Loading

பரத்தைக் கண்டதும் துஷ்யந்தினால் சில நொடிகளுக்கு இருந்த இடத்திலேயே வேர் ஊன்றிப் போய் விட்டான்.

யாரோ என்று இருக்கும் போதே பரத் மீது காரணமே இல்லாமல் உயிரை வைத்து இருந்தான் துஷ்யந்த்.

இப்போது பரத் தன் உயிரணுவில் ஜனித்தவன் என்பதை அறிந்ததில் இருந்து துஷ்யந்த் அவனாகவே இல்லை.

அங்கு நின்று இருந்த இன்னொரு மருத்துவர் துஷ்யந்தை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தவன் அவசரமாக பரத்திற்கான சிகிச்சையை ஆரம்பித்தான்.

பரத்தின் வயதும் ஏற்கனவே பலவீமாக இருந்த இதயமும் இந்த விபத்தும் சேர்ந்து பரத்தின் நிலையை மேலும் மோசமாக்கிக் கொண்டே சென்றது.

துஷ்யந்திற்கு பரத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது கண்கள் குளமாகி பார்வை மங்கிக் கொண்டே சென்றது.

பல மணி நேர போராட்டங்களுக்குப் பின் ஒருவாறு மருத்துவ சாதனங்களின் உதவியால் பரத்தின் உயிரைப் பிடித்து வைத்தனர்.

அது கூட பரத் கண் விழிக்கும் வரை சந்தேகம் தான்.

ஆனால் உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிடில் பரத்தை நிச்சயம் காப்பாற்ற முடியாது.

ஐ.சி.யூவில் இருந்த ஏனைய மருத்துவர்களும் தாதிகளும் சென்ற பின் உடல் முழுதும் கட்டுப் போடப்பட்டு சுய நினைவே இன்றி வெளுத்த முகத்துடன் மருத்துவ சாதனங்களின் உதவியால் படுத்துக் கிடந்த பரத்தின் அருகில் ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்து கொண்ட துஷ்யந்த் சிறுவனின் கரத்தை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டு அதில் முகத்தைப் புதைத்து மௌனமாகக் கண்ணீர் சிந்தினான்.

முதல் நாள் எங்கிருந்தோ ஓடி வந்து தன்னில் மோதியதில் இருந்து சாக்லேட் அங்கிள் என வாய் நிறைய அழைத்துத் தன் கழுத்தைக் கட்டிக் கொள்வதும் உரிமையாக தன்னிடம் பழகுவதும் என இத்தனை நாள் பரத்துடன் பழகிய ஒவ்வொரு நொடியுமே காட்சிகளாய் வந்து வந்து துஷ்யந்தைத் திணறடித்தன.

“சேம்ப்… முதல் நாள் நான் தான் உன்னோட டேடியான்னு கேட்டியே. இப்போ சொல்றேன். இந்த உலகத்துக்கே சொல்லுவேன் நான் தான் உன்னோட டேடி. நான் தான் உன்னோட அப்பா. டேடி என்ன சொன்னாலும் குட் போய் போல என் சேம்ப் கேட்டுப்பீங்க தானே. பாவம் மம்மி. ரொம்ப நேரமா வெளிய அழுதுட்டு இருக்காங்க. சீக்கிரம் கண்ணைத் திறந்து பாரு கண்ணா. ஐ ரியலி வான்ட் டு ஹக் யூ டைட்லி. ப்ளீஸ் டா கண்ணா. சத்தியமா என்னால முடியல. இவ்வளவு நாளும் நான் ரொம்ப ஸ்ட்ரோங்கான டாக்டர்னு நினைச்சேன். ஆனா என்னோட வீக் பாய்ன்ட்டே நீ தான் கண்ணா.” என்ற துஷ்யந்த் தான் ஒரு மருத்துவர் என்பது கூட மறந்து சத்தமாக அழுதான்.

மனதில் இத்தனை நாட்கள் அழுத்திய பாரங்கள் எல்லாம் கரையும் அளவுக்கு அழுது தீர்த்து விட்டு வெளியே வந்தவனின் கண்கள் சிவந்து போய் இருந்தன.

