Loading

நேசம்-13

“இப்போ நீ சொல்லுறியா? இல்லை, இந்த வயசில் உங்கப்பன் வீட்டுக்குப் போய் உட்காரப் போறியா? ஆசைப்பட்டுக் கட்டின பொண்டாட்டின்னு பார்க்க மாட்டேன்! ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்ன்னு அத்து விட்டுப்புடுவேன் பார்த்துக்க!” என எதிரில் நின்ற மனைவியை மிரட்டிக் கொண்டிருந்தார் இராஜேந்திரன்.

அவர் மனைவி ஜெயந்தியோ, வாயைத் திறக்காமல் அழுத்தமாய் நின்றிருந்தார். ஜெயந்தியைப் பொருத்தவரை, அவருக்குத் தன் உயிரையும் தங்களின் ஒற்றை மகளின் வாழ்க்கைதான் பெரிதாக நினைத்தார்.

“கண்ட சாக்கடையில் பிறந்த பரதேசியெல்லாம் எனக்கு மருமயனா? நல்லா கொஞ்சிக் குலாவிக்கிட்டு, கோயில் கோயிலா சுத்துறீகளோ? ஆனாலும் உனக்குத் தைரியம் சாஸ்திதேன். என்னைப் பத்தி தெரிஞ்சுமே மருதைக்குள்ளே மவளோட சுத்தியிருக்கிறீயே?!” என எரிச்சலுடன் மனைவியைப் பார்த்தார்.

“இப்போ மட்டும் நீ உண்மையைச் சொல்லலைன்னு வையி! நானே உன்னைத் தூக்கில் தொங்கவிட்டுப்புட்டு, மக ஓடிப் போன துக்கத்தில் நாண்டுக்கிட்டு செத்துப் போய்ட்டாள்ன்னு சொல்லிப்புடுவேன்.!” எனக் கோபமாக மனைவியை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்தார் ராஜேந்திரன்.

“ரெண்டு நாளா இதையேத்தேன் கேக்குறீக! நான்தேன் எனக்குத் தெரிஞ்சதையெல்லாம் சொல்லிப்புட்டேனே? எனக்குப் பவித்ரா எங்கே இருக்காள்ன்னு எதுவுமே தெரியாதுங்க! என்னைப் பார்க்கணும் போல இருக்குன்னு அழுதுக்கிட்டே ஃபோன் போட்டாள். போய்ப் பார்த்தேன். அம்புட்டுதேன் எனக்குத் தெரியும். வேற எதுவுமே எனக்குத் தெரியாது!” .சொன்ன பதிலேயே திரும்பச் சொல்லி சாதித்தார் ஜெயந்தி.

“இந்தாரு ஜெயந்தி! ரெண்டு நாளா இதையேத்தான் சொல்லிக்கிட்டு நிக்கிற! கேட்டதையே திரும்பக் கேட்டு எனக்குக் காது புளிச்சு போச்சு.! உன் மகள் மட்டும் என்கிட்டே சிக்குனான்னு வையி.. தொலைஞ்சீங்க அம்புட்டு பேரும். உன் மவ ஃபோன் போட்டாள்ன்னா நியாயப்படி நீ என்கிட்டே தானே சொல்லணும். ஏன்சொல்லலை?”

“என் கண்ணு முன்னாடியே நான் பெத்த மக சாகட்டும்ன்னு என்னால் விட முடியாதுங்க! உங்கக்கிட்டே சொன்னால், சும்மா இருப்பீகளா? அவளைக் கொல்லணும்ன்னு கங்கணம் கட்டிகிட்டு திரியறவருகிட்டே எப்படி நான் சொல்ல முடியும்?” என மனைவி சொல்வதைக் கேட்ட இராஜேந்திரனின் கோபம் இன்னும் கொஞ்சம் எகிறியது.

