Loading

அத்தியாயம் 39

முக்கியச் செய்திகள்:

‘நிவோரா நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான விஷால் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, சில வருடங்களுக்கு முன்பு கல்லூரிப் பேராசிரியர் சத்ய யுகாத்ரனின் மீது போலியான பாலியல் குற்றத்தை ஜோடித்தது உறுதியாகி உள்ளது.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளையும் பேராசிரியர் சத்ய யுகாத்ரனையும் இணைத்து உருவாக்கிய போலியான வீடியோக்கள், இணையதளத்தில் வெளியாகிய சிறிது நேரத்திலேயே சத்ய யுகாத்ரன் பணியில் இருந்து நீக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

மேலும் ஒரு வருடச் சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் இருந்த மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதோடு, இரண்டு மாணவிகள் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.

ஆகினும் விஷால் மற்றும் அவரது குழுவினர், உண்மையை மறைத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட உள்ளனர். உண்மையை மறைக்க, உடன் பயின்ற பத்மப்பிரியாவின் தாயாரைக் கடத்திக் கொலை செய்த வழக்கும் பதிவாகிய நிலையில் கூடிய விரைவில் தக்க தண்டனை வழங்கப்படும். என இணை ஆணையர் கணேசன் தெரிவித்து உள்ளார். இதற்கு முழு முக்கியக் காரணமான, இறந்த ராம்குமாரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேர்மையான பேராசிரியரின் மீது ஜோடித்த பாலியல் வழக்கினால் அவர் அனுபவித்த தேவையற்ற சிறைத் தண்டனைக்காக, சரிவர விசாரிக்காத காவல் துறையினரை இணையவாசிகள் கண்டித்து வருகின்றனர்.

மேலும், சத்ய யுகாத்ரனைப் பணி நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகமும் தனது வருத்தத்தைத் தெரிவித்தது.

நிவோரா மற்றும் ஒளிரா நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரான இதயாம்ரிதா, தனது கணவனின் மீது தவறான வழக்குத் தொடுத்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவரது புகாரின் பெயரில், கண்மூடித்தனமாகப் பணக்கார வர்க்கத்தின் பிடியில் போலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரு உயர் அதிகாரிகள், கமிஷனர், சத்ய யுகாத்ரனுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்கள் என அனைவரும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

பல மாணவிகளின் பெயரும் இதில் அடங்கியிருப்பதால், இதுவும் ஒரு பாலியல் வழக்காகப் பதிவு செய்யப்படும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நிவோரா நிறுவனத்தைச் சட்டப் பூர்வமாக மூடப் போவதாக அறிவித்துள்ளார் மிஸஸ் இதயாம்ரிதா.

விரிவான செய்திகளுக்குத் தொடர்ந்திருங்கள்…’

செய்தித் தொகுப்பாளர் தடையற்றுப் பேசியதை வெறித்துப் பார்த்தான் சத்ய யுகாத்ரன்.

இதனை, அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது அதிர்விலேயே தெரிந்தது.

அன்று காலையில் எழும்போதே இதயாம்ரிதா அருகில் இல்லை.

யோசனையுடன் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சத்ய யுகாத்ரனுக்கு ஸ்ரீராம் அழைத்தான்.

“என்னடா?”

“டேய், நியூஸ் பாரு…” அவன் குரலில் ஒரு பரபரப்பு.

உமா அந்நேரம் டைனிங் டேபிளில் காலை உணவை எடுத்து வைத்து விட்டு, “தம்பி, சாப்பிட்டுப் போங்க… உங்க பொண்டாட்டி தான் நேரம் காலம் பார்க்காமல் கிளம்பிடுறா…” எனக் குறைப்பட்டுக் கொள்ள, அவருக்குத் தலையசைத்தபடி பதற்றத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியை ஓட விட, அதில் கேட்ட செய்திகள் உமாவையும் அதிர்விற்குள்ளாக்கியது.

———–

தனது வீட்டுத் தோட்டத்தின் இருக்கையில் அமர்ந்து, எப்போதும் வேகும் தனிமைத் தீயில் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாள் பத்மப்பிரியா.

தாயைப் பற்றி எதிர்பார்த்த செய்தி தான். அப்போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மாத்திரையின் மூலமே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

கடத்தியவர்கள், நேரா நேரத்திற்கு மருந்து கொடுத்தா பார்த்திருப்பார்கள்!

ஆனாலும், துக்கம் தொண்டையை அடைத்தது. அவரைக் கடத்தியபோதே தைரியமாகச் செயல்பட்டு, இதயாம்ரிதாவிடம் உண்மையைக் கூறி இருக்க வேண்டும்.

தனது பயத்தால், அவளும் தானுமாக இத்தனை இன்னல்களை அனுபவித்ததும் அல்லாமல், தனது தாயை அனாதையாய் இறக்க வைத்து விட்ட வேதனை நெஞ்சை அரித்தது.

‘பிணத்தைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விட்டார்களாம்…’ நினைக்கும் போதே கேவல்கள் அதிகரித்தது அவளுக்கு.

