
சபதம் -37
அரும் பெறல் நெல்லிக்கனி
அதியமான் தந்தான்; அதனை
இருந்து உண்ணான்; ஈந்தான்;
நீடு வாழ் என்பான்;
-அவ்வையார்.
பொருள்:
இந்தப் பாடல் உண்மையான நட்பின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. அதியமான் அரசனிடம்
உயிரை நீட்டிக்கும் சக்தி கொண்ட அரிய நெல்லிக்கனி கிடைக்கிறது. அதைத் தானே உண்டால், தன் ஆயுள் கூடும், தன் அரசியல் வலிமை நீடிக்கும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அவ்வையார் நீண்ட காலம் வாழ வேண்டும், அவரது ஞானமும், பாடல்களும் உலகிற்கு பயன் தர வேண்டும் என்று எண்ணி, தன் உயிரைவிட நண்பியை மேலாகக் கருதி அந்த அரிய கனியை அவ்வையாருக்கு அளிக்கிறான்.
லண்டன் மாநகரம், எலும்புகள் உறைந்துவிடும் அளவுக்குக் குளிரால் நிறைந்திருந்தது. தனது தாய் இறந்த இரவு, பதினைந்து வயது கரனின் உலகமே சிதறிப் போனது. அவரது தந்தை மகனுக்கான தனது ஏக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு , கரணை உதய்பூரில் இருந்து எவரும் அறியாவண்ணம் லண்டன் மாநகருக்கு அனுப்பிவைத்தார்.
அவர்களின் வம்சத்தை அழிக்க முயன்றவர்கள், உயிருடன் இருக்கும் அரவள்ளியின் வாரிசுகளைத் தேடி வருவார்கள் என்ற பயம், மகாராஜா சமர் சிங்குக்கு நிரம்ப இருந்தது. மனைவிக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி, உதய்பூரின் கண்ணின் மணியான இளவரசனை மறைத்து வளர்க்க திட்டமிட்டார்.
அது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. தனது தாய் மீரா பாயின் கைகளுக்குள் வளர்ந்த அந்த இளைஞனுக்கு அன்னையின் மரணத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்து நின்றான். அரண்மனை முற்றத்தில் பெரிதாக மாற்றப்பட்டிருக்கும் அன்னையின் ஓவியத்தின் முன் மணிக்கணக்காக நின்று பார்ப்பவன் கண்களில் சொட்டு கண்ணீர் இருக்காது. யாரிடமும் பேசுவதில்லை. பித்து பிடித்தது போல் இருக்கும் மகனின் மனதிற்கு ஆறுதல் தரும் விதமாக கரன் லண்டனுக்கு அனுப்பப்பட்டான்.
அரவள்ளியின் காவலர்களான ஹூன் வம்ச தலைவன் ஆசாத் கான், முன்னமே ராணா குலவித்தைக் காப்பாற்ற லண்டன் வந்திருக்க, இப்போது கரணின் பாதுகாப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
லண்டன் அரண்மனையில் கரண் தங்கவைக்கப்பட்டான். அவன் கூப்பிட்ட குரலுக்கு வேலை செய்ய அத்தனை மனிதர்கள் இருந்தும் தனிமையில் உழன்றான். ஆசாத் கான் இளவரசருக்கு காவலாக தினம் அரண்மனைக்கு வந்து செல்வார், அவருடன் பன்னிரண்டு வயது மகள் அதிராவையும் அழைத்து வருவார்.
கரன் யாருடனும் பேசுவதில்லை. ஆனால், அதிரா அரண்மனைக்கு வந்து செல்லும் நாட்களில் மட்டும் அவனது பழைய உயிர்ப்பு திரும்ப தொடங்கியது. இதனை கவனித்த ஆசாத் கான் மகளை அடிக்கடி அரண்மனைக்கு அழைத்துவந்து, இளவரசனுக்கு துணையாக இருக்கச் செய்வார்.
அதிராவுடன் இருக்கும் நேரங்களில் கரணின் உள்ளே ஏதோ ஒன்று விழிக்க தொடங்கியது. அது என்ன என்று அவன் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.
