
சபதம் – 41
பலர் குடைச் சாய்த்த புகழின் வெண்குடை
வெண்குடைச் சோழன் வென்ற வெண்ணிப் போர்,
கொடிநுடங்கக் குன்றிய பகைவர்
நடுநாள் நின்ற நாணம் அழிந்தனர்;
முரசொலியால் வானம் அதிர,
உருமென ஒலித்த போர்க்களத்து
பெரும் பெயர் கரிகாலன் – அவன்
ஒருங்குடன் பலரையும் ஒருநாள் வென்றான்.
-(புறநானூறு 225)பாடியவர்: பரணர்.
பொருள்:
வெண்ணிப் போரில் கரிகால சோழன் பெற்ற மகா வெற்றி. “அறமும் வீரமும் கொண்ட அரசனின் வெற்றி பகைவர்களை மட்டுமல்ல, வரலாறையே வெல்லும்.”
கிடங்கின் உள்ளே இன்னும் புகை மற்றும் துப்பாக்கியின் வாசனை நிறைந்திருந்தது. ஆரிஷ் குரேஷியின் உடல் குளிர்ந்த கான்கிரீட்டில் அசைவின்றிக் கிடந்தது. நூற்றாண்டுகளாக தொடர்ந்த சாபம் இறுதியாக இன்று நிறைவேறியிருந்தது.
சண்டையின் அதிர்வுகள் இன்னும் காற்றில் இருந்தாலும், அபாயம் கடந்துவிட்டதை அனைவரும் உணர்ந்தனர். கலீல், கரண், தீவன் மூவரும் மங்கலான வழித்தடங்களில் மீனாட்சி மற்றும் அதிராவுடன் குரேஷியின் உடலின் முன்னால் நின்றிருந்தனர்.
மீனாட்சியின் உதடுகள், “பூர்வ ஜென்ம பாவத்தை இந்த ஜென்மத்திலும் சுமந்து கொண்டு திரிந்த ஒரு அற்ப உயிர். செய்த பாவங்கள் சும்மா விடாது என்பதற்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு” என்றவளுடைய வார்த்தைகள் அனைவரின் உள்ளத்தையும் சற்று அழுத்தமாகத் தாக்கியது.
அதிரா மற்றும் மீனாட்சியின் உடலில் இருந்த காயங்களை பார்த்த கலீலின் இதயம் இறுகியது. ஆண்கள் மூவரும் அந்த இடத்தை இருமுறை சுற்றி வந்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டனர். ஆருஷ் குரேஷியின் ஆட்களை தீவனுடன், சுக்விந்தரும் இணைந்து அப்புறப்படுத்த முனைந்து கொண்டிருந்தனர்.
அங்கு அறைகளுக்குள் பத்திரப்படுத்திய கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்த கலீலின் முன்னால் வந்து நின்ற அதிரா, “கலீல்…” என்றதும் அவன் உறைந்து நின்றான்.
ஒரு கணம் உலகமே நின்றதுபோல இருந்தது.
“அதி….” என்றவனை பாய்ந்து அணைத்துக்கொண்டவள், அவன் உயிருடன் இருப்பதை நம்ப முடியாமல் மூச்சை இழுத்தவள், “நான் உன்னை இழந்துட்டேன் என்று நினைத்தேன்” என்றவளின் முதுகை நீவி ஆசுவாசப்படுத்தியவன், “அன்றும் இன்றும் உன்னை பாதுகாக்கவாவது என் உயிர் இந்த பூமியில் மீளட்டும்” என்றவனின் குரலில் கேலி நிறைந்திருந்தது.
அவனை தனது கைகளால் பிடித்து தள்ளியவள், “உனக்காக வருத்தம் கொண்டேன் பார். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்றவளின் தலைமுடியை விளையாட்டாய் நீவிவிட்டவன் கண்களில் அதிராவின் மீது அவன் வைத்திருந்த அளப்பரிய பாசம் மின்னியது.
அதிராவும் கலீலும் பேசிக்கொண்டிருப்பதை கண்களில் ஏக்கத்துடன் பார்த்திருந்தாள் மீனாட்சி. கரண் அவளருகே சென்று, அவளை மெல்ல இழுத்து வந்து கலிலின் முன் நிற்க செய்தான்.
