
அத்தியாயம் 24
பொழுது சாயும் வரையும் கூட இருவர் சண்டையும் ஓயவில்லை. 4 நாள் படுத்தியதிற்கும் சேர்த்து இன்று ஒரே நாளில் வச்சு செய்துவிட்டாள் லட்சு. 4 நாட்களாக முறுக்கி கொண்டு திரிந்த ஆறு இன்று அவள் பின்னயே கெஞ்சி கொஞ்சி கொண்டு திரிந்தாள்.
அதில் ஈவ்னிங் வரை அவளை சுத்தலில் விட்டே சமாதான உடன்படிக்கைக்கு வந்தாள் லட்சு. ஆக ஈவினிங் கிளம்பும்போது தான் ஞாபகம் வந்து ஸ்டூடியோவில் வாங்கின போட்டோ என வைரம் தந்ததாக இரண்டு போட்டோக்களை ஆறுவிடம் கொடுத்தாள். ஒன்றில் இருவரும் நீக்க, மற்றொன்றில் நால்வரும் நின்றனர்.
“நாம 2 பேரும் தனி தனியா எடுத்த போட்டோ எங்கடி?”.
“அது சரியா வரலயாம். ஒரு மாதிரி பிளர்றா இருந்ததால, நம்ம 2 பேர் போட்டோவும், தனிப் போட்டோ இல்ல. அவங்க ரெண்டு பேரிதுவும் இருந்தது”.
“மொத்தமா 80/- ரூபா, நம்ம ரெண்டு பேருக்கும் 160/- நா கொடுத்துட்டேன். நீதான் எனக்கு 80/- ரூபா தரணும்” ௭ன்றாள் லட்சு கணக்கில் புலியாக.
லட்சு தோளில் கை போட்டு அருகிலிழுத்தவள், “தரலாம் தரலாம். எத்தன நாள் ஜூஸ் வாங்கி குடுத்துருப்பேன், ஓசில அமுக்கிருப்ப, 80 ரூபாய மெனக்கெட்டு கேக்க பிசினாரி”.
வெடுக்கென்று அவள் கையை தட்டி விட்டவள், “நீ இன்னும் பத்து பேட்வேட்ஸ் போட்டுக் கூடத் திட்டு, ஆனா உன் காசுல ஜூஸ் குடிச்சேன்னு மட்டும் சொல்லாதடி, ஆட்டோல இருந்து குதிச்சு செத்துருவேன்”.
“செத்துரு, வேல்ட்ல வேஸ்ட் லக்கேஜ்ல ஒன்னு குறைஞ்சதா இருக்கட்டும்”.
“உன்னயும் இழுத்துட்டு தான்டி குதிப்பேன் அறிவு கெட்டவளே. நானே வேஸ்ட்ன்னா நீலா பிறந்ததே ஒரு சாபக்கேடு” என மாற்றி மாற்றி பேச, பயந்து போன ஷேர் ஆட்டோ டிரைவர், “எது செய்யுறதா இருந்தாலும் ஆட்டோவ விட்டு இறங்கினா அப்றமா செய்யுங்கம்மா” என்ற பின்னே அமைதியாகினர்.
இதற்கிடையில் ப்ரகலத்தனின் அம்மாவும், அப்பாவும் ஆறெழில் அட்ரஸ் கண்டுபிடித்து, அந்த தெருவினுள் நுழையும் போது, “இப்ப ஸ்கூல் டைம். அந்த பொண்ணோட அம்மா ஸ்கூல்ல தான் போய் பாக்குற மாறி இருக்கும். வீட்டுக்கிட்ட போயிட்டு பக்கத்து வீட்ல, எந்த ஸ்கூல்ன்னு விசாரிச்சுட்டு வா, நாம அங்க போய் பேசலாம்” அவன் அப்பா சொல்ல.
“ஏன் அதயும் சேத்து நீங்களே விசாரிச்சுட்டு வர வேண்டியதுதானே?”.
“எனக்கு வேற வேல வெட்டியே இல்லன்னு நினைச்சுட்டியா” என இவர் அதட்டவும் அமைதியாகி விட்டார் ராஜம்.
தெரு முனையில் விசாரித்ததுமே, வாழ மரம் நட்ருக்கும், பங்க்ஷன் வீட்டுக்கு அடுத்த வீடு தான் ஸ்கூல் டீச்சர் வீடு என சொல்லிவிட, “பரவால்ல இவுங்க ரொம்ப நாளா இங்க இருக்காங்க போல, கேட்டதும் தெரிஞ்சிருக்கு”.
