Loading

நிச்சயம் முடிந்து இரண்டாவது நாள் மதியம் மூன்று மணி அளவில் தான் சுந்தர் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தான் .

வரும்பொழுது கையில் ஒரு கவருடன் வர.. அப்பொழுதுதான் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த வனிதா, “என்ன அண்ணா கையில கவரு?” என்று கேட்க.

” உனக்கு தான். இந்தா பிடி.. பிரிச்சு பாரு!” என்று  நீட்டினான்.

வாங்கி அதை பிரித்தவள். அதில் புதிதாக போன் இருப்பதை பார்த்துவிட்டு ,ஒரு சில நொடி தனது அண்ணனை பார்த்தாள்.

” நல்லா இருக்கா? புடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

” இப்ப எதுக்கு இவளுக்கு போன் ?” என்று எகிறி கொண்டு வந்தாள் சுகந்தி.

அவளை முறைத்தவன்.”நான் என் தங்கச்சிக்கு வாங்கி தரேன். உனக்கு அதுல என்ன வந்துச்சு?” என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளை துப்பினான்.

“அவ பண்ணது எல்லாம் உங்களுக்கு மறந்துடுச்சோ?”  என்று குத்தி காட்ட..

“அப்போ அந்த வயசுல அவளுக்கு லவ் வேணாம்னு நினைச்சேன் . அதனால தான் அவ கிட்ட இருந்த போனை பறிச்சேன் .இப்போ அவளுக்கு நிச்சயம் ஆயிடுச்சு. எங்க அப்பா, அம்மாவே அமைதியா இருக்காங்க. நீ எதுக்குடி துள்ளி கிட்டு இருக்க? உன்ன அவ கல்யாணம் முடியுற வரை அவ விசியத்துல தலையிட கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காங்க மறந்துடாத! “என்று அடக்கினான் .

“இல்ல அண்ணா..எனக்கு வேண்டாம்!” என்று அவன் கையிலே திணிக்க.

” அவ பேசுறதுக்காக யோசிக்கிறியா நீ? என்ன பத்தி யோசிக்க மாட்டியா ?”என்று வருந்தினான்.

“இல்ல அண்ணா .நான் அண்ணி பேசுறதுக்காக யோசிக்கல. இவங்க பேசுறதுக்காக எல்லாம் யோசிச்சா, நான் வாழவே முடியாது. ஆனா, எனக்கு வேணாம்..” என்றாள் உறுதியாக,

“கல்யாணம் ஆகப்போகுது வனி .நிச்சயம் முடிஞ்சு, கல்யாண தேதியும் வச்சாச்சு.. இனியும் அவன் கிட்ட பேச வேணாம்னு நான் இல்ல ,வீட்ல அப்பா ,அம்மா கூட சொல்ல மாட்டாங்க …”என்று தன் தாய் தந்தையை பார்த்தான்.

இருவரும் ,”வாங்கிக்கோ!” என்று கூற ..

“இல்ல எனக்கு வேணாம்”

“ஏன்  வனிதா அடம் பிடிக்கிற… ?நாங்க யாரும் இனி அவன்  கிட்ட நீ பேச வேண்டாம்னு சொல்ல மாட்டோம்…”என்று அன்று தங்கள் கூறியதால் தான் இன்று தயங்குகிறாளோ என்று எண்ணி சுந்தர் கூற,

“நான் நீங்க பேசுன எதையும் மனசுல வச்சு வேணாம்னு சொல்லல  அண்ணா.  நிச்சயம் ஆயிடுச்சு .. இப்பவே நான் அவருக்கு  பாதி பொண்டாட்டி ஆயிட்டேன். இனி நான் இங்க இருக்க வரைக்கும் என்னோட செலவுகளை நீங்க பாக்குறீங்க அதுல நான் எதுவும் தலையிட மாட்டேன் .ஆனா, போன் எனக்கு அவர் வாங்கி தரட்டும்..” என்றாள்.

கலகலவென்று சுகந்தி சிரித்தாள்.

அனைவரும் அவளையே பார்க்க.

” என்னடி உனக்கு இப்போ பிரச்சனை?” என்றார் எரிச்சலுடன் கோமதி …

” அந்த ஒண்ணுத்துக்கும் லாக்கி இல்லாத கஞ்ச பையன் உங்க பொண்ணுக்கு போன் வாங்கித் தருவான் என்று கனவு கண்டுட்டு உட்காந்து இருக்கா பாத்தீங்களா உங்க பொண்ணு ?எங்க போய் சொல்றது ..”என்றவுடன் வேகமாக தன் மனைவியை அடிக்க கை ஓங்கி இருந்தான் சுந்தர்.

