
எபிலாக் :
சில வருடங்களுக்குப் பிறகு…
“இதயாம்மா… அந்தத் தாம்பூலத் தட்டை எடுத்து வச்சுட்டியா?” கீர்த்தனா சத்தம் கொடுக்க,
“கார்ல இருக்கு அத்தை” என்றவள், மண்டபத்திற்கு கொண்டு போகத் தேவையான பொருள்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆராய்ந்திருக்க,
“அண்ணி… பொண்ணுக்கு வாங்குன தங்க வளையல் பீரோல்ல இருக்கு. அதையும் எடுத்துடனும்” தியாகு மாலதியிடம் கூற, “இதயா நேத்திக்கே எடுத்து வச்சுட்டா தம்பி” என்றதும், “அப்படியா சரி சரி…” எனும்போதே, அங்கு வந்த இதயா, “எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிடுங்க மாமா… எல்லாமே கார்ல தான் இருக்கு” என்றாள்.
“நீ எடுத்து வச்சுட்டா கரெக்ட்டா தான்மா இருக்கும்” என்றவர் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல, அவளிடம் மென்முறுவல்.
“அக்கா இந்தப் பையனை பாருங்க… ஷர்வானி வேணாம்னு அடம்பிடிக்கிறான்” ஸ்வேதா நிறை மாத வயிறுடன் சோர்ந்து போய் வெளியில் வர, அவளருகில் மூன்று வயது மகன் சாய். ஸ்வேதா ரித்திக்கின் தவப்புதல்வன். தற்போது இரண்டாம் பிரசவத்திற்காகவும் தனது மாமன் மகன் விதுரனின் திருமணத்திற்காகவும் ஒரு வாரம் முன்னே வந்து விட்டாள்.
சாய் முன்னே அமர்ந்த இதயா, “ஏன்டா குட்டி வேணாம்னு சொல்றீங்க. இது ரொம்ப அழகா இருக்கு பாருங்க…” என்று அமைதியாக கேட்க, “நானும் ப்ரஜியும் சேம் பின்ச் போடணும்” என்று மழலையில் கூறினான்.
அதில் சிரித்த இதயா, “நீயும் ப்ரஜியும் ஒரே கலர் ட்ரெஸ் தான் போட போறீங்க…” எனும்போதே, தனது மகன் பிரஜனுக்கு ஷெர்வானி அணிவித்து, தானும் அதே நிறத்தில் ஷெர்வானி அணிந்தவனாக வெளியில் வந்தான் சத்ய யுகாத்ரன்.
கனவும் காதலும் கைகூடிய வனப்பில், ஆணழகனாய் மிளிர்ந்தான்.
“ஹை… நானும் அப்போ போட்டுக்குறேன்” என்று குதித்த சாயைக் கண்டு தலையில் அடித்த ஸ்வேதா, “இவனோட அக்கப்போர் தான்…” என்று மீண்டும் உள்ளே இழுத்துச் சென்றாள்.
“ம்மா நல்லாருக்கா?” நான்கு வயது மகனின் வினவளை கூட காதில் வாங்காமல் தன்னவனை பார்வையால் பருகிக்கொண்டிருந்தாள் இதயாம்ரிதா.
அவனும் மிச்சமின்றி அவளை ரசித்திருக்க, ‘இவங்களுக்கு வேற வேலை இல்ல’ என்ற ரீதியில் அவர்களை முறைத்து விட்டு, “பாட்டி நீயாவது சொல்லு. ட்ரெஸ் நல்லாருக்கா” எனக் கேட்டான் பரிதாபமாக.
“அழகு ராஜாடா நீ…” மாலதி நெட்டி முறித்துவிட, மண்டபத்திற்கு செல்ல தயாராகி வந்த விதுரன், இவர்களைக் கண்டு “ஹலோ இன்னைக்கு கல்யாணம் எனக்கு” எனக் கூறி அவர்கள் தவத்தைக் கலைத்தான்.
“நாளைக்கு நானும் இதே மாதிரி சிவபூஜைல கரடியா வந்து நிப்பேன்டா” என்று இதயா சாபமிட, “அடப்பாவி அண்ணி, ஆல்ரெடி உங்க தங்கச்சி அஞ்சு வருஷமா கரடி வேலை பார்த்துட்டா… ஒரு மனுஷன் 24 வயசுல கல்யாணம் பண்ண நினைச்சது அவ்ளோ பெரிய குத்தமா?” எனக் கண்ணைக் கசக்கியதில்,
இருவரும் அவனைக் கண்டு சிரித்தனர்.
