
நிவேதா வனிதாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்ல..
பிரேம் எப்படியோ வனிதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான்.
அவள் வீட்டில் ஏதோதோ காரணங்கள் கூறி, அவன் செல்லும் நேரத்தில், ஏதோ நல்ல நேரம் போல சுகந்தி அவள் தாய் வீட்டிற்கு சென்று இருக்க. வனிதாவின் தாய் மட்டும் இருந்தார்.. “நான் கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வந்துடுறேன் பெரியம்மா. டீவியில என்ன பிரச்சினைனு தெரியல..பாப்பா என்னன்னு பார்த்ததும் கூட்டிட்டு வரேன்”னு சொல்லி அழைத்துக் கொண்டு வந்தான்.
சரி அவளும் வீட்டிலே தானே அடைந்து கிடக்கிறாள் பக்கத்தில் தானே என்று நம்பி அனுப்பி வைத்தார் ..
“என்ன அண்ணா ஆச்சு டீவி? என்று அவளும் கேட்டபடி அவனுடன் வர..
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வா!” என்றான்..
ஒரு வேலை நவியைப் பார்க்கப் போகிறோமோ ?என்று பயந்து, “இல்ல அண்ணா வேணாம் ..” என்றாள்..
” ஏன்?” என்று அவன் கேட்டதுக்கு..
” இல்ல அவர் இருந்தா?” என்று ஒரு சில நொடி தயங்கினாள்.
“அவன் இல்லை நீ வா!” என்று அழைத்துக் கொண்டு வந்தான். அங்கு நிவேதாவை உண்மையாகவே வனிதா எதிர்பார்க்கவில்லை..
அவளை பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்து கட்டி அணைத்து கண்ணீர் வடித்தாள் ..
சில கணத்திற்கு பிறகு ,அவளை நிவேதா தன்னில் இருந்து விளக்கி நிற்க வைக்க..
“எப்படி இருக்கீங்க அண்ணி? தம்பிக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று கேட்டிருந்தாள் ..
வனிதா அவ்வப்போது தன் தாயின் நம்பரிலிருந்து நண்பர்களுக்கு என்று அழைத்து பேசுவாள்.. மேலோட்டமாக தன் தாயின் முன்பே பேசிக் கொள்வதால் நண்பர்கள் போல் நிவேதாவிடம் பேசி இருக்கிறாள். அதை தாண்டி பிரேம் மூலமாக நிவேதாவை பற்றி அறிந்து கொள்வாள். அவ்வப்போது, ஆகையால் ,கௌசிக் பற்றி விசாரிக்க..
” இப்ப பரவால்ல தம்பிக்கு..” என்று கூறியவள். அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து “உனக்கு அவன் மேல நம்பிக்கை இருக்கு தானே!” என்று மீண்டும் கேட்க..
” ஏன் அண்ணி இப்படி கேக்குறீங்க ? எனக்கு அவர் மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா ,எனக்கு பயமா இருக்கு ..அம்மா ரொம்ப தீவிரமா இருக்காங்க. அம்மாவை தாண்டி என்னால என்ன பண்ண முடியும்.. எனக்கே இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. வீட்டை விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலை எல்லாம் இல்ல . அவருமே அதை விரும்ப மாட்டாரு .ரெண்டு வீட்டு விருப்பத்தோடு இந்த கல்யாணம் நடக்கணும். ஆனா, அதுக்கு நான் ஸ்ட்ராங்கா இருக்கணும்னா.. இப்போ அவரோட சூழ்நிலை என்னன்னு எனக்கு தெரியலையே! எங்க வீட்டை நான் சமாளிச்சிடுவேன் பிரச்சனை இல்லை.. எங்க வீட்டுல பேசுறதுக்கு கூட நான் தயாரா இருக்கேன். ஆனா, அவரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்காரா ?சிட்டுவேஷன் எப்படி இருக்கு ?அவர் சைடு அப்படின்னு எதும் தெரியல.. அதை தெரிஞ்சுக்க கூடிய சூழ்நிலையிலும் நான் இல்லை .அதுதான் என்னுடைய பிரச்சனை.. அதனால தான் அமைதியாக இருக்கேன் ..” என்றாள் வனிதா.