அதில் சற்று திரும்பி மீனாட்சியின் விழிகளை பார்த்த கலீலுக்கு வார்த்தை வரவில்லை, மெல்ல அவளருகில் வந்தவன், பேசும் முன் மீனாட்சி, “தாதாஷா…” என்றிட தன் உயரத்தில் பாதியளவு இருந்த சிறியவளின் கன்னத்தை பற்றியவன், “யே… யே மேரி சோட்டி ஹை? மேரி மேஹர்… சச்‑முச் மேரி மேஹர் ஹை?”( இது என் சோட்டி யா? என் மெஹர் தான உண்மையாகவா?) என்றவனின் கண்களில் கண்ணீர் நின்றபாடாக தெரியவில்லை.
கலிலின் கண்களில் நீரை பார்த்த மீனாட்சியால் அதற்கு மேல் தாளமாட்டாமல், போன ஜென்மத்தில் அவர்கள் பட்ட துயரத்தை இன்றே கண்ணீரில் கரைக்க முடிவெடுத்தது போல், கலிலை கட்டிக்கொண்டு அழுதவளின் உதடுகள், “தாதாஷா……. முஜே மாப் கிஜியே” என்ற வார்த்தையை உச்சரித்து கொண்டே இருந்தது.
கரண், கலீல், அதிரா மற்றும் மீனாட்சி தங்கள் முன் ஜென்மத்தின் பயனை அழுதும், பேசியும், சிரித்தும் மனதை தேற்றி கொண்டிருந்தனர். அந்த நேரம் அவர்கள் முன் வந்த தீவன்,
கைகளில் இருந்த இரத்தத்தை துடைத்தபடி, அமைதியான குரலில், “ஆரிஷ் குரேஷியின் மரணம் அரசியலை அதிரவைக்கும். அவரது வியாபார பேரரசு சரியும். விசாரணைகள், ஊடக குழப்பம் உண்மையை மாற்ற முயற்சிகள் என்று எல்லாம் வரும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்த கலீல், ” அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்றதற்கு தீவன் மறுப்பாக தலையசைத்தான்.
“இல்லை.நீங்க இருவரும் தொடங்கியதை முடிக்க பாருங்கள்” என்ற தீவனிடம் கரண், ““ஸ்டே ஆர்டர்?” என்று கேட்க ‘ஆம்’ என்று தலையசைத்த தீவன், “காலை நீதிமன்றத்தில் செய்ய வேண்டிய வேலைகளை கவனியுங்கள். அராவள்ளிக்கு இப்போது அதுதான் முக்கிய தேவை” என்றதும் கலீல் தயங்கினான்.
“ஆனால்…” என்ற கலீலின் அருகே வந்து தோளில் கைவைத்த தீவன், “நான் ஒரு வியாபாரி.
கார்ப்பரேட் குப்பையை சுத்தம் செய்வது எனக்கு கைவந்த கலை. ஆரிஷின் மரணம், கணக்குகள், சட்டவிரோத இணைப்புகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.
அவன் மறைத்து வைத்திருக்கும் அனைத்து பித்தலாட்டங்களையும் நான் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறேன். நீங்கள் ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள்” என்றவனை கரண் ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் மெதுவாக தலையசைத்து ஏற்றுக்கொண்டான்.
தீவனை நெருங்கிய கலீல், “ஏதும் உதவி தேவைப்பட்டால்…” என்றவனை தடுத்து மெல்ல சிரித்தவன், “உங்கள் இருவரையும் பாதுகாப்பதே என் கடமை… நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவனின் தோளில் தட்டிக் கொடுத்த கலீல், பெண்கள் மற்றும் கரனுடன் அங்கிருந்து வெளியேறினான்.
சுக்விந்தர் ஜீப்புடன் வர, மீனாட்சி மற்றும் அதிரா அதில் ஏறிக் கொண்டனர். அதிரா கலீலின் கையை இறுக்கமாகப் பிடித்தபடி, “நீங்களும் எங்களோடவே வரலாம் தானே” என்றதும் கலீல் மெல்ல கரணை திரும்பிப் பார்க்க அவன் சுகவிந்தரிடம் எதையோ பேசுவதுபோல் திரும்பி கொண்டான்.
“அரவள்ளியை மீட்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கரணை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் கவனமாக செல்லுங்கள்” என்றவனின் வார்த்தையில் அதிராவின் கண்கள் பெருமையில் பிரகாசித்தது.
