
சமுத்திரா – 29:
கடலின் அடியில் இருந்து கொத்துக் கொத்தாக வந்த கொடிகள் அனைத்தும் கப்பலின் மேலே படர தொடங்கின.
“இந்த கொடில மாட்டுனா என்ன டா ஆகபோகுது? ரொம்ப பயப்படுத்துறீங்?” என ப்ரதீப் சந்தேகமாக கேட்டான்.
“டேய் நீ காத்துல சுத்துற தைரியத்துல பேசுற டா. அதை பாத்தாலே உனக்கு தெரியலையா டா. அது எவ்ளோ தடியா இருக்கு. அது மட்டும் நம்மள சுத்தி ஒரு முறுக்கு முறுக்குனா என்னாகுறது?” என்றான் அமரன்.
“ஆமா டா. இந்த ப்ரதீப் காத்துல மறைஞ்சு போய்ட்டதால சுறா, கொள்ளைக்காரங்கன்னு எல்லாத்துகிட்ட இருந்தும் தப்பிச்சிட்டான்.” – ரங்கா.
“இதோ ஆறு போட்டு அவனை வர வெச்சி. நாம எல்லாரும் வெச்சி செய்யலாம்.” என விலோ கிண்டலாக சொன்னாள்.
“இப்படி இருந்து பாருங்க டா. என்னோட கஷ்டம் தெரியும்.” என ப்ரதீப்பும் விடாமல் பேசினான்.
அந்நேரம் கடலில் இருந்து வந்த கொடி அப்படியே கப்பலுக்குள் சென்றது. சில நிமிடங்கள் கழித்து, “ஆ!” என அலறிக் கொண்டு ரிச்சார்ட் அந்த கொடியில் சிக்கியபடியே வந்தான். விலோவுடன் முதலையிடமிருந்து தப்பிக்க உள்ளே சென்றவன் இப்பொழுது இந்த கொடியில் சிக்கி வெளியே வந்தான்.
“ஓ நோ! ரிச்சார்ட்!” என அழைத்தப்படியே மார்ட்டினும் விக்டரும் அவனிடம் சென்றனர். ஷிவன்யா, விலோவை தவிர்த்து மற்ற அனைவரும் கூட ரிச்சார்டை காப்பாற்ற அங்கு சென்றனர்.
“சிக்காம இருந்தா சிரமமாமிருக்காதுன்னு க்ளுல வந்துச்சி. சிக்காதீங்கன்னு சொன்னா யாரு கேட்குறீங்க? வேணும்னே வாண்டடா போய் அதுகிட்ட சிக்குறது..” என புலம்பிய படியே ப்ரதீப்பும் காற்றிலே அவர்களிடம் சென்றான்.
அந்த கொடூர கொடியில் ரிசார்டின் கால் நன்றாக சிக்கியிருந்தது. கொடியின் இழுப்பிற்கு செல்லாமல் அங்கிருந்த பாய்மரத்தை கெட்டியாக பிடித்தபடி நின்றுக் கொண்டான் ரிச்சார்ட். அந்த கொடூர கொடியும் அவனை இழுப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தது.
அங்கே சென்ற ஆடவர்களின் குழு, ரிச்சார்ட் காலில் இருந்த ஷூவை முதலில் கழட்டினர். பின், கொடியில் சிக்கப்பட்டிருந்த ரிச்சார்டின் காலை மெல்ல விடுவித்து அவனை அந்த கொடியிடமிருந்து காப்பாற்றினர். அந்த கொடி அப்படியே பின் வாங்கியபடி கடலுக்குள் சென்று மறைந்தது.
“உங்களுக்கு ஒன்னும் இல்லையே ரிச்சார்ட்..” என அவரின் நலம் விசாரித்தனர்.
“யா! ஐம் ஓகே..” என்ற ரிச்சார்ட் காலை நன்கு உதறி சரி செய்தார்.