சில நொடிகளில் அருகில் நிழலாட, பக்கென இருந்தது.

கதவை எல்லாம் உள்பக்கமல்லவா தாழ் போட்டிருந்தாள்.

அதிர்ந்த விழிகளுடன் திரும்பிப் பார்த்தவளின் கண்களுக்கு விருந்தானான் ஸ்ரீராம்.

“நீ எப்படி வந்த?” அவளது கேள்வியில் பேண்ட்டை லேசாய் மேலே தூக்கி விட்டு அவளருகில் ஒட்டி அமர்ந்த ஸ்ரீராம், “இதென்ன கேள்வி… வாசல் வரைக்கும் கார்ல வந்தேன். இப்ப நடந்து வந்தேன்…” என்றிட, கண்ணீரைக் கூடத் துடைக்க மறந்து முறைத்தாள்.

அந்த வேலையை அவன் தனதாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவளது கண்ணீரை ஒரு விரல் கொண்டு துடைத்து விட்டதில், மீண்டும் தேம்பல் பெருகியது.

“இறந்தவங்களுக்காக அழுதே ஆகணும் தான். முடிஞ்ச வரை அழுதுட்டு நார்மலாகிடு பிரியா” என்றான் மென்மையாக.

“எப்படி ராம்… அவங்களுக்குச் செய்ய வேண்டியதைக் கூட முறையா செய்ய விடலையே. செத்தது கூட இத்தனை வருஷம் கழிச்சுத் தான் தெரிஞ்சிருக்கு. என் பயத்தால யாருக்குமே நல்லது நடக்கலைல…” என்றவளைப் பார்க்கப் பரிதாபமாகவே இருந்தது.

“லூசு மாதிரிப் பேசாத பிரியா. நீ எதிர்த்துச் சண்டை போட்டிருந்தா தான் ஆச்சரியம். ஒருவேளை அப்பவே உன் அம்மா இறந்தது தெரிஞ்சுருந்தா, நீ இதயாகிட்ட உண்மையைச் சொல்லாமலா இருந்திருப்ப. அதான் உனக்குத் தெரியாம மேனேஜ் பண்ணிருக்கானுங்க. எல்லாம் உன்னைச் சுத்தி நடந்த சதி. அதுக்குன்னு உன்னை நீயே பிளேம் பண்ணிக்கிட்டு உன்னை வருத்திக்கிறதுல நியாயமே இல்ல.

நம்ம சசிகுமார் சொன்ன மாதிரி தான், ‘கூடப் பழகுனவன் நண்பன்னு நினைச்சு நம்புனவனே முதுகுல குத்துனா, அப்போ யாரைத் தான் நம்புறது…'” என்றான் பெருமூச்சுடன்.

கீழுதட்டைக் கடித்துக் கண்ணீரை அடக்கியவளின் தோள் மீது கை போட்டவன், ஆறுதலாய் அணைத்துக் கொண்டான்.

அவளும் உரிமையாய் அவன் மீது சாய்ந்து கொள்ள, அவன் கண்களில் ஒரு மின்னல்.

“ப்ரியா!” அவள் காதோரம் மெதுவாய் அவளை அழைத்தான்.

“ம்ம் ராம்…” அவள் என்னவோ சாதாரணமாகத் தான் வினவினாள். அவனுக்குத் தான் அது சிணுங்கலாய் ஒலித்தது போலும். ஓர் கணம் உள்ளம் சிலிர்த்துப் போனது.

“ஒருவேளை உன் ப்ரெண்ட்ஸ் யாரும் குறுக்க வராமல் இருந்திருந்தா, ஸ்கூல்ல நான் புரபோஸ் பண்ணப்ப நீ என்ன சொல்லிருப்ப?” எனக் கேட்டான் குறும்பாக.

அவளோ சட்டென நிமிர்ந்து, “ஓ நீ பண்ணதுக்குப் பேர் புரபோசா” எனத் தானாய் தலையை மேலே உயர்த்திச் சிந்தித்துப் பார்த்தாள் அந்நிகழ்வை.

——

பத்தாவது படித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமிற்கு அன்று தான் இறுதிப் பரீட்சை.

இறுதி நாளென்பதால் சட்டையெல்லாம் மையாக இருந்தது. காலரைத் தூக்கி விட்டபடி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவன், எப்போதும் தனது கும்பலுடன் சுத்தும் பத்மப்பிரியா தனியாகச் செல்வதைக் கவனித்தான்.

அந்தக் குழுவில் அவளது அமைதி என்னவோ அவனை ஈர்த்து விட்டிருந்தது. விவரம் அறியா விடலைப் பருவம் வேறு!

நண்பர்களெல்லாம், எதிரியின் தோழியைக் காதலித்துப் பழி தீர்த்துக் கொள்ளவெல்லாம் யோசனை கூறுவார்கள்!

‘அட நாசமாப் போனவங்களா…’ என எண்ணிக் கொண்டாலும், கெத்திற்காகத் தலையாட்டிக் கொள்வான்.

