
நேசம்-14
அலைபேசியின் திரையில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்த அந்தப் புதிய எண்ணைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அழகுநிலா.
“என்னடி! உத்து பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிற? எடுத்துப் பேசேன் டி!” எனச் சொன்னாள் கீர்த்தனா.
“புது நம்பரா இருக்கு டி!” எனச் சொன்னாள் அவள். அதற்குள் முதல் அழைப்பு, தானாக நின்று மீண்டும் மறு அழைப்பு வந்தது.
“திரும்பக் கூப்பிடுறாங்கன்னா தெரிஞ்சவங்களாதேன் இருக்கும் எடுத்து பேசு!” எனக் கீர்த்தனா சொல்லவும், அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“ஹலோ!”
“நிலா!” சில்லென்ற பனிக்கட்டியாய் அவளின் செவிக்குள் நுழைந்தது அவன் குரல். ஒற்றை விளிப்பிலேயே அவளுக்கு யார் அழைப்பதெனத் தெரிந்துவிட்டது. ஆனாலும் அவனிடம் சிறிது நேரம் விளையாட முடிவுசெய்தாள் பாவை.
“யாருங்க நீங்க? உங்க இஷ்டத்துக்கு ஃபோன் பண்ணிட்டு, நிலான்னு கூப்பிடுறீங்க? பேர் சொல்லி கூப்பிட நான் என்ன உங்க பொண்டாட்டியா?” என அவள் கேட்க, அந்தப்பக்கம் அட்டகாசமாய்ச் சிரித்தான் அதிவீரன்.
“பொண்டாட்டி ஆகப் போறவங்கன்னு சொல்லலாம்!” என அவள் துவங்கிய விளையாட்டை ஒற்றைப் பதிலில் முடித்து வைத்திருந்தான் அவன். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“நம்பர் எப்படிக் கண்டு பிடிச்சீங்க.?”
“உங்க வீட்லதான் வாங்கினேன்.!” அமர்த்தலாய் வந்தது அவனின் பதில்.
“எங்க வீட்டிலேயே? அம்மா வையப் போறாங்க!”
“அதெல்லாம் உன்னை ஒருவார்த்தை சொல்ல மாட்டாங்க! சொல்லவும் விட மாட்டேன்.!” அழுத்தமாய்ச் சொன்னான் அவன். அவள் பதில் பேசவில்லை. அவளுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. கண்டிப்பாகத் தன் வீட்டில் எதாவது சொல்லியிருப்பான் என்பது அவளுக்குத் தெரியும்.
“நிலா!” அவனே நிசப்தத்தைக் கலைத்தான்.
“ம்ம்!” அவளோ ஒற்றை எழுத்தில் பதில் சொன்னாள்.
“இன்னைக்கு அழகா இருந்த நிலா! அதுவும் அந்த லேவண்டர் கலர் புடவை உனக்கு ரொம்ப அழகா இருந்துச்சு.! பூக்குவியலை சுத்தின மாதிரி இருந்துச்சு!”
“பேசாமல் கவிதை எழுதலாம் நீங்க!”
“அன்னைக்கு என்னடான்னா வசனம் எழுத சொன்ன? இன்னைக்குக் கவிதை எழுதுன்னு சொல்ற, டீச்சரம்மான்னு காட்டிட்டே இருக்கீங்க மேடம்!”
“நீங்களுந்தேன் அப்படி இருக்கீங்க!” வேகமாய்ப் பதில் சொன்னாள் அழகுநிலா.
“நான் என்ன அப்படி இருக்கேன்?” அவன் குரலில் புன்னகை தெரிந்தது.
