அந்தப் பக்கம் இருந்த குரல் மரியாதையாய்ப் பதிலளித்தது.
“சொல்லுங்க சார் !”
“நாளைக்குக் காலையில் இருந்து அந்தப் பொண்ணு எங்கே போறா? யாரோடு போறள்? எல்லாத்தையும் கவனமாகக் கண்காணிக்கணும்!.”
“செஞ்சுடலாம் சார்!”
“ஒரு விஷயம் மட்டும் மறந்துடாதீங்க! அந்தப் பொண்ணு கண்ணில் நம்ம ஆள்கள் ஒருத்தர் கூடப் படக் கூடாது. அவங்களுக்குச் சந்தேகமே வரக் கூடாது!”
“புரிஞ்சுது சார்!”அழைப்புத் துண்டிக்கப் பட்டது. இராஜேந்திரன் யோசனையோடு வெளியே வெறித்துக் கொண்டிருந்தார்.
“அதிவீரன்! நீ பெரிய புத்திசாலின்னு நினைச்சுட்டு இருக்க. ஆனா இந்தத் தடவை உன்னால ஜெய்க்க முடியாது.”
அவர் மீண்டும் அலைபேசியைப் பார்த்தார். அதில் இன்னும் திறந்தபடி இருந்தது அந்தப் புகைப்படம். அழகுநிலா சிரித்துக் கொண்டிருந்தாள்.அந்தச் சிரிப்பைப் பார்த்தபடி அவர் மெதுவாகச் சொன்னார்.
“உன்னை வச்சுதான் அந்த அதிவீரனை சில்லு சில்லா நொறுக்கப் போறேன்.”
அதே நேரம்!
அதிவீரன் தனது ஜீப்பில் இரவு நேர ரோந்துப் பணியில் இருந்தான். ஏழுமலை வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அவனது பார்வையில் கூடுதல் கவனமிருந்தது.
தன் அலைபேசியைத் திறந்து, யாருக்கோ அழைப்பெடுத்தான்.
“சொல்லுங்க சார்!”
“எங்கே இருக்கீங்க?”
“நீங்க சொன்ன அதே ஸ்பாட் தான் சார்!”
“எதாவது பிரச்சனை?” கேள்வியாய் நிறுத்தினான்.
“இல்ல சார்! அமைச்சர் வெளியே போய்ட்டார். இராஜேந்திரன் வெளியே வரலை சார்.! பங்களாவைச் சுத்தி பாதுகாப்புக்கு ஆள் இருக்காங்க சார்!” அதிவீரனின் கண்கள் சற்றே சுருங்கின.அதிவீரன் ஒரு நொடி நிதானமாக யோசித்தான்.
“அங்கே எத்தனை பேர் இருக்கீங்க.?”
“ஜெபராஜையும் சேர்த்து அஞ்சு பேர் இருக்கோம் சார்!”
“ஒரே ஸ்பாட்டில் நிற்காமல், வேற வேற இடத்தில் நில்லுங்க! இன்னைக்கு நைட் யாரும் தூங்கக் கூடாது. கவனமா இருங்க.! எதுவா இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், எனக்கு அப்டேட் பண்ணுங்க!’
“எஸ் சார்!” அலைபேசியை அணைத்து பைக்குள் போட்டான்.
“உன் நிழலைக் கூட யாரையும் தீண்ட விட மாட்டேன் நிலா!” மானசீகமாக அவளோடு மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் அதிவீரன். அந்த அழுத்தமான இருளைக் கிழித்தபடி, மஞ்சள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியபடி அந்த ஜீப் சென்று கொண்டிருந்தது. அவனின் ரோந்துப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.
“நீங்க என்ன செய்றீங்கன்னு புரியலை சார்! ஆனால் உங்க மேலே நம்பிக்கை இருக்கு சார்!” ஏழுமலை சொல்ல, மென்மையான புன்னகையைப் பதிலாய்த் தந்தான் அதிவீரன்.
“மேடமிற்கு எதுவும் ஆகாதுல்ல சார்? உங்க ஜோடிப் பொருத்தம் சூப்பர் சார்! அம்புட்டு அழகு ரெண்டு பேரும்!” என ஏழுமலை கேட்க,
“உங்க மேடமிற்கு ஒண்ணும் ஆகாது! ஆக விடமாட்டேன்.!” என்றவனின் குரலில் அதைச் செய்து காட்டும் உறுதியும் தீர்க்கமும் தெரிந்தது.
அவனுக்குத் தெரிந்தே, ஒரு ஆபத்தான வலை மெதுவாக அவனைச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த வலையின் மையம், அழகுநிலா.
அதேநேரம், அந்த வீட்டில் இரவு அமைதியாகக் கசிந்துக் கொண்டிருந்தது.அறையின் ஜன்னல் வழியாக வந்த நிலவொளி தரையில் மெலிதாய் பரவியிருந்தது.அந்த ஒளியில் படுக்கையில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
அவளின் முகத்தில் குழந்தை போன்ற அமைதி. அவளுக்கு எதிராக அரங்கேறக் காத்திருக்கும் எதையுமே அறியாது ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அழகுநிலா.
அவள் அருகில் இருந்த மேசையின் மேல் அவளது அலைபேசி மெதுவாக ஒளிர்ந்தது. திரையில் குறுஞ்செய்தி வந்ததற்கான குறியீடு மின்னியது.
“கடைசியாய் உன்னை ஒருமுறை பார்க்கணும்! உன் தாய் மாமனா கேட்கிறேன். உன்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டேன்னா என் ஆயுசு நிம்மதியா முடிஞ்சுரும். எனக்காக வருவியா அழகி? உன் பேரைச் சொல்ல கூட, எனக்குத் தகுதி இல்லை! நான் உனக்காகக் காத்திருப்பேன். நான் சாகும் முன்னே வந்துரு அழகி!” என்ற குறுஞ்செய்தி அவள் அலைபேசிக்குள் அனாமத்தாய்க் கிடந்தது.
கதிரவனைப் பார்த்தபடியே, அவன் அலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அடுத்த நாளின் விடியலுக்காய்க் காத்திருந்தான் இராஜேந்திரன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ராஜேந்திரன் உங்க திட்டம் பலிக்காது…. 😡😡😡😡 அதியும் உங்களை சுத்தி ஸ்கெட்ச் போட்டிருக்கான்….. நல்லா மாட்டுவீங்க…. 😤😤😤
நிலாக்கு எதுன்னா உங்களை சும்மா விட மாட்டான்….
உண்மை தான் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚
இராஜேந்திரன் சுந்தரமூர்த்தி கதிர் 😡😡😡
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா 💚