அன்று அவளைத் தனியே கண்டதும், நண்பர்கள் “டேய் மச்சி, உன் ஆள் போகுதுடா போய் பேசு… மச்சி, கெத்தை விடாத…” என்று சொல்லி அனுப்ப அவனும் அதையே தொடர்ந்தவனாக, அவள் முன் தெனாவெட்டாக நின்றான்.

ரெட்டை ஜடை, பாவாடை சட்டையில் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளின் முகம் அப்போதே அவன் அடிநெஞ்சில் பதிந்தது.

“என்ன, பார்த்தும் பார்க்காத மாதிரிப் போற?” மிரட்டலாய் கேட்டவனைக் கண்டு கண்கள் கலங்கத் தொடங்கியது அவளுக்கு.

“நான் எப்போ உன்னைப் பார்த்துப் பேசியிருக்கேன்…” உர்ரென்று அவள் கூறியதில், “பேசுனது இல்ல, ஆனால் ஓரக்கண்ணுல பார்த்திருக்கீல…” என்றதும் அவளுக்குப் படபடப்பானது.

“அதெல்லாம் இல்லையே…” வேகமாய் தலையாட்டியவளை முறைத்தவன்,

“என்ன இல்ல? நீ என்னை லவ் பண்ணவே இல்லையா?” என்றான் மறுபடியும்.

அதில் பதறி அழுது விட்டாள்.

“என்ன நீ, இப்படிலாம் பேசிட்டு இருக்க… மேம்கிட்ட கம்பளைண்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ…” என்று அவனைத் தாண்டி வேகமாய் நடக்கப் போக, கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டாள்.

அவனோ சாவகாசமாக அவள் முன் கையை நீட்டி, “இப்போ ஏன் ஓவரா ரியாக்ட் பண்ற. எந்திரி…” என்று உதவிக்கு வந்தான்.

ஆனால், அவளோ அவன் கையைப் பிடிக்காமல் தானாகவே எழுந்து கொள்ள முயல, “கையைப் பிடின்னு சொல்றேன்ல.” என்றான் மீண்டும் அதட்டலாக.

தலையைக் குனிந்து கொண்டு அவன் கையைப் பிடிக்க வரும்போதே விஷால் அங்கிருந்து ஓடிவந்து,

“ஏய் பத்து… ஏன் இப்படி விழுந்திருக்க?” என்று கையை நீட்டியதும் வெடுக்கெனக் கையை இழுத்துக் கொண்டவள், வெளிறி விஷாலின் கையைப் பிடித்துக் கொண்டதில் ஸ்ரீராமிற்கு முகம் கருத்து விட்டது.

அதன்பிறகு, மாறி மாறிச் சண்டையிட்டுக் கொண்டாலும், ஸ்ரீராமிற்கு அவள் அவமதித்த விதம் பதிந்து போக, “இந்த வீணாப்போன ப்ரெண்ட்ஸை நம்பி வீணா தான் போகப் போற.” எனச் சாபம் கொடுத்து விட்டுச் சென்றான்.

அதன்பிறகு, இரண்டு வருடங்களும் அவள் இருக்கும் திசைப் பக்கமே போவதில்லை. நல்லவேளையாக, அவனது பள்ளியில் கடைசி இரு வருட வகுப்புகள் வேறொரு கட்டடத்தில் இருக்க, ஒரே பள்ளி என்றாலும் பார்த்துக் கொள்ள வாய்ப்புக் கிடைப்பதில்லை.

அந்த நிம்மதியையும் கெடுத்து விடுவது போல, ஸ்கூல் பீப்பிள் லீடராகப் பள்ளி நிர்வாகம் ஸ்ரீராமைத் தேர்ந்தெடுக்க, அவனுக்குத் துணை லீடராக இதயாம்ரிதாவைத் தேர்ந்தெடுத்ததில் சூடு பிடித்தது அவர்களது மோதல்.

“நீ புரபோஸ் பண்ணது எட்டாங்கிளாஸ் படிக்கிற பச்சை மண்ணுக்குடா!” என்றதில், “ஆனாலும் அது புரபோஸ் தான்!” என முறுக்கிக் கொண்டான்.

அதில் அத்தனை நேரம் இருந்த அழுத்தம் மறைந்து புன்னகைத்தவள், சடுதியில் முகம் மாறி “ஆனா நீ சொன்னது சரி தான், வீணாப் போன ப்ரெண்ட்ஸை நம்பி வீணா தான் போயிட்டேன்.” என்றாள் கசந்த முறுவலுடன்.

அது அவனைத் தாக்கியது போலும்.

“ஹே! அது ஏதோ நான் சின்னப்பிள்ளைத் தனமா சொன்னது பிரியா… அவங்க நல்லவங்களா இருந்திருந்தா அந்த சாபம் பலிச்சிருக்காது.” என்றவன் அவளைத் திசை திருப்ப எத்தனித்து, “ஹ்ம்ம்… ஸ்கூல்லயே கமிட் ஆகிருந்தா இந்நேரம் நம்ம ரெண்டு குழந்தை பெத்துருக்கலாம்.” எனப் போலியாய் சலித்துக் கொண்டதில் செவி மடல்களில் சிவப்புப் பரவியது பெண்ணவளுக்கு.