ஆனால் அதிராவிடம் அவனுக்கு பிடிக்காத ஒன்றும் இருந்தது. அது அவள் எப்போதும் அவள் நண்பன் கலிலை பற்றியே பேசுவது. கலிலின் அருமை பெருமைகளை பேசுபவளுக்கு தெரியவில்லை கரண் அந்த முகம் தெரியா இளைஞன் மேல் பொறாமை கொண்டுள்ளான் என்று. அதிரா கலிலின் பெயரைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், கரனின் மார்பில் ஒரு விசித்திரமான வலி எழுந்தது.
குளிர்காலத்தில் லண்டன் மாநகரில் உதிக்கும் சூரியன்கூட மங்கலாக, சோம்பலுடன் எழுவான் போல. அன்று பள்ளிகள் இடையிலான மாபெரும் போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. அன்று தான் முதன் முதலில் கரணும் கலிலும் நேரில் சந்தித்து கொண்ட நாள்.
கரண் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் முன் வர, அவனுக்கு இணையாக ஒருவன் மட்டுமே வென்றிருந்தான். அவன் கலீல் ஹாசிம் 15 வயது மீசை அரும்பும் வயதில், nedu நெடுவென்று வளர்ந்திருந்தவனுக்கு உடம்பில் எலும்புகளை தவிர ஒன்றும் இல்லை. ஆனால் முகத்தில் தேஜஸுடன், அவனது இதழோர சிரிப்பு அவனை அழகனாக காட்டியது.
ஒவ்வொரு முறை கரண் பெயர் வெற்றியாளராக அறிவிக்கும்போது, அடுத்த பெயர் கலிலாக இருந்தது. மெல்ல இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவர்க்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட, அவர்கள் கண்கள் சந்தித்த அந்த நொடி ஏதோ ஒன்று அவர்களின் உள்ளத்தை கட்டிப்போட்டது போல் உணர்ந்தனர்.
கரண் ஒரு முடிவோடு கலிலிடம் பேச முயன்றபோது, எங்கிருந்தோ ஓடி வந்த அதிரா, சிரித்தபடி இருவரின் நடுவில் வந்து, “நான் சொன்னேன் தானே, நீங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டால், நண்பர்கள் ஆகிவிடுவீர்கள் என்று” என்றதும் இருவரின் முகபாவனையும் சற்று மாறியது.
புரியாமல் விழித்த இருவரையும் மாறி மாறி அறிமுகப்படுத்தியவள் அறியவில்லை பேசி பேசியே இருவருக்கிடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறோம் என்பதை.
அவள் அறியாமலே, இருவரின் இதயத்திலும் பொறாமையின் விதையை விதைத்திருந்தாள் அதிரா.
ஒவ்வொரு முறை கரணா? கலிலா? என்று வந்தால் அதிரா கலீல் பக்கமே நின்றாள், அதுவே கரணுக்கு பெரிய கடுப்பை தந்தது. அதே போல் கரனின் கண்கள் அதிராவை தொடர்வதை கண்ட கலிலின் பாதுகாப்புணர்வு கரணை எரிச்சலுடன் பார்க்க வைத்திருந்தது.
இருவருக்குள்ளும் பிணக்கம் வளர்ந்தது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் நாட்களில் கரனும் கலிலும் சண்டையிடத் தொடங்கினர். கைகளால் அல்ல, வார்த்தைகளால், அகம்பாவத்தால்,
மௌனப் போட்டியால்.
ஒவ்வொரு முறையும்…அதிரா கலிலின் பக்கம் நின்றாள். அதில் கரணின் இதயம் இறுகியது.
அதன் விளைவாக கரண் அதிராவை வார்த்தைகளால் காயப்படுத்தத் தொடங்கினான். அவளை வெறுப்பதால் அல்ல, அவளின் கவனத்தை இழப்பது, தன்னையே இழப்பது போல கரணுக்கு தோன்றியதால்.
கலில், கரண் அதிராவை காயப்படுத்துவதை வெறுத்தான். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை காரணம், அதிரா கரனை நேசிப்பதை அவன் அறிந்திருந்தான். இதற்கு ஒரே வழி, கலீல் அதிராவிடம் இருந்து விலக தொடங்கினான். அதிராவை இந்த உரிமை போராட்டத்தால் உடைந்துபோகும் நிலையில் காண்பதைவிட, தன் வலியை மறைத்து விலக தொடங்கினான்.