அதனைக் கண்டு அனைவரும் பரத்துக்கு என்னவோ எனப் பதற, தன்னை சமன் செய்து கொண்ட துஷ்யந்த், “நாளைக்கு மார்னிங் உள்ள பரத் கண் முழிக்கணும். அப்புறம் தான் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ பரத் தாண்டுவான். இல்லன்னா ரிஸ்க். அன்ட் சீக்கிரமா ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணணும். இதுக்கு மேல டிலே பண்ண முடியாது.” என்றான் இறுகிய குரலில்.

அதனைக் கேட்டு சகுந்தலா கண்ணீர் வடிக்க, “நானும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் துஷ்யந்த். சீக்கிரம் பரத்துக்கு பொருத்தமான ஹார்ட் கிடைக்கும்னு நம்புவோம். எல்லாரும் கடவுள வேண்டிக்கோங்க.” என சந்திரசேகரன் கூறிய மறு நொடியே பரிமளம் ஒரு ஓரமாக அமர்ந்து கடவுளிடம் கை ஏந்தி தன் பேரனுக்காகப் பிரார்த்தித்தார்.

“அப்புறம் துஷ்யந்த் இன்னொரு விஷயம். நான் சகுந்தலாவோட பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட விசாரிச்சேன். அந்த ரிஷிகேஷ் அந்த ஏரியால எல்லார் கிட்டயும் சகுந்தலா கேரெக்டர் பத்தி தப்பா சொல்லி வெச்சி இருக்கான். பரத்தோட விளையாடுற பசங்க காதுல அவங்க பேரன்ட்ஸ் இதைப் பத்தி பேசுறது எப்படியோ விழுந்து கொஞ்சம் நாளாவே அப்பா பெயர் தெரியாத பையன், பரத்தோட அம்மா மோசமான பொம்பளை இப்படி சொல்லி பரத்த புலி பண்ணி இருக்காங்க. இன்னைக்கும் அது தான் நடந்து இருக்கு. அப்போ தான் பரத் கோவம் வந்து அந்தப் பசங்க கூட சண்டை போட்டுட்டு அங்க இருந்து ஓடி இருக்கான். பரத்துக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிஞ்சு அந்தப் பசங்க பயந்து எல்லாம் வீட்டுல சொல்லி இருக்காங்க. நான் இப்போ தான் விசாரிச்சிட்டு வரேன்.” என்றார் சந்திரசேகரன் வருத்தமான குரலில்.

அதன் பின்னரே சகுந்தலாவிற்கும் துஷ்யந்திற்கும் பரத்தின் திடீர் மௌனத்தின் காரணம் தெளிவாகப் புரிந்தது.

எத்தனை நாட்கள் அனைத்தையும் மனதில் போட்டு வைத்து கஷ்டப்பட்டு இருப்பான் என நினைக்கும் போதே அனைவருக்கும் மனம் தாளவில்லை.

துஷ்யந்திற்கோ இப்போதே ரிஷிகேஷைக் கொன்று போடும் அளவுக்கு வெறி வந்தது.

இருந்தும் இப்போது பரத்திற்கும் சகுந்தலாவிற்கும் தன் துணை அவசியம் என்பதால் தன் கோபத்தை உள்ளுக்குள் வைத்துப் பூட்டினான்.

காலையில் இருந்தே சகுந்தலா சாப்பிடக் கூடச் இருந்த இடத்தில் இருந்து அசையாது அழுது கொண்டே இருப்பதைக் காணும் போது துஷ்யந்திற்கு மனம் கனத்தது.

அவன் பார்வை சகுந்தலாவில் வேதனையுடன் படிய, சகுந்தலாவிற்கு ஆறுதலாக அவளுடன் நின்றிருந்த நிரஞ்சனா அனைத்தையும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தாள்.

சொல்லொணா வேதனை அவளை ஆட்டிப் படைத்தது.