அதனை ரசித்தபடி எழுந்து நின்றவன், அவளை எழச் சொல்லும் பொருட்டுக் கையை நீட்டினான்.

அவளோ தயக்கத்துடன் அமர்ந்திருக்க, “ஸ்கூல்ல நீட்டுனேன். ப்ரெண்ட்ஸ்காக, வயசு காரணமா அவாய்ட் பண்ணிட்ட. பல வருஷம் கழிச்சுப் பார்த்தும், நீ உடைஞ்சு அழுகும்போது கையை நீட்டுனேன். அப்பவும் என்னை அவாய்ட் பண்ணிட்ட… இப்பவும் பிடிக்க மாட்டியா ப்ரியா?” என்றவனின் கேள்வியில் அத்தனை ஆதங்கம்.

“கையைக் குடுத்தா என்னைக்கும் விட மாட்ட தான? இதுக்கு மேல இழக்குறதுக்கு என்கிட்ட உன்னைத் தவிர வேற எதுவும் இல்ல ராம்…” என்றவளின் விழியோரம் நீர் துளிர்த்தது.

“குடுத்துத் தான் பாரேன்! என்கிட்ட இழக்குறதுக்குன்னு நீ கூட இப்ப இல்லையே!” என இறுக்கத்துடன் கூறியதும் வேகமாக அவன் கைகளில் தன் கையை ஒப்படைத்தாள்.

கொடுத்த வேகத்தில் அவளைப் பிடித்துத் தன்னருகில் இழுத்தவன், இறுக்கி அணைத்து அவளது கழுத்தில் முகம் புதைக்க, இருவரது நெருக்கங்களும் தேவையானதாய்!

“இத்தனை வருஷத்துல உன்னைத் தவிர வேற யாருக்கும் இதைச் சொல்லத் தோணல ப்ரியா…” என்றவன், மெல்ல அவளை விலக்கி விட்டுச் சிவந்திருந்த கன்னங்களைப் பற்றி, “லவ் யூ டி!” என்றான் ஆத்மார்த்தமாக.

மின்னலடித்த மனத்தில் பெருஞ்சலனம். “நீ ஸ்கூல் முடிச்சுப் போனப்ப நான் அழுதேன் ராம்!” அவன் கண் பார்த்துக் காதலாய் உரைத்ததில் அவனிடம் சிறு அதிர்வு.

கூடவே அவளது ஒட்டுமொத்தக் காதலும் அந்த வாசகத்தில் வீற்றிருப்பதை உணர்ந்து, “ப்ரியா…” என்று அவளை இன்னுமாய் இறுக்கிக் கொண்டதில், அவளும் வாகாய் அவனை வாரிக்கொண்டாள்.

———-

“என்னடி இதெல்லாம்?” சத்ய யுகாத்ரனுக்கு இத்தனைப் பெரிய வேலைகளைத் தன்னவள் பார்த்திருப்பாளென்ற எண்ணமே இல்லை.

தங்களைப் பத்மப்பிரியாவின் அன்னையைத் தேடிச் சுற்ற வைத்து விட்டு, இவள் இங்கு அமைதியாக வேலையைப் பார்த்திருக்கிறாள்.

அலுவலகத்தில், நெற்றியில் கையை ஊன்றி அமர்ந்திருந்தவளைத் தேடிச் சென்றவன் கேட்ட முதல் கேள்வியே இது தான்.

“இதெல்லாம் அவங்களுக்குத் தேவையானது சத்யா… அதை விட, உங்களை நிரூபிக்கணும்! களங்கத்தோட, காலம் முழுக்க விட்டுடுவேனா உங்களை?” என்றவளை அள்ளி அணைத்தான்.

“மாமாவுக்கு இப்ப மனசு ஆறுதல் அடைஞ்சிருக்கும்ல.” அவனது தந்தையை குறித்துக் கேட்க, அவன் விழிகளில் நீர் பெருகியது. அதனை அவள் தோள்களிலேயே மறைத்துக் கொண்டவன் தலையை ஆட்டிக் கொண்டான்.

இங்குச் சத்ய யுகாத்ரனின் குடும்பமே, தங்களது வீட்டுப்பிள்ளை தவறிழைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு நெகிழ்ந்து போனது. அவர்களுக்கு அவனைத் தெரியும் என்றாலும், அவன் பட்ட வலிக்கு இது ஒரு அருமருந்து அல்லவா! அவர்களுக்கும் கூடத் தான்.

“எப்படி எவிடன்ஸ் கிடைச்சுது?” சத்யா தெளிவற்ற குரலில் கேட்டான்.

பெருமூச்சு புரிந்தவள், “மிதுனா நான் சொல்லித் தான் அந்தக் காலேஜ்ல சேர்ந்தா… ஏதோ ஒரு ஆதாரம், நீங்க தப்புப் பண்ணலைன்னு கிடைக்குமான்னு பார்க்கத் தான் அவளை அங்க அனுப்பி வச்சேன் ப்ரொஃபி” என்றவளின் அன்பின் ஆழம் அவனைத் திணற வைத்தது.

