
சபதம் -40
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
பொருள்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
அரவள்ளி மலைத்தொடரின் அன்றைய இரவு, வரவிருக்கும் புயலுக்கு அறிகுறியாய்ப் பதட்டமான சூழ்நிலையில் காணப்பட்டது. கீழ்புறத்தில் அரசு இயந்திரங்கள் கர்ஜித்தன.
அரண்மனை வளாகம் முழுவதும் ராஜ்புத் வீரர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு சத்தியம் விழித்தெழும் அதிர்வால் காற்றே நடுங்கிக் கொண்டிருந்தது.
அந்த குழப்பத்தின் நடுவில், ஒரு உருவம் அரவள்ளியை நோக்கி ஓடி கொண்டிருந்தது. தீவன் திக்குத்திசை அறியாமல், அரவள்ளி காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தான். ஏன் ஓடுகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. எதை நோக்கி ஓடுகிறான் என்பதும் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை அழைத்துக் கொண்டிருந்தது.
அரவள்ளி மலை உச்சியில் கர்னி மாதா சன்னதியை நோக்கி ஓடினான். மலையின் உச்சியை தீவன் நெருங்க,இயந்திரங்களின் சத்தம் மங்கியது. வீரர்களின் கோஷங்கள் தொலைந்தன.
மலைக்காற்றின் ஓசை மட்டும் மீதமிருந்தது.
அந்த நேரம் ஒரு உருவம் நிழலிலிருந்து வெளிப்பட்டது. தலை முதல் கால் வரை கருப்பு ஆடையில் மூடப்பட்டிருந்த அந்த கரிய உருவத்தை தீவன் கண்டிருக்கிறேன். விதி அழைக்கும் நேரங்களில் மட்டுமே தோன்றும் அந்த மர்மமுனிவர் தீவன் முன் தோன்றியதும் அவன் நின்றுவிட்டான்.
அந்த மர்ம மனிதர் நடுங்கும் கையை உயர்த்தி, சிகரத்தை நோக்கி சுட்டிக்காட்டி, ” உனக்காக ஒரு ஜீவன் பல வருடமாய் காத்திருக்கிறது” என்ற வார்த்தையில் தீவனின் இதயம் துடித்தது.
“யார்…?” என்றவனின் கேள்விக்கு அந்த கரிய உருவத்தின் குரல் கணீரென்று, “உன்னை ஈன்றவன். உன் ரத்தத்தை சுமப்பவன். ஒருமுறை உன்னை இழந்தவன். ஆனால் தினம் தினம் உன் நினைவுகளோடு வாழ்பவன்” என்றதை கேட்ட தீவனின் மூச்சு தடுக்கப்பட்டது.
உடல் நடுங்க மலை உச்சியை பார்த்தவனின் கேள்வியை புரிந்து கொண்ட அந்த உருவம் தீவனுக்கு வழிவிட்டு நகர, அவன் மலையின் கடைசி ஏற்றத்தை நடுங்கும் கால்களுடன் ஏறினான்.
சுவாசம் நிலையில்லாமல் எகிற, இதயம் தாளம் தவறி துடிக்க மேலேறியவனின் கண்களில் நிலவொளியில் தனியாக நின்றிருந்த அந்த மனிதன், அசாத் கான் விழுந்தார். வயது அவரை வளைத்திருந்தது. காலத்தின் கோலம் முகத்தில் கோடுகளை வரைந்திருந்தது. ஆண்டுகளின் துயரம் தோள்களில் சுமையாக இறங்கியிருந்தது.
ஆனால் தீவனை பார்த்த அந்த நொடி ஆசாத் கான் முழுவதும் உறைந்தார். அவரின் கண்கள் விரிந்தன. அதிர்ச்சியால் அல்ல, ஒரு தந்தையின் உள்ளுணர்வால்.
