
அத்தியாயம் 33
விமலிடம் பேசிவிட்டுக் கைப்பேசியை அணைத்தாள் மௌனிகா. அருகே இருந்த ரஞ்சனி கேள்வியாய்ப் பார்க்க, “கணி, சரணோட இருக்கானம். நேரா ஃபங்ஷன் ஹாலுக்குக் கூட்டிட்டு வந்துடுறோம்னு சொன்னாங்க.”
ராணி குழப்பத்துடன், “இவன் எப்படி அவங்கக்கூட?”
“வழியில பார்த்திருப்பாங்களா இருக்கும்மா!” என்று சமாதானம் சொன்ன யாமினி, மௌனிக்கான அலங்காரத்தில் ஈடுபட்டு இருந்தாள்.
நிச்சய விழாவின் பொழுது தன்பக்கம் இருந்து எப்பணியையும் செய்யவில்லை அவள். தனக்காகவும் செய்து கொள்ளவில்லை. ஆகையால் திருமணத்திற்குத் தன்னளவில் என்னென்ன செய்யலாம் என்று ரஞ்சனியுடன் பேசிக் கலந்து ஆலோசித்து முன்னரே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்திருந்தாள் மணப்பெண்னானவள்.
திருமண செலவுகளில் இருவரும் சரிபாதி எனச் சரணிடம் உறுதியாய் உரைத்து, அதற்கான பணத்தையும் அவனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி விட்டாள்.
ஆடவனின் மனம் பாவையின் இவ்வெண்ணத்திற்கு உடன்பட மறுத்தாலும், வருங்கால துணைவியிடம் வாதம் செய்ய விருப்பம் இல்லாது அவளின் கணக்கில் இருப்பதைப் போல் தனது கணக்கில் இருந்துவிட்டுப் போகட்டும் என விட்டுவிட்டான் அவன்.
யாமினி, பாவைக்குக் புடவையைக் கட்டிவிட்டு, அதனை உடுத்தும் முறையினையும் கற்றுக் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் அக்கா. எனக்கு சேரியே கட்டத் தெரியாது. எங்கேஜ்மெண்ட்டுக்கு நல்லவேளையா சரண் லெஹங்கா வாங்கிட்டாரு. அதுனால தப்பிச்சேன். இல்லேனா எப்படி சமாளிச்சு இருப்பேனோ தெரியல.” என மௌனி உரைத்திட, “சேரி கட்டுறது எல்லாம் ஒரு விஷயமா? அதான் யூடியூப்ல எல்லாத்துக்கும் வீடியோ போடுறான்ல? பார்த்து, கத்துக்க வேண்டியது தானே.?” என்றாள் அவள்.
“அது ஓகேதான். ஆனா கத்துக்க தோணணுமே?அசரத்துக்கு எல்லாம் பழக முடியாதுல.?”
“அவசரத்துக்கு மட்டும் இல்ல, அவசியத்துக்காகவும் கத்துக்கணும் பொம்பள பிள்ளைக. ஏன்னா, எப்ப எது நமக்கு உதவியா இருக்கும்னு சொல்ல முடியாது! சேலை கட்டி விடுறது கூட, இப்ப எல்லாம் ஒரு வேலையாகிடுச்சு. அதுக்கு காசு வாங்குறாங்க!” என ராணி மொழிய, இளைய பெண்கள் மூவரும் அதைக் கேட்டு சிரித்தனர்.
“என்ன பிள்ளைகளா ரெடியா.?” என்றபடியே அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் ரெங்கநாயகி.
“ரெடி ஆச்சி!” என ரஞ்சனி உரைத்திட, கண்கள் சுருக்கி கூர்ந்து பெயர்த்தியை பார்த்தவர், “சேலையில எவ்வளவு இலட்சணமா இருக்க பாப்பா? இன்னைக்கு தான் முதல் தடவையா பாக்குறேன். என் ராஜாத்தி, கண்ணு! யாரு கண்ணும் படாம இருக்கணும்!” என்று இரு கைகளாலும் மணப்பெண்ணிற்கு திருஷ்டி கழித்து சொடுக்கிட்டார் மூத்தவர்.
அனைவரும் அதைக் கண்டு புன்னகைக்க, “வாங்க வெளிய. மாப்பிள்ளை வீட்டில் இருந்து அழைக்க வந்துட்டாங்க!” என முன்னால் நடந்தார்.