“இந்தா வருந்துருச்சுல்ல உண்மை! உன் வாயாலேயே சொல்லிப்புட்டல்ல? நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் செருப்பில் அடிச்ச மாதிரியே இருக்கு ஜெயந்தி. ஒருவேளை, பவித்ரா உன்னைப் பார்க்கணும்ன்னு சொன்னதும், என்கிட்டே சொல்லியிருந்தால், நீயொரு நல்ல பொம்பளை! உள் வீட்டுக்குள்ளே இருந்துக்கிட்டு புருஷனுக்குத் துரோகம் பண்ணுற நீயெல்லாம் பொம்பளையா?” உணர்வுரீதியாய் மனைவியைத் தூண்ட முயன்றார் இராஜேந்திரன்.

 

ஜெயந்தி பதிலே பேசவில்லை. இத்தனை ஆண்டுகளாய் கணவனோடு வாழ்ந்தவருக்குத் தெரியாதா? எதற்காக எப்படிப் பேசுவாரென? வாயைத் திறக்காமல், அழுத்தமாய் நின்ற மனைவியைப் பார்த்தார். கொன்று போட்டுவிடும் ஆத்திரமும் கோபமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனாலும், தன் மகளான பவித்ராவையும், அந்தப் பிரதீப்பையும் பிடிப்பதற்கான துருப்புச் சீட்டே மனைவி என்பதால் மட்டுமே அமைதிகாத்தார்.

“நீ வாயைத் திறந்து சொல்லலைன்னா, எனக்குத் தெரியாது, என்னால் கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா? அந்தப் பிரதீப் வீட்டுக்கு ஆள் அனுப்பி வச்சிருக்கேன். அவனோட, அப்பன் ஆத்தாளை தொக்கா தூக்கியாரச் சொல்லியிருக்கேன். செத்தானுங்க அம்புட்டு பேரும்!”
என்ற இராஜேந்திரனின் வார்த்தைகள், ஜெயந்தியின் மனதில், பெரும் அதிர்வை உண்டாக்கியது.

“அய்யோ…!” எனத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஓரடி பின்னோக்கி நகர்ந்து சுவற்றில் சாய்ந்தார் ஜெயந்தி. மனம் மகளுக்காக வேண்டுதல் வைத்தது. மனைவியின் கண்ணில் தெரிந்த நொடி நேரப் பதற்றத்தில், இராஜேந்திரனின் கண்கள் பளபளப்பாய் மின்னியது.

“ஏன் ஜெயந்தி, பயமா இருக்கா?” என உதட்டில் நக்கல் சிரிப்புடன் கேட்டார்.

“நம்ம பிள்ளை அப்படியென்ன ஊரு உலகத்தில் இல்லாத தப்பு பண்ணிட்டா? பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு போவட்டும் விட்டுருங்க!” எனத் தன்னை மீறி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார் ஜெயந்தி.

“அதுதேன் அவள் செஞ்ச தப்பு!” எனக் கர்ஜித்தார் இராஜேந்திரன்.

“இந்த ராஜேந்திரனுக்கு மகளா பொறந்தவளுக்கு, காதல் வந்துருக்கவே கூடாது. அதுவும் வேற சாதிக்கார பய மேலே வந்துருக்கக் கூடவே கூடாது! குடும்ப மானத்தையே வாங்கிட்டாளே உன் மக.!” வெறியின் விளிம்பில், அவர் சொன்ன வார்த்தைகளில், ஜெயந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“மானம் மானம்னு சொல்லுறீங்க, மகளோட உசுரை விட அந்த மானம்தேன் பெருசா போச்சா? அவ நம்ம பெத்த பொண்ணு!” அழுத்தமாய்ச் சொன்னார். அந்த வார்த்தைகளில் இராஜேந்திரனின் கண்கள் இரத்தமெனச் சிவந்தது.

“வாயை மூடு!” அறையதிரக் கத்தினார். ஒரு நொடியில் மொத்த வீடும் அமைதியாகி விட்டது.
ஜெயந்தி அதிர்வுடன் அமைதியாய் நின்றார். கணவனின் தோரணை அவருக்குள் கிலியைக் கிளப்பியது.

