
தேடல் 25:
தினேஷ் இப்போது உயிரோடு இல்லை என்று சொல்லவும் இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நிச்சயமாக இது தற்கொலையாக இருக்கும் என்று இருவராலுமே நம்ப முடியவில்லை. ஒன்று கொலை தற்கொலையாக மாற்றப் பட்டிருக்கலாம் அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் தாங்கள் தேடி செல்வது சாதாரண விசயமில்லை என்று இருவருக்குமே தோன்றியது. அதே சமயம் அதன் பின்னணி என்னவாக இருக்குமென்று கொஞ்சமும் ஊகிக்க முடியவில்லை.
“எப்படி இவ்வளவு உறுதியா அது தற்கொலைதானு சொல்லறீங்க…” என்றான் அக்னி அவளை கூர்ந்துப் பார்த்தபடியே.
“ஏன் நீங்க இப்படி தூண்டி துருவி போலீஸ் மாதிரி கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க…” அந்த பெண்ணுமே அவனை அளவிட்டபடியே கேள்வி எழுப்பினாள்.
“சும்மா… தெரிஞ்சுக்கலானு ஒரு க்யூரியாசிட்டி தான்…”
“நீங்க சொல்லறது நம்பற மாதிரி இல்ல… எனி வே… கல்யாணம்னு வந்து இருக்கீங்க… ஆனா, பத்திரிக்கை எதுவும் இல்லயே உங்ககிட்ட…” என்றாள் அவர்களை ஆராய்ந்தவாறே.
“அது பிரிண்டிங் குடுத்து இருக்கோம்… இனிமே தான் வரும்…” என்ற அக்னியை அவள் நம்பாத பார்வை பார்க்க, அவனின் கைமீது தனது கையை வைத்து அழுத்தம் கொடுத்த மிளிர் இப்போது பேச தொடங்கினாள்.
“ஹனி…” என அழைக்கவும் அந்த தேன்மொழி ஆச்சரியமாக அதிர்ந்து மிளிரை நோக்க, “எங்கள நம்பு… எங்களால உனக்கு எந்த பிரச்சனையும் வராது…” என்றாள் மிளிர் அவளை பார்த்தபடி.
“ஏய்… உனக்கு பேச வராதுனு… அப்போ அது பொய்யா… உனக்கு எல்லாமே நியாபகம் வந்துட்டா… ஏன்டி அப்புறம் பொய் சொன்ன…”
“ஹனி… என்ன புரிஞ்சுக்கோ… எதுவும் விளக்கி சொல்ல முடியாத நிலைமையில நாங்க இருக்கோம்… எனக்கு இப்ப கொஞ்ச நாள் முன்ன தான் பழசெல்லாம் நியாபகம் வந்துச்சு… கூடவே சேந்து மிளிரோட சாவுல சந்தேகமும் வந்துடுச்சு…”
“எங்களுக்கே அந்த சந்தேகம் இருக்கு… ஆனா இப்போ அத கண்டுபிடிக்கறதால மட்டும் என்ன நடக்குமுனு நினைக்கற பேபி… மகி இறந்துட்டா… இனி அவள கொண்டு வர முடியாது…”
“ப்ளீஸ் ஹனி… இது மகியோட இறப்ப பத்தி மட்டும் இல்ல… கொஞ்சம் கொஞ்சமா இது பெரிசாகிட்டே போகுது… நீ என்ன நினைக்கற தினேஷ் ஒரு சின்ன லவ் மேட்டருக்கு இறந்து இருப்பானா… அவன் அவ்வளவு வீக் கிடையாது ஹனி…”
“உண்மைதான் மிளிர்… அவன் அப்படிபட்ட ஆளே கிடையாது தான்… அவனா இப்படி பண்ணானு எல்லாருக்கும் ஆச்சரியம் தான்… ஆனா அவன் கைப்பட எழுதின லெட்டர்… அது அப்படிதான் சொல்லுது…”