அவள் கையில் தட்டிக் கொடுத்து அழுத்தம் கொடுத்தவள்..” உங்க வீட்டுல பேச நீ ரெடியா இருக்க இல்ல?” என்று மீண்டும் நிவேதா கேட்க..
வனிதா தலையசைத்தாள்.
“அப்போ சீக்கிரமாவே உங்க வீட்ல பேச ரெடியா இருந்துக்கோ! எல்லாமே நல்லதா நடக்கும்!” என்று வனிதாவை அனுப்பி வைத்தாள்.. வேறு எதுவும் கூறாமல்,
திரும்பிப் பார்த்தபடியே வனிதாவும் சென்றிருந்தாள். வனிதா கிளம்பிய பிறகு சிறிது நேரம் பிரேமிடம் நிறைய விஷயங்களை கூறினாள்.
அதன் பிறகு, பிரேமை நவி வீட்டிற்கு அழைத்து செல்ல சொன்னாள்.
” நான் வந்து இருக்கிறது அவனுக்கு தெரியக்கூடாது..” என்று கூறியும் இருந்தாள்.. பிரேம் வீட்டிற்கு வந்த உடனே இருவரிடமும்..
ஆனால், நவியின் வீட்டிற்கு செல்ல போகிறேன் என நிவேதா கூறியவுடன் பிரேம் நவிலனனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் வேகமாக தட்டி விட்டு, சரண்யா , நிவேதாவுடன் நவிலன் வீட்டிற்கு சென்றான் ..
நவிலனின் தாய் அப்பொழுதுதான் மதிய உணவிற்கு சமைத்துக் கொண்டிருந்தார்..
போனில் அவ்வப்போது எப்போதாவது நிவேதாவிடம் பேசி இருக்கிறார் சுந்தரி.. போட்டோவில் ஒன்னு ரெண்டு முறை பார்த்திருப்பார்..
வீட்டிற்கு சென்றவுடன் அவரிடம் ” எப்படி இருக்கீங்க மா?” என்று கேட்க..
அவளைப் பள்ளி காலத்தில் பார்த்தவர் ஆகையால், ஒரு சில நொடி அவள் யார்? என்று புரியாமல் நின்றார்.. பிரேம் தான் “நிவேதா!” என்று கூற..
“ஓ! நீயா மா… வா வா! நல்லா இருக்கேன்..நீ எப்படி இருக்க? பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க ? பையனுக்கு கூட மூச்சு திணறல் பிரச்சினை இருக்கிறதா சொன்னான்.இப்போ எப்படி இருக்கான்?” என்று நலம் விசாரித்தார்..
“நல்லா இருக்கான்.. இப்போ பரவால்ல மா..”என்று கூறியவள். சில நொடி தயக்கத்திற்கு பிறகு, அவரிடம் பேச ஆரம்பித்தாள் .
“நம்ம நவிலனுக்கும் வயசு ஏறிட்டே போகுது இல்லமா கல்யாணம் பண்ணலாம் இல்ல..” என்றவுடன் அவளை தான் உறுத்து விழித்தப்படி பார்த்தார்.
” உங்களுக்கு எப்படியும் அவன் விரும்புவது தெரிந்திருக்கும்..” என்று கூற,
சரண்யா தான், இது அதிக பிரசிங்கி தனமாக இருக்கிறதோ? என்று அவள் கையைப் பிடித்தாள்.
இங்கு பிரேமுக்குமே கூட பயமாக இருந்தது.. ஏதாவது பிரச்சினையாகிவிடுமோ ? என்று “நிவே நீ வீட்டுக்கு கிளம்பு “என்றான் ..
“இல்லை “என்று இருவரிடமும் தலையசைத்தவள்.. சுந்தரியிடம் மேலும் பேச செய்தாள் .