“பவித்ராவையும் பிரதீப்பையும் இவனால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறியா? அந்த நாய்ங்களைப் பிடிச்சு காட்டறேன்.! கணவனின் குரலில் தெரிந்த உறுதி, ஜெயந்தியின் உடலை நடுக்க வைத்தது.
அதே நேரம், இராஜேந்திரன் மெதுவாக மனைவியின் அருகே வந்து நின்றார். சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தார்.

“ஜெயந்தி!” என்றார் மெல்லிய குரலில். ஜெயந்தி மெதுவாகத் தலை நிமர்த்திப் பார்த்தார்.

“நான் சொல்றதைக் கேளு, இப்பவே நீ உண்மையைச் சொல்லிப்புட்டா உன் மவள மட்டுமாவது உயிரோட காப்பாத்திக்கலாம். இல்லன்னா..” மனைவியின் கண்களை ஊடுருவியபடியே, நொடி நேர இடைவெளிக்குப் பின்,

“அவளை நான் கண்டுபிடிச்சேன்..அந்த பிரதீப்பையும், அவளையும் பார்த்த இடத்தில் முடிச்சுப்புடுவேன். நான் பெத்த பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டேன்.!” ஜெயந்தியின் இதயத்திற்குள் அடர்ந்த குளிர் பரவியது..

அந்த நொடியே, இராஜேந்திரனின் கைபேசி சத்தமிட்டது. சட்டைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு வந்த பெயரைப் பார்த்ததும், அவரது உதட்டில் மெதுவாக ஒரு சிரிப்பு மலர்ந்தது.

மனைவியைப் பார்தபடியே அழைப்பை ஏற்றார்.

“சொல்லு…” என்றார்.
அந்தப் பக்கத்தில் யாரோ சொன்னதைக் கேட்டதும், இராஜேந்திரனின் கண்கள் தீப்பொறியாய் பளிச்சிட்டது..

“அப்படியா…?”ஒரு கணம் மனைவியைப் பார்த்தார்.

“சரி… நான் வர்றேன்.”அழைப்பை துண்டித்துவிட்டு மெதுவாகச் சிரித்தார்.

“ஜெயந்தி! “அவர் விளித்த விதமே ஜெயந்தியின் உயிரையே நடுங்க வைத்தது.

“உன் மகளைக் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகாது ஜெயந்தி.! காத்துக்கிட்டு இரு! அவளுக்குக் காரியம் பண்ணுறதுக்கு!” விஷம் தோய்ந்த ஊசிகளாய் வார்த்தையால் குத்திவிட்டுப் போனார். ஜெயந்தியோ ஸ்தம்பித்து நின்றிருந்தார்.

********

அந்தத் தெருவின் கடைக்கோடியில் அமைந்திருந்த, அந்த ஒற்றைப் படுக்கையறை வீட்டின் மூன், புழுதியைக் கிளப்பியபடி வந்து நின்றது இரண்டு உயர் ரக மகிழுந்துகள். அதிலிருந்து இராஜேந்திரனின் ஆட்கள் சிலரும், இராஜேந்திரனும் இறங்கினர்.

“இந்த வீடு தானே.?”

“இந்த வீடுதான்ணே! கன்ஃபார்ம். பக்கத்திலேயும் விசாரிச்சுட்டோம். அந்தப் பிரதீப் இந்தப்பக்கம் வரலையாம்! ஆனால், அவனைப் பெத்தவங்க இங்கணதேன் இருக்காங்கன்னு சொன்னாங்க! அவனுக்கு ஒரு தங்கச்சியும் இருக்குண்ணே!”

“கதவைத் தட்டிப் பாரு! திறக்கலைன்னா உடைச்சுரு!” என அவர் கட்டளையிட, கதவைத் தட்டி தட்டி பார்த்துவிட்டு, கதவை உடைக்கத் திர்மானித்தனர். இரண்டு முறை, வேகமாகத் தள்ளியதிலேயே, ப்ளைவுட்டில் பொருத்தப்பட்டிருந்த அந்தக் கதவு பட்டெனத் திறந்து கொண்டது.