தன் வீட்டிற்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டு இருந்த நிரஞ்சனா இங்கு நடந்தவற்றையும் மேலோட்டமாகக் கூறி இருக்க, நிரஞ்சனாவின் வீட்டினரோ ஆவேசத்துடன் உடனே கிளம்பி வரப் பார்த்தனர்.

ஏனென்றால் சம்பந்தமே இல்லாமல் இங்கு பாதிக்கப்பட்டு இருப்பது அவர்களது வீட்டுப் பெண்ணின் எதிர்காலம் அல்லவா?

நிரஞ்சனா தான் ஏதேதோ கூறி அவர்களை சமாளித்து இங்கு வர விடாமல் தடுத்து விட்டு இருந்தாள்.

துஷ்யந்தின் பார்வை சகுந்தலா மீது வேதனையுடன் படிய, என்ன தான் துஷ்யந்த் மீது கோபமும் வருத்தமும் இருந்தாலும் அவனின் கலங்கிய முகம் நிரஞ்சனாவை வருத்தியது.

உடனே வெளியே செல்ல வர மறுத்த சகுந்தலாவைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றாள் நிரஞ்சனா.

அதனைக் கண்டு அவளை நன்றியுடன் நோக்கிய துஷ்யந்தைப் பார்த்து ஒரு கசந்த புன்னகை நிரஞ்சனாவின் முகத்தில்.

ஐ.சி.யூ என்பதால் யாராலும் பரத்தின் அருகே இருக்க முடியவில்லை.

துஷ்யந்தின் உதவியுடன் சகுந்தலா இடை இடையே வந்து பார்த்து விட்டுச் சென்றாள்.

பரத்தை அப்படி ஒரு நிலையில் காணும் போது சகுந்தலாவிற்கு உயிர் போவது போல் வலித்தது.

அவளை சமாதானப்படுத்துவதே அங்கிருந்தவர்களுக்கு பெரும்பாடாக இருந்தது.

ஆனால் அவ்வளவு நடந்து கொண்டு இருக்கும் போதும் துஷ்யந்த் சகுந்தலாவின் அருகே செல்லவில்லை.

தூர இருந்தே அவளின் வேதனையைத் தனக்குள் உள் வாங்கினான்.

மருத்துவர் என்பதால் துஷ்யந்த் மட்டும் பரத்தின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவன் அருகேயே இருந்தான்.

சாப்பிட, தூங்க என எல்லாமே மறந்து போய் விட்டான்.

சந்திரசேகரனும் பரிமளமும் கூட அவனிடம் கெஞ்சிப் பார்த்தனர்.

துஷ்யந்த் அவ் இடத்தை விட்டு அசையவே இல்லை.

சகுந்தலாவே ஒரு கட்டத்தில் துஷ்யந்திடம் வந்து கெஞ்ச, பலன் என்னவோ பூச்சியம் தான்.

மறுநாள் காலை அனைவரையும் பதற வைத்து விட்டு மெதுவாக இமைகளைப் பிரித்தான் பரத்.

பரத்தின் இதயம் நன்றாகவே பலவீனமாக இருப்பதால் மருத்துவ சாதனங்கள் இன்னுமே பொருத்தப்பட்டு இருந்தன.

பரத்திடம் லேசாக அசைவு தெரியவுமே துஷ்யந்திற்கு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.

லேசாக இமைகளைப் பிரித்த சிறுவனோ தன் அருகில் துஷ்யந்தைக் காணவும், “சாக்லேட் அங்கிள்…” என்றான் திக்கித் திணறி.

ஆனால் காற்று மட்டும் தான் பரத்தின் வாயில் இருந்து வெளி வந்தது.

பரத்தின் இதழ் அசைவை வைத்தே அவன் கூற வருவதைப் புரிந்து கொண்ட துஷ்யந்த் தன்னை மறந்து பரத்தை அணைத்துக் கொண்டு கதறி விட்டான்.

பரத்தின் முகத்தில் போட்டு இருந்த ஒக்சிஜன் மாஸ்க்கைக் கூட கழட்டவில்லை.