“விடு டா பிரேம் என்னதான் பேசுதுன்னு நம்மளும் கேட்போம்..” என்ற சுந்தரியும் எதுவும் பெரிதாக சண்டை இடவில்லை ..
“அவன் விருப்பம் தெரியும்.. ஆனால் ,ஆசைப்படுறதுக்கு முன்னாடி யோசிக்கணும் இல்ல.. அது நமக்கு தகுந்தது தான என.. “
“சரிமா.. ஆனா, அவன் விருப்பப்பட்டுட்டான். அந்த புள்ளையும் அவனை விரும்புது, ரெண்டு பேருமே விரும்ப செய்றாங்க இல்ல “.
“விரும்ப செய்றாங்க தான்.ஆனா, அவங்க வீட்ல ஒத்துக்கனும் இல்ல..?”
” அதுக்கு முதல்ல நீங்க பேசணுமே!”
” சரிப்பட்டு வர விஷயத்தை பேசலாம் நிவேதா. இது சரியா வரும் எனக்கு தோணல. அந்த புள்ள எப்படி வாழ்ந்த பிள்ளை என்று நீயும் பார்த்திருப்ப.. உன் கூட தானே காலேஜுக்கு வந்துச்சு. நீ படிச்ச பள்ளிக்கூடத்துல தான் படிச்சுச்சு.. நம்ம வீட்டுக்கு சரிப்பட்டு வருமா சொல்லு? அவங்க வீட்ல நிறைய வசதி வாய்ப்பு இருக்கு. அது மட்டும் இல்லாம, அவங்க அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க..
நம்ப வீட்டுல பொண்ணு கொடுக்க மாட்டாங்க , அவங்க வசதி வாய்ப்பு நிறைய பாக்குறவங்க சாதாரணமா பேசுறதுக்கு.. இதுல சம்பந்தம் பண்ணனும்னா எந்த அளவுக்கு யோசிப்பாங்க.. அந்த அண்ணன்( சங்கர்) கூட ஓரளவுக்கு பரவாயில்ல. நல்லாத்தான் பேசுவாங்க .
வெளியே இருந்து பார்க்க எல்லாம் நல்லா தான் இருக்கும். உள்ள போனதுக்கப்புறம் தான் வலி அதிகமாகும் ” என்றார்..
” அப்போ உங்களுக்கு உங்க பையனோட வாழ்க்கையோ? இல்ல ,அவனோட சந்தோஷமோ முக்கியம் இல்லையா? ரெண்டு நிமிஷம் ஆகது உங்களையும் மீறி அவன் விரும்புற புள்ளையை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஆனா, அதைவிட உங்களோட சம்மதம் வேண்டும்னு நினைக்கிறான்” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, அடித்து பிடித்து நவிலன் வேலையில் இருந்தவன் வீட்டிற்கு வந்திருந்தான்.
நிவேதா வந்திருந்த செய்தி அறிந்து , அப்போதுதான் பிரேமின் மெசேஜை பார்த்து இருந்தான் ..மெசேஜ் போட்டு அவன் பார்க்கவில்லை என்றால், என்ன செய்வது என்று போன் செய்து விவரத்தை கூறவும் முடியாத சூழ்நிலையில் இருந்ததால், மிஸ்டு கால் மட்டும் விட்டிருந்தான் ..
“இவன் என்ன மிஸ்டு கால் கொடுக்கிறான்” என்று எண்ணி அவனுக்கு அழைக்கத்தான் சென்றான். ஆனால் ,அவனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது நிவேதா வந்திருக்கிறாள் என்றுதான் ஆரம்பத்தில் இருக்க..
பதறி என்னவென்று பார்த்தவன்… தன் வீட்டில் என்றவுடன் வேகமாக வந்து விட்டான்..
வந்தவன் ,” என்ன பண்ணிட்டு இருக்க இங்க?” என்று அவளிடம் தான் நேரடியாக சீறினான்..
அவனை திரும்பி முறைத்தவள்.. “நான் அம்மாவ பாக்க வந்தேன். அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் உங்க கிட்ட இல்ல..” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள் .
