
அத்தியாயம் 22
அகரனின் பேச்சும் உடல்மொழியும் அங்கிருந்த மற்ற மூவரையும் யோசிக்க வைக்க, அவர்களின் சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்தது அவன் கடைசியாகக் கூறியது.
என்னதான் முன்னரே அகரன் மீது சிறு சந்தேகம் எழுந்திருந்தாலும், அவனது இந்த ரூபத்தைக் கண்ட மூவரும் சற்று திகைத்துதான் போயிருந்தனர்.
முக்கியமாக, மென்மொழி!
அகரன் அவளின் சகோதரன் அல்லவா?
“அகரா, நீ இப்போ செஞ்சுட்டு இருக்குறது சரியில்ல.” என்று மென்மொழி பேச ஆரம்பிக்க, அதை முழுதாகக் கேட்கக் கூட விரும்பாதவனாக, “உன்கிட்ட யாரும் ஒப்பினியன் கேட்கல மொழி.” என்று பட்டென்று கூறிய அகரன், அவளருகே நெருங்கி, “நானா தேடி வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்படி நீங்களா வந்து எனக்குத் தேவையானதைத் தருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல.” என்று கூறி இதழ்களை விரித்தான்.
அவனது நோக்கம் உணர்ந்து திடுக்கிட்டவளோ பின்னே நகர்ந்து செல்ல, “நான் சாஃப்டா கேட்குறப்பவே குடுத்துட்டா, உங்களுக்கு நல்லது.” என்று பொறுமையை இழுத்துப் பிடித்தபடி எச்சரித்தான்.
மென்மொழியோ தமையனின் நிலை கண்டு வருந்தியவளாக, “இது நீ இல்ல அகரா. ஏன் இப்படி பிஹேவ் பண்ற? நீ மாறியிருக்கன்னு உனக்குப் புரியுதா இல்லையா?” என்று கேட்க, “ஆமா மாறித்தான் இருக்கேன். இட்ஸ் ஆல் ஃபார் குட். யோசிச்சுப் பாரு மொழி… உன்னோட அண்ணன் இந்த உலத்துலயே சக்திசாலியா மாறப் போறேன். இந்த உலகமே இன்னும் கொஞ்ச நாள்ல என்னைக் கடவுளா பார்க்கும்.” என்று கூறி ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான்.
“நோ… இதெல்லாம் வெறும் இல்யூஷன் அகரா. அப்படி எதுவும் நடக்காது. உன்னோட கற்பனைல இருந்து வெளிய வா.” என்று மென்மொழி மன்றாட, அது பிடிக்காத அகரனோ, சட்டென்று தங்கையின் கழுத்தைப் பிடித்து இறுக்கினான்.
“எது கற்பனை? ஹான், எது இல்யூஷன்? நீ சொல்ற மாதிரி கற்பனைன்னே வச்சுக்கிட்டாலும், அதை நிஜமாக்குறதுக்கான சக்தி என்கிட்ட இருக்கு. சோ, உன் அறிவுரையை எல்லாம் உனக்குன்னு இருக்க கூட்டத்துக்கிட்ட மட்டும் வச்சுக்கோ.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் அகரன்.
அதுவரை அண்ணன் – தங்கையின் உரையாடலிற்குள் வராத மற்ற இருவரும், இப்போது அகரனை மென்மொழியிடம் இருந்து விலக்கினர்.
இன்பசேகரனின் பலத்தினால், அது சற்று எளிதாகவே இருந்தது.
“இங்கப் பாருங்க, உங்க கிட்ட பேசி நேரத்தை வீணாக்க விரும்பல. உங்க கிட்ட இருக்க கல்லைக் குடுத்துட்டா, நான் என் வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பேன். இல்லன்னு அடம்பிடிச்சா… அப்புறம் தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று அகரன் எச்சரிக்க, மற்ற மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“அகரன், சொன்னா கேளுங்க… இந்தக் கற்களுக்குப் பின்னாடி இருக்க ஹிஸ்டரி தெரியாம எதையும் செய்யாதீங்க. இது உங்க தாத்தா கஷ்டப்பட்டு பாதுகாத்து வச்ச ரகசியம். அதைக் காப்பாத்துறதுதான் உங்களோட கடமை.” என்று இறுதி முயற்சியைக் கையிலெடுத்தான் யுகேந்திரன்.
