
அத்தியாயம் 27
அழைப்பு மணியின் ஒளியில் கதவைத் திறந்த யாமினி, வாயிலில் நின்று இருந்த மாமன் மகளைக் குழப்பத்துடன் நோக்கினாள்.
“நீ என்ன ஆஃபிஸ் போகலயா? காலையிலயே இங்க வந்து நிக்கிற?”
“உங்களையும் அத்தையையும் பார்க்க ஒரு கெஸ்ட் வந்திருக்காங்க.”
பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்த ராணி, “யாரு?” என்றிட, தோழியின் பின்னிருந்து வெளிப்பட்டாள் மௌனிகா.
அவளைக் கண்டதும் அன்னை மகள் இருவரது முகமும் சுருங்கிவிட, கேள்வியாய் நோக்கினர்.
பயணம் செய்து வந்த வாடகை வாகனத்திற்கு பணத்தை கொடுத்து விட்டு ஒரு நிமிடம் தாமதமாய் வந்த சரண், “வணக்கம்!” என்று பொதுவாய் கைக் கூப்பிட, இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“யாரு ரஞ்சனி இது?” என ராணி விசாரிக்க, “மௌனியைக் கல்யாணம் செஞ்சுக்க போறவரு அத்தை. உங்களைப் பாக்கணும்னு சொன்னாரு. அதான் கூட்டிட்டு வந்தேன்.”
இரண்டு தினங்களிற்கு முன்னர் நடந்த நிகழ்வால் மௌனிகாவின் மீது வருத்தம் இருந்தாலும், வந்திருக்கும் புது மனிதனை நாகரீகம் கருதி வரவேற்று அமர வைத்தனர்.
யாமினி அருந்துவதற்கு நீரையும், இனிப்பு மற்றும் காரம் நிறைந்த தட்டு ஒன்றையும் கொண்டு வந்து டீப்பாயின் மீது வைத்திட, “தண்ணி மட்டும் போதும்மா.” என்று அதனை இருமிடறு மட்டும் அருந்தினான் சரண்.
“சொல்லுங்க தம்பி..” என மூத்தவர் விசாரிக்க, “உங்களுக்கு நன்றி சொல்லுறதுக்காக வந்தேன்மா!” என்றபடி எழுந்து நின்றான்.
அவனது வார்த்தைகளில் குழப்பம் மேலிட, “நன்றியா? எதுக்குப்பா?”
“நான் இன்னைக்கு சென்னைக்கு வந்த பின்னாடி தான் நடந்த விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். மௌனியோட இக்கட்டான நேரத்துல, எனக்கு என்னனு விட்டுடாம உங்க பையன் கூட இருந்து அவளுக்காக சண்டைப் போட்டு உதவி செஞ்சிருக்காரு. அந்த நேரத்துல, அது ரொம்ப பெரிய விஷயம் ம்மா. அதான் நேர்ல பார்த்து தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன்.
ரஞ்சனி நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா. உங்க மகன் மேல இருக்க போலீஸ் கம்பிளைண்டை, நான் பார்த்துக்கிறேன். இதுனால எந்த பிரச்சனையும் இனி வராது. அதோட, அவரு பியூச்சருக்கும் நான் பொறுப்பு.”
ராணியும் யாமினியும் அவனைத் திகைப்புடன் பார்க்க, “என்னம்மா அப்படிப் பார்க்கிறீங்க? நான் சும்மா வாய் வார்த்தையா சொல்லல. எனக்கும் கொஞ்சம் ஆளுங்களைத் தெரியும். அதுனால இதை எல்லாம் ஒன்னும் இல்லாம செஞ்சிடலாம்! பிள்ளைக்கு ஏதாவதுனா, பெத்தவங்க மனசு சங்கடப் படத்தான் செய்யும். இனி, எதுக்கும் நீங்க வருத்தப்படாதீங்க. எல்லாம் பழைய மாதிரி மாறிடும்!” என்று சமாதானம் உரைக்க, ‘அவன் உரைப்பது உண்மையோ பொய்யோ?’ எனினும் இத்தனை தூரம் தேடி வந்து நன்றி சொல்லி ஆறுதலும் மொழிந்தவனின் செயலில் இருவருமே சற்று மனம் இளகி நோக்கினர்.