தீவனை நோக்கி ஆசாத் ஒரு அடி முன்னே வைக்க, தன்னையறியாமல் பின்வாங்கினான் இளையவன். அதில் ஆசாத்தின் முகம் சுருங்கிட அதை உணர்ந்து கொண்ட தீவன், “உங்களை நான் பார்த்தது போல் தோன்றுகிறது” என்றபடி ஆசாத்தை நெருங்கினான்.
தனது கையருகில் நின்ற மகனின் முகத்தை ஆசையாக தழுவிய ஆசாத்தின் விழிகள், “ஏனென்றால் உன் உள்ளத்தால் என்னை உணர்ந்து கொள்ள முடிகிறது மகனே. நினைவடுக்கில் தொலைந்து போன முகத்தை உனக்கு ஞாபகப்படுத்த உனது மூளை முயல்கிறது” என்றவரின் ‘மகனே’ என்ற அந்த சொல் தீவனின் உள்ளத்தில் மறந்துபோன இதயத் துடிப்பை மீண்டும் எழுப்பியது.
அசாதின் குரல் உடைந்து, “ரஷீத்….மேரா பேட்டா, உன்னை…அன்று…அந்த இரவில் நீ இறந்துவிட்டாய் என்று நினைத்தேன்.என்..என் கண் முன்னால் எரியும் குடிசையின் உள்ளே.. ஒரு கருகிய உடலை கண்டேன், அதன் சாம்பலின் மேல் நமது வம்ச முத்திரை சங்கிலியை பார்த்தேன்…அது நீ என்று…” என்றவருக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
அதைக் கேட்ட தீவனின் கண்கள் ஈரமானது. சில நாட்களாக அவன் கண்ட திடீர் நினைவுகள்,
அந்த தீ…அந்த அலறல்கள்…அவன் விழுந்த அந்த இருள்… என்றதை யோசித்தவனின் கவனம்
அசாத் மீண்டும் பேச தொடங்கியதும் அவர் பக்கம் திரும்பியது.
“இன்றுவரை அந்த குடிசை இருந்த இடத்தில் சமாதி எழுப்பி, நானும் கலிலும் உன்னுடன்…” என்றவர் சற்று தடுமாறி, “நீ அங்கி இருப்பதாக நினைத்தோம் மகனே. நீ உயிர் தப்பியிருப்பாய் என்று கடுகளவு சந்தேகம் தோன்றியிருந்தாலும் உலகத்தையே எதிர்த்து போராடி உன்னிடம் வந்திருப்பேன்” என்றவரின் குரலில் என்னை புரிந்து கொள்ளேன் என்ற இறைஞ்சுதல் இருந்தது.
“ஆனால் என் உள்ளத்தில் இருந்த காயம்… ஒருபோதும் ஆறவில்லை. என் கடமைகளை முடித்துக் கொண்டு உன்னிடமே வரவேண்டியிருந்தேன்” என்றதை ஆசாத் கூறக் கேட்ட தீவனின் குரல் உடைந்து, “எனக்கு நினைவில்லை…உங்களைப் பற்றியும்…என்னைப் பற்றியும்
என் பெயரைப் பற்றியும்…நான் யாருக்கோ சொந்தமானவன் என்பதையும்…எதுவுமே நினைவில்லை” என்றவன் முகத்தில் இருந்த குற்ற உணர்வை புரிந்து கொண்ட அசாத் அவன் அருகே வந்தார்.
கண்களில் நீர் துளிர்த்தபடி, “கவலை வேண்டாம் மகனே. அல்லாவின் ஆசீர்வாதத்தால் நம்மை பற்றி புரிந்துகொள்ள காலம் நீடிக்கும் என்று நம்புவோம்” என்றவர் தீவனின் முகத்தை தனது நடுங்கும் விரல்களால் ஆசையாக தழுவினார் ஆசாத்.