“இழுத்துட்டு வாங்கடா அந்த நாய்களை! இதுங்களை வச்சே அந்தப் பிரதீப்பை என் காலில் விழ வைக்கிறேன்!” என உறுமியவர், அந்த வீட்டின் வாசலைக் கூடத் மிதிக்கப் பிடிக்காமல் வெளியிலேயே நின்று கொண்டார்.

உள்ளே சென்றவர்கள், ஏமாற்றம் தாங்கிய முகத்துடன், இராஜேந்திரன் முன் வந்து நின்றனர்.

“என்னங்கடா?”

“என்னன்னு கேட்கிறேன்ல? சொல்லித் தொலைங்க!”

“உள்ளே ஒருத்தரையும் காணோம்ண்ணே!” என எதிரில் நின்றவன் சொல்ல, அதிர்ந்து நின்றுவிட்டார் இராஜேந்திரன்.

“நல்லா பார்த்தீங்களா டா? எங்கணையாவது ஒளிஞ்சிருக்கப் போறாய்ங்க!” எனச் சொன்னபடியே உள்ளே எட்டிப் பார்த்தார். வீட்டில் ஆள்கள் மட்டுமல்ல, பொருட்களும் கூட எதுவுமில்லை. வீடு கழுவித் துடைத்தாற் போன்று காலியாக இருந்தது. இராஜேந்திரனின் முகம் நொடிப் பொழுதில் கறுத்துப் போனது.

“எங்கே போயிருப்பானுங்க?” எனத் தனக்குள் முனகினார்.
அவரின் குரலில் எதிரொலித்த தொனியில், எதிரில் நின்றிருந்தவர்கள் நடுங்கிப் போய் நின்றிருந்தனர்.

“நாங்க எல்லா ரூமையும் பார்த்துட்டோம்ண்ணே! யாருமே இல்ல. வீட்டுல எதுவுமே இல்ல!” என்றான் ஒருவன்.
முகத்தைச் சுளித்தபடி ஒருவித பிடித்தமில்லா பாவத்துடன் இராஜேந்திரன் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தார்.

அந்தச் சிறிய வீட்டில் ஒரு படுக்கையறை,அதற்குப் பக்கத்தில் சமையலறை. சின்ன வரவேற்பறை, வரவேற்பறையின் பக்கவாட்டில் மாடிப்படிகள் நீண்டது.

எங்கும் வெறுமை. சுவற்றில் அடிக்கப்பட்டிருந்த ஆணி மட்டும் இருந்தது. அதில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தின் தடம் தெரிந்தது.

அவர் மெதுவாகச் சுற்றிப் பார்த்தார்.அந்த வீட்டின் நிசப்தம் அவரை இன்னும் எரிச்சலடையச் செய்தது.

“நம்ம வர்றதுக்கு முன்னாடியே காலி பண்ணிட்டாங்களா? இல்லை நம்ம வருவோம்ன்னு தெரிஞ்சு காலி பண்ணிட்டாங்களா?” என்று பற்களைக் கடித்தார்.

அப்போது அவரோடு வந்தவர்களில் ஒருவன் வெளியிலிருந்து மூச்சுவாங்க ஓடி வந்தான்.

“அண்ணே! பக்கத்து வீட்டில் விசாரிச்சேன்.”இராஜேந்திரன் திரும்பிப் பார்த்தார்.

“என்ன சொன்னாங்க? எப்படியும் எதுவும் சொல்லிட்டுப் போயிருக்க மாட்டானுங்க!”

“நேத்து ராத்திரியே இந்த வீடு காலி பண்ணிட்டாங்களாம்! குட்டியானை வேன் வந்துச்சாம். எல்லாச் சாமானும் ஏத்திக்கிட்டு போய்ட்டாங்களாம்!”அந்த வார்த்தையைக் கேட்டதும் இராஜேந்திரனின் முகம் கோபத்தில் கர்ண கொடூரமாய் மாறியது.

“யாரு வண்டியா இருக்கும்? உள்ளூர்ன்னா நமக்குத் தெரிஞ்சவனாதேன் இருப்பியான்!”