“டீச்சர் உத்தியோகம் அதனால கூட தெரிஞ்சிருக்கும்” ராஜம் குணட்டலாக சொல்ல.
“ஏன்டி என்ன எதித்து கருத்து சொல்லாட்டி உனக்கு சாப்பாடு இறங்காதுல்ல” என பேசிக்கொண்டே ஸ்கூலுக்கு சென்று இறங்கினர்.
“ஸ்கூல்ல வச்சு என்னத்த பேச முடியும்னு கிளம்பி வந்திருக்கோமோ தெரியல” என்றவாறே இறங்கி சென்று ஆபீஸ் ரூமில் விசாரிக்க, அவர் அன்று லீவில் இருப்பது தெரிந்தது.
“வீட்ல பாத்துட்டு இங்க வந்திருக்கணுமோ?” அப்பா சொல்ல.
“இப்டி வாரத்துல முதல் நாளும் பொழுதும் அந்த அம்மா லீவ் போட்டு வீட்டுல கிடக்கும்னு நாம என்ன கனவா கண்டோம்” என்றார் ராஜம்.
அதன் பின் ஐந்து நிமிடத்தில் வீட்டிலிருந்தனர். அப்போது தான் பங்க்ஷன் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஜெயந்தி, ‘யாரது நம்ம வீட்டு வாசல்ல?’ என யோசித்துக் கொண்டே வந்தவர், “வாங்க யாரப் பாக்கணும்?” என கேட்டவாறே கேட்டைத் திறந்து விட.
“இங்க ஆறெழில் அம்மா ஜெயந்தி, *****ஸ்கூல் மாத்ஸ் டீச்சர்?” என்றார் கேள்வியாய் ப்ரகலாதனின் அப்பா.
“நா தான் நீங்க யாருன்னு………?” என யோசித்துக் கொண்டே ஜெயந்தி கேட்க.
“நா ப்ரகலத்தனோட அம்மா, இவர் அவனோட அப்பா, உள்ள போய் பேசுவோமா?” என்றார் ராஜம்.
“ஓ! உள்ள வாங்க” என உள் கதவையும் திறந்து கொண்டு உள்ளே செல்ல, வெளித் தோட்டத்தையும், வீட்டையும் பார்த்தவாறே அவரை பின் தொடர்ந்தனர் இருவரும்.
“உட்காருங்க” என சொல்லிவிட்டு அடுப்படி சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார் ஜெயந்தி.
ராஜம் “இருக்கட்டும்” என மறுத்துவிட, ப்ரகன் அப்பா “நன்றிம்மா” என பெற்றுக்கொண்டார்.
தண்ணீரே பருகவில்லை வேறென்ன கொடுக்க என எதிரில் இருந்த சோபாவில் ஜெயந்தி அமர்ந்துவிட.
“இன்னைக்கு என்னம்மா ஸ்கூல் லீவ் போட்டீங்க போல?” என அவன் அப்பா கேட்க, அதே நேரத்தில் “இது சொந்த வீடா?” என்றிருந்தார் ராஜம்.
இரு கேள்விகளையும் வைத்து இருவர் மனநிலையையும் புரிந்து கொண்டார் ஜெயந்தி.
மெதுவாகவே, “ஆமாங்க, இது சொந்த வீடுதான். 12 வருஷமா இங்க தான் இருக்கோம். இங்க பக்கத்து வீட்டுல தெரிஞ்சவங்க பொண்ணு ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டா, சரி லீவும் இருக்கேனு தான் லீவ் போட்டு பங்க்ஷன் அட்டென்ட் பண்ணிட்டேன். ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப வருஷமா தெரியும் அதான்” என்றார் இருவருக்குமாய்.
“சரி சரிமா, வீட்டுக்காரர் என்ன பண்றாரு?”,
“ப்ரகலத்தன் எதுவுமே எங்கள பத்தி சொல்லலயா?”.
“ஏன் அவன்கிட்ட மட்டும் தான் எல்லாத்தையும் சொல்வீங்களோ?” என்றார் ராஜம்.
“அப்டியில்ல ப்ரகலத்தன் சொல்லாம நீங்க இங்க இவ்வளவு தூரம் கெளம்பி வந்திருக்க வாய்ப்பில்ல, அதான் கேட்டேன்”.
‘குண்டக்க மண்டக்க பேசி என்னத்தையாவது வாங்கி கட்டாம இங்கிருந்து போகமாட்டா போல’ என நினைத்த அவன் அப்பா, “அவன்ட்ட இதப் பத்தி பேசலம்மா, இப்ப நாங்க வந்தது கூட அவனுக்கு தெரியாது. ஆனா இவுங்க 2பேர் விஷயம் தெரியும், ரெண்டு பேரும் ஒரே காலேஜ் வேற அதான் சும்மா உங்களுக்கும் எவ்வளவு தெரியும்னு தெரிஞ்சிட்டு போலாம்னு வந்தோம்”.