அந்த நொடி ஆறடி உயரம் வளர்ந்து நின்ற தீவன் சிறு குழந்தையாக மாறி அசாதின் கைகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுக்க, தீவனின் உதடுகள், “அப்பா…” என்ற வார்த்தையை தமிழில் உரைக்க, பெற்றவருக்கு இனம் தாண்டி மொழி தாண்டி உடல் சிலிர்க்க மகனை அணைத்து கொண்டு உடைந்து அழுதார்.
ஆண்டுகளாக தன்னைத் தானே தாங்கிக்கொண்டிருந்த உணர்ச்சிகள், அவரின் உடலை நடுங்கச் செய்ய ஆசாத் அவனை உயிரைப் போலப் பற்றிக்கொண்டார்.
“என் மகனே…ரஷீத்…அல்லாஹ்வின் அருளால் நீ என்னிடம் மீண்டு வந்துவிட்டாய்” என்றவரின் குரல் தீவனின் தோளில் மங்கியது.
அசாத் அவன் நெற்றியைத் தொட்டு, “இனி ஒருபோதும் உன்னை இழக்க மாட்டேன் ரஷீத். உன்னை இழந்து வாழத் தைரியமும் இல்லை” என்றவரின் வார்த்தையில் அவர்களின் பின்னால் ஸ்தபத் ஸ்தம்பம் ஒளிர்ந்து அடங்கியது.
அந்த ஒளி அவர்களை ஆசீர்வதிப்பது போல் தோன்ற, மலைக்காற்று மென்மையடைந்தது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு தந்தையும் ஒரு மகனும் ஒன்றிணைந்ததை அந்த இரவு மௌனமாக பார்த்து நின்றது.
காட்டுப்பாதையில் கரண், கலீல் இருவரும் ஸ்தபத் ஸ்தம்பத்தை நோக்கி மூச்சு வாங்க ஓடிவந்தனர். அவர்களின் காதுகளில் மீனாட்சி கூறிய தீர்க்கதரிசனம், “ஹூன் வம்சத்தின் வாரிசு வந்து கொண்டிருக்கிறான்” என்பது மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இருவரும் ஒரு நொடியும் வீணாக்கவில்லை. ஆசாத் கானிடம் விஷயத்தை தெரிவிக்க ஸ்தபத் ஸ்தம்பத்தை நோக்கி ஓடினர். அங்கே நிலவொளியில் ஆசாத் கானுடன் ஒரு இளைஞன் ஒளிரும் ஸ்தம்பத்தை நோக்கி நின்றிருந்தான்.
அவர்களை கண்ட கலீல் திடீரென நின்றுவிட, அவனுக்கு பின்னால் ஓடிவந்த கரண் அவனை கலிலின் மீது மோதும் அளவுக்கு வந்து நின்றான்.
தங்களுக்கு பின்னால் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்த ஆசாத் மற்றும் தீவனை கண்களில் குழப்பத்துடன் பார்த்து நின்றனர் நண்பர்கள்.
கலீல் ஆசாத்தின் முகம் பார்க்க, அதில் ஒளிர்ந்த புன்னகையும், அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கையிலும் தீவனின் முன் வந்தவன் குரல் நடுங்க, “ரஷீத்…” என்றதும் அதிர்ந்து பார்த்த தீவன், “நீங்கள்… என்னை அறிவீர்களா?” என்ற கேள்வியில் தொண்டை அடைக்க எச்சில் விழுங்கினான் கலீல்.
“நீ என் நினைவுகளில் இருந்து நீங்கியதே இல்லை ரஷீத்… என்னை காப்பாற்ற உன் உயி…” என்றவனால் மேற்கொண்டு பேசமுடியாமல் திக்க, அதில் இருந்தே எதிரில் இருப்பவன் யார் என்பதை ஆசாத் கான் சொல்லியதை வைத்து உணர்ந்து கொண்டான் தீவன்.