“அதுதான் தெரியலண்ணே! வெளியூரு நம்பருன்னு சொல்றாங்க! உறுதியா ஒண்ணும் தெரியலை!” சில நிமிடங்கள் அமைதியாய் நின்றவர், ஓங்கி சுவற்றில் குத்தினார். அந்தப் பலமில்லாத சுவற்றின் மேல்பூச்சு பெயர்ந்து விழுந்தது.

“இங்கணத் தானேடா இருந்தீங்க.? இதுதேன் நீங்க கண்காணிச்சு கழட்டுற லட்சணமா?” எனக் கர்ஜித்தார். அங்கே இருந்தவர்களில் ஒருவர் கூட, அவரை நிமிர்ந்து பார்க்கத் துணியவில்லை.
சில நொடிகளிலேயே தன்னை நிதானத்திற்கு மீட்டுக் கொண்டார். பிறகு மெதுவான குரூரக் குரலில் சொன்னார்.

“அவிங்க ஓடட்டும், எப்படியும் எங்கிட்டே சிங்குவானுக!”அவர் உதடு கோணலாய்ப் புன்னகைத்தது.

“அந்தப் பிரதீப்பையும், அவன் குடும்பத்தையும் கண்டுபிடிச்சு இழுத்துட்டு வர்ரவங்களுக்கு, கேட்டது, கேட்காதது அம்புட்டும் கிடைக்கும்.!”அனைவரும் திகிலுடன் தலையசைத்தனர்.
அவர் வீட்டை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்.

அவர் மகிழுந்தில் ஏறப் போன தருணம்,

“இந்தப் பயலுக்குப் பேசி வச்ச பொண்ணைத்தேன் அந்தப் போலீஸ்காரன் கட்டப் போறானாம்! பூ வச்சு உறுதி பண்ணியாச்சுன்னு பேசிக்கிறாக!” என அவர்களில் ஒருவன் சொல்ல, இராஜேந்திரனின் பார்வை எதிரே நடந்து வந்து கொண்டிருந்த கதிரவனின் மேல் விழுந்தது.

கதிரவன் இராஜேந்திரனைப் பார்த்ததும் நின்றுவிட்டான். மதுரை ஜில்லாவில், இராஜேந்திரனைத் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் பரிட்சயம் தான். அங்கே நின்றிருந்த கார்களையும், இராஜேந்திரனையும், அவரோடு இருந்த ஆட்களையும் ஒருமுறை நிதானமாய்ப் பார்த்தான்.
இருவரின் பார்வையும் சில நொடிகள் மோதிக் கொண்டது.இராஜேந்திரன் மெதுவாகக் காரின் கதவை மூடிவிட்டு நேராக அவனைப் பார்த்தபடி நின்றார்.

“என்னமோ சொன்னியே டா? திரும்பவும் சொல்லு!” என்றவர், பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்தார்.அவரோடு இருந்தவன் உடனே முன்னே வந்தான்.

“அண்ணே! இந்தக் கதிரவனுக்குப் பேசி வச்ச பொண்ணைத்தான் அந்தப் போலீஸ்காரன் கட்டப் போறானாம். பூ வச்சு உறுதி பண்ணியாச்சுன்னு ஊர்ல பேசிக்கிட்டாங்க!”அவன் சொன்னவை, கதிரவனின் காதில் விழுந்தவுடன் அவன் முகம் இரும்பைப் போல் கடினமாயிற்று.

“இதை என்னத்துக்குடா என்கிட்டே வந்து சொல்றீங்க? ஒரண்டை இழுக்குறீங்களா?” எனச் சொன்னவனின் சட்டையைப் பிடித்திருந்தான் கதிரவன்.

“ஊரே பேசுது! இதில் இவன் பேசுறதில்தேன் கோவம் உனக்கு உச்சிக்கு ஏறுதாக்கும்?” என்றார் இராஜேந்திரன்.

கதிரவனின் கை விரல்கள் மெதுவாக இறுகின. அவன் ஆத்திரம் தாங்கிய விழிகளுடன் இராஜேந்திரனைப் பார்த்தான்.

“கோவத்தை என்கிட்டே காட்டக் கூடாது கதிரு! காட்ட வேண்டிய இடத்தில் காட்டணும்!” அவனைத் தூண்டுவதைப் போல் பேசினார் அவர்.