“எனக்கும் மௌனிக்கும் நெக்ஸ்ட் மந்த் கோவில்பட்டியில மேரேஜ். நீங்க, உங்க பையன் பொண்ணோட கண்டிப்பா விசேஷத்துக்கு வரணும். நான், உங்களுக்கு ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி வைக்கிறேன். இல்லேனா வீட்டுக்கே வந்து எங்கக்கூட தங்கிக்கோங்க! மோனி வா!” என அவளையும் அழைத்து இருவருமாய் இணைந்து அழைப்பிதழைக் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டார் ராணி.
“ஸாரிம்மா.. எனக்கு ஹெல்ப் பண்ணப் போயி, நீங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற மாதிரி ஆகிடுச்சு. இனி, இது மாதிரி எதுவும் நடக்காது. ஏற்கனவே நடந்ததையும் சீக்கிரம் சரி செஞ்சிடுறோம்!” என்று அவளும் சொல்ல, இரு பெண்களுமே இயல்பாய் ஏற்றுக் கொண்டனர்.
முன்னரே ரஞ்சனியின் மூலமாய் மௌனியை பற்றி அறிவர்தான். பாவையின் மேல் கரிசனமும் இருந்தது. எனினும் அவளால் தங்களது வீட்டுப் பிள்ளை பிரச்சனையில் சிக்கிக் கொண்டானே என்றுதான் சிறிது வருத்தம். அதையும் தற்போது சரணின் இயல்பான பேச்சும் அவளின் மன்னிப்பும் மறைய வைத்துவிட, அச்சூழலில் தானாய் பொருந்தி போயினர்.
சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு கிளம்பிட, “அவ்வளவு தான அண்ணா? நான் ஆஃபிஸ் கிளம்பட்டுமா?” என ரஞ்சனி விட, “என்னம்மா, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்ற? இனிதான் முக்கியமான கெஸ்ட்டை மேரேஜுக்கு இன்வைட் பண்ணணும், போகலாமா?”
“எங்க அண்ணா?” என்று அவள் புரியாமல் வினவிட, “யாரு சரண்?” என மௌனியும் கேள்வியாய் நோக்கினாள்.
“போனதும் நீயே தெரிஞ்சிப்ப!” என்றவன் நண்பன் அருணிற்கு அழைப்பு விடுத்தான்.
“சொல்லு மாப்பிள்ள, கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது?”
“அது பாட்டுக்கு நடக்குது. நான் சென்னைக்கு வந்திருக்கேன். தம்பி ஊருல இருக்கானா.?’
“அங்கதான் இருக்கான். என்ன, சென்னைக்குத் திடீர் பயணம்?”
“மோனியைப் பார்க்க வந்தேன்.”
“அதுசரி! ரொம்ப ஸ்பீடா இருக்கியே மாப்பிள்ள? முதல்ல பார்த்த பொண்ணுக்காக, நீ இது மாதிரி எதுவும் செஞ்சதா எனக்கு ஞாபகம் இல்லையே?”
“செஞ்சா தானே ஞாபகம் இருக்குறதுக்கு?”
மறுபுறம் சிரித்தவன், “நல்லவேளை வேணாம்னு சட்டுனு முடிவு எடுத்துட்ட. இல்லேனா, உன்னோட குணத்துக்கு, கல்யாணம் ஆன ரெண்டு மாசத்துல டைவர்ஸ் கேட்டிருப்ப!”
“ம்ம்..” என சரண் மெலிதான பெருமூச்சை வெளிவிட, “என்ன விஷயம், எதுக்கு தம்பியை கேட்ட?”
“சின்னதா ஒரு பிரச்சனை மாப்பிள்ள. மோனியை ஒருத்தன் அடிச்சிட்டான். அது போலீஸ் கம்ப்ளைன்ட் வரைக்கும் போயிடுச்சு.”
“என்னடா சொல்லுற? எந்த நாயி தங்கச்சியை அடிச்சது? என்கிட்ட எதுவும் சொல்லல நீ.?”
“எனக்கே தெரியாது. இன்விடேஷன் கொடுக்கிறதுக்காக இங்க வந்த பின்னாடி தான் தெரிஞ்சுகிட்டேன்.”
“சரி, அடுத்து என்ன செய்யப் போற?”