மீனாட்சி கலீலின் கைகளைப் பற்றிக்கொண்டு, “தாதாஷா… உங்களுக்காக நாங்கள் அரவள்ளி அரண்மனையில் காத்திருப்போம்” என்றதோடு ஜீப் இருளில் மறைந்தது.
கலீல் கரணை நோக்கி, “புறப்படலாமா?” என்றதும், கரண் தலையசைத்து அதை ஏற்றுக்கொள்ள, தீவன் இருவரையும் அணைத்து விடை கொடுத்தவன், “வழக்கில் வென்று.
அராவள்ளியை காப்பாற்றுங்கள்” என்றான்.
அதைக் கேட்ட கலீல் சிரித்தபடி, “நீ..இங்கு கவனமாக இரு” என்றதை கேட்ட தீவனின் கண்கள் மின்ன, “ஆரிஷ் குரேஷியின் அந்தரங்கத்தை புட்டு புட்டு வைக்கத்தான் போகிறேன். என்னை பற்றி கவலைப்படாமல் இருவரும் சென்று வாருங்கள்” என்றவன் நண்பர்களுக்கு விடை கொடுத்தான்.
தீவன் தொழிற்சாலையை நோக்கி நடந்தவன் உள்ளம் ஆரிஷின் பேரரசை துண்டு துண்டாக கிழிக்கத் திட்டமிட்டிருந்தான்.
கலீல் மற்றும் கரண் நீதிமன்றத்தை நோக்கி நடந்தனர்.விடியற்காலத்தின் முதல் ஒளி வானத்தைத் தொட்ட அந்த நேரம் அரவள்ளி மலை காத்திருந்தது.
அராவள்ளி மனிதக் கடலாக மாறியிருந்தது. ராஜஸ்தான், குஜராத், மத்யபிரதேசம், ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களிலிருந்தும் மக்கள் மலையின் அடிவாரத்தில் கூடியிருந்தனர்.
இரண்டாவது நாள் போராட்டத்தின் முழக்கங்கள் இடியென எழுந்தன:
“அராவள்ளி ஹமாரா ஹை!”
“எங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள்!”
“மலை இல்லையெனில் எதிர்காலமே இல்லை!” என்ற கோஷங்கள் வானை முட்டின.
அதில் அரசின் இயந்திரங்கள் அசைய முடியாமல் நின்றன. மக்கள் எனும் பெருங்கடலைத் தாண்ட முடியாமல். அரவள்ளி மலை வெறும் கல் அல்ல. அது ஒரு இதயத் துடிப்பு. ஒரு நினைவு. ஒரு வாக்குறுதி என்பதை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உள்ளே வழி நெடுக செய்தியாளர்கள் நிறைந்திருந்தனர்.
அதிகாரிகள் பதட்டமாக கிசுகிசுத்தனர். நீதிமன்றம் கடைசி இருக்கை வரை நிரம்பியிருந்தது. அதன் மையத்தில், கறுப்பு கோட் அணிந்து, உறுதியுடன் நின்றிருந்தான் கலீல் ஹசீம்.
அரசுக்கு எதிரான மனுதாரராக கரண் அவனது அருகில் அமைதியாகவும் உறுதியுடனும் நின்றிருந்தான். நீதிபதி உள்ளே வந்தார். அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர்.
வழக்கு ஆரம்பமானது. கலீல் முன்னே வந்து தெளிவுடன், “மை லார்ட், இது ஒரு மலையைப் பற்றிய வழக்கு மட்டும் அல்ல. இது ஒரு அடையாளத்தைப் பற்றிய வழக்கு.”
அதை கேட்ட நீதிபதி கண்களை உயர்த்தினார். மேலும் தொடர்ந்த கலீல், “அரசுகள் மாறும்.
கொள்கைகள் மாறும். ஆனால் பாரம்பரியம்…பாரம்பரியம் நிலைத்து நிற்கும்.”
நீதிமன்றம் முழுவதும் மெல்ல முணுமுணுப்பு எழ, கலீல் ஒரு தடிமனான கோப்பை நீதிபதியின் முன் வைத்தான். அதில் வரைபடங்கள், பழமையான ஆய்வுகள், வரலாற்று பதிவுகள், பழைய கல்வெட்டுகளின் புகைப்படங்கள் இருந்தன.
“அராவள்ளி இந்த நிலத்தை ஆட்சி செய்த அரசை விட மிகப் பழமையானது.