இருவரின் பேச்சு வார்த்தையை தான் உறுத்து விழித்தபடி இருந்தார்.. சுந்தரி.
எங்கு தன்னால் அவளுக்கு பிரச்சனையாகி விடுமோ ?என்ற நவிலனின் பதைப்பதைப்பும் , நண்பனுக்காக பேச வந்திருக்கும் நிவேதாவையும் பார்த்தவருக்கு சிறிது சந்தோஷமாகத்தான் இருந்தது ..
ஆனால் இவர்களின் நட்பை பற்றிக் கூட வனிதா வீட்டிற்கு தெரிய வந்தால் ,இவர்கள் உறவையே தவறாகத்தான் பேசக்கூடும்.. இதுவே தனது மகனுக்கு பெண் கொடுக்க முதலடியாக இருக்குமே !என்று மனதிற்குள் எண்ணினார். ஆனால், அதைத் தாண்டி இவருக்கும் நிறைய தயக்கம் ,தடுமாற்றம் என அனைத்தும் இருக்கத்தான் செய்கிறது .
தன் மகனின் விருப்பத்திற்கு ஏற்ப அவள் தன் மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் எண்ணுகிறார் .ஆனால், அவர்கள் வீட்டிற்கு சென்று பெண் கேட்பதற்கு நிறையவே தயங்கினார் .
அவன் எவ்வளவு கூறினான்.. “வீட்டுக்கு கிளம்பு.. சரண்யா கூட்டிட்டு போ !”என்று..
ஒரே வார்த்தையாக அவள் கிளம்ப மாட்டேன் என்று கூறி விட.
தன் தாய் அருகிலே அமைதியாக நின்று கொண்டான்.. அவளிடம் பெரிதாக வாதாட முடியாது. எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக நின்றான்.
நிவேதா தான் சுந்தரியிடம் பேச ஆரம்பித்தாள்.” இப்போ உங்க பையனோட வாழ்க்கைக்காக தான் நான் பேச சொல்றேன். அவன் எவ்வளவு இழந்து நிக்கிறான்னு உங்களுக்கே தெரியும். இத நான் சொல்ல வேண்டியதில்லை. அது எல்லாமே உங்களுக்காகனு நான் சொல்ல மாட்டேன் ..நீங்க அவனோட அம்மா உங்களுக்கு எல்லாமே செய்ய வேண்டியது அவனுடைய கடமை, பொறுப்பு.
அதே அளவுக்கு அவனுக்கு நீங்க செய்ய வேண்டியது உங்களோட கடமை, பொறுப்புன்னு இருக்குல்ல. இவ்ளோ நாள் வளர்த்தது படிக்க வச்சது இது கூட சேர்ந்து அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு தர்றதும் உங்க பொறுப்பு தானே! இவ தான் தன்னுடைய எதிர்காலம் ,புடிச்சிருக்குன்னு ஒரு பொண்ண தேர்ந்தெடுத்து இருக்கான். அந்த பெண்ணை கட்டி வைக்க நீங்க ஒரு ஸ்டெப் கால் எடுத்து வைக்கலாமே மா! அவங்க வீட்டுல குடுக்குறாங்க குடுக்கல அது அடுத்த விஷயம்.
ஆனால் ,நீங்க கேட்டுப் பார்ப்போம் யோசிச்சீங்களா? கேட்டா அத பேசுவாங்க, இதை பேசுவாங்க ,அவங்க அப்படி பட்டவங்க தான்னு யோசிக்கிறது சரியா ? தப்பே செய்யாம எத்தனையோ பேர் கிட்ட நம்ம காது கொடுத்து கேட்கக்கூடாத பேச்சை எல்லாம் கேட்டு இருப்போம்.. வாங்க கூடாதா பேச்செல்லாம் வாங்கி இருப்போம். பார்க்க கூடாதது எல்லாம் பார்த்திருப்போம்,
அது எல்லாத்தையும் தாண்டி ,இப்போ உங்க பையனுக்காக ஒரு அடி நீங்க இறங்கி வந்து அவங்க பேசினாலும் கேட்டுட்டு வருவோம்னு நினைச்சு போனா தான், அடுத்து , அவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிய வரும்.. இப்படி நம்ப நமக்குள்ளேயே அவங்க தர மாட்டாங்க, இப்படியெல்லாம் பேசுவாங்கனு சொல்லி தயங்கி நின்னா சரியா வருமா?