அகிலும் பூமிகாவும் ஒரு வருடம் முன்பு தான் திருமணம் செய்திருந்தனர்.
மிதுனாவோ விதுரனுடன் காதல் வாழ்வில் திகட்ட திகட்ட அவனது அன்பையும் நட்பையும் அனுபவித்து விட்டு, தனக்கும் உமாவிற்குமான அன்பையும் பரிமாறி விட்டே திருமணத்திற்கு சம்மதித்தாள்.
அதில் விதுரனுக்கும் அதிக நிம்மதி தான். ஆனாலும் தன்னைக் காக்க வைத்து விட்டதாக அவளைக் கிண்டல் செய்து கொள்வான்.
முகூர்த்த நேரம் நெருங்கி வர, சத்ய யுகாத்ரன் ஸ்ரீராமிற்கு அழைத்தான்.
“எங்கடா போய் தொலைஞ்ச” எனும்போதே “இதோ மண்டபத்துக்குள்ள வந்துட்டேன்டா” என்று வேகமாய் வந்தான்.
சத்யா முறைத்ததில், “இதோ பாரு… உன் மருமகளை வச்சுக்கிட்டு நான் முகூர்த்த நேரத்துக்காவது வந்தேன்னு சந்தோசப்படு” என்றதில் பக்கென சிரித்தவன், பின்னால் பத்மபிரியாவின் முடியைப் பிய்த்துக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை திவ்யாவை வாங்கிக்கொண்டான்.
சத்யாவைக் கண்டதும் சிரித்த முகத்துடன் அவனிடம் தாவிய திவ்யா, “மாமா … ம்மா அடிக்கிறா” என உடைந்த மொழியில் பத்மாவை கோர்த்து விட, “அடிப்பாவி…” என்று வாயில் கை வைத்தவளின் சிகை அலங்காரம் எல்லாம் சின்னாபின்னமாக இருந்ததில், சத்யா கமுக்கமாக சிரித்தான்.
அங்கு வந்த இதயாவோ, “இது என்னடி புது ஹேர்ஸ்டைலா” எனக் கேட்டு பிபியை ஏற்றி விட, “அடியே” என்று மூச்சு வாங்கினாள் பத்மப்ரியா.
ஸ்ரீராமோ, “உன் மருமக குழந்தை இல்ல குட்டி சாத்தான். நீ செய்ற சேட்டையை எல்லாம் அவள் செய்றா…” எனும்போதே “மாமா” என்று அவனிடம் ஓடி வந்தான் ப்ரஜன்.
“ஹே சமத்துக்குட்டி” என்று அவனைத் தூக்கி கொண்ட ஸ்ரீராம், “நம்ம வேணும்னா பசங்களை எக்ஸ்சேஞ்சு பண்ணிக்கலாமா? நைட்டு முழுக்க தூங்க மாட்டுறா” எனக் கேட்டான் பாவமாக.
அதில் இதயாவும் சத்யாவும் வெடித்து சிரிக்க, “டேய்ய்ய்” என்று அவனைக் கிள்ளினாள் பத்மா.
“என் சோகம் எனக்கு…” ஸ்ரீராம் சிலுப்பிக்கொள்ள, “மாமா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க. பாப்பாவை நான் பாத்துக்குறேன்” எனத் தலையாட்டிக் கூறியதில், “கல்யாணம் முடியட்டும் உன்னைக் கடத்திடுறேன்” என்று கொஞ்சிக் கொண்டான்.
விதுரன் மிதுனாவிற்கு மாங்கல்யம் அணிவிக்கும்போது, அகில் தான் “என் நண்பனை காப்பாத்த நான் எவ்ளோவோ முயற்சி செஞ்சேன். ஆனா முடியல…” என்று வெகுவாய் வருத்தப்பட, “எதுக்குடா?” என வினவினாள் பூமிகா.
“இந்த கல்யாணத்துல இருந்து தான்” என்றதும், “அடேய்ய்ய்” என்று பூமிகா அவனை அடிக்கத் துரத்தியதில் அவர்களது குறும்புடன் இனிதே நடந்தேறியது மிதுனா விதுரனின் திருமணமும்.
————-
ஆங்காங்கே தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்க, கல்லூரி விழாவிற்காக தயாராகிக் கொண்டிருந்தனர் இளம் தலைமுறையினர்.
பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, இன்றைய தலைமுறையினரை உத்வேகப்படுத்தும் பொருட்டு, அனைவரையும் திரட்டி விழா வைப்பது அக்கல்லூரியின் வழக்கம்.