“இது எங்க குடும்ப விஷயம்! உங்க சோலியைப் பார்த்துட்டு போங்க! என் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்.!” எனக் கதிரவன் சொல்ல,இராஜேந்திரன் சிரித்தார்.

“குடும்ப விஷயமா? நடுத்தெருவுக்கு வந்த பின்னாடி என்ன குடும்ப விஷயம் கதிரு.? உன்னை மாதிரி ஏமாளியை நான் பார்த்ததே இல்லை போ!” எனச் சொன்னவர் கதிரவனை நெருங்கி வந்து, அவன் காதுக்குள் இரகசியம் பேசினார்.

அவர் சொன்ன சங்கதியில் கதிரவனின் கண்கள் பளிச்சிட்டது.

********

“என்னடி அழகி! இன்னைக்கு இம்புட்டு லேட்டா வந்துருக்க? மேலுக்கு எதுவும் முடியலையா? ” எனக் கேள்வி கேட்டபடியே அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

இருவரும் ஆசிரியர்களுக்கான பணியாளர் அறையில் அமர்ந்திருந்தனர். இருவரின் வகுப்பு மாணவர்களுக்கும் விளையாட்டு வகுப்பு என்பதால், இருவருக்கும் ஓய்வு நேரமாக இருந்தது.

“லேட் ஆகிருச்சு டி! அப்பாதேன் வந்து விட்டுப் போனார்.!”

“அதைத்தேன் ஏன்னு கேட்டேன். பதில் சொல்லுவன்னு பார்த்தால், நான் சொன்னதையே திருப்பிச் சொல்ற?”

“அவங்க வீட்டிலிருந்து வந்தாங்க டி!” குரலில் தடுமாற்றத்துடன், இமை தழைத்தபடி சொன்னாள் அழகுநிலா.

“எவங்க வீட்டிலிருந்து? எதையாச்சும் புரியற மாதிரி சொல்றியா?” எனச் சொன்ன கீர்த்தனா, சட்டென ஞாபகம் வந்தவளாய்,

“உங்க ஆளு வீட்டில் இருந்தா டி?” உற்சாகமாய்க் கேட்டாள்.

“ம்ம்!”

“பார்ரா! என்ன சொன்னாங்க டி!”

“பூ வச்சிட்டு போயிருக்காங்க டி! நாள் குறிச்சுட்டு சொல்றோம்ன்னு சொல்லியிருக்காங்க!”

“நெசமாவா அழகி? மேடம், சீக்கிரமே போலீஸ்காரன் பொண்டாட்டியாகிருவீங்க. வாழ்த்துக்கள் டி! சந்தோஷமா இருக்கு டி!” உண்மையான மகிழ்ச்சியுடன் பேசினாள் கீர்த்தனா.

“எனக்கும் சந்தோஷம்தேன் கீர்த்தனா! ஆனாலும் மனசு படக் படக்குன்னு அடிச்சுக்கிது! கதிரு மாமா என்ன செய்யக் காத்திருக்கோ தெரியலை டி! எல்லாமே சீக்கிரமா நடக்கிறதைப் பார்த்தால், ரொம்பப் பயமா இருக்குடி!”

“லூசா டி நீ? சந்தோஷமா இருக்க வேண்டியதை விட்டுட்டு என்னத்துக்குப் பயந்துட்டு கிடக்குற? அதெல்லாம் உன் ஆளு பார்த்துக்குவாரு டி!”

“அதெல்லாம் நம்பிக்கை இருக்கு டி! ஆனாலும் எனக்குச் சொல்லத் தெரியலை டி! ஏதோ ஒருமாதிரி இருக்கு. ஏன்னு எனக்குத் தெரியலை.!” தன் மன உணர்வுகளைச் சொல்ல முடியாமல் தடுமாறினாள் அழகுநிலா.