“அப்புறம், இதெல்லாம் உங்களை பிரேம் பண்ணதுன்னு தெரிஞ்சதுமே நான் சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ணிருந்தேன். ஆனால், தண்டனையையும் அனுபவிச்ச பிறகு, எதுக்கு இந்தக் கேஸ்னு எல்லாரும் கேட்டாங்க.

அனுபவிச்சதை மாத்த முடியாது. அட்லீஸ்ட் இழந்ததைக் கொஞ்சம் மீட்கலாம்னு நினைச்சேன்.

ஸ்ட்ராங் எவிடன்ஸ் கேட்டாங்க. அன்னைக்கு விஷால் வீட்ல பத்மாவைத் தேட அனுப்புனதும் இதுக்காகத் தான். ஸ்வேதாவும் விஷால் பத்தித் தெரிஞ்சப்ப, அந்த பேப்பர்ஸ் ஆதாரங்களை போட்டோ எடுத்துருக்கா. அதுவும் ரொம்ப யூஸ்புல்லா இருந்துச்சு.

கடைசியா, என் ஜூனியர்ஸ் டீமை மறுபடியும் காலேஜ்குள்ள போக வச்சு, வேறொரு விஷயமாய் பேசுற மாதிரி உங்க பிரச்சினையைப் பேசச் சொன்னேன். அதுல யாரோட முகம் மாறுதோ… அவங்க கண்டிப்பா இந்தப் பிரச்சினைல குள்ளநரி வேலை பார்த்திருப்பாங்கன்னு கெஸ் பண்ணேன். அது தப்பாவும் போகல. விதுரன் பட்டன் கேமரா கொண்டு போயிருந்தான்.

அவன் காலேஜ்ல ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் மீட்டப் பத்திப் பேசுற மாதிரி பிரின்ஸிபல், எச். ஓ. டி, உங்க கொலீக்ஸை எல்லாம் ஆர்கனைஸ் பண்ணிருந்தான்.

ஒளிரால இருந்து வந்தேன்னு சொன்னதுனால அவங்க அலோ பண்ணுனாங்க. அப்போ உங்க பேரைச் சொன்னதும், மத்தவங்க முகத்துல கோபம் தெரிஞ்சது. ஆனா அந்தப் பிரின்சிபல் முகத்துல ஒரு பதற்றமும் பயமும் வந்துச்சு. அதுவே போதும்னு அப்புறம் அந்த ஆளைப் பிடிச்சு விசாரிச்சதுல உண்மையைக் கொட்டிட்டாரு. அதுவும் ஒரு ஸ்ட்ராங் எவிடன்ஸ். எல்லாத்தையும் திரட்டிட்டு இருக்கும்போது தான் விஷால் வேறத் தேவையில்லாம உங்களை அட்டாக் பண்ண நிவானை ஏவி விட்டான்.

அவனை நீங்க மேனேஜ் செஞ்சுக்குவீங்கன்னு தான், நான் முழு மூச்சா இதுல இறங்குனேன். முழு ஆதாரம் வர்றதுக்கு முன்னாடி விஷாலைச் சின்ன விஷயத்துக்கு அரெஸ்ட் பண்ண வச்சு, அவன் மேல சிம்பதி கிரியேட் ஆகக் கூடாதுன்னு தான் வெயிட் பண்ணச் சொன்னேன்.”

திட்டமிட்டுக் காய் நகர்த்தியவளை ரசித்தே தொலைத்தது அவன் உள்ளம்.

“அதான், அவனை அடிக்கிறப்பக் கூட மேடம் தடுத்தீங்களோ… ஆனா நிவோராவை ஏன் இதயா க்ளோஸ் பண்ணப் போறதா சொல்லிருக்க?” என்றான் அவளது கன்னம் தடவி.

“எனக்கு அவங்களை உயிரோட விட சுத்தமா விருப்பமில்ல சத்யா… ஆனா, உங்களை நிரூபிக்கணும்னா, அவங்க உயிரோட இருக்கணும். நீங்க அனுபவிச்ச வலியை அனுபவிக்கனும். ஜெயில்ல போய் களி திங்கணும். நிவோராவால அவன் தப்பிக்கக் கூடாதுன்னு தான் முதல்ல, அதை அவன்கிட்ட இருந்து புடுங்கினேன்.

என் அப்பன் பேரைக் காலம் முழுக்கச் சொல்லிப் பெருமைப்படுற இந்தக் குப்பை பிராண்ட் எனக்கு வேணாம் சத்யா. அவன்லாம் யாரோட நினைப்புல கூட வாழக் கூடாது. நிவோரா இருந்தா, ராம்குமார் பேர் எப்பவும் நிலைக்கும். அது தேவை இல்ல.” என அழுத்தம் திருத்தமாய் பேசியவளை அசந்து பார்த்திருந்தான்.