“ஆமா! ஒண்ணு காக்கி சட்டை, இல்லைன்னா வெள்ளை சட்டை, இதைத் தவிர வேற கலரே உங்க கிட்டே இல்லையா? மாசச் சம்பளத்தில் என்ன செய்வீங்க? வெறும் வெள்ளை சட்டையா எடுத்து வச்சிப்பீங்களா? எனக்கெல்லாம் தனி வெள்ளை பிடிக்கவே பிடிக்காது. உடனே அழுக்காகிரும், துவைக்கக் கஷ்டமா இருக்கும்!” என அவள் தன்போக்கில் சொல்லிக் கொண்டே போக,
“அடியேய்! ரொமாண்ட்டிக்கா எதாவது பேசுவேன்னு பார்த்தால், துணி துவைக்கிற கதையைப் பேசிக்கிட்டுருக்க.? வெளங்கிரும் டி! அண்ணா நீங்க ரொம்பப் பாவம்!” என அலைபேசியின் அருகே வந்து கத்தியிருந்தாள் கீர்த்தனா.
“லன்ச்க்கு பெல் அடிச்சுட்டாங்க டி! பேசிக்கிட்டே சாப்பிட மறந்துடாதே!” என ஞாபகப்படுத்திவிட்டு நகர்ந்திருந்தள் கீர்த்தனா.
“இப்படியொரு மக்கு டீச்சர்தான் எனக்குன்னு எழுதியிருக்கு போல!” என அவன் கிண்டலாய் சொல்ல,
“மக்கு டீச்சரா நானு? பேசாதீங்க போங்க!”
“கோவப்படாதீங்க டீச்சரம்மா! டீச்சரம்மாவுக்குத் தெரியாத பாடத்தை நான் சொல்லிக் கொடுத்துட்டு போறேன்.!” என்ற அவனின் கிசுகிசுப்பான குரல், அவளுக்குள் ஏதேதோ மாயங்கள் செய்தது.
“மறுபடியும் சைலண்ட் மோட்! உன்னை ஆக்டிவ் மோடுக்குக் கொண்டு வரவே நிறையப் பாடம் எடுக்கணும் போல! அதிவீரா.. உன் பாடு திண்டாட்டம் தான்டா!” எனத் தனக்குத்தானே அதிவீரன் சொல்ல, கிளுக்கி சிரித்தாள் அழகுநிலா.
“என் பாடு உனக்குக் கொண்டாட்டமா இருக்கா? எப்படியும் என்கிட்டே தானே வரணும்! வச்சிக்கிறேன்.!” அவன் ‘வச்சுக்கிறேன்’ என்ற வார்த்தையில் தந்த அழுத்தம் அவளுக்குள் மின்சாரம் பாய்ச்சியது.
கண்களுக்குள் கற்பனைகளும் கனவுகளும் விரிய,
“போதும்!” எனத் தனக்கே கேட்காத குரலில் சொன்னாள் அவள்.
“நிலா..! என்ன சொன்ன?” அவன் கரகரப்பான குரலில் கேட்க,
“போதும்ன்னு சொன்னேன்.என்னைச் சங்கடப் படுத்துறீங்க நீங்க!”காற்றாகிப் போன குரலில் சொன்னாள் அவள்.
“இதுக்கே சங்கடப் பட்டால் எப்படி? இன்னுமே நிறைய இருக்கே!” வேண்டுமென்றே அவளைச் சீண்டினான் அவன். அவன் கரம் மேலுயர்ந்து மீசையை முறுக்கியது.
“நீங்க சொல்லிக் கொடுக்கிறதெல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு கத்துக்கலாம்! இப்போ கொஞ்சம் அமைதியாய் இருங்க!” என அவள் சொன்னாள். அவனுடைய அதிகப்படியான பேச்சுகள், பதில் சொல்ல முடியாத அளவிற்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
“நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலை! ஃபோனில் பேசுறதுக்கே இப்படின்னா. நேரில்?” கேள்வியோடு நிறுத்தியவன்,
“இனிமே உன்னை நேரில் பார்க்கும் போது, வெறும் பேச்சோடு நிறுத்த முடியும்ன்னு எனக்குத் தோணலை!” என அவன் சொல்ல, அவளுக்குள் அவஸ்தையான உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன.
“போலீஸ்காரரே! இன்னைக்கு ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல?”