“எனக்கு நேர்ந்த எதற்கும் நீ காரணம் இல்லை கலீல். இப்போதுதான் அப்பா அனைத்தையும் சொன்னார், உன்னை காப்பாற்றுவது எனது கடமை” என்றவனுக்கு கலீல் மற்றும் ஆசாத்தின் உணர்வுகள் அவனுக்கு புரிந்தது ஆனால் அவர்களோடு அவனால் இன்னும் இணைய முடியவில்லை.
தீவனின் நிலை உணர்ந்த கலீல், “அன்று…அந்த இரவில் நான் இறந்திருக்க வேண்டும்.
ஆனால் நீ..நீ என்னைத் தள்ளிக் காப்பாற்றினாய். என்னை நோக்கி வந்த தாக்குதலை உன் மீது தாங்கி கொண்டாய்” என்றதும் தீவனின் மூச்சு அதிர்ச்சியில் உறைந்தது.அவனுக்கு நினைவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் ஏதோ ஒன்று கிளர்ந்தது, ஒரு வலி…ஒரு தீ…
ஒரு குழந்தையின் அலறல்.
கலீலின் கண்கள் நீரால் நிரம்ப, “நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் நீ!” என்றதை கேட்ட தீவனின் உதடுகள் உலர்ந்து போக, கலீல் தீவனின் அருகில் நெருங்கி, “உன்னை பார்த்தால் நான் சொல்ல துடித்த இரண்டு வார்த்தைகள்…” என்ற கலீலிடம், “என்ன?” என்ற கேள்வியை கேட்டான் தீவன்.
அதற்கு பதில் அளித்த கலீலின் குரல் நடுங்க, “நன்றி ரஷீத். அந்த இரவு நீ இல்லையென்றால் நான் இப்போது இங்கு நின்று உன்னிடம் பேசியிருக்க முடியாது” என்றதை கேட்ட தீவனின் தொண்டை இறுகியது.
மேலும் தொடர்ந்த கலீல், “அடுத்தது, என்னை முடிந்தால் மன்னித்துவிடு. நான் அன்று இல்லாமல் இருந்திருந்தால் நீ வாப்பாவைப் பிரிந்து வாழ்ந்திருக்கத் தேவை இல்லாமல் போயிருக்கும். நீ விட்டுச் சென்ற வாழ்க்கையை நான் வாழ்ந்ததற்காக…” என்றவனின் குணம் அவன் பேச்சில் உணர்ந்து கொண்ட தீவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
இதை அணைத்தையும் கரண் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு உயிர்கள் பல ஆண்டுகளின் வலியை இணைக்க முயலும் அந்த தருணம் அவனின் மார்பையும் இறுக்கியது.
தீவன் மீண்டும், “எனக்கு எதுவும் நினைவில்லை…” என்றதும் கலீல் மெதுவாகத் தலையசைத்தான்.
அதற்கு ஆசாத் கான், “நேரம் வந்தால் நினைவு வரலாம். நினைவுகள் வராமல் போனாலும் நீ எங்களவன் பேட்டா” என்றவரின் வார்த்தையில் தீவன் இருவரையும் பார்த்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தனியாக இல்லாதது போல் உணர்ந்தான்.
திடீரென புதர்களில் சலசலப்பு கேட்க, சுக்விந்தர் அவர்களை நோக்கி ஓடிவந்து, மூச்சு வாங்க நின்றவனிடம் கரண், ” என்னாச்சு?” என்றதும், “சார்… மீனாட்சி… அதிரா…” என்று திக்கியவனின் வார்த்தைகளில் கலீலின் கண்கள் படபடத்தது.
கரண் ஒரு படி முன்னே வந்து, குரலில் கூர்மையுடன்,”அவர்களுக்கு என்ன ஆயிற்று?” என்றதும் சுக்விந்தர் எச்சில் விழுங்கியபடி, “அவர்களை சவுஹானின் ஆட்கள் கடத்திச் சென்றுவிட்டனர்” என்ற வார்த்தையில் கரண் மற்றும் கலீலின் உலகம் நின்றது.