“அண்ணா!” என்று கத்தியது என்னவோ வனிதா தான்..

” வேண்டாம்!” என்று தலையசைத்தாள்..

சிரித்துக் கொண்டே,” நீங்க சொன்ன அந்த ஒண்ணுத்துக்கும் லாக்கி இல்லாத அந்த கஞ்ச பையன் தான் நிச்சயதார்த்தத்தை ஜாம் ஜாம் என்று நடத்தினார் . மறந்துடாதீங்க.. அவர் வீட்டுக்கு போயிட்டு வந்த நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் வாயடைச்சு போய் தான் வந்தாங்க. பெருமையா தான் பேசினாங்க, யாரும் உங்களை மாதிரி தரை குறைவா பேசல. கல்யாணத்தையும் அவர் சொன்ன மாதிரி நல்லபடியா நடத்தி முடிச்சிடுவாரு.. இப்போ நான் ஆசைப்பட்டதும் நடக்கும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..” என்று அவள் சொல்லிக் கூட முடிக்கவில்லை ..

அப்பொழுது அவர்கள் வீட்டு கதவை தட்டினான் நவிலன்.. உடன் பிரேமும் ..எட்டிப் பார்த்த சுந்தர் தான் ,”வாடா நவிலா! வா பிரேம் !”என்று அழைக்க .

பெரியவர்கள் எழுந்து கொள்ள முயற்சிக்க ..வீட்டிற்குள் வந்தவன்,” சாப்பிட்டுட்டு இருக்கும்போது எதுக்கு மாமா பாதி சாப்பாட்டில் எழுந்திருக்கிறீங்க? நீங்க சாப்பிடுங்க..” என்றான்

” வாங்க டா உட்காருங்க..வாங்க சாப்பிடலாம்..” என்று அழைத்தார்கள்.

தன் கண்களில் துளிர்த்த நீரை துடைத்தபடி வேறு புறம் திரும்பினாள் வனிதா.

வனிதாவின் மீது அவன் பார்வை தானாகவே சென்றது.. ஆனால், அடுத்த நொடியே பார்வையை திருப்பிக் கொண்டவன்..

” இல்ல மாமா. சாப்பிட்டுட்டு தான் வந்தேன்.. ஒரு பொருள் வாங்கினேன். அதான் நீங்க எல்லாரும் இருக்கும்போதே கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் ..

“என்னடா ?”என்று சங்கர் தான் கேட்க.

” இல்ல மாமா..நிச்சயம் முடிஞ்சிடுச்சில்ல அதான் ..”என்ற படியே தன் கையில் இருக்கும் கவரியிலிருந்து புது போனை எடுத்து நீட்டினான்.

உண்மையாகவே வனிதாவைத் தவிர மற்ற நால்வருக்குமே அதிர்ச்சி தான். இப்படி ஒன்றை மற்ற நால்வரும் பெரிதாக யோசிக்கவில்லை..

தன் மகள் பேசும் பொழுது கூட அவர்கள் அவ்வளவு யோசிக்கவில்லை. ஆனால், ‘அவனாக வாங்கி தருவான்!’ என்று கூறியது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது என்று யோசித்தார்கள்.

“அவ கிட்டவே குடுடா! “என்று சொல்ல..

அவன் சிறிது தயங்கினான். “வனிதா வாங்கிக்கோ !”என்று சங்கர் கூறிய பிறகு,

வனிதாவும் கையை நீட்டினாள்.அவளது கையில் போனை திணித்தான்..

அந்த போனை அமைதியாக வாங்கிக் கொண்டவள். எதுவும் பேசவில்லை ..

“சரி மாமா வேலை இருக்கு. இத கொடுத்துட்டு போகலாம் என்று தான் வந்தேன்..”

“கொஞ்சமா சாப்பிடுங்க டா..” என்றனர்..

“இல்ல மாமா..இப்போ தான் வரும் போது சாப்பிட்டேன்.. நீங்க வீட்ல இருக்க நேரம் வந்தா தான் சரியா இருக்கும் தான் வந்தேன்.. சரி வரேன்..” என்றவன் கிளம்ப போக ..

அவள் பார்வையோ அந்த போனின் மீது இருந்தது..

” சிம் கார்டு அதிலேயே தான் போட்டு இருக்கு ..”என்று கூறியவரே கிளம்பிவிட்டான்.

அவனை எண்ணி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். அவன் சென்ற பிறகு ,அந்த போனை பிடுங்கிப் பார்த்த சுகந்தியோ “ஓரளவுக்கு நல்ல போன் தான் போல..”என்க..