“உன்னைப் பார்த்த அன்னைக்கே நான் முடிவுக்கு வந்துட்டேன் நிலா!” அவனின் வார்த்தைகளின் ஜாலத்தில் தடுமாறி தள்ளாடினாள் பெண்.
“நானே இந்தக் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருமான்னு கலங்கிப் போய் இருக்கேன். நீங்க எப்படி இப்படிச் சாதாரணமா இருக்கீங்க?”
“இந்தக் கல்யாணம் நடக்கும் நிலா! நான் நடத்துவேன்! இந்த ஜென்மதில் எனக்கு நீ மட்டும் தான். மனசைப் போட்டு உழப்பிக்காமல், இரு. எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்.!” செவியோரம் கேட்ட அவனுடைய உறுதியான குரலில், அவளுக்குக் கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தது.
அதே நேரம் அவனின் அலுவலக எண்ணில் அழைப்பு வர,
“கடமை அழைக்குது! நான் அப்பறம் பேசுறேன் நிலா! சாப்பிட்டுட்டு க்ளாஸ்க்கு போ! வீட்டுக்குப் போய்ட்டு எனக்குக் கால் பண்ணணும்!”
“ம்ம்!”
“வீடியோ கால் பண்ணணும்!”
“ம்ஹும்! அதெல்லாம் முடியாது! அம்மா வைவாங்க!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ பண்ற அவ்வளவு தான்.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அவன் அணைத்துவிட, இதழ்விரித்த புன்னகையுடன் அமர்ந்திருந்தாள் அழகுநிலா.
********
“இந்தாருங்க! தேங்காய், புளி, கடலை மிட்டாய், ஊறுகாய், வரமிளகாய் இதையெல்லாம் எழுதிட்டேன். வேற என்ன எழுதணும்?” கணவனிடம் கேட்டபடி நாற்காலியில் கடைக்குள் அமர்ந்திருந்தார் செல்வி.
“ஷாம்பூ ஐட்டம் பாரு, குளிக்கிற, துணி துவைக்கிற சோப்பு வகையறாவும் என்ன இல்லைன்னு பார்த்து எழுதிரு. அரிசி மண்டியில் சொல்லிருக்கேன். வந்து இறக்கி வச்சிருவான். அவன் கையில் அம்பது ரூவா கொடுத்துரு! அப்பறம் அடுத்தவட்டம் அரிசி இறக்கமாட்டேன்னு பகுமானம் பண்ணுவியான்.!” எனச் சொல்லிக் கொண்டிருந்தார் புவியரசன்.
“உன் தொம்பியை வரச் சொல்ல சொன்னேனே? சொன்னியா?”
“ஃபோன் போட்டு போட்டுப் பார்த்துட்டேன். அவன் எங்க எடுத்துத் தொலையுறான். என்ன ஏழரையைக் கூட்டுவானோன்னு பயமா இருக்கு. வீம்பு பிடிச்சுக்கிட்டு திரியறான்.!”
“அவன் வீம்பெல்லாம் செல்லுபடியாகாதுன்னு அவன்கிட்டே பொட்டுல அடிச்சா போலச் சொல்லிப்புடு! அழகி கல்யாணத்தில் எதாவது சம்பவம் பண்ணணும்ன்னு நினைச்சான், நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிப்புட்டேன். இதுக்குதேன் செல்வி, நாம பேசுற வார்த்தையில் கவனம் இருக்கணும்ன்னு சொல்றது. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்ன்னு சும்மாவா சொல்றாங்க? நீ கதிருக்கு பேசி வச்சதால் தான் இம்புட்டும். ஊரே எம்மவளைப் பிச்சுதேன் வாயில போடுது. வெளியில் மாப்பிள்ளை பார்த்திட்டீகளாம்ல்ல? அப்படின்னு கேதத்துக்கு விசாரிச்சாப்ல விசாரிக்கிறாய்ங்க! இனிமேட்டுக்காவது எந்த விஷயமா இருந்தாலும் கொஞ்சம் சூதானமா இரு!”