சுக்விந்தர் தொடர்ந்தவன் கரணை கூர்மையாக பார்த்தபடி, “மாலிக்கின் கும்பல்… ஆரிஷ் குரேஷியின் ஆணை. மேம் சாஹிபா மற்றும் சோட்டி சாஹிபா அராவள்ளிக்கு வரும்போது காரைத் தடுத்து கடத்தி இருக்கிறார்கள்” என்றதை கேட்ட கலீலின் மூச்சு நின்றது.
அவர்களின் பின்னால் ஸ்தபத் ஸ்தம்பம் இன்னும் பிரகாசித்தது. வருகின்ற புயலை உணர்ந்தது போல. கலீல் கரணை நோக்கினான்.
கரணின் குரல் உறுதியுடன், “ஆரிஷ் குரேஷி… உன் கதையை இன்று இரவே முடிக்கிறோம்” என்று சத்தியம் செய்ய, கலீல் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
நண்பர்களின் முன் வந்த தீவன், “நானும் உங்களுடன் வருகிறேன்” என்றவனை தடுக்க நினைத்த நண்பர்களிடம், “உங்களது கடமையில் நான் குறுக்கிட மாட்டேன். அதேபோல் நீங்கள் எனது கடமையில் குறுக்கிடுவதை நானும் விரும்பவில்லை” என்றவனை குழப்பத்துடன் பார்த்தவர்களிடம், “உங்கள் இருவரை பாதுகாப்பது என் வம்சத்தின் கடமையல்லவா?” என்றவனை இருவரும் மெச்சும் பார்வை பார்த்தனர்.
அராவள்ளிக்குச் செல்லும் சாலை அசாதாரணமான அமைதியுடன் இருந்தது. காரின் ஹெட்லைட்கள் இருளை வெட்டிக் கொண்டு, வெறிச்சோடிய நெடுஞ்சாலையில்
தொலைவில் கருமையாக நிழலாடும் மலைச்சரிவுகள் வளைந்து நெளிந்து சென்றது.
அதிரா மீனாட்சியின் அருகில் அமர்ந்திருந்தவள், மெதுவாக ஏதோ பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தவளின் விரல்கள் திடீரென்று நின்றுவிட்டன. ஒருவித அமானுஷ்ய குளிர் அவள் உடலை சிலிர்க்க வைக்க, மெல்ல ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.
இரவு…அது கனமாக சூழ்ந்திருந்தது. ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்த அதிரா, மீனாட்சியிடம் சைகையால் உணர்த்த, மீனாட்சி அவளை நோக்கி திரும்பினாள். அவள் முகம் அமைதியாக இருந்தாலும், கண்களில் ஒரு பழமையான அச்சம் மின்னியது.
மீனாட்சி அதிராவின் கையை மெதுவாகப் பிடித்து, “தீதி…சபதம் நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. உன்னால் மட்டுமே இளவரசர்களை இணைக்க முடியும். அமைதியாக வேடிக்கை பார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயலாதே” என்றதும் அதிரா எதற்கும் தயாராக இருந்தாள்.
கார் மெதுவாகியது. சாலையை ஒரு கருப்பு SUV மறித்திருந்தது. மற்றொரு வண்டி பின்னால் வந்து மறிக்க, அதிரா மீனாட்சியின் கையை இறுக்கப் பிடித்தாள்.
SUV கதவுகள் திறந்தன. ஆண்கள் ஆயுதங்களுடன் இவர்களை நெருங்கினர். ஓட்டுனர் பின்னால் போக முயன்றார், ஆனால் இன்னொரு வாகனம் வழியை மறித்ததால் அது முடியாமல் போனது.
அதிராவின் இதயம் துடிக்க, மீனாட்சியிடம், “சோட்டி பயப்படாதே… காத்திருப்போம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றவர்களை அந்த கூட்டம் நெருங்கியது.