  வனிதா சிரித்துக்கொண்டே எதுவும் பேசாமல் அந்த போனை வாங்கிக் கொண்டு, தன்னரைக்கு சென்று விட்டாள்..

“ஏங்க ,அப்ப அந்த போன் என்ன பண்ண போறீங்க?” என்று கேட்டாள் சுகந்தி.

” ஏன் கடைக்காரனிடம் கொடுத்தா போச்சு…” என்றான் சுந்தர்.

” அண்ணா அந்த போனை நீ அவங்களுக்கே கொடுத்துரு.. அதுக்கு தான் அவங்க கேக்குறாங்க ..”என்று தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து கூறிவிட்டு அமைதி ஆகிவிட்டாள்.

அன்று இரவு வரை அவளால்  காத்திருக்க முடியவில்லை. ஆனால், அவள் அழைக்கவும் இல்லை. வேலையாக இருப்பான் அழைக்க வேண்டாம் என்று எண்ணினாள்.

இரவு 9 மணிக்கு மேல தான் அவனுக்கு ,”சாப்டியா ?ப்ரீயா? “என்று மெசேஜ் செய்து இருந்தாள்.

புது ஃபோனில் அவனது நம்பர், அவனது தாய் நம்பர் சேவ் செய்து தான் கொடுத்து இருந்தான்.

நிச்சயத்தின் போது எடுத்த போட்டோக்களும் அதில் நிரப்பி இருந்தான். காதலிக்கும் பொழுது அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரு சில போட்டோக்களும் அதில் இருந்தது .அனைத்தையும் இரவு வரை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

இவள் மெசேஜ் செய்யும் போது தான் அவன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அவளின் மெசேஜ் படித்தவன் ..லேசாக புன்னகையை உதித்தவாரே ,” சாப்பிட்டுட்டு இருக்கேன்.. கூப்பிடுறேன்..” என்று மட்டும் மெசேஜ் செய்து இருந்தான்.

அவளும் தம்சப் பண்ணி அனுப்பி விட்டு அமைதியாக விட்டாள் .

அவன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளும்போது, சுந்தரி பேச ஆரம்பித்தார்..

” நவிலா நமக்கு இவ்வளவு கட்டுப்படி ஆகுமாடா ?”என்றார்.

” பாத்துக்கலாம் மா.வெளியே பணம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு இருக்கேன் ..ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றவன் தாயின் கையை பிடித்துக் கொண்டு,

” தப்பு பண்ணிட்டேனா ?” என்றான் சிறிது வருத்தத்துடன்..

வேகமாக அவன் கையை இறுக்கிப் பிடித்தவர்..” டே நவிலா! அப்படி எல்லாம் நான் சொல்லல. என் பையன் ஆசைப்பட்டது இந்த ஒரே ஒரு விஷயம் தான். அதை ஏண்டா நான் தப்பு என்று சொல்ல போறேன்.. ஆனா செலவு நம்ம கையை பிடிக்குமே! என்ற ஒரு எண்ணம் இருக்கு.. மத்தபடி வேற எதுவும் இல்லடா.

நீ விருப்பப்பட்ட மாதிரி என் மருமக விருப்பப்பட்ட மாதிரி, இந்த கல்யாணத்தை உங்களுக்கு நீங்க ஆசைப்படுற போல பண்ணுங்க டா. எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லை .ஆனால், செலவு பத்தி தான் யோசிச்சேன். பின்னாடி அது உனக்கு தானடா கஷ்டத்தை கொடுக்கும்.. நிறைய செலவு இழுத்து வச்சுக்கிட்டா அதுக்கேத்த போல நீ ஓடுற மாதிரி இருக்குமே!

கல்யாணம் பண்ணிட்டு அந்த புள்ளையோட சந்தோஷமா இருக்க தானே கல்யாணமே! வேலை வேலைன்னு நீ ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்தா கஷ்டமா இருக்கும்ல அந்த பிள்ளைக்கும், அதுக்கு தாண்டா யோசிச்சேன். மத்தபடி ஏன் இவ்வளவு செலவு பண்றேன்னு யோசிக்கலடா..” என்றார் வருத்தமாக..

  தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டான் ..அவன் கன்னத்தில் தட்டிக் கொடுத்து ,தலையை வருடிவிட்டார்..

” சரிடா நீ போயிட்டு பேசு!” என்றார்…

அவன் தன் தாயை அதிர்ச்சியாக பார்க்க..

