
தழல் 28:
ராஜனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு எத்தனையோ ஆறுதல் சொல்லி தேற்ற தான் முயன்றார் பர்வதம். ஆனால், எதிலும் அவர் மனம் சமாதானம் அடைவதாய் இல்லை. அவரின் அந்த கதறலில் ஆரா இன்னுமாய் பயந்து நடுங்கி தனக்குள் ஒடுங்கி தான் போனாள். வேகமாய் கனி அவளை அரவணைத்து அறைக்குள் அழைத்து செல்லும் வரை ராஜனின் பார்வை அவளைத் தான் தொடர்ந்தது. ராஜனின் கண்ணீர் நின்று, அமைதி அடையவும் தான் அவரைவிட்டு நகர்ந்தார் பர்வதம். ஆனால், சென்றிருக்கவே கூடாது என்று உணர்ந்த பொழுது காலம் கடந்திருந்தது.
மகள்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதலில் உடைந்துப் போவது அப்பாக்களாய் தான் இருக்கிறார்கள். மகளின் வேதனை சுமந்த முகத்தைக் கூட காண சகிக்காமல் அவளைப் பார்ப்பதையே தவிர்த்திருந்தவர் அவளின் புறக்கணிப்பை, ஒதுக்கத்தை, அவரிடம் காட்டிய பயத்தை எப்படி தாங்கிக் கொள்வார்.
ஆராவும் உணர்ந்து தெளிந்து இதை செய்யவில்லை என்று புரிகிறது தான். நாளையோ, நாளை மறுநாளோ, இல்லை இன்னும் ஒரு வாரத்திலோ ‘அப்பா…’ என்றபடி அவரிடம் தான் தஞ்சம் புகுவாள் என்றும் தெரிகிறது தான். ஆனால், இந்த நொடி, அவளின் வேதனையை கண் கொண்டுப் பார்க்க முடியவில்லை அவரால்.
மகள் எத்தனையாய் பயந்து அருவறுத்துப் போயிருந்தால் தன்னைக் கண்டே அஞ்சி நடுங்குவாள் என்ற எண்ணம் தான் விஷ முள்ளாய் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது. இனி அவள் வாழ்வு என்னாகுமோ என்ற பயம் பெரிதாய் உள்ளத்தை வதைத்தது.
அவரின் மனம் அவரையே முதன்மை குற்றாவாளி கூண்டில் ஏற்றி நிறுத்தியது. ஒருவேளை படிப்பு படிப்பு என்று இத்தனை அழுத்தம் கொடுக்காமல் இருந்திருந்தால், அவளின் எல்லா கேலிக்கை பொழுது போக்குகளையும் நிறுத்தி இதில் மட்டுமே கவனம் பதிக்க சொல்லி வற்புறுத்தாமல் இருந்திருந்தால், வேலை வேலை என்று அவளிடம் மனம் விட்டு பேசும் தருணங்களை குறைக்காமல் இருந்திருந்தால், தன் பிள்ளை துன்பத்தில் நிழல் கூட தொடக் கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்காமல் இன்றைய சமூக அவளங்களையும் அதை கையாளும் விதத்தையும் சொல்லி சொல்லி வளர்த்திருந்தால், அவளின் மீது இத்தனை நம்பிக்கை வைத்து அலட்சியமாய் இல்லாமல் இருந்திருந்தால், அவள் மறுத்தும் பிடிவாதமாய் இந்த பள்ளிக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், பர்வதத்தின் விருப்பம் போல் நால்வரும் வீட்டிலேயே இருந்து அவளின் பிறந்த நாளை கொண்டாடி இருந்தால், இன்னும் எதை எதையெல்லாம் செய்திருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம் என்று அலசி ஆராய்ந்தது அவரின் மனம்.
நடந்துவிட்டு ஒன்றுக்கான காரணிகளையே ஆராய்ந்துக் கொண்டிருப்பதில் என்ன லாபம் இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியை அல்லவா தேட வேண்டும். ஆனால் ராஜனின் மனம் அந்த நிகழ்விலேயே, மகளின் அருவறுத்த பயந்த முகத்திலேயே நின்று உழன்றுக் கொண்டிருந்தது.
விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்த ஆராவின் கைகளை தனக்குள் பொதிந்துக் கொண்டபடி அருகில் அமைதியாய் அமர்ந்திருந்தாள் கனி. இன்னுமே ஆரா வாய் திறந்து யாரிடம் பேசி இருக்கவில்லை. பர்வதத்திடம் கூட வாயை திறக்கவில்லை. காண வந்த வள்ளியம்மையிடமும் உன்னை கண்டுக் கொண்டேன் என்ற நன்றியுரைக்கும் ஒரு பார்வை மட்டும் தான். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை.
