Loading

காலம் தாண்டிய பயணம் 12

 

அப்படியே பழைய நினைவுகளுடன் சாய்ந்திருந்த மகிழ் யாழனின் மூடி இருந்த கண்களிலிருந்து வெறியேறிய கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தை நனைக்க, பழைய நினைவுகளின் தாக்கதிலிருந்து மீள முடியாமல் அமர்ந்திருந்தான்.

 

அன்று தாய் தந்தையை இழந்து அவன் தனித்து நிற்கையில் மித்ரன் மட்டும் இல்லையேல் அவன் நிலை????

 

இன்று எண்ணினாலும் அவனுக்கு அது ஒரு வித பதற்றம் தான்.

 

“ப்ப்பா, உன் போராட்டத்த உன்கிட்ட சேர்க்க எல்லா வழிலயும் நானும் போராடுறேன் தான். ஆனால் என்னால முடியலையே!” என்று  உடைந்தவன்,

 

“இவ்வளவு நடக்குது ஆனா ஒன்னும் பண்ண முடியாமல் இருக்க எனக்கே என் மேல கோபமா வருது. கடவுளே இதுக்கு ஏதாச்சும் வழி இல்லையா?” என்று தனக்கு தானே அவன் கேட்டுக்கொள்ள,

 

அங்கே பைரவக் கோட்டையில் பைரவன் கோயிலில் மணிகள் எல்லாம் தன்னால் சத்தம் எழுப்ப, சித்தரின் காதில் அந்தச் சத்ததுக்கான செய்தி போய் விழ,

 

அவரோ புன்னகையுடன் “இதோ செல்கிறேன் பைரவா. உன் ஆணைக்காகவே அடியேன் காத்திருந்தேன்” என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டவர், கண்களை மூடித்  திறக்க, அடுத்த நொடி அந்த மருத்துவமனை முன்னே தோன்றினார் அவர்.

 

அவர் தோற்றம் அங்கு காவலுக்கு நின்றிருந்தவரின் புருவத்தை சுருக்கக் கூடியவாரே இருந்தது.

 

உள்ளே நுழைய காலை எடுத்து வைத்தவரைத் தடுத்தவர், “நில்லு நில்லு, இப்படி உள்ள எல்லாம் போக கூடாது” என்று சொல்ல, அவரை ஒரு பார்வை பார்த்த சித்தர் எதுவுமே பேசாமல் அப்படியே அங்கேயே அமர்ந்து விட, அந்த காவலாளிக்கோ ‘ஐயோ’ என்றானது.

 

அடுத்த அரைமணி நேரம் எத்தனை போராடியும் அவரால் அந்த சித்தரை அங்கிருந்து அப்புறப்படுத்தவே முடியவில்லை…

 

அடுத்து ஆட்கள் அங்கே கூடிவிட, உள்ளே மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மூலம், ஷில்பாவிற்கு விடயம் போக, அவள் வந்தும் அவரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை என்றதும் அவள் நேரே சென்றது மகிழிடம் தான்.

 

“டேய் மகி, கொஞ்சம் வெளியே வாயேன், காட்டுவாசி போல ஒருத்தர் ஹாஸ்பிடல் வாசல்ல வந்து உக்காந்திருக்காருடா, ஸ்டாஃப் அத்தன பேரும் எவ்வளவு முயற்சி பண்ணி பேசியும், விரட்டியும் பார்த்தாச்சு அவர் கண் திறக்க மாட்டேங்குறாரு கொஞ்சம் வந்து என்னனு பாரேன். ஹாஸ்பிடல் முன்னவே உக்காந்திருக்காரு என்ன பண்றதுனு புரியல பேஷண்ட்ஸ் பேனிக் ஆகுறாங்க” என்றாள் ஷில்பா சற்று பதற்றதுடன்…

 

அத்தனை நேரம் பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவனோ அவள் குரலில் சட்டெனக் கண்களைத் துடைத்துக் கொண்டு,  “ப்ட்ச், என்னடி? யாரது? வெளில வேற யாரும் இல்லையா?” என்று சற்று சலிப்புடன் வினவ,

 

அவளோ “இல்லைனு தான எரும உன்னத் தேடி வந்திருக்கேன்” என்றாள், இத்தனை நேரமாய் எத்தனை பேசியும் வெளியே அமர்ந்திருப்பவரிடம் பதில் இல்லை என்ற கடுப்புடன்…