கணவனின் கூற்றுக்கு ஒற்றை வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை செல்வி. அவர் செய்த விஷயம் தானே இப்படியொரு இக்கட்டில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. தன் மகளின் வாழ்க்கை கண்கூடாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார். தன் தம்பி என நம்பி செய்த ஒற்றைச் செயல் தான் இத்தனைக்கும் காரணம் எனும் போது அவரால் நிஜமாகவே பதில் பேச முடியவில்லை.
“சரின்னு ஒத்தை வார்த்தையைச் சொல்ல கூட உனக்கு வலிக்குதாக்கும்? இன்னுமும் உன் தம்பிக்கு நல்லது செய்றேன்னு, எனக்குத் தெரியாமல் காசு கொடுக்கிறதுன்னு எதுவும் செஞ்சு வைக்காதே! சும்மாவே உருப்படாமல் திரியிறியான். காசு மட்டும் கையில் இருந்தால் அம்புட்டுதேன். மைனரைக் கையில் பிடிக்க முடியாது!” என அவர் சொல்லிக் கொண்டிருக்க, அலைபேசி இசைந்து அவர்களின் பேச்சை இடை நிறுத்தியிருந்தது.
“ஏங்க! மாப்பிள்ளை வீட்டுலேதேன் கூப்பிடுறாக என்ன சொல்லட்டும்? எதாவது கேட்பாகளோ?” பதற்றமாய் அலைபேசியை எடுத்து, அழைப்பை ஏற்காமல் நின்றார் செல்வி.
“எடுத்து பேசினாதேன் என்ன சொல்றாகன்னு தெரியும்! இப்படி நின்னுக்கிட்டே இருந்தால் எப்படித் தெரியும்?” எனப் புவியரசன் சொல்ல,
“நீங்க பேசுங்களேன்!” எனக் கணவனைப் பார்த்தார் செல்வி.
“ஃபோனு அடிச்சுக்கே கிடக்கு! எடுத்துப் பேசாமல், நீ பேசு, நான் பேசுன்னு!” எனப் புலம்பியபடியே, மனைவியின் கரத்திலிருந்த அலைபேசியைப் பறித்து அழைப்பை ஏற்றிருந்தார் புவியரசன்.
“ஹலோ!”
“அண்ணே! நான் மாதவி பேசுறேன்.!”
“சொல்லும்மா! எப்படி இருக்கீக? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“நல்லா இருக்கோம்ண்ணே! பெரியவன் இன்னும் வேலையிலிருந்து வரலை. சின்னவன் இப்போதான் வந்தியான். மருமவளும், கவினும் ஸ்கூலில் இருந்து வந்துட்டாகளாண்ணே?” எனக் கேட்டார் மாதவி.
“இன்னும் வரலைம்மா! வர்ர நேரந்தேன்.!”
“சரிண்ணே! நாளு ஏதும் பார்த்தீகளா? ஃபோன் போடுவீங்கன்னு பார்த்தேன்.!”
“பார்த்தோம்மா! நெருக்கத்தில்தேன் நல்ல நாளா இருக்கு. அப்பறம் வாரதெல்லாம் தேய்பிறை முகூர்த்தமாதேன் வருது. இல்லைன்னா வைகாசிக்குதேன் பார்க்கணும் போல?” எனப் புவியரசன் இடைநிறுத்த,
“அம்புட்டுநாள் விட வேணாம்ன்னே! அதி, கல்யாணத்தைத் தள்ள வேணாம்ன்னு நினைக்கிறான். நெருக்கத்தில் இருந்தாலும் இருக்கட்டும். நாங்க பார்த்த வரைக்கும், மாசி எட்டாந்தேதிக்குதேன் நாளு நல்லா இருக்கு! நீங்க என்ன சொல்றீக?” பதிலுக்காய் அந்தப்பக்கம் காத்திருந்தார் மாதவி.