அரசியலையும் விடவும் பழமையானது” என்றவன் தொடர்ந்து, “மை லார்ட், ஒரு சாலையை மாற்றலாம். ஒரு பாலத்தை மறுபடியும் கட்டலாம். ஆனால் காலம் செதுக்கிய மலையை மீண்டும் உருவாக்க முடியாது. அரவள்ளி வீழ்ந்தால் மலைசரிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரவள்ளியை சுற்றி இருக்கும் பல்லாயிரக் கணக்கான கிராமங்கள் பாதிக்கப்படும்” என்ற வார்த்தைகளில் நீதிபதி முன்வந்தார்.
கலீலின் குரல் கூர்மையடைந்தது, “மலைகள் என்றால் அது குறிப்பிட்ட உயரம் இருக்க வேண்டும் என்பது எல்லாம் மனிதன் வகுக்கக் கூடியது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் அரவள்ளி நான்கு மாநிலங்களின் உயிர் மூலமாக இருக்கும் மலைத்தொடர். இது முன்னேற்றம் அல்ல. இது நாட்டின் அழிவு” என்றவன் அவர் ஆவணங்களைச் சுட்டிக்காட்டினான்.
“1958 கலாச்சார பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அராவள்ளி பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய தளம்.
இடிப்பு உத்தரவு சட்டவிரோதமானது” என்றதும் அரசுதரப்பு வழக்கறிஞர் எழுந்து, “ஆப்ஜெக்ஷன் யுவர் ஹனோர்…. மனுதாரர்கள் இதை மிகைப்படுத்துகிறார்கள்” என்றதும் கலீல் அவரை நோக்கி திரும்பினான்.
“மிகைப்படுத்தலா? அதை வெளியே நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் சொல்லுங்கள்.
அவர்களின் முன்னோர்களின் கல்லறைகள் ‘மிகைப்படுத்தல்’ என்று சொல்லுங்கள்.
அவர்களின் கலாச்சாரம் ‘மிகைப்படுத்தல்’ என்று சொல்லுங்கள்” என்றதும் அறை முழுதும்
அமைதி நிறைந்திருந்தது.
அரசு வழக்கறிஞர் மெதுவாக அமர்ந்தார். கலீல் மீண்டும் நீதிபதியை நோக்கியவன், “மை லார்ட், அராவள்ளி விழுந்தால், இந்தியாவின் ஒரு பகுதி விழும்” என்று தன்பக்க வாதத்தை நிறைவு செய்தான்.
அனைத்தையும் கேட்ட நீதிபதி கோப்பை மூடினார். வட இந்தியா முழுதும் தீர்ப்புக்காக காத்திருந்தது. நீண்ட நிமிடத்திற்குப் பிறகு நீதிபதி, “புதிய சட்டம் ரத்து செய்யப்படுகிறது. இயற்கையாய் பிறந்த மலை, நதி மற்றும் காடுகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று வரையறைக்குள் கொண்டுவர மனிதர்களுக்கு உரிமை இல்லை. அரவள்ளி மலைத்தொடர் பல்லாயிர கிராமங்களின் மூலதனம், அது மலை என்ற அந்தஸ்தை இழப்பது, இந்தியர்கள் தாய் நாட்டை இழப்பதற்கு சமானம். அதனால் புது சட்டத்தை இந்த நீதிமன்றம் ரத்துசெய்ய உத்தரவிடுகிறது”
அறை முழுவதும் அதிர்ச்சி அலை. நிரம்பி இருக்க மேலும் தொடர்ந்தவர், “அராவள்ளி கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அங்கீகரிக்கப்படுகிறது.
புதிய சட்டம் இடைநிறுத்தப்படுகிறது. மேலும் உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது” என்ற தீர்ப்பில் கலீல் அதுவரை இழுத்து வைத்திருந்த மூச்சை மெதுவாக வெளியேற்றினான்.
கரண் ஓடி வந்து நண்பனை இறுக அணைத்து கொண்டான். அவர்கள் முதல் போரில் வென்றிருந்தனர்.
நீதிமன்றத்துக்கு வெளியே கேமராக்கள் மின்னின. செய்தியாளர்கள் சூழ்ந்தனர். மக்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் கலீல் அமைதியாக நின்றான். கையில் நீதிமன்ற உத்தரவு,
தலைமுறைகளின் சுமை இறுதியாக அவனது தோளிலிருந்து இறங்கியிருந்தது. அவன் ரணசூராகப் போராடவில்லை. போர்வீரனாகவும் இல்லை. அவன் கலீல் ஹசீமாக,
இரண்டு பிறவிகளின் அக்னியைத் தாங்கிய வழக்கறிஞனாக போராடினான்.