“எதுக்குங்க மூடி மூடி பேசுறீங்க, டைரக்ட்டாவே சொல்லுங்க, எங்க பையனா நாங்க அடக்கி வச்சுக்குறோம், உங்களால உங்க பொண்ணா அடக்கி வைச்சுக்க முடியுமா? முடியாதா??. ஏன் சொல்றேன்னா, என் பையன பத்தி எனக்கு நல்லா தெரியும். உங்க பொண்ணு தான் பின்னாடியே வந்து அவன கெஞ்சி கெஞ்சி வழிக்கு கொண்டு வந்திருப்பா, இல்லாம எதுக்கு ஸ்கூல்ல இருந்து நேரா இந்த காலேஜ்ல வந்து சேரணும்” என அவர் பேச.
அவர் பேச்சு ஜெயந்திக்கு பிடிக்கவில்லை, அடங்கி போக வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லையே, அதனால் “இது மாறில்லா உங்க பையன்ட்ட பேசி ஒன்னும் வேலைக்காகம தான் இங்க வர வந்திருக்கீங்க போலயே” என்றார் ஜெயந்தி நக்கலாக.
“என்னம்மா கொஞ்சம் கூட பயமே இல்லாம பேசுற?” ராஜம் மரியாதையை கைவிட, ஜெயந்திக்கு சுரீர் ௭ன வர, காட்டமாக கேட்க வந்தார்……
அதை உணர்ந்த ப்ரகலத்தனின் அப்பா “நீ மட்டும் பேசணும்னா என்ன எதுக்கு கூட்டிட்டு வந்த ராஜம்?” என மிரட்டலாகவே, அதட்டல் இல்லாதது போல் கேட்டார்.
மற்றவர்கள் முன் மனைவியை அரட்டுவது பிடிக்காது, ஆனால் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பவருமில்லை. அவர் அதட்டலைப் புரிந்து கொண்ட ராஜம், ஜெயந்தியை முறைத்தவாறு அமைதியாகி விட.
அவர் பேச ஆரம்பித்தார், “உங்க வீட்டுக்காரர் எங்கம்மா, பக்கத்துல தான் வேலைன்னா வர சொல்ல முடியுமா?”.
“இல்ல சார் அவர் இறந்து ரெண்டர வருஷம் கிட்ட ஆச்சு. நானும் என் பொண்ணு மட்டும் தான் இருக்கோம். சொந்த ஊர் திருச்சி கிட்ட வெல்லாலம். அப்றம் அங்க கொஞ்சம் சொந்தக்காரங்க இருக்காங்க. அம்மாவும் அப்பாவும் சொந்த வீட்டுல தான் இருக்காங்க. எனக்கு இங்க வேலை கிடைச்சு இங்க வந்து இங்கேயே செட்டில் ஆகிட்டோம்”.
“சாரிமா அட்ரஸ் மட்டும் தான் விசாரிச்சேன், நீங்க டீச்சரா இருக்கீங்க இந்த ஸ்கூல்ன்னு சொல்லும்போதே, மத்தத அங்க போய் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். தெரிஞ்சுகிட்டே வந்திருக்கணும், சாரி மா தேவ இல்லாம கேட்டு உங்கள வேற கஷ்டப் படுத்திட்டேன்”.
“அப்படிலா எதுவுமே இல்ல சார். உங்கள பத்தி….??”.
“நா நரசிம்மன், *** ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்கேன். இவ ௭ன் மனைவி ராஜம், வீட்டோட தான் இருக்கா. எனக்கு நேட்டிவ் தஞ்சாவூர் பக்கம், வேல மாத்திட்டே இருப்பாங்க, நானும் மாறி மாறி போயிட்டு வந்துட்டுருக்கேன். ப்ரகலத்தன் படிப்புக்காக அம்மாவும் பிள்ளையும் இங்கேயே இருக்காங்க”.
“ஓ! டீ எதுவும் சாப்டுறீங்களா? மேடம் தண்ணியே எடுத்துக்கல அதான்” ஜெயந்தி நிறுத்த.