மேடையில் எச். ஓ. டி ஆந்தைக்கண்ணன் பேசத் தொடங்கினார்.
“வணக்கம் மாணவ மாணவிகளே!” என ஆரம்பித்து சில முன்னுரைகளுக்குப் பிறகு,
“இன்னைக்கு நம்ம காலேஜ்க்கு கெஸ்ட்டா வந்துருக்கறது ரிசர்வ் வங்கி மேலாளர் சத்ய யுகாத்ரன். இதே கல்லூரியில படிச்சு, இங்கயே பேராசிரியரா வேலை பார்த்து வந்தவர். பல தடைகள், பல அவமானங்களை தனியாளா தாண்டி இன்னைக்கு வெற்றிகரமான அதிகாரியா உங்க முன்னாடி நிக்கிறதை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்…” என்று அவனைப் பார்த்து புன்னகைக்க, அவனிடமும் அதே புன்னகை.
கீழே அமர்ந்திருந்த இதயாம்ரிதா, விசில் அடித்ததில் அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த ப்ரஜன் அவளை கேவலமாய் ஒரு பார்வை பார்க்க, “என்ன லுக்கு?” என்றதில், “விசில் அடிக்க கூடாதுமா. பேட் ஹேபிட்” என்றான் கண்ணை உருட்டி.
‘போடா டொமேட்டோ’ என முணுமுணுத்துக் கொண்டவள், மிடுக்காய் மேடையில் அமர்ந்திருந்த தன்னவனை விழிகளில் நிரப்பினாள்.
அகில் பூமிகா, மிதுனா விதுரன் என அனைவருமே பழைய மாணவர்களாய் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ந்தனர்.
பத்மப்ரியாவிற்கு ஏனோ அங்கு வர பிடித்தமில்லை. ஆனால், சத்யா சிறப்பு விருந்தினராய் இருப்பதால் மட்டுமே அங்கு வந்தாள்.
அவளைக் கண்டதும் ப்ரஜன், “பாப்பா எங்க அத்தை” என வினவ,
“அவளோட தாத்தாட்ட இருக்கா ப்ரஜி” எனும்போதே,
“ஏன்டி இவ்ளோ நேரம்?” தன்னருகில் அமர்ந்த பத்மாவை கடிந்தாள் இதயா.
ஸ்ரீராம் அவளிடம் “ஹே நீயும் தான சீஃப் கெஸ்ட் இங்க உக்காந்துருக்க?” என வினவினான்.
“நானே எம். பி. ஏ வை பாதில நிறுத்தி இருக்கேன். அதுவும் இல்லாம, அங்க உக்காந்தா என் ஆளை சைட் அடிக்க முடியாது ராம்” என்றவளை முறைத்தான்.
“இது அவனுக்கே அவனுக்கான ஒரு தருணம். எங்கு வீழ்ந்தானோ அங்கேயே அவன் ஆலமரமாய் எழுந்து நிற்பதற்கான நேரம். அங்கு அவன் மட்டுமே நடுநாயகமாக வீற்றிருக்க வேண்டுமென்ற பெண்ணின் அழுத்தமே, தனக்கு வந்த சிறப்பு விருந்தினர் என்ற பட்டத்தை நிராகரிக்க வைத்தது.
தற்போது சத்ய யுகாத்ரனை சிறப்புரையாற்ற அழைக்க, துள்ளல் நடையுடன் கம்பீரத்தின் மறுவுருவமாய் மைக்கின் முன் தோன்றினான்.
சில முன்னுரைகளுக்குப் பின், “பல அவமானங்கள் பல தடைகள்னு சார் சொன்னது உண்மைதான்.
ஆனா அந்த அவமானங்களுக்கு தோள் கொடுக்க கண்டிப்பா ஒரு நட்பு வேணும். அந்த நட்பு எனக்கு குடுத்த நம்பிக்கை தான் என்னை எழ வச்சுது” என்று ஸ்ரீராமை பார்க்க, அவன் திகைத்தான்.
‘இப்ப இந்த எஸ். டி. டி தேவையா’ என்றாலும் அவனது உயர்வில் மகிழும் முதல் உள்ளம் அல்லவா அவன்.