“தம்பியை, ஆளுங்களோட நான் சொல்லுற அட்ரஸுக்கு வரச்சொல்லு!” என்று பேச்சை முடித்தவன், இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஒன்றரை மணி நேர பயணத்தில்.. ஒரு தனி வீட்டின் முன்பு அவர்கள் சென்ற வாகனம் நிற்க, “எங்க வந்திருக்கோம்?” என வினவினாள் மௌனி.
“சந்துருவோட பேரண்ட்ஸ் இருக்கிற வீடு!”
அவன் தனியாய் வீடு எடுத்து அந்த குடியிருப்பில் தங்கி இருப்பதை இரு பெண்களுமே அறிவர். கணியனுடனான சண்டைக்குப் பின்னர், காவல் நிலையத்திற்கு வந்த அவனின் பெற்றோர், தங்களுடனேயே மகனை அழைத்து வந்திருந்தனர்.
அவர்களின் இருப்பிடம் பற்றி எவருக்கும் இதுவரை தெரியாது. சந்துரு பகிர்ந்து கொண்டதும் இல்லை.
‘சரணிற்கு எப்படித் தெரிந்தது?’ என இருவரும் வியப்பும் அதிர்ச்சியுமாய் பார்க்க, அடுத்த இரண்டாவது நொடி இன்னொரு வாகனம் அவர்களின் எதிரே வந்து நின்றது.
வரிசையாய் உள்ளிருந்து தேக பலத்துடன் நான்கு ஆண்களும், அவர்களிற்குத் தலைவன் போல் ஒருவனும் இறங்கி வந்தனர்.
தலைவனாய் இருந்தவன், “அண்ணே..” என்றபடி சரணின் கைப்பற்றிக் குலுக்க, “எப்படி இருக்க திவா?”
“ஃபைன், நீங்க?”
“ஃபர்ஸ்ட் கிளாஸ்.”
“அருண் உங்களுக்குக் கல்யாணம்னு சொன்னான்.”
தன் அருகே இருந்தவளைக் கைக் காட்டியவன், “இது மௌனிகா. நான், கட்டிக்கப் போற பொண்ணு. அது, அவளோட ஃப்ரெண்ட்.” என அறிமுகம் செய்தான்.
“ஹலோ அண்ணி!” என திவாகர் மரியாதை செலுத்துவது போல் நெற்றியில் இரு விரல்களை வைத்து கை அசைத்திட, அவள் ஒன்றும் புரியாமல் நோக்கினாள். ரஞ்சனிக்கோ சுத்தமாய் பேச்சே வரவில்லை. சற்றே பதற்றத்துடன் தோழியின் கையைப் பற்றி நின்றிருந்தாள்.
“என்ன விஷயம் அண்ணே?” என்று அவன் விசாரிக்க, “மௌனியை லவ் பண்ணுறேன்னு இந்த வீட்டுல இருக்கிறவன் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.”
“இதுக்கு எல்லாமா அண்ணே நாங்க வேணும்? நீங்களே நாலு போட்டு அனுப்பி இருக்கலாமே..?”
“சும்மா பின்னாடி சுத்தியிருந்தா பரவாயில்ல. புத்தி தெளிஞ்சதும் தானா போயிடுவான்னு விட்டுடலாம். ஆனா இவன் அசிங்கமா பேசி கையை நீட்டி இருக்கான். ஹெல்ப் பண்ண போன மோனியோட தம்பியையும் அடிச்சு, போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போக வச்சுட்டான்.”
“அண்ணியை அடிச்சானா?” என மௌனியைப் பார்த்த திவாகர், அவனது வீக்கிய கன்னத்தைக் கண்டதும் சரணை நோக்கினான்.
“பசங்க இங்கேயே இருக்கட்டும். நீ மட்டும் என்கூட உள்ள வா.” என்றவன், இரு பெண்களையும் பார்த்து, “போகலாமா?” என வினவினான்.
மௌனி கேள்வியாய், “யாரு இது?” என்று விசாரிக்க, “அருண் தெரியும்ல? நம்ம எங்கேஜ்மெண்ட்ல இண்டிரோடியூஸ் பண்ணேன்.
“எஸ்.. ஞாபகம் இருக்கு.”
“அவனோட சித்தப்பா பையன், திவாகர். பாக்ஸரா இருக்கான்.”
“ஓ..”
அவன் சிரித்து, “என்ன அண்ணி, ரௌடி பசங்கனு நினைச்சிட்டீங்களா?” எனக் கேட்க, “ஸாரி, எனக்குத் தெரியாது இல்லையா?”