ஒருவன் துப்பாக்கியின் முனையால் ஜன்னலை உடைத்து ஓட்டுனரை கீழே இழுத்து போடா, ஒரே அடியில் அவர் மயங்கி விழுந்தார். அதை கண்ட அதிரா அதிர்ந்து மீனாட்சியை தன் மார்போடு அணைத்தபடி அமர்ந்திருந்தாள்.
அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த பின்பக்கக் கதவு வன்மையாகத் திறக்கப்பட்டது. கடுமையான கைகள் அவர்களைப் பிடித்திழுக்க, எந்த கூச்சலும் இல்லாமல் பெண்கள்
அந்த குண்டர்களின் வண்டியில் ஏறியிருந்தனர்.
அவர்களை SUV-க்குள் தள்ளி, கதவு அடைக்கப்பட, அதன் உள்ளே, அவர்களுக்காக காத்திருந்தான் ஆரிஷ் குரேஷி.
அவனை கண்ட அதிரா உறைந்தாள். மீனாட்சியின் மூச்சு நின்றது. அதை பார்த்த ஆரிஷ் முன்வந்து அமர்ந்தபடி, அவனின் கண்களில் வேட்டையாடும் பார்வையுடன், “ஆஹா இளவரசியாருக்கு வணக்கம். தங்களை பார்த்து பல… ஜென்மங்கள் ஆகிவிட்டது” என்றவனின் இதழோரம் ஏளன சிரிப்பில், அதிரா அவனை வெறுப்புடன் பார்த்தாள்.
மீனாட்சி அப்படிச் செய்யவில்லை. அவள் பார்த்தது அவனின் முகத்தை அல்ல. அவனின் ஆன்மாவை. அதை பார்த்த ஆரிஷ் சிரித்தபடி, “நீ தான் ஆசாத் கான் பாதுகாத்த சிறுமியா? உனது கண்கள் எனக்கு யாரையோ நினைவு படுத்துவது போல இருக்கிறதே. நீ என்னை அறிவாயா?” என்றவனின் வார்த்தையில் மீனாட்சியின் குரல் மென்மையானது.
ஆனால் அதே சமயம் கத்தியைப் போல கூர்மையுடன், “அறிவேன்” என்றவளை ஆரிஷ் புருவம் உயர்த்தி பார்த்தான்.
“அப்படியா? நான் யார்?” என்றவனின் கேள்விக்கு மீனாட்சியின் கண்கள் இருண்டன.
“என் இராச்சியத்தை அழித்தவன்” என்ற ஆரிஷின் சிரிப்பு ஒரு நொடி தளர்ந்தது. அதிரா குழப்பத்துடன் மீனாட்சியை நோக்கினாள். மீனாட்சி பார்வையை மாற்றவில்லை.
“உன்னால் என்னை அறியமுடியவில்லையா ஆளுநர் மிர்சா குத்புத்தீன்?” என்றவளின் வார்த்தையில் ஆரிஷின் தாடை இறுகியது. அவனின் கண்களில் ஒரு மின்னல், அச்சம்…
சில நினைவுகள் வலம் வந்தது.
மீனாட்சி தொடர்ந்தாள், “நான்… மேஹ்ருன்னிஷா” என்றதும் ஆரிஷின் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது.அந்த SUV-க்குள் காற்று கனமானது.
இப்போது மீனாட்சி முன்வந்து, “அன்று உனக்கு முன் எடுத்த சபதத்தை இன்று முடித்து காட்டுவேன்” என்றவளின் வார்த்தையில் ஆரிஷின் கைகள் இறுகியது.
முதல்முறையாக ஆரிஷின் முகமூடி உடைந்தது. அவனின் கண்களில் பயம் மின்னியது.
அவன் சீற்றத்துடன் கையை இருக்கையில் அடித்தவன், ” இவர்களை நமது இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கர்ஜித்தான்.