“ப்ளீஸ்… எனக்கு கொஞ்சம் டீட்டைலா சொல்லேன் ஹனி…”
“நானும் இன்னும் கொஞ்சம் ப்ரண்ட்ஸும் மகியோட டெத்துக்கு போய்ட்டு பாடி எடுக்க வரைக்கும் இருந்துட்டு தான் கிளம்பினோம்… வர வழியில தான் தினேஷ் அவன் ரூம்ல சூசைட் பண்ணிகிட்டானு தகவல் வந்துச்சு… அதுக்கு அப்புறம் அவசர அவசரமா இங்க வந்து நானும் நம்ம ப்ரண்ட்ஸும் தான் அவன் பாடிய ஊருக்கு எடுத்துட்டு போக உதவி பண்ணோம்… பாவம்… அவன் பேமிலி பத்தி உனக்கே தெரியும்… அவங்க அப்பா தவறி ரொம்ப வருஷம் ஆகிட்டு… சொல்லிக்கறபடி வசதியும் இல்ல… இவன் வேலைக்கு போய் தான் அவன் தங்கச்சிங்கள கட்டிக் கொடுக்கனுமுனு சூழ்நிலை… இப்படி தீடிருனு அவன் இறந்துட்டாங்கறத அவங்க வீட்டில யாராலையுமே ஏத்துக்க முடியல… அதுவும் சூசைட்… அத அவங்க வீட்டுல நம்பவே இல்ல… சத்தியம் பண்ணி சொன்னாங்க என் புள்ளைக்கு எந்த லவ்வும் இல்ல… அப்படியே இருந்தாலும் அவன் தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு கோழை இல்லனு… ஆனா எல்லாமே முடிஞ்ச அப்புறம் என்ன பண்ண முடியும்…”
“அப்புறம் எப்படி இது காதலால செய்துக்கிட்ட தற்கொலைதானு போலீஸ் உறுதியா முடிவு பண்ணாங்க…” என்றான் அக்னி
“அவன் ரூம்ல ஒரு லெட்டர் கிடைச்சுச்சு… அது மட்டுமில்லமா அவன் சாவுக்கு வந்த ஒரு பொண்ணு அவன் லவ்வர்னும்… அவளுக்கும் தினேஷுக்கும் சண்டைனும் ஆனா தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு போவானு நினைக்கலனும் ரொம்ப அழுதா… துளிக்கூட அவ அழுகைய யாரும் பொய்யினு சொல்ல முடியாது… இன்னும் அவங்க லவ் பண்ணதுக்கு ஆதரமா சேந்து இருக்க போட்டோ… வீடியோ எல்லாம் காட்டுனா… சோ அது தற்கொலைதானு கேஸ முடிச்சுட்டாங்க…”
“ம்ம்ம்… இன்னமும் தினேஷ் பேமிலி அங்கையே தான் இருக்காங்களா…” என்றான் அக்னி.
“தெரியல… அன்னைக்கு கடைசி வரைக்கும் இருந்து எல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் நாங்க தினேஷ் வீட்டுல இருந்து கிளம்பினோம்… ஆனா அதுக்கு அப்புறம் காண்டேக்டே இல்ல அவங்க கூட…”
“ஓஓஓ… தினேஷ்கூட இருந்த ரூம்மெட் யாராவது இப்போ இங்க வேலை பாக்கறாங்களா..?”
“அவன்கூட இருந்த யாரும் அப்பவுமே இங்க வேலை பாக்கல… அவங்க எல்லாரும் வேற வேற பீல்டு… பட் ஒரே ஊரு… சோ ஒன்னா தங்கி இருந்தாங்க…”
“அப்போ தினேஷ் இங்க தங்கி இருந்த அட்ரஸும் அவங்க ஊர் அட்ரஸும் தர முடியுமா ப்ளீஸ்…”
“ஒய் நாட்…” என்றவள் ஒரு டிஸ்யூ பேப்பரில் இரண்டு முகவரியும் எழுதிக் கொடுத்தவள்.