” மதியம் போன் குடுக்க போறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லிட்டு தானடா போன் வாங்கிட்டு போய் குடுத்த? இப்போ போனை பார்த்து நீ சிரிக்கும்போது என் மருமகளாக தான் இருக்கும்னு தெரிஞ்சிடுச்சு.. நீ போயிட்டு பேசு!” என்றவர் எதுவும் பேசாமல் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு படுக்க சென்று விட்டார்..

இவனும் சிரித்தபடியே தன்னரைக்குச் சென்று அவளுக்கு அழைத்தான் ..

அடுத்த நொடியே போனை எடுத்து இருந்தாள்..

” ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனோ?” என்றான் எடுத்து எடுப்பில் ..

அவளிடம்  அமைதி ..

“பேசுடி!” என்றான் காதலாக, அதே சமயம் ஏக்கமாகவும்..

விம்மல் சத்தம் மட்டுமே கேட்டது…

“உன் குரலை கேட்டு எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா ? நவி “என்றவள் குரல் உடைய..

” லூசு.. இனி உன்கூட, உன் பக்கத்துல தான் இருக்க போறேன். இன்னும் மிஞ்சி மிஞ்சி போனா ஒன்றரை மாசம் .அதுக்கப்புறம் என் கை வளைவுக்குள்ள வந்துருவ..” என்றான் உருக்கமாக.

” ஆனா. அதுக்கு  எவ்ளோ கஷ்டம் பட வேண்டி இருக்கு நீ..” என்றாள் வலியுடன்..

“என்னடி கஷ்டம் ? நீ என் பக்கத்துல வந்தா அதுவே போதும்!”

“எதுக்கு டா  அதை பண்றேன். இதை பண்றேன்னு  சொல்லிட்டு இருக்க? நம்மால எவ்வளவு முடியுமோ அதை பண்ணா போதும் இல்ல ..”என்றாள் தயக்கமாக..

” லூசு மாதிரி பேசாத! இது அவங்களுக்காக மட்டும் கிடையாது ..நமக்காகவும் நம்ப  பின்னாடி திரும்பி பார்க்கும்போது நமக்கும் சந்தோஷம் தரணும். அந்த அளவுக்கு நான் ஆடம்பரமா எதையும் செய்யணும்னு யோசிக்கலடி.. எப்பயும் ..ஆனா, உன்னோட அப்பா ,அம்மாவோட எதிர்பார்ப்பையும் நான் தப்பு சொல்ல முடியாது இல்ல .

உங்க அம்மா எதிர்பார்த்த அளவுக்கு இல்லனாலும், அதுல ஓரளவுக்கு ஆச்சும் செய்யணும்னு யோசிச்சேன் டி. இது உங்க அம்மாவுக்காக என்றத தாண்டி, உன்னை கட்டி கொடுக்கும்போது அவங்க மனசுல சின்ன  உறுத்தல் கூட இருந்திட கூடாது..

பையனா நல்ல பையன்னு என் மேல அவங்களுக்கு நம்பிக்கை இருந்தாலுமே கூட ,தன் பொண்ண  ஓரளவுக்கு வசதியான இடத்துல கட்டி கொடுக்கணும்னு இருந்தவங்க மனசு எனக்காக மாத்திருக்காங்க..

உனக்காக மாத்திருக்காங்க. அப்படின்ற பட்சத்துல ,கொஞ்சம் நம்மளும் இறங்கி வரலாம். என்னால முடியாத விஷயத்தை நான் பண்றேன்னு சொல்லல”

.”ஆனா, அதுக்கு எவ்ளோ கடன் வாங்க வேண்டி இருக்கும்?” என்றாள்.

“இப்ப அத பேச தான் போன் பண்ணியாடி ? பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கு  நமக்குள்ள…”

“இதையும் தான் பேசணும்.. பேசுறதற்கு ஆயிரம் இருந்தாலும், உன் பொண்டாட்டியா இனி நானும் உன்னோட  கஷ்ட நஷ்டம் எல்லாத்திலும் பங்கு எடுத்துக்கணும். அப்படின்ற பட்சத்துல இதுவும் என்ன சார்ந்தது தானே..! அப்போ நான் கேட்க தான் செய்வேன்..” என்றாள் உரிமையாக..

” பாருடா! அக்மார்க் பொண்டாட்டி மெட்டீரியல் ஆயிட்ட போல..!”என்று  முத்துப்பற்கள் தெரிய சிரித்தான்…

” போடா!” என்று ரொம்ப நாட்களுக்குப் பிறகு வெட்கப்பட்டாள் ..

“வனி ப்ளீஸ் டி! வீடியோ கால் வாயேன்..!” என்று கெஞ்சினான்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்