“ப்ச், நீ அந்த போலீஸ்தான? உன்னை உன் டிப்பார்ட்மெண்ட்ல எதுவும் சொல்லலையா? உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு… என் குடும்பக் கதையெல்லாம் உனக்கு எதுக்கு?” என்ற அகரன் திடீரென்று உக்கிரமானக் குரலில், “என்னோட நேரத்தை ரொம்ப வீணாக்கிட்டீங்க. இனி, நடக்குற எதுக்கும் நான் பொறுப்பில்ல.” என்று கூற, அடுத்த நொடி, அவனின் விழிகள் இரண்டும் கருமை நிறம் பூசிக் கொண்டன.
அவனது மாற்றத்தை முதல் முறை காண்பதால் திகைத்து நின்ற மென்மொழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட நினைத்தனர் மற்ற இருவரும்.
ஆனால், அவர்களின் எண்ணம் செயலாக மாறும் முன்னரே, அகரன் அவனின் சக்தியை வெளிப்படுத்தி இருக்க, அந்த மூவரிடமிருந்த கற்கள் ஒளிர ஆரம்பித்தன. அத்துடன், மூவரும் வலியினால் துவண்டு துடித்தனர்.
வலியினூடே, “அகரா, நீ என்ன பண்றன்னு பாரு… தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ… உன் பின்னாடி இருக்குறவங்க நல்லவங்க கிடையாது. அவங்களால நீ உன் வாழ்க்கையை பாழாக்கிக்காத.” என்று மென்மொழி கூற, அகரனோ ஒரு மார்க்கமாகச் சிரித்தான்.
அகரனின் அந்த ஒரு நொடி கவனச்சிதறலைப் பயன்படுத்திக் கொண்ட யுகேந்திரன், அவனின் சக்தியைக் கொண்டு அகரனைக் கட்டுப்படுத்த முயன்றான்.
ஆனால், அது அத்தனை எளிதானக் காரியமாக இல்லை. அகரனும் சாமானியன் அல்லவே!
யுகேந்திரன் தன்னைக் கட்டுப்படுத்த முயல்கிறான் என்பதை அறிந்து கொண்ட அகரனின் அகங்காரம் தூண்டப்பட, இப்போது அவனின் ஒட்டுமொத்த சக்தியையும் யுகேந்திரனை நோக்கிச் செலுத்தினான்.
அதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் யுகேந்திரன் கீழே விழும் தருவாயில், “யுகேன்…” என்று அழைத்தபடி அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் மென்மொழி.
அவளின் தொடுதலில், யுகேந்திரன் மீண்டும் வலுபெற்றான்.
தங்கையின் சக்தியைக் கண்ட தமையனோ, “இன்ட்ரெஸ்டிங்! முதல்ல, உங்க கிட்ட இருக்க கற்களை அழிக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா, இப்போ என் எண்ணம் மாறிடுச்சு.” என்று அந்தக் கற்களை கண்டபடி கூறினான்.
அவனது பேச்சு அவர்களின் செவிகளில் விழுந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை அவர்கள்.
அவர்களின் அப்போதைய ஒரே நோக்கம், அகரனிற்குக் கற்கள் கிடைக்கக் கூடாது என்பதும் அதற்கு அவர்கள் அங்கிருந்து விரைவாகத் தப்பிக்க வேண்டும் என்பதுமே!
அகரன் அவனது அடுத்தத் தாக்குதலிற்காக ஆயத்தமாகும் வேளையில், திடீரென்று தலையைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தான்.
அவனது செய்கையில் குழம்பிப் போன மென்மொழி அவனருகே செல்ல எத்தனிக்க, அவளைத் தடுத்த யுகேந்திரனோ, “இதுதான் தப்பிக்குறதுக்கு சரியான சமயம் மொழி.” என்று கூறி அவளை இழுத்தான்.
“இல்ல யுகேன் அகரன்… அவனையும் நாம…” என்று கூறியபடி அவள் அகரனைத் திரும்பிப் பார்க்கும் சமயம், மூவரும் மென்மொழியின் இல்லத்தை அடைந்திருந்தனர்.