இப்ப அவன் தயங்கி நிக்கிற ஒரே காரணம். உங்களை யாரும் ஏதும் பேசிட கூடாதுன்னு தானே!. நீங்க தயங்க காரணமும் உங்க பையனை யாராவது பேசிட கூடாதுன்னு தான்.. உங்க இடத்தில் இருந்தும் நான் யோசிக்க தான் செய்றேன். ஆனா ரெண்டு பேருமே இவன் விரும்புன அந்த பொண்ணோட இடத்துல இருந்து கொஞ்சம் யோசிக்கலாம் இல்ல.. இவன் மேல தான முழு நம்பிக்கை வச்சு இருப்பா.. இப்போ உங்க பையன் இல்லைன்னு சொல்லி அவங்க வீட்ல வேற பையன கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னா அவனை கல்யாணம் பண்ணிட்டு போயிட முடியுமா ? அவ மனசுல உங்க பையன் இல்லாம இருந்தானா சரி.
அவ்ளோ விடுங்க! அவளே வேறு ஒருத்தவங்களை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா. அதுக்கப்புறம் உங்க பையன் சந்தோஷமா இருப்பானா? வேற பொண்ண கல்யாணம் பண்ணிடுவானா ?அப்படி கல்யாணம் பண்ணிட்டா உங்க பையனோட வாழ்க்கை தான் சந்தோஷமா இருக்குமா? உங்களுக்காக உங்க பிள்ளைங்க கல்யாணம் பண்ணிக்கலாம்.
ஆனா, அந்த வாழ்க்கையில் அவங்க சந்தோஷமா இருக்காங்களா? இல்லையா ?என்றது அவங்களுக்கு தான் தெரியும். ஒரு சிலர் போக போக மாறிடுறாங்க .. பெத்தவங்களுக்காகவும் கட்டிகிட்டவங்களுக்காகவும் மனச மாத்திக்க செய்றாங்க .ஆனால் எல்லோருடைய வாழ்க்கையும் அப்படி ஆகுறது கிடையாது.
ஏதோ ஒரு மூலையில் நம்மளோட ஆசை நிறைவேறாமல் போச்சு, நம்ம விருப்பம் நிறைவேறாமல் போயிடுச்சுன்னு வருத்தம் ஆயசுக்கும் இருக்கும்.
பின்னாடி என்னைக்கோ ஒரு நாள் நம்ம ஆசைப்பட்ட ,விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக்க நம்ப ஒரு அடி கூட எடுத்து வைக்கிலன்னு கவலைப்பட கூடாது இல்லையா? எடுத்து வச்சு அது நிறைவேறாமல் ,கைகூடாமல் போனால் கூட வேற, மனச தேத்திக்கலாம். நம்ப ஒரு ஸ்டெப் இறங்கி வந்தோம் எடுத்து வைத்தோம் என்று…அதுக்கு ஒரு அடி ஆச்சு நம்ம எடுத்து வைக்கணும் இல்ல.. எடுத்து வச்சு அது சரி வரலைன்றதுக்கும் , பயந்து கோழைத்தனமா விட்டுட்டு போறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே ..
அப்படி பயமும் , கோழைத்தனமும் இருந்தால் காதலிச்சு இருக்கவே வேண்டாமே! என்று இப்பொழுது கூறும்பொழுது நேராக தனது நண்பனை தான் பார்த்தாள்.