“எண்ணிப் பார்த்தால், இன்னும் ரெண்டு வாரமும் ரெண்டு நாளுந்தேன் இருக்கு. மண்டபம், சாப்பாடு எல்லாம் பார்க்கணுமேம்மா? அழகிக்கு வேற நகை நட்டு, துணிமணியெல்லாம் கொஞ்சம் பார்த்து வாங்கணும்.!” இவ்வளவு விரைவாக அனைத்தையும் சமாளித்துவிட முடியுமா என்ற தயக்கம் தெரிந்தது அவர் குரலில்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம்ண்ணே! சாப்பாட்டுக்கு, நமக்குத் தெரிஞ்சவிங்க இருக்காய்ங்க! மண்டபம் அதிக்கிட்டே சொல்லித்தேன் பேசணும். நான் அவன்கிட்டே கேட்டுச் சொல்றேண்ணே! நீங்க தைரியமா வேலையை முன்னெடுத்து செய்ங்க! எல்லா ஏற்பாடும் செஞ்சுருவோம்.! அப்பறம் உங்க மகளுக்குச் செய்றது உங்க பிரியம்ண்ணே! இருக்கிறதை செய்ங்க போதும்.! இதுக்கே உங்க மருமயன் என்ன சொல்லுவானோ தெரியலை. நகை பணம்ன்னு ஒண்ணும் வாங்கக் கூடாதுன்னு முன்னவே சொல்லிட்டான்.!” என நீளமாய்ப் பேசி நிறுத்தினார் மாதவி.
“அதுக்கு முன்னே நிச்சயத்துக்குத் தேதி பார்க்கணுமேம்மா.? இல்லை கல்யாணத்துக்கு மொத நாளு பரிசம் போட்டுக்குவோமா?” எனப் புவியரசன் கேட்க,
“அதைச் சொல்லத்தேன் கூப்பிட்டேன்ணே! கல்யாணத் தேதியை மொத சொல்லிருவோம்ன்னு நினைச்சு, பேச்சு எங்கெங்கேயோ போயிருச்சு!” எனச் சொன்னவர்,
“வர்ர ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கிலாம்ன்னு நெனைக்குறோம்ண்ணே! நீங்க மதனிக்கிட்டே பேசிட்டு வேணும்ன்னா சொல்லுங்க!”
“இம்புட்டு சீக்கிரமா?” அதிவீரன் வீட்டினரின் வேகம் கண்டு அதிர்ந்துவிட்டார் புவியரசன்.
“வீட்டோட மட்டும் வச்சுக்கலாம்ண்ணே! நாங்க மருமளுக்கு, சேலை, மோதிரம் எல்லாம் வாங்கிருவோம். நீங்க உங்க மருமகனுக்கு வாங்குங்க! நெருங்கின சொந்தத்தை மட்டும் கூப்பிட்டுக்குவோம். என்னடா, இவள் இம்புட்டு அவசரப்படுறாளேன்னு நினைக்காதீக! கல்யாணமே வேணாம்ன்னு சொன்னவேன் இப்பதேன் சம்மதிச்சிருக்கான். திரும்ப உச்சாணிக் கொம்புல ஏறிருவானோன்னு பாயந்தேன். அதுவுமில்லாமல், இவன் சரித்திரத்திலேயே மூணு மாசம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டான். மாற்றல் எதுவும் திடுதிப்புன்னு வந்துப்புடுச்சுன்னா, என்ன செய்றது? எங்கே போனாலும் மருமவளையும் கூட்டிக்கிட்டு போகட்டும்ன்னுதேன் நினைக்கிறேன்.!” என மாதவி சொன்ன பின்பே மாதவியின் தயக்கம் புரிந்தது.