அருண் வாகனத்தை இயக்குவதற்காக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்க, வசந்தியும் அவரின் கணவரும் பெண்ணை அழைத்துச் செல்ல வருகை தந்திருந்தனர்.
அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களில் விழா அரங்கை அடைந்து விட்டனர், மௌனியும் அவளோடு இருந்தவர்களும்.
இரண்டாம் மகன் சேகரனையும் அவரின் மனைவி அர்ச்சனாவையும் அழைத்துப் பார்த்தார் ரெங்கநாயகி.
“ஏன்? எங்க எல்லாரையும் முன்னாடியே கூட்டிட்டு போய் நிறுத்தி வச்சு, அங்க நடக்கிறதை பார்த்து என்னோட மக வருத்தப்படவா? கல்யாணம் உங்க பேத்திக்கு தான? எங்களுக்கு என்ன வேலை இருக்கு? அவளை முதல்ல நீங்க கூட்டிட்டு போங்க. நாங்க அப்புறமா வந்துக்குறோம்!” என்று வெளிப்படையாகவே உரைத்துவிட்டார் அர்ச்சனா.
‘இதற்குமேல் பேசி, மன வருத்தத்தைப் பரிசாய் பெற்றுக் கொள்ள வேண்டாம்!’ என மூத்தவரும் பெயர்த்தியை அழைத்துக் கொண்டு அமைதியாய் கிளம்பி வந்து விட்டார்.
குத்து விளக்கோடு வாகனத்தில் இருந்த இறங்கிய மௌனியை, ரோகிணி தான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
“கல்யாண பொண்ணு ரூம் லெப்ட் சைடுல இருக்கு அண்ணி. அது பக்கத்துலயே வரிசையா மூனு ரூம் இருக்கு. கெஸ்ட் யாரும் தங்குறதா இருந்தா சொல்லுங்க. அம்மாக்கிட்ட இருந்து நான் கீ வாங்கி தர்றேன்!” என்று உரைத்து, அறைக்கு செல்லும் வழியையும் காட்டினாள்.
“மாப்பிள்ளை வந்தாச்சா.?” என ரஞ்சனி வினவ, “வந்துக்கிட்டே இருக்காங்க. மேக்ஸிமம் ஒரு டென் மினிட்ஸ்!” என்று புன்னகைத்தாள் அவள்.
மௌனி நாத்தனாரிடம், “எதுவும் வேலை இருக்கா ரோகி உனக்கு.?” என விசாரிக்க, “இப்போதைக்கு இல்ல. ஏன் அண்ணி?”
“சரி, கொஞ்சம் நேரம் ரூமுக்கு வா. என்கூட இருக்கிறவங்க எல்லாரையும் இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன். ஃபங்க்ஷன் ஆரம்பிச்சிட்டா, அப்புறம் டைம் கிடைக்காது.”
“சரி அண்ணி. நீங்க முதல்ல உள்ள போங்க!” என்ற ரோகிணி ஆரத்தி கரைசலை வெளியே ஊற்றிவிட்டு நிமிர, சரணின் வாகனம் வந்து நின்றது.
திவாகரும் அவனும் இறங்க, வாயிலிலேயே நின்றிருந்த அருண் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
“மோனி வந்தாச்சா, ரோகிமா?” எனத் தமையன் விசாரிக்க, “அண்ணி இப்பதான் ரூமுக்குப் போறாங்க. அண்ணா என்னாச்சு.? உன்னோட முகமே சரியில்ல.”
வலிந்து புன்னகைத்தவன், “ஒன்னும் இல்லடா. வேலை அதிகம் இல்ல. அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு.”
“நிஜமாவா?”
“ஏன்டா? என்னோட வார்த்தையில உனக்கு நம்பிக்கை இல்லையா?”
“சரி, அவன் என்ன ஆனான்?”
“இப்பவே, அதைப் பத்தி பேசணுமா.?”
“என்னதான் நடந்துச்சு? விமலுக்கு மெசேஜ் பண்ணேன், அவனும் பதில் சொல்லல?”
“வா, முதல்ல வந்தவங்களைப் பார்ப்போம்!” என சரண் தங்கையை உள்ளே அழைத்துச் செல்ல, சிறிது நேரத்தில் வரவேற்பு துவங்கியது.