அதனாலேயே பரத்திற்கு பேசுவதற்கு இன்னும் சிரமமாக இருந்தது.

போதாக்குறைக்கு உடல் வலி படுத்தி எடுக்க, பரத்தின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

தன் உதிரத்தின் வேதனையைக் கண்டு துஷ்யந்திற்கு இதயம் உடைந்து போனது.

சில நொடிகளிலேயே பரத் மீண்டும் மயங்கி விட, அதன் பின்னரே வெளியே வந்து அனைவருக்கும் தகவல் தெரிவித்தான் துஷ்யந்த்.

சகுந்தலாவோ அங்கேயே மடங்கி அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மருத்துவ உபகரணங்களுடன் சேர்த்து பரத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு தனி அறைக்கு மாற்றிய பின்னர் தான் ஒவ்வொருவராகப் போய் அவனைப் பார்த்தனர்.

சகுந்தலா பரத்தின் அருகிலேயே அமர்ந்து இருக்க, துஷ்யந்தைத் தவிர மற்றவர்கள் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி விட்டு வந்தனர்.

நிரஞ்சனாவோ சகுந்தலாவுக்கும் துஷ்யந்திற்கும் உணவைக் கட்டி எடுத்து வந்து பரிமாற, துஷ்யந்திற்குத் தான் குற்றவுணர்வு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இத்தனை நடந்த பிறகும் இன்னுமே நிரஞ்சனா துஷ்யந்தை ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அவனைக் குற்றம் சாட்டவும் இல்லை.

ஆனால் நிரஞ்சனாவின் மன வேதனையை அவளின் முகமே காட்டிக் கொடுத்தது.

அதனைக் கவனித்த சகுந்தலா பரத் பூரணமாகக் குணம் அடைந்ததும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் தன் மகனை அழைத்துக் கொண்டு எங்காவது தூரம் சென்று விட வேண்டும் என உடனே முடிவு எடுத்தாள்.

ஆனால் நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான் என்றும் நம் தலைவிதியையே மாற்றக் கூடிய வல்லமை அவனுக்கு இருக்கிறது என்பதையும் பெண்ணவள் மறந்து விட்டாள்.

மீண்டும் பரத் கண் விழித்த போது சகுந்தலா அவன் அருகே அமர்ந்து இருக்கக் கண்டவன் முகத்தில் உடல் வலியையும் மீறி ஒரு மென் புன்னகை.

இதற்கு வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு?

அதே நேரம் துஷ்யந்தும் அங்கு வந்து ஒரு ஓரமாக நின்று தாயையும் தனையனையும் வேடிக்கை பார்க்க, துஷ்யந்தைக் கண்டு கொண்ட பரத் அவனை நோக்கி தன் கரத்தை நீட்டினான்.

புன்னகையுடன் பரத்தின் அருகே வந்து அவன் நீட்டிய கரத்தைப் பிடித்துக் கொண்ட துஷ்யந்த் இருவரின் கோர்த்து இருந்த கரத்தையும் எடுத்து தன் உதட்டில் வைத்துக் கொண்டான்.

சகுந்தலா இந்த இரண்டு நாட்களிலும் ஒன்றை மட்டும் நன்றாகக் கவனித்தாள்.

அது முன்பு போல் இல்லாமல் துஷ்யந்திடம் பரத் மீது ஒரு உரிமை உணர்வு எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

இதை எல்லாம் காணும் போது சகுந்தலாவின் மனதிலோ ஆயிரம் குழப்பங்கள்.

துஷ்யந்திடம் ஒரு கரத்தைக் கொடுத்து இருந்த பரத் மறு கரத்தால் தன் தாயின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு பெரிதாகப் புன்னகைக்கவும் அப் புன்னகை சகுந்தலாவையும் துஷ்யந்தையும் கூடத் தொற்றிக் கொண்டது.

அதே நேரம் பரத்தைப் பார்ப்பதற்காக அவ் அறைக்குள் நுழைந்த நிரஞ்சனா அக் காட்சியைக் கண்டு அசையாது அங்கேயே நின்று விட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்