“புரியுது தங்கச்சி! எதுவா இருந்தாலும் பார்த்துக்குவோம்! நிச்சயத்துக்கே ரெண்டு மூணு நாளுதேன் இருக்கும்மா! எந்தக் குறையும் இல்லாமல் செஞ்சுருவோமா? இனியன் கல்யாணமும் சென்னையில்தேன் நடந்துச்சு. நாங்க எதுவும் பெருசா செய்யலைம்மா. எல்லாத்துக்குமே அவன் ஏஜென்ஸியில் சொல்லிட்டான். எங்க வீட்டுக் கல்யாணத்துக்கே நாங்க மூணாவது மனுஷனாத்தேன் போய் நின்னோம்! எல்லாம் சரியா செஞ்சுருவோமான்னு யோசனையாக் கிடக்கு!” எனப் புவியரசன் சொல்ல,
“அதெல்லாம் செஞ்சுபுடலாம்ண்ணே! நான் வீட்டில் பேசிட்டு, எத்தனை பேரு வருவாக என்ன ஏதுன்னு விவரம் சொல்றேன். அதுக்கு ஏத்தாமாதிரி சாப்பாட்டுக்குச் சொல்லிக்கலாம். நடுவில் ஒருநாளு நாங்க கை நனைக்க வந்துர்ரோம்ண்ணே! நான் பேசிட்டு பொழுதுக்கு மேல பேசுறேண்ணே! மதனியைக் கேட்டேன்னு சொல்லுங்க!” எனச் சொல்லிவிட்டு இணைப்பை நிறுத்தியிருந்தார் மாதவி.
அலைபேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்த புவியரசனுக்குத் தலையே சுற்றியது. கண்முன் மலையென நிற்கும் கல்யாண வேலைகளை நினைத்தாலே மலைப்பாக இருந்தது.
“என்னங்க சொன்னாங்க? ஒருமாதிரி யோசனையாவே இருக்கீகளே.?”பதற்றமாய்க் கேட்டார் செல்வி.
“வர்ர ஞாயிற்றுக் கிழழை நிச்சயம் பண்ணிக்கலாம்ன்னு சொல்றாங்க! மாசி எட்டாம் தேதி கல்யாணத்தை வச்சுக்கலாம் சொர்றாங்க! நாமளும் அந்தத் தேதியைத் தானே பார்த்தோம். ஆனா நெருக்கத்தில் இருக்கிறதால், வேற தேதி சொல்லுவாங்கன்னு நினைச்சோம்!” யோசனையாய் தாடையைத் தடவினார்.
“என்னங்க.. என்ன யோசிக்கிறீங்க?”
“காசுதேன், கொஞ்சம் கையில் இருந்தா நல்லா இருக்கும்ன்னு பார்க்கிறேன். டெப்பாஸிட் செஞ்சு வச்சிருக்கிறதை இப்போ எடுக்க முடியாதே?”
“இப்போதைக்கு என் நகையைக் கொஞ்சம் அடகு வச்சிக்கலாம்ங்க! நேரங்கண்டு பொறுமையா திருப்பிக்குவோம்!” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கவினுடன் பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்திருந்தாள் அழகுநிலா.
“ம்மா! திங்கிறதுக்கு என்ன செஞ்சு வச்சிருக்கிற? எனக்குப் பசிக்குது! நான் நேத்தே நூடுல்ஸ் கேட்டேன்! நீ தான் செஞ்சு கொடுக்கல!” என அன்னையை வந்து கட்டிக் கொண்டான் கவின்.
“இரு கவினு! வந்ததும் வராததுமா பறக்காத! என்னமாவது செஞ்சு தாரேன். மொதோ போய்த் துணியை மாத்து.!” மகனை உள்ளே அனுப்பினார்.
“அழகிம்மா! தேதி குறிச்சாச்சு டா! மாசி 8, இங்லீஷுக்கு சொல்லணும்ன்னா ஃபிப்ரவரி 20 ஆம் தேதி கல்யாணம் முடிவு செஞ்சுருக்கு டா! சந்தோஷம் தானே.?!” என மகளின் முகத்தைப் பார்த்தார் புவியரசன்.
அழகுநிலாவின் முகம், மலர்ந்து சிவந்து விகசித்தது. அவளின் மலர்ந்த முகமும், இதழ் விரிந்த சிரிப்புமே, அவள் மனதை பறைசாற்ற போதுமானதாக இருந்தது.