“ஓ.கே அவ்வளவு தான் உங்க என்கொயரினா நான் கிளம்பளாமா…”
“இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கி…”
“கேட்டுடுங்களேன் அதையும்…”
“உங்க சீப் எடிட்டர் தவசீலன பத்தி என்ன நினைக்கறீங்க… அவருக்கும் மகிக்குமான காதல் எப்படி இருந்துச்சு…”
“அவருக்கு பேசிக்காவே கொஞ்சம் சுயநலம் அதிகம்… சீக்கரமே பெரிய ஆளா வரனுமுனு ரொம்ப ஆசை… அதைவிட பணத்து மேல குறி அதிகம்… கொஞ்சம் சிடுமூஞ்சி டைப்னும் சொல்லலாம்… மகி அவர லவ் பண்ணறேனு சொல்லும் போது ஆச்சரியமா தான் இருந்துச்சு… இவர போய் இவ எப்படிடா லவ் பண்ணறானு… ஆனா அவங்ககுள்ள ரொம்ப டீப்பா லவ் பண்ண மாதிரி தான் தெரிஞ்சுது… மகிய மாதிரி ஒரு திறமையான பொண்ணு அவர லவ் பண்ணறாளானு… இன்னும் இரண்டு வருஷம் அவ இங்க வேல பாத்த கண்டிப்பா நம்பர் ஒன் ஆங்கரா வந்திருப்பா… எங்களுக்கு எல்லாம் அவ அழகும் திறமையும் தான் தவசீலன் அவள லவ் பண்ண காரணமோனு தோனும்… ஆனா மகிகிட்ட சொன்னதில்ல… கடைசில மகி இறந்து ஒரு மாசத்துக்குள்ள பெரிய பணக்கார பொண்ணு கிடைச்சதும் கல்யாணம் முடிச்சுட்டாரு… எல்லாருக்குமே அதுல ரொம்ப வருத்தம்தான்…” என்றாள் தேன்மொழி.
“ஓ.கே மிஸ்… ரொம்ப தேங்க்ஸ் நீங்க இவ்வளவு இன்ஃபர்மேஷன் கொடுத்ததுக்கு…”
“ஓ.கே நான் உங்க இரண்டு பேரையும் ஒரு கேள்வி கேட்கலாமா..?”
“தராளமா கேட்கலாமே…” என்றனர் இருவரும் கோரஸாக.
“நிஜமாவே நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..?”
“அப்படியா தெரியுது…” என அக்னியும், “இல்ல… இல்ல… அப்படி எதுவுமில்ல…” என மிளிரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.
“ஹா…ஹா… உண்மைக்குமே நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட சூப்பரா இருக்கும்… இரண்டு பேருமே மேட் ஃபார் ஈச் அதர்… அப்படி கல்யாணம் பண்ணிக்கும் போது சொல்லுங்க… எனி வே அட்வான்ஸ் கங்கிராட்ஸ்…” என்றவள் சிரித்துக்கொண்டே அவர்களிடமிருந்து விடைப்பெற்று சென்றுவிட்டாள்.
“ஓ.கே… இப்போ எங்க நேரா தினேஷ் தங்கி இருந்த ரூம்க்கு போக போறோமா…”
“அங்கதான் போகனும்… அதுக்கு முன்ன உன்கிட்ட ஒன்னு கேட்கனும்…”
“என்கிட்டயா… என்கிட்ட என்ன கேட்கப் போறீங்க…”
“உன் ரூம்மெட்ஸ் இப்போ எங்க இருப்பாங்க… ஐ மீன் நீ இங்க தங்கி இருந்தப்போ உன்கூட இருந்தாங்களே அவங்க…”
“அவங்க ஏன் இப்போ…”
“மே பீ உன்கிட்ட சொல்லத விசயத்த அவங்ககிட்ட மகி சொல்லி இருக்கலாம் இல்ல…”
“கண்டிப்பா இல்ல… எங்கிட்ட சொல்லாதத மகி வேற யார்கிட்டையும் சொல்லி இருக்க மாட்ட…” என்றாள் மிளிர் கொஞ்சம் காட்டமாக.