“இனி கனவு காணவே வழி இல்லைங்கும்போது, கனவை நோக்கி ஓட வைக்கிறது ஒரு விசித்திரமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை என் மேல வச்சு, என் கனவுக்கான பாதைல நிறைஞ்சுருக்குற முள்ளை எல்லாம் எடுத்து விட்டு என்னை ஓட வச்சது என் காதல். என் துணையா, என் கனவுக்காக அடியெடுத்து வச்ச என் குடும்பம், தம்பி, தங்கச்சின்னு நிறைய பேர் இருக்காங்க. இது தனியா வாங்குன வெற்றி இல்ல. அதே நேரம், இனி எழ வழியே இல்லைன்னு மட்டும் நினைச்சுடாதீங்க. எப்ப விழுந்தாலும் தூக்கி விட யாரும் வர்றாங்களோ இல்லையோ, கிடைச்ச பிடிமானத்தை வச்சு எந்திரிச்சுடுங்க…” என மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு கீழிறங்க, கரகோஷம் கல்லூரியெங்கும் பரவியது.
இதே இடத்தில் கூனிக் குறுகி காவல் நிலையம் சென்றதெல்லாம் ஒரே ஓர் நொடி கண்முன் தோன்றிட, கண்ணை மூடி நிதானித்தவனின் பார்வையை தனதாக்கி இருந்தாள் இதயாம்ரிதா.
———
விழா முடிந்ததும் “விதுரா, பிரஜியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டு” என்று மகனை அவனுடன் அனுப்பி வைத்தவன், ஸ்ரீராம் பத்மப்ரியாவை இருக்க வைத்தான்.
“என்னடா?” ஸ்ரீராம் கேட்க, “ஒரு இடத்துக்குப் போகணும்…” என்றான்.
இதயாம்ரிதா அவனைப் புரியாமல் பார்த்து “எங்க பிரொஃபி?” என்க, “உனக்கே தெரியாதா?” என்ற பத்மப்ரியாவின் வினவளுக்கு பதில் உரைத்தபடி மூவரும் சத்யாவுடன் சென்றனர்.
சத்யா சில வருடங்களுக்கு முன் வாங்கி இருந்த வீடு அது. ஆனால் வீடாக இல்லை. இதயாம்ரிதா வெகு வருடங்களுக்கு முன் ஆசைப்பட்டது போல, அது ஒரு ட்ரஸ்ட் ஆக மாறி இருந்தது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை அது.
அதைக் கண்டு இதயா திகைக்க, பத்மப்ரியாவும் இணைந்தே திகைத்தாள்.
“ஈஸ்வரி அறக்கட்டளை” பெயர்ப்பலகை பெரியதாய் மாட்டப்பட்டிருந்தது. அவளது தாயின் பெயர்.
கண் கலங்கி நின்றவளுக்கு மீண்டும் தாயின் ஸ்பரிசம் கண்ட உணர்வு.
ஸ்ரீராம் அவளது கையைப் பிடித்துக் கொண்டான் ஆதரவாக. அவனும் சத்யாவும் இணைந்து செய்தது தான் இந்த அறக்கட்டளை. தத்தம் துணைவியரின் ஆசைக்காக! சேவைக்காகவும்…
உள்ளூர உறுத்திக் கொண்டிருந்த சிறு குற்ற உணர்வும், ஈஸ்வரி அறக்கட்டளை என்ற பெயரைப் பார்த்ததும் மெல்ல தணிந்தது இதயாம்ரிதாவிற்கு.
இதுநாள் வரை அவனிடம் ட்ரஸ்ட் பற்றிய எந்த கருத்தும் தான் கூறவில்லையே என அதே சிந்தையில் இருந்த இதயாம்ரிதா, அவன் கொண்டு வந்திருந்த திட்டங்களை விளக்கி, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் நிராதரவானவர்கள் என அனைவர்க்கும் தேவையான வசதிகளை சிறப்புற செய்திருந்ததில் கர்வம் மிளிர்ந்தது.
உள்ளார்ந்த மகிழ்வுடன் பத்மப்ரியா ஸ்ரீராமுடன் கிளம்பி விட, யோசனையில் மூழ்கிப்போன இதயாம்ரிதாவிற்கு எப்போது கார் கிளம்பியதென்றே தெரியவில்லை.
“ஹலோ மேடம் இறங்குங்க!” சத்யாவின் குறும்பு குரலில் நிகழ்விற்கு வந்தவள், அதன்பிறகே தன்னைக் கடற்கரைக்கு அழைத்து வந்ததைக் கண்டாள்.
“இங்க எப்ப வந்தோம் நம்ம?” அவள் வியப்பாய் கேட்க, அவளது கையைத் தன்னுடன் கோர்த்தபடி மணலில் நடந்தவன், “அதைக் கூட கவனிக்காம என்ன யோசனைடி?” என்றான்.