“என் அப்பா மாதிரியும், யாமினி மாதிரியும், அந்த மூணு பேரும் செத்துத் தொலைஞ்சுட்டா, அந்த வலி தெரியாமயே போயிடுமே. அதான் அவங்களை எந்தக் கஷ்டமும் படுத்தாம நேரா ஜெயில்ல தள்ள நினைச்சேன். இப்ப மர்டர் கேஸும் சேர்ந்திருக்கு. கண்டிப்பா மூணு பேருக்கும் வருஷக் கணக்குல தண்டனை கன்பார்ம். அப்படியே வெளிய வந்தால் கூட பொழைக்க வழி இல்லாம, நடுத்தெருவுல திரியனும்.

மூணு பேர் அப்பாவும் பிசினஸ் மேக்னட்ஸ். அவங்க வீட்ல ஐடி ரெயிட்ல இருந்து பினாமி டீடெயில்ஸ் வரை எடுத்துக் கேஸ் போட்டிருக்கேன். எவனுக்கும் ஒரு குண்டு மணி கூட மிஞ்சக் கூடாது. மிஞ்சாது!

நிராதரவா ஒரு நொடியைக் கடக்குறது கூட எவ்ளோ வலிக்கும்னு தெரியணும் சத்யா… வாழப் பிடிக்காம சாகப் போகணும். ஆனா சாகக் கூட நான் விட மாட்டேன்…” என்றவளின் முகத்தில் ஆத்திரம் டஜன் கணக்காய் வழிய, தன்னவன் அனுபவித்த வலியில் இருந்து சிறு துளியும் மாறாது அவர்களுக்குக் கொடுக்கத் துணிந்தவளின் பேரன்பும், பெருங்கோபமும் அவனை வாயடைக்கச் செய்தது.

“ஊஃப்!” என மூச்சு விடச் சிரமப்பட்டவன், “மூச்சு முட்டுதுடி!” என்றான் அவள் கொடுக்கும் காதல் பாரம் தாள இயலாமல்.

அவன் சட்டையைப் பிடித்தவள் அவனது கண்களை நேராய் நோக்கி, “அவங்க பண்ண தப்புத் தெரிஞ்சும், ஆதாரம் ரெடி பண்ண முடிஞ்சும் ஏன் பண்ணல சத்யா? இடையில இந்த ரெண்டு மூணு வருஷமும் ஏன் என் முன்னாடி வரல. ஏன் அப்பவே தண்டனை கொடுக்கல…” எனக் கேட்க அவனிடம் சிறு அமைதி.

“எனக்குத் தெரியும். நான் விஷாலைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால தான… அதுக்காக தான ஆதாரம் தேடக் கூட நீங்க ட்ரை பண்ணல…” என்றதில், சட்டையில் இருந்து அவள் கையை எடுத்து விட்டவன்,

“அவங்களைப் பழி வாங்கணும்னா, உன்னைக் காயப்படுத்தனும். இன்னொரு வாழ்க்கைக்குள்ள போயிட்ட உன்னை வந்து துன்புறுத்துறது கேவலமா தோணுச்சு இதயா. உன் டைவர்ஸ் விஷயம் கேள்விப்பட்டதும் தான், உன் முன்னாடி வந்தேன். அதுவும், அப்போ உன்னை மறுபடியும் லவ் பண்ணனும்னுலாம் தோணல. அவன் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தியே, உடைஞ்சிருப்பியோன்னு மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு.

ஆனா அப்பவும் உன் திமிர் என்னை ரசிக்க வச்சுச்சு… அப்பவும் உன் ப்ரெண்ட்ஸ் மேல நீ வச்சிருந்த நம்பிக்கை என்னை ரணப்படுத்திருச்சு. அதோட விளைவு தான் அதுக்கு அப்புறம் நடந்த எல்லாமே!” என அவள் நெற்றியில் முட்டினான்.

“நாங்க வரலாமா?” வாசலில் இருந்து கும்பலாகக் குரல் கேட்க,

அவர்களைத் திரும்பிப் பாராமலே, “ஸ்டாண்ட் அவுட்சைட்” என்று கட்டளையிட்டவன், துடித்துக் கொண்டிருந்த பாவையின் இதழ்களுக்குக் குளிரூட்டத் தொடங்கினான்.

‘என் நண்பன் என்னை வெளில போகச் சொல்ல மாட்டான்.’ என்ற நம்பிக்கையுடன் வந்த ஸ்ரீராமும் நெஞ்சில் கைவைக்க,

மூன்று ஜோடிகளும் அறை வாயிலில் தேவுடு காத்தது தான் மிச்சம்.

விதுரன் முகத்தைச் சோகமாக வைத்திருக்க, “என்னாச்சுடா?” என வினவினாள் மிதுனா.

“என் அண்ணனோட ரொமான்ஸ்க்கு ஆயுள் கம்மின்னு நான் எப்படிப் புரிய வைக்கிறது? என் அண்ணி வச்சிருக்குற முழு ட்விஸ்ட் தெரியாம, உருகிட்டு இருக்காரு…” என உதட்டைப் பிதுக்க,

வாயைப் பொத்தி நகைத்த மிதுனா, “அதெல்லாம் என் மாம்ஸ் அடிச்சுத் தூள் கிளப்பிடுவாரு, நீ வேணா பாரு…” என்றாள்.