 

“சரி சரி டென்ஷன் ஆகாத வரேன்” என்றவன் அவளுடன் வெளியே வர, அங்கே மருத்துவமனை நுழைவாயலில்,

 

புதரென வளர்ந்த தாடியுடனும், உடலெல்லாம் திருநீறு பூசப்பட்டு, கையில் பெரிய கோல் ஒன்றும், கழுத்தில் கையில் எல்லாம் கருப்பு மணியாலான மாலையும் அணிந்தபடி சம்மனமிட்டு அமர்ந்திருந்தார் அவர்.

 

அவரை விரட்டப் பலர் அங்கே முயற்சி செய்து கொண்டிருக்க, அசைவே இல்லை அவரிடம்…

 

இவன் அவரை நோக்கி இரண்டு எட்டுக்கள் தான் எடுத்து வைத்திருப்பான் பட்டெனக் கண்களைத் திறந்து கொண்டவரோ இவனைப் பார்த்து,

 

“வளவா விரைந்து செல், தாழ்த்தும் ஒவ்வொரு நாளிகையும் ஆபத்தானது, உன் உடலில் ஓடும் செந்நீரின் உடையவன் உன் தேவை நாடிக் காத்திருக்கிறான்” என்று அத்தனை நேரம் இருந்த மௌனத்தை உடைத்து அவர் மொழிய, மகிழோ தன்னையே பார்த்தபடி ‘வளவா’ என விளிக்கும்  அவரைத்தான் பார்த்திருந்தான்.

 

அவர் அவனைப் பார்த்தபடியே மீண்டும் “விரைந்து செல் வளவா” என்க,

 

அருகில் இருந்த ஒருவனோ, “பைத்தியம் முத்திடிச்சு சார், குடிச்சிட்டு வந்து ஏதோ உளறுறான் நீங்க போங்க. நாங்க போலீஸ்க்குச் சொல்லி இருக்கோம் இப்போ வந்து அள்ளிட்டு போவாங்க அப்பறம் தன்னால பித்தம் கழையும்” என்றான்.

 

மகிழோ ஏதோ யோசனையுடன் திரும்பி நடக்கப் போக, அடுத்து அவர் உச்சரித்த வார்த்தைகளில் தன்னால் அவன் கால்கள் உறைந்து போனது.

 

‘தான் கேட்டது உண்மை தானா’ என்ற அதிர்ச்சியுடன் மீண்டும் அவரைக் காண,

 

அவரோ புன்னகையுடன் மீண்டும்

“உடையவனின் செந்நீர் உயிரில் இணைந்து நனைந்த அணி, இடர் தீர்க்கும் ஆயுதமாய் மாற, பெட்பு வரமாய் கரங்களில் சேரும்” என்றார். 

 

மகிழ் இதனை எதிர் பார்க்கவில்லை என்பதை அவரை நெருங்கியவனது முகமே காட்டிக் கொடுக்க, “நீங்க யாரு?” என்றான் குரலில் நடுக்கத்துடன்…

 

அவரோ, “அடியேன் வான்மீகி, பைரவனின் பக்தன்… நீங்கள் அடைந்த பொக்கிஷத்தின் காவலன்” என்றார்.

 

வான்மீகி அந்தப் பெயரை எங்கோ கேட்டது போலொரு எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

 

அதனை யோசித்தபடியே மீண்டும் அதே குழப்பதுடன் நின்றவனுக்கு சட்டென அந்த ஓலைச்சுவடி ஞாபகம் வர,

 

என்றோ ஒருநாள் அந்த ஓலைச்சுவடியை எழுதியது சித்தர் வான்மீகி என்று தந்தை சொன்னது மனதின் நினைவடுக்கில் எழ, நம்ப முடியாத பார்வையோடு நின்றிருந்தான்.

 

இம்முறை அவரே “செல் வளவா, சரித்திரம் திருத்தும் ஆயுதம் நீ, இடர் தீர்க்கக் காலம் நெருங்கி விட்டது. உலகின் நன்மைக்காகப் புறப்படு இப்பிறவிக்கான பயன் விரைவில் கிட்டும்” என்றவர் அவன் கரத்தைப் பற்றியபடி சொடக்கிட, சடுதியில் அங்கிருந்தவர்கள் மறைந்தனர்.