அவர்களிடமிருந்து கடலுக்குள் பின்வாங்கி சென்ற கொடி, பல கொடிகளை அதற்கு துணையாக அழைத்தப்படி கப்பலின் உள்ளே மீண்டும் வந்தது. “இதென்ன ஒன்னு போய் பத்தை கூட்டிட்டு வருது. எதுக்கோ எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிறதையாவே இருங்க.” என ப்ரதீப் முடித்தும் அந்த கொடி அனைவரின் கால்களை நோக்கி வளைந்து வந்தது.
“எல்லாரும் ஒரே இடமா இருக்காம ஓடிட்டே இருங்க. எதுக்காகவும் நிற்காதீங்க..” என்ற ரங்காவுடன் சேர்ந்து அனைவரும் கப்பலின் மேல் தளத்திலே ஓட துவங்கினர். அவர்கள் எங்கே சென்றாலும் அந்த கொடியும் வளைந்து நெளிந்து அவர்களை பின் தொடர்ந்தபடியே சென்றது.
ஷிவன்யாவையும், விலோவையும் மட்டும் பத்திரமாக ஒரு இடத்தில அமர வைத்துவிட்டனர். ஓடியபடியே கொடியிடம் சிக்காமல் அவர்களிடம் வந்த அமரன், “ஷிவ் இப்ப நீ தான் போடணும். சீக்கிரமா போடு..” என அவளின் முன்னே விளையாட்டு போர்டை விரித்து வைத்தான்.
பகடையை கையில் எடுத்த ஷிவன்யா அதனை மெதுவாக உருட்டிவிட்டாள். “கொஞ்சம் வேகமா தான் போடுறது. நீ போடுற வேகத்தை பார்த்தா வர்ற ஆறு கூட வராது போல.” என ப்ரதீப் சொல்லி முடிக்க பகடையில் இரண்டு என விழுந்தது.
எட்டில் நின்றிருந்த ஷிவன்யாவின் நீலநிற கப்பல் இரண்டு கட்டங்களை கடந்து பத்தில் சென்று நின்றது. அடுத்த நொடி அந்த குமிழுக்குள் எழுத்துக்கள் தோன்ற துவங்கியது.
“எனக்கென்னமோ உனக்கு உருவம் கிடைக்குறது கொஞ்சம் கஷ்டம் தான் போல ப்ரதீப்.” என்ற விலோ, “என்ன வந்திருக்குன்னு படி ஷிவ். ஏதாவது வந்து இந்த கொடியெல்லாம் போய்ட்டா போதும்.” என தோழியிடம் சொன்னாள்.
உனக்கான விளையாட்டை
மீண்டும் விளையாட
ஓர் சந்தர்ப்பம்!
என குமிழுக்குள் வந்த குறிப்பை வாசித்த ஷிவன்யா, “மறுபடியும் நானே போடணும் போல..” என மீண்டும் பகடையை கையில் எடுத்தாள்.
“ஹே! இப்பவாது வேகமா உருட்டிவிடு. அப்ப தான் ஆறு வரும்.” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்தது.
“ஆறு! ஆறுன்னு எதுக்கு டா ஏலம் விட்டுட்டே இருக்க. வர்றப்ப வரும். இல்லனா இப்படியே காத்துல சுத்திட்டு இரு.” என்றான் அமரன்.
அப்பொழுது அங்கே வளைந்து நெளிந்து அமரனின் காலில் படர்ந்த கொடி அவன் என்னவென உணரும் முன்னே அங்கிருந்த சமுத்திரா விளையாட்டு பெட்டியை சுருட்டிக் கொண்டது.
“ஹே! நம்ம கேம்..” என விலோ சொல்ல,
“ஐயையோ அதை அப்படியே கடலுக்குள்ள கொண்டுட்டு போக போகுது. சீக்கிரமா அது கிட்ட இருந்து பிடுங்குங்க..” என ஷிவன்யா கத்தினாள். அவளாலும் விலோவாலும் இடத்தை விட்டு நொடியும் நகர முடியவில்லை.
சக்தி, ரங்கா மற்றும் அமரன் மூவரும் அதனிடம் இருந்து பிடுங்க போராடினர்.