நாட்கள் வேகமாக ஓடியது, கரனின் பதினெட்டாவது பிறந்தநாள் புதுப்பொலிவுடன் விடிந்தது.
அதிகாலையில் எழுந்தவனின் உள்ளம் படபடக்க, அவன் முன்னாள் சிரிப்புடன் நின்றிருந்தார் மகாராஜா சமர் சிங். மூன்று வருடம் கழித்து மகனின் முக்கியமான நாளில் அவனை நேரில் பார்த்தவர் கண்களில் அத்தனை ஆனந்த பரவசம்.
தந்தையும் மகனும் தங்களுக்கான நல விசாரிப்புகளை பகிர்ந்த பிறகு, அந்த அறையின் கதவுகளை தட்டியபடி உள்ளே நுழைந்தார் ஆசாத் கான். அவரது கைகளில் கரண் முன்பு அதிவார் அரண்மனையில் இருந்து எடுத்து வந்த சிறிய பேழை இருந்தது.
கரண் அப்போது இருந்த நிலையில் அந்த பேழையை மறந்திருந்தான். இன்று அதனை மீண்டும் பார்த்ததும் நினைவடுக்கில் இருந்து மேல் எழும்ப, “பாபா…இது” என்றவனை ஒரு வித வலியுடன் பார்த்த மகாராஜா, “இது உன் அன்னை வழி வம்சத்தின் பொக்கிஷம். உன் உயிரை போல் காக்க வேண்டியது உன் பொறுப்பு பேட்டா. உன் அன்னையிடம் இதனை உன்னிடம் சேர்ப்பேன் என்ற வாக்கை நிறைவேற்றிவிட்டேன். இனி இதன் பொறுப்பு உன்னுடையது” என்றவர் அவன்வசம் அதனை கொடுத்துவிட்டு ஆசாத் கானோடு வெளியேறினார்.
கரண் அந்த பேழையின் மேல் கைவைக்க, அதனை திறக்கும் வழி தெரியாமல் தடுமாறியவனின் கைகள் அதில் இருந்த சிறிய வகை வாளில் கைகள் கீறி ரத்தம் அதில் சொட்டிய அந்த நிமிடம் அந்த பேழை திறந்து கொண்டது.
அதன் உள்ளே, அதிவார் வம்சத்தின் வாள் இருக்க, அது ஸ்தபத் ஸ்தம்பத்தின் அருகே பாதுகாக்கப்பட்ட வாள். அக்கினியால் சத்தியம் செய்த வாள்.ஒரு பண்டைய உறுதிமொழியின் சின்னம்.
கரன் அதைத் தொட முயன்ற அந்த நொடி, உலகமே சுழன்றது. அக்கினி முழங்கியது.
வனரக்ஷா காடு கண்முன் எழுந்தது. ஒரு மனிதன் தீக்குள் நின்று வாளை வானுக்கு உயர்த்தினான். ஒரு பெண் அவன் பெயரை சொல்லி அழுதாள். ஒரு இராஜ்யம் எரிந்து கொண்டிருந்தது.
கரணின் மூச்சுத்திணற, கண்ட காட்சிகள் அனைத்தும் அவனதுபூர்வ ஜென்ம நினைவுகள். அவன் வீர், அதிவாரின் இளவரசன். போர்க்களத்தில் உயிர் நீத்த போர்வீரன்.
அவன் பூர்வ ஜென்ம நினைவுகள் திரும்ப, கரனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கடந்த காலம் திரும்பியிருந்தது.
அன்று மாலை கரனின் பிறந்தநாளுக்காக கலில் அரண்மனைக்கு அழைக்கப்பட்டான். இரண்டு வருடங்கள் கழித்து இன்றுதான் கரணும் கலிலும் மீண்டும் நேரடியாக சந்தித்து கொண்டார்கள்.
முந்தைய நாள் முழுதும் பூர்வ ஜென்ம நினைவுகளில் போராடி கொண்டிருந்த கரணின் கைகள் தன் இடையில் சொறுவியிருந்த வாளை அடிக்கடி தொட்டு மீண்டது. அப்படி அவன் தொட்ட அந்த நொடி, அந்த வாள் அவன் கைகளில் துடிக்க, காரணம் தெரியாமல் புருவம் சுருக்கியனின் கண்களில் அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்த கலீல் பட்டான்.