நிழல் பிம்பங்களாய் மனதில் திரையிடும் காட்சிகளெல்லாம் அவளின் உயிர் அறுக்கிறது. ‘நானா..? நானா இப்படி அநியாயமாய் ஏமார்ந்துப் போனேன்..?’ என்ற கேள்வி விடாமல் நராசமாய் மனதில் மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘விளக்கை தேடி விழும் விட்டில் பூச்சியாய் இதில் எப்படி அவள் சிக்கிக்கொண்டாள்… ஏன் சிக்கிக் கொண்டாள்… அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்…’ என்ற சுய பச்சாதாபத்தில் மனது வெம்பிப் போனது.
அவளின் இமையோரம் வழிந்த கண்ணீரை விரல் கொண்டு துடைத்தாள் கனி. கருவிழிகளை மட்டும் அவளின் பக்கம் திருப்பானாள் ஆரா. அவள் பார்க்கிறாள் என்றதும் மென்மையாய் விரிந்தது கனியின் புன்னகை. இரண்டு நாட்களுக்கு பிறகு அவளை நோக்கி வீசப்படும் ஒரு நேசப் புன்னகை. எவரின் அன்பிற்கும் தகுதி இல்லாதவள் ஆகிப் போனாள் என்று தானே இத்தனை மணி நேரமாய் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு கொடுத்த சுகந்திரத்தை, அவளிடம் காட்டிய அன்பை அநியாயமாய் துஷ்பிரயோகம் செய்து விட்டதாய் அல்லவா நினைத்துக் கொண்டாள். அத்தனைக்கு பேரின் குற்ற பார்வையும் சுட்டு விரலும் அவளை நோக்கி அல்லவா இதுவரை நீண்டிருந்தது. குறைந்த பட்சம் இப்படி நீ அநியாயமாய் சென்று மாட்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பரிதாப பார்வையை தானே வீசினார்கள்.
ஆனால், எதுவுமே நடக்காதைப் போல் என்னை நோக்கி நேசப் பார்வையை இவளால் எப்படி வீச முடிகிறது. யாரிடமாவது சண்டையை பிடித்துக் கொண்டு வந்துவிட்டால், வீட்டில் எதையாவது கை தவறி உடைத்துவிட்டால், இல்லை எதாவது தவறு செய்துவிட்டால், தேம்பி தேம்பி அழும் கனியை நோக்கி ஒன்றுமே நடக்கவில்லை என்பதைப் போல இப்படியான வாஞ்சை புன்னகை ஒன்றை தானே அவள் வீசிவாள். அப்படியானல் அவள் செய்ததும் பெரிய தவறொன்றும் இல்லையா? இதனால் என் அன்பு எந்த விதத்திலும் குறைந்துப் போகாது என்று காட்டுகிறாளா? நினைக்க நினைக்க வெடித்துக் கொண்டு வருகிறது அழுகை.
“கனி… நான்… நான்… இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கவே இல்லடி… யாருனு பாக்கற ஒரு ஆர்வத்துல தான் போனேன்… அதுவும் வெளிய எங்கையும்னா சத்தியமா போயிருக்க மாட்டேன்… இத்தன நாள் நான் படிக்கற ஸ்கூல்… அங்க இருக்கற அத்தனை பேரும் எனக்கு தெரிஞ்சவங்க… அங்க என்ன பண்ணிட முடியும்னு தான் போனேன்… அவன்… அவன் சேர்மன் பையன் கனி… தினமும் அவன ஸ்கூல பாத்திருக்கேன்… பேசி இருக்கேன்… அவன் மேல எனக்கு சந்தேகம் வரவேயில்ல கனி… ஏன் வரல… வந்திருக்கணும் தானே… எல்லாரும் என்ன அருவறுப்பா தீண்ட தகாதவ மாதிரி பாக்கறாங்க… அப்படியே உடம்பெல்லாம் கூசிப் போகுது… ஏதோ இந்த உலகமே என்ன நிர்வாணமா பாக்கற மாதிரி அவமானமா இருக்கு… அப்பவே செத்திருக்க கூடாதானு தோணுது… கூட படிக்கற ஒரு பையன நம்புனது அவ்வளவு பெரிய தப்பா கனி..?” உணர்வுகள் துடைத்த மரத்த குரலில் சொன்னவளின் கண்ணீர் கோடாய் வழிந்து தலையணையை நனைத்தது.
அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவள், “உன் மேல தப்பேயில்ல ஆரா… ஒருத்தவங்கள நம்பறது தப்பேயில்ல… எதையும் யாரையும் நம்பாம எப்படி இருக்க முடியும்… அந்த நம்பிக்கைய உடைக்கறவங்க… திட்டமிட்டு ஏமாத்துறவங்க மேல தான் தப்பு… உன் மேல தப்பே இல்லம்மா…” என்றபடியே கண்ணீரோடு இன்னும் அவளை இறுக்கிக் கொண்டாள். அவ்வளவு தான் சொல்ல தெரிந்தது அவளுக்கு. அந்த வார்த்தைகளே ஆராவுக்கு எத்தனை பலம் கொடுத்தது என்று அவள் உணரவில்லை.
இதுவரை இருவருக்கும் இடையே எந்த ஒழிவு மறைவும் இருந்ததில்லை. இதுவரை தாய் தந்தை கவனிக்க முடியாத நேரங்களில் ஒருவரை ஒருவர் அவர்களே தான் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். சரியா சொல்ல வேண்டுமென்றால் ஆரா தான் அவளை கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் கைப் பிடித்துக் கொண்டே தான் வளர்ந்தாள் கனி. ஒருவேளை பொது தேர்வின் அழுத்தம் இல்லை ஒருவேளை கனிக்கு இது ஆரம்பத்திலேயே தெரிந்திரிக்கலாம். தெரிந்திருந்தாலும் கூட இதை தடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை அவளுக்கு. இத்தனை திட்டமிட்டு ஏமாற்றியவர்கள் இதில்லை என்றால் வேறு வழியாக முயன்றிருப்பர் என்றுதான் தோன்றியது.
ஆராவை படுக்க வைத்து மெல்ல தட்டிக் கொடுக்க தொடங்கியிருந்தாள் கனி. உடைத்து பேசியதும் ஒருவித நிம்மதி உண்டாகியிருக்க வேண்டும் ஆராவுக்கு. மெல்ல மெல்ல உறக்கத்தில் அமிழ்ந்துப் போனாள் அவள்.
அத்தனையும் பார்த்தபடி அறையின் வாசலிலேயே நின்று விட்டிருந்தார் பர்வதம். ஏனோ உள்ளே நுழைய கால்கள் மறுத்து அடம்பிடித்தது. உண்மை தானே! அவர் இதுவரை ஆராவிடம் பேச முயற்சிக்கவில்லை. ஏன் சரியாக அவளைப் பார்க்ககூட முனையவில்லை. எங்கே பார்த்தால், பேசினால் உடைந்து விடுவோமோ? அவளை இன்னும் பயப்படுத்தி விடுவோமோ என்று தயங்கி தயங்கியே அவளை தவிர்த்திருந்தார் அவர். அதற்கும் மேலே ராஜனோ அவளை பார்ப்பதையே மறுத்து இருந்திருக்கிறார். அது அவளுக்கு எப்படியான தாக்கத்தை கொடுத்திருக்கும் என்று இப்பொழுது தான் புரிந்தது.
அன்னையும் தந்தையும் அவளை வெறுத்து பார்க்க மறுத்ததாக அல்லவா மனதில் பதிந்திருக்கும்? மற்றவர்களை போல அவர்களும் அவளை அருவெறுத்து ஒதுக்கியதாக அல்லவா அவள் மனம் கலங்கிப் போயிருக்கும். எத்தனை பெரும் முட்டாள்தனம் செய்துவிட்டோம் என்று இப்பொழு தான் புரிந்தது அவருக்கு.
இந்த இரண்டும் கெட்டான் வயதில் தடுமாறுவது என்ன அத்தனை தவறா? ஏன் அவரும் இந்த வயதை கடந்து தானே வந்திருக்கிறார்? ஒருவரிடத்தில் கூட அவருக்கு பிடித்தம் உண்டாகி விடல்லையா? நின்று ரசனையாய் பார்த்து கடக்கவில்லையா? அதையே மகள் செய்தால் மட்டும் எப்படி தவறாகும்? இது காதலென்று சொல்வதற்கும் இல்லையே? ஆர்வத்தினால் உண்டான சிறு பிடித்தம். ஏன் ராஜனையே துரத்தி துரத்தி காதலித்து அவர் தானே பிடிவாதமாய் மணந்துக் கொண்டார்? ஒருவேளை அவனும் ஏமாற்றாமல் காத்திருந்து மகளை கைப்பிடித்திருந்தால் காவிய காதலாகி இருக்குமோ என்னவோ? அப்படியிருக்க நம்பியவளை எப்படி குற்றம் சொல்ல முடியும்?