மீனாட்சி அதிராவை இறுக்கப் பிடித்துக்கொண்டு, “அவர்கள் வருவார்கள். சபதத்தை முடித்து அரவள்ளியை காப்பாற்றுவார்கள்.”
அராவள்ளியின் இரவு இரண்டாகப் பிளந்தது. மலைத்தொடர்களில் இயந்திரங்கள் கர்ஜித்தன. ராஜ்புத் வீரர்கள் அரண்மனை வளாகத்தை நிரப்பினர். மலை விதியின் சுமையால் நடுங்கியது. அந்த குழப்பத்தின் மையத்தில் முதல் முறையாக மூன்று சகோதரர்கள் ஒன்றாக நின்றனர்.
கரண்.
கலீல்.
தீவன்.
மூன்று ஜ்வாலைகள்.
சுக்விந்தரின் குரல் இன்னும் அவர்களின் காதுகளில் ஒலித்தது, “மீனாட்சி, அதிரா…கடத்தப்பட்டார்கள். மாலிக் கும்பல். ஆரிஷ் குரேஷியின் ஆணை.”
அராவள்ளியின் வெளிப்புறத்தில் இருந்த கைவிடப்பட்ட நெசவுத் தொழிற்சாலை, இப்போது ஒரு கோட்டையாக மாறியிருந்தது. பெரிய விளக்குகள்.ஆயுதங்களுடன் காவலர்கள். காவல் கோபுரங்கள் என்று காவல் பலமாக்கப்பட்டிருந்தது.
உள்ளே மீனாட்சி, அதிரா இருவரும் தூண்களில் கட்டப்பட்டிருந்தனர். அவர்களைச் சுற்றி மாலிக்கின் ஆட்கள் நின்றிருக்க, பெண்கள் இருவரின் முன்னால் ஆரிஷ் குரேஷி நின்றிருந்தான்.
அவன் மீனாட்சியை நெருங்கி, “ஹூன் வம்சத்தின் வாரிசு, அன்று நீ என்னைச் சபித்தாய்… உண்மைதான்” என்றவனை மீனாட்சி இமைக்காமல் பார்த்திருக்க, மேலும் தொடர்ந்தவன், “இன்று சபதம் நிறைவேறுகிறதா இல்லை உங்கள் அனைவரையும் கருவருக்கிறேனா என்பதை நீ உன் கண்களால் பார்ப்பாய்” என்ற ஆரிஷின் சிரிப்பு அந்த கோட்டை முழுதும் எதிரொலித்தது.
“பார்க்கத்தான் போகிறேன்” என்ற வார்த்தை மீனாட்சியின் உதடுகள் உச்சரித்த அந்த நொடி அந்த கோட்டையின் கதவுகள் வெடித்தன.
புகை. தூசி. உலோகத் துண்டுகள் பறந்தன. அவற்றின் நடுவே முதலில் கரண் நுழைந்தான்.
வீரின் நெருப்பை கண்களில் ஏந்தியபடி வந்தான்.
அடுத்து கலீல். ரணசூரின் கோபத்தை முகத்தில் தாங்கியபடி உள்ளே நுழைந்தான்.
கடைசியாக தீவன். மௌனமாக, நிதானத்துடன் உள்ளே நுழைந்தான்.
ஆரிஷின் கண்கள் விரிந்து, “இல்லை…இது நடக்க கூடாது… நடக்க விடமாட்டேன்” என்றவனை கரணின் குரல் இடைவெட்டியது, “நடக்கும்… நாளைய விடியலுக்கு முன் உன்னை முடித்து நடத்தி காட்டுவோம்.”
மாலிக்கின் ஆட்கள் முன்வந்தனர். மூன்று சகோதரர்களும் ஒன்றாக முன்னேறினர்.