அதில் எட்டிப் பார்த்த எரிச்சலுடன், “ஏன் இப்படி செஞ்சீங்க யுகேன்? அங்க அகரனுக்கு என்னாச்சுன்னு தெரியல?” என்று மென்மொழி வந்ததும் வராததுமாக சண்டையில் ஈடுபட, வீட்டிலிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை.
மென்மொழி கூறியதை வைத்து, அகரனிற்கு ஏதோ ஆபத்து என்று புரிந்து கொண்ட யாழ்மொழியோ, “என்னாச்சு அகரனுக்கு?” என்று பதற, அவளைச் சமாதானப்படுத்த தள்ளி அழைத்துச் சென்றான் இன்பசேகரன்.
“அங்க இருந்த சிசுவேஷன் புரியலையா மொழி? அகரன் உன் அண்ணன்தான்… ஆனா, இப்போ அவனால நமக்கு ஆபத்து புரிஞ்சுக்கோ.” என்று சூழலை எடுத்துரைத்தான் யுகேந்திரன்.
எப்போதும் நியாயமாக முடிவெடுக்கும் மென்மொழிக்கும் அண்ணன் மீதிருந்த அக்கறையில் சற்று அடி சருக்கியது போலும்!
“என்னதான் இருந்தாலும், அவனை அப்படியே விட்டுட்டு வந்தது தப்பு யுகேன். அவனால ஆபத்தா, இல்ல அவனுக்கு ஆபத்தான்னு இன்னும் நமக்கு சரியா தெரியல.” என்று விவாதித்தாள் மென்மொழி.
“மொழி, அங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் மறந்துட்டியா?” என்ற யுகேந்திரனின் குரலிலும் கோபம் எட்டிப் பார்த்தது.
“நான் எதையும் மறக்கல யுகேன். ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணியிருக்கலாம்னுதான் சொல்றேன். அவனை யாராவது கண்ட்ரோல் பண்ணியிருந்தா, அதை நாம கண்டுபிடிச்சுருக்கலாம்னு சொல்றேன்.” என்று மல்லுக்கு நின்றாள் மென்மொழி.
“ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணியிருந்தா, நம்மளால திரும்ப வந்துருக்க முடியுமான்னே தெரியாது.” என்றான் யுகேந்திரன்.
இருவரின் சண்டையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுடரொளிக்கும் மதுசூதனனிற்கும் எதுவுமே புரியவில்லை.
எனினும், சூழலை இலகுவாக்கும் பொருட்டு, “சரி வந்தது வந்துட்டீங்க… விடுங்களேன்… இப்போ நீங்க எதுக்கு தேவையில்லாம சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்று வினவிய சுடரொளி மென்மொழியை சமாதானம் செய்ய நெருங்க, அங்கிருந்து விலகிச் சென்றாள் மென்மொழி.
அவளின் இந்தச் செய்கையில் அனைவரும் அவளை வித்தியாசமாகப் பார்க்க, “அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் குடுங்க. இப்போதைக்கு யாரும் எதுவும் பேச வேண்டாம்.” என்ற யுகேந்திரனும் அங்கிருந்து வெளியேறி விட்டான்.
“என்னாச்சு இவங்க ரெண்டு பேருக்கும்?” என்று சுடரொளி வினவ, மற்ற மூவரும் உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினர்.
*****
மென்மொழியின் வீட்டை விட்டு வெளியே வந்த யுகேந்திரன் அன்வரை அலைபேசியில் அழைத்தான்.
“அன்வர், அந்த வருண் இப்போ தெளிவா இருக்கானான்னு விசாரிச்சு சொல்லுங்க.” என்ற யுகேந்திரன், வருணின் இல்லத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான்.
அடுத்த இருபதாவது நிமிடம் வருணின் வீட்டிற்கு முன்பு வந்த யுகேந்திரன், அங்கு காவலிற்கு இருந்த காவலர்களிடம் விசாரித்தபடி அழைப்பு மணியை அழுத்தினான்.
சில நிமிடங்களிற்குப் பிறகே கதவைத் திறந்த வருண், சற்றுத் தெளிவாக இருந்தது அவனது கேள்வியிலேயே தெரிந்தது.
