Loading

அத்தியாயம் 12

 

வீட்டை விட்டு வெளியே வந்த அபர்ஜித் வீட்டின் பின்புறம் அனைத்து இடங்களிலும் பார்வை ஓட விட்டான்.

 

வீட்டின் பின்புறம் இருந்த கோழிக் கூண்டில் இருந்து தான் சத்தம் வந்து கொண்டிருந்தது.

 

தன் மொபைலில் இருந்து டார்ச் அடித்து பார்த்தான். கோழிகள் அங்கும் இங்கும் பறந்து கத்திக் கொண்டிருந்தது.

 

‘என்னாச்சு பாம்பு ஏதும் உள்ள போயிருக்குமா.. இல்ல வேற ஏதும்.. இல்லையே சுத்தியும் அடைச்சு தானே இருக்காங்க…’ என்று தனக்குள் சிந்தித்தவன்

 

“இந்த அறிவு எங்க போனா…” என்றவாறு அவளைத் தேட “ஸ்ஸ்.. ஸ்ஸ்..” என்று சத்தம் கேட்டது. சத்தம் வரும் திசையில் திரும்பி பார்த்தான். ஐந்து அடிக்கு வளர்ந்து நின்ற பூச்செடியொன்று அசைந்து ஆடியது.

 

‘ஒருவேள பாம்பா இருக்குமா?..’ என்று நினைத்தவன் சுற்றிமுற்றி பார்த்து கையில் கட்டை ஒன்றை எடுக்க, “சீனியர் அடிச்சுடாதீங்க..” என்று மெல்லிய சத்தம் கொடுத்தவாறு அந்த பூச்செடியின் பின் இருந்து வெளியே வந்தாள் அறிவழகி.

 

அவளை பார்த்தவன், பர்விதாவின் வீட்டில் இருக்கின்றோம், அதுவும் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக மதில் ஏறி குதித்து வந்திருக்கின்றோம், என்பதை மறந்து வயிற்றைப் பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

 

ஏனென்றால் அறிவழகி நின்று இருந்த கோலம் அப்படி. தலை கலைந்து, தலை முழுவதும் வெள்ளை கோழி இறகுகள் குத்திக் கொண்டிருக்க, அவள் போட்டு இருந்த டாப் கழுத்து, பாக்கெட், கை இடைவெளி எல்லாம் கோழி இறகுகள் இருக்க,,

 

ஜீன்ஸில் முட்டிக்கு கீழ் கிழிந்து இருக்க, அவள் போட்டிருந்த செருப்பில் ஒன்று அறுந்து தொங்கியது. “ஐயோ அறிவு.. என்னாச்சு.. யார் உன்ன கோழியோட சண்ட போட சொன்னா..? என்ன கோலம் இது?…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,

 

“என்னது கோழியோட நான் சண்ட போட்டேனா… நீங்க பாத்தீங்களா என்ன?..” என்று அவள் சுற்றி முற்றி பயத்துடன் பார்க்க,

 

“என்ன தேடுற..?”

 

“அதுதான் என் எனிமி.. அந்த கோழி…” என்று மாறாத பயத்துடன் சொல்ல

 

“முதல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு.. உன்னால கோழிக்கு சேதாரம் இல்ல என்றது நல்லா தெரியுது.. உன்ன சேதாரப் படுத்துன கோழி எது…?” என்று கேட்க

 

“இதெல்லாம் கரெக்டா கண்டுபிடிச்சுடுங்க சீனியர்.. ஐயோ..! அம்மா..!” என்று தாங்கி தாங்கி அவன் அருகில் வந்தவள்

 

“நீங்க வீட்டுடு போன இடத்துல தான் இருந்தேன்..யாரோ வர்றது மாதிரி இருந்துச்சு.. சரி நம்மள பாத்தா பிரச்சனையே எங்கேயாவது ஒழிஞ்சு இருந்து உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு வெளிய வந்து ஒரு ரூமா திறந்து உள்ள போனேன்.. அது ரூம் இல்ல கோழி கூடு சீனியர்..

 

…யாராச்சும் கோழிக் கூண்ட சீமெந்து கல்லு வச்சு கட்டுவாங்களா? உங்க மாமனாருக்கு அறிவே கிடையாது சீனியர்.. ரூம் மாதிரி கட்டி அதுக்கு கதவு வேற போட்டு வச்சிருக்காங்க..

 

…நான் ரூம்னு நினச்சு உள்ள போனேன்.. எல்லா கோழியும் என்ன பாத்ததும் பயந்து கத்த, அதுல ஒரே ஒரு சேவல் மட்டும் என்ன கொத்த, நான் கத்த.. ஐயோ இப்டி ஒரு சம்பவம் என் வாழ்க்கையில நடந்தது இல்ல சீனியர்..