உடன் படிப்பவனை நம்ப கூடாது. பாடம் கற்பிக்கும் ஆசிரியரை நம்பக்கூடாது. நெடுநாள் பழகிய நண்பர்களையும் நம்ப கூடாது. தலைமுறை தலைமுறையாய் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நம்ப கூடாது. ஒரே வீட்டில் பகிர்ந்துக் கொண்டு ஒன்றாய் வளர்ந்த சொந்தகளையும் நம்ப கூடாது. அப்படியென்றால் யாரைதான் நம்புவது? நாளையே பெற்ற தகப்பனையும் உடன் பிறந்தவனையும் கூட நம்ப கூடாது என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுமோ சமூகம். நினைக்கவே அச்சமாக இருக்கிறது அவருக்கு.
ஆழ்ந்து யோசித்தால் வழிகாட்டுதலும் வழிநடத்தலும் ஆராவைவிட அவருக்கு தான் தேவையோ என்று தோன்றியது. வீட்டில் பெரியவர்கள் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே ஆராவின் நடத்தையில் உள்ள வேறுபாட்டை கண்டுக் கொண்டிருப்பார்களோ? அந்த சமர்த்தியமும் பிள்ளை வளர்ப்பின் அனுபவமும் தனக்கு இல்லையென்று தான் தோன்றியது.
ராஜனோ வளர் இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்தவர். இவரோ காதல் என்று போய் நின்றதுமே பெற்றோரால் புறக்கணிக்கப் பட்டவர். அப்படியிருக்க பெரியவர்களை எப்படி உடன் இருத்திக் கொள்ள முடியும்? ஆனால், அந்த வாய்ப்பு இருந்தும் பலர் ஒதுக்கித் தானே தள்ளுகிறார்கள்.
மகள் இருவரும் உறங்கி விட்டார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தவர், ஆராவின் பக்கத்தில் அமர்ந்து வாஞ்சையாய் தலையை வருட தொடங்கி இருந்தார்.
“உன் மேல தப்பேயில்லை ஆரும்மா… எல்லா தப்பும் அம்மா மேல தான்… அம்மா எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்… அம்மாவும் அப்பாவும் உன்கூட இருக்கோம்… எப்பவும் இருப்போம்… நீ எதுக்கும் கலங்க கூடாது… தைரியமா இருக்கணும்…” என்றபடியே நெற்றில் தவழ்ந்த முடியை ஒதுக்கி அழுந்த முத்தம் பதித்தார். இதை மகளுக்காக சொன்னாரா? இல்லை, கதறி அழும் தன் மனதிற்காக சொன்னாரா என்பது அவரின் ஆழ்மனதிற்கு மட்டுமே வெளிச்சம்.
வெகு சிரமத்திற்கு பிறகு இமைகளை பிரித்தாள் ஆரா. இமைகள் இரண்டு பிரிக்க முடியாத அளவிற்கு சிவந்து வீங்கிப் போயிருந்தது. இரண்டு நாளாய் தோன்றியிராத பசியென்ற உணர்வை அப்பொழுது தான் உணர முடிந்தது அவளால். தொண்டை வரண்டு நீருக்காக இறைஞ்சியது. எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவளுக்கு ஏதோ மலையை புரட்டிய ஆயாசம்.
அவளுக்கு அருகே கட்டிலில் அமர்ந்தபடியே பர்வதமும் இன்னொரு பக்கம் கனியும் உறக்கத்தில் இருந்தனர். அவர்களின் உறக்கத்தை களைக்காமல் தட்டு தடுமாறி எழுந்துக் கொண்டாள் அவள்.
பழக்கபட்ட அந்த வீட்டில் அவளுக்கு விளக்கொன்றும் தேவைபடவில்லை. மரத்துவிட்ட கால்களை ஊடுறும் வலியை பொறுத்தபடியே ஒவ்வொரு அடியாய் நடந்து நடுக்கூடத்தை அடைந்தவளின் தோளை ஏதோ உரசும் உணர்வு.
“அம்மா…” என்ற பெரும் கூச்சலோடு, தடுமாறி இரண்டடி தள்ளி கீழே விழுந்திருந்தாள் ஆரா. அவளின் சத்தத்தில் அரைகுறை உறக்கத்தில் இருந்த பர்வதம் அடித்து பிடித்து விளக்கை ஒளிரவிட்டபடியே ஓடி வந்தார்.
அறையிலிருந்து பரவிய மெல்லிய வெளிச்சம் கூடத்தை கொஞ்சமாய் நிறைத்திருந்தது. அந்த வெளிச்சத்தில் கண்ட காட்சியில் உறைந்துப் போனார் பர்வதம். அவசரமாய் பெண்கள் மூவரையும் இன்னும் பரிதவிப்பில் ஆழ்த்திவிட்டு தன் துன்பமே பெரிதென வாழ்வை முடித்துக் கொண்டிருந்தார் ராஜன்.
– பற்றி எரியும்…