அகில், அவனுக்கும் மேல் சோகத்தைக் காட்ட, “உனக்கு என்னடா வந்துச்சு?” என்றாள் பூமிகா.

“அதில்ல, இனிமே நான் ஆட் ஷூட்னு ஓபி அடிக்க முடியாதுன்னு நினைக்கும்போது நெஞ்சு வலிக்குது பூமி…” என சிவாஜி குரலில் நடிக்க,

“ஆட் ஷுட் இல்லைனா மட்டும் நீ வேலை பார்த்துக் கிழிப்பியா?” எனக் கேவலமாகப் பார்த்து வைத்தாள்.

“இல்ல தான்… ஹே ஒரு ஐடியா!” எனக் கூவினான்.

அதில் தன்னவளுடன் கண்ணாலேயே காதல் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீராம், “என்னடா?” என்றான் கடுப்பாய்.

“நானே பேசாம மாடல் ஆகிடவா?” என நெளிந்தபடி கேட்டதில்,

அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன், “இதயா… மனுஷங்களுக்குத் தான காஸ்மெட்டிக் தயாரிக்கிறா, மங்கிகளுக்கும் வியாபாரம் பார்க்குறாளா என்ன?” சிரியாமல் ஸ்ரீராம் கேலி செய்ததில், மற்ற நால்வரும் கொல்லெனச் சிரித்தனர்.

அதில் பூமிகா மட்டும் சிரிப்பை ஒரு கட்டத்திற்கு மேலும் நிறுத்தாமல் போக, “என்னை டேமேஜ் பண்ணுனா உனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கா…” என்றதில்,

கண்ணில் நீர் வரச் சிரித்தவள், “அதில்லடா… குரங்குக்கு உன்னை மாடல் ஆக்குனா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிச்சு முடியல…” என மேலும் சிரித்தாள்.

“உன்னைக் கொல்லாம விட மாட்டேன்டி!” என்று அவளைத் துரத்திக் கொண்டு ஓடியதில், அவளும் திடுதிடுவென அவனிடம் மாட்டாமல் ஓடித் தப்பிக்க முயன்றாள்.

——–

இங்கோ, தன்னவனின் அதரம் கொடுத்த தித்திப்பில் திண்டாடிய இதயாம்ரிதா, மூச்சு முட்ட அவனைத் தள்ளி விட்டாள்.

“ப்ரொஃபி” செவ்வானமாய் சிவந்து சிணுங்கினாள்.

அவனோ மீண்டும் நெற்றி முதல் முத்தங்களைத் தொடர்ந்திருக்க,

“இருங்க ப்ரொபி… மொத்தமா உங்க அதிர்ச்சிகளைக் கேட்டுட்டு கிஸ்ஸைக் கன்டினியூ பண்ணுங்க.” என்றாள் குறும்பு நகையுடன்.

அவளது சிரிப்பே ஒரு அபாய மணி கொடுப்பது போல இருக்க,

“விட்டுப் போறேன்னு மட்டும் சொல்லிடாத இதயாம்மா…” சொல்லும் போதே ஏற்கெனவே உணர்ச்சிப் பெருக்கில் இருந்தவனுக்குத் தானாய் கண் கலங்கிப் போனது.

அதில் பதறியவள், “அச்சோ… இல்ல பிரொஃபி!” என வேகமாய் அவன் கன்னம் பற்றியவள், “எனக்கு அந்த எண்ணமே மறந்து போச்சு! இப்ப எல்லாம் வெறும் பாசிட்டிவ் தாட்ஸ் மட்டும் தான், என்னைச் சுத்தி வர்றதா பீல் பண்றேன் சத்யா…” என்றாள் உள்ளார்ந்த மகிழ்வுடன்.

சற்றே நிம்மதி பிறக்க, “குட்! இப்ப தான் நீ என் பெர்பக்ட் பொண்டாட்டி!” என மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொஞ்சினான்.

இதற்கு மேலும் வெளியில் நிற்க இயலாமல், ஸ்ரீராம் விறுவிறுவென உள்ளே சென்றான்.

“டேய் மச்சி… உன் பெர்பக்ட் பொண்டாட்டி உனக்கு என்ன ஆப்பு வச்சுருக்கான்னு முழுசா தெரிஞ்சிட்டுப் பேசு!” என்று கோர்த்து விட,

“ஆப்பா?” என்றான் விழித்து.

“உன்னைக் கேட்டாங்களா இப்போ…” என ஸ்ரீராமை முறைத்து வைத்த இதயாம்ரிதா, “இன்னும் ஆறேழு மாசத்துக்கு நீங்க தீயா வேலை பார்க்கணும் சத்யா…” என்றாள்.

“கண்டிப்பா… பட் பாரிஸ் எக்ஸ்போக்கு இன்னும் 9 மாசத்துக்கு மேல இருக்குல்ல?” என்றான் குழப்பமாக.