 

…கூண்ட விட்டு வெளியே வந்தா விட்டுடும்னு பாத்தா.. அது எனக்கு முன்னாடியே வெளியே வந்துருச்சு.. நான் அத உள்ளே வச்சு அடைக்கிறதா நினைச்சு கூண்ட அடைச்சிட்டு வெளியே வந்ததுதான் தெரியும்..

 

…அந்த டைனோசர் மறுபிறவி என்ன பறந்து பறந்து சேதாரம் பண்ண.. அது கூட போராடி சண்ட போட்டு முடியல…ஐயோ ..மம்மி…தாய் இல்லா புள்ளனு பாக்காமா தலையிலயே கொத்திடுச்சு சீனியர்.. அப்டியே கை தாங்களா என்ன வீட்டுல கொண்டுவிட்ருங்க..

 

… அய்யய்யோ.. அம்மம்ம்ம்மா.. இந்த காதலிக்கிறவங்க கூட கூட்டு வச்சிக்க கூடாதுன்னு சந்தானம் சொன்னது சரியாத்தான் இருக்கு…” என்று அவள் புலம்பித் தள்ள

 

“ஏய் கோழி கிட்ட போய் கொத்து வாங்கிட்டு வந்தது நீ.. ஏதோ என்னால வாங்குனது மாதிரி சொல்லிட்டு இருக்க.. உன்ன அங்க தானே நிக்க சொன்னேன்.. யாரு வந்தா?. எனக்கு ஃபோன் பண்ணவே இல்ல…”

 

“ஃபோன் பண்றதுக்கு முன்னாடி தான் இந்த சம்பவம் ஆகிப்போச்சுன்னு சொல்றேனே.. ஆனா யாரோ வந்தாங்க சீனியர்.. சரியா ஞாபகத்துக்கு வரல…” என்று அவள் யோசிக்க

 

ஆனால் அங்கு யாரும் வரவில்லை. காற்றுக்கு அசைந்தாடிய கர்டைன் சீலையை பார்த்துவிட்டு தான் இவ்வளவு அக்கப்போரும் ஆர்ப்பாட்டமும்.

 

“சரி.. நல்லவேள வந்தவங்க உன்ன பாக்கல.. நான் வந்த வேல முடிஞ்சது வா வீட்டுக்கு போலாம்…”

 

“வா வா.. அந்த கதையே இல்ல சீனியர்.. கைதாங்களா புடிங்க…” என்று அவன் தோளில் சாய்ந்து கொள்ள

 

“இன்னுமே என் லவ் சக்ஸஸ் ஆகல அறிவு.. இந்த நிலமையில உன்னையும் என்னையும் அவ பாத்தானு வச்சுக்க.. என் காதல் சுவாகா…” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு, மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்து, அவளை வீட்டில் கொண்டு விட்டு விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

 

அபர்ஜித் வந்து சென்றது பர்விதாவிற்கு புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது. அன்று போன்று இன்றும் உடம்பெல்லாம் அடித்துப் போட்ட வலி.

 

“முரடன்.. கொஞ்சம் கேப் கிடைச்சா போதும்…” என்று அவனுக்கு திட்டியவாறு அவளும் மிகவும் கஷ்டப்பட்டு தூங்கினாள்.

 

ஆனால் அடுத்த நாள் அவனது மிரட்டலுக்கு பயந்து எல்லாம் பர்விதா காலேஜ் செல்லவில்லை.

 

ஒருவேளை அவன் இரவு வர கூடுமோ என்று கதவை உள்பக்கமாக தாழ் போட்டு கொண்டு, ஜன்னல்களையும் நன்றாக மூடி விட்டு, ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து விட்டே தூங்கினாள்.

 

காலையில் காலேஜ் வாசலில் அவளுக்காக காத்திருந்தவன் அவள் வரவில்லை என்றதும் “பயம் இல்லல பர்வி உனக்கு.. இல்ல பாதி ராத்திரியில நான் வந்து பலான மேட்டர் பண்ணனும்னு எதிர்பார்க்கிறியா…?” என்று தனக்கு தனே சொல்லிக் கொண்டவன்,

 

அறிவழகியை இம்முறை கவனமாக தவிர்த்து விட்டு மதில் ஏறி குதித்து வந்தால், அவனது மைதிலி பெரிய ஆப்பாக அவனுக்கு வைத்துவிட்டு கவுந்தடித்து படுத்து விட்டாள்.