 

அவனும் அவரும் மட்டும் அங்கே நின்றிருக்க, அவரோ “செந்நீர் கலக்கட்டும் வளவா நினைவில் வைத்துக்கொள்” என்று அடுத்த நொடி அவரும் மறைந்து போக, அங்கே மகிழ் மட்டும் தான் நின்றிருந்தான்.

 

அவனோ யோசனையுடன் திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டுத்தான் போனான். அவன் நின்றிருந்தது  அவனது வீட்டின் முன் அல்லவா??

 

என்னதான் நடக்கிறது என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை…

 

பல கேள்விகளுடனே வீட்டின் உள்ளே நுழைந்தவன் கண்டது, தந்தையின் ஆய்வு அறைக்கு முன்னே நின்று அழுது கொண்டிருக்கும் இனியாவைத் தான்.

 

“இனியா” என்று அவன் அழைக்கச் சட்டெனத் திரும்பியவளோ “மாமா ரொம்ப நேரமா கதவைத் திறக்க மாட்டேங்குறாங்க.  ஏதேதோ உடையிற சத்தம் கூடக் கேட்டிச்சு நீங்க வந்து என்னனு பாருங்க” என்றவள் மித்ரனுக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்ற பயத்தில் அவன் கரத்தைப் பற்றி அந்த அறை முன்னே அழைத்து வந்திருந்தாள்.

 

சடுதியில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டவனோ “மித்து” என்று அழைக்கச் சத்தம் எதுவும் இல்லை…

 

மீண்டும் “ப்ப்பா” என்று சத்தமாய் அழைத்துக் கதவைத் தட்ட இம்முறையும் எந்தச் சத்தமும் இல்லை.

 

அவனுக்கே லேசாகப் பயம் தொற்றிக்கொள்ள, கடகடவென அவனறைக்குள் நுழைந்தவன் சில வினாடிகளிலேயே மீண்டும் சாவி ஒன்றுடன் வெளியே வந்தான்.

 

மித்ரனுக்கு தெரியாமல் அவன் ஆய்வுகளை இவன் தெரிந்து கொள்ள, எப்போதோ செய்து வைத்த சாவி இப்போது அவனுக்கு உதவி இருக்கிறது.

 

கதவைத் திறந்தவன் உள்ளே நுழைய, அவன் கரங்களைப் பற்றியபடி இனியாவும் உள்ளே நுழைந்தாள்.

 

அந்த அறைக்குள் நுழையவே முடியவில்லை. அத்தனையும் அடித்து நொறுக்கப்பட்டு அறை முழுவதும் கண்ணாடி துகள்கள், உடைந்த பாகங்கள் எனச் சிதறி இருந்தது.

 

அங்கே அறையின் நடுவே கரத்தில் வடியும் குருதியுடன் கைகளில் முத்து மாலை ஒன்றை ஏந்தியபடி மித்ரன் அயர்ந்த தோற்றதுடன் அமர்ந்திருந்தான்.

 

மகிழோ “அப்பா” என்று அழைத்தபடி அவனை நெருங்கியவன் கண்ணாடி துகள்கள் காலில் காயம் ஏற்படுத்தியத்தைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை…

 

அவன் எட்டு வைத்த ஒவ்வொரு பாத சுவடும் அவன் இரத்த அச்சைப் பதித்திருந்தது.

 

மித்ரனின் கரத்தைப் பற்றியவனோ “என்னாச்சுப்பா, ஏன் இப்படி உக்காந்திருக்க, எந்திரி முதல்ல” என்றவனை நிமிர்ந்து பார்த்த மித்ரனோ அமர்ந்திருந்தபடியே மகிழின் இடையை வளைத்து அணைத்துக் கொண்டான்.

 

“முடியல யாழ், என்னால என் மனைவிய கண்டு பிடிக்க முடியல, அவளுக்குக் கொடுத்த வாக்க காப்பாத்த முடியல, இப்போ இந்த உலகத்தைக் கூடக் காப்பாத்த முடியாம கையாளாகாம இருக்கேன். எனக்கேன் இது கிடைச்சிது? எதுக்குமே பயன்படாம ஆபத்தா முடியும்னா, எதுக்கு எனக்குக் கிடைக்கணும்?  கிடைக்காமலே இருந்திருக்கலாமே!” என்று கையில் இருந்த முத்து மாலையை அழுத்தியபடியே,

 

அவனது உயர் அதிகாரி சொன்னவற்றையும் சொல்லிப் புலம்பியவன் உடைந்து அழ, மகிழுக்குத் தாளமுடியவில்லை.