ஆனால் மூவரின் பலமும் அந்த கொடியினிடம் தோற்க துவங்குவது. அந்நேரம் தான் மார்ட்டின் விக்டர், ரிச்சார்ட் என அனைவரும் சேர்ந்து இழுத்தனர். விடுவேணா? என அந்த கொடியும் சமுத்திரா விளையாட்டை விடாமல் அதன் புறம் இழுத்தது.
“எதோ கயிறு இழுகுற போட்டி மாதிரி இருக்கு. அந்த கடற்கன்னி வந்து இப்ப நமக்கு ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும்.” என ப்ரதீப் சொன்னான். ஆனால் அவளை அப்பொழுது எங்கேயும் காணவில்லை.
“அமர்! இந்தாங்க இந்த வாளை யூஸ் பண்ணி கேம் போர்டை பிடுங்குங்க..” என்ற ஷிவன்யா முதலையை வெட்ட உபயோகித்த வாளை அவர்களை நோக்கி தூக்கி வீசினாள். அவளின் அருகில் இருந்த விலோ எதோ சொல்ல வர அவளால் முழுதாக சொல்ல முடியவில்லை. அதனை ஷிவன்யாவும் கவனிக்க தவறினாள்.
கீழிருந்த வாளை கையில் எடுத்த அமரன், அதன் மூலம் அந்த கொடியை வெட்ட முயன்றான். ஆனால் அவனால் அதன் மீது ஒரு சிறு கீறல் கூட போட முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றவன் சோர்வுற்றான்.
அந்த கொடி, கப்பலின் விளிம்பு வரை சமுத்திரா பெட்டியை இழுத்தபடி சென்றது. அப்பொழுது மார்ட்டினும் அமரனுடன் இணைந்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து அவர்களின் பலம் மொத்தத்தையும் திரட்டி அந்த கொடியை வெட்டி வீசினர்.
பாதி வெட்டப்பட்ட நிலையில் அந்த கொடி துடித்துடித்தப்படியே கடலிற்குள் பின் வாங்கியது. “என்னடா இது மனுஷனுங்க மாதிரியே துடிக்குது?” என ப்ரதீப் கேட்க,
“அதுவும் ஒரு உயிரினம் தான? அதுமில்லாம இந்த உலகத்துல இருக்க எதையுமே நம்ப முடியலை.” என்ற ரங்காவின் பார்வை கடலில் ஒரு இடத்தில நிலைகுத்தியது. அங்கே கடற்கொள்ளைக்காரர்கள் மீண்டும் அவர்களை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருபத்து தெரிந்தது.
“அந்த ஆரலிக்கு அறிவே இல்லை போல. மறுபடியும் அமரனை தேடி வரா..” என்றான் ப்ரதீப். அதில் மற்ற நண்பர்களும் சிரித்துவிட்டனர்.
“அந்த கொள்ளைக்காரங்க நம்மகிட்ட வற்ரதுக்குள்ள நாம கேமை முடிக்க பார்க்கணும். வாங்க போலாம்..” என அமரன் திரும்ப, அங்கிருந்த சில் கொடிகளும் தானாகவே கடலுக்குள் பின் வாங்க துவங்கின.
“ஒருவேளை நாம வெட்டுனது தான் அதோட தலைவன் போல. அதான் அது போனதும் இதுங்களும் பின்னாடியே போகுதுங்க..” – ப்ரதீப்.
“போனதுங்க அப்படியே போய்ட்டா நிம்மதி. இல்ல வெட்டுனதுக்கு பழி வாங்குறன்னு திரும்பி வராம இருந்தா ரொம்ப நல்லது.” – ரங்கா.
“விட்டா நீயே அதுங்களுக்கு எடுத்துக் கொடுப்ப போல டா.” என்ற ப்ரதீப், “ஆறு போடு ஷிவ்” என அவளிடம் திரும்பினான்.
அந்நேரம் அனைவரிடமும் எதோ செய்கையில் விலோ சொன்னாள். “வாயை திறந்து தான் சொல்லேன். வாயில என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க?” என ப்ரதீப் கேட்க,
கலங்கிய விழிகளுடன் அனைவரும் பார்த்தாள். “என்னாச்சு மறுபடியும் உடம்பெல்லாம் வலிக்குதா?”