“இங்கே பாருடி அழகி! முதலில் நீ என்ன நினைச்ச? உன் கதிருமாமாவைத் தவிர யாரை வேணும்ன்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சியா? இப்போ, அதுதானே நடக்குது. உனக்குப் பிடிச்சவரை தானே கட்டிக்கப் போற? இந்த நாட்களெல்லாம் நினைச்சாலும் திரும்ப வராது டி! கல்யாணக் கனவுகளோட என்ஜாய் பண்ணுறதை விட்டுட்டு, புலம்பிட்டு கிடக்காதே!” எனச் சொன்னாள் கீர்த்தனா.

கீர்த்தனா சொன்ன வார்த்தைகள் அழகுநிலாவின் மனதை கொஞ்சம் அமைதியாக்கினாலும், அவளின் பதற்றம் முற்றிலும் விலகவில்லை.

அவள் மேசையின் ஓரத்தில் விரலால் மெதுவாகக் கோடு இழுத்தபடி, சொன்னாள்.

“எனக்கே தெரியல டி கீர்த்தனா! எல்லாமே நல்லதாவே நடக்குது. ஆனா ஏதோ மனசு சொல்லிக்கிட்டு இருக்குது! ஏதோ நடக்கப் போற மாதிரி..!” எனச் சன்னமான குரலில் சொன்னாள்.

“நீ நிறையச் சினிமா பார்க்கிற டி! அதேன் இப்படியெல்லாம் பேசுற! கல்யாணம் முடிவு ஆகிடுச்சுன்னா இப்படித் தான்டி எல்லாருக்கும் பதட்டம் வரும். அதுதேன் இப்ப உனக்கும் வந்துருக்கு! இதுக்குப் போய் மனசு சொல்லுது மண்ணாங்கட்டி சொல்லுதுன்னு.. லூசுடி நீ!” கீர்த்தனாவின் துடுக்குத்தனமான பேச்சில் சத்தமாய்ச் சிரித்திருந்தாள் அழகுநிலா.

“சரி, அதெல்லாம் இருக்கட்டும்! என்ன சொன்னாரு போலீஸ்காரர்.? பூவெல்லாம் வச்சாச்சு! இனி ஒரே ரொமான்ஸ்தேன்.” என்று கண் சிமிட்டி கீர்த்தனா கேட்க, அழகுநிலாவின் முகம் சட்டெனச் செம்மை பூசிக் கொண்டது.

“என்ன சொன்னாரு டி? வெட்கப்படாமல் சொல்லு டி! ஃபோன் பண்ணி பேசுனியா?” எனக் கீர்த்தனா கேட்ட பின்னே தான், அதிவீரனிடம், அலைபேசி எண்ணைக் கூட வாங்கவில்லை என்பது அவள் புத்திக்கு உரைத்தது.

“அவர் நம்பரே என்கிட்டே இல்லை டி! நான் வாங்கவும் இல்லை!” என அவள் சொல்ல,

“பொய் சொல்லாதே டி அழகி, என்கிட்டே சொல்ல முடியாதுன்னா வேணாம். நானே புரிஞ்சுக்கிறேன்.நீங்க என்ன பேசியிருப்பீங்கன்னு!” சிரித்தபடியே சொன்னாள் கீர்த்தனா.

“பக்கி! எருமைமாடு! உண்மையைச் சொன்னால் நம்ப மாட்டியா?” என அவள் தோழியை விளையாட்டாய் அடிக்க, அதே நேரம், அழகுநிலாவின் அலைபேசி ஒலித்தது. தன் அலைபேசியில் சேமிக்கப்படாத புதிய எண்ணை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகுநிலா.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
40
+1
7
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. இராஜேந்திரன் கதிரு அதி எதிராக செயல் பட கூட்டோ.

    1. Author

      ஆமா கலை மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛

  2. ராஜேந்திரன் 😤 பெத்த பொண்ணு உயிரை எடுக்குற அளவுக்கு ஜாதி வெறில ஊறி போய் இருக்காரு 😈😈😈😈😈😈
    இந்த கதிரவன் வேற இப்போ இவர் கூட கூட்டணி போட்டிருக்கான்…… என்ன ஆகப்போகுதோ 😨😨😨😨

    போன்ல அதியா 😍

    1. Author

      ஆமா டியர் மா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