“எவ்ளோ யோசிச்சும், உங்ககிட்ட நான் ட்ரஸ்ட் பத்தி பேசுனதா ஞாபகம் வரலையே பிரொஃபி” என உதட்டைப் பிதுக்கினாள்.
அழகாய் புன்னகைத்தவன், “நம்ம காலேஜ் டூர் போயிருக்கும்போது, படிச்சுட்டு இருந்தவனை டிஸ்டர்ப் பண்ணி கதை பேசிட்டு இருந்தியே அப்போ…” என்று நினைவுபடுத்தினான்.
“ஹா… எஸ் எஸ்… அப்போ சொன்னேன்ல. ஆனா அதெல்லாம் ஞாபகம் வச்சுருந்தீங்களா என்ன?” வியப்பாய் கேட்டவளிடம்,
“உன்கூட இருந்த சின்ன விஷயம் கூட மறக்கல எப்பவுமே!” என்றவனின் காதலின் ஆழம் அவளை சிலிர்க்க வைத்தது.
அலைகளுக்கு அருகில் நின்று, அவளையும் தன்னெதிரே நிறுத்தியவன், “ஹேப்பி பிர்த்டே டூ யூ, ஹேப்பி பிர்த்டே டூ மீ!” என்றான் சன்ன சிரிப்புடன்.
அவர்கள் முதல் முதலாய் கல்லூரியில் பார்த்துக் கொண்ட நாளை பிறந்தநாளாக கொண்டாடுவதாக முடிவு செய்திருந்ததை இன்று பிரகடனப்படுத்தினான் அந்த மேலாளர்.
தலையாட்டிச் சிரித்தவள், “ஹேப்பி பர்த்டே பிரொஃபி” எனும்போதே இன்னும் சிரிப்பு பீறிட்டது.
“என்னவாம்?” அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.
“சின்னப்பிள்ளைத்தனமா இல்ல… சும்மாவே நம்ம பையனுக்கு நம்மள பார்த்தா கடுப்பா இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சா அவ்ளோ தான், நான் ராம் மாமா கூடவே போறேன்னு போயிடுவான்” என்று கலகலவென சிரிக்க, அதுவே அவனையும் தொற்றிக்கொண்டது.
“அவனுக்குத் தெரியாம பார்த்துக்குவோம்” எனக் கண்ணை உருட்டியதில், மீண்டுமொரு முறை புதிதாய் அவனிடம் மனதை இழந்து நின்றாள்.
“என் ஆபிஸ்ல ஒரு வேலை காலியா இருக்கு வர்றீங்களா?” குறும்பு கூத்தாட அவள் கேட்டதில், “என்ன வேலை?” என்பது போல பார்த்தான்.
“9 டு 9 ஹஸ்பண்ட் வேலை” கண் சிமிட்டிக் கேட்டதில் அவனிடம் வெட்கப்புன்னகை பரவியது.
“நல்லாருந்துச்சு அந்த ஜாப்!” மேலுதட்டை ஈரம் செய்தபடி கூற, அவளுக்கு ஜிவ்வென இருந்தது.
“ஹே நம்ம வேணும்னா புதுசா, இந்த ஜாபை கிரியேட் செஞ்சு, புதுசா ஃபர்ஸ்ட் இருந்து லவ் பண்ணி, ஃபர்ஸ்ட் இருந்து ப்ரஜிக்கு தங்கச்சி பாப்பா ரெடி பண்ணலாமா?” என மினுக்கும் வசீகரத்துடன் வினவியவனின் சட்டையைப் பிடித்து தன்புறம் இழுத்தவள்,
“ஆல்ரெடி நீங்க எனக்கு 9 டு 9 ஹஸ்பண்ட் தான். அண்ட், தினமும் நம்ம லவ் புதுசு தான்” என்றவளின் மூச்சும் அவன் மூச்சோடு கலக்கத் தொடங்க, அவர்களது புதுக்காதலின் புனைவுகளை நுரையாய் தழுவி, அதனுடன் ஈடுகொடுக்க இயலாது ஏக்கப்பெருமூச்சுடன் மீண்டும் ஆழ்கடலினுள் சேர்ந்த கடலலை போலவே, நாமும் விடைபெறுவோம்.
முற்றும்!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Story super sis…. Love, comedy athota motivation… Super story sis…
Thank you soooo much sis 😍😍😍🤩🤩🤩
அருமை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
Thank you soooooo much akka 🤩🤩😍😍