“மிளிர்… இங்க பாரு… இவ உன் மகிதான்… நீதான் அவளுக்கு எல்லாரைவிடவும் ரொம்ப இம்பார்டண்ட்… ஆனா அன்னைய சூழ்நிலைய யோசிச்சு பாரு… நீ ஏற்கனவே மகிய காணுமுனு டென்ஷன்ல இருந்து இருப்ப… சோ உன்கிட்ட சொல்லி பயமுறுத்த வேண்டானு நினைச்சு இருக்கலாம்… ஆனா விசயம் பெரிசுனு தோனுது… அப்படி இருக்கும்போது அத கண்டிப்பா மனசுகுள்ளயே வச்சு இருக்க முடியாது… அதனால உங்க ரூம்மெட் வேற யார்கிட்டையாது சொல்லி இருக்கலாம்…”
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது… அவ என்கிட்டதான் எதா இருந்தாலும் சொல்லுவா…”
“ப்ளீஸ் மிளிர்… சொல்லறத புரிஞ்சுக்கோ…” என அவன் இறஞ்சும் பார்வை பார்க்க, “அப்போ உங்க அத்த பொண்ணுக்கு போன் பண்ணி கேளுங்க…” என்றாள் மிளிர் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.
“எது நிவியா…”
“அவ இல்ல… அவ அக்கா ஶ்ரீ… தாரா ஶ்ரீ…”
“அவ உன் ரூம்மெட்டா… அப்போ முன்னமே தெரியுமா என்ன…” என அவன் ஆச்சரியமாய் வினவ,
“தெரியாம என்ன…” என்றாள் தோளைக் குலுக்கி அவள் அலட்சியமாக,
“அடிப்பாவி… முன்னமே தெரிஞ்சுகிட்டு தான் எதுவுமே தெரியாத மாதிரி இருந்தீயா நீ…” என்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக, “ஹேய்… அப்போ… அப்போ… அன்னைக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ என்ன உனக்கு அடையாளம் தெரிஞ்சுட்டு தான… அதான் அப்படி பாத்தீயா… அப்போ என் குரல வச்சே அடையாளம் கண்டுபிடிச்சுட்ட… அப்படிதானே…” என அவன் கனகச்சிதமாக கணித்துக் கேட்க, அவள் தான் திணறிப் போனாள்.
“தேவையில்லாத பேச்செல்லாம் எதுக்கு… எவ்வளவோ வேலை இருக்கு… கிளம்புவோம் வாங்க…” என அவன் கையை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள் அவள்.
“எது தேவையில்லாத விசயம்… ஹப்பா… என்ன பார்வைடி அது… அப்படியே கண்ணு வழியா உயிர உரிஞ்சு எடுக்கற பார்வை… உன்ன யாருனே தெரியாலைனாலும் எத்தனை தெய்வத்துக்கிட்ட வேண்டி கிட்டேன் தெரியுமா… நீ என்னமோ ரொம்ப கூலா… தெரியும்… அதுக்கென்ன இப்போனு கேக்கற…” என்றான் அவள் இழுத்த இழுப்புக்கு அவளுடனேயே சென்றுக் கொண்டு.
“அதெல்லாம் ஒன்னுமில்ல… அந்த நேரத்துல யார் வந்திருந்தாலும் அப்படி தான் பாத்திருப்பேன்… இத என்னமோ பெரிசா சொல்லிட்டு…” என்றாள் அவள் தோளை குலுக்கி. அதற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியே வந்து, தங்கள் வாடகை கார் நிற்கும் இடத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தனர்.
சட்டென்று அவள் தோளைப் பற்றி நிறுத்தியவன், அவளை தன்புறம் திருப்பி, “அவ்வளவு தானா மிளிர்… வேற எதுவுமே இல்லையா…” என அவள் கண்களை ஊடுறுவி, ஆழ்ந்து நோக்கியபடி ஒரு வித ஏக்க குரலில் எதிர்பார்ப்போடு கேட்க, அவனின் அந்த செயலில் முற்றிலும் அவனுள் தொலைந்துப் போனாள் அவள்.