கரண் அவன் பக்கத்தில் நின்றான், அதிவார் இரத்தத்தின் நவீன முகமாக.
அவர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது, வெளியில் இருந்த மக்கள் சந்தோஷ அரவாரமிட்டனர். கலீலை மக்கள் தோளில் தூக்கினர். பெண்கள் மலர்களை பொழிந்தனர்.
ஆண்கள், “கலீல் ஹசீம் ஜிந்தாபாத்!” “அராவள்ளி பச் கயா!” “மக்களின் வழக்கறிஞர் வாழ்க!” என்று வெற்றி கோஷமிட்டனர். அதைப் பார்த்திருந்த கரண் புன்னகையுடன் நின்றிருந்தான்.
தீவனும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரின் கண்களில் பெருமை ஒளிர்ந்தது. மூன்று சகோதரர்களும் மலையை நோக்கி நடந்தனர். ஸ்தபத் ஸ்தம்பம் மெதுவாக ஒளிர்ந்தது, ரணசூரனின் சபதத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்வது போல.
அராவள்ளி பாதுகாக்கப்பட்டது. அதிவார் அரண்மனை பாதுகாக்கப்பட்டது. மக்கள் வென்றிருந்தனர். உண்மை வென்றது. பாரம்பரியம் வென்றது. அராவள்ளி வென்றது.
ஒவ்வொரு செய்தி சேனலும் ஒரே தலைப்பு ஒளிபரப்பியது, “தொழிலதிபரும் அரசியல் சாணக்யனுமான ஆரிஷ் குரேஷி அராவள்ளி எல்லைக்கு வெளியே இருக்கும் அவரது தொழிற்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். காரணம் தெரியவில்லை.”
அதற்கு கீழே ஓடிய மற்றொரு வரி, “ஆரிஷ் குரேஷியின் மரணத்தை பற்றி போலீசார் விசாரணை” என்ற செய்தியாளரின் அடுத்த வரிகள் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது, “பாகிஸ்தான் அடிப்படையிலான தீவிரவாத வலையமைப்புடன்
ஆரிஷ் குரேஷியின் கூட்டணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை” என்று அன்றைய செய்தி முழுவதும் இதை பற்றியதாகவே இருந்தது.
நாடே கொந்தளித்தது. அரசியல்வாதிகள் ஆரிஷ் குரேஷி எனும் மனிதனோடு சம்பந்தம் இல்லாதவர்களாக தன்னை காட்டிக்கொள்ள நினைத்தனர். கட்சிகள் அவசர அறிக்கைகள் வெளியிட்டன. விசாரணைகள் இரவோடு இரவாகத் தொடங்கின. ஆரிஷ் குரேஷியின் பேரரசு
அட்டை வீடு போல சரிந்தது. அவரது மரணம் மர்மமாகவே இருந்தது.
சூரியன் அராவள்ளி சிகரங்களுக்கு பின்னால் மறையும் போது, மூன்று சகோதரர்களும் அரண்மனைக்கு திரும்பினர். ராஜ்புத் வீரர்கள் சுவர்களில் தீப்பந்தங்களை ஏற்றினர். மேலிருக்கும் ஸ்தபத் ஸ்தம்பம் மெதுவாக ஒளிர்ந்தது .
கலீல் மலையை நோக்கிப் பார்த்தான், “தீயால் எழுதப்பட்ட சபதம் நிறைவேற்றப்பட்டது. அரவள்ளியை அழிக்க நினைக்கும் ஒவ்வொரு யுகத்திலும் ரணசூரன் மீண்டும் பிறப்பான். இயற்கையை அழிக்க நினைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ரணசூரன் பிறப்பான் தான் ஏற்ற சபதத்தை முடிப்பான்” என்றவனின் வார்த்தைகள் காற்றில் பறந்து பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.
மேஹ்ருன்னிஷாவின் சத்தியம் நிறைவேறியது. முகலாய ஆளுநரின் சாபம் முடிந்தது.
வீர், ரணசூர் எனும் இரண்டு வீர அக்னி மீண்டும் எழுந்தது. அராவள்ளி மலைத்தொடர் காலத்தைக் கடந்து உயர்ந்து நின்றது.
நன்றி🙏
There will be a sequel to this story🙏🙏🙏