அடிபட்ட உணர்வு ..அவனுக்கு புரியாமல் இல்லை. தாய்க்காக என்று காதலித்தவளை விட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால், தன் தாயை சரி கட்டுவதற்கு யோசிக்கிறான். ஆனால் அதே நேரம் அவளது சூழ்நிலை என்ன என்று புரியாமல் இருக்கிறான் ..
அவள் யோசிப்பதே இவனது சூழ்நிலைக்கு தானே! அவனால் இப்பொழுது திருமணம் செய்து கொள்ள முடியுமா ?என்று தான் யோசிக்கிறாளே தவிர, தன்னால் தன் வீட்டில் பேச முடியாது என்று கூறவில்லையே! அவள் பக்கம் இருந்து அவளைக் குத்தம் சொல்ல முடியாது.
தன் காதலுக்காக போராட அவள் ரெடியாக இருக்கிறாள். ஆனால் இவனோ,தாய் என்று பாச வலையில் தவித்து நிற்கிறான். இவனையும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், அதற்கு காதலித்திருக்கக் கூடாது, காதலித்த பின்பு துணிந்து எதையும் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமே! என்று தான் இரவு முழுவதும் யோசித்தாள் நிவேதா..
சுந்தரியிடமும் பேச,” அவரோ சரிமா. நான் நல்ல முடிவா எடுக்கிறேன் ” என்றார்.
” நீங்க தான்மா இதுக்கு அப்புறம் மனசு வைக்கணும்.. “
“சரி நல்ல நாளா பார்த்து போய் பேசுறேன்..”
“பேசுறேன் பேசுறேன்னு நாள் கடத்தாம.. நாளைக்கு நல்ல நாளாவும் இருக்கு. முடிஞ்ச அளவுக்கு பேசி பாருங்க .. அதுக்கப்புறம் என்ன சொல்றாங்கன்றதை பொறுத்து நீங்க முடிவு பண்ணுங்க ஆனா,” என்றவள் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்..
” என் பையனோட வாழ்க்கைக்காக கொஞ்ச நாள் பழகுன நீயே வந்து இவ்வளவு பேசும்போது, அவனை பெத்து எடுத்த அம்மா எனக்காக நிறைய விஷயத்தை விட்டுக் கொடுத்து இருக்கான். அவன் ஆசைப்பட்ட படிப்பு ,வேலை இப்படி ஒவ்வொன்னா விட்டு கொடுத்திருக்கான்.
இப்ப எனக்காக தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கான்.. கூட பிறந்தவன் கிட்ட கூட என்னை விட்டுக் கொடுக்கல என் புள்ள. அப்படி இருக்கப்ப அவன் ஆசைப்பட்ட , விரும்பின ஒன்னை விட்டுக் கொடுத்துவிடுவேனா ?எனக்கும் அந்த புள்ளையை விட்டுவிட மனசு இல்ல. இருந்தாலும், குடும்பத்துக்காக பார்க்க வேண்டி இருந்துச்சு. பாப்போம், கேட்டு பார்க்கிறேன்.. முடியலை என்ற பட்சத்துல ஒன்னும் பண்ண முடியாது.
ஆனா, நீ சொன்ன மாதிரி ஒரு அடி எடுத்து வைக்கிறதுல குறைஞ்சிட மாட்டோமே .நீ சொன்ன மாதிரி தான் யார் யார்கிட்டயோ திட்டு வாங்கியாச்சு.. அவங்க வீட்லயும் பேசுற சூழ்நிலை வந்தா அமைதியா வந்துட வேண்டியது. தான்.. என் பிள்ளைக்காக இதைக்கூட தாங்கிக்க மாட்டேனா? “சேலை தலைப்பால் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளுக்கு ஜூஸ் கொடுத்தார்.
எதுவும் பேசாமல் வாங்கி குடித்தவள் ,”சரி மா நேரம் ஆகுது. வீட்ல பிள்ளைகளை விட்டுட்டு வந்து இருக்கேன். நான் வரேன்” என்று கிளம்பி விட்டாள் .
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நவிலன் அவளுக்கு தன் தாய் ஜூஸ் கொடுக்கும் போதே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