தடுமாறி தடம் மாறி விழி வழி இதயம் இடம் மாறிய நேரம், அந்த இனிமையை களைக்கும் வண்ணம் அவளின் கைப்பேசி சிணுங்கியது. இரண்டு முறை அடித்து ஓய்ந்த பிறகுதான் அதையே உணர்ந்தனர் இருவரும். மூன்றாம் முறை அழைக்கவும், “அவ்வளவே தான்…. நகருங்க நீங்க முதல…” என அவனை விலக்கிக் கொண்டு, வேகமாக தள்ளிச் சென்று அழைப்பை ஏற்று கைப்பேசியை காதுக்குக் கொடுத்தாள். அவனோ புன்முறுவளோடு கையைக் கட்டி கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
“ஹலோ… ஹலோ…” சில பல ஹலோக்களுக்கு பிறகு எதிர்புறம் அந்த குரல் கேட்டது.
“என்ன பேபி… அவ்வளவு அழகான குரல வச்சுட்டு ஊமையினு சொல்லலாமா நீ… அது தப்பில்ல…”
“ஹலோ… ஹலோ… யார் நீங்க… எனக்கு ஒன்னுமே புரியல… ஹலோ…”
“ஏன் டார்லி இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகற… அது உடம்புக்கு நல்லதில்லை… ஏற்கனவே இரண்டு ஆக்ஸிடன்ட பாத்தாச்சு… அதுக்கும் மேல பழசெல்லாம் நியாபகம் வந்துட்டா நீ நார்மல் ஆகிட்டதா நினைப்பா… மூளையில இருக்க ரத்தகட்டி அப்படியேதான் செல்லம் இருக்கு… கொஞ்சம் நீ எமோஸ்னல் ஆனாலும் அது வெடிக்க நிறைய சான்ஸ் இருக்காம்… அப்புறம் நீ பாட்டுக்கு பட்டுனு போய்ட்டனா… நான் யார்கூட விளையாடுவேனாம்… சில்லி கேர்ள்…”
“ஏய்… யாருடா நீ…”
“ஏய் பேபி… இப்போ தான சொன்னேன்… எதுக்கு கத்தற நீ… தெரு தெருவா அலைஞ்சு திரிஞ்சு என்ன தேடிட்டு… இப்போ யாருனு கேக்கற…”
“ஏய்… அப்போ… அப்போ… நீ தான் என் மகிய கொன்னீயா…”
“சட்சாத் அடியேனே தான்… உன் மகிய மட்டுமில்ல… அந்த தினேஷ கொன்னு அத தற்கொலையா மாத்தினதும் இதே அடியேன்தான்…”
“ஏய்… எவ்வளவு தைரியம் இருந்தா இரண்டு பேர கொன்னுட்டு, இவ்வளவு தெனாவெட்டா பேசுவா… உன்ன…”
“இரு பேபி… சபதமெல்லாம் எடுக்க முன்ன… கொஞ்சம் பேசிப்போம்…”
“என்ன பேசனும் இப்போ உனக்கு… எல்லாத்தையும் பண்ணிட்டு தப்பிச்சுடலானு நினைக்கற இல்ல… சத்தியமா அவ்வளவு ஈஸியா உன்ன நிம்மதியா இருக்க விட மாட்டேன்டா…”
“எது உன்கூட இன்ஸ்பெக்டர்னு ஒரு ஜோக்கர் சுத்திட்டு இருக்கானே… அவன வச்சு என்ன புடிச்சிடுவீயா… காமெடி பண்ணாத செல்லம்…”
“டேய்…”
“ச்சூ… பாரு… ஏதோ பேச வந்துட்டு வேற ஏதோ பேசிட்டு இருக்கேன்… நான் பேச வந்தத பேசுவோமா இப்போ… எப்ப பாரு செத்து போனவங்கள பத்தியே யோசிச்சு கவலபடறீயே பேபி… உயிரோட இருக்கவங்கள நினைச்சும் கொஞ்சம் கவலப்பட வேண்டாம்… அப்படியே திரும்பி அந்த ஜோக்கர கொஞ்சம் பாரு…” என்றதோடு போன் கட்டாகி இருக்க, அவளும் திரும்பி பார்க்க, அவளை புன்னகையோடு பார்த்திருந்தவன், என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
அதே நேரம் அவனை கடந்துச் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன், அக்னியின் இடது தோள் பட்டையில் கத்தி ஒன்றை இறக்கிவிட்டு, மின்னல் வேகத்தில் சென்று மறைந்திருக்க, நொடி நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வை அவளால் ஏற்கவே முடியவில்லை.
“மித்து…” என வேகமாக அவனிடம் ஓடியவள், அவனை தாவி அணைத்திருந்தாள். எல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடியே அவனின் இரத்தத்தை தனது கரத்தினில் உணர்ந்தவள், வேகமாக தனது துப்பட்டாவை எடுத்து இரத்த போக்கை நிறுத்துமாறு கட்டிவிட்டு, தாங்கள் வந்திருத்த வாடகை காரை அவசரமாக அழைத்து, அதில் அக்னியை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டவள் அந்த ஓட்டுனரை விரைந்து மருத்துவமனைக்கு செல்ல சொன்னாள். இதெல்லாம் சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்திருந்தது.
“மிளிர்… எனக்கு ஒன்னுமில்ல… எதுக்கு இவ்வளவு பயம்…” என அக்னி கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அவளின் கைப்பேசி அலறியது.
அதை இயக்கி காதில் வைப்பதற்குள், மொத்தமாக வியர்த்துப் போயிருந்தாள் அவள். நடுங்கும் கைகளை கட்டுபடுத்தி, அவன் பேசுவதை கேட்க,
“என்ன பேபி… எப்படி நம்ம டெமோ… சூப்பரா இருந்துச்சு இல்ல… ஆனா நீ அவன நடுரோட்டுல கட்டி புடிச்சதுதான் எனக்கு புடிக்கவே இல்ல… இனிமே நடுரோட்டுல ரொமான்ஸ குறைச்சுக்கோங்க சரியா… அப்புறம் தோள் பட்டையில இறக்குன கத்திய நெஞ்சுக்கூட்டுல இறக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது…” என்றவன் அவள் பேசுவாள் என சிறிது இடைவெளி விட, அவள் பேசாமல் இருக்கவே மீண்டும் அவனே தொடர்ந்தான்.
“ஆமான் பேபி… உங்க வீட்டுல யார உனக்கு ரொம்ப பிடிக்கும்… உங்க அப்பா… இல்ல உங்க அம்மா… அப்படியும் இல்லனா உன் தம்பி… உன் அம்மாவும் அப்பாவும் இன்னும் கொஞ்ச வருஷத்துல அவங்களே போய்டுவாங்க… வீணா நான் எதுக்கு அவங்கள கொன்னுட்டு… உன் தம்பிக்கு ரொம்ப பாசமில்ல உன்மேல… எனக்கு என்னமோ அப்படி இல்லையோனு தோனுது… உன்னவிட உன் கடையில வேல செய்யற பொண்ணு மேலதான் அவனுக்கு பாசம் அதிகம் போல… கடைக்கு வெளிய நின்னு ஊத்து ஊத்து கடைய பாத்துட்டு இருக்கானே…”
“ஏய்… ஏய்… அவன ஒன்னும் பண்ணிடதா…”
“நானா எதுவும் பண்ணலப்பா… நீதான் என்ன பண்ண வைக்கற… இதோட இந்த தோண்டி துருவற வேலைய நிறுத்திக்கோ… அதவிட்டுட்டு அவன பாக்க போறேன்… இவன பாக்க போறேனு வேற எங்கையாவது சுத்திட்டு இருந்த… உன்ன ஒன்னுமே பண்ண மாட்டேன் செல்லம்… உன்ன சேந்த ஒருத்தரும் உயிரோட இருக்க மாட்டாங்க… நியாபகம் வச்சுக்கோ…” என்றதோடு அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட, அவசர அவசரமாக இனியனை அழைத்தாள் அவள். நீண்ட நேரமாக அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே தவிர, அதை ஏற்பார் எவரும் இல்லை.
– தேடல் தொடரும்…