“இடுப்பு வலிக்குதா?”
“கால் வலிக்குதா?”
என அனைவரும் தனித்தனியாக கேட்டனர். அனைத்திற்கும் விலோ, இல்லை! இல்லை! என தலையை மட்டுமே அசைத்தாள்.
“என்ன தான் பண்ணுது?” என்ற ரங்கா அவளின் கரத்தை பிடித்தான். அவனையே விழி அசைக்காமல் பார்த்தாள் விலோ.
“உன்னால பேச முடியலையா விலோ?” என சரியாக ரங்கா கேட்டான். ‘ஆம்!’ என தலையை அசைத்தவள் அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“ஹே! இவ்ளோ நேரம் பேசுன தான?” என ப்ரதீப் கேட்டான்.
அதற்கு பதில் சொல்ல விலோ வாயை திறக்க அவளின் நாக்கு கழுத்து வரை நீண்டு வெளி வந்தது.
பூச்சிகளை பிடிக்க தவளைக்கு அதனின் நீண்ட நாக்கு தான் பெரிதாக உதவுமாம். அது போல தவளையாக பரிணாமம் அடையும் விலோவிற்கு அடுத்த கட்டமாக அவளின் நாக்கு நீளமாக வளர துவங்கியது.
அனைவரும் விலோவின் நாக்கை பயத்துடன், கவலையுடனும் பார்த்தனர். தலையை குனிந்துக் கொண்ட விலோ மெல்ல அதனை சுருட்டி வாயிற்றுக்குள் தள்ளினாள்.
அவளின் நிலையை பார்த்த அனைவருக்குமே கண்கள் கலங்கியது. ‘எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறாள்!’ என அவளை பற்றி மற்றவர்கள் கவலைக் கொண்டனர்.
“இட்ஸ் ஓகே விலோ. நாம சீக்கிரமா இந்த கேமை முடிச்சிட்டு நம்ம ஊருக்கு போய்டலாம்..” என அவளின் முதுகை வருடினான் ரங்கா.
ப்ரதீப் என்ன பேசினாலும், அதற்கு எதிர்வினையாற்றும் விலோ அமைதியாக இருப்பது ப்ரதீப்பிற்கே ஒரு மாதிரியாக இருந்தது.
“விடு விலோ. கொஞ்ச நேரம் உன்னோட தொல்லை இல்லாம நாங்க இருந்துக்குறோம்.” என்றான் ப்ரதீப்.
“மவனே இன்னும் கொஞ்ச நேரம் தான். ரெண்டு பேர்ல யாரு ஆறு போட்டாலும் நீ எங்க முன்னாடி வந்து தான் டா ஆகணும். அப்ப இருக்கு உனக்கு..” என்ற அமரன் ஷிவன்யாவிடம் பகடையை போட சொன்னான்.
இம்முறை ஷிவன்யாவின் கரத்தில் இருந்து விழுந்த பகடையில் மூன்று என வந்தது. பத்தில் நின்ற ஷிவன்யாவின் நீலநிற குட்டி கப்பல், ஏற்கனவே பன்னிரண்டில் நின்றுக் கொண்டிருந்த சக்தி மற்றும் ப்ரதீப்பின் கப்பல்களை கடந்து பதின்மூன்றில் சென்று நின்றது.
“ஷிவ் நீதான் இப்ப பர்ஸ்ட்.” என அமரன் சிரிக்க,
“பர்ஸ்ட் போனா அவார்டா கொடுக்குறாங்க. ஒழுங்கா அடுத்து நீ ஆறு போடுற இல்லை உன்னை நான் கூறு போட்டுடுவேன்.” என ப்ரதீப் விலோவை மிரட்டினான்.
“டேய் ஓவரா பேசாத டா. ஷிவன்யாக்கு என்ன வந்திருக்குன்னு முதல்ல பார்ப்போம். அடுத்து விலோ கிட்ட போகலாம்.” என்றான் ரங்கா.
அதன்படி அங்கு குமிழில் தோன்றிய எழுத்துக்களை அனைவரும் வாசிக்க துவங்கினர்.
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
+1