“ப்பா!” ஓடிவந்து தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் பெண்.
“வர்ர ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க! பள்ளிக்கூடத்தில், லீவ் எழுதிக் கொடுக்கணும்ன்னா முன்னாடியே செஞ்சுரும்மா!” என அவர் சொல்லிக் கொண்டிருக்க,
“நான் இன்னும் கொஞ்ச நாளுதேன் நம்ம வீட்டில் இருப்பேனாப்பா?” எனக் கேட்டாள் அழகுநிலா. அவளுக்கு ஒருபுறம் திருமணத்தை நினைத்துச் சந்தோஷமாக இருந்தாலும், பிறந்த வீட்டை விட்டுச் செல்வதை நினைத்துக் கவலையாக இருந்தது.
“ம்ப்ச்! என்னத்துக்கு வெசனப்படுற? நாங்களும் இங்கணதேன் இருக்கோம்! நெனைச்சதும் வந்து பார்த்துக்கலாம் டா! கல்யாணப் பொண்ணு, சந்தோஷமா இருக்கணும்.! மனசைப் போட்டு உழப்பாதே! போ! போய் மூஞ்சியைக் கழுவிட்டு துணியை மாத்து டா! வாடி வதங்கிப் போய்த் தெரியற!” எனச் சொல்லி மகளை உள்ளே அனுப்பினார்.
“செல்வி! உன் மயனுக்கு முதலில் ஃபோனை போட்டு, ஞாயிற்றுக்கிழமை பரிசம் போடுறோம்ன்னு சொல்லு! அப்பறம் உன் மயன் லீவு கிடைக்கல! ஊரு சுத்த போறோம்! சினிமாவுக்கு டிக்கெட் போட்டுட்டேன்னு ஓராயிரம் காரணம் சொல்வியான்!” என மனைவியிடம் சொல்லிவிட்டு அமைதியாய் நாற்காலியில் அமர்ந்தார் புவியரசன்.
“எடுக்கிறானா தெரியலையேங்க? மணி அஞ்சாகுது, வேலைக்குப் போய்ட்டு வந்துருப்பானாங்க!” என்றபடியே இனியனுக்கு அழைத்தார் செல்வி.
முதல் இரு முறைகள் அழைப்பு ஏற்கப்படாமல், மூன்றாம் முறையாக அழைப்பு ஏற்கபட்டது.
“என்னம்மா? எதுக்குக் கால் பண்ணீங்க?”
“நம்ம அழகி கல்யாணத்துக்குத் தேதி குறிச்சாச்சு டா! வர்ர ஞாயிறு நிச்சயம் பண்ணிக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்டில் சொல்லிருக்காக டா!”
“கதிரு மாமாவுக்கும், அழகிக்குமா?” என வேண்டுமென்றே கேட்டான் இனியன்.
“என்னடா கூறுகெட்டத் தனமா பேசுறே.? நான்தேன் மாப்பிள்ளை வீட்டில் வந்து பார்த்துட்டு போனாங்கன்னு சொன்னேனே டா!”
“சொன்னீங்க தான், அதுக்கு? பூ வச்சதையும் சொல்லலை! ஒண்ணும் சொல்லல, எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறீகளா? ஆள் நிறைஞ்ச சபையில், அண்ணனா நான் இல்லைன்னா அசிங்கமாப் போவும்ன்னு தானே என்னைக் கூப்பிடுறீங்க? கூடப் பொறந்தவன்னு நான் ஒருத்தன் இருக்கேன், ஒரு வார்த்தை நாள் குறிக்கும் முன்னாடி என்னைக் கேட்டீங்களா?” என இனியன் கேட்க,
“இதில் நாங்க என்னடா செய்ய முடியும்? மாப்பிள்ளை வீட்டில், முதல் முகூர்த்ததிலேயே வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க! அவங்க ஃபோன் போட்டுச் சொன்னதும், உனக்குதேன் முதலில் சொல்றேன் டா!” எனச் சொன்னார் செல்வி.