முதல் தாக்குதல் கலீலிடமிருந்து வந்தது. அவன் புயலாக நகர்ந்தான்,வேகத்துடனும்,
வன்மத்துடனும், அடக்க முடியாத சக்தியோடு ஒவ்வொரு அடியிலும் ஒருமுறை இறந்து மீண்டும் எழுந்த ஒரு போர்வீரனின் சுமையோடு போரிட்டான்.
கரண் கட்டுப்பாட்டுடன். ஒவ்வொரு அசைவும் வீரின் அமர்த்தலான நிதானத்துடன் எதிரிகளை துவம்சம் செய்தான்.
தீவன் வேகமும் விவேகமும் கலந்து போராடினான். மூல சக்தியை கொண்டு அடக்கப்படாத தீயை போல, ஹூன் வம்சத்தின் இரத்தம் அவனுள் விழித்தெழ, அவன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆரிஷின் ஆட்கள் விழுந்தனர்.
ஆயுதங்கள் நொறுங்கின. தரை நடுங்கியது. அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ஆரிஷின் கண்களில் பயம் ஊர்ந்தது.
அதனை கண்ட கலீல் கண்கள் தீயாக, “அன்று நீ தொடங்கியதை.. இன்று நாங்கள் முடிக்க வந்திருக்கோம்” என்றான்.
கலீல் மற்றும் ஆரிஷுக்கும் கடுமையான யுத்தம் நடக்க. நண்பனின் மேல் ஒரு கண் வைத்தபடி சண்டையிட்டு கொண்டிருந்தான் கரண்.
ஆரிஷ் துப்பாக்கியைப் பிடித்தான். கரண் அதை உதைத்துத் தள்ளினான். ஆரிஷ் இரும்புக் கம்பியை வீசினான். கலீல் அதைத் தடுத்து, ஆரிஷின் சட்டை காலரை பிடித்து தூணில் மோதினான்.
முகம் எல்லாம் ரத்தத்தில் மூழ்கியபடி ஆரிஷ் எழுந்தவன், “நீங்கள் என்னை கொல்ல முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன்..” என்றவன் முன்னே வந்த கரண்,”இல்லை. நீ சபிக்கப்பட்டவன்” என்றதும் ஆரிஷின் கண்கள் விரிந்தன.
கலீல் அவனின் பிடியை ஆரிஷின் கழுத்தில் இறுக்கியபடி, “அந்த சாபம் இன்றோடு முடியட்டும்” என்றபடி விடுபட போராடினான்.
கரணின் குரல் குரூரத்துடன், “உன் முடிவு எங்கள் கைகளில் இன்று நடந்தேறும்” என்றான்.
கரண், கலீல் இருவரும் இணைந்து ஆரிஷை தாக்கினர். ஆரிஷ் முழங்காலில் விழுந்தான்.
அறை அமைதியானது. அவன் மேலே பார்த்தான்.கண்களில் பயத்துடன், சுற்றி பார்த்தவன் முன் மெஹருனிஷ்ஷா வந்து நின்றாள்.
கரண் மெதுவாகச் சொன்னான், “இந்த முறை வஞ்சம் உன்னை காப்பாற்றாது. அன்று நீ இழைத்த துரோகத்தின் சதி இன்று உன் முன் இரட்டை சாபமாக வந்து நிற்கிறது”
மெஹருன்னிஷாவின் சபதம் இன்று நிறைவேறும் என்றவர்கள் இருவரும், ஆரிஷின் உயிர் உடலைவிட்டு பிரியும் வரை, தங்களது பூர்வ ஜென்மத்தின் வலி ஆறும்வரை அடித்து கொன்றனர்.
ஆரிஷ் விழுந்தான். சாபம் முடிந்தது. தீர்க்கதரிசனம் நிறைவேறியது. மேஹ்ருன்னிஷாவின் சபதம்—இறுதியாக நிறைவு பெற்றது. ரணசூரனின் சபதம் அரவள்ளியை மீட்கும் வரை ஓயாது.
ரணசூரன் வந்துவிட்டான்……