திருமணத்திற்கு வர முடியாத உறவுகளிற்கு, முதல்நாள் விழா என்பது ஒரு சௌகர்யமான வழியாய் போயிற்று என்று தான் சொல்ல வேண்டும். முகூர்த்தம் மறுநாள் காலை ஆறில் இருந்து ஏழரை. யார் விடியலிலேயே எழுந்து தயாராகி வருவது என பெரும்பாலானோர் மாலையே விழாவில் பங்கேற்க வந்திருந்தனர். அரங்கம் நிறைந்து போனது.
ரோகிணி அன்னை பாகீரதிக்கு உதவியாய் அவருடனே இருந்ததால், மௌனியையும் சென்று பார்க்க வில்லை. தமையனிடமும் ‘என்ன நடந்தது?’ என்று விசாரிக்கும் வாய்ப்பு மறுமுறை கிட்டாது போனது.
அரைமணி நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் மேடை ஏற்றப்பட்டனர்.
மௌனி அவளிற்குப் பிடித்த இளம் பச்சை நிறத்தில் புடவை உடுத்தி இருந்தாள். அதற்கு ஏற்றது போல் கழுத்து மற்றும் காதில் வைர கற்கள் பதித்த நகைகளும், கைக்கு தங்க வளையல்களும் அணிந்திருந்தாள்.
இதுநாள் வரை அவளின் பொருளாதார பின்னணியைப் பற்றி எவரும் சிந்தித்தது இல்லை. தோழியாய் இருக்கும் ரஞ்சனி கூட அறியமாட்டாள்.
விழாவிற்காக இல்லத்தில் தயாராகும் பொழுது, “அம்மாவோட ஜுவல்ஸ். இன்னைக்கு இதைத்தான் போட்டுக்கப் போறேன்.” என எடுத்துக் காட்டிய பொழுதுதான் புரிந்தது, வெளிப்பார்வைக்குத் தெரிவது போல் மௌனிகா அப்படி ஒன்றும் எளிமையானவள் இல்லை என்று.
சரணின் குடும்பத்தாருக்குமே பெரும் வியப்புதான்.
ஆடவனிற்கு அதைப்பற்றி எல்லாம் எந்த எண்ணமும் எழவில்லை. மாறாக சிந்தை முழுவதையும் கணியனே ஆக்கிரமித்து இருந்தான்.
அவளுமே தம்பியை எதிர்பார்த்தபடி அவ்வப்போது வாயிலை பார்த்த வண்ணம் இருக்க, பத்து நிமிடங்களில் விமலுடன் அரங்கிற்கு வந்து சேர்ந்தான் அவன்.
நெற்றியில் உண்டான காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. கன்னத்தில் வரிகளாய் தடம். அதைத்தவிர காயம் என்று எதுவும் இல்லை. வலியும் பெரிதாக இல்லை. புருவத்திற்கு மேலே அடிபட்டு வெளியான குருதி கூட, கல்லில் உரசியதால் மேற்தோல் சிராய்ந்து வந்தது தான்.
விமலை விட கணியன் சற்று கனமான உடல்வாகு கொண்டவன் என்பதால், இளையவனின் விசைக்கு மூத்தவனின் தேகம் அனிச்சையாய் செயல்பட்டு பெரும் சேதாரம் ஏற்படாமல் தற்காத்துக் கொண்டது.
விமலை முதலைக் கண்டது ரோகிணி தான். அவனுடன் வந்தவனைப் பார்த்ததும் விழிகளில் அதிர்ச்சி பரவ, தம்பியை நோக்கி விரைந்தாள்.
கணியனை வெட்டும் பார்வைப் பார்த்தவள், உடன்பிறந்தவனின் கைப்பற்றி இழுத்துச் சென்றாள்.
அவன், “வந்துடுறேன் மாமா? ஒரு நிமிஷம்!” என்றுவிட்டுச் செல்ல, ஆடவனிற்குமே ரோகிணியை இங்கு பார்த்ததில் லேசான வியப்புதான்.
“அவனை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்திருக்க.?” என வினவினாள் மூத்தவள்.
“அவரு, அண்ணியோட தம்பி.”
திகைப்புடன் நோக்கியவள், “என்ன சொன்ன.?” என்றவாறே கணியனின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
ராணி மகனின் நெற்றிக் காயத்தைத் தொட்டுப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார். ரஞ்சனியும் யாமினியும் அவனிடம் விசாரணை செய்ய, அப்படியே மணமேடையின் புறம் நோக்கினாள்.
மௌனியின் முகத்தில் படபடப்பு. கணியனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். விழாவின் நாயகி என்பதால், சட்டென்று அவளால் கீழ் இறங்கி வர இயலவில்லை.