 

அவன் முகத்தை நிமிர்த்திய மகிழோ தந்தையின் கண்களைத் துடைத்துவிட்டு,

 

“எனக்கு நீ எப்பவும் சொல்லுவல்ல மித்து காரண காரியம் இல்லாம எதுவும் நடக்காதுனு.. இதுவும் காரணம் இல்லாம நடக்கல, எல்லாத்துக்கும் ஒரு காலம் வரனும்ல வரும் சீக்கிரம் வரும்.. நம்ம யாழினிம்மாவ கண்டு பிடிப்போம். கூடவே இந்த உலகத்தையும் காப்பாத்துவோம் சரியா, எந்திரி முதல்ல நீ” என்றவன் மித்ரனை எழுப்பிக் குளியலறைக்குள் அழைத்துச் சென்று முகம் கழுவ வைத்தவன் மீண்டும் உள்ளே வர, அதற்குள் இனியா அந்த அறையைச் சுத்தப்படுத்தி இருந்தாள்.

 

அடுத்து மகிழோ, மித்ரனின் கரத்தில் உள்ள காயத்துக்கு மருந்து போட எண்ணி கையைப் பிடித்தான்.

 

மித்ரன் அந்த மாலையை அப்போதும் உள்ளங்கைக்குள் இருக்கிப் பிடித்திருக்க, அவன் குறுதியில் நனைந்து வெண் முத்து மாலை சிவப்பு நிறமாக மாறி இருந்தது.

 

அதனை இனியாவிடம் கொடுத்தவன் “இனியா இத கொஞ்சம் வாஷ் பண்ணிக் கொண்டு வர்றியா?” என்று கேட்க, அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.

 

இவனும் புன்னகையுடன் தந்தையின் காயத்துக்கு மருந்து போட்டு முடித்தவன், திடீரென யோசனை வந்தவனாக, “இனியா” என்று சத்தமிட்டு அழைக்க, அவளோ என்னவென்று குளியலறையிலிருந்து எட்டிபார்த்தாள்.

 

அவனோ “வாஷ் பண்ணிட்டியா?” என்று கேட்க, அவளும் “இன்னும் இல்லை இதோ பண்ணிடுறேன்” என்று சொல்ல,

 

இவனோ வேண்டாம் என்பதாய் தலையசைத்து அவளை அழைத்தவன் அந்த மாலையை அப்படியே கைகளில் வாங்கி மித்ரனை நோக்கினான்.

 

அவனும் இவனைத்தான் கேள்வியாகப் பார்த்திருந்தான்.

 

“ப்பா, இன்னைக்கு நான் சித்தர் வான்மீகிய பார்த்தேன்” என்றான்.

 

மித்ரனோ தான் கேட்டது உண்மை தானா என்ற கேள்வியுடன் மகனைப் பார்த்து நின்றிருக்க,

 

அவன் சற்று முன் மருத்துவமனையில் நடந்ததை சொல்ல, மித்ரன் “ஓ மை கோட், யாழ், வான்மீகி யாருனு புரியுதா?” என்று கேட்க, அவனும் புரிந்து கொண்டவன் போல ஆம் என்று தலையசைத்தான்.

 

“என்ன சொன்னாரு யாழ்?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாதவனோ அங்கே அறையின் ஓரத்தில் இனியா சுத்தப்படுத்தி அப்புறப்படுத்திய கண்ணாடித்துண்டு ஒன்றை எடுத்து வந்தவன் மித்ரனை அர்த்தப் பார்வை பார்த்தபடியே தன் உள்ளங்கையைக் கிழித்துக் கொள்ள,

 

இனியாவோ “ஷ்ஷ்” என்ற சத்தத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.

 

மித்ரனுக்கு மகனின் நோக்கம் புரிந்து போக,

 

அடுத்து நடந்தது எல்லாம் அற்புதங்களின் அனைவகுப்பு தான்…

 

 

 

காதலைத் தேடும்..

 

ஆஷா சாரா

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்