“அவளுக்கு கொஞ்சம் வருத்தம், அவ பொண்ணு பாத்து கட்டி வைக்க முடியலயேன்னு. அதுதான் அப்டி படபடன்னு பேசுறா?. சரிம்மா சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தோம். எனக்கு போன் வைப்ரேட் ஆகிட்டே இருக்கு, கெளம்பணும். இவங்க விஷயம் இப்ப அவசரம் இல்ல, ஆனாலும் பிள்ளைகள அடக்கி வைக்க வேண்டிய கடம நம்மளிது, பின்ன பெத்தவங்கன்னு நாம ௭துக்கு இருக்கோம். நீங்களும் உங்க பொண்ணுக்கு ௭டுத்து சொல்லுங்க, நானு ௭ன் பையன்ட்ட பேசி வாழ்க்கைக்கு அடிப்படை தரத்த வளத்துக்க சொல்றேன். மத்தத படிப்ப முடிக்கட்டும் பேசலாம்” என்க.
“உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன், நா சிங்கள் பேரண்ட் அதும் போக ஒரு டீச்சர், மத்தவங்களுக்கு முன் உதாரணமா இருக்கணும்னு தான் நினப்பேன், அதுலயும் நல்ல உதாரணமா தான் இருப்பேன். மத்தவங்களுக்கே அப்டி இருக்கணும்னு நினைக்றவ ௭ன் பொண்ண சும்மா ஏனோ தானானோன்னு விட்ருவேணா??. அவ ௭ன்ன மீறி போக மாட்டான்ற நம்பிக்கை ௭னக்கிருக்கு” பெருமையாகவே சொன்னார்.
“என்ன சொல்றீங்க நீங்க, இந்த அம்மாவே இவ்வளவு திமிரா பேசுது, பின்ன பொண்ண எப்டி வளத்திருக்கும். அப்பாவும் இல்ல, பையன தேடி பிடிக்குறது கஷ்டம் நீயே தேடிக்கன்னு பொண்ணுட்ட சொல்லிட்டாங்க போலயிருக்கு. எனக்கு உங்க பொண்ணு என் பையனோட பழகுறது கொஞ்சம் கூட விருப்பமில்ல, என் பையன நா மாத்திக்கிறேன். உங்க பொண்ண நீங்க அடக்கி வச்சுக்க பாருங்க, அவ்வளவுதான். வாங்க போலாம்” என எழுந்தார் ராஜம்.
“நாம பின்ன பொறுமையா பேசிக்கலாம் ம்மா, நாங்க வாரோம்” என அவர் தன்மையாகவே விடைபெற.
“வணக்கம் சார்” என சிரித்த முகமாகவே அனுப்பி வைத்தார் ஜெயந்தி. ஈவினிங் வீட்டுக்கு வந்த மகளிடமும் வந்து சென்றவர்களைப் பற்றி மூச்சே விடவில்லை.
இரண்டு மாதம் கழிந்த நிலையில்…..
அன்று செமஸ்டர் ரிசல்ட், பொதுவாகவே இன்ஜினியரிங் ரிசல்ட் நடுச்சாமத்தில் தான் வெளியிடுவர்.
ஆறு, ஜெயந்தி செல்லை கையில் வைத்துக்கொண்டு, ரிசல்ட்டுக்காக வெப்சைட்டை ஓபன் செய்வதும், க்ளோஸ் செய்வதுமாக இருந்தாள்.
அதேபோல், அவரவர் வீட்டில் டென்ஷனில் இருந்த, லட்சு, அமலா, நிலா மூவருக்கும் ஆறு மெசேஜில், “நானு முழிச்சுருக்கேன், நீயும் முழிச்சு தான் இருக்கியா?” ௭ன அனுப்ப.
“ரிஸல்ட்டுன்னு தெரிஞ்சப்றம் ௭ங்கிருந்து தூக்கம் வரும்” லட்சு பதில் அனுப்ப.
“பயமா இருக்கு டபிள் இ பேப்பர்ல லாம் ௭ன்ன க்ரேடு வருமோ, வெப்சைட் ஓபன் பண்ணவே கை கால்லா நடுங்குது” இது ஆறு.
“௭ந்த சப்ஜெக்டலயாது அரியர் மட்டும் விழுந்தது நா செத்தேன், ௭ங்க அப்பா ௭ன்னைய அவர் பிள்ளையே இல்லன்னு தத்து குடுத்துருவாருடி, உனக்குலா பிரச்சனை இல்ல, ஜெயந்தி ம்மா வெளில அனுப்பிட்டா சீனியர் வீட்டுக்கு போயிக்லாம்” லட்சு பதில் அனுப்ப.
“ஆமா நா அங்க போயிடுறேன், நீ வேணும்னா இங்க மேத்ஸ் டீச்சருக்கு பிள்ளையா வந்துறேன்” போன்ற வெட்டி மெசேஜ்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது.