“யாரு? எதுக்கு இந்த நேரத்துக்கு வந்துருக்கீங்க?” என்றான் அவன் சோர்வான குரலில்.
“உங்களைத் தேடித்தான் வந்துருக்கேன் வருண். வாங்க உள்ள போய் பேசுவோம்.” என்று அவனது தோளில் கைபோட்டபடி உள்ளே சென்றான் யுகேந்திரன்.
யுகேந்திரனின் உடல்மொழியை வைத்து என்ன எண்ணினானோ, தோளில் இருந்த அவனது கரத்தைத் தட்டி விட்டு, “எனக்கு எதுவும் தெரியாது.” என்றான் வருண் வேகமாக.
“அட, நான் இன்னும் கேள்வியே கேட்க ஆரம்பிக்கலையே வருண்.” என்று கேலியாகக் கூறிய யுகேந்திரன், “அந்த ஆக்சிடெண்ட்டை நீயா செய்யல… ஓகே… ஆனா, உன்னை செய்ய சொன்னது யாரு?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் வருணின் விழிகளில் பயமும் பதற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவனது உடல் வேறு நடுங்க, “இல்ல இல்ல யாரும் சொல்லல…” என்றான்.
அவனது செயல்களை எல்லாம் கவனித்த யுகேந்திரன், அடுத்த முயற்சியாக, அவனது அலைபேசியில் இருந்த அகரனின் புகைப்படத்தைக் காட்டி, “இவரை உனக்குத் தெரியுமா?” என்று வினவ, தயக்கத்துடன் அதைப் பார்த்த வருணோ, ‘இல்லை’ என்று தலையசைத்தான்.
யுகேந்திரன் அவனின் சக்தியைப் பயன்படுத்தி, வருண் கூறியதன் உண்மைத்தன்மையை ஆராய, ஆச்சரியமாக, அவன் கூறியதனைத்தும் உண்மை என்று தெரிய வந்தது.
ஆம், வருண் கூறுவது உண்மையே. அவனிற்குத் தெரிந்த வரை, அவன் கூறுவது உண்மைதான்.
யாழ்மொழிக்கு ஏற்பட்ட விபத்து, வருண் திட்டமிட்டது அல்ல. ஆனால், வருணால் நிகழ்த்தப்பட்டிருந்தது.
வருண் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறான் என்பது வரை தெரிந்து கொண்ட யுகேந்திரனால், அவனைப் பயன்படுத்தி காரியம் சாதித்தது யார் என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
மேலும், வருணிற்கு உண்டாகும் பயத்திற்கும் பதற்றத்திற்குமான காரணத்தையும் யுகேந்திரனால் கண்டு கொள்ள முடியவில்லை.
வருணின் மூளையிலிருந்து அந்த நினைவுகள் மட்டும் அழிக்கப்பட்டிருந்தன!
*****
“மார்ட்டின், அங்க எல்லாம் ஓகேதான?” என்று கரகரப்பான குரல் அலைபேசி வழியே ஒலிக்க, “எங்க பாஸ்? கால் மேல கால் வந்துட்டு இருக்கு… எப்போ பிராஜெக்ட் பியை ரிலீஸ் பண்ணப் போறீங்கன்னு மிரட்டிட்டு இருக்கானுங்க.” என்று புலம்பினான் அவன்.
“ப்ச், அதைக் கேட்கல… ஒர்க் எப்படிப் போகுதுன்னு கேட்டேன். அதுல ஏதாவது பிரச்சனையா?” என்று கண்டிப்புடன் அந்தக் குரல் ஒலிக்க, “இல்ல பாஸ் எல்லாமே எப்பவும் போலதான் போகுது. ஆனா, சென்னைலதான் ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்…” என்று இழுத்தான் அவன்.
“தேவையில்லாததை எல்லாம் தெரிஞ்சுக்கணும்னு நினைக்காத! சொல்ற வேலையை மட்டும் செய் போதும்!” என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட, “ஹ்ம்ம், எல்லாம் என் நேரம்!” என்று புலம்பியவன், அவனது வேலையைக் கவனிக்கச் சென்றான்.
தொடரும்…