 

கதவை தட்டிப் பார்த்தான் மெதுவாக, அவள் திறக்க வேண்டுமே, சத்தமாக தட்டவும் முடியாது. ஜன்னல்களை தள்ளி பார்த்தான். எந்த முயற்சிக்கும் பலன் இல்லாமல் போக, “ச்சே” என்று காலை நிலத்தில் உதைத்தவன்

 

“ஆக என்ன அவாய்ட் பண்ணுனா என்னாகும்னு நீ மறந்துட்ட.. நான் கிருமினல் லாயர்டி…”என்று சொல்லிக் கொண்டவன் அடுத்த நாள் அவளை வர வைப்பதற்கான திட்டத்தை தீட்ட அறிவழகியை அப்போதே சந்திக்க சென்றிருந்தான்.

 

******

அந்த இரவில், கொட்டும் பனியில், கடற்கரையில் அமர்ந்து, ஒரு கையில் சோடா பாட்டிலும், ஒரு கையல் ஸ்னாக்ஸ்சுமாக அமர்ந்து தீவிரமாக கடலை முறைத்து பார்த்த அறிவழகி

 

“ஐடியா!.. வீட்டுல ஒரு பெரியது விபத்து நடந்தா எல்லாரோட போகஸ்சும் அங்கதான் போகும்.. நீங்க அந்த கோழி கூண்ட கொழுத்தி விட்டுத்து.. அந்த கேப்ல பர்விதா மேடம கடத்திடுங்க…” என்று சொல்ல

 

“அறிவு..! கொஞ்சம் அறிவா பேசு.. நான் அவள சந்திக்கணும்னு கேட்டேன்.. நீ கலவரம் பண்ணி கடத்த சொல்ற.. கடத்திட்டு வற எனக்கு தெரியாதா…?”

 

“அப்புறம் என்ன சீனியர்.. நல்லா தெரியும்ல என்னால எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாதுன்னு.. சீனியர் இப்போ என்ன பர்விதா மேடம வெளியே வர வைக்கணும் அவ்ளவுதானே.. அட்ட பழைய ஐடியா தான் இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்..

 

…அவங்க ஃபோன் நம்பர எப்டியாவது எடுத்து ஃபேக் கால் பண்ணி வெளிய வர வச்சா சரி…”

 

“அவ ஃபோன் நம்பர் எப்டி எடுக்கிறது?.. பார்கவி கிட்ட கேட்க முடியாது.. திரும்பத் திரும்ப பார்கவிய சந்திச்சு அவ மனசுல இன்னும் இன்னும் ஆசைய வளக்க நான் விரும்பல…”

 

“உங்கள யாரு பார்கவி மேடம் கிட்ட கேட்க சொன்னா.. காலேஜ் வாசல்ல தான் டெய்லி காலைல பிச்சை எடுக்குறீங்களே…”

 

“ஏய்..” என்று அவன் முறைக்க

 

“சரி.. சரி.. அவங்க ஃப்ரெண்ட்ஸ் யாரையாச்சும் தெரியுமா…?”

 

“ம்ம்.. இரண்டு பொண்ணுங்க அவ கூட க்ளோஸா பேசுறத பாத்து இருக்கேன்…”

 

“அவங்கள புடிங்க.. பர்விதா மேடமோட அக்காவோட ஃபோன் ஆஃப்ல இருக்குது.. பர்விதா மேடமோட ஃபோன் நம்பர் தெரியாது என்று கேட்டு வாங்குங்க..

 

…ஒருவேள உங்க மேல நம்பிக்கை இல்ல ஃபோன் நம்பர் தர மாட்டேன்னு சொன்னா கூட..

 

…அவங்களேயே ஃபோன் பண்ணி காலேஜுக்கு பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு இடத்துக்கு வர சொல்ல சொல்லுங்க.. கண்டிப்பா பண்ணுவாங்க.. வீட்ட விட்டு வெளியே வந்தா போதுமே நீங்க தான் கொத்தா தூக்கிடுவீங்களே அப்புறம் என்ன…” என்று அவள் சொல்ல.

 

“ரொம்ப யோசிக்க வராதுன்னு சொல்லி சொல்லியே ஒரு அளவுக்கு ஐடியா கொடுக்கிற.. கொஞ்சமா உனக்கும் அறிவு வளருதுனு நினைக்கிறேன்…” என்று அவன் கூற

 

“அறிவு வளருதோ இல்லையோ.. சம்பளம் உயர மாட்டேங்குது சீனியர்.. ஒரு அஞ்சு பத்து கூட்டி குடுங்க…” என்று அவள் கேட்க

 

“நீ செய்ற வேலைக்கு நான் கொடுக்கிற சம்பளமே அதிகப்படி.. இதுல உனக்கு அஞ்சு பத்து கூட்டி தரணுமா.. மாச மாசம் உனக்கு ஸ்னேக்ஸ் வாங்கி கொடுக்கிறேனே அந்த செலவுக்கு இன்னும் ரெண்டு பேருக்கும் நான் சம்பளம் கொடுக்கலாம்…” என்று அவன் சொல்ல