“பரவாயில்ல. வாங்க, வேலையைப் பார்ப்போம். அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா, உங்க மேலயே கை வச்சிருக்கான்.?”
“அது ஒரு ஆர்வக் கோளாறு கேஸு ப்ரோ!” என ரஞ்சனி உரைத்திட, மூவரும் சிரித்தனர்.
முதலில் சென்று கதவைத் தட்டியது திவாகர் தான்.
சந்துருவின் அன்னை வாயிலிற்கு வந்து விசாரிக்க, “நாங்க உங்க பையனோட ஃப்ரெண்ட்ஸ். இவருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. அதான் இன்வைட் பண்ணலாம்னு வந்தோம்!” என்றிட, “வாங்கப்பா.” என்ன உள்ளே அழைத்து அமர வைத்தார்.
காவல் நிலையத்தில் இரு பெண்களையும் காணும் சந்தர்ப்பம் அமையாததால், சந்துருவின் அன்னை, அவர்களை அறிந்திருக்கவில்லை.
வருகை தந்திருப்பவர்களுக்கு தேநீர் தயாரிக்க அவர் செல்ல, “யாரும்மா?” என்று கேட்டபடியே வந்தான் சந்துரு.
அவ்விடத்தில் மௌனியையும் ரஞ்சனியையும் கண்டு திகைத்து நிற்க, “நான் ஶ்ரீசரண். மோனியோட உட்பி!” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் ஆடவன்.
இரு கரங்களையும் கால் சராயின் பாக்கெட்டிற்குள் நுழைத்தபடி அவன் நின்றிருந்த தோற்றம், ஏனோ மனதில் ஒருவித தவிப்பை உண்டாக்கியது.
மௌனி தன்னைச் திருமணம் செய்து கொள்ளப் போகிறவனைப் பற்றி உரைத்தது சந்துருவிற்கு நினைவிற்கு வர, “ஹோ.. நீ தானா அவன்? வார்த்தையால பதில் சொல்ல மாட்ட. செயல்ல தான் உன்னோட பதில் இருக்கும்னு சொன்னா இவ!”
“ம்ம்.. அப்படியா மோனி சொன்ன.?” என்று அவன் பாவையின் பக்கம் திரும்ப, ‘ஆம்’ என்பதாய் தலை அசைத்தாள் அவள்.
“என்னைப் பத்தி அவன்கிட்ட சொல்லி இருக்க. ஆனா, நடந்ததை என்கிட்ட சொல்ல தோணலேல உனக்கு.?”
“ஸாரி சரண்..” என மறுமொழி உரைக்க முயன்றளின் இதழ்களில் வலது கையின் ஒற்றை விரலை வைத்து பேச்சை நிறுத்தியவன், “நீ என்கிட்ட ஸாரி சொல்லவோ, விளக்கம் கொடுக்கவோ அவசியம் இல்ல. நடந்து முடிஞ்சதை அப்படியே விட்டுடு. இனி எது நடந்தாலும் சரி, என்கிட்ட ஷேர் பண்ண முயற்சி செய்!”
அவள் அதற்குப் புன்னகையில் பதில் அளிக்க, “திவா!” என்றான் சரண்.
அவன் சந்துருவின் இரு கரங்களையும் பின் பக்கமாய் சேர்த்துப் பிடித்துக் கொள்ள, “மோனி! என அழைத்தான்.
பாவையானவள் கேள்வியாய் நோக்க, “நம்ம மேல வலுக்கட்டாயமாக ஒரு விஷயத்தை திணிச்சா, அதை டபுள்லா திருப்பிக் கொடுத்திடணும். நம்ம எதிர்ப்பு ஸ்ட்ராங்கா இருந்தா தான், அடுத்து அவன் நம்மளை நெருங்க யோசிப்பான்.” என்றிட, “இவனை அடிச்சு, என்னோட மரியாதையை நான் குறைச்சிக்க தயாரா இல்ல!” என மறுத்தாள்.
“தட்ஸ் குட்!” என்று புன்னகைத்த ஆடவன் திவாகரைப் பார்க்க, சந்துருவை முன் பக்கமாய் திருப்பி இரண்டு அறைகள் விட்டிருந்தான் அவன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடி தூள் 👏👏👏👏👏