ஆனால் ‘என்ன நடந்ததோ?’ என்ற வினா கண்களில் தொக்கி நின்றது. அவளின் அருகே நின்றிருந்த சரணின் முகத்தில் வேதனையின சாயல்.
“அண்ணிக்கு எங்க இருந்து திடீர்னு தம்பி முளைச்சான்?”
“எனக்கும் தெரியல. மாமாக்கு அண்ணிகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு.” என்றவனை இடை நிறுத்தியவள், “ஏய், ஒரு நிமிஷம். இதென்ன புதுசா மாமா.?”
“அண்ணா தான் அப்படிக் கூப்பிடச் சொன்னான்!” என்று தொடங்கி, சற்று முன்னர் நடந்த அனைத்தையும் உரைத்து முடித்தான்.
“திடீர்னு, அண்ணா ஏன் இப்படி மாறிட்டான்? அண்ணியோட தம்பினா அவன் செஞ்சது தப்பில்லனு ஆகிடுமா.?”
“எனக்கு முழுசா தெரியல ரோகி. ஆனா சென்னையில எதுவோ நடந்திருக்கு. அண்ணா அண்ணியைப் பார்க்கப் போனான் இல்ல? அதுல மாமாக்கு ஏதோ சம்பந்தம் இருக்கு!”
“எதையும் முழுசா தெரிஞ்சுகிட்டு சொல்ல மாட்டியா நீ? எதுவோ இருக்கு, ஏதோ நடந்திருக்குனு இஷ்டத்துக்கு எதையாவது உளறிக்கிட்டு இருக்க?”
“ஹேய்.. நான் உளற எல்லாம் இல்ல. அண்ணாவும் மாமாவும் பேசுனதை வச்சுதான் சொல்லுறேன். ஆனா என்ன நடந்துச்சுனு விசாரிக்கிறதுக்கு நேரம் இல்லாததால, அமைதியா வந்துட்டேன்.”
“என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரிஞ்சாகணும். போனா போகட்டும்னு சாதாரணமா எல்லாம், உங்களை மாதிரி என்னால அவனை விட முடியாது. ஆனா, கல்யாணம் முடியிற வரை அண்ணாக்கிட்ட இதைப்பத்தி பேச முடியாதே? ஏற்கனவே முகம் சரியில்ல. ரொம்ப டென்ஷன்ல இருக்கான் போல. நான் ஏதாவது பேசப் போயி கோபத்துல கத்திட்டான்னா.? அது பரவாயில்ல. ஆனா, கல்யாணம் அதுவுமா அவன் எதுவும் கோபப் பட்டுடக்கூடாதேனு பார்க்கிறேன்.”
“அப்ப, அருண் அண்ணாக்கிட்ட கேட்போம்!” என்று வழி சொன்னானா விமல்
“ஹான்.?” என அவள் குழப்பத்துடன் நோக்க, “அவருக்கு ஏதோ தெரியும்னு நினைக்கிறேன். எனக்கு முன்னாடி மாமாக்கிட்ட அவருதான் முதல்ல ஸாரி கேட்டாரு.”
“சரி வா, போயிக் கேட்போம்.”
விமல் புரியாது விழித்து, “இப்பவா?”
“ஆமா..”
“ஏன் இந்த அவசரம்? ஃபங்ஷன் முடிவும் பொறுமையா தான் கேட்குறது?”
“அடிச்சவனை சகல மரியாதையோட கூட்டிட்டு வந்திருக்க. என்ன ஏதுனு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா.?”
“அது சரிதான். ஆனா, அதுக்கு இது நேரம் இல்ல ரோகி.”
“எனக்கு முதல்ல ஒரு விஷயம் சொல்லு?”
“என்ன?”
“அவன் கேமரால இருந்த, போட்டோஸ் எல்லாம் என்ன ஆச்சு.?”
“டெலிட் பண்ணியாச்சு.”
“நிஜமாவா.?”
“இந்த விஷயத்துல நான் எதுக்கு பொய் சொல்ல போறேன்.”
“ஒருமணி நேர கேப்ல, எல்லாரும் அப்படியே தலைகீழா மாறிப் போய் வந்திருக்கீங்களே? அதையும் அப்படியே விட்டுட்டீங்களோனு தான்!” என்ற ரோகிணி நடந்ததை முழுமையாய் தெரிந்து கொள்வதற்காக, அருணைத் தேடிச் சென்றாள்.