 

“வயசு புள்ள சாப்பிடறதெல்லாம் கணக்கு பாக்காதீங்க.. வாங்கி குடுத்துட்டு சாப்பிடுறத கண்ணு வைக்க கூடாது தெரியுமா…”

 

“யாரு நீ வயசுபுள்ள..! என்ன விட ரெண்டு வயசு தான் உனக்கு கம்மி.. கல்யாணமாகி இருந்தா இன்னேரம் உன் பசங்க படிக்கிறதுக்கு ஸ்கூல் போயிருப்பாங்க…”

 

“அதுதான் ஆகல இல்ல.. எனக்கு குழந்த பொறக்குற வரைக்கும் நான் தான் குழந்த.. சரி..சரி.. சர்வீஸ் சார்ஜ் ஆயிரம் ரூபா தந்துருங்க…”

 

“எதுக்கு?.. தரமுடியாது…”

 

“பத்து மணிக்கு மேல ஒரு பொண்ண கூட்டிட்டு கடற்கரைக்கு வந்து இருக்கீங்க.. நான் இத செல்ஃபி எடுத்து பர்விதா மேடமுக்கு அனுப்புனேன்னு வைங்க.. அதோட கோவிந்தா கோவிந்தா தான்…” என்று அவள் மிரட்ட

 

“ஓஹோ!.. நாளைக்கு ஆர் டி அடையார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கேஸ் விஷயமா நானே போகலாம்னு இருந்தேன்.. பட் நாளைக்கு உன்னத்தான் அனுப்ப போறேன்…” என்று சொல்ல

 

“அய்யய்யோ!.. அந்த போலீஸ்காரனா.. வேணாம் சீனியர்.. வேணாம்.. நீங்க ஆயிரம் ரூபாயும் தர வேணாம்.. அஞ்சு பத்தும் கூட்டித் தர வேணாம்.. அந்த ஸ்டேஷன் கேஸ்சுக்கு மட்டும் நீங்களே போங்க.. அது ஒரு டெரர் பார்ட்டி..காலகேய கூட்டத்து தலைவனோட போராட எனக்கு தெம்பு இல்ல…” என்று சொன்னவள் அருகில் இருந்த அவள் கொண்டு வந்த பொருளை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.

 

“அப்டி வா வழிக்கு.. அது என்ன கையில…?”

 

இதுவா பெட்ஷீட் சீனியர்.. நைட்டு.. பனி.. கடற்கர..குளிருமில்ல.. அதான் நீங்க ஃபோன் பண்ணதுமே முன்னேற்பாட எடுத்துட்டு வந்துட்டேன்…”என்று தலையை ஆட்டி சொல்ல

 

“இதெல்லாம் நல்லா பண்ணு.. வந்து தொல, உன்ன வீட்ல பத்திரமா விட்டுட்டு போறேன்…” என்றவன் அவளை வீட்டில் விட்டு விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

 

******

அடுத்த நாள் காலையிலேயே அறிவழகி சொன்னது போன்று, பர்விதாவின் தோழிகளில் ஒருத்தியை சந்தித்து அவளது ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டான்.

 

அது மட்டும் இல்லாமல் அந்த தோழியை வைத்தே, அவசரமாக சந்திக்க வேண்டும் என்று பர்விதாவிற்கு அழைப்பு எடுத்து, அருகில் உள்ள கோயிலுக்கு வர சொல்லி சொல்ல அந்த பெண்ணும் அதை செயல்படுத்தினாள்.

 

பர்விதாவோ தோழி காரணம் இன்றி அழைக்க மாட்டாள் என்று நம்பி, வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

 

அவள் கோயிலை சென்றடையும் முன் தன் காரைக் கொண்டு குறுக்காக நிறுத்தி, அதிர்ச்சியில் திகைத்து நின்றவளை,

 

அடுத்து என்ன நடக்கிறது என்று கூட கிரகிக்க விடாமல், காரின் பின் சீட்டில் பிடித்து தள்ளி, வலுக்கட்டாயமாக ஏற்றி கதவை அடைத்தவன், வேகமாக காரை பீச் ஹவுஸின் பின் கொண்டு வந்து நிறுத்தி இருந்தான்.

 

காதலியை கடத்தி வந்து, காதலை சொன்னால் பரவாயில்லை. நம்மாளுக்குத்தான் பர்விதாவை கண்டதுமே நாடி நரம்பு எல்லாம் நட்டுக் கொண்டு நிற்குமே.

 

அவன் செய்த சில்மிஷமே அவனுக்கு வினையாக போக, அடுத்து ஆறு மாதங்களுக்கு பர்விதா சொன்ன செயலை செய்வது அவனுக்கு மலையை பிளக்கும் வேலைதான்.

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்