இருவரின் கண்களும் சந்தித்த அந்த நொடி, உலகம் நின்றது. கரனின் உள்ளே இருந்த தீ மீண்டும் எரிந்தது. கலில் தான் ரணசூர், தான் இழந்த சகோதரன் என்பதை கரண் உணர்ந்துக் கொண்டான்.
கலீல் மற்றும் அதிரா யார் என்பதை உணர்ந்த கரண், அடுத்து தனது முன்னேற்றத்தில் கவனத்தை திருப்பினான். பதினைந்து வயதில் இருந்து அவனை எரித்துக் கொண்டிருந்த கேள்வி, தனது தாயை கொலை செய்தவர்கள் யார் என்பது.
அந்த இரவு, அவனின் சிறுவயது முடிந்த அந்த நொடி, அவனை “பாதுகாப்புக்காக” லண்டனுக்கு அனுப்பிய தந்தையின் பயம் என்று அனைத்தையும் நினைத்தவனுக்கு பல கேள்விகள் இருந்தது. அது எதனால் தனது தாய் கொலை செய்யப்பட்டார்? தனக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? தனது பூர்வ ஜென்ம நினைவுகளுக்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?
இவை அனைத்துக்கும் கரணுக்கு பதில் வேண்டும். உண்மை வேண்டும். அதற்கு அவன் ஐரோப்பாவின் சிறந்த தனிப்பட்ட விசாரணை நிறுவனத்தை நியமித்தான். அவனது ஒரே கட்டளை, “என் அம்மாவை கொன்ற மனிதனை கண்டுபிடியுங்கள்” என்பதுதான்.
ஆண்டுகள் கடந்தன, கோப்புகள் குவிந்தன, சுவடுகள் முடிந்தன. ஆனால் கரண் அவனது தேடுதலை நிறுத்தவில்லை.
ஒரு குளிர்கால மாலை, விசாரணை நிறுவனத்தில் இருந்து கரணுக்கு அழைப்பு வந்தது.
அவன் கேட்ட கேள்விக்கான அவர்களின் பதில், “ஆரிஸ் குரேஷி” அரசியலில் மாற்றத்தை உருவாக்கி கொண்டிருந்தவன். ஆங்கிலத்தில் “கிங் மேக்கர்” என்று சொல்வர். யாரை எந்த பதவியில் அமர்ந்தவேண்டும் என்பதை முடிவெடுக்கும் பெரிய மனிதன்.
அவன் புகைப்படத்தை பார்த்த அந்த நொடி, கரணின் இரத்தம் உறைந்து போனது.
இதயம் தொண்டைக்குழியில் சிக்கி கொண்ட உணர்வு, ஏனெனில் அந்த முகத்தை அவன் அறிந்திருந்தான்.
தீயில்.
போரில்.
வஞ்சகத்தில்.
ஆரிஸ் குரேஷி—அராவள்ளியை அழித்த முகலாய ஆளுநரின் மறுபிறப்பு என்பதை கரண் உணர்ந்து கொண்டான்.
மேலும் அந்த நிறுவன குழு கரணிடம் சொன்னது, “ஏன்? எதற்காக என்ற காரணம் தெரியவில்லை. ஆனால் சமீபகாலமாக குரேஷியின் கண்கள் லண்டன் புறம் திரும்பியுள்ளது. அவனது ஆட்கள் ஒருவனை தேடிக் கொண்டிருகின்றனர்” என்றதும் கரணின் ஆர்வம் அதிகரிக்க, “யார்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த குழு தலைவன், “கலீல் ஹசீம்” என்றதும் கரணின் கைகள் நடுங்க கோபத்தில் கொந்தளித்தவன், தனது நண்பனை பாதுகாக்க தனிப்படை ஒன்றை சுகவிந்தரின் தலைமையில் நிறுவினான். கலிலை தன் கண்பார்வையில் பாதுகாக்க நினைத்தான் கரண்.
கரன் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கையில், கலில் தன் விருப்பமில்லாத ஒரு உண்மையுடன் வாழ்ந்தான். அவன் பதினெட்டு வயது ஆன நாளில், அவனது தந்தை ஆசாத் கான் அனைத்தையும் சொன்னார்.
“கரனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவனை லண்டனுக்கு அனுப்பியது இளவரசனின் உயிர் காக்கத்தான். நீ அவரை பாதுகாக்க வேண்டும்” என்றதும் கலில் தயங்கவில்லை. அவன் மற்றும் அவனது ஆட்கள் கரனை நிழலாகக் காத்தனர். அது ஆசாத் கானின் வார்த்தைக்காக அல்ல, அதிராவின் காதலுக்காக.
இருவரும் ஒருவரை ஒருவர் வெறுப்பது போல் பாசாங்கு செய்தபடி மற்றவரை தங்கள் உயிருக்கு இணையாக பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தனர்.
ஆரிஸ் குரேஷி லண்டன் கால்ஃப் கிளப்பில் கரனை கொல்ல முயன்றபோது, கலிலின் ஆட்கள் தலையிட்டதால், கரன் சிறிய காயத்துடன் உயிர் தப்பினான். அவனை யார் காப்பாற்றினார் என்று கரணுக்கு இன்றுவரை தெரியாது.
அதோடு ஆரிஸ் குரேஷி நிற்கவில்லை. அவனின் அடுத்த இலக்கு, கலில். ஒரு திட்டமிட்ட விபத்து. ஸ்காட்லாந்து பாலத்தின் மீது அன்றிரவு நிகழ்த்தப்பட்ட கோர விபத்தால் கலில் இறப்பின் விளிம்பில் இருந்தான்.
ஆனால் ஆரிஸ் கலிலில் ஆர்வம் காட்டுவதை அறிந்த கரணின் ஆட்கள் அவனை முதலில் கண்டுபிடித்து, அவனுக்கு தனிப்பட்ட மருத்துவ உதவி அளித்து காப்பாற்றினர். உடல் சற்று தெரிய கலிலை ஸ்காட்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு தனி விமானம் மூலம் அழைத்து வந்தனர். இது அனைத்தும் கரணின் கட்டளையாக சுகவிந்தர் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டது.
இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் ஒரு தனி இடத்தில் வைத்து கலீலுக்கு தனியார் சிகிச்சை ஏற்பாடு செய்திருந்தான் கரண். கலிலின் நிலை முன்னேற தொடங்கிய பொது கரண் இந்தியா வந்து சேர்ந்தான்.
ஆசாத் கானைத்தவிர இதை யாருக்கும் கரண் தெரியப்படுத்தவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் கலில் கண்விழித்தான். ஆனால் உடல் பலவீனமாக இருந்தது. மனதில் பல நினைவுகள் எழுந்து குழப்பத்தில் மூழ்கியிருந்தான்.
அந்த நிலையில் அன்றிரவு கலிலின் உள்ளத்தை ஏதோ ஒன்று அழைத்தது. ஒருவித இழுப்பு.
ஒரு குரல். ஒரு தீ. தன்னை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து தப்பிச் சென்றவன்,
காலணியின்றி, குழப்பத்துடன், ஆனால் உள்ளுணர்வின் உந்துதலில் பழைய கல் பாதைகளைத் கடந்து, பெரும் காட்டைத் கடந்து, இறுதியில் அவன் அதைப் பார்த்தான்.
ஸ்தபத் ஸ்தம்பம். பண்டைய சத்தியத்தின் தூண். ரணசூர் தீயில் இறந்த இடம். அதன் முன் நின்றிருந்தவனின் நினைவுகள் வெளிப்பட தொடங்கியது. அந்த நேரம் அவனுக்கு பின்னால் கேட்ட அரவத்தில் திரும்பி பார்த்தவன் முன் “அவனின் வீர்” எனும் கரண் நின்றிருந்தான்.
அவன்… ரணசூர். தீயில் இறந்த போர்வீரன். சத்தியம் செய்த இளவரசன்.
பழிவாங்கும் ஆன்மா.
கரன்… வீர். அவன் சகோதரன். அதிவார் இளவரசன். தனது கைகளில் உயிர் நீத்த உயிர் நண்பன்.
கடந்த காலம் நிகழ்காலத்தோடு மோதியது. இரண்டு ஆன்மாக்கள் விழித்தன.
இரண்டு போர்வீரர்கள் மீண்டும் உயிர்த்தனர். காடு முழுவதும் ஒரு குரல் கிசுகிசுத்தது,
“முடிவு மீண்டும் தொடங்குகிறது.”
ரணசூரன் வந்துவிட்டான்….