“பாரிஸா?” விதுரன் பாவமாக, “அண்ணா, உங்களை பாரிஸ் கார்னர் கூட அனுப்புற ஐடியால இல்ல அண்ணி…” எனக் கமுக்கமாகச் சிரித்தான்.

“என்னடா, எல்லாரும் பொடி வச்சுப் பேசுறீங்க.” என லேசாய் மிரண்ட சத்யாவிடம்,

“பெருசா ஒன்னும் இல்ல ப்ரொஃபி… நீங்க மறுபடியும் ஆர். பி. ஐ எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் பண்ணப் போறீங்க.” என அசட்டையாகக் கூறியவளை விழி தெறிக்க ஏறிட்டான்.

“என்னடி உளறிட்டு இருக்க? நான் எப்பவோ டிஸ்குவாலிஃபைட் ஆகிட்டேன்.” அவன் முகம் கசங்கிப்போனது. அதற்கு வாய்ப்பில்லையே.

அவள் அவனை அமைதியாய் ஏறிட, மிதுனா குறும்பாய் “சத்யா மாமா… அதெல்லாம் என் அக்கா ஹைகோர்ட்டில் பேசி செட்டில் பண்ணிட்டா. தவறான தண்டனையால உங்களோட கேரியர் வேஸ்ட் ஆகக் கூடாதுன்னு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிருக்கா…” என்றிட அவனிடம் திகைப்புப் பரவியது.

“பட், ரேப் கேஸ்ல என்ன தான் குற்றவாளி இல்லைன்னு சொன்னாலும், அவ்ளோ சீக்கிரம் அக்செப்ட் பண்ண மாட்டாங்க மிதுனா…”

பத்மப்பிரியாவோ, “நீங்க நார்மலா பார்ட்டிசிபேட் பண்றதை விட இது கொஞ்சம் சாலஞ்சிங் தான் அண்ணா… எக்ஸாம்ஸ் விட மத்த குவாலிபிகேஷனுக்குத் தான் மெனக்கெடனும்.

ஹைகோர்ட் அகியூட்டல் காப்பி, செர்டிபைட் ஆர்டர், கேரக்டர் வெரிஃபிகேஷன் சர்டிபிகேட், தவறான குற்றச்சாட்டை விளக்கும் சட்டப்பூர்வச் சத்தியப் பிரமாணப் பத்திரம் இது எல்லாம் சப்மிட் பண்ணனும். மறுபடியும் உங்களை ஸ்க்ராட்ச்ல இருந்து பேக்கிரவுண்ட் வெரிஃபிகேஷன் பண்ணுவாங்க. பட் இதெல்லாம் க்ளியர் பண்ணிட்டா கண்டிப்பா நீங்க ஆர். பி. ஐல போஸ்டிங் வாங்குறது பாசிபிள் தான்…” என விளக்கிக் கூறினாள்.

அவன் நெஞ்சம் அடைக்க அவர்களை அன்புடன் ஏறிட்டு மீண்டும் பேச வர, இதயாம்ரிதா அவன் முகத்தையே அளந்தபடி, “அதெல்லாம் ஏற்பாடு செஞ்சுக்கலாம். நீங்க மறுபடியும் படிக்க ஸ்டார்ட் பண்ணுங்க. முதல்ல எக்ஸாம்ஸ் க்ளியர் பண்ணிடலாம்.” என்றாள் தீர்மானமாக.

“ஏய்… அதெல்லாம் படின்னா எப்படிடி படிக்க முடியும்? படிச்சுட்டே இருந்தா தான் ப்ளோ இருக்கும். அதுவும் இல்லாம, இந்த பிசினஸ்…” என்று ஆரம்பிக்க,

ஸ்ரீராம், “மச்சி, நீ பிஸினஸ்ல கிங் தான்… யார் இல்லைன்னு சொன்னா… ஆனா உன்னோட வழி இது கிடையாது. இந்த பிசினஸ் பாலிடிக்ஸ்குள்ள நாங்களே புரண்டுக்குறோம். நீ உன் கனவை நோக்கி ஓடுடா…” என்றான் மென்மையாக.

“ஊஃப்!” மீண்டும் பெருமூச்சை எடுத்து விட்டவனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

“ஏன்டா படுத்துறீங்க… எனக்காக இதெல்லாம் செஞ்சா தான் நான் உங்க கூட இருப்பேன்னு சொன்னேனா?” அக்கேள்வி நேரடியாய் இதயாவிற்கு என்று புரிந்தது அவளுக்கு.

“என்னால எல்லாத்தையும் மாத்த முடியாது ப்ரொஃபி… ஆனா, என்னால முடியிற விஷயத்தை மாத்த முடியும்னு நம்புறேன். நான் என் புருஷன் வீட்டுக்கு, ஆர். பி. ஐ ஆபிசர் பொண்டாட்டியா தான் வருவேன்.” திட்டவட்டமாக அழுத்திக் கூறியவளைத் தன் நெஞ்சில் புதைத்து அழுத்திக் கொண்டான் சத்ய யுகாத்ரன்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 168

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
189
+1
7
+1
9

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment