
தழல் 26:
வழக்கத்தைவிட வெகு சீக்கரமே இல்லம் திரும்பி இருந்தார் பர்வதம். ஆராவின் பிறந்தநாளுக்கான சமையல் அதகளப்பட்டது. அவளுக்கு பிடித்த குலோப்ஜாமுன், குழிப்பனியாரம், காரப்பனியாரம், இடியாப்பம், பாயா, இட்லி, கறிக்குழம்பு என இன்னும் நீண்டது பட்டியல். விடுமுறை தினத்தில் கூட நின்று நிதானமாய் பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுத்திட முடியாது அவரால். அப்படியே சமைத்தால் பத்தில் ஒன்று ஆராவுக்கு பிடித்ததாய் இருக்கும். கனியைப் போல எல்லாவற்றையும் ரசித்து சாப்பிடும் ரகமில்லை அவள். அதனாலேயே பிறந்த நாளென்றால் அவளின் விருப்ப உணவெல்லாம் பட்டியலிட்டு செய்துவிட வேண்டும் பர்வதத்திற்கு.
ராஜனும் கூட ஆராவுக்கு பிடித்த பண்டங்களாய் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்திருந்தார். இருவருமே பேசியப்படி சமையலை முடித்த நேரம் கனியும் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தாள். எப்பொழுதும் கனிக்கு முன்பே ஆரா வந்துவிடுவாள். இன்றும் மணி எட்டைத் தொட்ட பின்பும் வராமலிருப்பது பர்வதத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது.
காலையிலேயே இன்றாவது டீயூசன் செல்லாமல் விரைந்து அவளை வீட்டுக்கு வர சொல்ல வேண்டுமென்று தான் அவர் நினைத்திருந்தார். ஆனால், ஒருநாள் ஒரு நிமிடம் கூட பிள்ளைகளின் படிப்பில் இடையூறு வருவதை ராஜன் விரும்ப மாட்டார். அந்த விசயத்தில் மட்டும் அத்தனை கண்டிப்பு அவர். அதனாலேயே அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கியும் விட்டார்.
ஐந்து நிமிடத்திற்குள் ஐம்பது முறை வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்துவிட்டார் அவர்.
“கொஞ்சம் உக்காரு பாரும்மா… எங்க போயிட போறா… வந்துட்டு இருப்பாளா இருக்கும்…” என்ற ராஜனின் பார்வையும் வாசலைத் தான் தொட்டு நின்றது.
“வந்துடுவா தான்… இருந்தாலும் எனக்கு பயமா இருக்கே… நீங்க எதுக்கும் போன் பண்ணி எங்க வந்துட்டு இருக்கானு கேளுங்களேன்…” என்றார் பர்வதம்.
அவர் குரலில் இருந்த பதற்றத்தில் மறுவார்த்தையின்றி ஆராவின் எண்ணிற்கு முயன்றார் ராஜன். அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய் பதில் வந்தது.
“ஸ்வீட் ஆப்னு வருது பாரு… ஸ்கூல் டைம்ல ஆப் பண்ணிட்டு ஆன் பண்ண மறந்துட்டாளோ என்னவோ..?” என்றார் யோசனையாய் ராஜன்.
“அப்படியெல்லாம் மறக்கற பொண்ணு இல்லையே… நீங்க எதுக்கும் அந்த டீயூசன் டீச்சருக்கு போன் பண்ணி எப்ப கிளம்புனானு கேளுங்களேன்…” என்றார் பர்வதம்.
“அங்க எல்லாம் எதுக்கும்மா..? இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா பாரேன்…” என்றார் ராஜன் சமாதானமாய்.
“இல்ல எனக்கென்னமோ மனசே சரியில்ல… போன் பண்ணி எப்ப கிளம்புனானு கேக்கறதுல என்ன..? நீங்க அவருக்கு போன் பண்ணுங்க முதல…” என்றவர் குரலில் அவசரமிருந்தது.
அந்த டீயூசன் மாஸ்டருக்கு அழைத்து பேசிய ராஜனின் முகமே மாறிவிட்டிருந்தது. “இன்னைக்கு ட்யூசனே வரலனு சொல்லறாங்க பர்வதம்…” என்றார் கலங்கிய குரலில்.
“என்ன வரலையா..? அப்பனா ஸ்கூல் முடிஞ்சு நேரா வீட்டுக்கு தானே வந்திருக்கணும்…” என்ற பர்வதத்தின் குரலில் கவலை கூடியிருந்தது.
“ஒரு வேளை பர்த்டேனு ஃப்ரண்ட்ஸ் கூட எங்கையும் வெளிய போயிருப்பாளோ..?”
“இது வரைக்கும் அப்படி எங்கையும் போனதில்லையே… ஒருவேளை இன்னைக்கு போகணும்னா என்கிட்ட சொல்லி இருப்பாளே…” என்றவரின் கற்பனையில் என்னென்னவோ நிழலாடியது.
“ஏய் கனி… ஆரா ப்ரண்ட்ஸ் நம்பர் இருக்கு தானே உன்கிட்ட…” என்றார் பர்வதம் உள்ளறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த கனியிடம் சத்தமாய்.
“இருக்கும்மா… டைரியில நோட் பண்ணி வச்சிருக்கேன்… ஏன் கேக்கறீங்க” என்றபடியே வெளியில் வந்தவள் அவள்.
“எங்க இருக்கு எடுத்து குடு சீக்கரம்…” என்றவரிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது.
தொலைபேசி இலக்கங்களை குறித்து வைத்திருந்த டையரியில் இருந்து ஆராவின் தோழிகளின் எண் எழுதியிருந்த பக்கத்தை எடுத்துக் கொடுத்தாள் கனி. அவளுக்கு நெருக்கமான தோழியை குறிப்பிட்டும் காட்டினாள்.
அவசரமாய் அந்த எண்ணிற்கு அழைத்துப் பேசியவரின் முகமே இருளடைந்துப் போனது.
“என்ன பாரு… என்ன சொல்லுறா அந்த பொண்ணு..?” என்ற ராஜனின் குரலிலும் பதற்றம் தொற்றிக் கொண்டு விட்டது.
“ஆரா இன்னைக்கு ஸ்கூல் வரலைனு சொல்லறாங்க…” என்றவருக்கு பயத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தளர்ந்து சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையே கொஞ்சமும் இல்லை அவருக்கு.
“அம்மா… ஆராவோட ஸ்கூட்டியும் இல்ல… ஸ்கூல் பேக்கும் இல்ல… நான் காலையில போகும் போது எனக்கு லஞ்ச் எடுத்துக் குடுத்துட்டு அவளுக்கும் எடுத்து வச்சுட்டு இருந்தா… கண்டிப்பா ஸ்கூல் போயிருப்பாம்மா…” என்றாள் கனி உறுதியாய்.
“ஆனா அந்த பொண்ணு ஆரா ஸ்கூல் வரலனு இல்ல சொல்லறா..?”
“ஒரு வேளை போற வழியில ஏதாவது ஆக்ஸிண்ட்…” என்ற ராஜனுக்கு மேலே வார்த்தை எழும்பவில்லை. பர்வதம் வேண்டாம் வேண்டாம் என்க பிடிவாதமாய் அல்லவா வாங்கிக் கொடுத்திருந்தார் அதை. அதுவும் பதினாறை தொடாத மகளுக்கு. இன்று அதுவே மகளின் உயிருக்கு எமனாகியிருக்குமோ என்ற பயம் அவரின் மனதை கவ்வி பிடித்திருந்தது.
“இல்ல இருக்காது… இங்க சுத்தி எந்த ஆக்ஸிடண்ட் கேஸா இருந்தாலும் ஜு.ஹெச்க்கு தான் வரும்… இன்னைக்கு அப்படி எதுவும் வரலை…” என்றவர் முகத்தில் நிம்மதிக்கு பதிலாக இன்னும் அதிக பயம் தான் பரவியது.
“நாம நேரா ஸ்கூலையே போய் பாத்திடுவோம்… எனக்கு அது தான் சரினு படுது…” என்றார் பர்வதம்.
கனியை மட்டும் வீட்டில் இருத்திவிட்டு இருவரும் பள்ளிக்கு விரைந்தனர் அவர்கள். ஆராவின் ஸ்கூட்டியும் பையும் மட்டும் தனித்து கிடந்தது அங்கே. அதன்பிறகு நொடியும் தாமதிக்கவில்லை அவர்கள். நேரே காவல் நிலையத்திற்கு தான் சென்றனர்.
“மார்க் ஏதாவது கம்மியா எடுத்துருக்கும் சார்… அதனால ஏதாவது ப்ரண்ட் வீட்டுல பயந்துட்டு உக்காந்து இருக்கும்… காலையில வந்திடும் போங்க…” என்றனர் மெத்தனமாய்.
ராஜனும் எவ்வளவோ வற்புறுத்தி மன்றாடி தான் பார்த்தார். ஆனால் அவர்கள் வழக்குப் பதிந்துக் கொள்வதை போலவே தெரியவில்லை.
“எவற் கூடையாவது ஓடிப் போயிருக்கும் சார்… இந்த காலத்து பசங்களே அப்படிதானே… கையில இருக்க காசு கரைஞ்சு வயிறு பசிச்சா இரண்டு நாள்ல தன்னால திரும்பி வருங்க… அப்பவும் வரலைனா அதுக்கப்பறம் வந்து கம்ப்ளைண்ட் குடுங்க எடுத்துக்கறோம்… இப்ப கிளம்புங்க…” என்றதோடு இன்னும் மோசமாய் பேசவும் அங்கே நிற்கவே முடியாமல் திரும்பி வந்திருந்தனர் ராஜனும் பர்வதமும்.
இரவெல்லாம் தெரிந்தவர்கள் வீடு, நண்பர்களின் வீடு என வீதி வீதியாய் தேடி சோர்ந்து தான் போயிருந்தனர். இனி தேடிச் செல்ல இடமேயில்லை என்ற போதுதான் பரத்தின் மனதில் மின்னலென மின்னி மறைந்தது வள்ளியம்மையின் முகம். அவர் அந்த மாவட்ட கமிஷ்னராய் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் பதவியேற்றிருந்தார். ஒரு ரத்த தான முகாமில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டிருந்தது. அவரிடம் சென்று உதவிக் கோரினால் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று பர்வதத்திற்கு தெரியவில்லை. ஆனால், பற்றிக் கொள்ள சிறு துரும்பென அவரை விட்டால் இப்போது வேறு வழியும் இல்லை அவர்களுக்கு. விடியும் முன்னரே கஷ்மிஷ்னர் அலுவலகத்தில் அவர் அறையின் முன்னே சென்று அமர்ந்துவிட்டனர் அவர்கள்.
ஒட்ட வெட்டிய சிகை. காக்கி உடுப்புக்குள் பாந்தமாய் பொருந்திய உடல். இடுங்கிய விழிகள் குறும்பு கூத்தாடும் விழிகள் என வேக எட்டுகளுடன் கம்பீரமாய் அந்த அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார் வள்ளியம்மை.
எவ்வித மெனக்கெடலும் இன்றி அவரின் பார்வையில் விழிந்திருந்தார் பர்வதம். அவரின் நலுங்கிய தோற்றம் ஏதோ அவசரமென்று பறைசாற்ற அவரை நோக்கி விரைந்தது வள்ளியம்மையின் கால்கள்.
“பர்வதவர்தினி… ஜி.ஹெச் ஹெட் நர்ஸ்… ப்ளட் டோனேட்டிங் கேம்ப்ல மீட் பண்ணிருக்கோம்… அம் ஐ கரெக்ட்… இங்க என்ன பண்ணறீங்க..?” என்றவரின் குரலில் தூக்கி வாரிப் போட நிமிர்ந்துப் பார்த்தார் பர்வதம். இயல்பிலேயே கம்பீரம் தொனிக்கும் அதட்டல் குரல் அது.
அவரைக் கண்டதும் வெடித்துக் கொண்டு கிளம்பியது அவரின் அழுகை. ஒரே ஒரு சந்திப்பில் தன்னை இத்தனை துல்லியமாய் நினைவு வைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கவில்லை பர்வதம். அவர் அடையாளம் கண்டுக் கொண்டதே மகள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையை தந்திருந்தது அவருக்கு.
ஒருசில நொடிகள் பர்வதத்தையும் ராஜனையும் ஆழ்ந்துப் பார்த்தவர், “உள்ள வாங்க…” என்றபடியே தனது அறைக்குள் சென்றிருந்தார். அவசரமாய் வள்ளியம்மையை பின் தொடர்தனர் அவர்கள் இருவரும்.
“உக்காருங்க…” எதிர் இருக்கையை கை காட்டியபடியே தனது இருக்கையில் அமர்ந்தார் அவர்.
இன்னுமே பர்வதத்தின் அழுகை நின்றபாடியில்லை. “எனக்கெந்த அவசரமும் இல்லை… உங்களுக்கு தான் அவசரம் மாதிரி தெரியுது… இப்படியே நின்னு அழுதுட்டு இருந்தா உங்க டைம் தான் வேஸ்ட் ஆகும்…” என்றார் வள்ளியம்மை அலட்டிக் கொள்ளாமல்.
ராஜன் ஓரளவு தன்னை தேற்றிக் கொண்டவராய், வார்த்தைகள் தடுமாற “எங்க பொண்ண காணும் மேடம்…” என்றார் உடைத்து நேரடியாய்.
“எப்ப இருந்து பொண்ண காணும்… உங்களுக்கு எப்ப அது தெரியும்..?” என்றார் வள்ளியம்மை ராஜனை கூர்ந்துப் பார்த்தபடியே
“நேத்து நைட் அவ எப்பவும் வர நேரத்துக்கு வீடுக்கு வரலை மேடம்… அதுக்கப்பறம் தான் நாங்க தேட ஆரம்பிச்சோம்… அப்பதான் அவள காணுங்கறதே தெரிஞ்சுது… நேத்து அவளுக்கு பொறந்த நாள் மேடம்… சீக்கிரமே கிளம்பி ஸ்கூலுக்கு தான் போயிருக்கா… அவ ஸ்கூட்டியும் ஸ்கூல் பேக்கும் அங்கதான் இருக்கு… ஆனா ஸ்கூல் வரலைனு சொல்லறாங்க… எங்களால முடிஞ்ச வரைக்கும் பக்கத்துல, அவ ப்ரண்ட்ஸ் வீடுனு எல்லா இடத்துலையும் தேடிட்டோம் மேடம்… எங்கையும் கிடைக்கல. ” என்ற ராஜனின் கண்களிலும் நீர் துளிர்த்து நின்றது.
“லோக்கல் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்தீங்களா..?”
“போனோம் மேடம்… கம்ப்ளைண்ட் எடுக்க மாட்டேங்கறாங்க.. ஸ்கூல் பொண்ணு தானே… மார்க் குறைஞ்சதால எங்கையாவது போயிருப்பானு சொல்லறாங்க… டிஸ்ட்ரிக் பர்ஸ்ட் வந்த பொண்ணு மேடம் அவ… மார்க் குறைஞ்சுட்டுனு பயந்து எங்கையாவது போயிருப்பானு சொன்னா யாராவது நம்புவங்களா..? இல்லைனா லவ்வர் கூட ஓடி போயிருப்பா… கையில இருக்க பணம் கரைஞ்சதும் இரண்டு நாள்ல அவளே வந்துடுவானு சொல்லறாங்க… எங்க பொண்ணு அப்படிபட்ட பொண்ணுலாம் இல்லை மேடம்…” என்றவர் குரல் உடைந்து அழும் நிலைக்கு சென்றிருந்தார்.
“ஓ.கே கம்ப்ளைண்ட் எழுதிக் குடுத்துட்டு போங்க… நான் லோக்கல் ஸ்டேஷன்ல ஆக்ஷன் எடுக்க சொல்லறேன்…” என்றார் வள்ளியம்மை.
அமைதியாய் தேம்பியபடி அழுதுக் கொண்டிருந்த பர்வதம், சட்டென்று அவரின் கைப் பற்றிக் கொண்டு, “ப்ளீஸ் மேடம்… நான் உங்கள மட்டும் தான் கடவுள் போல நம்பி வந்துருக்கேன்… வயசு பொண்ணு மேடம்… என்னாச்சோ ஏதாச்சோனு நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் பதறுது… அவள உசுரோட எனக்கு மீட்டுக் கொடுத்துடுங்க போதும் மேடம்… உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தாலும் இந்த வயசுல தானே மேடம் இருப்பா… என் பொண்ண உங்க பொண்ணா நினைச்சு இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க மேடம்… ப்ளீஸ்… உங்கள ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்…” கதறிய பர்வதத்தின் இறுதி வார்த்தைகள் தான் அவருக்குள் இளக்கத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
நிச்சயம் அவர் பெண்ணும் இன்று இருந்திருந்தால், உயிரோடு இருந்திருந்தால் பதினாரு வயதுதான் இருந்திருக்க வேண்டும். குறை பிரசவத்தில் பிறந்து, பிறந்த கொஞ்ச நாளிலேயே உயிர் கொடுத்தவரை தேடி பறந்துவிட்டது அந்த ஆன்மா. உங்கள் பெண் என்றவுடன் மின்னலென அந்த நினைவுதான் அவரை தாக்கியிருந்தது.
“அழாதீங்க பர்வதம்… நீங்க பொண்ணோட டீட்டைல்ஸ் குடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புங்க… நான் விசாரிக்கறேன்… ஏதாவது தகவல் தெரிஞ்சா உடனே உங்களுக்கு சொல்லறேன்…” என்றார் ஆறுதலாய் வள்ளியம்மை.
“கண்டு பிடிச்சுடலாம் தானே மேடம்…” என்றார் கலக்கமாய் ராஜன். அதே எதிர்பார்ப்போடு அவரை பார்த்திருந்தது பர்வத்தின் கண்கள்.
ஏனோ முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்லி அவர்களை மேலும் துன்பக் கடலில் தள்ள விரும்பில்லை வள்ளியம்மை. “கண்டிப்பா… உங்க பொண்ண கண்டுபிடிச்சு உங்ககிட்ட சேர்க்க வேண்டியது என் பொறுப்பு… போதுமா..?” என்றார் நம்பிக்கை தரும் விதமாய். அவர் குரலில் இருந்த உறுதி அவர்களுக்கு பெரும் தெம்பை தந்திருந்தது.
அவர்களிடம் விவரங்களை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்த, அடுத்த நிமிடமே அந்த பள்ளிக்கு கிளம்பிவிட்டார் அவர். அவரின் விசாரணையே அந்த பள்ளி வாட்ச்மேனிடம் இருந்து தான் ஆரம்பித்தது. அறுபதை தொ
“இந்த பொண்ணு இங்க தான் படிக்கறா… தெரியுமா..?” என்றார் ஆராவின் புகைப்படத்தை காட்டி.
“என்ன மேடம் பாப்பா தெரியாம யாராவது இருக்க முடியுமா..? அது சிரிச்சுட்டு நம்ம கண்ணு முன்ன உக்காந்து இருந்தா போதும்… சோறு தண்ணீ இல்லாம நாள் முச்சூடும் பாத்துட்டே இருக்கலாம்… ஏன் நம்ம ஸ்கூல் விளம்பர படத்துல எல்லாம் பாப்பா படம் தானே இருக்கு… ” என்றவர் குரலில் அன்பிருந்தது. அவள் அந்த பள்ளியில் படிப்பதையே தங்கள் பள்ளிக்கான விளம்பரமாய் பயன்படுத்திக் கொண்டிருந்தது நிர்வாகம்.
“நேத்து இவ ஸ்கூல் வந்தாளா..?” என்றார் அடுத்ததாய் வள்ளியம்மை.
“வராம… நேத்து பாப்பாவுக்கு பொறந்த நாளாமே… கலர் சட்டையெல்லாம் போட்டுட்டு புதுசா பூத்த பூவு கணக்கா அம்புட்டு அம்சமா வந்துச்சும்மா… எனக்கு முட்டாயெல்லாம் கூட குடுத்துச்சே…” என்றார் வெள்ளந்தியாய் அவர்.
“அவ சீக்கரமே வந்துட்டா தானே… அப்போ அவள பாக்க யாராவது வந்தாங்களா..? இல்ல யார் கூடையாவது வெளிய போனாளா..?”
“நம்ம சின்னய்யா கூட தாங்க கார்ல போச்சு… போகும் போது கைகூட காட்டிட்டு போச்சே…” என்றார் யோசனையாய்.
“சின்னைய்யானா யார சொல்லறீங்க நீங்க..?” என்றார் கூர்மையாய் அவரைப் பார்த்தபடியே வள்ளியம்மை. அந்த பார்வையே அவருள் பீதியை உண்டாக்கி இருக்க வேண்டும்.
சில நொடிகள் தாமதித்து, “இந்த ஸ்கூல் ஓனர் பையன் மேடம்… இங்க தான் பன்னென்டாவது படிக்கறாருங்க… பேரு தீபக்…” என்றவர், “எதுவும் பிரச்சனைங்களா..?” என்றார் தயங்கி தயங்கி.
ஓரளவு விசயம் பிடிபடுவதைப் போல இருந்தது வள்ளியம்மை. “நேத்து திரும்ப அவங்க வந்தத பாத்தீங்களா..?” என்றார் கடினமான குரலில். இடவலமாய் மறுத்து தலையசைத்தார் அவர்.
இதைத் தெரிந்துக் கொண்டபின், அந்த நிர்வாகியின் சொத்து விபரங்களை தேடி திரட்டுவது ஒன்றும் அத்தனை கஷ்டமாய் இருக்கவில்லை வள்ளியம்மைக்கு. அதில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் ஊருக்கு ஒதுக்குபுறமாய் தனித்திருந்தது அந்த வீடு மட்டும்தான். அடுத்த நிமிடமே தனக்கு நம்பகமானவர்களுடன் அங்கே விரைந்தார் அவர்.
திட்டமிட்டு வெகு சாமர்த்தியமாய் ஆராவை ஏமாற்றி விட்டதாய் நினைத்துக் கொண்டவர்கள் அதிக சிரமமின்றி அத்தனை சீக்கிரம் மாட்டியும் கெண்டார்கள். மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணமே அவர்களுக்கு இருந்திருக்காது என்றுதான் தோன்றியது.அந்த எண்ணம் இருந்திருந்தால் இத்தனை மெத்தனமாய் இருந்திருக்க மாட்டார்கள். ஒருவேளை பலமுறை இதையே செய்து செய்து பழகிப் போனதால் வந்த மெத்தனமா? நினைக்கையிலேயே திக்கென்று இருந்தது வள்ளியம்மைக்கு.
அடுத்த அரைமணி நேரத்தில் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அவரின் குழு. எல்லா திசைகளிலும் தேடி பிரிந்தது அந்த குழு. வரவேற்பரையை தாண்டி உள்ளே நுழைந்தவருக்கு ஏதோ முனகல் சத்தம். வேகாய் அந்த அறைக்குள் நுழைய ஒன்றில் ஒரு பக்க சுவரை நிறைத்துக் கொண்டு அலங்காரப் பொருட்களைப் போல வகை வகையான மதுப்பானங்கள் அடுக்கபட்டிருந்தது. அந்த நடுநாயகமாய் இருந்த சோபாவில் அறைகுறை ஆடைகளுடன் முழு போதையில் மூவர் உருண்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்ததைக்கூட உணரும் நிலையில் அவர்கள் இல்லை. மூவருமே பள்ளிப் படிப்பில் இருப்பவர்கள் என்று பறைசாற்றியது அரும்பி நின்ற மீசையும் சிதறிக் கிடந்த சீருடைகளும்.
அந்த அறையின் வலதுபக்க மூலையில் இன்னொரு கதவிருந்தது. உள்ளுணர்வின் உந்துதலில் மற்றவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு தான் மட்டும் உள்ளே நுழைந்தார் வள்ளியம்மை. அங்கிருந்த கட்டிலில் போர்வை கழுத்துவரை இழுத்து மூடியபடி போதையில் அமிழ்ந்திருந்த தீபகிடம் ஏதோ உளறல். மதுபானத்தை தாண்டிய போதைப் பொருளை அவர்கள் உட்கொண்டிருக்க வேண்டும் என்று புரிந்துப் போனது அவருக்கு.
அவனை தாண்டி அவசர அவசரமாய் ஆராவை தேடியது அவரின் விழிகள். இறுக கண்களை மூடியபடி சுவரோடு ஒண்டிக் கொண்டு, வெற்று உடம்போடு தரையில் சுருண்டு படுத்திருந்தவள் கால்கள் இரண்டையும் குறுக்கு நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தாள் அவள். ஒருவகையில் இதை எதிர்பார்த்து வந்ததாலோ என்னவோ அதிகம் அதிர்ந்து விடவில்லை வள்ளியம்மை.
அவசரமாய் தீபக்கின் மீதிருந்த போர்வையை உருவிக்கொண்டு அவளை நெருங்கினார். மிக பலகீனமாய் ஏதோ ஒரு முணகல் அவளிடம். சட்டென்று கண்டு தெளிந்துக் கொள்ள முடியவில்லை அவரால். அவளுமே போதையின் பிடியில் இருக்கிறாள் என்று தோன்றியது.
போர்வையை அவள் மீது போர்த்துவதற்காக நெருங்கியவரின் காதுகளை குழறலாய் அடைகிறது, “டோன்ட் டச் மீ…” என்ற அவளின் தீனக் குரல். தொடர்ந்து அதை மட்டும் தான் ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருக்கிறது அவள் இதழ்கள்.
போர்வையோடு சேர்த்து வாறி அணைத்துக் கொண்டவரின் கண்களில் நீர்கட்டி நின்றிருந்தது. முன்பைவிட சற்றே உரத்த குரலில் ஒலிக்கறது அவளின் “டோன்ட் டச் மீ…”.
அவரிடமிருந்து திமிறி விடுபட நினைக்கிறாள் அவள். தனது எதிர்ப்பைகூட காட்ட முடியாத அளவில் அவளின் உடல் தறர்ந்துப் பலமிழந்துப் போயிருக்கிறது. ஆங்காங்கே உடலில் இருந்த காயங்கள் அவளுக்கு நடந்த அநீதியை சொல்கிறது.
“ஆரா இங்க பாரும்மா… உனக்கொன்னுமில்ல… கண்ண திற ஆரா… என்ன பாரு…” அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயல்கிறார் அவர். அந்த குரல் அவளுள் ஏதோ செய்திருக்க வேண்டும். தன் தாயை நினைவுப் படுத்திருக்க வேண்டும். பாதுகாப்பான இடத்தில் சேர்ந்துவிட்டோம் என்ற நிம்மதியை தந்திருக்க வேண்டும்.
“ம்மா…” என்ற பெரும் ஓலத்தோடு அவரை இறுக் கொண்டவளின் தொடர்ந்த கதறலில் வள்ளியம்மையே நொறுங்கி தான் போனார். அந்த நொடியே அந்த நால்வரையும் கொன்றுப் போடும் அளவிற்கு ஆத்திரம் பெருகுகிறது அவருக்கு. அடுத்த சில நிமிடங்களிலேயே மொத்தமாய் அவர் கரங்களில் மயங்கிப் போயிருந்தாள் அவள்.
– பற்றி எரியும்…