“எல்லாம் உங்க சௌகரியத்துக்குத் தான் செய்றீங்க! நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.! ஏன் நிச்சயத்துக்கு அப்பா கூப்பிட மாட்டாரா? நான் மட்டும் வரணும்ன்னு நினைக்கிறாரு! ஒரு வார்த்தை கூப்பிட்டால் குறைஞ்சா போயிருவாரு?” என இனியன் கேட்க, செல்வி கணவனைத் தான் பார்த்தார்.
மனைவியின் பார்வையையும், தன் செவிதனில் விழுந்த ஓரிரண்டு வார்த்தைகளையும் வைத்து, என்ன சொல்லியிருப்பான் என அனுமானித்தவர்,
“இந்தாரு இனியா! நாங்க கூப்பிடுறோம் இல்லைங்கிறது ரெண்டாவதுதேன். பொண்ணு அண்ணேங்காரனாக நீதேன் முன்னே நிக்கணும். நாங்க அழைக்காட்டியும் நீ வந்து நிக்கத்தேன் செய்யணும். அது உன் கடமை. என்னைக் கூப்பிடலை! எனக்குச் சொல்லலைன்னு அனத்திக்கிட்டு கிடக்குற.?”
“மகாராசா வெத்தலைப் பாக்கு வெச்சு அழைச்சாதேன் வருவீகளோ? நியாயப்படி, நீதேன் இங்கண இருந்து கல்யாண வேலையைப் பாக்கணும். பகுமானமா சென்னையில் உட்கார்ந்துகிட்டு வெட்டி வியாக்கியானம் பேசுறீகளோ?, அம்புட்டு பெரியவுகளா ஆகிட்டீங்க நீங்க? நாளைக்கே லீவைப் போட்டு நீயும் மருமவளும் கிளம்பி வாங்க! இங்கண எம்புட்டு வேலை கிடக்கு? பத்திரிக்கை அடிக்கக் கொடுக்கணும்! தாம்பூலப் பைக்குச் சொல்லணும். நிச்சயத்துக்கு ஆக வேண்டியதைப் பார்க்கணும்! ஒத்தை ஆளாக எல்லாத்தையும் பார்க்க முடியாது! எப்போ கிளம்புறீக.? மருமகக் கிட்டே போனைக் கொடு நான் பேசுறேன்.!” என்ற புவியரசனின் கட்டுசெட்டான பேச்சில் விக்கி விறைத்துவிட்டான் இனியன்.
“லீவு என்னன்னு பார்த்துட்டு சொல்றேன்பா! உங்க மருமக ஆஃபீஸ் போயிருக்கா!” எனச் சொல்ல,
“ம்ம்ம்! வெரசா கிளம்பி வர்ர வழியைப் பாருங்க!” எனச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தார்.
“நீ இன்னுமும் உன் மயனை உட்கார்ந்து கொஞ்சிக்கே இரு! அவன் உன் தலைமேலே ஏறி மொளகா அறைக்கட்டும்! இவன்கிட்டேயெல்லாம் நாசூக்கா பேசினால் வேலைக்கு ஆகாது. கொஞ்சம் வெடுக்குன்னு பேசினாதேன் வழிக்கு வருவியான்.!”
என அவர் செல்வியிடம் சொல்ல, கணவர் மகனிடம் பேசிய விதத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார் செல்வி. அதே நேரம், அதிவீரனுக்குக் காணொளி அழைப்பெடுத்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இனியன் வேற வரானா…. 🤦♀️ ஏற்கனவே அந்த அரைவேக்காடு கதிர் வேற என்ன செய்யுப் போறான்னு தெரியல….. 😨இவனெல்லாம் மனசு பூரா வஞ்சத்தோட முன்னாடி நின்னா விளங்கின மாதிரி தான்….. 😡😡
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💙
அதி நிலா கியூட். புவி நிரம்ப சரி.
மிக்க நன்றி கலை மா 💙